Saturday, August 15, 2020

ஒரு வாழ்வு - இரு பயணம்.



 ஸ்ரீ அரவிந்த கோஷ்.

ஆகஸ்ட் 15 ...இன்று!

     சுதந்திரத்திற்காகப் போராடிய ஒருவர், தனது பிறந்த நாளிலேயே நாடு சுதந்திரம் பெறுவதைக் காணும் வாய்ப்பும் பெற்றார்; அப்போது, அவர் ஓர் ஆன்மீகவாதியாக அமைதி கொண்டிருந்தார்; தனது வாழ்நாளில், தேச விடுதலைக்கும், ஆன்ம விடுதலைக்கும்  தொடர்ந்து  போராடிய ஸ்ரீ அரவிந்த கோஷ் (1872-1950) பிறந்த தினம் இன்று.

       கொல்கத்தாவில், 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், கிருஷ்ண தன் கோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அரவிந்த கோஷ். ’அரவிந்தம்’ என்றால் ’அன்றலர்ந்த தாமரை’  என்று பொருள்.

       டார்ஜிலிங்கில் பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்தர், மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். ட்ரூவெட் என்ற தந்தையின் நண்பருடைய  குடும்பத்தில் தங்கி, இலக்கியத்தில் பட்டம் முடித்தார்.

              தந்தையின் ஆசைப்படி, ஐ.சி.எஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்றார். 250 பேர் தேர்ச்சி பெற்றதில், 11வது இடம் பிடித்தார்.  ஆனால், செய்முறைத்தேர்வான குதிரையேற்றப் பயிற்சியில் கலந்து கொள்ளாமல், வேண்டுமென்றே புறக்கணித்தார். ஐ.சி.எஸ் பட்டம் மறுக்கப்பட்டது.   கேம்பிரிட்ஜ் கல்லூரியின் மூத்த ஆசிரியர், இவருக்கு ஆதரவாக தேர்வுக்குழுவுக்கு ஒரு  கடிதம் எழுதினார். இவரது அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது  கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது.

             கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்தபோது,  ‘இந்தியன் மஜ்லீஸ்’ என்ற சுதந்திரப் போராட்டக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, வீர உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். “தாமரையும்,பட்டாக்கத்தியும்” என்ற ரகசியப் பிரிவிலும் தீவிரச் செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில், அரவிந்தர் ஆபத்தானவர் என்று முடிவு செய்த குழு, இவருக்கு ஐ.சி.எஸ் பட்டத்தை மறுத்தது.

       இந்திய வரலாற்றில் 1893 -  சில சிறப்புகளைக் குறித்து வைத்துக் கொண்டது. ஆம்,    1893ஆம் ஆண்டு, காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா பயணமாகிறார்; 1893 ஆம் ஆண்டு,  விவேகானந்தர் சிகாகோவில்  உரையாற்ற அமெரிக்கா செல்கிறார். அதே 1893 ஆம் ஆண்டுதான், அரவிந்தர் பாரதம் திரும்புகிறார். அவர் பயணம் செய்த 'எஸ்.எஸ்.கர்த்தாழ்' என்ற கப்பல், கடலில் மூழ்கிவிட்டது என்ற தவறான தகவலைக் கேட்ட  அரவிந்தரின் தந்தை அதிர்ச்சியில் இறந்துபோனார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டர். ஆனால்,  மும்பை துறைமுகத்திற்கு  அரவிந்தர் பத்திரமாக வந்திறங்கினார்.    பரோடா கல்லூரியில் சிலகாலம் முதல்வராகப் பணியாற்றினார்.

            1905 வங்கப் பிரிவினைக்கெதிராக, தீவிரமாகப் போராடினார்.  கைது நடவடிக்கைக்கு ஆளானார். சில மாதாங்களில் விடுதலை செய்யப்பட்டார்.  பால கங்காதர திலகர், சகோதரி நிவேதிதா போன்றோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். 1908 அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். சில மாத சிறைவாசத்திற்குப் பிறகு, சாட்சியங்கள் போதாமை காரணமாக மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.  சிறச்சாலைக்குள் இருந்த காலங்கள் அவரின் மனத்தேடலை வேறு வழிக்கு மாற்றியது. சிறைச்சாலையில் இருந்த போது, விவேகானந்தர் தன்னிடம்  (மானசீகமாக!) உரையாடிச் சென்றதாக, பின்னாளில் அரவிந்தர் எழுதினார்.

              தேச விடுதலையைப் போலவே,  ஆன்ம விடுதலையும் அவசியம், அதை அடையும் வழிமுறைகளை நான் கண்டுகொண்டேன் என , முழுக்க முழுக்க தியானம், யோகம் என ஆத்ம பரிசோதனைகளில் இறங்கினார். 1910ல், ஷம்சுல் ஆலம் என்பவரின் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையில், இவரது பெயரும்  சேர்க்கப்பட்டதால் , ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்ய முற்பட்டது. மாறுவேடத்தில் தப்பிய அரவிந்தர், பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த  பாண்டிச்சேரிக்குள் நுழைந்தார். பின்னர், நிரந்தரமாக அங்கேயே தங்கினார். பாரதியாரோடு நட்பு ஏற்பட்டதும் அந்த நாட்களில் தான்.

      சுதந்திரம் பெற்றுவிட வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்ட அரவிந்தர், ஆன்ம விடுதலை வேண்டும் என்பதற்காக அமைதியில் உறைந்தார். 1926ஆம் ஆண்டு, மிர்ரா அல்ஃபஸா (ஸ்ரீ அன்னை) என்பவரோடு இணைந்து,  ’அரவிந்தர் ஆசிரமம்’ தொடங்கினார். பகவத்கீதை, வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

         1943(இலக்கியம்) மற்றும் 1950 (சமாதானம்) ஆகிய இரண்டு ஆண்டுகள் நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மகாபாரத இறையியல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, இவரால் எழுதப்பட்ட ”சாவித்திரி காவியம்” எனும் கவிதை நூல் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மேலும் இவரது உரைகள் தனித்தனிப்  புத்தகமாக வெளிவந்துள்ளன. அரவிந்தரின் அமுத மொழிகள் மன அமைதியையும் ஆற்றலையும் எப்போதும்  தரக் கூடியவையாகவே இருக்கின்றன.

      1950ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் நிரந்தர அமைதியில் சமாதி நிலை எய்தினார் ஸ்ரீஅரவிந்தர்.    அதன் பின்னர்,  ஸ்ரீ அன்னை ஆசிரமத்தை தொடர்ந்து வழிநடத்தினார். தேச விடுதலை, ஆன்ம விடுதலை என இரண்டு தடத்திலும்  வெற்றிகரமாகப் பயணம் செய்த ஸ்ரீ அரவிந்தர், ஆன்மீக மறுமலர்ச்சி வரலாறு, தேச விடுதலை வரலாறு - என்ற  இரண்டிலும் நிறைந்தே இருக்கிறார். அதுபோலவே,  நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்றல்லவா நமது  வாழ்வும்  இருக்க வேண்டும்?

            ஆன்மீகம் என்ற பெயரில் மதமானாலும் சரி,   சித்தாந்தம் என்ற பெயரில் அரசியலானாலும் சரி, எதற்கும், யாருக்கும் அடிமையாகி விடக்கூடாது. தளத்தில் இருந்து நம்மை மேம்படுத்தும் அடிக்கற்கள் தான் அவை என்பதை நாம்  உணர வேண்டும்.

    விடுதலை எண்ணமே வாழ்வின் நெறி,
    விடுதலை பெறுவதே வாழ்வின் குறி!

Thursday, August 13, 2020

வரலாறு தந்த விடுதலை


ஃபிடெல் காஸ்ட்ரோ.

ஆகஸ்ட் 13...இன்று!

          1953 ஆம் ஆண்டு, 'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' - கியூபாவின் நீதிமன்றத்தில் நிமிர்ந்து நின்றான் 27 வயது இளைஞன் ஃபிடெல்.  தலைமை நீதிபதி பெனிட்டோ ஒசாரியோ முன்னிலையில், கடைசிக் கட்ட  இரண்டு மணி நேர விசாரணையில், ஒன்றரை மணி நேரம்  வாதிட்டான் அந்த இளைஞன்.   வாதத்தின் நிறைவில், அவன் சொன்ன சொற்களை வரலாற்றின் கல்வெட்டு, விரும்பி ஏற்றுக் கொண்டது.
     
        ”நீங்கள் என்னை  என்ன செய்தாலும், வரலாறு என்னை விடுதலை செய்யும் ”,  எனப் பேசிய அவரது பெயரை , வரலாறு தன் கிரீடத்தில் பதித்துக் கொண்டது.
      
      கியூபா நாட்டின் நலனுக்காக, தனது வாழ்வையே பணயம் வைத்து, அதில் முழு வெற்றியும் பெற்ற கம்யூனிசப் போராளி ஃபிடெல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் (1926-2016) இன்று.  1926 ஆம் ஆண்டு,  ஆகஸ்ட் 13 அன்று, ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் ஃபிடெல். இவர் பிறந்த பின்னரே , இவரது பெற்றோர் திருமணம் செய்து கொண்டார்கள். 
    
       சட்டம் பயின்ற ஃபிடெல், அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடந்த பாடிஸ்டாவின் முட்டாள்தனமான ஆட்சியை எதிர்த்து, நீதிமன்றம் சென்றார். பலன் ஏதும் இல்லை. அதன்பிறகு, புரட்சியின் மூலம் தான், கியூபா மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற  முடிவுக்கு வந்தார். 

      'கியூபாவின் இயற்கை வளம் அனைத்தும் தாய் நாட்டு மக்களுக்கே சொந்தம் ; அதை உறுதிப்படுத்தும் போரில் வெற்றி அல்லது வீர மரணம்' என களத்தில் இறங்கிப் போராடி, உயிர் துறந்த 'ஜோஸ் மார்த்தியை' தனது குருவாகக் கொண்டு, புரட்சிப் படையில் இணைந்தார். 1953, ஜூலை 26 ல் மான்கடா தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அந்தத் தாக்குதலில், ஃபிடெல் கைது செய்யப்பட்டார். முதலில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, மக்கள் போராட்டம் காரணாமாக, ஃபிடெல் 1955 ல் விடுதலை செய்யப்பட்டார். 

        ஆல்பர்டோ பேயோ.! கொரில்லாத் தாக்குதலுக்கு  பயிற்சி கொடுக்கும் இவரைத் தேடித்தான் மெக்சிகோ வந்தார் ஃபிடெல்.  ஃபிடெலின் நம்பிக்கை ஆல்பர்டோவை அதிசயிக்க வைத்தது. 'ஏகாதிபத்தியத்தை எதிர்க்க , என் கால்கள் எந்த எல்லையையும் தாண்டும்' எனச் சொன்ன சே குவாராவை,  அதே மெக்சிகோவில் தான் ஃபிடெல் சந்தித்தார். 1959 ஆம் ஆண்டு , இவர்களது புரட்சிப் படை கியூபாவை வெற்றி கொண்டது. சர்வாதிகாரி பாடிஸ்டா  நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். கியூபாவில் ஃபிடெல் காஸ்ட்ரோ  தலைமையில் , கம்யூனிச அரசாங்கம் மலர்ந்தது. அதன் காரணமாகவே, அமெரிக்காவின் மூளையில் இருள் படர்ந்தது. 

     ஃபிடெலைக் கொல்ல , முந்நூறுக்கும் மேற்பட்ட முறை சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. பிக் வளைகுடா போர் போல,  கிளர்ச்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டன. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தனது மூச்சு நிற்கும் வரை, அமெரிக்காவின் சொல்லுக்கு ஃபிடெல் அடிபணியவே இல்லை. ரஷ்யாவின் உதவியோடு, அமெரிக்காவின் கனவுகளைக் காலி செய்தார் ஃபிடெல்.

       பதவிக்கு வந்தவுடன் நாட்டை வளப்படுத்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். 2017ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தற்போது  கியூபாவில் எழுத்தறிவு சதவீதம் 99.7. அரசுப் பள்ளிகள் மட்டும்தான். கல்வி கடைச்சரக்கு போல தனியாரிடம் தரப்படவில்லை. பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் மட்டும்  தடையற்ற மின்சாரம் எப்போதும் உண்டு.

