Tuesday, July 31, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 31

மகாமதி சதாவதானி - செய்துக் தம்பி பாவலர்.

ஜூலை 31... இன்று!
 
          ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நூறு நிகழ்வுகளைக் கவனித்து, அவை தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கும் அவதானக்கலை  நாயகன் சதாவதானி செய்குத்தம்பி  பாவலர் பிறந்த நாள்(1874-1950) இன்று.
                        நாஞ்சில் நாடு, இடலாக்குடியில் (நாகர்கோயில்- கன்னியாகுமரி மாவட்டம்)  தமிழ்ப் பெருங்கடல் செய்குத்தம்பி பாவலர் 1874, ஜூலை 31 ஆம் நாள் பிறந்தார். பக்கீர் மீரான் சாகிபிற்கும், அமீனா அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகவும், முத்தமிழ்த் தாயின் முக்கிய மகனாகவும் பிறந்த செய்குத்தம்பி,  .  இயல்பிலேயே கூர்ந்த மதியும், ஆர்வமும் உடையவராக இருந்தார். கோட்டாறு சங்கர நாராயண அண்ணாவியாரிடம் தமிழின் இலக்கண. இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார். ’மெய்ஞானியார் பாடல் திரட்டு’ என்னும் நூலைப் பதிப்பிப்பதில் , பார்த்தசாரதி நாயுடுவுக்குத் தேவைப்பட்ட  தமிழறிந்த இஸ்லாமியராக செய்குத்தம்பி பாவலர் வந்து சேர்ந்தார். பின்பு, சென்னையிலேயே மாதம் ரூ.60 சம்பளத்தில், ஸ்ரீ பத்மவிலாச பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21.
                               அவதானக் கலை என்பது மாயாஜாலம் போன்ற மோசடி என்னும் எண்ணம் கொண்டிருந்த செய்குத்தம்பி பாவலர், ஓர் நாள் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்டப்பத்திரிக்கை என்னும் அவதானத்தை செய்து  காட்டினார் கல்யாண சுந்தரம். எண் பிறழச் சொல்லப்படும் செய்யுள் எழுத்துக்களின் எண்ணையும், எழுத்தையும் நினைவில் நிறுத்தி, முடிவில் முழுச் செய்யுளையும் நேர்படச் சொல்வதுதான் கண்டப்பத்திரிக்கை. இதனை கண்டவுடன் செய்குத்தம்பி பாவலருக்கும் அவதானக்கலையில் ஆர்வம் பிறந்தது. அஷ்டாவதானமும் சோடச அவதானமும்  செய்து பழகி, தான் பிறந்த இடலாக்குடி மண்ணில் சாதித்தும் காட்டினார்.
                                            மகாவித்துவான் ராமசாமி நாயுடுவின் ஆலோசனையின் பேரில், நூறு செயல்களை அவதானிக்கும் சதாவதானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. ஒரு பொருள் குறித்த உரை, கண்டப்பத்திரிக்கை, கண்டத்தொகை, இலக்கண வினா, இலக்கிய வினா, நீர்ச் சுவை கூறுதல், கிழமை கூறுதல், ஓசை எண்ணுதல், முதுகில் விழும் நெல்மணி, பூக்கள் எண்ணுதல் , இறைநாமம் உச்சரித்தல், கைவேலை, சதுரங்கம், பாவகை கூறுதல் , ராகம் கூறுதல், வெண்பா புனைதல்...என நூறு வகையான செயல்களை ஒரே நேரத்தில் கவனிக்கும் கவனகக்கலையில் தேர்ச்சி கண்டார். தனது 33 ஆம் வயதில்,  10.03.1907, சென்னை விக்டோரியா அரங்கத்தில், தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய  ஐயர் தலைமையில்,   கா.நமச்சிவாய முதலியார், டி.கே.சிதம்பர முதலியார், திரு.வி.க, இந்து ஆசிரியர் ஜி.சுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வினை வெற்றிகரமாக செய்து காட்டினார்.  அந்த மேடையில் தான், “மகாமதி சதாவதானி” என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
                                         சதாவதானியாக மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. யதார்த்தவாதி, இஸ்லாமியமித்திரன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, வெண்பாக்கள் மாலை என எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்தார். சீறாப்புராணத்திற்கு சீரிய உரை எழுதி, அழியாச் சிறப்பு பெற்றார். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த பாவலர், எல்லாத் தலைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். விடுதலைப் போராட்டத்திலும்  ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.                   ‘கைத்தறி அணிந்தால் மணமகன்;
   மில் துணி அணிந்தால் பிணமகன்;
     நீ மணமகனா- பிணமகனா?”                 
         என திருமண மேடைகளிலும் அந்நிய நாட்டுத் துணிகளுக்கெதிராக துணிந்து பேசினார். 1950ல் இறைவனடி இணையும் வரையில் தமிழ்ப்பணி ஆற்றினார்.
                         ’சிரமாறுடையான்..’ என்று ஐம்பொருள் சிலேடையில் கடவுள் வாழ்த்து பாடிய செய்குத்தம்பி பாவலர்  வாழ்ந்த தெரு- பாவலர் தெரு. பள்ளி- செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி. இடலாக்குடியில் இவரது பெயரில் எம்.ஜி.ஆர். அவர்களால் மணிமண்டபம் கட்டப்பட்டது.  கலைஞர்  அவர்களால் இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவைதான் கலைக்கு நாம்   கொடுக்கும்  முக்கியத்துவம் என்றால் நாம் தேங்கி விட்டோம் என்றே பொருள்படும்.
          ஐந்திரம் அறிந்த தொல்காப்பியர் அவதானக் கலையில் சிறந்து விளங்கினார் என்னும் குறிப்பு உள்ளது. தொடர்ந்து, காளமேகப் புலவர், ஆறுமுகம் பிள்ளை, இலக்கிய வீதி திருக்குறள் ராமையா, அவரது மகன் கனக சுப்புரத்தினம் என இக்கலையின் நீட்சி சுருங்கிக் கொண்டே வருகிறது. தற்போது திருமூலநாதன், பிரதீபா, திலீபன், முனைவர் செழியன் போன்ற சிலரே இதனை நிகழ்த்தி வருகின்றனர். இந்தக்  கலையின் வரலாறும், கவனகர்களின் வாழ்க்கையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை.
               கவனகரின் பிறந்த நாளில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. பாரம்பரியக்  கலைகளை  மறப்பது,  இழப்பது;   இனம், மொழி இரண்டினையும் துறப்பது, அழிப்பது - இரண்டுக்கும் வேறுபாடு இல்லை, ஒன்றுதான்.

கலைகள் காப்போம்!!
                
             
                           
                                             

Monday, July 30, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 30

புரட்சிப் பெண் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி! 

டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி (1886-1968)!

                         பிறக்கும்போதே உடலில் வலு இல்லை; தாய்ப்பாலும்  கிடைக்கவில்லை; பிள்ளைப்பருவத்தில் மார்புச் சளி; பள்ளிப் பருவத்தில் கிட்டப்பார்வை; கல்லூரி செல்லும்போதோ,  ரத்தசோகையும், ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பும் சேர்ந்துகொண்டது. -இவை யாவும் உடல் கண்ட சோதனைகள்.                  
                    தாய் இசைவேளாளர் சமூகம் -தந்தை பிராமண சமூகம் - இவர்கள் திருமணத்தை உறவுகள் எதிர்த்தன; பருவம் வந்த பின்னும் பள்ளி செல்ல எண்ணிய இவரின் ஆர்வத்தை உடனிருந்த மீதி  உறவும், சமூகமும் மறுத்தன; ஒரு தங்கையின் அம்மை நோய் பாதிப்பும், மறு தங்கையின் புற்று நோய் பாதிப்பும் இவர் மன வலிமையை முறித்தன. இப்பெண்ணை படிக்கச் சேர்த்தால் , தங்கள் மகன்களை அனுப்ப மாட்டோம் என்று சாதியும், சமூகமும்  முரண்டு பிடித்தன. -  இவை யாவும் மனம் கொண்ட வேதனைகள்.
                              உடலும், மனமும் கண்ட  வாதைகளையும், சமூகத்தின் பேதைமைகளையும்   தனது சாதனைகளால் விரட்டி அடித்த சமூகப் போராளி - கருணையும் வீரமும் சரிவரக் கலந்திருந்த சாதனைப் பெண்மணி டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி 1886, ஜூலை 30 ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தார். தந்தை நாராயணசாமி வழக்கறிஞ்ர்; தாய் சந்திரம்மாள் இசைப்பாடகி.                  
    புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் சிறப்பு ஆணையோடு ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாய்ச்  சேர்ந்து படித்தார். சென்னை மாகாண மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த  முதல் இந்தியப் பெண் எனும் பெயர் பெற்றார். பெண்களை வகுப்பறையில் அமர வைக்கவே மறுத்த பேராசிரியர் ஜிப்போர்ட், முத்துலெட்சுமி பெற்ற மதிப்பெண்களால் மனம் மாறினார். 1912ல் முத்துலெட்சுமி மருத்துவர் பட்டம் பெற்ற நாளில், பேராசிரியர் சொன்னார், “சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்!”.        
    சென்னை எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். அந்நாளைய சுகாதாரத்துறை அமைச்சர் பனகல் ராஜா(நீதிக்கட்சி), உதவியோடு இங்கிலாந்து சென்று, மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தார். லண்டனில் ராயல் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இவர் கற்ற கல்வி, செனனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க உதவியது.
                             முத்துலெட்சுமி ரெட்டியை நிறுவனராகக் கொண்டு, 1954ல் ஜவகர்லால் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, அடையாறு புற்று நோய் மையம், இன்று இந்தியாவின் மிக முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாகும். எஸ்.கே.புண்ணியகோடி என்பவர்தான் மருத்துவமனைக்கான இடத்தை இலவசமாக வழங்கினார். தற்போது, இந்த மையத்தில்,  நாடெங்கிலும் இருந்து ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தரமான சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல், 1930 ஆம் ஆண்டு, இவரால்  தொடங்கப்பட்ட அவ்வை இல்லம் ஆதரவற்ற பெண்களின் கலங்கரை விளக்கமாக இன்றும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
                       இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண்களின் நலனுக்காக மாதர் சங்கத்தைத் தொடங்கினார். ‘ஸ்திரி தர்மம்’ என்னும் மாத இதழை நடத்தினார்.மாகாண சட்ட மன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம்,  சட்டமன்றத்தில் முதல் பெண் குரல் ஒலித்தது.  தேவதாசி  முறை ஒழிப்பு , இளம் வயது திருமணத்திற்குத் தடை, இருதார மணத்திற்கு தடைச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு முன்வடிவு கொடுத்தார். இது நாட்டில் பெரும்  விவாத அலையை உண்டாக்கியது. இறுதில் இவை யாவும் சட்டங்களாயின. மாதர் குலமே மகிழ்ந்தது.
               தான் எழுதிய, “My Experiment as a legislator" என்ற சுயசரிதைப்  புத்தகத்தில்,    அன்னி பெசண்ட் அம்மையாரும், மஹாத்மா காந்தியடிகளும் தனது  இரு முன்மாதிரிகள் என பெருமையோடு குறிப்பிடுகிறார் முத்துலெட்சுமி ரெட்டி. தியாசபிகல் சொசைட்டியில்,  சாதி மத சடங்குகளைப் புறக்கணித்து  , தனது மன எண்ணங்களைப் புரிந்து கொண்ட டாக்டர்.சுந்தரரெட்டி என்பவரைக் கண்டறிந்து மணவாழ்க்கையைத் தொடங்கினார். மனமொத்து பல சீர்திருத்தங்களைச் செய்தனர்.  இவர்கள் இருவரும் சமூக மாற்றங்களைச்  சத்தமின்றி எழுப்பிய, இரு கைகள் போலவே வாழ்ந்தனர். தடுத்த சமூகத்திற்கு, சாதனைகளையே பரிசாகக் கொடுத்தனர்.
                      தமிழிசைக்காகவும், தமிழுக்காகவும், தமிழாசிரியர்கள் நலனுக்காகவும் இவர் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதுபோல பல்வேறு பிரச்சனைகளில், முத்துலெட்சுமி ரெட்டியும், அவரது கணவரும் எப்போதுமே சமூக முன்னேற்றத்துக்கான முன் ஏர் போலவே செயலாற்றி வந்துள்ளனர். மனமொத்த இந்த தம்பதியினருக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம் மோகன், திட்டக்குழு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளைய மகன் கிருஷ்ண மூர்த்தி, ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர்.
              சமூகப் பணிகளில் சற்றும் தளர்வடையாத இவரது மன உறுதி, எதிர்காலத் தலைமுறையினருக்கு ஓர் சிறந்த முன்னுதாரணம்.  தடையின்றித் தொடரும்  தன்னலமற்ற இவரது சேவையைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசு இவருக்கு ’பத்ம பூஷண் விருது’(1956) வழங்கிச்  சிறப்பித்தது.  1968 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22ஆம் தேதி, இவர் மறைந்தார். இவரால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்கள் இன்று வரை சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது, இவரது உயர் வாழ்வுக்குக் கிடைத்த முழு வெற்றியாகும்.
                 முத்துலெட்சுமி ரெட்டி, தனது  வாழ்நாள் முழுவது சமரசமற்ற ஓர் சமூகப் போராளியாக வாழ்ந்து காட்டினார். இடர்கள், தடைகள் என எதுவும் அவரது இலட்சியங்களைத் தடுக்க முடியவில்லை. எதிர்கொண்ட சங்கடங்கள் அனைத்தையும், தனக்குச் சாதகமாக்கி,  சாதனையாகவும் மாற்றிக் கொண்டார்.
                ஆம், இடர் தரும்  தடைக்கற்களை    படிக்கற்களாக  மாற்றுவதும், தடுத்த கைகளைக் கொண்டே  வெற்றி மாலை சூட்டச்செய்வதும்தானே, ஒரு  போராளிக்கு இருக்க வேண்டிய அவசிய குணங்கள்.! 
                   
