Saturday, December 7, 2019

செய்யும் எதிலும் உன்னதம் - பா.ராகவன்

நூல் அறிமுகம்.

செய்யும் எதிலும் உன்னதம் - பா.ராகவன்


                       புத்தகம் வாசிக்கத் துவங்கிவிட்டால், துளி கூட  கவனம் சிதையாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருப்பான் எனது நண்பன் சின்னையன். புத்தகங்களில் நிலை குத்திக் கிடக்கும் அவனது விழிகள், நூலின் வரிகளை கவனமாக ஊர்ந்து கொண்டே இருக்கும். அவன் படிப்பதைப் பார்த்தால் போதும், நாமும் ஒரு புத்தகத்தை இன்றே வாசித்து முடித்து விட வேண்டும் என்ற போட்டியுணர்வு,  மனதிற்குள் முட்டிக் கொண்டு வரும். அப்படித்தான் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம்.  அவன் படிக்காத புத்தகத்தைப் பற்றி  நானும், நான் படிக்காத புத்தகத்தைப் பற்றி அவனும் மாறி மாறிப் பேசிக் கொள்வோம். நண்பன் சந்துரு இணைந்து கொள்ளும் நாள்களில், பூமி முதல் பிரபஞ்சம் வரை எல்லா பிரச்சனைகளும் அங்கே அலசப்படும்.  அவற்றுக்கான அதிஅற்புத தீர்வுகள் கண்டடையப்படும். பிறகு, மனநிறைவோடு நாங்கள் உறங்கச் செல்லும் போது, அடுத்த நாளுக்கான விடியல் சத்தத்தை சேவல்கள் எழுப்பிக் கொண்டிருக்கும்.
                  ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான இரண்டாண்டு காலமும் எங்களுக்கு அவ்வாறுதான்  கடந்தது.     எங்கள் அறை புத்தகங்களாலும், புத்தகம் பற்றிய பேச்சுக்களாலும் நிரம்பிக் கிடந்தது. 
                        வழக்கம் போல், ஒரு நாள் இரவு,  வெகு தீவிரமாக ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்  சின்னையன். அட்டை போடப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்பதை என்னால் காணமுடியவில்லை.  ஆனால், தடிமனாக இருந்த அந்தப்  புத்தகத்தில், பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களை அவன்   தாண்டியிருந்தது மட்டும் நன்றாகத் தெரிந்தது. உடனே, தடிமனாக இருந்த  ‘சிவகாமியின் சபதம்’ நாவலை எடுத்து,   நானும்  மறுவாசிப்பு செய்யத் தொடங்கினேன்.
                               மறுநாள் காலை, எனது நண்பன் அதே புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவை புத்தகத்தின் ஆரம்பப் பகுதிகள். பாதிக்கு மேல் படித்துவிட்ட புத்தகத்தை, மீண்டும் ஏன் ஆரம்பத்திலிருந்து இவன் படிக்கிறான் என்ற ஆர்வம் எனக்கு தலை தூக்கியது. ‘சின்னையா, அது என்ன புத்தகம்?, ஏன் ஆரம்பத்திலிருந்து மீண்டும் படிக்கிறாய்?’ எனக் கேட்டே விட்டேன். ‘பாதி அத்தியாயங்கள் கடந்த பிறகு, நூலின் ஆசிரியர் மீண்டும் முதலில் இருந்து படித்து வாருங்கள் எனச் சொல்லியிருப்பதாகவும், அதனால் தான் மீண்டும் வாசிக்கிறேன்’ என்றும் பதில் சொன்னான். மேலும், ’மிகவும் சுவையான புத்தகம் இது., இவருடைய நூல்களை  நான் மிகவும் விரும்பி வாசிக்கிறேன்’ என்றும்  சொன்னான். புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த நூல் அது.  அப்போதுதான்,  எம்.ஆர்.காப்மேயர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டேன்.  நானும் அவரது புத்தகங்களை வாசித்துவிட முடிவு செய்தேன். வாசித்தும் பார்த்தேன். உண்மையில்,  அந்த நூல்கள் என்னை பெரிதும் கவரவில்லை.
