Monday, August 20, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 20


சிறிய உருவம் செய்த ’பெரிய' காரியம் - உலகக் கொசு நாள்.

ஆகஸ்ட் 20.....இன்று!

           வேரோடு பிடுங்கி எறியும் சூரைக் காற்றைப் போல, மனித உயிர்களை  கொத்துக் கொத்தாக அள்ளி வீசியது மலேரியா காய்ச்சல். அது, விஞ்ஞானத்தின் கண்களில் விரலைப் பாய்ச்சி விளையாடிக் கொண்டிருந்தது. காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. இறுதியில்,   1897 ஆம் ஆண்டு அந்த மர்மம் விலகியது.
                            19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியா முழுவதும் பரவியிருந்த மலேரியா காய்ச்சலுக்குக்  காரணம் 'அனோபிலிஸ்' என்ற கொசு வகைதான் என்ற உண்மையை, ரொனால்ட் ராஸ் என்ற மருத்துவர், 1897 -ஆகஸ்ட் 20, இதேநாளில் தான், உலகுக்கு  அறிவித்தார். கல்கத்தா நகரத்தில் இருந்த ’பிரசிடென்சி பொது மருத்துவமனை’ வளாகத்தில் மலேரியா காய்ச்சல் பற்றி விரிவாக விவரித்தார். மலேரியாவிலிருந்து, மனித உயிர்களைக் காக்கும் பணியினைச் செய்த  இந்த ஆய்விற்காக, 1902 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் ஆங்கிலேயர் என்ற பெருமையையும் இவர்  பெற்றார்.
          1857 ஆம் ஆண்டு, இந்தியாவில் அல்மோரா என்ற நகரத்தில் ரொனால்ட் ராஸ் பிறந்தார். இவரது தந்தை, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் ஜெனரலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். படிப்பிற்காக லண்டன் அனுப்பி வைக்கப்பட்ட ரொனால்ட், கணிதத்தின் மீதும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே, மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் சூழல் ரொனால்டிற்கு ஏற்பட்டது. ஆனாலும், லண்டன் மருத்துவக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
                மீண்டும் இந்தியா திரும்பிய டாக்டர் ரொனால்ட் ராஸ், இந்திய மருத்துவத் துறையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சென்னை, பெங்களூர், அந்தமான், செகந்திராபாத் நகர மருத்துவமனைகளில் வேலை பார்த்தார். 1895 ஆம் ஆண்டு, புதுவகையான ஒரு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கினார். மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஹுசைன் கான் என்பவரிடமிருந்து, 8 'அனோபிலிஸ்' வகை கொசுக்களுக்கு ரத்தம் வழங்கப்பட்டது. இதற்காக 8 அணா தொகை, ஹுசைனுக்கு வழங்கப்பட்டதாம்.
         ஆய்வின் இறுதியில்,    அனோபிலிஸ் கொசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிதான் மலேரியா காய்ச்சலுக்குக் காரணம் என்பதை ரொனால்ட் உறுதி செய்தார். 
                      40 வகையான பேரினங்களில், 3500 வகையான கொசுக்கள் உலகெங்கும் வசிக்கின்றன. அனோபிலிஸ் இனத்தில் மட்டும் மொத்தம் 430 வகை கொசுக்கள் இருக்க, அதில் சுமார் 100 வகை  மட்டுமே மலேரிய ஒட்டுண்ணியைக் கடத்தும் பேராபத்தைச் செய்கின்றன. பிளாஸ்மோடியம் என்ற இந்த ஒட்டுண்ணி, மனித உடலில் நுழைந்தவுடன், முதலில் கல்லீரலைத் தாக்குகிறது. பிறகு, இரத்த சிவப்பணுகளை அழிக்கத் தொடங்குகிறது. இறுதியில் மனித உயிரையே கொல்லும் சக்தி பெறுகிறது.
           
  பொதுவாகவே கொசுக்கள் , தாவரங்களின் சாற்றினையே உண்ணும் பழக்கம் உடையவை. ஆண் கொசுக்கள் யாரையும் கடித்து ரத்தம் குடிப்பதில்லை.  தனது  இனப்பெருக்க காலத்தில், புரதத் தேவையை ஈடுசெய்ய பெண் கொசுக்கள் மட்டும்  ரத்தம் குடிக்கின்றன. பெண் கொசு, ஒரு முறை வயிற்றை நிரப்பிவிட்டால், 25 தலைமுறைக்குத் தேவையான புரதச் சத்தைப் பெற்றுவிடுமாம்.
     கடிக்கும்போது , நமக்கு வலிக்காமல் இருக்க, ஒருவித திரவத்தைச் சுரக்கும் பெண் கொசுக்கள், நம்மிடம் மாட்டாமல் இருந்தால்  40 முதல் 50 நாள்கள் வரை உயிர் வாழும். ஆண் கொசுக்களின் ஆயுள் காலம் 1 வாரம் மட்டுமே!
            50 மைல் வரை பயணித்து,  மனித உடலில் வரும் வாசனை, கர்ப்பிணிகள், ‘ஒ’ வகை ரத்தப் பிரிவினர் எனக் கண்டறிந்து கடிக்கும் கொசுக்கள் , ஏனையோரிடமிருந்தும் ரத்தம் பெறும். ஆனால், முன்னுரிமை மேற்சொன்னவர்களுக்கு மட்டும் தான்.
  ஆப்பிரிக்கக்  கொசுக்கள் கணுக்கால்களையே கடிப்பதும், டச்சு நாட்டுக் கொசுக்கள் முகத்தைக் கடிப்பதும் வியப்பையே தருகின்றன. கள்ளத்தனமாய் எட்டிப் பார்த்து, தனது காரியத்தைச் செய்யும் கொசுக்களை, அதே பொருள் கொண்ட ‘பீப்பியன்ஸ்” என்ற சொல்லால் அழைத்தார் வகைப்பாட்டியல் அறிஞர்  லின்னேயஸ்.
           W.H.O. அமைப்பின் 2017 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, மலேரியாவால் அதிகம்  பாதிக்கப்பட்ட முதல் 15 நாடுகளில் 14 ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவை. 15 வது இடம் இந்தியாவுக்காம்! எச்சரிக்கை செய்துள்ளது WHO.
             அனோபிலிஸ்(மலேரியா), ஏடிஸ் (டெங்கு, சிக்குன் குனியா), க்யூலக்ஸ் (யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல்) என பலவகையான கொசுக்கள், நவீன அறிவியலுக்குச்  சவால் விடுகின்றன. தற்போது, ஜீன் மாற்றம் செய்து, மலட்டுத்தன்மை கொண்ட ஆண் கொசுக்களை உருவாக்கி , கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அசுத்தத்தைத்  தவிர்ப்பது தான் , கொசுக்களை வெல்ல சரியான  வழி!.
       
    இயற்கையில், எளிய எறும்பொன்று  பருத்த யானையின் காதில் நுழைவதும், சிறிய கொசுவொன்று, பெரிய மானுடத்திற்குச்  சவால் விடுவதும், நமக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிறது.
இயற்கையை வாசிப்போம்!.

       
       
               
             
         
             
                

No comments:

Post a Comment