           அதேபோல, அரசு மருத்துவமனைகள் மட்டும் தான்.  உலக அளவில் தரமான மருத்துவர்கள் இங்கிருக்கிறார்கள். கடினமான காலங்களில் எல்லாம், கியூப மருத்துவர்களின் உதவியை ஒவ்வொரு நாடும் கோருகிறது. டெங்கு காய்ச்சலின் போதும் கொரோனா பாதிப்பு சூழலிலும் உலக நாடுகளுக்கு,  மருத்துவ உதவியை கியூபா, தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

        விண்வெளிப் பயணங்களுக்கும், மின்னணு சாதன உற்பத்திகளுக்கும் அவர்கள் பணம் செலவு செய்வதில்லை. மாறாக, அவர்களின் ஆய்வுகள் மக்களின் நடைமுறை வாழ்வினை ஒட்டி அமைந்தன.  திசு வளர்ப்பு முறையைப் பயன்படுத்தி, 40,000 பக்க வாழைகள் தரும்  வாழைக்கன்றுகள், கரும்பு உற்பத்தியில் சாதனை, முருங்கை மரங்களில் அதீத விளைச்சல்,  குறைந்த செலவில் மருந்துகள் என அவர்கள் பயணிக்கும் பாதை வித்தியாசமானது.

       பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட போது, கியூப மக்களை அதற்கேற்ப தயார் செய்தார் ஃபிடெல். கிழிந்த சட்டைகளைத் தைத்து, பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தினார். செருப்புகளும் குறைந்தது 10ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டன. வீண் ஆடம்பரம் செய்ததில்லை. முன்மாதிரியாக இருந்து காட்டினார். இன்றும்,  மருத்துவர்களும்,  விஞ்ஞானிகளும் கூட, கிழிந்த அங்கிகளோடு , அங்காடிகளுக்குச் செல்வதை நாம் காண முடியும்.

            ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு 2 மனைவிகள், 11 பிள்ளைகள் என்ற தனிநபர் தகவல்கள் நமக்குத் தேவையில்லை. ஏனெனில், தனிநபர் வழிபாடு அங்கு கிடையாது.   சிலைகளும், பேனர்களும் தெரு முனைகளை அடைத்துக் கிடக்காது.  வீட்டிற்குள் வேண்டுமானால் புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம்.

       2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ல், ஹவானா நகரில் ஃபிடெல் இறந்துபோனார். உலகின் வல்லரசாக வலம்வரும் அமெரிக்கா, தனக்கு நூறு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள கியூபா தேசத்திடம் மட்டும்  ஏகாதிபத்தியத்தைக் காட்ட முடியவில்லை. இன்று வரை அமெரிக்காவைச் சாராமல் தன்னிறைவோடு இருக்கிறது கியூபா. இதற்கு,  தன்னலம் கருதாத மானமுள்ள தலைவன் ஃபிடெல் தான் காரணம் என்று கியூபா மக்கள் கருதுகிறார்கள்.

         சொந்த சிந்தனையின்றி, தீயோர் சொல் பேச்சுக் கேட்டு,  தேசத்தை அடிமைப்படுத்தும் பொம்மை அரசாங்கத்தைத் தூக்கி எறிய, எப்போதும் புரட்சியாளர்கள்  முளைத்துக் கொண்டே இருப்பார்கள்.  வரலாறு அவர்களை மட்டும் தான் விடுதலை செய்யும்.

Tuesday, August 11, 2020

திரை மூடிய ஆளுமை


இங்கர்சால்.

ஆகஸ்ட் 11.. இன்று!   

         சுதந்திர சிந்தனைக் காலக்கட்டத்தின் தலைசிறந்த பேச்சாளரும்,  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமான ராபர்ட் கிரீன் இங்கர்சால் (1833-1899) பிறந்த நாள் இன்று.

        அமெரிக்கா- நியூ யார்க் நகரத்தில், செனிகா ஏரியின் மேற்குக் கரையில் உள்ள ட்ரெஸ்டன் நகரத்தில், ஜான் இங்கர்சால் என்ற பாதிரியாரின் கடைசி மகனாக, 1833 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11 ஆம் நாள்  பிறந்தார். இரண்டு வயதிலேயே தனது தாயை இழந்தார். இவரது தாய் மத நம்பிக்கை அற்றவர். தந்தை மத போதகர் என்றாலும், அடிமை ஒழிப்பு, பெண்களுக்கான சுதந்திரம் என முற்போக்கு எண்ணம் கொண்டவர்.

            நேர்மையாக இருந்தால், பணியிட மாற்றம் செய்வதுதானே மனித குல அரசியல் வரலாறு. அதன்படி, இவரது தந்தையும்   அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தார். இவரும் பல்வேறு சபைகளுக்கு மாறிக் கொண்டிருந்தார்.  இது இவரது ஐந்து பிள்ளைகளின் படிப்பையும் வெகுவாகப் பாதித்தது. இங்கர்சால் ஒரு வருடம் மட்டுமே முறையான பள்ளிக்கூடம் சென்றார். 18 வயதில், சட்டம் படிக்க முயன்றார். அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. ஆனாலும், சலுகை நியமனப் பதிவு முறையில் வழக்கறிஞர் ஆனார்.

       தந்தையின் வழியே பைபிளை முழுமையாகக் கற்றார். அதில் முரண்பாடுகள் உள்ளதாகத் தந்தையோடு வாதிட்டார். வாதத்திறமையும், பேச்சாற்றலும் மிக்க இங்கர்சால் , தனது வாழ்நாள் முழுக்க , மேடைகளில் பேசி, புரட்சிகர சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருந்தார். இவரது பேச்சைக் கேட்க , பார்வையாளரிடம் ஒரு டாலர் பணம் வசூலிக்கப்பட்டது என்றாலும்  அரங்குகள் நிறைந்தன. ஷேக்ஸ்பியர் முதல் அக்கால அரசியல் வரை எல்லா தலைப்புகளிலும் பேசினார்.
       வசீகரிக்கும் பேச்சு நடை இவருடையது. இவரது நடையைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர்.  The Clergy know that I know that they know that they dont know என்றெல்லாம் பேசுவார். உலகம் முழுக்க, ஏன் தமிழ்நாட்டிலும் கூட,  இவரது பேச்சுநடையை அரசியல் தலைவர்கள் பின்பற்றி, புகழ் அடைந்ததுண்டு.

     அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் கலந்துகொண்டார். அதிபர் தேர்தலில் ஜேம்ஸ் பிளேய்ன் என்பவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இல்லினாய்ஸ் மாகாண ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால்,  பைபிளுக்கு எதிரான கருத்துக்களைத் திரும்பப் பெற மறுத்ததால் , அப்பதவி கைநழுவியது. தொடர்ந்து, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் வாதாடினார்.  குற்றவாளிக்கு ஆதரவாக இவர் வாதிடும்போது, நாம் குற்றம் செய்திருக்க மாட்டோமோ என குற்றவாளியே நம்பும்படிக்கு இவரது வாதம் அமைந்திருக்கும். பல வழக்குகளில் வெற்றி பெற்ற இங்கர்சாலின் அப்போதைய சம்பளம் , நாளொன்றுக்கு 250 டாலராம்.!

       இங்கர்சால், தனது காலத்தின் சிந்தனைவாதிகளோடு தொடர்ந்து நட்பில் இருந்தார். வால்ட் விட்மன் இவரது நெருங்கிய நண்பர். 1892ல் விட்மன் இறந்த போது, இவர் ஆற்றிய இரங்கல் உரை இன்றளவும் சிறந்த பேச்சுக்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவரது உரைகள்  அனைத்தும் தொகுக்கப்பட்டு    12 தொகுதிகளாக ட்ரெஸ்டன் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

     அறியாமையின் படைப்பு தான் கடவுள் என்றும், விஞ்ஞானத்தின் முதல் எதிரியும் அவரே என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். கலீலியோவிற்கு எதிராக திருச்சபை செய்த செயல்களை வரலாறு மன்னிக்காது என்றும் பேசினார். ஆனால், மனிதாபிமானத்தை இவர் ஒருபோதும் கைவிடவில்லை. கத்தோலிக்கத்திற்கு எதிராகப் பேசினாலும், கத்தோலிக்கர்களுக்கு எதிராகப் பேச மாட்டேன்  என்று சொன்னபடியே இறுதிவரை இருந்தார். ”பைபிளில் தேவையற்ற பத்திகள் சில  இருப்பதால் மட்டுமே, நான் அதனைப் புறக்கணிக்க மாட்டேன். ஞானத்தின் ஊடாக சில பேதைமை இருப்பதால் , ஞானத்தைக் கைவிடமுடியாதல்லவா!”என்று தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாகவே சொன்னார்.

       ஆனாலும், இன்று அவர் மத வெறுப்பாளராக மட்டுமே முன் நிறுத்தப்படுகிறார். அவரது முற்போக்கு சிந்தனைகள், பேச்சாற்றல், சலியாத உழைப்பு, வாதத்திறன் போன்ற பன்முக ஆளுமைத் தன்மை,  மத வெறுப்பாளர் என்ற ஒற்றைத் திரையால்  மூடப்பட்டிருக்கிறது. திரையைத் திறந்து உள்ள இருப்பதைப் பார்க்கும் முயற்சி நம்மிடம்தான்  இருக்க வேண்டும்.

        கனமான கருத்து, திடமான கொள்கை; கம்பீரக் குரல், பருத்த உடல்;  இவைதான் இங்கர்சால்.   இவர்,  தொடர் அலைச்சல்களால் மாரடைப்பு காரணமாக 1899 ஆம் ஆண்டு தனது 66 ஆம் வயதில் இறந்து போனார். அர்லிங்டன் தேசியக் கல்லறையில் இவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இவர் வாழ்ந்த வீடு, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.  இவரது பேச்சின் மூன்று அசல் ஒலிப்பதிவுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று அவர் பிறந்த நாள்.     சில முரண்பாடுகள் இருப்பதால் மட்டுமே, இங்கர்சால் என்ற ஆளுமையைப் புறந்தள்ளிவிட்டால், அது நமக்கே இழப்பாகும்.

          ஒரு மனிதனைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல், என்றும் தீர்வதில்லை. ஆம், பூட்டிய உள்ளத்தின் புறக்கண்கள் காட்டும் தோற்றம் போலியானது. திறந்த மனதோடு, அகத்தால் ஒருவரை அணுகும் போது மட்டும்தான், அந்த  மனிதனின் அகம் அறிய முடியும்.

Sunday, August 9, 2020

சர்வதேச பூர்வகுடிகள் நாள்


இனம் காப்போம் ..!

ஆகஸ்ட் 9... இன்று!

         சொந்த நிலத்தில் வாழ்ந்தாலும் , தமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் - பூர்வ குடி  மக்களைப் பேணவும், அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் உருவாக்கவும்  ’சர்வதேச பூர்வ குடிகள் தினம்’,  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

             1994 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கூடிய, ஐ.நா.சபை , பூர்வகுடிகளின் கலாச்சாரமும் , பண்பாடும் , அவர்களது பொருளாதார வளர்ச்சியும் பேணப்பட வேண்டும் என்பதைக் குறித்த  தனது  கவலையை வெளிப்படுத்தியது. 49/214 வது தீர்மானத்தின் படி,  இரண்டு  பத்து  ஆண்டுகளுக்கென சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு, இந்நாளில் ஆண்டு தோறும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

           இன்றைய தேதியில், உலகமெங்கும் 90 நாடுகளில் 370 மில்லியன் பூர்வகுடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் 7000 மொழிகளும், 5000 வகையான கலாச்சார வாழ்க்கை முறையும் காணப்படுகின்றன. இந்தியாவில் இவர்கள் 'பழங்குடி மக்கள்'  என அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 700 குழுக்களாக இருக்கும் இம்மக்களின் சிந்தனைகளையும், பண்பாட்டையும் பேணவேண்டியது நமது கடமையாகும்.   

            சொந்த நிலப்பகுதியில் வசித்தாலும்,  நாகரீக வாழ்வில் இணைந்தவர்களை பூர்வகுடிகள்   என அழைப்பதில்லை. மாறாக, பாரம்பரியச் செயல்பாடுகளை விட்டு விடாமல் , இன்றும் அதே மொழி, பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களே பூர்வ குடிகள் என ஐ.நா அமைப்பு வரையறை செய்துள்ளது.

         கடல் சாகசங்கள், நாடு கண்டுபிடிக்கும் வேட்கை, ஏகாதிபத்திய எண்ணம் இவைகளின் காரணமாக எத்தனை மனித இனங்களை நாம் இழந்திருக்கிறோம்?

          ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் இருக்கும் டாஸ்மேனியாவில் 1828 ஆம் ஆண்டு, ஆர்தர் என்னும் வெள்ளை இன  கவர்னர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அது, “கண்ணில் படும் எந்த ஒரு  கறுப்பின மனிதனையும், வெள்ளையர்கள் தங்கள்  விருப்பப்படி சுட்டுக் கொல்லலாம்”, என்பதாகும்..
       