                  ஆனால், சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை நாங்கள் தொடர்ந்து வாசித்தோம். எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், ஜேம்ஸ் ஆலன் என பட்டியல் தொடர்ந்தது.  அவற்றுள் உதயமூர்த்தியின் புத்தகங்கள் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தன..  ‘எண்ணங்கள்’, ’ஆத்ம தரிசனம்’, ’மனம் பிரார்த்தனை மந்திரம் ’ என அவருடைய இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நூல்களை பல்வேறு இடங்களிலிருந்தும் பெற்று,  படித்து முடித்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவை வாசிப்பின்பத்தை, தன்னம்பிக்கையைத்  தரவில்லை. விரைவிலேயே அது மாதிரியான நூல்கள் படிப்பது நின்று போனது. மாறாக, வரலாறு, அறிவியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களே மனதுக்கு நெருக்கமாய் அமைந்தன.
                      நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகவும் ஆர்வத்துடன் படித்த தனம்பிக்கை சார்ந்த நூல் என்றால், அது பா.ராகவன் எழுதிய ‘செய்யும் எதிலும் உன்னதம்’ நூல் தான்.   வெறுமனே தன்னம்பிக்கை சார்ந்த சிந்தனைகளை மட்டும் உதிர்த்துவிட்டுப் போய்விடாமல், ஒவ்வொன்றுக்கும் நிகழ்கால உதாரண மனிதர்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மூலம் சொல்லவந்த கருத்துக்களை வலுவூட்டியிருக்கிறார் ஆசிரியர் பா.ரா.  தன்னம்பிக்கை சார்ந்த முக்கிய மொழிகளைப் பேசியும்,  பல்வேறு துறைகளைச் சார்ந்த  சிறந்த  மனிதர்களின் வாழ்வியல் துளிகளைக் கூறியும்  இந்நூல் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.
     
                         ********************************************
                          ‘மிகச் சிறந்ததைத் தவிர, எனக்கு வேறெதுவும் வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்’
                 - ’இது முன்னுரையல்ல’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும்  முன்னுரையில் , ஆசிரியர் சொல்லும் முதல் மந்திரச் சொல் இதுதான்.  நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் இருக்கின்றன. செய்யும் செயல் எதுவாயினும் அதில் உன்னத நிலையை அடைவதே நமது இலக்காக இருக்க வேண்டும் எனக் கூறும்  ஆசிரியர், அதனை சாதித்துக் காட்டிய சாதனை மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களை சுவைபடச் சொல்வதன் மூலம், மனதிற்குள் திடமான நம்பிக்கையை அழகாக விதைத்திருக்கிறார்.
                            நூலின் முதல் கட்டுரை, ‘ஒரு வாக்குமூலம்’. தனது வாசகனுக்கு  வாக்குமூலம் அளிக்கும் மன உறுதி மற்றும்  தைரியம்  இரண்டும் பா.ராகவனுக்கு  வாய்த்திருக்கிறது. சரியானது - சிறப்பானது, இவை இரண்டுக்குமான வேறுபாட்டை ஆசிரியர் விளக்கும் இடம் மிக அழகானது.  தான் எடுத்துக் கொண்ட பணியிலேயே மூழ்கி விடுவதல்ல, தானே அதுவாக மாறிவிடுவதுதான், செய்யும் எதிலும்  உன்னதம்  அடைவதற்கான சிறந்த மந்திரம். அதற்காக அவர் கூறியிருக்கும் உதாரணங்கள் அற்புதமானவை.
               குடும்பத்தோடு விடுமுறை நாள்களைக் கழிக்க, பயணத்தை தொடங்குகிறார் எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்குவேஸ். சில மீட்டர்கள் நகர்ந்த உடனேயே, புதிய நாவலுக்கான பொறி அவரது உள்ளத்தில் தோன்றுகிறது. உடனடியாக கார் வீடு திரும்ப, அறைக்குள் சென்று எழுதத் துவங்குகிறார். ஒன்றரை ஆண்டு காலம். தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. கூட்டுப் புழு போல தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார். நாவலை அவர் எழுதவில்லை. மாறாக அதன்  எழுத்தாகவே, இவர் மாறிப் போனார். உன்னதத்தின் விளைவு நாம் அறிந்ததே. ஆம், காலத்தின் கடைசி வரை நிலைத்து நிற்கும் வல்லமை பெற்ற செவ்வியல் நாவல், 'நூற்றாண்டு காலத்  தனிமை ' இப்படித்தான்  உருவானது.
