Friday, August 9, 2019

சர்வதேச பூர்வகுடிகள் தினம்



இனம் காப்போம் - சர்வதேச பூர்வகுடிகள் தினம்.

ஆகஸ்ட் 9... இன்று!

         சொந்த நிலத்தில் வாழ்ந்தாலும் , தமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் - பூர்வ குடி  மக்களைப் பேணவும், அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் உருவாக்கவும்  ’சர்வதேச பூர்வ குடிகள் தினம்’,  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

             1994 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கூடிய, ஐ.நா.சபை , பூர்வகுடிகளின் கலாச்சாரமும் , பண்பாடும் , அவர்களது பொருளாதார வளர்ச்சியும் பேணப்பட வேண்டும் என்பதைக் குறித்த  தனது  கவலையை வெளிப்படுத்தியது. 49/214 வது தீர்மானத்தின் படி,  இரண்டு  பத்து  ஆண்டுகளுக்கென சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு, இந்நாளில் ஆண்டு தோறும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

           இன்றைய தேதியில், உலகமெங்கும் 90 நாடுகளில் 370 மில்லியன் பூர்வகுடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் 7000 மொழிகளும், 5000 வகையான கலாச்சார வாழ்க்கை முறையும் காணப்படுகின்றன. இந்தியாவில் இவர்கள் 'பழங்குடி மக்கள்'  என அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 700 குழுக்களாக இருக்கும் இம்மக்களின் சிந்தனைகளையும், பண்பாட்டையும் பேணவேண்டியது நமது கடமையாகும்.   

            சொந்த நிலப்பகுதியில் வசித்தாலும்,  நாகரீக வாழ்வில் இணைந்தவர்களை பூர்வகுடிகள்   என அழைப்பதில்லை. மாறாக, பாரம்பரியச் செயல்பாடுகளை விட்டு விடாமல் , இன்றும் அதே மொழி, பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களே பூர்வ குடிகள் என ஐ.நா அமைப்பு வரையறை செய்துள்ளது.

         கடல் சாகசங்கள், நாடு கண்டுபிடிக்கும் வேட்கை, ஏகாதிபத்திய எண்ணம் இவைகளின் காரணமாக எத்தனை மனித இனங்களை நாம் இழந்திருக்கிறோம்?

          ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் இருக்கும் டாஸ்மேனியாவில் 1828 ஆம் ஆண்டு, ஆர்தர் என்னும் வெள்ளை இன  கவர்னர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அது, “கண்ணில் படும் எந்த ஒரு  கறுப்பின மனிதனையும், வெள்ளையர்கள் தங்கள்  விருப்பப்படி சுட்டுக் கொல்லலாம்”, என்பதாகும்..
            ஒரு கறுப்பனைக் கொன்றால் 3 பவுண்ட்,  குழந்தையைக் கொன்றால்  1 பவுண்ட் என பரிசுகளை  அறிவித்தான் ஆர்தர்.  Black Catching என்ற பெயரில் இது பொழுதுபோக்கு விளையாட்டாக மாறிப் போனது. துப்பாக்கியையே பார்த்திராத அப்பழங்குடிகள், ஓடி ஓடி ஒளிவதும், பின் அகப்பட்டுச் சாவதும் வாடிக்கையானது.   1869  ல் யாவரும் அழிக்கப்பட்டு , மூவர் மட்டுமே மிஞ்சினர். இருவர் எலும்பும், தோலுமாய் இறந்துவிட, அவர்களின் உடல் பாகங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக கூறு போடப்பட்டதை மூன்றாமவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆம்,   அந்த இனத்தின் எஞ்சிய  கடைசிப் பெண் 'ட்ரூகானினி' மட்டும் பதற்றத்தோடு மூலையில் முடங்கிக்கிடந்தாள். அடைத்து வைக்கப்பட்டிருந்த தனியறையில் ஏதேதோ பிதற்றினாள்.

            ஆஸ்திரேலியப் பழங்குடிவாசி ஒருவரைக் கொண்டு, அவள் என்ன பேசினாள் என்பதை அக்கறையோடு புரிந்து கொள்ள முயற்சி செய்தது வெள்ளைய அரசு.  ”எங்கள் மரபுப்படி, என் உடலை கடலில் வீசி எறிந்து விடுங்கள், என் உடலைப் பிய்த்துக் கூறு போட்டு விடாதீர்கள்”, என்ற அவளின் கடைசி  மன்றாடல் திமிரோடு மறுக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு, அவள் இறந்து போனாள். டாஸ்மேனியா மியூசியத்தில், ’டாஸ்மேனியாவின் கடைசி பழங்குடிப் பெண்’ என்ற வாசகத்தோடு அவளது  எலும்புகூடு வைக்கப்பட்டது. பிறகு,  1976ஆம் ஆண்டு தான், சமூக ஆர்வலர்களின் போராட்டம் காரணமாக, ட்ரூகானினியின் இறுதி ஆசை , சரியாக நூறாண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அவளது எலும்புகள் கடலில் வீசப்பட்டன. ஆதிக்க குணம் கொண்ட  மனிதர்களின்,  குரூர எண்ணத்திற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

    அமெரிக்க நீக்ரோக்கள் பட்ட துயரமும், இங்கா இன மக்கள் அடைந்த இன்னல்களும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் காலத்தில்,  நமது அண்டை தேசமான இலங்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்தப்பட்டதை நாம் எப்படி மறக்க முடியும்?.  எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை விதமான கலாச்சாரங்கள்.... மனிதனின் அதிகாரப் பசிக்கு வேடையாடப்பட்ட  நாகரீகங்கள்தான் எத்தனை.?