       ஒரு கறுப்பனைக் கொன்றால் 3 பவுண்ட்,  குழந்தையைக் கொன்றால்  1 பவுண்ட் என பரிசுகளை  அறிவித்தான் ஆர்தர்.  Black Catching என்ற பெயரில் இது பொழுதுபோக்கு விளையாட்டாக மாறிப் போனது. துப்பாக்கியையே பார்த்திராத அப்பழங்குடிகள், ஓடி ஓடி ஒளிவதும், பின் அகப்பட்டுச் சாவதும் வாடிக்கையானது.   1869  ல் யாவரும் அழிக்கப்பட்டு , மூவர் மட்டுமே மிஞ்சினர். இருவர் எலும்பும், தோலுமாய் இறந்துவிட, அவர்களின் உடல் பாகங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக கூறு போடப்பட்டதை மூன்றாமவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆம்,   அந்த இனத்தின் எஞ்சிய  கடைசிப் பெண் 'ட்ரூகானினி' மட்டும் பதற்றத்தோடு மூலையில் முடங்கிக்கிடந்தாள். அடைத்து வைக்கப்பட்டிருந்த தனியறையில் ஏதேதோ பிதற்றினாள்.

            ஆஸ்திரேலியப் பழங்குடிவாசி ஒருவரைக் கொண்டு, அவள் என்ன பேசினாள் என்பதை அக்கறையோடு புரிந்து கொள்ள முயற்சி செய்தது வெள்ளைய அரசு.  ”எங்கள் மரபுப்படி, என் உடலை கடலில் வீசி எறிந்து விடுங்கள், என் உடலைப் பிய்த்துக் கூறு போட்டு விடாதீர்கள்”, என்ற அவளின் கடைசி  மன்றாடல் திமிரோடு மறுக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு, அவள் இறந்து போனாள். டாஸ்மேனியா மியூசியத்தில், ’டாஸ்மேனியாவின் கடைசி பழங்குடிப் பெண்’ என்ற வாசகத்தோடு அவளது  எலும்புகூடு வைக்கப்பட்டது. பிறகு,  1976ஆம் ஆண்டு தான், சமூக ஆர்வலர்களின் போராட்டம் காரணமாக, ட்ரூகானினியின் இறுதி ஆசை , சரியாக நூறாண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அவளது எலும்புகள் கடலில் வீசப்பட்டன. ஆதிக்க குணம் கொண்ட  மனிதர்களின்,  குரூர எண்ணத்திற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

    அமெரிக்க நீக்ரோக்கள் பட்ட துயரத்தையும், இங்கா இன மக்கள் அடைந்த இன்னல்களையும்  நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் காலத்தில்,  நமது அண்டை தேசமான இலங்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்தப்பட்டதை நாம் எப்படி மறக்க முடியும்?. நண்பர்களே, எவரும்  இவற்றை எல்லாம் வரலாற்றில் இருந்து மறைத்து விடவும் முடியாது.

          எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை விதமான கலாச்சாரங்கள்., மனிதனின் அதிகாரப் பசிக்கு வேடையாடப்பட்ட  நாகரீகங்கள்தான் எத்தனை எத்தனை? அதிலும்,  இனப்படுகொலை என்பது கருவறுக்கும் ஈனச்செயல் அல்லவா?

          இனியாவது -  பூர்வ குடிகளின் பண்பாட்டை அறிவோம்; அவர்களின் வாழ்வைப் போற்றுவோம்; மானுட மாண்பைக்  காப்பாற்றிக் கொள்வோம்.
         
         மற்றொரு இனத்தை வேட்டையாடி, தன் பசியைப் போக்கிக்  கொள்ளும் மிருகங்கள்,   தன் இனத்தை ஒருபோதும் தானே அழிப்பதில்லை.   ஆனால்,  தன் இனத்தைத்  தானே அழிக்கும் அபூர்வ மிருகம் ஒன்றே ஒன்றுதான். அது  மனிதன் என்னும் 'அசிங்க மிருகம்' தான்!   

        இறுதியாக, ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இன அழிப்பு செய்பவர்களை, வரலாறு ஒருபோதும் மறப்பதில்லை; மன்னிப்பதும் இல்லை.

Thursday, August 6, 2020

சமாதானக் கொக்குகளும் ஹிபாகுஷாக்களும்.!


ஹிரோஷிமா நினைவு தினம்.! 1945- ஆகஸ்ட் 6- காலை 8.15 மணி, ஜப்பான்- ஹிரோஷிமா நகரத்தின் உச்சியில் பறந்துகொண்டிருந்த விமானம் 'எனோலா கே', அமெரிக்காவிலிருந்து 2740 கி.மீ. பயணம் செய்திருந்தது. பி-29 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் விமானி பால்.டிப்பெட் , தனக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் படி, 'ஷிமா என்ற மருத்துவமனையைக்' குறிவைத்து, ’லிட்டில் பாய்‘ (Little Boy) எனப்பெயர் கொண்ட, யுரேனியம்-235 அணுகுண்டை வீசினார். நாற்பத்து மூன்றே விநாடிகளில் நவீன அறிவியலின் கோர முகம், ஹிரோஷிமா நகரில் பற்றி எரிந்த தீயில் தெளிவாகத் தெரிந்தது. 1.3 கி.மீ தூரத்திற்கு, தீயின் நாவுகள் கோர நடனம் ஆடின். அதில், சுமார் 90,000 பேர் சிக்கி, வாதையுற்று கருகிப் போயினர். அமெரிக்காவின் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மறைவுக்குப் பின், துணை அதிபர் ட்ரூமன், அப்போது அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு, போரில் ஜெர்மனி சரண் அடைந்திருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் நேரம் அது. ஆனாலும், அமெரிக்காவின் எண்ணத்தில் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். 'பியர்ல் ஹார்பர்' (Pearl Harbour) துறைமுகத் தாக்குதலுக்கு (1941ல் நடந்தது), 'பதிலடி' என்ற பெயரில், தனது யுரேனியம் அணுகுண்டை ஹிரோஷிமாவில் சோதித்துப் பார்த்துவிட்டது அமெரிக்கா. ஜப்பானையும் பழிதீர்த்துக் கொண்டது. ஒரே நேரத்தில் அணுகுண்டு சோதனையையும், பழிதீர்க்கும் படலத்தையும் - Little Boy சரியாகவே செய்து முடித்திருந்தான். மீண்டும், ஆகஸ்ட் 9 அன்று, 'நாகசாகி' நகரத்தில், புளுட்டோனியம் ரக (இது ‘Fat man’) அணுகுண்டை வீசிய அமெரிக்கா, தனது சக்தியை எதிரணி நாடுகளுக்குப் புரிய வைத்துவிட்டது. நாகசாகியில் மட்டும் 40,000 பேர் அன்றே இறந்து போயினர். ஜப்பான் மன்னர், தனது நாட்டு மக்களிடம் கண்ணீர் நிறைந்த விழிகளுடன் மன்னிப்புக் கோரிய பின்னர், போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார். நேரடியான இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிவுக்கு வந்தது. ஆனால், போரின் பாதிப்பிலிருந்து, அந்த இரு நகர மக்களும் இன்று வரை முழுமையாக மீண்டு வரவில்லை. வேதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆம், அணுக்கரு பிளவு முறையில் உருவாக்கப்பட்ட இந்த இரு அணுகுண்டுகளின் கதிர்வீச்சு, இன்றும் தொடர்கிறது. அதன் பாதிப்புகளும் தொடர்கின்றன. யுரேனியம் 235 அணுவின் அரை ஆயுள் காலம், 70 கோடி ஆண்டுகள் என்பதை ஜப்பானியர்களும், உலக மக்களும் அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது, யுரேனியம் குண்டுகளை விட, 6000 மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டுகள் சில நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால், அணு ஆயுதத்தைத் தாங்கும் சக்திதான் , இந்த பூமிப்பந்துக்கு இல்லை! ஹிரோஷிமா -நாகசாகி அணுகுண்டு வெடிப்பில், கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்கள் ’ஹிபாகுஷா’ என்று அழைக்கப்படுகின்றனர். கதிவீச்சின் காரணமாக , உடல் குறைபாடுகள், மூளை வளர்ச்சியின்மை, புற்று நோய் என பலவகையான பாதிப்புகள் இவர்களைத் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, இவர்களுடன் ஏனைய மக்கள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. ஹிபாகுஷாக்கள் ஒருவகையில் இன்று வரை ’ஒதுக்கப்பட்ட’ மக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பிய சிறுமி சதாகோ சசாகிக்கு, 12வது வயதில், லுக்கோமியா எனப்படும் புற்று நோய் வருகிறது. அணுகுண்டு கதிர்வீச்சே இதற்குக் காரணம் என்று அறிந்தாலும், காப்பாற்ற வழியில்லை அல்லவா?. மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் சசாகி. மரண பயம் அவளை உண்ணவோ, உறங்கவோ அனுமதிக்கவில்லை. நிம்மதி இழந்து - வாடத் தொடங்கும் மலர் போல, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தாள். அப்போது, அவளைச் சந்திக்க வந்த தோழி சிசுகோ, ”காகிதத்தில் 1000 கொக்குகள் (ஓரிகாமி கலை) செய்து விட்டால் , நோய் தீர்ந்து, நீ பிழைத்துவிடுவாய், பயப்படாதே..!” என ஆறுதல் சொல்கிறாள். இந்தச் சொற்களில் நம்பிக்கை கொண்ட சசாகியின் விரல்கள், கொக்குகள் செய்யத் தொடங்குகின்றன. கொக்குகள் செய்து , அதன் வழியே உயிர் பிழைத்துவிடலாம் என்று உறுதியாக நம்பிய சசாகி, காகிதங்கள், மருத்துவச் சீட்டுகள் என எது கிடைத்தாலும் கொக்குகளாகவே செய்து கொண்டிருந்தாள். எல்லா நேரங்களிலும் நம்பிக்கை நிஜமாகி விடுவதில்லை அல்லவா? ஒருநாள் 644 கொக்குகள் செய்து முடித்த நிலையில், இறந்து போகிறாள் சசாகி. அப்போது, உடன் படித்த பள்ளித் தோழிகள், மீதம் செய்யவேண்டிய 356 காகிதக் கொக்குகளைச் செய்து, அவற்றைக் கைகளில் ஏந்தியபடியே, சசாகியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார்கள். ஓர் அழகு தேவதை, அதிகாரத்தின் பசிக்கு இரையான துயரம், இந்த பூமியில் இனி யாருக்கும் வரவே கூடாது என்று சொல்லித்தான், காகிதக் கொக்குகள் வானில் பறந்தன. சசாகி போன்ற குழந்தைகளின் மௌன அழுகையின் முன் , அமெரிக்காவும், உலகமும் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றன. ஹிரோஷிமாவில் உள்ள நினைவகம் முன்பும், சசாகியின் சிலை முன்பும் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. சமாதான உறுதிமொழியை அந்த நகர மேயர் வாசிப்பார். ஹிபாகுஷாக்கள் தங்களது உறவுகளை நினைவு கொள்வர். அப்போது 1000 காகிதக் கொக்குகள் புடை சூழ , சசாகி என்னும் தேவதையும், வானிலிருந்தபடியே பூமியின் அமைதிக்காக வேண்டிக் கொண்டிருப்பாள். அதிகார வேட்கையை மனித மனதிலிருந்து, எப்படிப் பிரிப்பது? சக மனிதனை நேசிக்காத விஞ்ஞானம் தவறென்று யார் சொல்வது? ஏனைய விலங்குகள் இவ்வளவு மோசமாய் இருப்பதில்லை. மனிதன் மட்டும் தான் இப்படி இருக்கிறான். தேசத்தின் எல்லைகள் வெறும் கற்பனைக் கோடுகள்தான். அவை வரைபடத்தில் மட்டும் இருக்கட்டும். மனதிற்குள் எல்லைகள் எந்த வடிவத்திலும் வர வேண்டாம். பூமிப்பந்து அன்பிலே நிறையட்டும் !

Tuesday, August 4, 2020

அன்பின் துளி


அன்பின் துளி! 

