Friday, August 24, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 24

இடியாப்பச் சிக்கலில் ஜெருசலேம் - யாசர் அராஃபத்.

ஆகஸ்ட் 24.....இன்று!

                      சிக்கல் நிறைந்த நீண்ட வரலாற்றினைக் கொண்டது  பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்சனை. அதற்குத் தீர்வு காணும் விதத்தில் செயல்பட்டு,   சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றவரும், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக இருந்து, அம்மக்களின் நில உரிமைக்காகப் போராடியவருமான யாசர் அராஃபத்  (1929-2004) பிறந்த நாள் இன்று. 
             
                     ”கடவுள் ஆபிரகாமிற்குக் காட்டிய இடம் கானான் தேசம். அங்கே பிலிஸ்தீனியர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அபிரகாமின் சந்ததியில் வந்த ஜேக்கப், இஸ்ரவேல் என அழைக்கப்பட்டார். அதனால், அவரது சந்ததியினர் இஸ்ரேலியர் எனப் பெயர் பெற்றனர். கடவுளால் எங்களுக்கு வழங்கப்பட்ட  கானான் தேசமே, இஸ்ரேல் எனும் நாடானது.” - ஹென்ரி ஹெர்ஸல் என்பவரால் உருவாக்கப்பட்ட   யூத தாயக விடுதலை அமைப்பு.(Zionist).
                         
             ” பைபிளின் படியே, கானான் தேசத்தில் இருந்த பழங்குடியினர் பிலிஸ்தீனியர்கள் தான். அந்த வம்சத்தைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களாகிய நாங்களே இந்த மண்ணுக்கு உரியவர்கள். ஜெருசலேம் அரபு நாடுகளோடு இணந்ததே”   - பாலஸ்தீன விடுதலை அமைப்பு.( P.L.O).                   இவைதான் இரண்டு தரப்பினர்  முன் வைக்கும் வாதத்தின் சுருக்கம்.

     கிறிஸ்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் மூவருக்கும் புனிதமான இடம் ஜெருசலேம். அந்த மையப் புள்ளியைச் சுற்றித்தான் இத்தனை சண்டைகளும், சச்சரவுகளும். இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், 1948 ஆம் ஆண்டு, இஸ்ரேல் எனும் தனி நாடு அங்கீகரிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த, பாலஸ்தீன பூர்வகுடி மக்களின் போராட்டம் வலுப்பெற்றது. அந்த நேரத்தில் உருவானதுதான் ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’. சொந்த தேசத்தை சுய நிர்ணயம் செய்து கொள்ளும் போராட்டம் எனச் சொல்லும் அந்த இயக்கம் 1964 ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்டது. 

                1969 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு தனது மரணம் வரைக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தவர் தான் யாசர் அராஃபத்.  எகிப்தில் கெய்ரோ நகரத்தில், 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி,  7 குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த யாசர் அராஃபத் , தனது நான்காம் வயதில் தாயை இழந்தார். சிரமம் காரணமாக,  காஸா பகுதியில் வசித்து வந்த, தாய் மாமாவின் வீட்டிற்கு யாசரையும், அவரது ஒரு தங்கையையும் அனுப்பி வைத்தார் அராஃபத்தின் தந்தை. தனது பிள்ளைகள் இரண்டையும் சிலகாலம் கழித்து, மீண்டும் கெய்ரோவிற்கே அழைத்துக் கொண்ட போதும், தந்தையின் மீதான ஒருவகை வெறுப்பு யாசர் அராஃபத்துக்கு தொடர்ந்து இருந்தது. 1952ல்  தந்தை இறந்த போது, அவரின் இறுதிச் சடங்கில் கூட, அராஃபத் கலந்து கொள்ளவில்லை. 
               
                      சிவில் பொறியாளராகப் பட்டம் படித்த யாசர் அராஃபத் , கல்லூரிக் காலத்திலேயே பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக  ஆயுதங்கள் கடத்தினார்.  இவற்றைத் திறம்படச் செய்ய 1958ல் அல்-ஃபத்தா என்ற அமைப்பைத் தொடங்கினார். காசா பகுதியின் பொருட்டு, யூதர்களுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் யூதர்கள் வெற்றி பெற்று தனி நாடு பெற்றனர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது. இந்தச் சூழலில் தான், பி.எல்.ஓ அமைப்பின் தலைவராக 1969 ஆம் ஆண்டு, யாசர் அராஃபத் பொறுப்பேற்றுக் கொண்டார். 
           
