Thursday, August 30, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 30


ஒப்பியல் அகராதி- நல்லூர் சா. ஞானப்பிரகாசம்

 ஆகஸ்ட் 30....இன்று!


          72 மொழிகளை அறிந்தவர்; அவற்றில் 18 மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்தவர்;  ஆயினும் எல்லா மொழிகளுக்கும் வேர் மொழி, தன் தாய்மொழியான தமிழ் மொழியே என, தீவில் இருந்து தரணிக்குச் சொன்னவர்.

       ஆம்,     தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கெல்லாம் சொற்கொடை வழங்கியது என்பதை தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளின்  மூலம் நிரூபணம் செய்து கொண்டே இருந்தவர்;  ’சொற்கலைப் புலவர்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்; சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தன் இறுதி மூச்சு வரை இடைவிடாது செய்த  தமிழறிஞர் நல்லூர் ஞானப்பிரகாசர் (1875- 1947) பிறந்த நாள் இன்று.

               இலங்கை -  யாழ்ப்பாணம் அருகில் மானிப்பாய் என்ற ஊரில், 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி, இராஜசிங்கம் சாமிநாதப்பிள்ளை- தங்கமுத்து இணைக்கு, செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்  ஞானப்பிரகாசம். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்ற கனக சுப்புரத்தினம். ஞானப்பிரகாசத்தின் ஐந்தாவது வயதில்,  தந்தை இறந்து போனார். தாய் இரண்டாம் திருமணமாக, தம்பி முத்துப்பிள்ளை என்ற கத்தோலிக்க கிறிஸ்தவரை மணந்து கொண்டார். தாயும், மகனும் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறினர். ஞானஸ்நானம் செய்யும்  போது, ‘ஞானப்பிரகாசம்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. நிரம்பிய அறிவு கொண்டிருந்த தம்பி முத்துப்பிள்ளை , இவருக்கு எல்லா நூல்களையும் கற்றுக் கொடுத்திருந்தார்.

         1893 ஆம் ஆண்டு, இலங்கை ரயில்வே துறையில், இவருக்கு வேலை கிடைத்தது. மோர்ஸ் கோட் வழியே வருகை தரும் செய்திகளை துல்லியமாகப்     புரிந்துகொள்ளவும், விரைவாகப் பதிலளிக்கவும், திறன் பெற்ற ஒரு நபராக, இலங்கை ரயில்வே துறையில் வலம் வந்தார். உயர் பதவிகள் உடனே வந்தன. ஆனால், ஞானப்பிரகாசரோ, இறைபணியில் நாட்டம் காட்டினார்.  1895ஆம் ஆண்டு, குரு மடத்தில் சேர்ந்து, 01.12.1901 அன்று கத்தோலிக்க குருவானார். 

      ஊர்காவற்றுறையில் பாதிரியாராகப் பணியாற்றிய போது, நிதி வசூல் செய்து நூலகம் ஒன்று ஏற்படுத்தினார். தன் வாழ்நாள் காலத்தில் மொத்தம் 37 ஆலயங்களைக் கட்டி எழுப்பிய, ஞானப்பிரகாசர், நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை சிறப்பாகக் கட்டி முடித்தார். அதன் பிறகே, அவர் நல்லூர் ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். 

          ’செகராச சேகரன்’   என்ற நாவலையும், ‘சைவ சித்தாந்தம்’, ’தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களையும் இயற்றிய ஞானப்பிரகாசம்,  “சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை ” உருவக்கத் திட்டமிட்டு,  தொடர்ந்து பணியாற்றினார். திட்டமிடப்பட்ட 20 தொகுதிகளில், ஆறு நூல்களை மட்டும் தனது காலத்திலேயே வெளியிட்டார். ஏனையவை கைப்பிரதியாகவே தேங்கின. 

        தமிழகத்தில் உள்ள திருப்பனந்தாள் மடம், இந்த அறிஞரின் தமிழ்ப்பணிக்கு,  உரிய பாராட்டையும், பெரிய உதவியையும் தொடர்ந்து செய்தது.  ஜெர்மனி அரசு இவரது பணிகளை மெச்சும் விதமாக, 1939ல் உருவ முத்திரை வெளியிட்டு ,  கெளரவம் செய்தது. சிந்து,ஹராப்பா பகுதிகளை ஆய்வு செய்து வந்த ஹெராஸ் பாதிரியார் என்பவர் தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக, ஞானப்பிரகாசத்தைச் சந்திக்க இலங்கைக்கே  வந்தார் என்பது , இவரது ஞானத் தெளிவை  நமக்குக் காட்டும் முக்கிய நிகழ்வாகும்.  வரலாறு, மொழியறிவு மட்டுமல்ல - இந்த அறிஞருக்கு வயலின் , மத்தளமும்  கூட வாசிக்கத்  தெரியும்.

         1946ஆம் ஆண்டு, இவரது அரிய நேர்காணல் ஒன்று, ‘மறுமலர்ச்சி”  என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது. அதில், அவர் சொன்ன இரண்டு பதில்கள் சிந்திக்க வைத்தன.  

        இத்தனை மொழிகளை எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடிந்தது என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்;  “முயற்சி, முயற்சி, அதுதான் வெற்றி மந்திரம்.” - இந்த பதில் உள்ளத்திற்கு உறுதி தந்தது. 

            ‘”சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை”  வெளியிட இலங்கை அரசு,  தொடர்ந்து உதவ முன்வருமா என்ற கேள்விக்கு மன வருத்தத்தோடு அவரளித்த பதில்; “ சிங்கள அகராதியை உருவாக்கிட,  ஆண்டுக்கு பதினாயிரம் ரூபாய் வழங்கும் சிங்கள அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்காக வழங்கி வரும் ரூபாய் ஆயிரத்தையுமா   நிறுத்திவிடப் போகிறது?, அப்படி நிறுத்தினாலும் என் பணி தொடரும்” - இந்த பதில், உள்ளத்தை உருக வைத்தது.
              ஏனெனில், தமிழ் அரசாங்கமும் அத்தீவில்  இருந்திருந்தால், அந்த அறிஞருக்கு இப்படி ஒரு கவலை வந்திருக்குமா? 

            ஜனவரி 22, 1947 -  தனது சொந்த ஊரில் இறந்து போனார் ஞானப்பிரகாசம்.  வெள்ளை ஆடை , வெண்ணிற தாடியுடன் இருந்த அந்த மனிதனின் அறை முழுக்கப் புத்தகங்களே  நிரம்பியிருந்தன. அவர் மனம் முழுக்க தமிழ்  “ஒப்பியல் அகராதியே” நிறைந்திருந்தது. காய்ச்சலால் இறந்துபோன அந்த ஞான ஒளி, தமிழுலகில், என்றென்றும்  அழியாது - சுடர் வீசிக் கொண்டே இருக்கும்.  இந்த பல்துறை வல்லுநர்,  தாய்மொழியாம்  தமிழ் மீது கொண்டிருந்த பாசம்,  நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து மொழிகளையும் அறிந்து வெல்க!   ஆயினும் ,
அன்னை மொழியையே உயிரெனக் கொள்க!

          

No comments:

Post a Comment