Monday, June 29, 2020

பாரதி நினைவுகள் – நூல் அறிமுகம்


பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்

நூல் அறிமுகம்.

                  மாயனூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன  விடுதியின்  மொட்டை மாடியில்,  யாருமற்ற பின்னிரவுப் பொழுதுகளில் தொடங்கும் பேச்சு, விடிகாலை வரை நீண்டு செல்லும்.  நானும், சின்னையனும் சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்போம். எங்களுக்குப் போட்டியாக,  விடுதியைச் சுற்றி இருந்த ஆலைகள், இரவு முழுவதும் சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும். எங்களின் பேசு பொருள் எதுவாக இருந்தாலும், பாரதியின் கவிதைகளே பேச்சினை முன்னெடுக்கும்; பிரச்சனையைத் தீர்த்து வைக்கும். பாரதியின் கவிதை வரிகளைச் சொல்லிச் சொல்லியே இரவினைக் கடத்துவோம். தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் கூட, இந்த ஜகத்தினையே அழித்திடச் சொன்ன பாரதியே, அப்போதும் எங்களின் உள்ளம் கவர் நாயகனாக இருந்தார்.
          எனது நண்பன் சின்னையன், பாரதியின் கவிதைகளைப் போலவே, அவரது மீசையையும் ரசிக்கக் கூடியவனாக இருந்தான்.  பதினெட்டு, பத்தொன்பது  வயதுகளில் இருந்த எங்களில், சின்னையனுக்கு மட்டுமே பாரதியைப் போல  முரட்டு மீசை இருந்தது. அதனைத்  தனது விரல்களால், அவன் அடிக்கடி நீவி விட்டுக் கொள்வான்.
                பயிற்சி நிறுவனத்தில் இருந்த விரிவுரையாளர் ஒருவர், என்னை அழைத்து, ‘இது படிக்கக் கூடிய இடம், இப்படியெல்லாம் மீசையை வைத்துக் கொள்ளக் கூடாது, நாளை வரும் போது, அவன் கட்டாயம் மீசையை எடுத்திருக்க வேண்டும்’ என்று காட்டமாகச் சொன்னார். ’என்னிடம் ஏன் இதைச் சொல்றீங்க சார், அவனிடமே சொல்லலாமே’ என்று பதில் மொழி சொன்னேன். ‘கேள்வி கேட்காதய்யா, நான் சொன்னதை மட்டும் அவனிடம் சொல்’ என்று மெல்லிய புன்னகையுடன் பதில் அளித்தார்.  இந்தத் தகவலை நான் சின்னையனிடம் சொன்னேன். ‘பாரதி மீசையை எடுக்க முடியாதுடா…, அவரு நேரா சொல்லும் போது, பார்த்துக்கலாம்’ என்று கம்பீரமாகச் சொல்லி விட்டான்.  இரண்டு ஆண்டு காலத்தில், அந்த விரிவுரையாளர் அவனிடம்  இது பற்றி நேரே சொல்லவும் இல்லை; அவன் மீசையை எடுக்கவும் இல்லை.
             இருபதாம் நூற்றாண்டில், ’பாரதியின் மீசை’ என்பது ஒர்  அடையாளம். அது கம்பீரத்தின் சின்னம்.  மீசை இல்லாத பாரதி, என் மனக்கண்ணில் கூட வர மறுக்கிறான். ஆனால், பிரெஞ்சு அரசின் ஆளுகைக்குக் கீழ் இருந்த புதுச்சேரியில்,  பாரதியார் தங்கியிருந்த போது, ஒரு பதினைந்து நாள்கள் தாடி, மீசையை மழித்துக் கொண்டு, மாறுவேடத்தில் தமிழகம் உட்பட சில இடங்களுக்கு வந்து போயிருக்கிறார். மனைவி செல்லம்மா மற்றும் நண்பர்கள்  பலர், அவரைக் காணாது தவித்திருக்கின்றனர்.  ரகசியப் பயணம் முடிந்த பின்னர், பாரதியார்  மீண்டும் புதுச்சேரி திரும்பிய நாளில், உடன் பழகிய நபர்களாலேயே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீசையில்லாத பாரதியை யாருக்குத்தான் தெரியும்?  ’மீசையும் தாடியும் இல்லாமல் வந்திருந்த பாரதியை எனக்கு, சுத்தமாக அடையாளம் தெரியவில்லை’, என்கிறார் யதுகிரி அம்மாள். ’மாறுவேடத்தில் பயணித்த போது, ரயிலில் ஒரு பிச்சைக்காரப் பெண் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றைப் பாடினார்.  அதே தாளத்தில் நான் ஒரு பாடல் பாடுகிறேன் கேள்..’ என்று மீசையில்லாத பாரதி பாடத் தொடங்குகிறார்.
              ‘ பாருக்குள்ளே நல்ல நாடு 
                 எங்கள் பாரத நாடு’.  
    தனது கம்பீரமான குரலால் பாரதி பாடும் போது, அனைவரும் சமாதானமாகி விடுகிறார்கள்.                        