                    ’ஹேராம்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படங்களுள் ஒன்று. அப்படத்திற்கு,   முதலில்  வேறொருவர் இசையமைத்து, காட்சிகள் எடுக்கப்பட்டன. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகிறார் இளையராஜா. வேறொருவர் இசைக்கும், பாடலுக்கும் எடுக்கப்பட்ட காட்சிகளை ஆழ்ந்து பார்க்கிறார்.  அதற்கேற்றார்போல   காட்சிகளுக்கு புதிய இசை வடிவம் கொடுக்கிறார் இளையராஜா. இது எப்படிச் சாத்தியமாகும்?, இதெல்லாம் முடியுமா? என்றால்,  நிச்சயம் முடியும். ’ தானும் தன் செயலும் தனித்தனி என்கிற நிலையைக் கடந்து, செயலாகவே மாறி விடுகிற  கர்ம யோகம் வாய்க்குமானால், செய்யும் செயலில்  நிச்சயம் உன்னதத்தை அடையலாம்.
                               மனித குலத்தின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த லியோ டால்ஸ்டாய் , இலக்கிய உலகத்தின்  சூப்பர் ஸ்டார். அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்க , எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு காத்துக் கிடந்தன. அப்போது அவர்கள் எல்லோரையும் இவரே அழைத்து, புதிய நாவலுக்கான அறிவிப்பைச் செய்கிறார். ராயல்டி தொகை பேசுகிறார். தொடர் கதையாக, பல்வேறு மொழிகளில் நாவல் வெளியிடப்படுகிறது. பதிப்புரிமை, பணம், ராயல்டி என எதிலும் அக்கறை காட்டிடாத டால்ஸ்டாய், ஏன் திடீரென இப்படிப் பேசுகிறார் என உலகம் வியந்து பார்த்தது. பிறகுதான் காரணம் தெரிந்தது.   ரஷ்யாவில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஐயாயிரம் டுகோபார்ஸ் இன மக்களை கனடாவுக்கு  அனுப்பி, அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்திருக்கிறார் டால்ஸ்டாய். அதன் பொருட்டே, பணத்திற்காக எழுத முடிவு செய்கிறார். அப்படி உருவான நாவல் தான், ‘புத்துயிர்ப்பு’. மனித உயிர்களின் மீதான காதல் தானே அவரை எழுத வைத்தது, உன்னதத்தை அடைய வைத்தது.!
                                                துயரங்களைக் கடந்து, தேசங்களை இணைத்து, இசையால் இந்த உலகோடு பேசிய மனிதன் யானி; சங்கடங்களைத் தாண்டி, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமான்; அலட்டிக் கொள்ளாமல் காரியத்தில் கவனமாய் இருந்து சாம்பியன் பட்டம் வென்ற செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்- இவர்கள் எல்லாம், இந்த நூலில்  நமக்கான மந்திரங்களை சத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.       
                     அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அற்புத மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய இருக்கிறார்கள். ஆனைகட்டி மலைபகுதிக்கு அப்பால் இருக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதின் மொழியை கற்றுத் தந்த நாராயணன்; ’குழந்தைகளுக்கு தேவையில்லமல் ஆண்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது, மூணே நாளில் தானே சரியாகி விடும்’ என அன்போடு பேசி மருத்துவம் பார்க்கும் சென்னை டாக்டர் பாலசுப்ரமணியன்;   ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி தாள், நாள் படி எல்லா நிகழ்வுகள் என எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அவற்றை முறையாகப் பராமரிக்கும் கல்கி பத்திரிக்கை ஆசிரியர் கி.ராஜேந்திரன்; கிணற்றுக்கடவு என்னும் சாதாரண கிராமத்தில் பிறந்து,  நன்றாகப் படித்து, வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகளைத் தவிர்த்து, பின்னளில் சந்திராயன் திட்ட இயக்குநரான  இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை; மனநிறைவோடு , பெருமிதம் நிரம்பிய உணர்வில் , வெண்கலப் பானையில் அரிசி உப்புமா கிண்டித்தரும் பா.ரா.வின் பாட்டி - இப்படி ஏராளமான மனிதர்கள் இந்தப் புத்தகமெங்கும் ரத்தமும் சதையுமாய் வந்து போகிறார்கள்.