       இனியாவது,  பூர்வ குடிகளின் பண்பாட்டை அறிவோம், போற்றுவோம், காப்பாற்றுவோம்.
       
         மற்றொரு இனத்தை வேட்டையாடி, தன் பசியைப் போக்கிக்  கொள்ளும் மிருகங்கள்,   தன் இனத்தை ஒருபோதும் தானே அழிப்பதில்லை.   ஆனால்,  தன் இனத்தைத்  தானே அழிக்கும் அபூர்வ மிருகம் ஒன்றே ஒன்றுதான். அது  மனிதன் என்னும் அசிங்க மிருகம் தான்! 

          இன அழிப்பு செய்பவர்களை, வரலாறு ஒருபோதும் மறப்பதில்லை; மன்னிப்பதும் இல்லை.

Monday, August 5, 2019

மாப்பசான்



சிறுகதை மன்னன் - மாப்பசான்.

  "Our memory is a more perfect World than the Universe: It gives back life to those      who no longer exist."
                                                                                         - Guy de Maupassant.   

           தனது எழுத்துக்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் அற்புதக் கலைஞன்;    43 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், இலக்கிய உலகில் நிரந்தர இடம் பிடித்த, ஒரு மகா கலைஞன்; இறுதியில், பாரிஸ் நகரத்தின் மனநல மருத்துவமனை ஒன்றில், தற்கொலை செய்து கொண்ட பரிதாபக் கலைஞன்; அவர்தான், ‘நவீன  சிறுகதை உலகின் மன்னன்’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர்,கவிஞர் கை-டி- மாப்பசான் (1850-1893). அவரது  பிறந்த நாள் இன்று.
         ஹென்ரி ரெனே ஆல்பெர்ட் கை டி மாப்பசான், இதுதான் அவரது முழுப்பெயர். கஸ்டவ் மாப்பசான் மற்றும் லாரி லி பொய்டிவின் தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தவருக்கு, வாழ்நாள் முழுக்க சிக்கல்களும், அலைக்கழிப்புகளுமே காத்துக் கிடந்தன. 1850ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, பிரான்சு நாட்டின், துறைமுக நகரொன்றில் பிறந்த மாப்பசானின் இளமைப் பருவம், மிகவும் சிக்கலாகத்தான்  இருந்தது. . சில காலங்கள் மட்டுமே மகிழ்சியாய்க் கழிந்தன இவரது பொழுதுகள். கருத்து வேறுபாடு காரணமாக, பெற்றோர் மணமுறிவு பெற்ற போது, இவரது வாழ்வில் கசப்புகளின் காலம் தொடங்கியது. 
             தனது 11 ஆவது வயதிலிருந்து, மாப்பசான் - தாயின் வளர்ப்பிலேயே வளரத் தொடங்கினார். அவரது தாய், இலக்கிய ஆர்வம் மிக்க ஒரு நல்ல படிப்பாளி. ஷேக்‌ஷ்பியரின் எழுத்துக்களில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது மகனுக்கு, வேண்டியமட்டும் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். உலகெங்கும் இருந்த செவ்வியல் இலக்கியங்கள் யாவும், மாப்பசானுக்கு கற்றுத்தரப்பட்டன.  சொற்களஞ்சியமும், எழுதும் முறையும் இவருக்கு எளிதாய் வந்து சேர்ந்தன. 
                                  மாப்பசான்,  1867ஆம் ஆண்டு, உயர்நிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்குதான், எழுத்தாளர் கஸ்டவின் நட்பு இவருக்குக்  கிடைத்தது. பள்ளியின் சார்பில் நடைபெற்ற நாடகங்களில் மாப்பசான் தொடர்ந்து  பங்கு பெற்றார். அதன் வழியாக , கவிதைகள் மீது, இவருக்கு ஈடுபாடு வளரத் தொடங்கியது. அதுபோல,  கடற்கரை ஒன்றில் எதிர்பாராதவிதமாக, கடலில் மூழ்கி, தத்தளித்துக் கொண்டிருந்த, சார்லஸ் ஸ்வின்பர்ன் என்ற கவிஞரை, காப்பாற்றினார் மாப்பசான். இதன் வழியே, அவரது நிரந்தர அன்பையும்  பெற்றார். எழுத்துத் துறையில் காலடி வைக்கும் பாதையை இந்த நிகழ்வுகள்  யாவும்  எளிதாக்கின.   
                          மாப்பசான், 1869ல் , சட்டம் படிக்க முடிவு செய்து, கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இராணுவ வீரனாகும் ஆசை அவரைத் துரத்தியதால்,  இராணுவத்தில் இணைந்து கொண்டார். ப்ரஷ்யாவுக்கெதிரான போரில், ஆர்வமுடன் கலந்து கொண்டார். பின், 1872ல் அரசாங்க அலுவலக எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். குடும்ப நண்பர் கஸ்டவ், இவருக்கு எழுத்துத் துறையில் குருவாக இருந்து வழிநடத்தினார். இவரது தொடர்பின் மூலம், துர்கனேவ் போன்ற மிகப் பெரும் எழுத்தாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் மாப்பசான். இலக்கிய உரையாடல்களின் வழியே, தனது எழுத்தாற்றலை பட்டை தீட்டிக் கொண்டார். 
           சிறுகதைகளில், கதையை மட்டும் சொல்லிச் செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை, உளச்சிக்கல்கள், மீளும் தன்மை போன்றவற்றை தெளிவாக எழுதினார். இதன் மூலம் சிறுகதைகளின் கூறுமுறை மாறத் தொடங்கியது. சிறுகதைகளின் இந்த புதிய கூறு முறை, இவருக்கு, ’நவீனச் சிறுகதைகளின் தந்தை’ என்னும் பெயரைப் பெற்றுத் தந்தது.  போர்க்காலத்தில் பாதிக்கப்படும் சராசரி குடிமகனின் வேதனை, பெண்களின் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் என பல்வேறு தலைப்புகளில்  300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். மனித மனம் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல்களையும் நுட்பமாக எழுதிக் காட்டினார்.  ஒரு கட்டத்தில், ஆபாசப் பத்திரிக்கைகள் இவரது பெயரை மட்டும் அட்டையில் போட்டு , ஆபாசக் கதைகளை வெளியிட்டு, பணம் சம்பாதித்த  நிகழ்வும் நடந்தது. ஆனால், இவரது கதைகள் வெறும் பாலியல் கதைகள் மட்டும்  அல்ல. மாறாக, உளச்சிக்கல்களை, தெளிந்த நீரோடை போல் காட்டும் செவ்வியல் கதைகள் இவருடையவை. 

