Wednesday, August 29, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 29

மைதானத்தில் மாயாஜாலம் - தயான் சந்த்.

ஆகஸ்ட் 29....இன்று!


"This is not a game of Hockey, but magic. Dhyan Chand is in fact the magician of Hockey".

   'ஹாக்கி' என்ற சொல்லையும், அதுதான் 'இந்தியாவின் தேசிய விளையாட்டு' என்பதையும்  அறியாதவர்கள்,   தயான் சந்த் என்ற நடு வரிசை முன்கள வீரரை அறிந்திருக்க வாய்ப்பில்லை!
           ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை  தங்கப் பதக்கம்; சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோல்கள்; உள்ளூர் போட்டிகளையும் சேர்த்தால் இவரது கோல்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டும்; ஹாக்கி மைதானத்திற்குள்  நுழைந்த 'மந்திரவாதி' போல கோல்களைப் பொழிந்து, பார்வையாளர்களை மிரட்சியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய  வீரர் தயான் சந்த் (1905-1979) பிறந்த நாள் இன்று.  
          1905ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் நாள், சமேஷ்வர் சிங் - சாரதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் தயான் சிங். அலகாபாத் நகரத்தில் பிறந்த தயான் சிங்கிற்கு, மூல் சிங், ரூப் சிங் (இவரும் ஹாக்கி வீரர்) என  இரண்டு சகோதரர்கள். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சமேஷ்வர் சிங், அடிக்கடி பணி மாறுதல் செய்யப்பட்டதால் , தயான் சிங்கால்  பள்ளிப் படிப்பை தொடர்ந்து நிறைவு செய்ய இயலவில்லை. 
          தானது 16ஆவது வயதில், தந்தையைப் போலவே , ராணுவத்தில் சேர்ந்தார். மல்யுத்தப் போட்டிகளில் விரும்பி கலந்து கொண்டார்.  ராணுவ அணியில் சேர்ந்து விளையாடும் போதுதான், முதல் முறையாக ஹாக்கி மட்டையைத் தொடுகிறார். ஆனால், லாவகமாக பந்தைக் கடத்திச் செல்லும் திறனும், ஆடுகளத்தில் இவர் காட்டிய  வேகமும் முதல் முறை மட்டையைத் தொட்டவர் போலத் தெரியவில்லை. 
      தயான் சிங்கிற்கு பகல் முழுக்க ராணுவத்தில் வேலை. ஆனால்,    இரவு தொடங்கும்போது, மைதானத்தில் இருப்பார். சந்திரன் தனது அமுத ஒளியைப் பாய்ச்சத் தொடங்கும் போது, தனது பயிற்சியைத் தொடங்குவார். ஆம், இரவு மின் விளக்குகள் இல்லாத அந்த மைதானத்தில், சந்திர  ஒளியில் இரவு முழுதும் பயிற்சி செய்யும் தயான் சிங்கை , அவரது நண்பர்கள்  ’சந்த்’ என்றே அழைக்க ஆரம்பித்தனர். சந்த் என்றால் நிலா என்று பொருள். தயான் சிங் அப்போதிலிருந்து தயான் சந்த் ஆனார். 
        ராணுவ அணியிலிருந்து, இந்திய தேசிய ஹாக்கி அணிக்காக விளையாட, தேர்வு செய்யப்பட்டார் தயான் சிங்.  1926ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி தான், இவரது  முதல் சர்வதேசப் போட்டி. 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி, தங்கப் பதக்கம் பெறக் காரணமாக இருந்தார்.  ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் தனி ஆளாக  101  கோல்கள் அடித்திருக்கிறார். 
           1934 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக, தயான் சந்த் நியமிக்கப்படுகிறார். ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கெதிரான தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெறுகிறது. தயான் சந்த்தின் ஆட்டத்தைப் பார்த்த 'கிரிக்கெட்டின் பிதாமகன்' டான் பிராட்மன் மிரண்டு போனார். கிரிக்கெட் ஆட்டத்தில் குவிக்கப்படும் ரன்களை விடவும் வேகமாக கோல் மழை பொழிகிறார் என தயான் சந்த்தைப் பாராட்டினார்.  