                      ஒசாமா பின்லேடன் பற்றிய கட்டுரையும், திரைப்பட நடிகர் சந்திரபாபு பற்றிய கட்டுரையும் இந்நூலில்  முக்கியமான கட்டுரைகள்.  நூலில் வரும்  பாராவின் நண்பர்கள் லோகேஷ், ஹேமந்த் மற்றும் ஜே எல் ராகவன் மூவரும்,  நமக்கும் சுவையான நண்பர்கள் ஆகிறார்கள். காரணம் பா.ராவின் வசீகரிக்கும் மொழிநடை.
                    சுவையான இந்த நீண்ட பட்டியலில் இரண்டு பேர், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக ஆனார்கள். ஒருவர் முன்னால் பாரதப் பிரதமர் சந்திரசேகர் அவர்கள். பா.ராவிடம் அவர் அளித்த பேட்டி பற்றிய குறிப்பு இந்த நூலில் உள்ளது. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.  ”அவலங்களைப் பார்த்து சோர்ந்து போய்விடாதீர்கள்; தேவை - பொறுமை மட்டுமே” -எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை.
                மற்றொருவர், டாக்டர் ஸ்ரீனிவாஸ்.  ஒரு நோய்க்காக இரண்டாவது, மூன்றாவது முறை செல்ல நேரிட்டால் அதற்காக பணம் வாங்கிக் கொள்ள மாட்டார் இவர்.  ”இதுக்குத்தானே முதல் தரம் வந்தப்பவே பணம் கொடுத்டுட்டீங்க, மீண்டும் எதற்கு?”. இவர் போன்ற நல்லோர் பொருட்டே, தமிழ்நாட்டுக்கு மழை வருகிறது   என்பதை    அறிந்து கொள்வோம்.
                       ‘உன்னதங்களின் உச்சம்’ என்னும் கடைசிக் கட்டுரை,  உன்னதங்களின்  நாயகன் காந்தியடிகளைப் பற்றிப் பேசுகிறது. அவரது வெளிப்படைத்தன்மை, பரிசோதனை முயற்சிகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பன்மை என நிறைய மந்திரங்களை நமக்கு கோடிட்டிக் காட்டுகிறது.
                    இப்படியாக, இந்த புத்தகமெங்கும் நம்மை புரட்டி போடும் மந்திரச் சொற்கள், சக மனிதர்களின் வாழ்விலிருந்து ஊற்றென பொங்கி வருகின்றன. கற்றுக் கொள்ள ஆர்வமிருந்தால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் நாம் கற்றுக் கொள்ளலாம் தானே. தேவை மனம் மட்டும் தான். அத்தகைய மனத்தை உருவாக்கும் வகையில் தான் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
                   
                             ***************************************************
                  நண்பர்களே, சுவாரஸ்யம் சற்றும் குறையாமல், சத்தும் வற்றிப் போகாமல் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் , சுய முன்னேற்ற நூல்களில் மிக முக்கியமான நூல் எனச் சொல்லலாம், இது, தோள் மீது கை போட்டபடி, உலகியல் நடப்புகளில் இருந்து நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அமுதத்தையும் கடைந்து தர முயன்றிருக்கிறது.  அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் இது,  பல்வேறுபட்ட   சாதனை மனிதர்களின் வரலாற்றுச் சுருக்கம். அவர்களின் வெற்றி மந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதால், வாசிக்கும் நமக்கும் அவை உத்வேகம் தருகின்றன.     
                   சுருக்கமாய்ச் சொன்னால்,  உன்னத்தை அடையும் செயல்திட்டத்தில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை,  உத்தேசம், திட்டம் , உழைப்பு, விளைவு . முதல் மூன்றையும் சரியாகச் செய்தால் அல்ல, மாறாக சிறப்பாகச் செய்தால் , விளைவு நிச்சயம் உன்னதமாய் இருக்கும். நன்றி பா.ரா.                     
                         பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பன் சின்னையன் தந்த உத்வேகத்தை , போட்டி மனப்பான்மையை  இந்தநூல் எனக்குத் தந்திருக்கிறது.  நண்பர்களும் வாசித்துப் பயன் பெறலாம்.