Saturday, August 11, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 10

நல்ல நேரம் - க்ரீன்விச்சில் கட்டிடம். 


ஆகஸ்ட் 10 இன்று....


        உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ள நேர நிர்ணய அமைப்புக்கான முதல் கட்டிடம், தேம்ஸ் நதிக்கரை அருகில் உள்ள மலையில்,   கிரீன்விச் என்னுமிடத்தில்,  1675 ஆம் ஆண்டு,  ஆகஸ்ட் 10 ஆம் நாளில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டிடத்தின் மேல், டைம் பால் (Time Ball ) வைக்கப்பட்டுள்ளது.   அக்கட்டிடம் எழுப்ப,  திட்ட மதிப்பீடு 500 பவுண்டுகள். ஆனால்,  முடிவில்   520 பவுண்டுகள்  செலவானதாக ஆவணங்கள் சொல்கின்றன.             
    நேரத்தை நிணயிக்க மனிதன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நீண்ட வரலாறு உடையது. சூரியனையும் , சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு, உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான  நேரக் கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம், சூரிய நிழல் கடிகாரம் போல நடமாடும் மனிதக் கடிகாரங்களும் சில இடங்களில் இருந்தன. 
            ஆப்பிரிக்க பழங்குடி இனத்தின் ஒரு பிரிவில், நடமாடும் கடிகாரமாக மனிதர்களே இருந்தார்கள். ஒரு மனிதன் அதிகாலையில் ஓரிடத்தில் ஓடத் துவங்க, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் அவர்கள் வந்து சேர்வது தான் இரவின் தொடக்கம். இது ஒரு தொடர் ஓட்டம் போல பகலெல்லாம் இடைவிடாது நடைபெறும். ஓடும் நபரையும், இடத்தையும் வைத்து, அம்மக்கள் நேரத்தை அறிந்து கொள்வார்கள். 
               வானவியல் அறிஞர்களும், கடலோடிகளும் துல்லியமான நேரத்தை கணக்கிட விரும்பினார்கள். அது ஓரளவுக்கு அனைது நாடுகளுக்கும் பொதுவாக இருக்கவேண்டுமென்று விரும்பினார்கள். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் சார்லஸ் உத்தரவின் படி , ராயல் நேரங்காட்டும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சர் கிறிஸ்டோபர் ரென் என்ற கட்டிடக்கலை நிபுணர் , இடத்தையும், கட்டிட வரைபடத்தையும் உருவாக்க, 1675, இதே நாளில் தான் , கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  Royal Observatory Greenwich என்ற இந்த மையத்தின் முதல் வானியல் இயக்குநராக ஃப்ளம்ஸ்டீட் என்பவர் நியமிக்கப்பட்டார்.  மூன்று நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அமைப்பும் , கட்டிடமும் தற்போது அருங்காட்சியகமாக உள்ளன. இன்றும் அக்கட்டிடத்தின் பெயர் ”ஃப்ளம்ஸ்டீட் இல்லம்”. 
              1894 ஆம் ஆண்டு, இக்கட்டிடத்தைத் தகர்க்க,  போர்டின் என்ற நபரால் , கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் தாமதமாகவும் குறிதவறியும் வெடித்தன. இதனால் கட்டிடம் தப்பியது.  காரணமும், நோக்கமும் அறியப்படுவதற்கு முன்னரே ,  போர்டின் இறந்து போனான். பதிவு செய்யப்பட்ட சர்வதேச தீவிரவாதத்தின் முதல் நிகழ்ச்சி இதுதான் என பிரிட்டனின் வரலாற்று அறிஞர்கள் அறிவித்தார்கள். 
          1884ல் நடைபெற்ற சர்வதேச தீர்க்க ரேகை மாநாட்டில், க்ரீன்விச் நகர மையமே  00.00 தீர்க்கக் கோடு என உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. பூமியின் மீது வரையறுக்கப்பட்ட, தீர்க்கரேகை என்னும் கற்பனைக் கோடுகளே , உலகின் நேரத்தை நிர்ணயித்து. தற்போது, GMT நேரமே உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   
        இந்தியா,  க்ரீன்விச் கோட்டிலிருந்து + 05:30 மணி நேரம் தள்ளி இருக்கிறது. இந்திய நேரங்காட்டும் தீர்க்க ரேகை, அலகாபாத் வழியே செல்லும்  82.30 பாகை என முடிவு செய்யப்பட்டது.  காரணம் புவியியல் ரீதியிலானது. இந்தியாவின் மேற்கு நுனி குஜராத்தில் 68.00 பாகை. கிழக்கு நுனி அருணாச்சல பிரதேசத்தில்  97.00 பாகை.  இதற்கிடைப்பட்ட  மையப் புள்ளியே 82.30 பாகை ஆகும். ஒரு பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் , 82.30 பாகைக்கு + 5.30 மணி நேரம்  கணக்கிடப்பட்டது. தற்போது, உலகெங்கும் துல்லியமான  அணுக்கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கிரீன்விச் முறை மட்டும் மாறவில்லை. 
               கடந்து செல்லும் காலத்தை துல்லியமாகக்  கணக்கிடுவதில்  , மனிதன் வென்றுவிட்டான். காலங்கள் கடந்து பயணிக்கும் வாகனங்களையும் படைத்து விட்டான். கால வெளியின் மறு பகுதிக்குச் செல்வதற்கும் அவன்  தயாராகிவிட்டான்.
              இனி,   காலத்தை வெல்லும் கலையை அவன் அறிய முடியுமா? ஆம் எனில்,  அந்த நாள் எப்போது வரும் ? 
காலமே யாவும் அறியும்!

No comments:

Post a Comment