Tuesday, August 7, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 7

தமிழ் பெற்ற சீர் - உமறுப் புலவர்.


ஆகஸ்ட் 7... இன்று!

          இஸ்லாமியப் பெருங்காப்பியங்கள் பதினாறு. சிறு காப்பியங்கள் ஒன்பது.  இவற்றுள் முதன்மையானது, முன்னோடியானது    ' சீறாப்புராணம்'  என்னும் பெருங்காப்பியம். 
             முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை அழகுத்  தமிழில்  அள்ளிக் கொடுக்கும் ’சீறாப் புராணம் ’ என்னும் பெருங் காப்பியத்தை  எழுதி, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ள அமுத கவி உமறுப் புலவர் (1642 - 1703) பிறந்த  நாள் இன்று. 
          தூத்துக்குடி மாவட்டம் , நாகலாபுரத்தில்,  1642 ஆம் ஆண்டு,   ரபி - அல்- அவாத் மாதத்தின் 14 ஆம் பிறை நாளன்று, ஷேக் முகமது அலியார் என்பவரின்  மகனாக ,  தமிழ் ஞாயிறெனப்  பிறந்தார்.  இளம் வயதிலேயே, வட இந்திய அறிஞர் வள்ளை வாருதியை வாதப் போரில் வென்றார். அரசவைப் புலவர் என்னும் சிறப்பும் பெற்றார். 
         எட்டயபுரத்து சமஸ்தான மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக இருந்த கடிகை முத்துப் புலவரிடம்  மாணவனாகச் சேர்ந்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களின் நீள , அகலங்களை  முழுதாகப் படித்தார். தமிழ் அறிஞர் சபை இவரை அமுத கவி என அழைத்தது. 
          கீழக்கரை பகுதியைச் சேர்ந்த வணிகர் அப்துல்  மரைக்காயரின் வேண்டுகோளுக்கிணங்க, முகமது நபியின் வரலாற்றை காப்பியமாக்குகிறார் உமறுப் புலவர்.  உதவிய  இந்த வணிகர் தான் , படிக்காசுப் புலவரால் பாராட்டப்பட்ட சீதக்காதி.  ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்னும் சொற்றொடர் இன்றும் வழக்கத்தில் உள்ளதை நாம் அறியலாம்.   கம்பருக்கு வாய்த்த சடையப்ப வள்ளல்  போல, உமறுப் புலவருக்கு வாய்த்த அருட்கொடை சீதக்காதி. சீறாப்புராணதில், நூறு பாடல்களுக்கு ஒரு முறை , இவரது பெருமை சொல்லப்படுகிறது. 
           3 காண்டங்கள், 92 படலங்கள்,    5027 செய்யுள்கள் கொண்ட இந்தக் காப்பியம், தமிழ் காப்பிய மரபை மீறாமல் எழுதப்பட்டதாகும். இதன் தொடர்ச்சியை , பின் வந்த அறிஞர்கள் எழுதினர் என்ற செய்தியும் உண்டு. அதனை ’சின்ன சீறா’ என்று அழைப்பர். அதேபோல், சீதக்காதியின் மறைவுக்குப் பின், அபுல் காசிம் என்ற புரவலர், உமறுப்புலவருக்கு உதவினார் என்பதும் வரலாறு.
         அரேபிய நிலக்காட்சிகள் , கதையமைப்பு இரண்டும் தமிழகத்தை , தமிழர் வாழ்வியலை ஒட்டியே படைக்கப்பட்ட சீறாப்புராணம் , இன்று சில இஸ்லாமியக் குழுக்களால் புறக்கணிக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காப்பியத்தை  தமிழ் மயமாக்கும் நோக்கத்தில் , நபியின் வரலாற்றையும், பெருமைகளையும் அவர் சரிவரச் சொல்லவில்லை என   அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். வஹாபியத்தின் கொள்கைகளில் இருந்து, இந்நூல் பெரிதும் விலகிச் செல்வதாக வருத்தப்படுகிறார்கள். 
            சீறாப்புராணம் தவிர, முதுமொழிக் கோவை, சீதக்காதி நொண்டி நாடகம் நானூறு கோவை போன்ற நூல்களையும் உமறுப் புலவர் எழுதியுள்ளார். 1703 ஆம் ஆண்டு இவர் இறந்த பிறகு, இவருக்கு, பிச்சைக்கோனார் என்பவர் நினைவகம் எழுப்பியுள்ளார்.  இவரது வரலாறும், நூல்களும் நமக்கு முழுமையாய்க் கிடைக்கவில்லை. ஆனால் இவரது தமிழ்த்திறம் இன்றும் பெருமைப் படுத்தப்பட்டு வருகிறது.  மத வேறுபாடு இல்லாமல், உமறுத்தேவர், உமறுஅம்மாள் போன்ற பெயர்கள் குழந்தைகளுக்கு  இயல்பாகவே சூட்டப்பட்டு வருவதை இன்றும் நாம் காணலாம். 2007 ல் இவருக்கான மணிமண்டபம் இவரது ஊரில் கட்டப்பட்டது. இலங்கையில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள், இந்நூலினை தங்களின் சமய வாழ்வுக்கு அணுக்கமாக வைத்திருக்கிறார்கள்.  
           12-13 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின் காப்பிய வளர்ச்சி தேங்கிக் கிடந்த சமயத்தில், காப்பியம் படைத்த உமறுப் புலவர் , 
திருவினும் திருவாய்-  தமிழ் பெற்ற தவப்புதல்வன்.  இவரைப் பற்றிய நாட்டுப்புறக் கதைகளே இவரது வரலாறு என்பதால் , ஆய்வாளர்களில் பலர், இவரை மறந்து விடலாம். அனால், தன் படைப்பின் வழியே, உமறுப் புலவர் என்னும் அமுத கவி என்றென்றும் நிலைத்திருப்பார்.
       சீறாப்புராணத்தை இஸ்லாமியக் காப்பியம் என்று பெயரிடுவதை விடவும், இன்பத் தமிழ் காப்பியம் என்று அழைப்பதுதான் மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. .     இலக்கண வகையிலான பகுப்பும், காலக்கட்டங்களின் வழியிலான தொகுப்பும் இருக்கையில், மதம், சாதி, அதன் உட்பிரிவுகள் அடிப்படையில் இலக்கியங்களைப் பகுப்பது சரியா எனத் தெரியவில்லை. மனங்களை இணைக்கும் வலிமை கொண்ட இலக்கியத்தை , விரிந்த தலைப்புகளில் மட்டும் தொகுத்துக் கொண்டால் என்ன? குறுங்குழு வரை குறுக்கத்தான் வேண்டுமா?

தமிழ் இலக்கியம் என்ற ஒற்றை ஆகாயத்தின் கீழ் - இந்தக் கவிதை மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு  இலக்கிய தாகம் தீர்க்கும் நாள் விரைவில் வரும்.
              
              

No comments:

Post a Comment