            இரண்டு வாரங்களுக்கு முன்பு (15.07.2020) , வளநாட்டில் இருந்து மணப்பாறைக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, மணப்பாறையில் இருக்கும் ஒரு கொரியர் அலுவலகத்தில் இருந்து, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, பேசத் தொடங்கினேன். மறுமுனையில் பேசிய தம்பி, முதலில் எனது பெயரையும் முகவரியையும் உறுதி செய்து கொண்டார். பிறகு எனக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது என்ற தகவலையும் சொன்னார். ஆனால்,   கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருப்பதால், வீட்டிற்கு வந்து பார்சலைத் தர முடியாது என்றும், அலுவலகத்திற்கு வந்து, நேரில்  பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
              எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது. உடனே, ‘அது என்ன பார்சல் தம்பி? எந்த முகவரியில் இருந்து வந்திருக்கிறது?’ என்று கேட்டேன். ‘புத்தகம் மாதிரி இருக்குது சார்,  ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்திருக்கு’ என்று அந்தத் தம்பி பதில் சொன்னார்.  நன்றி சொல்லி, அலை பேசியைத் துண்டித்த பிறகு, எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. இந்தக் காலத்தில், புத்தகம் வேண்டி, எந்தப் பதிப்பகத்திற்கும் நான் பணம் அனுப்பவில்லை. அதுவும் ஒட்டன்சத்திரத்தில் பதிப்பகம் ஏதும் இருப்பதாகவும் நான் அறிந்திருக்கவில்லை. அப்படி என்றால், இது என்ன புத்தகமாக இருக்கும், யார் இதை அனுப்பியிருப்பார்கள் என்ற சிந்தனையிலேயே எனது வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வீட்டிற்குக் கூட போகாமல், நேரே கொரியர் அலுவலகம் சென்றேன்.  கையெழுத்து போட்டுவிட்டு, பார்சலை வாங்கிக் கொண்டேன்.
              பார்சல் அனுப்பப்பட்ட முகவரியைப் பார்த்தேன். ஒட்டன்சத்திரம் கண்ணன் என்று இருந்தது.  ஒரு கணம் மகிழ்ச்சியில் உறைந்து நின்றேன். கொரியர் அலுவலக வாசலிலேயே பார்சலைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே இரண்டு புத்தகங்கள் இருந்தன. எனதுள்ளம் பேரானந்தத்தில் நிரம்பி வழிந்தது. என்னையும் மீறி, மகிழ்ச்சியில் நானே புன்னகைத்துக் கொண்டேன். கைகளைச் சுத்தம் செய்து கொண்ட பிறகு, புத்தகங்களை வண்டியின் ’முன் உறைக்குள்’ வைத்தேன். அலைபேசியை எடுக்க கைகள் எத்தனித்த போது, மிகச் சரியாக அலைபேசி அடித்தது.  ஆம், புத்தகப் பார்சலை அனுப்பிய ஒட்டன்சத்திரம் கண்ணன் தான் பேசினார். எனக்கு உறவினர் அவர். ஆனால், இத்தனை காலம் வரை, நான் அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததில்லை.  முகநூலில் மட்டும் நெருக்கத்தில் இருந்தோம்.
                 ‘நல்லா இருக்கீங்களா? குழந்தைகள் நலமா?’ எனக் கேட்டு விட்டு, ‘ஒரு பார்சல் கொரியர்ல அனுப்பி இருக்கேன்..’ எனச் சொன்ன போது, நான் குறுக்கிட்டு, ‘நான் பார்சலை வாங்கிவிட்டேன், எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, என்ன சொல்றது எனத் தெரியல ’ என்று சொல்லி எனது ஆனந்தத்தை  அவருக்குக் கடத்த முயற்சித்தேன். அவர் நிதானமாக அழகாகப் பேசினார்.
              கடந்த ஏப்ரல் மாதம், எஸ்.எஸ்.கரையாளர் எழுதிய, ’1941 – திருச்சி சிறை’ என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். (http://ssvalanadu.blogspot.com/2020/04/1941.html). மிக முக்கியமான கட்டுரை அது என்று நண்பர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். அப்போது, கண்ணன் அவர்கள், ’இதே பாணியிலான நூல் இன்னொன்று இருக்கிறது. சி.ஏ.பாலன் என்பவர் எழுதிய ‘தூக்கு மர நிழலில்’  என்ற அந்த புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னவுடன், ’அதனை என்.சி.பி.எச் பதிப்பகத்தில் தான் வாங்கினேன், நீங்களும் அவசியம் படியுங்கள், என்னை உலுக்கிய புத்தகம் அது’ என்று சொல்லி இருந்தார். இவற்றை எல்லாம், முகநூல் வழியாவே பரிமாறிக் கொண்டோம், பேசிக் கொண்டதில்லை. உண்மையில், அந்தத் தகவல்களைக் கூட, நான் மறந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
              ’கடந்த ஒரு மாதமாகவே நான்  அந்தப் புத்தகத்தை உங்களுக்காக  தேடிக் கொண்டுதான் இருந்தேன். கிடைக்கவே இல்லை. கடந்த வாரம்,  நூலுலகம் என்ற இணைய வழி விற்பனைத் தளத்தில் ஒரே ஒரு பிரதி மட்டும் இருந்தது. உடனே அதனை ஆர்டர் செய்து விட்டேன். முதலில், உங்கள் முகவரிக்கே அதனை நேரடியாக அனுப்ப எண்ணினேன். ஆனால், புத்தகத்தை  மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டதால்,  ஒட்டன் சத்திரத்திற்கே அதனைத் தருவித்தேன். ஒரே நாளில் அதனை மீண்டும் வாசித்து முடித்தேன்.  நீங்கள் இதனை வாசித்து, நூல் அறிமுகக் குறிப்பு ஒன்று எழுதுங்கள். கூடவே, எஸ்.ரா எழுதிய, ’பெயரற்ற நட்சத்திரங்கள்’ என்ற நூலையும் அனுப்பியிருக்கிறேன்’ என்று சொன்னார். தெளிந்த நீரோடை போல அவரது பேச்சு இருந்தது.
                நான் நெகிழ்ந்து நின்றேன். முன்பெல்லாம், எனது பிறந்த நாளின்  போது, சில பல புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும். நானும், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இன்று என்னென்ன புத்தகங்கள் பரிசாக வரும், யார் யார் தரப் போகிறார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.  ஆனால்,  கால நதியில் - வயதுகள்  நுரையாய்க் கடந்து விட, புத்தகங்களின் வரத்து குறைந்து விடவில்லை - சுத்தமாக நின்று விட்டது. மனதிற்குள் எதிர்பார்ப்பும் தோன்றுவதில்லை. புத்தகங்களைத் தொடர்ச்சியாக நான் வாங்கிக் கொண்டிருந்தாலும், அன்பால் பிறர்வழியாக வரும் நூல்களுக்கு எப்போதும் ஒரு கூடுதல் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.  
                 புத்தகங்கள் வாங்குவதையே ’ஒரு மாதிரியாகப்’ பார்க்கும் சூழலில், புத்தகத்தை வாங்கி, அதனை இன்னொருவருக்கு வாசிக்க அனுப்பும் உறவினை என்ன பெயர் சொல்லி அழைப்பது?  அன்பு பெருகி நிற்கும் போது, எந்தப் பெயரிலும் அவர்களை அழைக்கலாம் தானே!  நான்,  ’அன்பு நிறை கண்ணன்’ என்றே அவரை உள்ளத்தில் பதிந்து கொள்கிறேன்.
            மறுநாளும் அலைபேசியில் அழைத்து, ‘வாசித்து விட்டீர்களா? புத்தகம் எப்படி இருந்தது?’ என நீண்ட நேரம் உரையாடினார். ஆனந்த விகடன், நடமாடும் புத்தக விற்பனை நிலையங்கள், வார, மாத  இதழ்களில் வெளிவரும் தொடர் கட்டுரைகள் என பல தளங்களில் அவரது உரையாடல் தொடர்ந்தது.   வாசிப்பின் மீது, தீராத காதல் உள்ள மனிதர்களால் மட்டும் தான் இது சாத்தியம்.  பார்சலில் அவர் அனுப்பியது புத்தகங்களை மட்டும் அல்ல, அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்தே உறையிட்டிருந்தார்.  முற்றடைப்பு காலம் என்றாலும், அன்பை அடைக்குந்தாழ் எங்கும், எப்போதும் இருக்க முடியாது அல்லவா? 
                நண்பர்களே, நான் இங்கே இருக்கிறேன், அவரோ ஒட்டன்சத்திரத்தில் இருக்கிறார், நானும் அவரும் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையில் மிகச் சொற்பமான முறைகளே சந்தித்து இருக்கிறோம். ஆயினும், அவர் காட்டும் அன்புக்கு அடிப்படைக் காரணம், ’புத்தகங்கள்’ அன்றி, வேறு  என்னவாக இருக்கக் கூடும்? ஆம், நானும் அவரும் ’புத்தகங்களின் ராஜ்ஜியத்தில்’ அருகருகே  ஒன்றாய் வகிக்கும் இரண்டு குடிமகன்கள்.              
            மனிதர்களை எந்த வகையிலும் பொதுமைப் படுத்தி விட முடியாது. மானுடத்தின் மீது சலிப்பும் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில்,     அவநம்பிக்கையும் மனத் தவிப்பும் வாழ்வினைப் பாலையாக்கும் போதெல்லாம், அன்பின் துளி -  இத்தகைய மனிதர்களின் வழியே, எங்கிருந்தோ வந்து, நமது வாழ்வினை துளிர்விடச் செய்கிறது. 
          
        


         
             

Sunday, August 2, 2020

நடை என்னும் தியானம்

   
     
கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி!”   

                    மனச்சோர்வும், எதிர்பாராமைகளும் நம்மைச் சூழும் நேரத்தில் எல்லாம்,   விரும்பிய புத்தகங்களும், நீண்ட தூரம் செல்லும் தனித்த நடையும் தான் உண்மையான ஆறுதல் தரும் மாமருந்து என்பதே எனது அனுபவம். 

    நமது கவலைகள், எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு செய்தியாகவே இருக்கின்றன. அது அவர்கள் வழியாக, எல்லாரிடத்தும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தனது தேவைக்காகவும், சுய ஆறுதலுக்காகவும் அவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள். நமது உள மீட்சி என்பது, ஒரு மில்லி மீட்டர் அளவுகூட மற்றவர்களால் நிகழாது என்பது தான் உண்மை. ஆனால், மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் நமது மனதை மயிலிறகு கொண்டு வருடுகின்றன. தனித்துச் செல்லும் நீண்ட நடை, மனதையும் உடலையும் இலகுவாக்குகின்றது. பல்வேறு உலகியல்  நெருக்கடிகளை மறப்பதற்கும், அவற்றைக் கடப்பதற்கும் இதைவிட சிறந்த உபாயம் ஏதும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படித்தான் நான் கடந்தும் வந்திருக்கிறேன்.

         இந்த முற்றடைப்புக் காலம் எப்போதையும் விட அதிகமான நெருக்கடிகளையே தந்திருக்கிறது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகள், உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்கள் என யாவும் ஒரு சேரச் சேர்ந்து, பல விதங்களில் சிக்கல்களை உருவாக்கின. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மனம் நிலையிழந்து தவித்துக் கொண்டிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றில் இருந்த ஒரு வாசகம், என் நினைவுக்கு வந்தது. ’கால்களால் சிந்திக்கிறேன்’ என்ற அந்தக் கட்டுரையில் வரும்,  ’கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல் படி’ என்ற வாசகத்தை, நான் எப்படி மறக்க முடியும்?

          மே மாதம் ஒன்றாம் தேதி முதல் அதிகாலையில் தனித்த நடை செல்வதென்று முடிவு செய்தேன். அதன்படி,  தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, ஐந்து மணி வரை மனதுக்குப் பிடித்தமான சில புத்தகங்களை வாசித்தேன். பெரும்பாலும் ஏற்கெனவே வாசித்த புத்தகங்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாரதியார் கவிதைகள்,  ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’, ‘புறப்பாடு’, ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’,  எஸ்.ரா எழுதிய ’தேசாந்திரி’, சுந்தர ராமசாமியின் ‘மனக்குகை ஓவியங்கள்’ கட்டுரைத் தொகுப்பு.

          தினமும் சரியாக ஐந்து மணிக்கு நடக்கத் தொடங்குவேன். பாரதியாரின் 50 பாடல்கள் கொண்ட இசைத் தொகுப்பினை மெலிதான சத்தத்தில் ஒலிக்க விடுவேன். அதுதான் எனது வழித்துணை.  அந்த நேரத்தில், தெருக்கள் பேரமைதியில்  உறங்கிக் கொண்டிருக்கும். பால்காரரின் மணிச் சத்தம் கேட்டு, ஒவ்வொருவர் வீட்டிலும்  முதலில் மின் விளக்குகள் கண் விழிப்பதைக் காணலாம். பிறகு அடுத்த அரை மணி நேரத்திற்குள்  வீட்டுப் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட, தெருக்களில் மெல்லிய பரபரப்பு பளிச்செனத் தெரியும். அதற்குள் நான் வீடுகளைக் கடந்து, ஏதோ ஒரு  தார்ச்சலையில்  தனித்துச் சென்று கொண்டிருப்பேன். கூட்டிலிருந்து கண் விழித்த பறவைகள் , அதிகாலை வானத்தில் சோம்பல் முறித்து, பறந்து கொண்டிருப்பதை அப்போது பார்க்கலாம். ஏதோ ஓர் ஒழுங்குடன், கூட்டம் கூட்டமாக அவை பறப்பதைப் பார்க்கும் போது, சொர்க்கம் எது என்பது நமக்குத் தெரிய வரும்.