               

Sunday, July 29, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 29


முதல் முனைவர்-தமிழில்!


ஜுலை 29....இன்று!

                             தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும்,  பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில்  முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று.   
                         திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்பட்டியில் 1890-ஜூலை 29 ல் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.(P.S.Subramaniya Sasthiri,1890-1978). திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார். திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார்,.
                      மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ,  சமஸ்கிருதத்தில் முகலைப் பட்டம் பெற்றார். நீலகண்ட சாஸ்திரி, எஸ்.குப்புசாமி போன்ற பேராசிரியர்களிடம் மாணவராக இருந்து,  தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார். ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இதே தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார்.     தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ,  திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார்.
                        தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார்.  குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று,  பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத்  தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார்.       புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை  இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார்.    
                                    தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.    40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார்.ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை,திருவையாறில் ,  தொடர்ந்து  திருக்குறள் வகுப்பு நடத்தினார்.      எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக்  கடத்தினார்.
                                    இன்றைய சூழலில் , பல இடங்களில்  முனைவர் பட்டம் என்பது விலைகொடுத்து  வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம்  முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து,  முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.. 
                      ஆம்,   தமிழில்  ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும்.     இந்நாளில்,    பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை    உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.
                         மொழி- ஒருபோதும்  தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் முற்றாத- இளங்கொடி போல தழைத்தோடிக்கொண்டே இருக்கவேண்டும். தேவை உணர்வோம்.! 

Saturday, July 28, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 28

கல்லீரல் என்னும் கழுதை!

ஜூலை 28... இன்று!
உலகக்  கல்லீரல் அழற்சி நாள்.
               75%  முற்றும் வரை அறிகுறிகள் காட்டாமல் கல்லீரல் செயல்பாடுகளை முடக்கும்  ‘கல்லீரல் அழற்சி நோயை’ ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸைக் கண்டுபிடித்த பாருச் சாமுவேல் ப்ளூம்பெர்க்(1925-2011)  பிறந்த நாள் இன்று. ஹெபடைடிஸ் பி நேய்த் தொற்றுக்கான தடுப்பூசியையும் இவரே கண்டுபிடித்தார். இதற்காக  1976ல் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசையும் வென்றார். அவரது பிறந்த தினமான  ஜுலை 28 ஆம் தேதி ,         ‘உலக கல்லீரல் அழற்சி தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
                              அமெரிக்கா, நியூயார்க் நகரில் 1925ல் பிறந்த ப்ளூம்பெர்க் , முதலில் கணிதப் பட்டப் படிப்பிலேயே ஆர்வம் காட்டினார். பிறகு அதே கொலம்பிய பல்கலைகழகத்தில் மருத்துவத் துறையில் சேர்ந்து பட்டம் பெற்றார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் அமெரிக்கர் இவரே ஆவார். மரபணு தொடர்பான ஆராய்ச்சியின் போது, மஞ்சள் காமாலையை உண்டு பண்ணும் Hepatitis வைரஸைக் கண்டறிந்தார். NASA அமைப்பிலும்,    American philosophical Society யின் தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியிருக்கிறார்.
                                                கல்லீரல் தொடர்பான அறிவையும், ஆரம்ப நிலையிலேயே கல்லீரல் அழற்சி  நேயைக் கண்டறிந்து மருத்துவம் செய்யவும் மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும்  இந்த நாள் மிகவும் முக்கியமானதாகும். மனித உடலில் வலது மார்புக்கு கீழே, அடியில் உள்ள  கல்லீரல் சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ளது. பித்தநீரைச் சுரக்கும் கல்லீரல் தான், தீங்கு தரும் நச்சு வேதிப் பொருட்கள் (அதிகப்படியான ஸ்டிராய்ட் மருந்துகள், ஆல்கஹால் மற்றும் உணவில் கலந்துள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள்), உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்காதவாறு சுத்தம் செய்யும் பணியைச் செய்கிறது. ஹெபடைடிஸ் வைரஸ் , A,B,C,D,E என      ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி இரண்டும் உயிர்கொள்ளும் வகையைச் சேர்ந்தது.
            உலகெங்கும் 500 மில்லியன் மக்கள் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே பிரச்சினையால் இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 70000பேர் மரணத்தைச் சந்திக்கிறார்கள். கல்லீரல் பாதிப்பிற்கு  ஆல்கஹால் அருந்துவதும் முக்கிய காரணமாக அமைகிறது.  வைரஸ் தாக்கத்தால் நோய் முற்றினால், புற்றுநோய் மற்றும் கல்லீரல் சுருங்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
                   தமிழ்நாட்டில் "Liver foundation" என்னும் அமைப்பு, ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் தேதி இலவச கல்லீரல் சோதனை மற்றும்  விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறது. இந்தியாவின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 1996ல் நடைபெற்றது. 2030க்குள் ஹெபடைடிஸ் வைரஸை முற்றிலுமாக ஒழித்துவிட உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதி எடுத்துள்ளது. நாமும் கல்லீரலைப் பாதுகாக்கும் வழியறிந்து செயல்பட வேண்டும்.
          உடலைக் காப்பாற்ற, முடிந்த மட்டும் உழைக்கும்; பிரச்சினை வரும்போதும் தானே சரி செய்து கொள்ளும்; முடியாது என்றுணர்ந்து படுத்துவிட்டால் ,  ஒருபோதும் எழாது. தமிழ்க்கவிஞன் சொன்னது சரிதான்.....
"கல்லீரல் என்பது கழுதை மாதிரி".

                                                  

Friday, July 27, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 27

 உலகக் குடிமகன் - காரி டேவிஸ்!

ஜூலை 27.... இன்று!

          அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) பிறந்த நாள் இன்று.
                  அடக்கு முறை, சிறைவாசம்,  ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் 'உலக அரசாங்கத்தை' ஏற்படுத்தினார் காரி டேவிஸ்.   இன்றும்     அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ‘ உலக பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன. நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின்  "World Service Authority" பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன.
                  அமெரிக்காவில்,1921- ஜூலை 27ல்,  யூத தந்தைக்கும், அயர்லாந்து நாட்டு அன்னைக்கும் மகனாகப் பிறந்த காரி டேவிஸ், பட்டப்படிப்பும், தொழில்நுட்பக் கல்வியும் பெற்றவர். சில காலம் , பிராட்வே நாடகக் குழுவில், நடிகராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது,பி-17 குண்டு வீசும் விமானத்தில் பயணித்து, ஜெர்மனி நாட்டின் நகரங்களில் குண்டு வீசினார்.  இருப்பிடம் திரும்பிய பின்பு, அழிவுகளின் புகைப்படங்களைப் பார்த்தார். மனம் வருந்தினார். எல்லைகள் பிரித்ததும், நாடுகள் பெயரிட்டதும் மனிதனை மனிதன் கொன்று அழிக்கத்தானா என தனக்குள் கேள்வி எழுப்பினார். மறுமுறை விமானத்தில் சென்று,  குண்டுகள் வீசாமல் திரும்பி வந்ததால், தண்டனைக்கு உள்ளானார்.
            பாரீஸில் சார்போன் பல்கலைக்கழகத்தில்  நடராஜ குருவின்(நாராயண குரு குலம்)  நட்பைப் பெற்றார். இருவரும் இணைந்து ஒரே உலகை உருவாக்கும் திட்டங்கள் தீட்டினர். ரிக் வேத வாக்கியமான "வசு தைவ குடுமபகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற சொல்லாட்சி தன்னை பெரிய அளவில் சிந்திக்க வைத்ததாக காரி டேவிஸ் எப்போதும் சொல்லுவார்.
             1948ஆம் ஆண்டு முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ், 1954ல் இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார். பிறகு, நடராஜ குரு, ஆர்.கே.லெட்சுமணன்   போன்ற ஆளுமைகளின் முயற்சியாலும், ஜவகர்லால் நேருவின் நேரடி தலையீட்டினாலும், அவரது உலக பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு,  எட்டு மாத காலம், ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருக்கும் நாராயண குரு குலத்தில் தங்கினார். வாழ்வின் இறுதி வரை , குறிப்பிட்ட கால  இடைவெளியில் இந்தியா வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 
          ஒருமுறை காரி டேவிஸ், தென் ஆப்ரிக்கா நாட்டில் நான்கரை ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள்ளேயே தனது உலகத்தை உருவாக்கிக் கொண்டு, மன உறுதியோடு நிமிர்வ்து நின்றார் கார் டேவிஸ்.  1986ல் நடைபெற்ற அமெரிக்க மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு, வெறும் 585 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.    காந்தியவாதியாகவே  இருக்க விரும்பிய காரி டேவிஸ், அமைதி வழியிலேயே, 150 நாடுகள் இவரது உலக பாஸ்போர்ட்டை ஏற்கும் படி செய்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
                 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதையே உயிரெனக் கொண்டார்.      ஆகாயத்தின் கீழ் யாவரும் ஒரே குடும்பம் என்ற இலட்சியத்தை நடைமுறைப்படுத்த,  இறுதிவரை (2013) போராடினார்  காரி டேவிஸ்.   ஆம்,  தேசத்தின் எல்லைகள்-
மானுட சிந்தனையைச் சுருக்கும் கயிறுகளோ என்னவோ! 
            இலட்சியங்களின் வெற்றி தோல்விகளை வரலாறு பார்த்துக்கொள்ளும்.ஆனால்  இலட்சியங்கள் சமூகத்தை  ஒன்றுபடுத்துவதாக,  மேன்மை செய்வதாக   இருக்க வேண்டும்.             

Thursday, July 26, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 26

சிந்தனை அறிஞர் பெர்னாட் ஷா!


   " A Life spent making mistakes is not only honourable but more useful thana life spent doing Nothing"                 - Bernard Shaw           
      
     இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் (1925), திரைத்துறையில் ஆஸ்கார் விருதையும்(1938) பெற்ற ஒரே எழுத்தாளர்-நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா ( 1856-1950) பிறந்த நாள் இன்று!. ஆங்கில நாடக உலகில் ஷேக்ஸ்பியருக்கு இணையாகக் கருதப்படும் பெர்னாட் ஷா, 6 நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, விமர்சனக் கட்டுரைகள், எண்ணற்ற நாடகங்கள் என இறக்கும் வரையில் சுறுசுறுப்பாக இயங்கினார்.
            1856 ஆம் ஆண்டு, ஜூலை 26 ஆம் தேதி,  அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகருக்கு அருகில் உள்ள  கடற்கரை   கிராமத்தில் பிறந்த இவர், வறுமையிலேயே வளர்ந்தார். இரண்டு மூத்த சகோதரிகளுடன் வளர்ந்த பெர்னாட் ஷா, ஜார்ஜ் கார் ஷா- லூசிண்டா எலிசபெத்தின் ஒரே ஆண் மகனாவார். நான்கு ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றார். வாழ்நாள் முழுவதும் பள்ளிகளைப் பற்றிய வெறுப்பான எண்ணமே அவருக்கு இருந்தது. இதற்கிடையில் பெர்னாட் ஷாவின் அம்மா , தனது மகள்களுடன்     கணவனைப் பிரிந்து சென்று விட, இவர் மட்டும்  தந்தையோடு தங்கிவிட்டார்.   பிரிட்டிஷ் மியூசியம் உள்ளிட்ட எல்லா  நூலகங்களிலும் அமர்ந்து மணிக்கணக்கில் படித்தார். ஒவ்வொரு மாதமும்   தாயிடமிருந்து வரும் ஒரு பவுண்டு பணத்தில் புத்தகங்களே வாங்கினார். 
         'சமூக ஏற்றத்தாழ்வுகள் அற்ற நிலை வரவேண்டும். ஏழை - பாட்டாளிகளின் உழைப்பை யாரும் சுரண்டக் கூடாது.'- என்ற சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு, பல்வேறு சித்தாந்த அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார். கம்யூனிசத்தில் இணைந்தார்; பின்  ஃபேபியன் சொசைட்டியில் பெரும்பங்காற்றினார்; ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும் சமூகத்தை சீர்திருத்த வந்த தலைவர்கள் என்றார்; பின்பு எதிர் நிலையும் எடுத்தார்.    இவரது கொள்கைகள் முரண் போல் தோன்றலாம். ஆராய்ந்து பார்த்தால், சமூக மேன்மையையே அவர் விரும்பியது புரியும்.
                  இசை விமர்சனம் உட்பட ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். கடிதம் எழுதுவதில் சளைக்காது இருந்தார். ஏறக்குறைய 2,50,000  கடிதங்கள் எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் மற்றும் நாவல்களில் வரும் மேற்கோள்கள், இன்றளவும் புதுமையும் புத்துணர்வும் கொண்டவை. 
கிரிக்கெட் பார்வையாளர்களைப் பற்றிய இவரது கருத்தும் புகழ்பெற்றது.
               'பிக்மாலியன்' என்ற இவரது  நாடகம், திரைப்படமானபோது, அதன் திரைக்கதை எழுத்துக்காக ஆஸ்கர் அகாடமி விருது பெற்றார். திரைத்துறை, நாடகம், இலக்கியம் என அலைந்த  பெர்னாட் ஷா, தன் வாழ்நாளில் ஒரு முறை கூட, மதுவையும் புகையையும் தொட்டதே இல்லை. மேலும், பதின்பருவ நாள்களில் இருந்து, சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.  
                நேர்ப்பேச்சிலும் எழுத்திலும் இவரிடம்     மெல்லிய  நகைச்சுவை இழையோடும். 1925ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, மனைவியின் வற்புறுத்தல் காரண்மாகவும்,    தனது தாய் நாட்டிற்குப் பெருமை என்பதற்காகவும் மட்டுமே விருதினை ஏற்றுக்கொண்டார். ஆனால், பரிசினை நேரில் பெற, நார்வே நாட்டிற்குச் செல்லவில்லை. மாறாக, பரிசுத்தொகை முழுவதையும், ஸ்வீடிஷ் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கென செலவழிக்கச் சொல்லி விட்டார். 
               London school of Economics என்ற அமைப்பை நிறுவிய பெர்னாட் ஷாவின் சிந்தனைகள், இன்று   "ஷாவியன் கோட்பாடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. பட்டங்களையும், பரிசுகளையும் வெறுத்த பெர்னாட் ஷா, மத அடையாளத்தோடு மேடைக்கு வரும் அன்பளிப்புகளைக் கூட பெறுவதில்லை. எளிய   மக்களின் பிரதிநிதியாக இறுதி வரை எழுத்தின் வழியே போராடிய பெர்னாட் ஷாவின் பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
              இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில், Common sense about the war என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அதில்,’நாட்டுப்பற்று’ என்ற போலித்தனத்தின் பெயரால், எண்ணற்ற இளைஞர்களின் உயிர்கள் வீணாகிப் போவதைப் பற்றி, மனம் வருந்திப் பேசினார். இக்கட்டுரை மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால், பெர்னாட்ஷாவின் நல்ல பிம்பம் , உடைந்துபோனது என்று கூட சொல்லலாம். இதற்காக தனது கருத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஏனெனில், போர்களை அவர் அறவே வெறுத்தார். 
                 1898 ஆம் ஆண்டு, ஃபேபியன் அமைப்பில் இருந்த, சி.பெய்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பெர்னாட்ஷா. இவர்களது வாழ்வில், இன்பம் மட்டுமே நிறைந்திருந்தது. இந்த இணைக்கு குழந்தைகள் ஏதுமில்லை. ஆனாலும், இருவருக்குமிடையில் பரஸ்பர அன்பு, நிறையவே இருந்தது. மரணிக்கும் நாள் வரை, மனமொத்தே வாழ்ந்தனர். 1950 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்  2 ஆம் தேதி பெர்னாட்ஷா இறந்து போனார். அயோட் நகரத்தில் இருந்த தனது வீட்டில், ஏணியில் ஏறி மரக் கிளைகளை வெட்டி, சீர் செய்து கொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். அதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே இறந்தும் போனார்.
                 மக்கள் நலனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த பெர்னாட்ஷா, வாழ்நாளின் இறுதிவரை நாடகங்களை எழுதிக் கொண்டே இருந்தார்.  1950 ஆம் ஆண்டு இவர் எழுதிய, Why She Would Not என்ற நாடகமே இவரது கடைசி ஆக்கமாகும்.   மரணத்திற்குப் பின் இவரது பெயர் சொல்ல, ரத்த வாரிசுகள் ஏதும் இல்லை. ஆனாலும், அவர் காலத்திற்குப் பின்னும் அவர் இன்னும் இருக்கிறார். ஏனெனில், அவர் நவீன அறிவுலகின் தந்தையாகிப் போனார். உலகில் எங்கிருந்தாலும், அறிவு நிறைந்த மனிதர்கள், இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள். ஆம், மக்கள் நலன் விரும்பும் சிந்தனைவாதிகள்- அறிஞர்களை,  அப்பகுதியின் ’பெர்னாட் ஷா’ என்று சொல்வது, இன்று உலக வழக்கமாகி இருக்கிறது.
               வெற்று அறிவு என்பது,  வீணாக விழலுக்கு இறைக்கும் நீர் என்பதையும், மானுட சமூகத்தின் மேன்மைக்கான சுத்த அறிவு தான், காத்திருக்கும் பயிருக்கு உயிர் கொடுக்கும் கார் என்பதையும் உணர்வுக்குள்  கலந்து வைப்போம்!
       

Wednesday, July 25, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 25

சாகசமும் கருணையும்- ஜிம் கார்பெட்!


  ஜூலை 25... இன்று!