                            பெரும்பாலான இவரது கதைகள் Semi Autobiographical வகையைச் சார்ந்தது. Ball of Fat, The Necklace, Bell Ami போன்ற படைப்புகள், காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. மொத்தத்தில் இவரது அனைத்து கதைகளும் , பிரான்ஸில் மட்டுமல்ல, உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது கதைகளையும், கதை சொல்லும் முறைகளையும் உலக எழுத்தாளர்கள் பலரும் முன் மாதிரியாகக் கொண்டனர். ஓ ஹென்றி, சோமெர்செட் மாம், ஹெச்.ஜேம்ஸ் போன்ற பெரிய எழுத்தாளர்களும் இவரைப் போலவே எழுத முயற்சித்தனர். லியோ டால்ஸ்டாய் , மாப்பசானின் கதைகளையும், எழுத்தாற்றலையும் வெகுவாகப் பாராட்டி கட்டுரை எழுதினார். புகழின் உச்சிக்கே சென்றார் மாப்பசான். 
                     1880 ஆம் ஆண்டு, ஜிஸிலி எஸ்டாக் என்ற பெண்மணியைச் சந்தித்தார். அவளிடத்தில் ஆறு ஆண்டுகள் கழிந்தன. அதன்பிறகே, தனது காதல் மனைவியான, ஜோசபைனைச் சந்தித்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அன்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த மாப்பசானுக்கு, அழகான புதிய உலகம் ஒன்று கிடைத்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. மன அழுத்தமும், நோய்களும் அவரை மன நல மருத்துவமனையில் கொண்டு போய் படுக்க வைத்தது. 
               வாழ்வில் அவர் எதிர்கொண்ட மனக்கவலைகளும், குழப்பங்களுமே அவரை, தொடர்ந்து எழுத வைத்தன. அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடிந்த அவரால், மனச்சுமையை மட்டும் இறக்கி வைக்க முடியவில்லை.  நாம் செய்யும் எல்லாத் தவறுகளும், ஒரு கட்டத்தில் ஒன்று கூடி , நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. மாப்பசானின் உடல் மற்றும் சூழல் அவருக்கு எதிராக, உறுதியாகச் செயல்படத் தொடங்கியது. இளம் வயதில் இவரை பாதித்த ‘சிபிலிஸ்’( Syphilis- A kind of Sexually Transmitted disease) எனப்படும் ஒருவகை பால்வினை நோய், இவரை விடாமல் துரத்தியது.   கூடவே, மனச்சிதைவு காரணமாக மனமும் சமநிலையில் இருக்க மறுத்தது. துயரங்கள் எழுந்து நின்று, இவரை அமிழ்த்திய போதும் கூட,   வெள்ளைத்தாளில் கறுப்பு மை கொண்டு அவர் எழுத ஆரம்பித்து விட்டால், எழுத்துக் கடவுளாக மாறிவிடுவார். ஆம், அவரது எழுத்துத்திறன் மட்டும் கடைசி வரை குறையவே இல்லை. 
                     1892, ஜனவரி மாதத்தின் அதிகாலைப் பொழுதொன்றில், கூரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டார். உலகோடும், உறவுகளோடும்  அதுவரை  அவர் கொண்டிருந்த வாழ்வு, அவருக்குப் போதுமானதாக இருந்தது. இந்த முறை,  வெள்ளைத் தாளோடு பேசுவதற்குப் பதிலாக, மனதோடு பேசிக்கொண்டே, கழுத்தினை அறுக்கத் தொடங்கினார். மரணமும் அவருக்கு மனதுக்கு எதிராக வேலை செய்தது. மாப்பசான், அரை உயிரோடு காப்பற்றப்பட்டு, பாரிஸில் உள்ள ஒரு மன நல மருத்துவ  மையத்தில் சேர்க்கப்பட்டார். ஆம், அவர் உயிர் பிழைத்தார். ஆனால், மனநலம் மட்டும் மீண்டும் சரியாகவே இல்லை. சரியாக ஓராண்டு கழித்து, 1893ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி, தனது, 43 ஆம் வயதில், சிறுகதைகளின் மன்னன், தனித்த  அறையினுள் , ஓரிடத்தில் இறந்து கிடந்தார்.  சிறுகதை போலவே, அவரது சிறிய வாழ்வும் முடிந்து போனது, ஆனால், அழுத்தமாக. (இக்கட்டுரை எழுதும் இந்த நேரம்,  புதுமைப்பித்தன் நினைவில் வந்து வந்து போகிறார். )
                  தற்போது, பாரிஸ் நகரத்தில், மாண்ட்பார்னஸி கல்லறைத் தோட்டத்தின் 26ஆவது பிரிவில், குழப்பங்கள், மனச்சிக்கல்கள் ஏதுமின்றி இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் மாப்பசான். வாழ்க்கை என்பது என்னவென்று கேட்க, நாம் அவரை எழுப்பவேண்டியதில்லை. ஏனெனில் தனது கல்லறை வாசகத்தையே, கேள்விக்குப் பதிலாக தந்து விட்டுப் போயிருக்கிறார் மாப்பசான். அவர் விரும்பிச் சொன்னபடியேதான் , கல்லறை வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
             “I have coveted Everything and taken pleasure in Nothing".