              பெரும்பாலும் வயதின் அடிப்படையில் குழுவாகச் சேர்ந்து,  நடைப் பயிற்சி செல்லும் மனிதர்களை வழியெங்கும் காண முடிந்தது.  அறிமுகம் இல்லாத அந்த மனிதர்களைப் பார்த்து, முதல் நாள், நானே வணக்கம் சொன்னேன். நண்பர்கள் ஆனார்கள்.  மறுநாள் முதல் அந்த நண்பர்களுக்கு வணக்கம் சொல்வது எனது வழக்கமானது. ஆனால், ஒருபோதும் அவர்களுடன்  பேசுவதில்லை. மெல்லிய புன்னகையோடு கடந்து விடுவேன்.  

           அரிசி நிரம்பிய மஞ்சள் பைகளை, கைகளில் பிடித்துக் கொண்டு வரும் சிலர், அவற்றை மயில்களுக்கு உணவாகப் போடுவார்கள். முந்நூறுக்கும் குறைவில்லாத மயில்கள் ஆறு மணிக்கே காலை உணவு எடுத்துக் கொள்வதை, அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இது பேரானந்தத்தின் ஒரு துளி அல்லவா? 

     ஒவ்வொரு நாளும் ஒரு பாதையைத் தேர்வு செய்து நடந்தேன்.  எந்தத் திசையில் ஒற்றையடிப் பாதை பிரிந்தாலும் அதனைப் பின் தொடர்ந்தேன். Robert Frost  ன்  ‘The Road not Taken’ கவிதை வரிகள் எனக்கு தினமும் நினைவுக்கு வந்தன. ஆனால், தேர்வு செய்யாத பாதை குறித்த கவலை எனக்கு வருவதில்லை. ஏனெனில், அடுத்த நாள் அதிலும் நடப்பேன். இப்படித்தான் மே மாதம் முழுவதும் நடந்தேன்.    

          மே மாதம் 31 ஆம் தேதி இரவு, முகநூலில் கவிஞர் மகுடேசுவரன் ’நான்கு இலட்சம் காலடிகள்’ என்று  ஒரு பதிவு எழுதியிருந்தார். எழுத்தாளர்  ஜெயமோகனின் ’பத்து இலட்சம் காலடிகள்’ என்ற சிறுகதை குறித்து தீவிரமான விவாதம் முகநூலில் நடந்து கொண்டிருந்த சமயம் அது. ஒளசேப்பச்சன் என்ற புலனாய்வு அதிகாரியின் வழியே, கேரளத்தின் ‘மாப்பிள்ளை முஸ்லீம்களின்’ கப்பல் கட்டுமானம் பற்றியும், அவர்களின் பண்பாட்டு வரலாறு பற்றியும் சுவையாக எழுதப்பட்ட சிறுகதை அது. அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.  ஆனால், கவிஞர் மகுடேசுவரன் எழுதியது நடைப் பயிற்சியைப் பற்றிய கட்டுரை.

              ஒரு நாளைக்கு சராசரியாக 9.6 கி.மீ. வீதம் (மே மாதம் முழுதும் மொத்தமாக 297 கி.மீ) தினமும் நடந்திருக்கிறார். அதாவது, 402122 காலடிகள். கணக்கிடுவதற்கு அலைபேசியில் உள்ள செயலி ஒன்றினைப் பயன்படுத்தி இருந்தார். அந்தக் கட்டுரை மிகுந்த உற்சாகத்தை எனக்குள் ஏற்படுத்தியது. உடல் எடையைக் குறைப்பதல்ல நோக்கம். மாறாக, சுறுசுறுப்பையும், நோய் எதிர்ப்பாற்றலையும் பெறுவதே நடைப்பயிற்சியின் நோக்கம் என்பதை  அனுபவத்தோடு விளக்கியிருந்தார்.

            நானும் அதே 4 இலட்சம் காலடிகள் என்ற இலக்கை வைத்தேன். ஒரு நாளில் சராசரியாக இரண்டு மணி நேரம் நடந்தால், இந்த இலக்கை எட்ட முடியும் என்பதால் அதன்படி நடக்க ஆரம்பித்தேன். ஜூன்  1 முதல் 30 வரை ஒருநாள் கூட, விட்டு விடாமல் தினமும் நடந்தேன். எனது பிரச்சனைகளோடு, கொரோனா தொற்றின் வேகமும் சேர்ந்து உண்டாக்கிய பதற்றங்கள் யாவும், எனது நடையில் மறைந்து போயின.  இலக்கு இருந்ததால், பயணம் திட்டமிட்டபடி தொடர்ந்தது.  ஜூன் மாதம் இறுதி நாளன்று, இலக்கினை     எளிதாகக் கடந்திருந்தேன். Magudeswaran Govindarajan  கவிஞர் மகுடேசுவரனுக்கு ’நன்றி’  என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்., இப்போது சத்தமாக!

         ஜூன் 30 அன்று முகநூலில் மீண்டும் ஒரு பதிவு.  இம்மாதம்  மொத்தமாக 5 இலட்சம் காலடிகள் நடந்ததாக, செய்தி ஒன்றினைப் போட்டிருந்தார் கவிஞர் மகுடேசுவரன். எனக்கும் ஆவல் கூடியது.  அதனையே எனது ஜூலை மாத இலக்காக, நான் முடிவு செய்து கொண்டேன்.  அதாவது தினமும் 2மணி 45 நிமிடங்களுக்குக் குறைவில்லாமல் நடக்க வேண்டும். சரி என முடிவு செய்து, காலையும் மாலையுமாக இரு வேளைகளிலும் தீவிரமாக நடக்கத் தொடங்கினேன்.

      அலைபேசியில் உள்ள செயலியை எப்போதும் அணைத்தே வைத்திருக்க வேண்டும்; நடைப்பயிற்சி செய்யும் நேரங்களில் மட்டுமே அதனை இயக்க வேண்டும்; காலடிகளைக் கணக்கிடும் உணர் (Sensitivity) பகுதியில் , High என்பதைத் தேர்வு செய்யக் கூடாது.  Low என்பதையே பயன்படுத்த வேண்டும் என நான் முடிவு செய்திருந்ததால், சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தை எனது செயலி, 750-800 மீட்டர் என்றே காட்டியது. எனவே, நடையின் தூரம் அதிகமாகுமே தவிர நிச்சயம் குறையாது என்பதை உறுதி செய்து கொண்டேன்.  

       நடக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் பதிந்து போனது. அதிகாலை நான்கு மணிக்கு எழும் பழக்கம் உறுதியானது. பாயக் காத்திருக்கும் புலியைப் போல, அதிகாலையில் நடப்பதற்காகவே தூக்கத்திலும் காத்திருக்கத் தொடங்கினேன்.   எனது வாழ்நாளின் எந்த ஒரு தருணத்திலும், இப்படி தொடர்ச்சியாக நடைப் பயிற்சி மேற்கொண்டதே இல்லை.  (கிரிக்கெட் மற்றும் கைப்பந்து ஆட்டம் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் நான்  தீவிரமாகக் கலந்து கொண்டதும் இல்லை.!).

            நேற்று, (ஜூலை 31) காலை நடையின் போதே, 5 இலட்சம் காலடிகள் என்ற இலக்கினை எட்டினேன். (மொத்தம் 5,01,647 காலடிகள்).  அலைபேசியில் உள்ள கணக்குப்படி, ஜூலை மாதத்தில்  மட்டும் 361.17கி.மீ. தூரம் நடந்திருக்கிறேன். செயலியில் வரும் பிழையைத் தவிர்த்துப் பார்த்தால், 452 கி.மீ. தூரம் நிச்சயம் வரும். (அலைபேசியில் 800மீ என்பது உண்மையில் 1 கி.மீ!). கூடவே, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பொய்கைமலை ஏறி இறங்கினோம். சில சமயம் இடைப்பட்ட நாள்களிலும் மலை ஏறுவதுண்டு. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக மலை ஏறிய போது சற்று சிரமமாகத்தான் இருந்தது. அடுத்தடுத்த முறை மலையேறும் போது, மனமும் உடலும் நன்றாக ஒத்துழைத்தது.

                 இந்த மாதத்தில் அவ்வப்போது உடல் களைப்பு ஏற்பட்டதும். தூக்க உணர்வு அதிகமாகத் தோன்றியதும் உண்மை தான். ஆனால், நடக்க ஆரம்பிக்கும் போது, இவை யாவும் மறைந்து, கரை மீறும் உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது.  ஜூலை மாதத்து நடைப்பயிற்சியை, எனக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றியவர்கள் வழக்குரைஞர் தமிழ்மணியும், சகோதரர் மிகாவேலும் (Mihavel A Mihavel A Mihavel) . தினமும் காலை நேரத்தில் இவர்களோடு இணைந்துதான் சராசரியாக நாளொன்றுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தேன். நடக்கும் தூரம் முடியும் வரைக்கும், நாங்கள் பெரும்பாலும் பேசிக்கொள்வதில்லை. நடைதான் முதன்மையாக இருந்தது.

           இவர்களோடு இணைந்து நடந்தது, பயன் தருவதாக அமைந்தது என்று ஏன் சொன்னேன் தெரியுமா?   சாலையின் ஓரத்திலும், மலையிலும் கண்ணில் பட்ட ஒவ்வொரு செடியையும், கொடியையும், மரத்தையும், பறவையையும் ஆர்வத்தோடு சுட்டிக் காட்டினார்கள்.  அவற்றின் பயன் மதிப்பினைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். குறிப்பாக, வழக்குரைஞர் தமிழ்மணி (Tamilmani Arumugam) களத்தில் இறங்குவார். ஆம், வேலிகளில் இறங்கி, அவற்றைப் பறித்து மேலேறுவார். அதன் பயன், இலை அமைப்பு, தன்மை, பயன்படுத்தும் விதம் என தெளிவாகச் சொல்லுவார். முக்கியமாக, தெரியாததைத் தெரியாது என்றே சொல்லுவார். அலைபேசியைக் கொண்டு, அழகு அழகாக புகைப்படங்களை எடுத்து அசத்துவார்.

         பெரும்பாலான நாள்களில், நடை முடிந்து திரும்பி வரும்போது ஏதாவது ஒரு பொருள் கையில் இருக்கும். பிரண்டை, கோவைக்காய், முடக்கறுத்தான், குறிஞ்சாக் கீரை, வேலிப் பருத்தி என நாங்கள் எடுத்துச் செல்வதை பார்த்த ஏனைய நடையாளர்கள், எங்களிடம் விசாரித்துவிட்டு, அவர்களும் எடுத்துச் செல்லத் தொடங்கினர். வெளிர் ஊதா நிறப் பூக்களோடு, காய்த்துக் கிடந்த சுண்டைக்காயை பறித்து வந்த ஒரு  நாள் மிகவும் அழகானது. இப்படியாக, நாங்கள் நடக்கும் பகுதி சஞ்சீவினி மலையாகவே மாறிப் போனது.

             மாலை நடையை வழக்கம் போல, நான் தனியாகவே மேற்கொண்டேன். மாலைச் சூரியன் சட்டென மறைந்து, திடீரெனெ இருள் கவியும் போது,  அந்தி வானத்தின் அழகை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அனுபவிக்கத்தான் வேண்டும்.

          ’வால்டன்’ குளக்கரையில் தங்கி, தினமும் பத்து மைல்களுக்கு மேல் நடந்து, இயற்கையை அவதானித்த தோரூ போல இயற்கை பற்றிய முழுமையான ஞானம் கை வரப் பெறவில்லை. ஆனாலும் முடிந்த மட்டும் இயற்கையைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.  என்னைப் பொறுத்த வரை, நான் நடப்பது என்பது உடல் எடையைக் குறைப்பதற்காக அல்ல, (அதற்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம்!!) மாறாக மனத்திற்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காக; காணும் காட்சிகளில் இருந்து கற்றுக் கொள்வதற்காக; வானம் போல விசாலம் அடைவதற்காக.  


         பலனை எதிர்பாராமல், ஈடுபாட்டுடன் நடந்து கொண்டே இருங்கள். ஏனெனில், அதிகாலையில் நடப்பவர்கள் பேறுபெற்றவர்கள்!





Monday, July 6, 2020

வற்றா நதி - நூல் அறிமுகம்.


வற்றா நதி -  கார்த்திக் புகழேந்தி.             

நூல் அறிமுகம்.