      இந்தியக் காடுகளில்  ஆள் தின்னும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடியவர்; பெருமையின் பொருட்டு ஒரு உயிரியைக் கூடக் கொல்லாதவர்; மாறாக வனவிலங்குகளைப் பாதுகாக்க பெரு முயற்சி எடுத்த ஆங்கிலேய வேட்டைக்கார்- எழுத்தாளர்  ஜிம் கார்பெட் (Jim Corbett, 1875-1955) பிறந்த நாள் இன்று.
           மன்னராக முடி சூட்டிக்கொள்ள  இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் , 1911 ல்  இந்தியா வந்தபோது, அவருக்காக சிறப்பு கானக வேட்டை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.ஐந்து நாள்கள் நடந்த  வேட்டையில் 39 புலிகள்,18 காண்டாமிருகங்கள் உட்பட எண்ணற்ற காட்டு உயிரிகள்  அழிக்கப்பட்டன. இந்த வேட்டைக்கு உதவிய 14000 பேருக்கும் தினமும் மான், முயல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.முழுக்க முழுக்க பெருமையின் பொருட்டு நடத்தப்பட்ட  அராஜகம் , கொன்று குவிக்கப்பட்ட புலிகளின் முன் படம் எடுத்துக் கொண்டதோடு முடிவுக்கு வந்தது.
            இதே காலகட்டத்தில் தான், இமயமலை அடிவாரத்தின் காடுகளில், மனிதர்களை வேட்டையாடிய புலி மற்றும் சிறுத்தையின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற களத்தில் இறங்கினார் ஜிம் கார்பெட். தவறுதலாக மனிதனைப் பிடித்து சாப்பிடும் விலங்குகளை வேட்டையாட மாட்டார். இரைக்காகவே மனிதனைச் சாப்பிடுகிறது என்று விசாரித்த பிறகே வேட்டையில் இறங்குவார்.
                நைனிடால் நகரில் பிறந்து வளர்ந்த ஜிம்      கார்பெட்டின் தந்தை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜிம் கார்பெட்டுக்கு பதினைந்து சகோதர சகோதரிகள்.  எட்டாவது குழந்தையான இவர் முழுப்பெயர் எட்வர்ட் ஜேம்ஸ் கார்பெட். 
                 பகலில் புலியும், இரவு நேரங்களில் சிறுத்தையும் மனிதனை வேட்டையாடுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். காயம்பட்ட புலிகளும், குட்டி ஈனும் பருவத்து புலிகளும் வெகுதூரம் அலைந்து வேட்டையாடுவதில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தினார். கட்டுக்கடங்காமல் சுற்றித் திரிந்து, இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்றழித்த புலியையும், சிறுத்தையையும் தனியாளாக எதிர்த்து நின்று வேட்டையாடினார். குமாவூன் பகுதி மக்கள், இவரை தங்கள் உள்ளங்களில் ஏந்தினர். 
          கானுயிரிகளையும் , கானகத்தையும் இடைவிடாது ஆராய்ந்தவர் ஜிம் கார்பெட்.  இமயமலையைவிட காலத்தால் பழமையான சிவாலிக் மலைத்தொடர் முதல் ருத்ரபிரயாகை காட்டுப்பகுதி வரை , வாழ்நாள் முழுவதும் சுற்றித் திரிந்த கார்பெட், தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். Man eaters of kumaon, Jungle stories,  Jungle lore, Tree tops போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார். மிகவும் பிரபலமான My India புத்தகத்தை , ஜிம் கார்பெட் ஏழை இந்திய மக்களுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். அதில்வரும் முன்னுரை பகுதியில், அதற்கான காரணத்தையும் நெகிழ்ச்சியோடு விளக்கியுள்ளார்.
         பூமியில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான வாய்ப்பை மனிதனே முன்னின்று உருவாக்க வேண்டும் என்று சொன்ன ஜிம் கார்பெட், இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா உருவாகக் காரணமாக இருந்தார். அவர் நினைவைப் போற்றும் வகையில், 1957ல்,  அதே பூங்காவிற்கு, "ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா"(உத்தர்கண்ட்) என பெயர் சூட்டப்பட்டது. வங்கப்புலியின் சிற்றினம் ஒன்றுக்கு "கார்பெட் புலி" என பெயரிடப்பட்டது.
                1947ல், இந்தியாவிலிருந்து புறப்பட்டு, கென்யா சென்று தங்கினார். இயற்கையைப் பாதுகாக்க தன்னால் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். கென்யாவில், மரக்கிளைகளின் உச்சியில், குடிசை   கட்டி வாழ்ந்த கார்பெட்,     திருமணமே செய்து கொள்ளவில்லை. இவரது மர உச்சி குடிசையில்,      இங்கிலாந்து இளவரசி எலசபெத் இரு நாள்கள் தங்கிச் சென்ற நிகழ்வும் நடந்தது.
                 தனது 80 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஜிம் கார்பெட்டின் வாழ்வு உணர்த்தும் செய்தி மிக  எளிமையானது.    வைரமாய் மின்னும் ஜிம் கார்பெட்  வாழ்வின்  முன்பு,       சாகச வேட்டை     செய்த மன்னன் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு புள்ளியாகவே மட்டுமே   எஞ்சுவார். வரலாறு அப்படித்தான் குறித்துக் கொள்ளும்.

      சாகசங்களை விடவும், சகமனிதனை நேசிப்பதும், சமூக அக்கறையும் தான் சரித்திரத்தில் நிலைக்கும்!.

Tuesday, July 24, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 24.

மலையில் சொர்க்கம் - மச்சு பிச்சு!
    

         1911, இதே ஜூலை 24, கடும் மழை நாளொன்றில்தான், 8000 அடி உயரத்தில் இருந்த,  இன்கா இன  மக்களின் மச்சு பிச்சு நகரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தென் அமெரிக்கா, பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரின் கிழக்குப் புறத்தில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட , அழகிய நகரம், யேல் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் பிங்ஹாம் என்பவரால் நவீன உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.  The Lost City of the Incas என்ற புத்தகத்தில், பிங்ஹாம் தனது பயண அனுபவங்களை விவரித்துள்ளார்.
         ஸ்பானியப் படையெடுப்பில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இன்கா இனம், கொலம்பஸின் வருகைக்கு முன்பு , மாபெரும் பேரரசாக அமெரிக்கக் கண்டத்தில் நிறைந்திருந்தது. இன்கா இன அரசர்கள், 'சூரியனின் மகன்" என அழைக்கப்பட்டனர்.  'குவெச்சுவா ' என்றழைக்கப்படும்   பேச்சு மொழியை மட்டுமே பயன்படுத்தினர். ஆதலால்,  அவர்களைப் பற்றிய எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. இயற்கையின் மீதும், உண்மையின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இன்கா இன பழங்குடி  மக்களை, படையெடுப்பு ,காலணி ஆதிக்கம் என்ற பெயரில் மேற்குலக நவீனர்கள் செய்த துரோகத்தின் வரலாறு ஒரு கண்ணீர் சரித்திரம்.
           1450ஆம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு மலைநகரம், மன்னருக்கென உருவாக்கப்பட்டதாகும். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர். எல்லா துறை சார்ந்தவர்களும் சேர்ந்து, மன்னருக்கு பணிவிடை செய்து வந்தனர். நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. அகழ்ந்தெடுக்கப்பட்ட      மனித எலும்புகள் , அவர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் வளைந்து இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
               அழகான முறையில் உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு நகரத்தின் மையத்தில் உள்ள, 'இண்டிகுவாட்னா' (சூரியக் கோயில்) வானியல் மணிக்கூடாகும். இயற்கையில் அமைந்த பாறைகளைக் கொண்டு, சாய்தளங்கள், சுற்றுச்சுவர், மேற்கூரை என கலைவண்ணத்தில் உயர்ந்த வேலைப்பாடுகளை இங்கு காணலாம்.
        இன்கா இன மக்களும், வாழிடங்களும் அழிக்கப்பட்ட போதும், ஸ்பெயின் உள்ளிட்ட எந்த மேற்குலக நாடுகளும் இந்நகரை அறிந்திருக்கவில்லை. ஆதலால், மனிதனின் குரூர வேட்டையிலிருந்து மச்சு பிச்சு தப்பியது.  வரலாற்றின் புராதன நகரங்களுள் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் (2017) மட்டும் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள மச்சு பிச்சு நகரம், மலையின் மடியிலே - மாபெரும் சொர்க்கமாகும்.
               எழுத்து வடிவம் இல்லாததால், சொந்த      மொழியில் ஆவணங்கள் இல்லை. இன்கா இன மக்களின் வரலாறு,  இன்று கல்லில் மட்டுமே எஞ்சியுள்ளது.   இதிலிருந்து   நாம் அறிந்து கொள்ள செய்தி எதுவாக இருக்கக்கூடும்?

மொழியையும் கலையையும்  நமது இரு கண்களாய்ச் சுமப்போம்.!

Monday, July 23, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 23

ஆசாத் என்னும் அதிசயம்!


ஜூலை 23.... இன்று!