                    ஒளியை விடவும் வேகமாய் நீள்கின்றன மனதின் ஆசைகள். அப்படி என்றால், வாழ்வெனும் கோப்பையை நிரப்புவதும், முழுதாய் சுகிப்பதும் இங்கே சாத்தியமாகுமா?
           ஆம்,  நடப்பவை யாவும் நடக்கட்டும் - எனக் கடந்து செல்லும் மனம் மட்டுமே -  கடைசி நொடி வரை இங்கே வாழ்கிறது.

Saturday, August 3, 2019

Dr.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்

மனதைத் தோண்டும் மருந்து- ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்.


            பிரசவ காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், தனது உள்ளத்தின் அடியில் மறைந்து கிடக்கும் ரகசியங்களைப் பற்றி, தாராளமாகப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், அவர்கள் மறைக்கக் கூடியதான விஷயம், அப்போது ஏதும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை ஒரு மருத்துவர் ஆய்வு செய்யத் தொடங்கினார். வலி நிவாரணிகளாகக் கொடுக்கப்படும் மருந்துகள் தான், அவர்களது சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தி, உண்மையை மட்டுமே பேச வைக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

                  இதே மருந்துகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகளின் உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிய, பல்வேறு சோதனைகள் செய்தார். இறுதியில், குற்றவியல் வழக்குகளில், உண்மை கண்டறியும் மருந்துகளின் மூலம் , குற்றவாளிகளின் உள்ளத்தை அறிவதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். இதன் மூலம், குற்றவியல் புலன் விசாரணையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார் அந்த மருத்துவர். அவர் தான், Truth Serum என்று அழைக்கப்படும் உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை டாக்டர்.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ் (1875-1930).

              "ஸ்கோபோலமின் ஹைட்ரோ ப்ரோமைட்" (Scopolamine hydrobromide) என்னும் மருந்தினை உட்செலுத்தி, மனம் மறைக்க நினைக்கும் செய்திகளை, வெளியே கொண்டு வர முடியும். மருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களால் பொய் சொல்ல முடியாது என்பதை உறுதி செய்தார் ராபர்ட் ஹவுஸ். தனது ஆய்வின் முடிவுகளை, 1922 ஆம் ஆண்டு கட்டுரையாக எழுதி வெளியிட்டார். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, டெக்ஸாஸ் மாகாணச் சிறையில் , போலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் முன்னிலையில் இரண்டு கைதிகளிடம் இதனைப் பயன்படுத்தியும் காட்டினார். அந்த இரண்டு விசாரணைக் கைதிகளும், குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். அவரது இத்தகைய செயல்பாடு, பலவிதமான சட்டவிவாதங்களையும் , மனித உரிமை சார்ந்த பேச்சுக்களையும் உருவாக்கியது. ஆதரவும், எதிர்ப்பும் சம பலத்தில் தோன்றி மறைந்தன.

                         1875ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜான் ஃபோர்ட்-மேரி ஹவுஸ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ். 1899ஆம் ஆண்டு, (மகப்பேறு) மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார். டெக்ஸாஸ் மாகாணத்திலேயே, மகப்பேறு மருத்துவராகப் பணி செய்யத் தொடங்கினார் ராபர்ட் ஹவுஸ். அப்போது, தொழில் மீதான அர்ப்பணிப்பு காரணமாக, மருத்துவ ஆய்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தார்.

              பிரசவ காலத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வலி மறக்கச் செய்யும் மருந்துகள் பற்றிய ஆய்வில் அவரது கவனம் திரும்பியது. வழக்கமாக பெண்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட, பிரசவ காலத்தில் , அவர்களாகவே சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதற்குக் காரணம், அப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள் தான் என்பதையும் விரைவிலேயே கண்டறிந்தார்.

                அதனையே மனிதனின் மனதில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியுமா என்பதில், கவனம் செலுத்தத் தொடங்கினார். அதனையே ஆய்வுகளாகச் செய்து நிரூபித்தும் காட்டினார். 1920களில் மட்டும் இந்தத் தலைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகளிடம் Scopolamine Hydrobrimide மருந்தினை உட்செலுத்தி, உண்மை கண்டறிய முயற்சி செய்தார். இதில், தனக்கு 100 சதவீதம் வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிவித்தார் ராபர்ட் ஹவுஸ்.

                         ஆனால், ஏனைய மருத்துவர்கள் இது 50 சதம் மட்டுமே நம்பக்கூடியதாக உள்ளது. ராபர்ட் ஹவுஸ் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி, இதனை உண்மையாக்க முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். இம்மருந்தினைச் செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றிய விவாதமும் தீவிரமாகப் பேசப்பட்டது. ஆனால், ராபர்ட் ஹவுஸ் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது ஆய்வுகளைச் செய்து கொண்டே வந்தார். அவருக்கு, பல நீதிமன்றங்களின் ஆதரவும் கிடைத்தது. இவரது ஆய்வினைக் கொண்டே, பல வழக்குகளில் தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

                     ஆய்வுகளுக்காகவே தனது வாழ்நாள்களைச் செலவிட்டவர்களுள் இவரும் ஒருவர். உணவு மறந்து, தூக்கம் தொலைத்து ஆய்வுப் பணிகளிலேயே மூழ்கிக் கிடந்த ராபர்ட் ஹவுஸின் உடல் நிலை , வெகு சீக்கிரத்திலேயே கெட்டுப் போனது. 1929ஆம் ஆண்டு, பக்க வாத நோய் இவரைத் தாக்கியது. முடங்கிப் போனார். தனது 55வது வயதில், 1930 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 15ஆம் தேதி ராபர்ட ஹவுஸ் மறைந்தார்.