                                                       (1)

              முன்பெல்லாம் கிராமங்களில் ,  ரேஷன் அட்டையில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்களாக, எல்லா வீடுகளிலும்  மாடுகள் இருக்கும். அங்கே, குடும்பத் தலைவனுக்கு இணையான மதிப்பு அந்த மாடுகளுக்கும்  வழங்கப்படும். ’ம்மா…’ என அது குரலெடுத்து அழைக்கும்போது, என்ன  வேலையாக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு, மாட்டிற்குத் தேவையான வைக்கோலோ, புல்லோ கொடுத்து, கழனித் தொட்டிக்கு அருகில் அதனைக் கட்டுவார்கள். வயிறு நிறைந்து, தாகம்  தணித்து - அது நிம்மதியாக படுத்துக் கொள்வதைப் பார்த்த பிறகே, தனது வேலைகளைத் தொடருவார்கள்.
                  ஏனெனில், ஒரு மாடு என்பது ஓராயிரம் வசந்தங்களை அந்தக் குடும்பத்திற்குக் கொண்டு வந்து கொடுக்கும் ஓர் அட்சயப் பாத்திரம். வேண்டியவற்றை  எல்லாம் வழங்கும் காமதேனு.  எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் .
                வளநாட்டில் எங்கள் வீட்டிலும் ஒரு மாடு இருந்தது. ’லெட்சுமி’ என்று அதன் பெயரைச் சொல்லாமல், ’மாடு’ என யாராவது சொல்லி விட்டால், அவர்களிடம் நாங்கள்   கடுமையாக சண்டைக்குச் செல்வோம். எங்கள் வீட்டு லெட்சுமி, இரண்டு முறை  அழுது, நான் பார்த்திருக்கிறேன். 
              ஒருமுறை,  அத்து மீறி , பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டத்தில் மேய்ந்த குற்றத்திற்காக, அவள் உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள். ஊரின் மையத்தில் இருந்த அந்த கால்நடைகளின் சிறைச்சாலைக்குப் பெயர் ’பவுண்டு’.  எல்லைகள் இருப்பதை அறியாது, பிறருடைய தோட்டத்திற்குள் நுழைந்த மாடுகளை, அந்த பவுண்டிற்குள் கொண்டு வந்து அடைத்து விடுவார்கள் தோட்டக்காரர்கள். எங்கள் ஊர் சந்தைபேட்டைக்கு அருகில், நான்கு பக்கமும் உயரமான சுவர்கள் கொண்ட, அந்த பவுண்டிற்கு, முன்பக்கம் மட்டும் ஒரு கதவு இருக்கும். அதில் வளையலைவிட சற்று அதிகமான அகலத்தில் ஓர் ஓட்டை இருக்கும்.
           மாலை தொடங்கிய பின்னரும் லெட்சுமி வீடு வந்து சேராததாலும், எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் காணாததாலும்  பவுண்டில் அடைக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து வர, நான் பவுண்டிற்கு ஓடினேன். கதவு ஓட்டை வழியாக, எட்டிப் பார்த்தேன். அங்கே, லெட்சுமி பரிதாபமாக அமர்ந்திருந்தாள். பவுண்டுக்காரரிடம் உரிய அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு, அவளை வெளியே கூட்டி வந்தோம். அதுவரை அவள் அமைதியாகத்தான் இருந்தாள். என் இரு கைகளாலும் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்து, ஒரு முத்தமிட்டு அவளோடு வீட்டிற்கு நடந்தேன். வீடு நெருங்கிய போதுதான், அவளது முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் மாலைகள். வீட்டிற்குள் நுழைந்ததும் எங்கள் பாட்டி தேம்பித் தேம்பி கண்ணீர் சொரிந்தாள். லெட்சுமி வந்துவிட்டதால், பாட்டி அடைந்த ஆனந்தக் கண்ணீர் அது என, இப்போது  நான் உணர்கிறேன்.  ஒரு பகல் தான், தற்காலிகமானது தான்,  அதுவும் அருகிலே தான் என்ற போதிலும்,  பிரிவு என்பது வலி தரும் துயரம் தானே? ஆம், பிரிவு என்பது மனம் சார்ந்ததல்லவா!
                     லெட்சுமி , இரண்டாம் முறையாகவும்  அழுதது. சொல்ல முடியாத பல காரணங்களால், குடும்பச் சூழ்நிலைகளால் எங்கள் லெட்சுமியை விற்க வேண்டிய சூழல் அப்போது  வந்திருந்தது. மாட்டை  வாங்கியவர், லெட்சுமியை ஓட்டிச் செல்ல   வந்து விட்டார். எங்கள் பாட்டி, வீட்டைவிட்டே வெளியில் வரவில்லை. வாழைப்பழங்கள் கொஞ்சத்தை லெட்சுமிக்கு கொடுத்துவிட்டு, மீதியை புதிய மாட்டுக்காரரிடம் கொடுத்தோம். ’லெட்சுமியை அடிச்சு கிடிச்சுபுடாதப்பா , பாசமான ஜீவன்’ எனச் சொல்லி, கயிறை மாட்டுக்காரரிடம் கொடுக்க, லெட்சுமியை இழுத்துக் கொண்டு அவர் நடக்கத் தொடங்கினார்.
                முதலில் நடப்பது எதுவும் புரியாமல், தேமே என்று இருந்த லெட்சுமி, நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முழுமையாய் புரிந்து கொண்டாள்.  இருநூறு மீட்டர் நீளம் கொண்ட, எங்கள் தெருவின்  இறுதி வரைக்கும், தன் கண்ணீர் வடிக்கும் கண்களால்,  எங்களைத் திரும்பிப் பார்த்தபடியே,  நடந்து போனாள், இல்லை , இழுத்துச் செல்லப்பட்டாள் என்றே சொல்ல வேண்டும். இப்போது - அறியாத ஏதோ ஒரு பகுதிக்குள் அவள் வாழ்க்கை செலுத்தப்படுகிறது. மீண்டும் ஒருமுறை, லெட்சுமியை நாங்கள் சந்திக்கப் போவதில்லை. அவளும் எங்களை ஒருபோதும் காண வாய்ப்பில்லை. இனி, இந்த நிரந்தரப் பிரிவின்  பெருங்குழிக்குள்ளேயே - அவள் வாழ்வு முடிந்து போகும். 
               நண்பர்களே, பிறந்து வளர்ந்த மண்ணை  விட்டுப் பிரிதல் என்பது அத்தனை சுலபமானதல்ல. மனதோடு இணைந்திருக்கும் மண்ணின் நினைவுகள், மண்ணோடு போகும் காலம் வரை நம்முடனேயே இருக்கும். இங்கே,   தாமிரபரணி ஆற்றின் கரையில் வேர் விட்ட மரம் ஒன்று, சென்னையிலோ அல்லது வேறு ஒரு நகரத்திலோ வளர்கிறது என்றால் அதன் நினைவுகள் யாவும் - வேர் குடிகொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் தானே இருக்கும். ஆம், கார்த்திக் புகழேந்தி என்ற வளர் மரத்தின் நினைவுகள், புனைவுகளில் பெரும்பான்மை - அவர் வளர்ந்தெழுந்த நதிக்கரையைச் சுற்றிச் சுற்றியே நகர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதுதான் சரியும் கூட. 
      அந்த நினைவுகள் வற்றாத நதியென, பொங்கிப் பிரவாகமெடுத்து, ஏதோ ஒருவகையில், வாசிப்பவர் மனங்களை நனைத்துக் கொண்டே செல்கின்றன.  கார்த்திக் புகழேந்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு, ’வற்றா நதி’.  இதில் மொத்தம் 21 சிறுகதைகள் இருக்கின்றன. மண் சார்ந்தும் , அந்த மண் சார்ந்த மனிதர்களின் மனம் குறித்துமே இக்கதைகள் நம்மிடம் பேசுகின்றன. 

                                                   (2)

