Monday, December 24, 2018

டிசம்பர் 24

தேசத்தின் குரு - பாண்டுரங்க சதாசிவ சானே

டிசம்பர் 24...இன்று!


             இந்திய விடுதலைப் போராட்டம் இவரை திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையின் கம்பிகளுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. சிறைச்சாலை இவருக்குப் பாடசாலை ஆனது. தமிழ்க்காற்றினை சுவாசித்துக் கொண்டே, தாகம் மேலிட  தமிழையும் கற்றுக் கொண்டார்.  அனுதினமும் தமிழ் கற்ற இவரது மனம் - திருக்குறளையே தினம் தினம் உச்சரித்தது. அதனை தாய்மொழியில் பெயர்த்திடவே இவர் மனம் தினம் நச்சரித்தது. தான் விரும்பியபடியே,     திருக்குறளை முதன்முதலில் மராட்டிய மொழியில் மொழிபெயர்த்தார் பாண்டுரங்க சதாசிவ சானே. 

            ஆசிரியராகப் பணி செய்துகொண்டிருந்தவர், தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி சத்தியாகிரக யாத்திரையில் கலந்து கொண்டார்.  அதுமுதல், வாழ்நாளின் இறுதிவரை,  தொடர்ந்து காந்திய வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் சதாசிவ சானே. பல்வேறு போராட்டங்களில் எட்டு முறை சிறை வாசம்;  மொத்தமாக  ஆறு ஆண்டுகளும் ஏழு மாதங்களும்  இவரது வாழ்வு சிறைக்குள்ளேயே கழிந்தது.

                   சிறைச்சாலையில் இவருக்கு மொழி ஆர்வம் வளர்த்தவர்  ஆச்சாரியார் வினோபா பாவே. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வினோபா பாவேயின் பகவத்கீதை வகுப்புகள் இவருக்குள் ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தின. வகுப்புகளின் போது, இவர் எழுதிய குறிப்புகளைக் கொண்டே, தனது பகவத்கீதை விளக்கவுரை புத்தகத்தை தொகுத்து வெளியிட்டார் வினோபா பாவே.

         சதாசிவ சானே, தான் சிறைபட்ட எல்லா இடங்களிலும் அந்தந்த பகுதிகளின் மொழியறிவினை விரும்பி கற்றுக் கொண்டார். அதுபோல,  தனது அறிவையும் சக நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்தார். தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமாக,   ’அந்தர் பாரதி’ என்னும் இதழைத் தொடங்கினார். அதில், இந்தியாவின் முக்கிய மொழிகளில் உள்ள கலைச்செல்வங்களை எல்லாம்  மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘சாதனா’ என்ற பெயரில், 1948ஆம் ஆண்டு, இவரால் தொடங்கப்பட்ட வாரப்பத்திரிக்கை, இன்றுவரை  தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.  

         கற்றுக் கொள்வதையும், கற்றுக் கொடுப்பதையுமே தனதிரு சிறகுகளில் ஏந்திக் கொண்ட ஞானப்பறவை தான் பாண்டுரங்க சதாசிவ சானே.  ’இந்தியாவின் தேசிய ஆசிரியர்’ என அழைக்கப்படும் இவர்,  1899ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி , மஹாராஷ்டிரா மாநிலத்தில் பால்காட் என்னும் கிராமத்தில் பிறந்தார். சதாசிவ ராவ்- யசோசா பாய் தம்பதியினரின் மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், தற்போது ’சானே குருஜி’ என்றே இந்தியா முழுதும் அறியப்படுகிறார். 

                       இளம் வயதில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த சானேயின் குடும்பத்தில் திடீரென இருள் பரவத் தொடங்கியது. தந்தையின் வருமானம் வெகுவாகக் குறைந்து, வறுமை இறுக்கத் தொடங்கியது. தாய்மாமாவின் வீட்டில் , புனே நகரத்தில் சானேயின் படிப்பு தொடர்ந்தது. மருத்துவ வசதி இல்லாததால், 1917ஆம் ஆண்டு தாய் யசோதா மரணமுற்றார். மரணப்படுக்கையில் கிடந்த தாயை பார்க்கும் வாய்ப்புகூட இவருக்குக்  கிடைக்கவில்லை. இந்நிகழ்வு அவரது உள்ளத்தில் ஆறாத தழும்பென புடைத்து நின்றது.

        ஆயினும், நண்பர்களின் உதவியோடு கல்வியைத் தொடர்ந்தார் சானே. மராத்தி, சமஸ்கிருதம் பாடங்களில் பட்டம் படித்தார். இரு துறைகளிலும் வலுவான ஆளுமைத் திறனும் பெற்றார். பதக்கப் பரிசோடு, தத்துவவியலில் முதுகலைப் பட்டத்தையும்  நிறைவு செய்தார்.