                    இன்று, உலகெங்கும் பல்வேறு நாடுகளில், Truth Serum என்ற பெயரில் வெவ்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. Pentothal, Sodium Thiopental என பல வகையான வேதிப்பொருட்கள் , சட்டத்திற்கு உட்பட்டும், சட்டம் அறியாத வகையிலும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், Scopolamine Hydrobromide என்னும் வேதிப் பொருளைப் பயன்படுத்தி, குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர் என்ற வகையில், டாக்டர். எர்னெஸ்ட் ஹவுஸ், ”உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை” என அழைக்கப்படுகிறார். அதன் காரணமாகவே, அறிவியல் உலகில், அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

                  அமெரிக்க நீதிமன்றங்களில் இந்த மருந்தினைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள், இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த வழிமுறை சரியா - தவறா, இதன் வெற்றி சதவீதம் என்ன என்பதெல்லாம் முடிவுக்கு வரமுடியாத கேள்விகளாகவே எஞ்சி நிற்கின்றன. தற்போது, வேறு பல நோய்களுக்கு மருந்தாக, Scopolamine Hydrobromide மூலக்கூறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                        பொதுவாக, மனித குலத்துக்கு நன்மை தரும் எதனையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்; அது, சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ள, ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைக்கூட பாதிக்காதவரை.! 
             மேலும், குற்றவாளிகளிடம் மட்டுமல்ல, எல்லா மனித மனங்களிலும் உண்மை புதைந்தே கிடக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டு வருவதுதான் , நமக்கு எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறது.

                     உண்மையில் சக மனிதன் ஒருவனின், மனதின் குரலை அறிந்து கொள்ள - ஏதேனும் வழி இருக்கிறதா? ஆம் எனில், அந்த வழி, என்னவாக இருக்கக் கூடும்?

              

Friday, August 2, 2019

பிங்கலி வெங்கையா


கொடியின் வடிவம் - பிங்கலி        வெங்கையா.   

           நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வேளாண்மை, தொழில் துறை என எல்லாத் தளங்களிலும் பங்காற்றியவர்; காந்தியடிகளின் பாராட்டைப் பெற்று,  இந்திய மூவண்ணக்கொடியை உருவாக்கியவர்; இன்று இந்திய தேசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்; அவர் தான்  பிங்கலி வெங்கையா (Pinkali Venkaiah, 1878-1963). அவரது  பிறந்த நாள் இன்று.  

                  பிங்கலி வெங்கையா, ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகில் உள்ள பெட்டகல்லேபள்ளி  என்னும் கிராமத்தில், ஹனுமந்தராவ்-வெங்கட ரத்னம்மா தம்பதியரின் மூத்த மகனாகப்  பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.  இவர் மட்டும் ,  தாத்தா சலபதி ராவின்  வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்.  அவர் கண்காணிப்பில்தான் பள்ளிப்படிப்பையும்  படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன்,  கொழும்பு சென்று பட்டம் படித்தார். பின்பு,  லாகூர் ஆங்லோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து, சமஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றார்.

                            பிங்கலி வெங்கையாவுக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவர் பன்முகத் திறன் பெற்றவராக இருந்தார்.    1913ஆம் ஆண்டு, குண்டூர் அருகில் உள்ள பப்பட்லா என்னும் ஊரில், ஜப்பானிய மொழியில், அவர் முழுமையான மேடைப்பேச்சு ஒன்றை நிகழ்த்தினார். தங்கு தடையின்றி இவர் பேசிய சொற்பொழிவு,  “ஜப்பான் வெங்கையா” என்னும் சிறப்பு அடைமொழியை அவருக்குப்  பெற்றுத் தந்தது.

               கொலம்பிய பருத்தி விதைகளில் சில மாற்றங்கள் செய்து , பருத்தி வளர்ப்பில் ஆர்வம் காட்டினார். இவரது உழைப்பின் வெற்றி,  'லண்டன் ராயல் வேளாண்மைக் கல்லூரியில்' இவர்  சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆதலால்,  இந்தியாவில் “பட்டி(பருத்தி) வெங்கையா “ என பெருமையோடு அழைக்கப்பட்டார்.

             சுதந்திரத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து மதிப்பு மிக்க கற்களை எடுக்கும் கலையில் நாட்களைச் செலவிட்டார். அரசும் இவரது அறிவை பயன்படுத்திக் கொண்டது. வைரக் கற்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பதைச் சொன்னார். அதனால்,  அந்த வட்டாரத்தில் “டைமண்ட் வெங்கையா” என்ற பெயர் பிரசித்தி பெற்றது. 