              1974 ஆம் ஆண்டு, நவம்பர் 13 அன்று, நியூயார்க் ஐ.நா. பொது சபையில் அவர் ஆற்றிய உரை பிரசித்தி பெற்றது.  “ஒரு கையில் சமாதானத்திற்காக ஆலிவ் மரக் கிளைகளையும், மற்றொரு கையில் விடுதலைக்காக துப்பாக்கியையும் வைத்திருக்கிறேன். ஆலிவ் இலைகளைத் தூக்கி எறியும் படி  செய்து விடாதீர்கள். போர் சூழ்ந்திருக்கும்  பாலஸ்தீனத்தில் அமைதி ஒரு நாள் மலரும்”  என்று   பேசினார்.
  
            ஆயதங்களின் வழியே தம் மக்களுக்கான தேசத்தைப் பெற எண்ணிய யாசர் அராஃபத், பின்னாளில்  பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று எண்ணினார். 1994 ஆம் ஆண்டு நடந்த பேச்சு வார்த்தையின் படி,  ஜோர்தான் நதிக்கரைக்கும், மத்திய தரை கடல் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது என்றும், ஜெருசலேம் பகுதி மட்டும் ஐ.நா.சபையின் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் என்றும் முடிவானது. "இரு நாடுகளின் தீர்வு" என்றழைக்கப்பட்ட இந்த முடிவிற்கு ஒத்துழைப்பு நல்கிய இஸ்ரேல் பிரதம அமைச்சர்கள் மற்றும்  யாசர் அராஃபத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு (1994) கூட்டாக வழங்கப்பட்டது. ஆனால், தீர்வினை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக , பிரச்சனை மட்டும்  இன்னும் நீடிக்கிறது.

                  2004 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் தேதி , உடல் நலக் குறைவு காரணமாக ஃபிரான்ஸ் மருத்துவமனை  ஒன்றில்  யாசர் அராஃபத் இறந்து போனார். உடல் பரிசோதனை முதலில் செய்யப்படவில்லை. பின்னாளில் அவரது உடல்  மற்றும் உடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, பொலோனியம் கதிவீச்சின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது மரணம் தற்செயலானது அல்ல, கொலை தான்,   என அவரது மனைவி பேட்டியளித்தார். பாலஸ்தீனிய  கிறிஸ்தவப் பெண்ணான சுஹா டவிலை, 1990ஆம் ஆண்டு தனது 61 வது வயதில், அராஃபத்  திருமணம் செய்து கொண்டார். அப்போது சுஹாவின் வயது 27. இவர்களுக்கு ஸஹ்வா என்ற ஒரே ஒரு மகள் உண்டு.
               
                   ஹமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி, பி.எல்.ஓ வின் செல்வாக்கினைக் குறைத்தது. தற்போது அங்கே, பல்வேறு குழுக்களால் ஆயுதப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.   மேலும், யாசர் அராஃபத், இஸ்ரேல் நாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு, சமாதானம் என்ற பெயரில் பாலஸ்தீனத்திற்கு எதிரான செயல்களைச் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது.  ஜோர்தான் நதி ரத்த வெள்ளத்தில் தான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

           பலமுறை கொலை முயற்சிகளுக்கு உள்ளான யாசர் அராஃபத்,   தங்கிய ஒரிடத்தில் மீண்டும் தங்க முடியாத படிக்கு, வாழ்நாள் முழுவதும் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். பாலஸ்தீன விடுதலைக்காக நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன் என்று சொன்ன அராஃபத், கடைசி சில வருடங்கள் மட்டும் இஸ்ரேல் ராணுவ  கட்டுப்பாட்டின் காரணமாக, நகர முடியாமல் போனது வேதனையானது.  ஜெருசலேமில்தான் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையும் நிறைவேறவில்லை. ஆம்,  விரும்பிய படியே மரணமும், கல்லறை இடமும் எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?

           வாழும்போதே வெற்றியைக்  காணாவிட்டாலும், வாழ்வையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டவர்களின் கனவு - நியாயமாக இருப்பின் -  நிச்சயம் நிறைவேறும்.



No comments:

Post a Comment