Friday, August 17, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 17

குருதி வரைந்த கோடு - ராட்கிளிஃப் லைன்.

ஆகஸ்ட் 17...இன்று!

             ஆறாக ஓடிய ரத்தம்; ஆறாத ரணம்;   இரு தேசங்கள் உருவான வரலாறு , என்றைக்கும் அழியாத தழும்பானது. இந்தியா - பாக்கிஸ்தான்   என இரண்டு நாடுகளுக்குமான எல்லைக்கோடு ’ராட்கிளிஃப் லைன்’, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17, இதே நாளில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
             1948 க்குள் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்குவதற்கான நடைமுறைகளைச் செய்ய  முழுப் பொறுப்பையும் மெளண்பேட்டன் பிரபுவிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு. அப்போது,  முஸ்லீம்களுக்கென தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தார் முகமது அலி ஜின்னா. ”என் பிணத்தின் மீது வேண்டுமானால் இந்த தேசம் பிரியட்டும்”  என்று சொன்ன மகாத்மா , பிறகு பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார்.
                அகண்ட பாரதத்தை இரண்டு துண்டுகளாக்கும் பொறுப்பைச் செய்வதற்காக, 1947 - ஜூலை 8ஆம் தேதி, லண்டனிலிருந்து ஒரு வழக்கறிஞர்  வரவழைக்கப்பட்டார். அவர் பெயர் சர்.சிரில் ராட்கிளிஃப் ( Sir Cyril Radcliffe).  இந்தியாவிற்கு முதல் முறையாக வரும் ராட்கிளிஃப் , இந்தியாவைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் இருந்தார். ஆனால், இந்திய தேசத்தைப் பிரிப்பதற்கு அவருக்கு வழங்கப்பட்ட அவகாசம்  வெறும்  நாற்பது  நாள்கள் மட்டுமே. 
                 ராட்கிளிஃப்  இந்தியா வந்தவுடனேயே,மெளண்பேட்டன் தலைமையில், நேரு-ஜின்னா இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். கால அவகாசம் எடுத்துக்கொண்டு தேசத்தை பிரிக்கலாமா என்று ஆலோசனை கேட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் போதாது என சொல்லிப் பார்த்தார். ஆனால்,  சுதந்திரத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், ஆகஸ்ட் 15 க்குள் எல்லைகளை அறிவிக்குமாறு இரு தலைவர்களும் வலியுறுத்தினர். எனவே,   பணி உடனடியாகத் தொடங்கியது. 
         மக்கள்தொகை அடிப்படையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளை பாக்கிஸ்தானுக்கு வழங்குவது என்ற முடிவுக்கு வந்தார் ராட்கிளிஃப். பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டையும் பிரிக்க, ராட்கிளிஃப் தலைமையில் தனித்தனியாக இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன.  இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளின் சார்பிலும்  தலா இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். பெங்கால் கமிஷனில் பிஸ்வால், முகர்ஜி, அபு முகமது அக்ரம், ரகுமான் ஆகியோர் இடம் பெற்றனர். எம்.சந்த் மஹஜன், தேஜா சிங்,  முகமத் முனிர், தீன் முகமது ஆகியோர் பஞ்சாப் கமிஷனில் இடம் பெற்றனர். 
              ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் எல்லைக்கோடுகள் முடிவு செய்யப்பட்டன. ஆனால், முறையான அறிவிப்பு வரும் முன்னரே , யூகத்தின் அடிப்படையில் மக்கள் இடம் பெயரத் தொடங்கினர்.  ஆங்காங்கே வன்முறைகள் முளைக்கத் தொடங்கின. விடுதலைக்காக விழாக் கோலம் கொண்டிருந்த இரு தலைநகரங்களையும் தவிர்த்துவிட்டு, இந்து - முஸ்லிம் சமாதான முயற்சிகளில் இறங்கியிருந்தார் காந்தியடிகள்.  
               ராட்கிளிஃப் பயந்தது போலவே நடந்தது. பஞ்சாப் பிரிவினை மக்கள் மத்தியில் கடும் பதட்டத்தை உண்டாக்கியது. இரு தரப்பினருக்கும் அதிருப்தி அடைந்தனர். 
          சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த செல்வம், பார்த்துப் பார்த்து பழகிய பூமி, வயிற்றுக்குச் சோறிட்ட வயல்காடு -  இவை யாவற்றையும் ஒரே நொடியில் துறந்துவிட்டு, உயிருக்குப் பயந்து ஓடுபவர்களிடம் தாளாத கோபமும், மாளாத வன்மமும் இருந்தன. கண்ணில் பட்ட எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களையெல்லாம் கண்மூடித்தனமாகத் தாக்கிக் கொண்டனர். முன்னெச்சரிக்கையாக 50,000  படைத் துருப்புகளைக்  கொண்டுவந்து நிறுத்திய போதும்,  பஞ்சாபின்  ராவி நதி சில வாரகாலம் ரத்த ஆறாகவே     ஓடியது. 
            உலக வரலாற்றில் முதல்முறையாக, 1,45,00,000 பேர் இடம்பெயர்ந்தனர். இரு தரப்பிலும் சேர்த்து, சுமார் 4 லட்சம் பேர் வன்முறைக்குப் பலியானார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் ராபர்ட் ட்ரம்புல்  பின்வருமாறு எழுதினார். “ இந்தியாவில் இப்போது மழையைவிட ரத்தம் சாதாரணமாகப் பொழிகிறது.  கண்களும், கைகளும், கால்களும் இழந்து, இறந்து கிடப்பவர்களைப் பார்க்கும்போது,  துப்பாக்கியால் சுடப்பட்டு இறப்பது கருணை மிக்கதே. மேலும், காயம் பட்டு சாகக்கிடந்தவர்களின் கொடுமையை வெயிலும், ஈக்களும் அதிகப்படுத்தின.”
          கலவரம் ஓய்ந்த பிறகு,     பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டமும் , காஷ்மீர் பகுதியும் தவறாகப் பிரிக்கப்பட்டுவிட்டதாக வரலாற்று அறிஞர்கள் சமர்ப்பித்த அறிக்கைகளால், பிரச்சனையின் வேர்களை அடையாளம் காண முடிந்தது. எல்லை முழுக்க துப்பாக்கிச் சூடு நடந்தாலும்,  வாஹா என்ற ஊரின் வழியாகச் செல்லும் ராட்கிளிஃப் எல்லைக்கோட்டில் , இருநாட்டுப் படைகளும் தினமும் கைகுலுக்கிக் கொள்ளும் நிகழ்வு மட்டும் இன்று வரை  தொடர்ந்து வருகிறது.       
               எல்லை பிரித்தது தொடர்பான எல்லா ஆவணங்களையும் எரித்துவிட்டு, ஆகஸ்ட் 15 மாலையே,  ராட்கிளிஃப் லண்டன் திரும்பினார். ரத்த வெள்ளத்தால்தான், இரு தேசங்களின்  எல்லைக்கோடுகள்  வரையப்படும் என்பதை உணர்ந்த ராட்கிளிஃப், செழித்து நிற்கும் கோதுமை வயல்களைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டார். மிகவும் சிக்கலான வேலையான எல்லைக் கோடு தயாரிக்கும் பணிக்கென , அவருக்கு  வழங்கப்பட்ட 2000 பவுண்டு சம்பளப் பணத்தை வாங்க மறுத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் சிரில் ராட்கிளிஃப்.

                பிறந்த மண்ணை விட்டுப் பிரிவது என்பது உயிரினை உருவி எடுப்பதற்குச் சமம். தேசம் இழந்தவர்களின் துயரமும் ,  அகதிகளின் அகமும் - என்றென்றும் -  கொதித்துக் கொண்டே இருக்கும் எரி ஊற்று.

 அவர்களின் வலி உணர்வோம்!.   

No comments:

Post a Comment