              இப்படி, பல சிறப்பு பெயர்கள் இருந்தாலும், நமது தேசியக் கொடியை வடிவமைத்ததால் கிடைத்த “ஜண்டா வெங்கையா” என்ற பெயரையே அவர் மிகவும்  விரும்பினார். 1921 ஆம் ஆண்டு, விஜயவாடா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இந்திய தேசியக் கொடியை அறிமுகம் செய்ய விரும்பினார் காந்தியடிகள். பிங்கலி வெங்கையாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அந்த ஒரே இரவில் கொடியின் அமைப்பைத் தயார் செய்தார். காந்தியடிகளின் விருப்பப்படி, அதில் வெள்ளை வண்ணம் இணைக்கப்பட்டது. அன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கொடிக்கான ஒப்புதலையும் காந்தியடிகள் பெற்றார். வெங்கையாவைப் பாராட்டி, தனது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றையும் எழுதினார் காந்தியடிகள். இதன் காரணமாகத்தான், இவருக்கு ‘ஜண்டா வெங்கையா’ என்னும் சிறப்புப் பெயர் கிடைத்தது.

      இந்திய தேசியக் கொடியை உருவாக்க பலரும் தனது பங்களிப்பை -  முயற்சிகளை செய்திருக்கிறார்கள். மேடம் காமா, அன்னி பெசண்ட் அம்மையார், பால கங்காதர திலகர் போன்றோர் தேசியக் கொடியை உருவாக்குவதில் பலவிதத்தில் பங்காற்றினார்கள். ஆனால் முழு வடிவம் கொடுத்தது பிங்கலி வெங்கையாதான்.
           1916 ஆம் ஆண்டில்,  "A National Flag for India" என்னும் புத்தகத்தை எழுதி, அதை காந்தியிடம் காட்டுகிறார். அதன் அடிப்படையில், காந்தி சில ஆலோசனைகளைச் சொல்ல, இந்தியாவுக்கான மூவண்ணக் கொடி தயாராகிறது. 1931ஆம் ஆண்டு, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து, பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவண்ணக் கொடியே ஏற்றப்பட்டு வந்தது.

          1947ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவன்று ஏற்றப்பட்ட,  தேசியக்  கொடியில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.  பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மூவண்ணக் கொடியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக  அசோகச் சக்கரம் வைக்கப்பட்டது. இதனை சுரையா (ICS அதிகாரி பத்தியார் தியாப்ஜியின் மனைவி) என்பவர் சரிசெய்து கொடுத்தார்.  இந்த மாற்றத்திற்கு,   நீண்ட யோசனைக்குப் பிறகே, தனது சம்மதத்தைத் தெரிவித்தார் காந்தியடிகள். இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு மிக நீண்டது; வெகு  சுவாரஸ்யமானது.  அதில் பிங்கலி வெங்கையாவின் பங்கு, எந்தவிதத்திலும் புறந்தள்ள முடியாதது.

        தேசியக்கொடியின் உருவாக்கம் பற்றிய வரலாறு, சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.   ’யங் இந்தியா’ பத்திரிக்கையில் இவரைப் பற்றியும் , தேசியக் கொடியை உருவாக்குவதில் இவரது உழைப்பைப் பற்றியும் காந்தியடிகள் விரிவாக எழுதிய கட்டுரை, எல்லா விவாதங்களுக்கும் பதிலாக உள்ளது. .                             

        பிங்கலி வெங்கையா தனது, 19ஆவது வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார். ஆப்பிரிக்கா சென்று போயர் போரில் கலந்து கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். ரயில்வே துறையில் சில காலம் பணியாற்றினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்தும் குழுவில் ஆய்வாளராக சில காலம் பணியாற்றினார். இப்படி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவரான பிங்கலி வெங்கையா,  1963 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி, மிகவும்  வறுமையான நிலையில் இறந்து போனார்.  காந்தியடிகள் மறைவுக்குப் பிறகு,   இந்திய தேசம் அவரை முழுவதுமாக மறந்திருந்தது. 

       விடுதலை பெற்ற இந்தியாவில் அவரைப் பற்றிச் சொன்ன  அதிகாரப்பூர்வமான சொற்கள் மிகவும் குறைவே. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தனது மேடைப் பேச்சில் ஒரு முறை அவரைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ், பிங்கலி வெங்கையாவிற்கு சிலை எடுத்தார்.  அவர் இறந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு , அவரது புகைப்படத்துடன் கூடிய தபால் தலை ஒன்று, 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. பாரத ரத்னா விருதிற்காக, பலமுறை  பரிந்துரை செய்யப்பட்டபோதும், எந்த மத்திய அரசும் இக்கோரிக்கைக்கு  இதுவரை பதில் சொல்லவில்லை.

                   ஆந்திர முதல்வராக இருந்த   என்.டி.ராமராவ்,  ஹுசைன் சாகர் ஏரிக்கரையில், 33 தலைவர்களுக்கு சிலைகள் நிறுவினார். அங்கே பிங்கலி வெங்கையாவிற்கும் சிலை ஒன்று வைக்கப்பட்டது. ஆனால்,  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது, ஏரிக்கரையில் இருந்த 17 சிலைகள் மர்ம நபர்களால்  அகற்றப்பட்டன. அதில் பிங்கலி வெங்கையாவின் சிலையும் ஒன்றாகும். இவர் தெலுங்கானா பகுதியைச் சாராதவர் என்பதே, சிலை அகற்றுவதற்கு , போதுமான காரணமாக மாறியது என்பது  வேதனைக்குரிய நிகழ்வல்லவா?