             நல்ல ஊதியத்தோடு,    நகர்ப்புறத்திலேயே  பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு இவருக்குக்  கிடைத்தது. ஆனால் சானே குருஜி, அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் இருக்கும் கிராமப்புறங்களில் தனது கல்விப் பணியை விருப்பத்துடன் மேற்கொண்டார். மாணவர்களுக்காக ‘வித்யார்த்தி’ என்னும்  இதழைத் தொடங்கினார். அதில்,  நன்னெறிக் கல்வி மற்றும் சமூகக் கடமைகளைப் பற்றிய கட்டுரைகள், கதைகளை எழுதி வெளியிட்டார். மொத்தம் 135 நூல்களைப் படைத்துள்ளார்  சானே குருஜி, அதில் 73 நூல்களை குழந்தைகளுக்காக மட்டுமே எழுதியுள்ளார்.

 .        இவரது ’ஷியாம்ஸி ஆயி’(Shyam's Mother) என்னும் புத்தகம் மிகுந்த புகழ் பெற்றது. இந்தக்  கதை, 1953ஆம் ஆண்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கொங்கன் பகுதியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் வந்து சேர்கிறாள். சூழ்நிலை காரணமாக, வறுமையுற்று நோயில் வீழ்கிறாள். மருத்துவம் பார்க்கக் கூட, வசதியற்ற நிலையில் மரணத்தைச் சந்திக்கும் ஒரு தாயின் கதை தான், ''ஷியாம்ஸி ஆயி".  தாயின் அன்பையும், தியாகத்தையும் சொல்லும் இப்புத்தகம் , குருஜியின் இளமைக் கால    நினைவுகளிலிருந்தே எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

                 காந்தியடிகளின் ஆணைப்படி, ஆலய நுழைவுப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்தினார். 1947 ஆம் ஆண்டு, மே 1 முதல் மே 11 வரை பந்தர்பூரில் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியில் , விதோபா ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து, ஆலயப் போராட்டத்தை வெற்றிகரமானதாக நிறைவு செய்தார் சானே குருஜி.  இப்போராட்டத்தின் வெற்றி முழுதும் சானே குருஜியையே சாரும் என்று காந்தியடிகள் தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.

                 எஸ்.எம். டாங்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் எப்போதும் நட்பில் இருந்த சானே குருஜி, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். இரண்டாம் உலகப் போரில், ஆங்கில அரசுக்கு ஆதரவு தரும் முடிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகியே நின்றார்.  காந்தியவாதியான  சானே குருஜி, சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். 

               சுதந்திர இந்தியா, ஏனோ அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. தேசப் பிரிவினையின் தழும்பு மறைவதற்குள்  நடந்த,  காந்தியடிகளின் படுகொலை இவருக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். காந்தியடிகள் கொல்லப்பட்ட மறுநாள் முதல் தொடர்ச்சியாக 21 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார். பின்பு சிலகாலம் நாள்களைக் கடத்தினார். ஒரு கட்டத்தில் நாள்கள் நகர மறுத்தன. காலம் கடத்த முடியாது  என்ற நிலைமையில் காலத்தோடு கரைந்து விட முடிவு செய்தார்.

                             அதன்படி சானே குருஜி , 1950ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு,  தூக்க மாத்திரைகளை அதிகமாக  உட்கொண்டு, தனது உயிரைத்  தானே மாய்த்துக் கொண்டார். மரணத்தை நோக்கி, அவர் எடுத்த முடிவுக்கான காரணம் இன்று வரை விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.  இறுதியில்  சட்டைப்பையில் ஒரு சிறு காகிதமும் , முப்பது ரூபாய் பணமும் மட்டுமே அவரது சொத்தாக எஞ்சி   இருந்தது. சட்டைப்பை காகித்ததில் இப்படி எழுதப்பட்டிருந்தது,
 “ எனது இறுதிச் சடங்குகளுக்கான செலவுத் தொகை இந்த  முப்பது ரூபாய்!.”

                      ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர் என பன்முகத் தன்மை கொண்டிருந்த சானே குருஜி , திருமணமே செய்துகொள்ளவில்லை. தனது வாழ்வு முழுவதையும் தேச நலனுக்கே அர்ப்பணித்தார். வாழ்நாள் முழுவதும்  மாணவர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த சானே குருஜியின்  பெயரில்,  நினைவு இல்லம் ஒன்றைக் கட்டியிருக்கிறது மஹாராஷ்டிரா அரசு. தற்போது, அது மாணவர்கள் தங்கிச் செல்லும் முகாமாகச் (Camp Office)  செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு, மத்திய அரசு, இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை ஒன்றும் வெளியிட்டுள்ளது.             

              பெரும்பாலான நேரங்களில், உயர்ந்தோரின்  அறிவையும் ஆற்றலையும் நாம் முழுதாகப் பயன்படுத்திக் கொள்வதேயில்லை.  அன்றிலிருந்து இன்று வரை , அத்தகைய மனிதர்களை நாம் பாதுகாப்பதும் இல்லை. 'சானே குருஜி' என்னும் ஒளிர்கல் - நாம் பாதுகாக்கத் தவறிய பொக்கிஷங்களுள் ஒன்று!

      ஒளிதரும் குன்றிமணிகளைப் புறந்தள்ளிவிட்டு, குப்பைகளைக் கொண்டாடும் மனநிலையை நாம் எப்போது விட்டொழிப்போம்? சுயநலம் தீண்டாத சுடரொளிகளால் இந்த தேசம்  எப்போது ஒளி பெறும்?