     1925, ஆகஸ்ட் 9 ஆம் தேதி, லக்னோ அருகில் உள்ள ககோரி என்னுமிடத்தில், இந்திய சுதந்திர இயக்கத்தால் (நிறுவனர்: கவிஞர் ராம் பிரசாத் பிஸ்மில்) , வெள்ளையர்கள் வசூலித்த வரிப்பணத்தைக் கைப்பற்ற  நடத்தப்பட்ட ரயில் கொள்ளைச் சம்பவம் இந்திய விடுதலை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மூளையாகச் செயல்பட்டு, கடைசிவரை பிடிபடாமல் சாதனை படைத்த சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினம் இன்று.
                    மத்திய பிரதேச மாநிலம்      பாவ்ரா என்னும் கிராமத்தில், சீதாராம் திவாரி-ஜக்ராணி தேவிக்கு ,  1906 ஆம் ஆண்டு, ஜுலை 23 ஆம்  நாள் சந்திரசேகர் பிறந்தார்.குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதும், தாயின் விருப்பத்திற்கு ஏற்ப, காசி சென்று சமஸ்கிருதம் படித்தார். தனது கிராமத்து பழங்குடி மக்களிடம்   பாரம்பரியக்    கலையான வில்வித்தையிலும் நிபுணத்துவம் பெற்றார். பின்னாட்களில், துப்பாக்கி சுடுவதற்கு இக்கலை உதவியதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 1921ல், பதினைந்து வயது சிறுவனாக இருந்த சந்திரசேகர், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு , நீதி விசாரணையின் போது, அவர் அளித்த பதில்கள் நீதிபதியை எரிச்சலூட்டின.
”உனது பெயர் என்ன?” - “ ஆசாத் (சுதந்திரம்)”
“உனது தந்தை பெயர்?” - “ சுதீன் (சுதந்திரம்)”
”உனது இருப்பிடம் ? “ - “ சிறைச்சாலை “
இவ்வாறு பதிலளித்ததற்காக 15 கசையடிகள் பரிசாகப் பெற்றாலும் , அந்நாள் முதல் , அவர் பெயர் சந்திரசேகர் ஆசாத் என்றானது.
                 காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக்கொண்ட போது, இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1925 ககோரி ரயில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார். அதில் 43 பேர் கைது செய்யப்பட்டு, தலைவர் பிஸ்மில் உட்பட 4 பேருக்கு தூக்கு தண்டனையும்  ஏனையோருக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.ஆனால் கடைசி வரை ஆங்கிலேயர்களால் ஆசாத்தை கைது செய்ய முடியவில்லை. மாறுவேடங்கள் புரிவதில் வல்லவரான ஆசாத், Hindustan socialist Republic Association என்னும் அமைப்பை நிறுவினார். சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத் சிங் மற்றும்  ராஜ குருவை போலீஸின் பிடியில் இருந்து தப்பவைக்க , சனன்சிங் என்பவரை வெகு தூரத்திலிருந்து சுட்டுக் கொன்றார். தனி மனித கொலைகளை விரும்பாத ஆசாத், சனன்சிங்கின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வெகு நாட்கள் மனம் வருந்தினார். ஓர் நாள் இரவில்,  தனக்கு அடைக்கலம் கொடுத்த முகம் அறியாத  விதவைத் தாயின் மகளை , தனது சகோதரியாக எண்ணினார்.        தான்  படுத்துறங்கிய இடத்தில் , அவளின்  திருமணச் செலவுக்கு தன்னிடமிருந்த பணத்தை சத்தமின்றி வைத்துச் சென்றார். நெஞ்சுரம் மிக்க ஆசாத் இளகிய மனமும் கொண்டிருந்தார்.
               1931- பிப்ரவரி 27 ஆம் நாள், நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அலகாபாத் ஆல்ஃபிரட் பூங்காவிற்கு வந்திருந்தார். எதிர்பாராத விதமாக, உள்ளூர் உளவாளி காட்டிக் கொடுக்க, ஆங்கிலேய வீரர்கள் சுற்றி வளைத்தனர். வீரத்துடன் சண்டையிட்டார். 63 குண்டுகள் அவர் மீது சுடப்பட்டன. ஆங்கிலேயர்களிடம் பிடிபடக் கூடாது என ஏற்கெனவே எடுத்திருந்த உறுதிமொழியின்படி, தனது கோல்ட் துப்பாக்கியின் கடைசி குண்டின் மூலம் தனது தலையைச்  சிதைத்து இறந்து போனார்.  அன்றே மக்கள் மனங்களில், ஆல்ஃபிரட்  பூங்கா, ஆசாத்  பூங்காவாக  மாறியது. பின்பு அதுவே சட்டமானது. 
               மாறுவேடங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்ததால், தன் பிரியத்திற்குரிய தாயைக் காணமுடியாது ஏங்கினார். தாய்நாட்டிற்காக இத்துன்பத்தைத் தாங்கினார். கால் நூற்றாண்டு மட்டுமே வாழ்ந்தாலும்,  வாழ்ந்த முறையால், ஆசாத் பெயர் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்.

 வாழும் முறைமை அறிவோம்.
      

Sunday, July 22, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 22

இயேசுவின் நிழல் -  மேரி மேக்டலின் திருநாள்!


ஜூலை 22..... இன்று!

        நம்பிக்கையின் திருத்தூதர் என்று போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டவரும்,  திருத்தூதர்களுக்கே திருத்தூதுரைத்தவருமான  மேரி மேக்டலின் திருவிழா (Feast)  நாள் (ஜூலை 22) இன்று.

      இவர்தான், இயேசு நாதரின் சிலுவை மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் - மூன்றிலும் உடனிருந்தார் என்று புனித ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளும் ( மாற்கு , மத்தேயூ, லூக்கா மற்றும் ஜான்) கூறுகின்றன. மேலும், புனித நற்செய்தி நூல்களில், இவரது பெயர் மட்டும், பன்னிரெண்டு முறை நேரடியாக சொல்லப்படுகிறது.
                        இயேசு நாதரின் பாதம் பதிந்த கலீலி கடற்கரையில்,  மக்டலா என்ற மீன் பிடி நகரத்தில் பிறந்தவர்தான் மேரி மாக்டலீன் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர் இயேசு நாதரின் பயணங்களில் உடனிருந்தார் என்றும், பயணங்களுக்கு உதவினார் என்றும் புனித லூக்காஸின் நற்செய்தி நமக்கு கூடுதல் தகவல் தருகிறது.
          யூதப் பெண்மணியான மேரி மேக்டலின் இயேசு கிறிஸ்துவின் பயணங்களில் இறுதி வரை உடனிருந்தார். மானுடம் தழைக்க, அன்பையே செய்தியாகச் சொன்ன, மானுட குமாரன் சிலுவையில் அறையப்பட்ட நேரத்திலும் மாக்டலீன் உடனிருந்தார். கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, சூரிய உதயத்திற்கு அரை மணி நேரம் கழித்து, மேரி மேக்டலின் இயேசுவின் கல்லறையை காணச் செல்கிறார். கல்லறை திறந்து கிடக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, அவளின் பெயர் சொல்லி அழைத்து,  அருகே வருகிறார். "குருவே...!" என கதறி அழுதபடி, பாதம் தொட நெருங்குகையில்,             " என்னைத் தொடவேண்டாம், நான் இன்னும் என் பிதாவினிடத்தில் சேரவில்லை, மாறாக நான் உயிர்த்தெழுந்த செய்தியை நம் தூதர்களிடம் சொல்வாயாக" என்று அறிவுறுத்துகிறார். இப்படியாக, உயிர்த்தெழுந்த கிறிஸ்து, முதலில் காட்சி கொடுத்ததும் மாக்டலீனுக்குத்தான் என்று நான்கு நற்செய்திகளும் கூறுகின்றன.
                       
             மேரி மேக்டலின் எழுதிய நற்செய்தியில், (Gospel of Mary), திருத்தூதர்களில் ஒருவரான பீட்டர்,  மேரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்புவதும், பதில் பெறுவதுமான காட்சிகள் உள்ளன. பெண் என்பதால், தன்னை ஒதுக்குவதாக மேரி மாக்டாலீன் இயேசுவிடம் முறையிடுவதும் அதில் சொல்லப்படுகிறது.  பீட்டருக்கு லெவி சமாதானம் சொல்கிறார். இவை யாவும், எதிர்காலத்தில் வரப்போகும் புனைவாளர்கள், ஆய்வாளர்களுக்கான  பதிலாக அமைந்தது. 
          ஞானவாத கிறிஸ்துவத்தில் ( Gnostic  christianity) மேரி மேக்டலின் மிகப்பெரிய ஞானியாகவே கருதப்படுகிறார். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நிரூபிக்கப்பட்ட மேரி மேக்டலின் நற்செய்தியும் (1896ல்), தாமஸின் நற்செய்தியும் (1945ல்) , சிதிலமடைந்த நிலையில் பாப்பிரஸ் ஆவணங்களாகக் கிடைத்துள்ளன.  குறைந்த காலம் புழக்கத்தில் இருந்த இவை, ஒற்றை அமைப்பாக  உருவாக்கப்பட்ட நூற்றாண்டுகளில், புதிய ஏற்பாடு உருவாகி வந்த போது, சில காரணங்களால் இவை  இணைக்கப்படவில்லை.  
       பைபிளில் மூன்று மேரிகள் குறிப்பிடப்படுகிறார்கள். பெயர்க் குழப்பம் காரணமாக, பல்வேறு ஊகங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வந்தன.  திருச்சபைக்கு எதிராக எழுந்த மார்டின் லூதர் உட்பட பலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறினாலும், அன்னை மேரி, மேரி மேக்டலின் - இரு மேரிகளுமே, இயேசு கிறிஸ்துவின் நிழல் போல் தொடர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. இன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபை,   லுத்ரன் திருச்சபை, புராட்டஸ்டன்ட்,  ஆதி ஞானவாத சபை என அனைத்தும் மேரி மேக்டலினுக்கு  உரிய, உயரிய  அந்தஸ்தை  வழங்கியுள்ளன.
                       ’அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்’  என்ற அடைமொழியோடு, மேரி மாக்டலின் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று வாடிகன் திருச்சபை, 10.06.2016 ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியிட்டது. ரோமாபுரி வெளியிடும் புனிதர்களின் நாட்காட்டியில், ஜூலை 22 அன்று, ’மாக்டலீன் திருநாள்’ என்று குறிப்பிடப்பட்டது.   போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், மேரி மாக்டலீனை ’நம்பிக்கையின் திருத்தூதர்களில்’ முதன்மையானவர் என்று அறிவித்தார்.
                          இரண்டாயிரம் ஆண்டுகளாக, மேரி மாக்டலீன் பற்றிய வரலாறும், திரிபுகளும் இங்கே உலா வந்தபடியே இருக்கின்றன. பரபரப்புக்காகவும், புனைவின் பொருட்டும் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீது, ஆழமான பேரன்பும், உறுதியான  நம்பிக்கையும்  கொண்டிருந்த மேரி மாக்டலீன், இன்று  மனம் திருந்தியவர்களின் பாதுகாவலராகவும், பெண்களின் காப்பாளராகவும் வேண்டப்படுகிறார்.  அவரது நற்செய்தி, உலகெங்கும்  பரவலாக வாசிக்கப்படுகிறது.
                                 ஏழு வகைப்  பாவங்களிலிருந்து மனந்திருந்தியவராக காட்டப்படும் புனிதர் மேரிக்கே உயிர்த்தெழுதலின் முதல் காட்சி கிடைத்திருக்கிறது. மேரி மேக்டலின் வழியாகவே அந்த நற்செய்தியும் ஏனைய திருத்தூதர்களுக்குச்  சொல்லப்படுகிறது.  இவற்றின் மூலம் இயேசு கிறிஸ்து வழங்கும் மறைபொருள் என்னவாக இருக்கக்கூடும்?
                      பாவங்களிலிருந்து மனம் திருந்தி, இறைவனின் பெயரால், மானுட சமூகத்தின் நன்மைக்காக வாழ்பவர்கள் - பால், இன வேறுபாடின்றி - எப்போதுமே உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.  குற்றங்களும், குறைகளும் நிறைந்ததுதான் மானுட வாழ்வெனும் பாத்திரம். அதில் இருக்கும் பாவங்களைக் களைந்துவிட்டு, அதனை  பேரன்பினால்  நிரப்புவது தான், நாம் முன்னெடுக்க வேண்டிய  புனிதமான செயல்.!
                           