          "நான் வடிவம் கொடுத்த தேசியக் கொடியால் என் உடலைப் போர்த்தி, அக்கொடியை மரக்கிளையில் பறக்க விடுங்கள்" என்ற அவரது கடைசி ஆசை மட்டும், நண்பர்களால்  நிறைவேற்றப்பட்டது.  மரக்கிளையின் உச்சியில், காற்றில் பறந்த அந்த தேசியக் கொடியில்தான் அவரது ஆன்மா கலந்திருக்கும். ஆதலால், அடுத்த முறை நமது தேசியக் கொடி,  காற்றில் பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும்போது, பிங்கலி வெங்கையாவினை ஒரு வினாடி நினைவில் ஏந்துங்கள். அவரது தியாகங்களுக்கு உளப்பூர்வமாக  நன்றி சொல்லுங்கள். அது போதும், தேசியக் கொடிக்குள்ளே ஊடாடிக் கிடக்கும் அவர், நிச்சயம் சந்தோஷம் கொள்வார்.!  

      ஆம், தேசியக் கொடி என்பது,  வெளிச்சம் படாத  எண்ணற்ற தியாகிகளின் இரத்த நாளங்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அதனை வணங்குவது என்பது,   முகம் அறியாத எண்ணற்ற தியாகிகளை நாம் வணங்குவதற்கு ஒப்பாகும்.

விண்ணில் பறக்கிறது தேசியக்கொடி - காரணம் காற்றல்ல -
தியாகிகளின் மூச்சு!

Thursday, August 1, 2019

ஹெர்மன் மெல்வில்

திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில்

(இருநூறாவது பிறந்த நாள் இன்று! )

"It is better to fail in originality than to succeed in Imitation" - Herman Melville.