                தொகுப்பில் வருகின்ற இரண்டாவது கதை, ‘அப்பாவும் தென்னை மரங்களும்’ , எளிய முறையில், நேரடியாகச் சொல்லப்பட்ட வலுவான கதை. தனது அப்பாவைப் பற்றியும், அவர் நேசித்த தென்னந்தோப்பு பற்றியுமான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிற இரண்டாவது மகனின் நினைவுகள் தான் இந்தக் கதை. அப்பாவின் பதினோராவது ஆண்டு நினைவு நாளில், வாசகனோடு பேசத் துவங்குகிறான் சின்னவன். ’அப்பாவுக்கு, தொழில், வேலை, சொத்து என  எல்லாமே விவசாயம்தான். தோப்பு வேலை மட்டும் இல்ல, நெல்லுல இருந்து புல்லு வரைக்கும், மாடுல இருந்து ஆடு வரைக்கும், கீரையில் இருந்து கீத்து கொட்டாய் போடுற வரைக்கும் அவருக்கு தெரியாத சமாச்சாரம் எங்க கிராமத்துல கொறவு; எட்டாங்கிளாஸ் வரை படித்த அப்பாதான் எங்க ஊரிலேயே இங்கிலீஸ்ல பேசத்தெரிந்தவர்.’
               அப்பாவின் நிழலிலேயே வளர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அச்சாணி என்ன என்பது தெரியவே இல்லை. ஒருநாள்,  தென்னை ஏறும் போது, கொளவி கொட்டி அப்பா கீழே விழுகிறார். கால் முறிகிறது. அவர்கள் குடும்பத்தின் வீழ்ச்சியும் அங்கே தொடங்குகிறது. தென்னந்தோப்பு நீதிமன்ற வழக்கில் சிக்கிக் கொண்டது. அப்பா உள்ளூர புலம்பத் தொடங்கினார். ஆனால் சின்ன மகன் அக்ரி ஆபீஸராகி,  குடும்பம் மீண்டும் நிமிரும் என நம்பிக்கொண்டிருந்தார். அண்ணன் செங்கல் சூளைக்கு டிராக்டர் ஓட்டப் போனதால் சின்னவனின் படிப்பு தொடர்ந்தது. அதேநேரம், அக்ரி ஆபீஸ்ர் கனவு தறி விழுந்த தயிர்ப்பானையானது. ஆனால், காரல் மார்க்ஸ் படித்து அப்பா பேசிய வார்த்தைகளை, சின்னவனும் கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.  மாவோ, லெனின் சித்தாந்தங்களோடு, தன்னம்பிக்கையும் மேலெழுந்து வந்தது.  பட்டம் முடித்த சின்னவனுக்கு, மத்திய இரயில்வேயில் வேலை கிடைக்கிறது. சின்னவனான  கதிர்வேல் பற்றி ஊரே பெருமை பேசியது. செல்லப்பா மகன் என்பது போய், கதிர்வேல் அப்பா என நிலைமை மாறுகிறது.
                   ‘என்னப் பெத்த இந்த மண்ணு காத்த விட்டுட்டு, எங்கிட்டுல இந்த சீவன தூக்கிட்டுத் திரிவேன் ‘ எனச் சொல்லும் அப்பா, கிராமத்திலேயே தங்கி விடுகிறார். ஒருநாள் காலை, நீச்சத் தண்ணி குடித்ததோடு, அப்பா இறந்து போகிறார். அப்பாவின் அஸ்தியோடு,  மாடியில் அமர்ந்து ஓவென அழுகிறான் கதிர். பதினாறாம் நாள், அப்பாவின் நினைவாக தென்னம்பிள்ளை ஒன்றை நட்டு வைக்கிறான். பதினோறு நினைவு நாளன்று , சொந்த ஊரிலேயே நிலம் ஒன்று  வாங்கி, பத்திரம் பதியப் போகிறான். இயற்கை விவசாயம் தான் இனி என முடிவு செய்து விட்டான். சிறுகதையின் இறுதியில், கதிர் சொல்லும் கம்பீரமான  வார்த்தைகள் தான் உச்சம்.  ‘ இன்னையோட பதினோரு வருசம் ஆச்சு. தென்னம்பிள்ளை எழுந்து நிக்குது. அதை கட்டிக்கும்போது, எங்கையா நெஞ்சு மேல வெவெரம் தெரியாத வயசில கதை கேட்டு தூங்கும் சுகம். யாரு சொன்னது எங்கையா செத்துட்டாருன்னு, இந்தா எழுந்து நிக்கார் பாருங்கையா.’  கதிர்வேலை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.  இயற்கை வேளாண்மைக்கும், நவீனத்துக்கும் இடையிலான வாழ்க்கைதான் இந்தக் கதை. கால் ஒடிந்து போன இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து, ’இயற்கை விவசாயம் செத்துச்சுன்னு யாருய்யா சொன்னது, இந்தா எழுந்து நிக்குது பாருங்க’ என  சத்தமாகச் சொல்ல, ஓராயிரம் கதிர்வேல் எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கையை இந்தக் கதையோடு நான் பொருத்திப் பார்க்கிறேன். 
                    ஐந்தே பக்கங்களில் ஒரு சமூகத்தில் உண்டான மாற்றம், அதற்கான தீர்வு ஆகியவற்றைச் சொல்லும் இந்தச் சிறுகதை , நுணுக்கமான விவரணைகளைக் கொண்டிருக்கிறது. தென்னந்தோப்பில் பூச்சிகளைத் தின்று உயிர் வாழும் ஆந்தை, ஊரில் எல்லா தோப்புகளும் வண்டுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, ஆந்தைகளால் இவரது தோப்பு மட்டும் நல்ல விளைச்சல் தருவது,  மழைக்காலத்தில்  தோப்புக்கு நடுவில் வெட்டப்படும் குழி, புழு மீன் செதில் கொண்டு உருவாக்கப்படும் இயற்கை உரம் என அழகான சித்தரிப்புகளுக்கு இடையில்தான் அப்பா-மகன் பாசக் கதை பின்னப்பட்டிருக்கிறது.
                       இந்தத் தொகுப்பில் ’பற்றியெரியும் உலை’ என்றொரு கதை இருக்கிறது. இருபது காலண்டர்களுக்குப் பிறகு நடப்பதான  புனைகதை அது.  கூடங்குளம் அணு உலை பாதிப்பில் உருவாக இருக்கும் சந்ததியினரின் துயரங்களைப் பற்றிய முக்கியமான கதை. ஒருவேளை, இக்கதை இன்னும் செறிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். ஆனாலும், அது சொல்ல வரும் விஷயம் மிக முக்கியமானது. நடக்கும் குற்றங்களைக் கண்டும் காணாததும் போல, மெளனமாய் கடந்து போகும் மாபாதகச் செயலைப் பற்றி இக்கதை பேசுகிறது. பிழைகளின் சாட்சியாய் மட்டுமே மனிதன் இருந்துவிட முடியுமா? நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டுமல்லவா?
                      சொத்து, குடுப்பினை, நிலைக்கதவு போன்ற கதைகள் சொந்த மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்த  உள்ளங்களையும் விவரித்துச் செல்கிறது. 169 கொலைகள் என்னும் கதை, மனசாட்சி தரும் தண்டனையை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் புழுதியில் வெள்ளைக் கோடிட்டுப் பறக்கும் விமானம் பார்த்துத் திரிந்தவன், விமான ஓட்டியாகிறான். உயரப் பறந்தாலும் அவனது உள்ளம் மிகமிக எளிமையானது. மனசாட்சிக்குப் பயந்தது. வாசிக்க வேண்டிய கதை இது. தவறுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்கும் நாயகனின் மனப் போராட்டம் , குறைவான சொற்களில் நிறைவாக உள்ளது.
               தொகுப்பில் உள்ள  மூன்றில் ஒரு பங்கு கதைகள், பருவத்தில் உருவாகும் காதல் கதைகள் தான். ஆனால் அவை சுவாரஸ்யமான மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன. கதைகளில் உலாவும் நாயகிகள் – ப்ரீத்தி, கிறிஸ்டி, ஜெனி, பேயாய் உலவும் டெசி, கோலப்போட்டியில் வென்ற சுகந்தி, சிறு நெருப்பை, சுற்றத்தார் எல்லாம் சேர்ந்து பெரிய காதல் தீயாய் மாற்றிவிட, காதலியாக மாறுகிற அபிராமி என எல்லாக் கதைகளிலும்,  சாதி, மதத்தின் அடிமைச் சங்கிலிகள் அடையாளம் காட்டப் படுகின்றன. பெரும்பாலான கதைகளில் சர்ச்சும், கிறிஸ்துவப் பெண்களும் வந்து போகிறார்கள்.  சாதி மாறுவதைக் காட்டிலும் மதம் மாறுவது தான் எளிய வழியாக இருக்குமோ? என்ற எழுத்தாளனின்  எண்ணம் தான், இக்கதைகளில் முன் வந்து நிற்பதாக நான் உணர்கிறேன்.
                        தாமிரபரணி கரையிலிருந்து, பிழைப்புக்காக ரேனிகுண்டா பகுதியில் முறுக்கு கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் போஸ், அங்கே இருக்கும் இவனது நண்பன் மாணிக்கம், கடை முதலாளி, இவர்களைப் போலவே ஓரிரு பத்திகள் மட்டும் வரும் அத்திக்காய் தோட்டம். அருமையான பாத்திரப் படைப்புகள். பல வருடங்களுக்குப் பிறகு , தனது ஆற்றங்கரைக்கு வரும் போஸுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. தாயையும் ஊர் தலையாரியையும் வெட்டி விட்டு சிறைக்குச் செல்கிறான் போஸ். ரேணிகுண்டாவிலேயே அவன் இருந்திருக்கலாம் தான். அல்லது, அத்திக் காட்டிலாவது தனது மூச்சை இழந்திருக்கலாம். தொகுப்பில் உள்ள எல்லா கதாபாத்திரங்களிலும் முற்றாக மாறுபட்டது போஸின் கதாபாத்திரம். வாசிக்கும் போது, அதனை நீங்கள் உணரலாம். ‘ சிவந்திப்பட்டி கொலை வழக்கு’ – மனம் உருக்கும் கதை.
                    தொகுப்பில் என்னை ஈர்த்த கதைகளில் முக்கியமான ஒன்று, ‘காற்றிலிடைத் தூறலாக’. கதை நாயகன் மதனுக்கு மனசு சரியில்லை என்றவுடன், ‘எங்கேயாச்சும் வெளியே போயிட்டு வாடா, ரிலாக்ஸ் ஆகிடுவ.’ எனச் சொல்லி, கணவனிடம் அதீத அன்பு காட்டும் மனைவி கல்கி, முதிர்ச்சி அடைந்த நல்ல பாத்திரப் படைப்பு. ‘உன்னையே நீ லவ் பண்ணும் நிமிசத்துல, என்கிட்ட வந்து ஒரு ஐ லவ் யூ சொல்லு ’ என கணவனை , நண்பன் ஜீவாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். கேரள எல்லையில் , ஆனைகட்டிக்கு அருகில் இருக்கும் தனது நண்பனின் வீட்டுக்கு இளைப்பாறச் செல்கிறான் மதன். 
          அங்கே அவனது நுரையீரல் புத்துணர்ச்சி கொள்கிறது. எழில் நிறைந்த அந்த இயற்கை, மதனின் மனதினை மாற்றுகிறது. திருப்தி தராத வேலை, அவனுக்கு ஒரு சுமையாக இருக்கிறது. ஆனால், அங்கிருந்து கிளம்பும்போது, புதிய மனிதனாகப் புறப்படுகிறான். நம்மாழ்வாரின் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதற்காக பயணத்தைத் தொடர்கிறான். மலைகள் சூழ்ந்த அழகிய வனப்பகுதியில், மதனின் கண்கள் வழியாக காட்டப்படும் வயல்வெளிகள், தோப்புகள், பயிர்ச்செடிகள் என யாவும், வாசிக்கும்  நம்மையும் ஆசுவாசப்படுத்துகின்றன. அழகான வடிவமைப்பின் வழியே, இக்கதை நம் உள்ளத்தைக் கரைக்கிறது.
                ’பங்குனி உத்திரம்’ – இதுவும் அழகான நடையில் அமைந்த ஒரு கதை. தாமிரபரணி ஆற்றின் கரையில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நினைவு. பங்குனி உத்திரத்திற்காக, சாஸ்தா கோயிலுக்கு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான நபர்கள் , மாட்டு வண்டியில் பயணிப்பதில் கதை தொடங்குகிறது. நுண்ணிய விவரிப்பின் வழியே கடந்த காலம் நம் கண் முன்னே நகர்ந்து போகிறது. தனித்துக் கிடக்கும் நிகழ்காலம் சொல்லப்படுகிறது. 
             கல்விக்காக, வருமானத்திற்காக என எல்லா குடும்பங்களும் இன்று பிறந்த மண்ணிலிருந்து நகர்ந்து விட்டன. இக்கதையின் நாயகன், அதே ஆற்றங்கரையில் நிற்கிறான். அவன் மாறவே இல்லை. ’என்ன மயித்துக்கு மாறணுங்கிறேன், மேல பாருவோய், அந்த நிலா மாறியிருக்கா, இல்ல மாறியிருக்கான்னு கேக்குறேன்’ – அதட்டிக் கேட்கும் அவனது கேள்விக்கு, நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் ?

                                                           (3)
                              
           இறுதியாக, ’தீபாவளி’ என்னும் கதையைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். ‘ஏன், தீபாவளிக்கு ஊருக்கு போகலியா? ‘ என்ற கேள்வியை எதிர்கொள்ளாத, வேற்றிட வாசிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்தக் கதையும் அதோடு சேர்ந்தது தான். சொந்த கிராமத்திற்குச் செல்லாமல், நகரிலேயே தீபாவளியை கடத்திக் கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றியதுதான் இந்தக் கதை. 
            கதையின் இறுதியில் வரும் இரண்டு பத்திகள் தான் என்னை அதிகம் பாதித்தன. சென்னையில் இருக்கும் இவன், இன்றே கூட, தன் கரைக்குத் திரும்பிவிடலாம். பவுண்டுக்குள் அடைபட்ட எங்கள் லெட்சுமி, மாலை வீடு வந்து சேர்ந்தது போல.
          ஆனால், எங்கோ ஒரு தேசத்தில், அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துச் சகோதரி சிசோ, அலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள். ’தீபாவளி வாழ்த்துகள்’ சொல்கிறாள்.  ’இங்கே இதெல்லாம் கொண்டாட மாட்டோம் அண்ணா’ என்று பேசுகிறாள். சத்தம் உண்டாக்கும் தீபாவளி வெடிகள், சிசோவுக்கு  பயங்கரமான யுத்த காலத்தை   நினைவு படுத்திவிடக் கூடாது என்னும் பதட்டத்திலேயே, விரைவாகப் பேசி முடிக்கிறான் இவன். பிறந்த மண்ணுக்கு மீண்டும் திரும்பி, தீபாவளி கொண்டாட வாய்ப்பில்லாத சிசோ, எங்களை விட்டு நிரந்தரமாக விலகிப் போன, லெட்சுமியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறாள்.          இத்தொகுப்பில், வற்றா நதியென, நினைவுகள் கொப்பளித்தபடியே இருக்கின்றன. எல்லா கதைகளின் மையச் சரடும் அதுதான். மண்ணைப் பிரிந்த ஏக்கமும், அந்த மனிதர்களின் சந்தோஷத் தருணங்களுமே இந்தக் கதைகளின் தொகுப்பு. பெரும்பாலும் இதில் உள்ள கதைகள் யாவும், வட்டார வழக்கு மொழியில் சொல்லப்பட்டிருப்பது, இத்தொகுப்பிற்கு சிறப்பையும் நம்பகத்தன்மையையும் ஒரு சேரத் தந்திருக்கின்றன.   எனக்கு  வாசிக்கக் கிடைத்த இந்த இரண்டாம் பதிப்பிலும், எண்ணும் அளவுக்கு ’எழுத்துப் பிழைகள்’ இருப்பதை, மறுபதிப்பில், அச்சாக்கத்தின் போது தவிர்த்திருக்கலாம்.
             பத்தி வடிவில் அமைந்திருக்க வேண்டிய சில நினைவுக் குறிப்புகள், இங்கே சிறுகதையாக வைக்கப்பட்டிருக்கின்றன, அதேபோல, நாவல் அளவுக்கு விரிவு கொள்ள வேண்டிய கதைகளும் இத்தொகுப்பில் உண்டு. இதுதான் அவரது முதல் தொகுப்பு.  நேரிடையாக, எதார்த்தமான உரையாடல்களின் வழியே, வாழ்வின் கணங்களை ரசனையாக மாற்றிவிடுகிற ரசவாதம் , கார்த்திக் புகழேந்திக்கு வாய்த்திருக்கிறது. சகோதரர் கார்த்திக் புகழேந்திக்கு மனம் நிறைந்த  வாழ்த்துகள்!
                   பொருள் வயிற் பிரிதல் பற்றி சங்க இலக்கியங்கள் நிறைய பேசுகின்றன. அங்கே, பிரிதலுக்கான கால வரையறை உண்டு. ஆனால், பிறந்த மண்ணை விட்டு, நிரந்தரமாகப் பிரிவது என்பது காலில் தங்கி - சதை செரித்த முள் போல, தீராத ரணத்தை வாழ்நாளெல்லாம் தரக் கூடியது. அது நினைவில் விழுந்த தழும்பு. அதற்கு அழிவென்பதே கிடையாது. வற்றா நதி’ சிறுகதைத் தொகுப்பு,  தழும்பிலிருந்து எழுந்த நினைவுகளின் சேகரம் தான். கார்த்திக் புகழேந்தியை உயிர்ப்பிப்பதும் அந்த நினைவுகள் தான்.
                   ஆம், பழைய ஏற்பாட்டில் ஒரு கதை உண்டு. ’வாழ்ந்த ஊரைத் திரும்பிப் பார்க்காமல், இங்கிருந்து செல்லுங்கள்’ என்ற கடவுளின் கட்டளையையும் மீறி, லோத்தின் மனைவி, தான் வாழ்ந்த சோதன் கொமாரோ  நிலத்தைத்  திரும்பிப் பார்க்கிறாள். சாபத்தின் படி, உப்புப் பாறையாகவே மாறிப்போகிறாள். 
        நண்பர்களே,  தப்பென்றாலும், சரியென்றாலும், உப்புப் பாறையாய்  மாறிப் போவோம்  என்றாலும் -  பிறந்து வளர்ந்த  மண்ணின் நினைவுகளை, மனதிலிருந்து அவ்வளவு எளிதில் அகற்றி விட முடியுமா என்ன?.  ஒருவகையில் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மூச்சுக் காற்றே, அந்த நினைவுகள்தான் அல்லவா?  
                 