                       

Saturday, July 21, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 21.

சாகசக்காரன் - எர்னெஸ்ட் ஹெமிங்வே!       


 "There is nothing to writing. All you do is sit down at a typewriter and Bleed"
                               -Ernest Hemingway.

இன்று எர்னெஸ்ட் ஹெமிங்வே பிறந்த நாள்!

              ”ஒரு எழுத்தாளனாக நோபல் பரிசு பெறுவதை விடவும் , ஒரு காளைச் சண்டை வீரனாக, காளையைக் கொன்று, காளையின் காதைப் பரிசாக பெறுவதையே உயர்வாக எண்ணுகிறேன்.”- என்று சொன்ன எர்னெஸ்ட் ஹெமிங்வே (1899-1961), காளைச் சண்டையிலும் வெற்றி பெற்றார், இலக்கியத்திற்காக நோபல் பரிசையும் (1954) பெற்றார். இன்றும் ஸ்பெயின் காளைச் சண்டை மைதானத்தின் நுழைவு வாயிலில் , எழுத்தாளரான ஹெமிங்வேயின் உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.!
              ஆறாம் வகுப்பு தமிழ், புதிய பாடத்திட்டத்தில் இவர் எழுதிய "கிழவனும் கடலும்" சித்திரக் கதையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாவலில் வரும் சாண்டியாகோ கிழவனை வாசித்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
               அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஒரு புற நகர்ப்பகுதியில்  1899 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 21ஆம் தேதி ஹெமிங்வே பிறந்தார்.  ஹெமிங்வேயின்  தந்தை கிளாரன்ஸ் எட்மண்ட்,  ஒரு உடற்கூறு மருத்துவர். இவரது அம்மா கிரேஸ் ஹால் ஓர் இசைப் பாடகி.  பதின் பருவத்தில், தன் தாயின் மீது, காரணமற்ற வெறுப்பைக் காட்டத் தொடங்கினார். அம்மாவின் வற்புறுத்தலுக்காக, இசை வகுப்பிற்குச் செல்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எர்னெஸ்ட் என்ற தனது பெயரையும் வெறுத்தார். ஆஸ்கார் வைல்டு நாவலில் (The Imporatance of Being Ernest ) வரும் பெயரை, தனது பெயரோடு  ஒப்பிட்டு மிகவும் வருந்தினார்.
                            ஆனால், தந்தையோடு அதிக நேரம் செலவிட விரும்பினார். மீன் பிடித்தல், வேட்டையாடுதல், ஏரிகளில் தங்குதல் என பலவற்றை தனது தந்தையிடமிருந்தே அவர் கற்றுக் கொண்டார். அவரது பள்ளியிலிருந்து வெளிவந்த, ' Trapeze and Tabula'  செய்தித் தாளில் இவரது பங்களிப்பு எப்போதுமே அதிகமாக இருந்தது.
                       பள்ளிப் படிப்பை முடித்தவுடன், இளம் பத்திரிக்கையாளராக சில மாதங்கள் பணியாற்றினார். அந்த அனுபவம், அவருக்கு எழுதும் திறனில் நுட்பத்தைக் கற்றுத் தந்தது. பிறகு,  முதல் உலகப் போரில், அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்  ஓட்டுநராக தீரத்துடன் பணியாற்றினார். அதற்காக அவருக்கு வீரப்பதக்கமும் வழங்கப்பட்டது.         
                                அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், ஸ்பெயின், ஃபிரான்ஸ், மற்றும் கியூபா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகள், ஹெமிங்வேவை  தங்கள் வீட்டுப் பிள்ளை என்றே கொண்டாடின. இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஹெமிங்வே,. காளைச்சண்டை, சிங்க வேட்டைகளிலும் கூட ஈடுபட்டார். தனது அனுபவங்களை சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள் என தொடர்ந்து எழுதினார். தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,  Indian Camp, For whom the bell rings, A farewell to arms என்று பல சிறப்பு மிக்க படைப்புகளை எழுதி வெளியிட்டார்.
                   இவரது The old man and sea நாவல் 1953ல் புலிட்சர் பரிசை வென்றது. 1954 ஆம் ஆண்டு, இதே நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றார். விமான விபத்து மற்றும் ஆப்பிரிக்க சிங்க வேட்டையின்போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, நோபல் பரிசைப் பெற ஸ்டாக்ஹோமிற்கு நேரில் செல்லவில்லை. நன்றிச் செய்தியை மட்டுமே அனுப்பி வைத்தார்.
                  ’கிழவனும் கடலும்’ நாவலில்,   இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மாபெரும் குறியீட்டு நாவலை  எளிய நடையில் உருவாக்கியதன் மூலம், ஆங்கில இலக்கியத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றார் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
           ஹெமிங்வேயின் வாழ்க்கை, சுறுசுறுப்பும் சுவாரசியமும் நிறைந்தது.   1954 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் நைல் நதியின் பெருக்கத்தை விமானத்தில் இருந்த படியே சுற்றி வந்து ரசித்த போது, அவரது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் ஹெமிங்வே இறந்ததாக எண்ணி, உலகம் முழுவதும் அஞ்சலிக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், விபத்தில் தப்பிப் பிழைத்த ஹெமிங்வே, ஆப்பிரிக்க நாட்டின் குடில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, மதுவைப்பருகிய படியே, தனது மரணச் செய்தியை படித்துக் கொண்டிருந்த வேடிக்கையும் இவரது வாழ்வில் நடந்தது.
                         1954 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவரது உடல்நிலை மிகவும் கெட்டுப்போனது. காளைச் சண்டை மற்றும்  சிங்கவேட்டையில் ஏற்பட்ட காயங்கள் உடலுக்கு கடும் அழுத்தத்தைத் தந்தன. முறிந்து போன திருமண உறவுகள் மனதுக்கு  ரண வேதனையைத் தந்தன.
                சாகசக்காரரான ஹெமிங்வே, தனது தந்தையைப் போலவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.    1961, ஜூலை  2 ஆம் நாள் Papa என  மக்களால் பிரியமாக  அழைக்கப்பட்ட எர்னெஸ்ட் ஹெமிங்வே, தனது  தலையில் தானே சுட்டுக் கொண்டு, சாகச வாழ்வை நிறைவு செய்தார்.     நான்கு திருமணம் செய்து கொண்ட ஹெமிங்வேயின் பேத்தியும் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். ஐந்து தலைமுறைகளாக இந்த சோகம், இவர்களது குடும்பத்தைத் தொடர்ந்து வருகிறது.
                                      ’Happiness in intelligent people is the rarest thing I know’,  என்று சொன்ன ஹெமிங்வேயின் அகவாழ்வு, ஒரு கட்டத்தில்  மகிழ்ச்சிக்காகத்  தேடி அலைந்தது.   தன்னம்பிக்கையையும், சாகசத்தையுமே பேசி வந்த அவரது எழுத்துக்கள், அப்போது அவரைக்  கைவிட்டிருக்குமோ என்னவோ?    வாழ்நாள் முழுவதும் சாகசத்தையே விரும்பிய ஹெமிங்வே , தற்கொலை செய்து கொண்டு,  தனது முடிவையும்    சாகசக் கதையாக்கினார்.
                           கடலில் மீன் பிடிக்கச் சென்று, சாகசங்களால் நம்மை வசியம் செய்து, இறுதியில் வெறுங்கையுடன் வீடு திரும்பிய போதிலும், ’கிழவனும்,கடலும்’ கதை நாயகன் சாண்டியாகோ,  தனது தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. ’அன்று இரவு அவனது கனவில்  சிங்கங்கள் நடமாடிக் கொண்டிருந்தன’ என்று எழுதினார் ஹெமிங்வே. ஆம், கதையில் வரும் அந்தக் கிழவன், புதிய நாளுக்காகக் காத்திருந்தான். ஆனால், அக்கதாபாத்திரத்தை உருவாக்கிய  ஹெமிங்வேயின் வாழ்வு அப்படி அமையாது போனது. மீள முடியாது என முடிவு செய்து, மன அழுத்தத்திற்கு தனது வாழ்வையே பலியிட்டார் ஹெமிங்வே.
                                மாபெரும்    எழுத்தாளர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை விடவும், அவர்களது  வாழ்வு நமக்கு நிறைய கற்றுத் தருகிறது.   அவர்களது கதை, புனையப்பட்ட நாவல்களை விடவும்  சுவாரசியமானவை; திருப்பங்கள் நிறைந்தவை.               

Friday, July 20, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 20

நிலவிலும் நடக்கலாம்..!


     மானுட இனத்தின் மாபெரும் அறிவியல் பாய்ச்சல்  நிகழ்ந்த தினம் இன்று.  முதல் முறையாக நிலவின் மீது காலடி வைத்து,  “இது ஒரு மனிதனைப்  பொறுத்த வரை , சிறிய காலடிதான். ஆனால், மானுட சமூகத்தின் மிகப்பெரிய பாய்ச்சல் !” என்ற பிரகடனத்தை நீல் ஆம்ஸ்ட்ராங், 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான் உரக்கச் சொன்னார்.  அமெரிக்க மக்களின் பிரியத்திற்குரிய அதிபர் ஜான் எஃப் கென்னடியால் தொடங்கப்பட்ட அப்பல்லோ 11 திட்டம் வெற்றியடைந்தது.
            விண்வெளிப் பயணத்தில் , நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டுக்கொண்டு திட்டங்களை வகுத்தன. அப்பல்லோ 11 என்ற விண்கலத்தை 1969, ஜுலை 16 அன்று நாசா ஆய்வு மையம், Cape Kennedy ஏவு தளத்திலிருந்து, நிலவுக்கு அனுப்பியது. ஜுலை 20 ஆம் தேதி , 20:17 மணிக்கு ஈகிள் எனப் பெயரிடப்பட்ட  சந்திரப் பகுதி நிலவில் இறங்கியது. அதில் இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் பதித்தார். தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் நடந்தார். அவர்கள் இறங்கிய நிலவின் பகுதிக்கு “அமைதிக் கடல்” என பெயரிடப்பட்டது.
             அப்பல்லோ 11 விண்கலம் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது. Command Module , Service Module மற்றும் Lunar Module  என்ற மூன்று பகுதிகளும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டன. இதில் சந்திரக் கூறு மட்டும் நிலவில் இறங்க , ஏனைய இரு பகுதிகளும் நிலவின் வட்டப்பாதையை சுற்றிக்கொண்டிருந்தன. இரு வீரர்களும் நிலவில் இறங்கிய போது, மைக்கெல் காலின்ஸ் என்ற மூன்றாவது விண்வெளி வீரர் விண்கலத்தின் கொலம்பியா என்ற பெயர் கொண்ட  கட்டளைப்பகுதியை இயக்கிக் கொண்டு, நிலவின் வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தார். 
                 கட்டளைப் பகுதியோடு இணைக்கப்பட்டிருந்த சேவைப்பகுதியில் தான் , வீரர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன், நீர், வாகனத்தின் எரிபொருள் போன்றவை இருந்தன.  அப்பல்லோ 11  வெற்றிகரமாக , ஜுலை 24ல் பூமிக்குத் திரும்பும் போது, கொலம்பியா (Command module) பகுதி மட்டும் திரும்பியது. மீதி இரு பகுதிகளும் கழற்றி விடப்பட்டன. வீரர்கள் இறங்கி நடந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. 
                  ஆனாலும், ஆரம்பத்தில் ரஷ்யா இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. Moon Conspiracy Theory என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, நாசா அமைப்பை எரிச்சலூட்டியது. ஆனால், நிலவின் முதுகில் மனிதர்கள் நடந்ததை ,
தொலைக்காட்சியில் கண்டுகளித்த  700 
மில்லியன் மக்களால் இந்நிகழ்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அன்று முதல் விண்ணை அடக்கியாளும் மனிதனின் வேட்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
                      