            
     'Call me Ishmael,' என்ற ஒரு நாவலின்  முதல் வரியை, ஆங்கில இலக்கியம் வாசித்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆம், 'மோபி டிக்' என்கிற அந்த நாவல், அழியாப் புகழை அணிந்து கொண்ட ஓர் அழகிய படைப்பு.!
    எழுத்துக்களின் வழியே வாழ்வின் முற்பகுதியில் பெரும் புகழ் பெற்றவர் , பிற்பகுதியில் மறக்கப்பட்டார்; அடுத்த நூற்றாண்டில் மீண்டும் இலக்கிய உலகத்தால் கொண்டாடப்பட்டார்; 'மோபி டிக்' என்னும், அந்த ஒற்றை  நாவல் வழியே, அவர் என்றென்றும் நினைவில் இருப்பார். அவர் தான் அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில் (1819-1891) .
              சரியாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,    அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1819 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ஆம் தேதி, ஹெர்மன் மெல்வில் பிறந்தார். தந்தை ஆலன் ஒரு வணிகர். ஆண்டின் பெரும்பகுதி நாள்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூரிலேயே, அவர் தங்க வேண்டியிருந்தது. தாய் மரியா மெல்வில் தான் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் நிர்வகித்து வந்தார். ஏழாவது வயதில், ஹெர்மன் மெல்வில்லை  விஷக் காய்ச்சல் ஒன்று தாக்கியது. அதன் காரணமாக, அவருக்கு நிரந்தர பார்வைத் திறன் குறைபாடு உண்டானது. வாழ்நாள் முழுவதும், அக்குறைபாடுடனேயே, அத்தனை சாதனைகளையும் செய்து காட்டினார்  மெல்வில்.
                    திடீரென்று நிகழ்ந்த  தந்தையின் மரணம் காரணமாக, 13 வயதிலேயே படிப்பை நிறுத்திக் கொள்ளும் துயரம் அவருக்கு  ஏற்பட்டது. வறுமை அவரது குடும்பத்தை விடாமல் துரத்தியது. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும் என்று காத்திருந்த தாயின் நம்பிக்கையும்  வீணானது. குடும்பத்தை நடத்துவதற்கே தாய் மரியா மிகவும் சிரமப்பட்டாள். அதனால்,  வேறு வழியின்றி, 1839ஆம் ஆண்டு, வியாபாரக் கப்பல் ஒன்றில்  மாலுமியாகச் சேர்ந்தார் ஹெர்மன் மெல்வில். பிறகுதான் திமிங்கல வேட்டையாடும் கப்பலில் (1840) இணைந்து கொண்டார்.
                இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கப்பல் பயணம். மனம் தளர்ந்தார் ஹெர்மன் மெல்வில்.  கடும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, பயணத்தின் இடையில்,  1842ஆம் ஆண்டு,  டைபி பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள  ஒரு தீவுப் பகுதியில்  கப்பலில் இருந்து தப்பினார். கப்பல் உரிமையாளர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க, சில காலம் அங்கேயே தங்கினார் மெல்வில்.  மனம் நிறைய காதலும், மூளை நிறைய அனுபவமும் பெற்ற மெல்வில், புத்துணர்ச்சியுடன்  மீண்டும் போஸ்டன் நகருக்குத்  திரும்பினார்.
                              டைபி பள்ளத்தாக்கில் ,  தான் பெற்ற அனுபவங்களை தனது முதல்  நாவலாக எழுதி வெளியிட்டார். அருமையான நடையில், மென்மையான காதலுணர்வோடு எழுதப்பட்ட  Typee (1845) என்ற அந்த நாவல் , வியாபார ரீதியிலும், விமர்சகர்கள் மத்தியிலும்  பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து , Omoo (1847) என்ற நாவலும்  வெளிவந்து, அதுவும்  பெரிய வெற்றி  பெற்றது. அந்நாளைய  மாபெரும் எழுத்தாளர், ’நாதேனியல் ஹாதோர்னின்’ நண்பரானார் மெல்வில். அவரது வீட்டுக்கு அருகிலேயே, இவரும் சென்று குடியேறினார்.    1850 ஆம் ஆண்டு இவர் எழுதிய,  White Jacket புத்தகம், அமெரிக்க கப்பற்படைஅதிகாரிகளின் வாழ்வை கடுமையாக விமர்சனம் செய்தது. இவரது எழுத்துக்கள் கவனிக்கப்பட்டன.
       அந்த காலக்கட்டத்தில்,  கடலின் அறிவிக்கப்படாத அரசனாக இருந்த திமிங்கலத்தை, வேட்டையாடுவது  என்பது கடலோடிகளின் முக்கிய சாகசச் செயலாக இருந்தது.  கப்பல்களை அழிக்கும் திமிங்கலங்களை வேட்டையாடுவது என்பது, பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. அதிலிருந்து தயாரிக்கப்படும் திமிங்கல எண்ணெய், மருந்தாகப் பயன்படுவதும் முக்கியக் காரணமாக இருந்தது.
                              1830களில், சிலி நாட்டுத் தீவுப் பகுதியில், ’மோச்சா டிக்’  என்னும் திமிங்கலம் அட்டகாசம் செய்து வந்தது. அதனைக் கொல்ல பல முற்சிகள் நடந்தன. அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன. மெல்விலும் கடலோடியாக இப்பயணத்தில் சென்றிருக்கிறார். அவரது கடல் பயண அனுபவங்களையும் கற்பனையையும் சரியாகக் கலந்து உருவான நாவல் தான் “மோபி டிக்”. இது, தமிழில்  'திமிங்கல வேட்டை' என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      குறியீடுகளையும் அடையாளங்களையும் கொண்டிருந்த இந்த நாவல், நிறுவனமயமான கிறிஸ்துவத்திற்கு எதிரான மெல்விலின் குரல் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று உலகமே கொண்டாடும் நாவல் மோபி டிக். ஆனால், இது  1851 ல் வெளிவந்த போது, வியாபார வெற்றியும் பெறவில்லை; விமர்சகர்களின்  ஆதரவையும் பெறவில்லை. 
               அதன் பின்னர் வெளிவந்த நூல்கள் ,கட்டுரைகள், கவிதைகள், அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் என எதுவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மோபி டிக் நாவலுக்குப் பிறகு,  18000 வரிகளுக்கும் அதிகமான வரிகள் கொண்ட கவிதை நூல்களையும் மெல்வில் எழுதி  வெளியிட்டார். அவை யாவும் ஏதேதோ அரசியல் காரணங்களுக்காகப் புறந்தள்ளப்பட்டன. மெல்வில்லின்  புகழும், வருமானமும் குறையத் தொடங்கியது. வேறு வழியின்றி, இறுதியில், சொந்தமாக பண்ணை வாங்கி, விவசாயம் செய்யத் தொடங்கினார் ஹெர்மன் மெல்வில்.
                                       இவரது மனைவி பெயர் எலிசபெத் ஷா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளோடு கவிதைகள் பற்றி பேசிக் கொண்டே இருப்பார் மெல்வில்.  ஒருமுறை, அதிகாலை இரண்டு மணிக்கு, தனது மகளை எழுப்பி, ஒரு கவிதையைத் திருத்தி, எழுதித் தரச் சொன்னாராம்.  இப்படி எழுத்தையே தனது உயிராகக் கொண்ட மெல்வில்,  1891 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி, மன அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால்  இறந்து போனார். அப்போது ’பில்லி பட்’ (Billy Budd) என்னும் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். அந்நாவல் அவரது இறப்புக்குப் பின்னர் தான் வெளியிடப்பட்டது. அது மாபெரும் வெற்றியையும்  பெற்றது. ஆனால் இறப்பின் போது, வறுமையைத் தவிர அவரிடம் ஏதும் இருக்கவில்லை. புகழ், செல்வம் இரண்டும் அவரை விட்டு நீங்கியிருந்தன. 
                       காலங்கள் கடந்தன.    1919 ஆம் ஆண்டு, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அவரது படைப்புகள் மீண்டும் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டன. ’மோபி டிக்’ உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று என ஒட்டுமொத்த இலக்கிய உலகமும், அவரை  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அதன் புகழ் வெளிச்சம்  இன்றளவும் பிரகாசமாகவே இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வரியும் எழுத்தின் வலிமையையும் மெல்விலின் திறமையையும்  சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
    ”என்னை இஸ்மாயில் என்றே அழையுங்கள்....”, என்னும் முதல் வரி மிகவும் பிரசித்தி பெற்றது. மோபி டிக் நாவல், கடலில் திமிங்கலத்துடனான போராட்டத்தை மட்டும் சொல்லவில்லை. மாறாக, மனித மனத்தின் அகச் சிக்கல்களையும், வாழ்க்கைப்  , போராட்டத்தையும் பற்றிப் பேசுகிறது. நாவலில் வரும் கேப்டன் ஆகாப் தான் நாமெல்லாம். ஆம், அடிபட்ட புலி போல, நாம் ஏதோ ஒன்றுக்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.
            மோபி டிக் நாவலில் ஒரு வரி வரும் - ‘எந்த ஒரு மனிதனின் வாழ்வும் சாவும் அவனது மனதில் தான் உள்ளது’. அப்படி எனில்,  மெல்விலின் வாழ்வும் முடிவற்றது. ஏனெனில் அவரது மனம்தான் மோபி டிக். ஆதலால், ’மோபி டிக்’, ஹெர்மன் மெல்வில் -  இந்த இரண்டு சொற்களுக்கும் , இந்த உலகில்  மரணம் என்பதே கிடையாது.
                     ஆம், கடல் எழுப்பும் ஓயாத ஒலியைப் போல, எழுத்தாளனும் தன் படைப்புகளின் வழியே - தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். படைப்பாளிக்கும், அவனது படைப்புக்கும் இங்கே  மரணம் என்பது கிடையாது!