Saturday, August 18, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 18

உறுதி கொண்ட மனம் - விஜயலெட்சுமி பண்டிட்.

ஆகஸ்ட் 18...இன்று!

              “உன்னுடைய திறமை, ஆற்றல் குறித்து நான் மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நேரடியான , உறுதியான மொழியில் பேசுவது என்பது பலரிடமும் இல்லாத பண்பாகும். அது நம் இருவருக்குமே இருப்பதாகக் கருதுகிறேன்.” -ஜவஹர்லால் நேரு தனது சகோதரி விஜயலெட்சுமி பண்டிட்டுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை. 
             ஆம், தனது அண்ணன் மகள் இந்திரா காந்தி, 1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்த போது, அதைத் தீவிரமாக எதிர்த்தார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் , தனது மருமகளுக்கு எதிராகப் பிரச்சாரமும் செய்தார். பொது வாழ்வில், பெண்கள் குலத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து  காட்டிய, பன்முகத் திறன் கொண்ட  விஜயலெட்சுமி பண்டிட் (1900- 1990) பிறந்த நாள் இன்று. 
                மோதிலால் நேரு- சொரூப ராணி தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக, 1900 ஆகஸ்ட் 18ல் , அலகாபாத் நகரில் விஜயலெட்சுமி பண்டிட்  பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி.  அண்ணன் ஜவஹர்லால், தங்கை கிருஷ்ணா- இவர்கள்  இருவரைப் போலவே, இவரும் நல்ல எழுத்தாற்றல் மிக்கவர். விஜயலெட்சுமி பண்டிட் எழுதிய, The Evolution Of India, The Scope of Happiness  புத்தகங்கள் இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட காலத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன. இவரும், நேருவும் எழுதிக் கொண்ட கடிதங்கள் , நாவல்களையும் விடவும்  சுவையானவை, கருத்தாழமும் மிக்கவை. 
                            குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்த நிலையில், இவரும்  ஆர்வமுடன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1921 ஆம் ஆண்டு  ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள்.  இவரது கணவர் ரஞ்சித் நல்ல கல்வியறிவும், திட மனமும் கொண்டவராக இருந்தார். கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணி என்ற நூலை, சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருக்கும் ரஞ்சித், விடுதலைப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார். விஜயலெட்சுமியும்  சட்ட மறுப்பு இயக்கம் மற்றும்  வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டு, சிறைகளில் வாழப் பழக்கப்பட்டிருந்தார்.
              இந்திய அரசுச் சட்டம் - 1935ன் படி, உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பெண் அமைச்சராகப்  பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான இவருக்கு  சுகாதாரத்துறை  அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
     இரண்டாம் உலகப் போரில், இந்தியத் துருப்புகளை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது. ஆனால், அதற்கான அனுமதியை மந்திரி சபையிடம் பெறவில்லை. இதன் காரணமாக , அனைத்து அமைச்சர்களும் தத்தமது பதவியை ராஜினாமா செய்தனர். இவரும் ராஜினாமா செய்தார். 
              நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில்,    1944ல் பரேலி சிறைச்சாலையிலேயே, இவரது கணவர் ரஞ்சித் இறந்து போனார். “எந்த சூழ்நிலையிலும் கண்ணீர் விடக் கூடாது. அழுகை வரும்போது, மேலுதட்டை மடக்கி, அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நமது குடும்பத்தார் செய்வது” என்று சொன்ன நேருவால் கூட , ரஞ்சித்தின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குடும்பமே வருந்தியது. 
           மூன்று பெண் பிள்ளைகள் இருந்த போதும், ரஞ்சித்தின் சகோதரர் பிரதாப்,  குடும்பச் சொத்தில் சிறிதும் தர முடியாது என்று சொல்லிவிட்டார். காந்தியடிகளின் அறிவுரையின் பேரில், நீதிமன்ற வழக்கினை வாபஸ் பெற்றார்  விஜயலெட்சுமி பண்டிட்.  சில காலம் அரசியலை விட்டு விலகினார். அமெரிக்கா சென்றார். ஆனால், தேசம் அவரை விடுவதாக இல்லை. 
             இந்தியா விடுதலை பெற்றவுடன் , மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன் போன்ற இடங்களில் அயல் நாட்டுத் தூதராகப் பணியாற்றினார். அரசியல் விவகாரங்களைத் திறம்பட கையாண்டார். இவரே  இந்தியாவின் முதல் பெண் அயல் நாட்டுத் தூதர் ஆவார்.
          1953ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியை  வகித்த முதல் பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1962-64ல் மஹாராஷ்டிர ஆளுநராகப்  பதவியில் இருந்த விஜயலெட்சுமி பண்டிட், தனது சகோதரர் நேரு இறந்தவுடன், அதே பெஹல்பூர் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினர் ஆனார். 
               தனது பிரியத்திற்குரிய மருமகள் இந்திரா காந்தியின்  திடமான கொள்கைகளைப்  பாராட்டவும், தவறான போக்குகளைக் கண்டிக்கவும் இவர் தயங்கியதே இல்லை. ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடுகள் காரணமாக , கட்சியிலிருந்து முழுதும் ஒதுங்கினார் விஜயலெட்சுமி. 
           பனிமலை பார்வையில் பட, இளங்காற்று இதயம் தீண்ட தனது வாழ்வின் எஞ்சிய காலங்களை டேராடூனில் இருந்த தனது இல்லத்தில் கழித்தார். 1962 ல் பத்ம விபூஷன் விருது பெற்ற விஜயலெட்சுமி பண்டிட், 1990 ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி , இறந்து போனார்.
           பெண்ணுரிமை முழுதும் வசப்படாத 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் அது. பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த விஜயலெட்சுமி பண்டிட், பெண் குலத்திற்கே முன் மாதிரியாக மாறினார். ஏனெனில்,  இளம் வயது முதலே  விடுதலைப் போராட்டம், சிறைவாசம், கணவர் இறப்பு,  தூதரகப் பணி, ஐ.நா.சபை தலைவர், மக்களவை உறுப்பினர், எமெர்ஜென்சி எதிர்ப்பு போராட்டம் என எண்ணற்ற சவால்களைச் சந்தித்தபோதும் வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றிக்  கொண்டார். 
  
                    அவரைப் போலவே -  துயரங்கள் சூழும் போதெல்லாம், மேலுதட்டை மடக்கி, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், காயங்கள் மறந்து தொடர்ந்து பயணிக்கவும்  நாமும் கற்றுக் கொள்ள வேண்டும். 

          ஏனெனில்,  தடைகளைத் தாண்டி வெல்வதில் தானே,  வாழ்வின் ருசி அடங்கியிருக்கிறது!.
           
              
             

No comments:

Post a Comment