Thursday, July 19, 2018

நாளும் அறிவோம்-ஜூலை 19


சாமுவேல் கோல்ட்-ரிவால்வர் நாயகன்!



        அமெரிக்காவில், 1814-இதே நாளில் தான், நவீன ரக  ரிவால்வர் துப்பாக்கியைக் கண்டுபிடித்த சாமுவேல் கோல்ட் (Samuel Colt, 1814 -1862) பிறந்தார். Colt's manufacturing company என்னும் பெயரில், இவரது நிறுவனம் பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி, தொழிற்புரட்சியின் பாய்ச்சலில் முக்கியப் பங்காற்றியது.

          தந்தை துணி உற்பத்தி வாணிகம் செய்து வந்தார். இளம்வயதிலேயே தாயை இழந்த கோல்ட்,  படிப்பிலும், வியாபாரத்திலும் ஆர்வமுடன் இருந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள்-மூன்று சகோதரர்கள். இதில் இரண்டு பேர் இளம் வயதிலேயே, காசநோய் தாக்கி (தாயைப் போலவே) இறந்துவிட, மேலும் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

          பள்ளி நாள்களில் இவர் படித்த , "Compendium of knowledge" என்ற அறிவியல் கலைக்களஞ்சிய நூல்தான் இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது. அதில் அவர் அறிந்துகொண்ட கண்டுபிடிப்பாளர்கள், முடியாத செயல் என்று கைவிட்ட ஆராய்ச்சிகளை தொடர்வதென்று முடிவு செய்தார். இரண்டு குண்டுகளுக்கு மேல் வைக்க முடியாத ரைஃபிளுக்குப் பதிலாக 5 அல்லது 6 குண்டுகளை தொடர்ந்து வெடிக்கச் செய்யும் வகையிலான ரிவால்வரின் தேவையை படையினர் வழியாக அறிந்து செயலாற்றத் தொடங்கினார்.

   கண்டுபிடிப்புகளை முன்னெடுக்க நிறைய பணம் தேவைப்பட்டது. சிரிப்பூட்டும் வாயுவைக்( நைட்ரஸ் ஆக்சைடு) கொண்டு, வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு, 6 குண்டுகள் ஏற்கும் ரிவால்வரை உருவாக்கி, காப்புரிமையும் (patent) பெற்றார். 

              அவர் மரணமடைந்த 1862 (ஜனவரி 10) ஆம் ஆண்டுக்குள் 4,00,000 ரிவால்வர்கள் விற்று, பெரும் வருமானம் ஈட்டினார். மரணிக்கும்போது, இன்றைய மதிப்பில் 370 மில்லியன் டாலர் தொகையை தனது மனைவி மற்றும் ஒரே மகனுக்கு விட்டுச் சென்றார். 

            பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு , 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்பாளர்களின் Hall of fame ல் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

          ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கி கண்டுபிடிப்பின் மூலாதாரம், இன்றைய பிறந்த நாள் நாயகன் சாமுவேல் கோல்ட் உருவாக்கிய ரிவால்வர்தான்.


   ரைஃபில் துப்பாக்கியால் தனது இராணுவப் பிரிவின் தலைவரைச் சுட்டு- இந்திய சுதந்திரப் போரின் பெருநெருப்புக்கு தன்னையே தீக்குச்சியாக்கிய மங்கள் பாண்டே பிறந்த  நாளும் (ஜூலை 19- 1827) இன்று தான்.. 1857 ல், அன்றைய படை வீரர்களிடம் ரைஃபிளுக்குப் பதிலாக ரிவால்வர் அதிக புழக்கத்தில் இருந்திருந்தால்...? மங்கள் பாண்டேவின் குறி தப்பியிருக்காது; விடுதலைப் பொறி பெரிதாகி,  விடுதலையில் தாமதம் நிகழாது  இருந்திருக்கவும் கூடும்.!!

Wednesday, July 18, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 18

நல்லிணக்கப் பறவை- நெல்சன் மண்டேலா

ஜூலை 18... இன்று!

          1994 ல், தென் ஆப்ரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர்; ஆயுதப் போராட்டத்தில் களம் கண்டு, பின்பு அஹிம்சை வழிக்கு மாறியவர்; உலகத் தலைவர்களில், மிக நீண்ட காலம் சிறையில் வாடிய சிறைப்பறவை; சிறப்பான கால்பந்தாட்ட வீரர்;  நோபல் பரிசு உட்பட 250க்கும் மேற்பட்ட சர்வதேச பரிசுகள் இவரை அலங்கரித்து, தான்  பெருமை கொண்டன. உலக வரலாற்றின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவின் (1918-2013) பிறந்த தினம் இன்று.!

            1918- ஜூலை 18 ஆம் நாள், தென் ஆப்பிரிக்காவில் வெஸோ(Mvezo) என்னும் குக்கிராமத்தில் காட்லா என்பவரின் மகனாகப் பிறந்தார். கோசா பழங்குடி மரபைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ரோலிலாலா(Rolihlahla). தாத்தாவின் பெயரான மண்டேலா பின்னொட்டுப் பெயராகி, ரோலிலாலா மண்டேலா என அழைக்கப்பட்டார்.
              
 கோசா பழங்குடி மரபில், முதல் முறையாக பள்ளி சென்ற இவருக்கு , பிரிட்டிஷ் ஆசிரியை ம்டிங்கானே வைத்த பெயர்தான் நெல்சன். அதுவே நிலைத்துவிட , அவர் நெல்சன் மண்டேலா என்றே அழைக்கப்படுகிறார். படிப்பின் மீதும், வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த இவர், பட்டப்படிப்பையும், சட்டக் கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். கல்லூரி நாட்களில் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதியில் உணவின் தரம் குறையக் கூடாது என்பதற்காக போராட்டங்களையும் முன்னெடுத்தார். 
                   
     கறுப்பின, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்கும் பொருட்டு, ஏகாதிபத்திய சக்திக்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்கினார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆயுதப் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பேற்றார். பலமுறை சிறை சென்ற இவருக்கு, 1964ல் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.  விசாரணையின் போது, வழக்கறிஞர் என்னும் அடிப்படையில், I am prepared to die என மூன்று மணிநேரம் அவர் செய்த வாதம், உலக அளவில் தலைவர்களையும், புரட்சியாளர்களையும் சிந்திக்க வைத்தது.
 
     ராபன் தீவில், 8*7அடி கொண்ட தனியறையில் 27 ஆண்டுகள் கூட்டுப் புழுவாய் தவமிருந்தார். விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் (1994) வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார். இவருக்கு மூன்று மனைவியர். ஐந்து குழந்தைகள். தனது, 95வது வயதில்,  2013, டிசம்பர் 5ஆம் தேதி, மறைந்தாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

           1993ல் உலக  சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்ற, இந்தியர் அல்லாதவர் இவர் மட்டுமே!.

         வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை, சர்வதேச நல்லிணக்க நாளாகக் கொண்டாட,  ஐ.நா.சபை அறிவித்திருக்கிறது.

Tuesday, July 17, 2018

நாளும் அறிவோம்- ஜூலை 17

நிக்கோலஸ்II  புனிதரா - கொடுங்கோலனா??

ஜூலை 17.... இன்று!

       மிகச்சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்,  1918ஆம் ஆண்டு, ஜூலை 17 ஆம் நாள், ரஷ்யப் பேரரசின் மன்னன் நிக்கோலஸ் II, மனைவி அலெக்ஸாண்ரா, நான்கு பெண் பிள்ளைகள்  மற்றும் ஒரே மகன் , ஏக்தெரின்பர்க் நகரத்தில் ரஷ்ய போல்ஷ்விக் பொதுவுடைமைக் கட்சியின் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று.

       அதிகாலை இரண்டு மணிக்கு எழுப்பப்பட்ட ராஜ குடும்பத்தினர், இப்தீவ் இல்லத்தில் , யாகோவ் யுரோவ்ஸ்கி என்பவரின் தலைமையிலான 10  வீரர்களால் சுடப்படும்போதுதான் , இவர்கள் பாதுகாப்பு தருவதற்காக வந்தவர்கள் அல்ல என்பதை மன்னர் அறிந்து கொண்டார். அணிந்திருந்த ஆபரணங்கள் உதவியால் முதல் சுற்றில் உயிர் பிழைத்த பிள்ளைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
       
இரண்டாம் நிக்கோலஸ் மன்னனுக்கு நான்கு பெண் பிள்ளைகள். ஐந்தாவதாகப் பிறந்த ஆண் மகன் அலெக்ஸி பரம்பரை நோயான ஹீமோஃபிளியா B வகையா(ராஜ வம்ச நோய்!) பாதிக்கப்பட்டவன். மரணத்தின் கதவுகள் திறக்கப்பட்டது கூட அறியாமல், நாங்கள் அமர்வதற்கு நாற்காலிகள் இல்லையா என அப்பாவியாகக் கேட்ட பேரரசியின் ஆணைப்படி, இரு நாற்காலிகளில் அமரவைத்தே சுட்டுக் கொன்றனர் போல்ஷ்விக் படையினர்!.