        1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டி.  அனல் பறக்கும் ஆட்டத்தால்   எல்லா அணிகளையும் வெற்றி கண்டு, இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா.  ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்திருந்த, அந்த  'நாஜி ஒலிம்பிக்' போட்டியின் இறுதிப் ஆட்டத்தில்  இந்தியாவும் , ஜெர்மனியும் மோதின. போட்டி நடைபெற்ற நாள் 1936, ஆகஸ்ட் 15.  காண வந்த எண்ணற்ற ரசிகர்களுள் ஜெர்மனி அதிபர் ஹிட்லரும் ஒருவர். 
             முதல் பாதி முடிவில்,  ஜெர்மனி ஒரு கோல் அடித்து, 1-0 என முன்னிலையில் இருந்தது. ஹிட்லரின் முகத்தில் சந்தோஷம் வழிந்து கொண்டிருந்தது. இந்தியாவின் தோல்வி உறுதி என, ஐம்பதினாயிரம் ரசிகர்களும் முடிவு செய்திருந்தனர். ஆனால், தயான் சந்த் அப்படி நினைக்கவில்லை.           
       இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. தயான் சந்த், தனது மாயாஜால மட்டையைக் கொண்டு , ஜெர்மனி அணியினரை திக்கு முக்காட வைத்தார். இரண்டாம் பாதியில் மட்டும் இந்திய அணி எட்டு கோல்கள் அடித்தது. அதில் தயான் சந்த் ஹாட்ரிக்  கோல்கள் அடித்திருந்தார். முடிவில் இந்தியா 8-1 என ஜெர்மனியை வென்று, தங்கப் பதக்கத்தை தன் வசமாக்கியது. ஹிட்லர் முகம் வற்றிப்  போனது. மயான அமைதியில் ஜெர்மனி ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.  
        பதக்கம் பெற மேடைக்குச் சென்ற தயான் சந்த்திடம் , ’ஜெர்மன் நாட்டுரிமையும், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன், இங்கே வந்து விடுகிறாயா?’ எனக் கேட்கிறார்  ஹிட்லர்.  சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவிக்கிறார் தயான் சந்த். 
    தயான் சந்த் கையில் இருப்பது மட்டையா அல்லது காந்தமா என சந்தேகப்பட்டு , ஒரு முறை அவரது மட்டை உடைத்துப் பார்க்கப்பட்டது. நான்கு கைகள், நான்கு  ஹாக்கி மட்டைகளை வைத்திருப்பது போன்ற தயான் சந்த்தின் சிலை , ஆஸ்திரியா தலைநகரம் வியன்னாவில் வைக்கப்பட்டிருக்கிறது. உலகம் வியக்கும் இந்த ஹாக்கி மேதையின் பிறந்த நாளையே , 'இந்தியாவின் தேசிய விளயாட்டு தினமாக' நாம் கொண்டாடி வருகிறோம் , ஒரு சடங்கு போல.
          1956 ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற தயான் சந்த்திற்கு ஏழு குழந்தைகள். இவரது மனைவி பெயர் ஜானகி தேவி.  ராணுவத்தில் மேஜர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, சில காலம், ஹாக்கி அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டார் தயான் சந்த்.   1952ஆம் ஆண்டு, சென்னையில் வெளியிடப்பட்ட இவரது சுயசரிதைப் புத்தகம், 'Goal!',  வெகு சுவாரஸ்யமான நூல்களில் ஒன்றாக உள்ளது. ஹிட்லர், பிராட்மன் உட்பட உலகமே வியந்த இந்த ஹாக்கி மேதையை உள்ளூர் மக்கள் முழுமையாக அறியவில்லை என்ற சோகம் இன்று வரை தொடர்கிறது. 
      இறுதிக் காலத்தில்,  ஞாபக மறதி, கல்லீரலில் புற்று நோய் என  அவதிப்பட்ட தயான் சந்த் வறுமையில் தான் இருந்தார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொதுப் பிரிவில், 1979 ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இறந்து போனார். தயான் சிங் என்ற தயான் சந்த்தின் உடல், சில சர்ச்சைகளுக்குப் பிறகு,  ஜான்ஸி நகரில்  அடக்கம் செய்யப்பட்டது. அங்கே, அவருக்கு சிலை ஒன்றும்  நிறுவப்பட்டது.    
         ஆண்டு தோறும் அவரது  பெயரில், விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு பாரத் ரத்னா விருது மட்டும்  தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.  தயான் சந்த்தை, இன்னும் நாம் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும்.

        அரசியல் அற்ற தூய்மைவாதிகள், யார் கண்களுக்கும் தெரிவதே இல்லை. புறக்கணிப்பை அவர்களும் பெரிதுபடுத்துவதில்லை. பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் கர்ம யோகிகள் அவர்கள்! 
            

No comments:

Post a Comment