Friday, July 3, 2020

விளக்குகள் பல தந்த ஒளி - நூல் அறிமுகம்


விளக்குகள் பல தந்த ஒளி – லில்லியன் எயிஷ்லர் வாட்சன்

நூல் அறிமுகம்


        ”எனது வாழ்க்கையில் என் இதயத்தோடு நெருக்கமாக இருக்கும் புத்தகங்கள் நான்கு. அவற்றை வாசிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம். லில்லியன் எ.வாட்சன் எழுதிய ‘விளக்குகள் பல தந்த ஒளி’ புத்தகம் , நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் - ஒளி தீபமாகச் சுடர் விடுகிறது.  40 வருட காலமாகவே, என்னை வழிநடத்திச் செல்லும் ஓர் அரிய பொக்கிஷமாகவே, அது என்னுடன் இருந்து வருகிறது.”   –  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

                    2000 ஆவது ஆண்டில், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் , டெல்லியில் உள்ள 'விஞ்ஞான் பவனில்' அப்துல் கலாமைச் சந்திக்கச் செல்கிறார். அப்துல் கலாம் அப்போது, இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக இருந்தார். அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடலின் போது, தனது வாழ்க்கையையே மாற்றி அமைத்த சில புத்தகங்களைப் பற்றி, கலாம் அவர்கள் ஆர்வம் பொங்கப் பேசுகிறார். அவற்றில் ஒன்று தான், ‘Light From Many Lamps’.  
              லில்லியன் எயிஷ்லர் வாட்சன் எழுதிய இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்றும், அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகவும் பயன்படும் என்றும் சொல்லியிருக்கிறார் அப்துல் கலாம். அந்தச் சொற்களே, இந்நூல் தமிழ் வடிவம் பெறுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.  முறையான அனுமதிக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு ’விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் தலைப்பில் இந்த நூலை, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 
             நூலின் இறுதியில், தொகுப்பாசிரியர் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பு, போதாமையின் உச்சம் என்று சொல்லலாம்.  பொத்தாம் பொதுவாக சில வார்த்தைகள். எந்த நூலாசிரியருக்கும் அதனைப் போட்டுக் கொள்ளலாம்.  இந்த நூலில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்களில், ஆசிரியரின் குறிப்பு  முறையாக இடம் பெறுவதில்லை. மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரமும் சரியாகத் தருவதில்லை. இந்த நூலினை தமிழில் மொழிபெயர்த்த பி.உதயக்குமார் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த நூலில் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.  மேலும், இந்த நூலின் முன் அட்டையிலும்,  பின் அட்டையிலும் நூலாசிரியரின் பெயரும் இல்லை; மொழிபெயர்ப்பாளரின் பெயரும் இல்லை. பதிப்பகத்தின் பெயர் மட்டுமே உள்ளது (இரண்டாம் பதிப்பு - ஏப்ரல் 2005) என்பது இன்னும் வருத்தத்தை அதிகமாக்கியது.
                அற்புதமான இந்த நூலினைத் தொகுத்த லில்லியன் எயிஷ்லர்(1902), ஹங்கேரியைப் பூர்வீகமாகக் கொண்ட யூதப் பெண்மணி ஆவார். அமெரிக்காவைச் சேர்ந்த,  இவரது கணவர் பெயர் வாட்சன்.  ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த பதிப்புத் துறையில் நுழைந்த இவர், தனது பத்தொன்பதாம் வயதிலேயே சாதனைகள் நிகழ்த்தத் தொடங்கினார்.  வாசிப்பதையும் எழுதுவதையுமே தனது வாழ்நாள் பணியாகச் செய்தார். அதன் விளைவாக, அமெரிக்காவையும் தாண்டி, உலகம் முழுக்க அவரது பெயர் பேசப்பட்டது. அவருடைய மாபெரும் கனவுதான், Light From Many Lamps’ எனும்  இந்தப் புத்தகம்.            
              கடந்த கால வரலாறு என்பது நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற ’ஞானக்களஞ்சியம்’. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் முடிவில்லாதவையாக இருக்கின்றன. மாபெரும் ஞானத்தின் தொகுப்பிலிருந்து, நமக்கு எது வேண்டும் என்பதைத் தேடுவதில் மாபெரும் சவால் இருக்கிறது. கருவூலப் பொக்கிஷங்கள், தலைப்பு வாரியாக முறையாக அடுக்கப்பட்டு, எளிதில் பயன்படுத்தும் வண்ணம் இருந்தால், சுலபமாக இருக்கும் இல்லையா?  அப்படி ஒரு செயலைச் செய்திருக்கிறது இந்தப் புத்தகம். 
                பல இடங்களிலிருந்து, பல  துறைகளைப் பற்றிய சிந்தனைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வெறும் சிந்தனைகள் மட்டும் இந்நூலில் கொடுக்கப்படவில்லை. மாறாக, அது உருவான வரலாற்றுப் பின்புலத்தோடு சிந்தனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. 
               உதாரணமாக, ’எதிர்காலத்திற்கான நம்பிக்கை’ என்ற தலைப்பில், ஒரு வரலாறு குறிப்பிடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ஆம் தேதி, அமெரிக்காவின் அதிபராக ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட் பதவி ஏற்கிறார். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை நோக்கி, அவர் உரையாற்றுகிறார். எப்போதும் அவர் மனதில் மந்திரம் போல் இருக்கும் சொற்கள், அப்போதும் நினைவுக்கு வருகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னர், தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் அவை. மனித குலத்தின் முன்னேற்றத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை அவை. 
    ’வாழ்வில் எல்லாமே சுமூகமாக இருந்து விடாது. சில சமயம் உயர்வும், சில சமயம் தாழ்வும் இருக்கும். இதில் நினைவு கொள்ள வேண்டிய பெரிய உண்மை என்னவென்றால், நாகரீகத்தின் இயல்பே, எப்போதும் மேல் நோக்கியே  இருப்பதுதான்’    
        கிராடன் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த எண்டிகாட் பீபாடி, தேவாலயத்தின் வழிபாட்டுக் கூட்டத்தில் வாராவாரம் மாணவர்களோடு பேசுவார். அதனை மனத்திற்குள் கல்வெட்டு போல எழுதி வைத்துக் கொண்ட மாணவன் ரூஸ்வெல்ட், மேற்கண்ட சொற்களை மறக்கவே இல்லை. தாழ்வு வரும் வேளையில் எல்லாம், ’மேல் நோக்கிய சிந்தனை தான், நாகரீகத்தின் இயல்பு’ என்பதை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். அதிபரான பிறகு, இந்தச் சொற்கள் தான், தனது வாழ்வில் உயர்வை  உண்டாக்கின என தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறார். இந்த வரலாற்றுப் பின்புலம் தெரிந்த பிறகு, பொன்மொழிகள் சுடரெனெ இதயத்தில் ஒளிரத் தொடங்குகின்றன.  இதுபோல, அறுபதுக்கும் மேற்பட்ட சுவையான நிகழ்வுகள், அதன் வழியே பெறும் சிந்தனைகள், நூற்றுக்கணக்கில் மேற்கோள்கள் என சிந்தனை முத்துக்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

*  “வெற்றி பெறவே மனிதர்கள் பிறக்கிறார்கள், தோற்பதற்கு அல்ல.”  - தோரோ.

* “நேரத்தை வீணாக்குவதை மட்டும் நியாயப்படுத்தவே முடியாது. ஏனெனில், இது மீண்டும் வரவே வராது” - உமர் கய்யாம்.

* ”முடிவுகளைப் பற்றி நான் அஞ்சவில்லை; நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்”  -ஃபால்கன் ஸ்காட்.


* “நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால், அதனை வெளியே தேடுவதில் பயனே இல்லை.”  -  எஃப் டி ஃபோகோல்ட்.
         
   சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், சிசிரோ, பிளாட்டோ, இங்கர்சால், ஜேம்ஸ் ஆலன், மார்க் அரேலியஸ், தாமஸ் மன், கவிஞர் லாங்ஃபெல்லோ, ஷேக்ஸ்பியர், எமர்சன், வாட்சன்,  ஹென்றி தோரோ , மார்டின் லூதர் கிங், ஆர்.எல்.ஸ்டீவன்சன், எமிலி டிக்கின்ஸ், அபிரகாம் லிங்கன், பெஞ்மின் ஃப்ராங்க்ளின், மெல்வில்  என பல நூறு அறிஞர்களின் கருத்துக்கள், இந்தக் கருவூலத்தில் நிரம்பியிருக்கின்றன. 
              உபநிஷத்துக்கள் மற்றும் இந்தியத் தத்துவங்களின் செய்திகளோடு, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் கவிதை வரிகளும் இடம் பெற்றுள்ளன.  மகாவீரர், புத்தர், முகம்மது நபி போன்றோர் வழங்கிய செய்திகளும் இங்கே உண்டு. மேலும், நூலின் பல்வேறு இடங்களில், பைபிள் சொல்லும் ஞானக் கருத்துக்கள் பொருத்தமான இடங்களில் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றின் பயனாக, ஒவ்வொரு பொன்மொழியும், நம்மை நிறைய சிந்திக்க வைக்கின்றது. துயரத்தின் ஆழத்திலிருந்து நம்மை மீட்டு எடுக்கின்றன. 
             ’வாழ்வின் சந்தோஷம்’ முதல் ’எதிர்காலம்’  வரையிலான பத்து பெரும் தலைப்புகளில் இந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில், வரலாற்றின் தலை சிறந்த தத்துவ ஞானிகள், அறிஞர்கள், ஆளுமைகள் என எண்ணற்ற நட்சத்திர மனிதர்களின் குறிப்புகள் நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. 
         இருபதாம் நூற்றாண்டு வரையிலான, உலகின் ஞானக் களஞ்சியத்தைச் சுருக்கி, எளிய மனிதர்களுக்கு பயன் தரும் வகையில், கையடக்கமாக ஒரு 400 பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார் தொகுப்பாசிரியர். இறுதியில் அவரே மார்டின் லூதரின் வார்த்தைகளில் சொல்லி முடிக்கிறார்,
       “ஞானத்தின் முதல் கனியின் ஒரு துண்டையும், உண்மையின் எல்லையற்ற ஆழத்தின்  துண்டிலிருந்து ஒரு சிறு பகுதியையும் தான் என்னால் மீட்க முடிந்தது.”
           இந்த நூலை, வெறும் தன்னம்பிக்கை சார்ந்த நூல் என்றும் சொல்லி விட முடியாது;வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு என்றும் சொல்லி விட முடியாது. நமது தனிமை, சிக்கல், ஆபத்து, தோல்வி, வெற்றி,குழப்பம்  என வாழ்வின் எல்லாக் கட்டத்திலும்  நமக்கு உதவும் ஒரு கையேடு அல்லது அகராதி என இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடலாம். இந்த நூல் நமது கையில் இருக்கும் போது, ஆயிரக்கணக்கான ஞானிகளின் சொற்களைச் சுமந்து செல்கிறோம் என்று நம்பலாம். பயன்படுத்திக் கொள்வது நமது செயலில் தான் உள்ளது.               
             வாழ்வின் இருள் நம்மைச் சூழும் போதெல்லாம் - ஒளி கொடுத்து மீட்பதற்காக, விளக்குகளோடு - கடந்த காலம் காத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில்,  நாம் தான் விழிகளைத் திறந்து வைத்திருப்பதில்லை. 



நூலின் பெயர்:     விளக்குகள் பல தந்த ஒளி
ஆசிரியர் பெயர்: லில்லியன் எயிஷ்லர் வாட்சன்
வெளியீடு    :         கண்ணதாசன் பதிப்பகம்