            மீண்டும்- 1998 ஆம் ஆண்டு, இதே ஜுலை 17ஆம் நாள்- அந்நாளைய ரஷ்யா அதிபர்  போரிஸ் எல்சின்  தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 1918ல் கொல்லப்பட்ட இரண்டாம் நிக்கோலஸ் குடும்பத்தினர் அனைவரது எலும்புகளும் (முறையான DNA ஆய்வுகளுக்குப் பிறகு) உரிய மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இதனை ரஷ்ய வரலாற்றின் சிறப்பு மிக்க நாள் என எல்சின் அறிவித்தார்.

                   செமட்டிக் மதத்திற்கு எதிரான பிரச்சனைகள், சிவப்பு ஞாயிறு போராட்டம் என பல்வேறு காரணங்களால் Nicholas the bloody என போல்ஷ்விக் ஆதரவு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால்  மறுபுறம், ஜார் வம்சத்து கடைசி அரசரான இரண்டாம் நிக்கோலஸ் , சர்வதேச மற்றும் Russian Orthodox Church அமைப்பால் கி.பி.2000வது ஆண்டில் புனிதர் என புனிதப்படுத்தப்பட்டார்.  Romanov sainthood day என ஜூலை 17 அறிவிக்கப்பட்டது. அவரது தியாகம் பெருமைப்படுத்தப்படுவதாக திருச்சபை அறிவித்து.
               
          இரண்டாம் நிக்கோலஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று.

 “கொடுங்கோல் மன்னன் – புனிதர்”,  என இரண்டு துருவங்களில் வரலாறு குறிப்பிடும் இரண்டாம் நிக்கோலஸ், உண்மையில் யாராக இருக்கக் கூடும்?  வரலாற்றைப் புரிந்து கொள்வதென்பது , அவரவர் பார்வையைப் பொருத்ததா?

Monday, July 16, 2018

நாளும் அறிவோம் - ஜூலை 16

வீரமங்கை அருணா ஆசஃப் அலியின் பிறந்த நாள் இன்று!

              
         1942, வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், அகப்படாமல் மும்பையில் கோவாலியா மைதானத்தில்,  இந்திய தேசிய காங்கிரசின் கொடியை ஏற்றிய வீரமங்கை  அருணா ஆசஃப் அலியின்( 1909-ஜூலை 16) பிறந்த நாள் இன்று.
                   ஹரியானா மாநிலத்தில் கால்கா என்னும் ஊரில் பிறந்த அருணா கங்குலியான இவர், கல்கத்தாவில் சில காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது, இவரது துணிச்சலும், சுதந்திர வேட்கையும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்தன. பெண் சிறைக்கைதிகளின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதால்,   அம்பபாலா தனிமைச்சிறையில்  அடைக்கப்பட்டார்.!
                     சாதி,மத, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆசஃப் அலி  என்பவரை புரட்சித் திருமணம் செய்து கொண்டார்.  ஆங்கில இலக்கியத்தின் மீது இவர்கள் கொண்டிருந்த காதல், இவர்களுக்கிடையிலான இருபது வயது வித்தியாசத்தை வெளிச்சப்படுத்தாமல் விலகிச் சென்றது. 
                 மாணவர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இறுதி நாள் வரை போராடிய அருணா ஆசஃப் அலி 1996ல் மறைந்தார். 1958ல் டெல்லியின் முதல் மேயராகப் பதவி வகித்த இவருக்கு, 1998ஆம் ஆண்டு மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது  வழங்கப்பட்டது.
                   தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, சுதந்திர தாகம் இவற்றுக்கெல்லாம் , இருபதாம் நூற்றாண்டின் உதாரணப் பெண்மணி அருணா ஆசஃப் அலி..!

Sunday, July 15, 2018

சூரியனும் சந்திரனும் - 1

            ஆங்கில அகராதியை ஒரு நாவல் படிப்பது போல,  ஒரு கட்டுரை நுலைப் படிப்பது போல ரசித்து  படிக்க வேண்டும் என எனது ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார். ஒரு மொழியின் வார்த்தையும், சூழ்நிலைக்கு ஏற்ப அதன் பயன்பாடும் எண்ணற்ற சாத்தியங்களையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கும். நாம் தான், அதனை ரசனைக்குரியதாக மாற்றி படிக்கப் பழக வேண்டும். அப்படிப் பழகி விட்டால், ஒரு நெல்லிக்காய் சுவைப்பது போல, அதன் இனிமை நம்மை குதூகலப் படுத்தும். உதாரணமாக, SET என்ற ஆங்கில வார்த்தையை பலமுறை நாம் பயன்படுத்தி இருக்கிறோம். மிக எளிய வார்த்தை, சிறிய வார்த்தை. ஆனால் அதன் தனித்துவத்தை நாம் கவனிப்பது இல்லை. எந்த ஒரு தரமான அங்கில அகராதியை எடுத்துப் பார்த்தாலும், SET என்ற வார்த்தைக்கான பொருள் நிச்சயம் இரண்டு பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும். ஏனெனில், SET என்ற வார்த்தை  126 விதங்களில் வினைச்சொல்லாகவும்(VERB) , 56  வகைகளில் பெயர்ச்சொல்லாகவும்(NOUN) பயன்படுகிறது. ஆங்கில மொழியில் மிக அதிகமான பொருளைத் தரக் கூடிய ஒரு வார்த்தை இதுதான். அடுத்த முறை அகராதியைப் புரட்டும் பொது, SET என்ற வார்த்தையை கொஞ்சம் புரட்டி பாருங்கள்.

                ந்தியாவின் முதல் பிரதம மந்திரி பண்டித ஜவகர்லால் நேருவை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவோ, ஒரு அரசியல் தலைவராகவோ மட்டும் பார்க்க வேண்டியது இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது நுல்கள் யாவும் அறிவுப் புதையல்கள். தேச விடுதலைக்காக அவர் சிறைப்பட்டுக் கிடந்தபோது, தனது செல்ல மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றுள் வழக்கமான விசாரிப்புகளும்,சொந்தக் கதைகளும் இல்லை. மாறாக, இந்திய வரலாறும், உலக வரலாற்றுப் பார்வையும் எழுதப்பட்டிருக்கிறது. The Discovery of India, Glimpses of World History   என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்தப் புத்தகங்கள் தமிழாக்கமும் செய்யப்பட்டிருக்கின்றன.
                இந்த உலகில் நாம் செய்யும் செயல்களில் எது சரி,எது தவறு என பல நேரங்களில் குழம்பி விடுகிறோம்.மகள் இந்திராவுக்கு நேரு சொல்லும் அறிவுரையை கவனியுங்கள்.


               " It is no easy  matter to decide what is right and what is not. One little test I shall ask you  to apply whenever  you are in doubt. It may help you. Never do anything in secret or anything that you would wish to hide.”  இது இந்திராவுக்கு மட்டும் சொன்னதல்ல. நம் எல்லோருக்கும் தான்.

நாளும் அறிவோம் - ஜூலை 15

            ஜூலை 15 -மறைமலை அடிகள் பிறந்த நாள்!

             
                  ஜூலை 15, 1876ஆம் ஆண்டு, சொக்கநாதப் பிள்ளை- சின்னம்மையாருக்கு மகனாகப் பிறந்த சாமி வேதாச்சலம், தனது  பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்ட நிகழ்வு தான் (1916) தனித்தமிழ் இயக்கத்தின் ஊற்றுக்கண். 

         'பெற்ற தாய் தனை மக மறந்தாலும்.....' என்ற பாடலை மகள் நீலாம்பிகை பாடும்போது, அதில் வரும் தேகம் எனும் வடமொழிச் சொல் ரசனையைத் தடுப்பதாக எண்ணினார். 'தேகம் என்பதற்குப் பதிலாக யாக்கை என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் அல்லவா?' என மகளிடம் வினவினார். 'அப்படியென்றால் பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழிலேயே நாம் பேசுவோமா?' என்று 13 வயது மகள் நீலாம்பிகை பதில் வினா தொடுத்தபோதுதான் தனித்தமிழ் இயக்கம் உரு கொண்டது எனலாம். தன் பெயரை மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளின் பெயரையும் தூய தமிழுக்கு மாற்றினார்.
அறிவுத்தொடர்பு(ஞானசம்பந்தன்), மணிமொழி(மாணிக்கவாசகம்), அழகுரு(சுந்தரமூர்த்தி), முந்நகரழகி(திரிபுர சுந்தரி) என அவர் தொடங்கிய மாற்றங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக அமைந்தன.

     1912ல் பல்லாவரத்தில் அவர் தொடங்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை "பொதுநிலைக் கழகம்" என்று பெயர் மாற்றினார்.
வெறும் பெயர் மாற்றத்தினால் மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு மிக்க நூல்களை தனித்தமிழில் எழுதி, தமிழன்னைக்கு மேலும் அழகூட்டினார்.

        சைவ சித்தாந்தக் கருத்துக்களை மேற்குலக நாடுகளும் அறியச் செய்ய ஆங்கில இதழ்களை நடத்தினார். பதிப்பகமும் இவர் முயற்சியால் தான் தொடங்கப்பட்டது.

          சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் பதவிக்கான நேர்முகத் தேர்வில் இவருக்கு கேட்கப்பட்ட வினா, "குற்றியலுகரத்திற்கு மூன்று உதாரணம் சொல்லுங்கள்".
அளிக்கப்பட்ட பதில், "அஃது எனக்குத் தெரியாது". கேள்விக்கணை தொடுத்த பரிதிமாற் கலைஞர், பொருத்தமான பதிலைக் கொடுத்த மறைமலையடிகளுக்கு உடனே பணிநியமன உத்தரவு வழங்கினார்.
இரு தமிழறிஞர்களும் தமிழால் இணைந்தனர்; தமிழுக்காகவே இயங்கினர்.

       திருவொற்றியூர் முருகன் மீது மும்மணிக்கோவை இயற்றிய மறைமலையடிகளின் இரு கண்கள் தமிழும், சைவமும். காளிதாசனின் சாகுந்தலத்தை தமிழில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து,   சங்கராச்சாரியாரின் பாராட்டு பெற்றார்.

      முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலான பல நூல்களுக்கு எளிய முறையில் தமிழ் உரை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பின்னாளில், "மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’’ என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டார்.

       சாதி மறுப்பு, ஆலய நுழைவுப் போராட்டங்களில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். முருகவேள் என்னும் புனைப்பெயரில் தான் தொடர்ந்து  கட்டுரைகள் எழுதி வந்தார்.

        வடமொழி மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பான புலமை கொண்டிருந்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை  மறைமலையடிகள் 1950ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் நாள் மண்ணுலகில் இருந்து நீங்கினார்.

தனித்தமிழ் வளர்ப்போம்!!