Saturday, August 4, 2018

நாளும் அறிவோம் -ஆகஸ்ட் 4

நீதி தேடிய கண்கள்- நட் ஹம்சன்


ஆகஸ்ட் 4...இன்று!

’நிலவளம்’  என்னும் ஒரு நாவல் போதும், நார்வே நாட்டு மக்கள் அவர் மீதான தவறுகளை  மறப்பதற்கும் , மன்னிப்பதற்கும்.!.  

                 நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான நட் ஹாம்சன் (1859-1952, நார்வே )  பிறந்த நாள் இன்று. சொந்த நார்வே  நாட்டு மக்களே , சில காலம் அவரை   வெறுத்தனர். ஆனால், அவரது எழுத்தை வெறுக்க முடியவில்லை. மீண்டும் அவர்களின் உள்ளத்துக்குள் எழுத்தின் வழியே நுழைந்தார். இவரது வரலாறு சுவாரஸ்யமானது. 
                1859, ஆகஸ்ட் 4 ஆம் தேதி, நார்வேயில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். ஏழு பிள்ளைகளில் நான்காவது குழந்தை இவர். குடும்பத்தின் வறுமை காரணமாக , மாமாவின் பண்ணையில் வேலை செய்யும் நிலைமை ஏற்பட்டது. நட் ஹாம்சனின் மாமா ஓல்சென் மிகவும் கொடூரமானவராக இருந்தார். அடி,உதை , பட்டினி என கொடுமையில் மாட்டிக் கொண்டார்.  17 வயதில் பண்ணையில்  இருந்து தப்பித்த நட்சத்திரம் ஹாம்சன், பசியைப் போக்க , கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தார். அமெரிக்கா சென்று வேலை தேடியபோதும்,  அமெரிக்கா அவருக்கு நிம்மதியைத் தரவில்லை. மீண்டும் நார்வே திரும்பினார்.
               ஸாகல் என்ற தொழிலதிபர் இவருக்கு சிறு சிறு உதவிகள் செய்தார். இந்தக் காலக்கட்டத்தில் தான் , தனது அனுபவங்களை எழுத்துக்களாக மாற்றினார்.  இவரது படைப்புகள் பேசப்பட்டன.  1890ல்  இவரது, ‘பசி’ என்னும் நாவல் வெளிவந்தது. அதில், தனது கொடுமையான இளமைப் பருவத்தை அழகாக வெளிப்படுத்தினார். நாவல் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தனக்கு உதவிய, ஸாகலை அவர் என்றும் மறக்கவில்லை. தனது படைப்புகளில் அவரை நல்ல பாத்திரத்தில் காண்பித்துக் கொண்டே இருந்தார். 1917ல் அவர் எழுதிய ‘நிலவளம்’ நாவல்தான் உலக இலக்கியத்தில் அவரை உச்சம் தொட வைத்தது. 
            இந்த நாவலில்,   காடாய் இருந்த நிலத்தைத் திருத்தி, வயலாக்கி, புதிய குடியிருப்பு உண்டாக்கிய ஒரு குடும்பத்தின்,  தலைமுறைகள் கடந்த வாழ்வை எழுத்தின் வழியே நிஜமெனக் காட்டினார். ரத்தமும் சதையுமாக எழுதப்பட்ட இந்த புத்தகம்,  என்றென்றும் உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாக இருக்கும் என ஹெச்.ஜி.வெல்ஸ் குறிப்பிட்டார். நவீன இலக்கியத்தின் பிதாமகன்களில் இவரும் ஒருவர் எனச் சொல்லி,  ஐஸக் சிங்கர் பெருமை செய்தார்.  நிலவளம் நாவலுக்காக , 1920 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.  க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் இவரது நாவல்கள் தமிழில் பரவலான கவனத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
           இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனியின் ஹிட்லருக்கு தனது  முழு ஆதரவைத் தெரிவித்த போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாயின.  வறுமையின் கோரம், அடிமைத்தனத்தின் வலி இரண்டையும் நன்றாக உணர்ந்திருந்த நட் ஹாம்சன் , ஆங்கிலேய காலணியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார். அதன்பொருட்டு, ஆங்கிலேயரை எதிர்க்கும் ஹிட்லரை பெரிதும் ஆதரித்தார். ’ஜெர்மனியின் வெற்றியில், எங்களை விடவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் நட் ஹாம்சன்’ என ஜோசப் கோயபல்ஸ் பேட்டியளித்தார். 
         தனக்குக் கிடைத்த நோபல் பரிசுப் பதக்கத்தை , கோயபல்ஸுக்கு பரிசாக அனுப்பி வைக்கும் அளவுக்கு நாஜிக்களை இவர் நம்பினார். நட் ஹாம்சன்  ஹிட்லரைச்  சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நார்வேயில்,  ஜெர்மன் அதிகாரிகளில் சிலர் அராஜகம் செய்வதாக , அப்பாவித்தனத்தோடு ஹிட்லரிடம் முறையிட்டார் நட் ஹாம்சன். கைது செய்யப்பட்டிருக்கும் நார்வே மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஊர் திரும்பினார். ஹிட்லருக்கு, இவர் மீதான கோபம் தணிய நெடுநாள்களானது. 
          ஹிட்லர் இறந்தபோது,  ‘ ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்கும் தீர்க்கதரிசி, மிகச் சிறந்த போர்வீரர் ஹிட்லர்’ என இரங்கற் குறிப்பு எழுதி, நார்வே மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரையும், அவரது படைப்புகளையும் வெறுத்து ஒதுக்கினர் மக்கள். 
                      ஹிட்லரின் கோர முகத்தையும், யூதப் படுகொலையையும் தாமதமாகவே நட் ஹாம்சன் புரிந்து கொண்டார்.     இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன், நட் ஹாம்சன் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.  1945, ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்டார். அவரது மனைவியும் சிறைக்கு அனுப்பப்பட்டார். (ஹிட்லர் ஆதரவு என்னும் நிலைப்பாடு எடுக்கும் சூழலை,  அவரது மனைவிதான் கட்டாயப்படுத்தினார் என்ற கதையும் உண்டு!) 
           நட் ஹாம்சன் தனது தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார். ஆங்கிலேய எதிர்ப்புதான் தனது முடிவுகளுக்குக்  காரணம் என விளக்கம் அளித்தார். குழப்பமான தொடர் பதில்களால் ,  மன நல சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இறுதியில்,    325000  க்ரவுன்(நார்வே நாணயம்)  பணம் அபராதம் மட்டும் விதித்து, விடுதலை செய்யப்பட்டார். 1952ல் மரணம் அடையும் வரை மீண்டும் வறுமையிலேயே வாடினார்.   
                 மக்கள் மனம் மாறத் தொடங்கினர். 1954ல்,  அவரது எழுத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 15 பாகங்களாக வெளிவந்தது. இன்று வரை அவரது படைப்புகள்  பேசப்படுகின்றன.  நார்வே மக்கள் அவரது பிழையை மறந்துவிட முடிவு செய்துவிட்டார்கள்.  அநீதியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே , ஹிட்லர் என்னும் தீமையை,  தெரியாமல்  ஆதரித்துவிட்டார் என மக்கள் புரிந்து கொண்டனர். நட் ஹாம்சன் மீதான கறையும் நீக்கப்பட்டு விட்டது.
        அநீதியை எதிர்ப்பவர்கள் அனைவருமே,  நீதிமான்கள் அல்ல என்னும் உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? 
            
     

No comments:

Post a Comment