            1912 முதல் 1918 வரை, புதுச்சேரியில் பாரதியின் மகள் போல் (அபிமான புத்திரி) இருந்தவர் தான் யதுகிரி அம்மாள்.  இவர், பாரதியின் நண்பரும், இந்தியா பத்திரிக்கையின் முதலாளியுமான மாண்டயம் ஸ்ரீ ஸ்ரீநிவாசனின் மூத்த மகள்.   அப்போது தனது பதின்ம வயதுகளில் இருந்த யதுகிரி அம்மாள், பாரதியாரோடு தனக்கு இருந்த நினைவுகளை,  ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் (1938-1939)  கட்டுரைகளாக எழுதியிருந்தார். அவற்றின் தொகுப்பு தான் ‘பாரதி நினைவுகள்’ என்னும் இந்தப் புத்தகம்.
          யதுகிரி அம்மாளின் மீது, பாரதிக்கு மிகுந்த பிரியம் இருந்தது. அவரைத் தனது மூத்த மகளாகவே எண்ணினார். தனது கவிதைகளைப் பாடச் சொல்லிக் கேட்பது, எழுதிய கவிதையின் மூலப்பிரதியை யதுகிரிக்குக் கொடுத்துவிடுவது, உலக வழக்கங்கள், வேதங்கள், அரசியல்  பற்றி உரையாடுவது என,  யதுகிரியின் மீது, பாரதிக்கு உயர்ந்த அன்பு இருந்தது. அச்சாகி வரும் நூலின் முதல் பிரதியில், “செளபாக்கியவதி யதுகிரி தேவிக்கு அன்புடன் கொடுத்தேன் - சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று எழுதிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பாரதியார். 
       பாரதி வீட்டில் இல்லாத நேரங்களில், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு உற்ற தோழி போலவும் யதுகிரி  இருந்திருக்கிறார். பாரதியோடு ஏற்படும் கருத்து மோதல்களை, யதுகிரியிடம் பேசிப்பேசியே மன ஆறுதல் அடைவார் செல்லம்மாள். வயது வேறுபாடு இருந்தாலும், செல்லம்மாளின் உற்ற தோழியாக இருந்தார் யதுகிரி அம்மாள்.   
           ’இந்தியா’ பத்திரிக்கையில் அரசுக்கு எதிராக, கடுமையான கட்டுரைகளையும், கருத்துப் படங்களையும் வெளியிட்டதால்,இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு முடிவு செய்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரிலும், இதழ்களில் தொடர்ந்து எழுதுவதற்காகவும் சென்னையிலிருந்து தப்பித்து, புதுச்சேரிக்குச் செல்கிறார் பாரதியார். அங்கே, வ.வே.சு ஐயர், அரவிந்தர், மாண்டயம் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் ஆகியோரோடு சுமார் பத்து ஆண்டுகள் வாழ்கிறார். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும், கவிதைகள் பற்றியும், வேதங்கள் பற்றியும் இவர்களோடு நாளெல்லாம் உரையாடிக் கொண்டே இருக்கிறார் பாரதியார். சிறுமியாக இருந்த யதுகிரிக்கு, இவற்றை எல்லாம் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
         நாள் தவறாமல், காலை மற்றும் மாலை வேளைகளில், மூன்று குடும்பத்தாரும் புதுவைக் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செய்யச் செல்கிறார்கள். உடன் வரும் குழந்தைகள் மணலில் விளையாட, பாரதி கவிதைகள் எழுதி பாடிக் கொண்டே இருக்கிறார். செம்படவர்கள் பாடும் மெட்டில் ஒரு பாட்டு, குடுகுடுப்பைக்காரன் பாடும் மெட்டில் ஒரு பாட்டு என கவிதைகள் பிறந்தவண்ணம் இருக்கின்றன. மூத்த மகள் தங்கம்மாவுக்காக கும்மிப் பாட்டு, இளைய மகள் சகுந்தலாவுக்காக விட்டு விடுதலை ஆகும் சிட்டுக் குருவியின் பாட்டு என கவிதைகளாலேயே காலத்தைக் கடத்துகிறார் பாரதியார்.
         ஒருமுறை கடலுக்குச் செல்லும் போது, பாம்பாட்டி ஒருவன் மகுடி ஊதியபடியே ஏதாவது தானம் கேட்க, தன்னிடமிருந்த காலணாவைத் தர மறுக்கிறார் யதுகிரி. ’சமுத்திர ஸ்நானம் செய்யும் போது, கடலில் தான் இந்தக் காலணாவை எறிய வேண்டும்’ என்று சொல்லி விடுகிறார். பாரதியாரோ,   தனது புத்தம் புதிய வேட்டியை அவனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு, வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தாராம்.  ’அந்தக் காலத்தில் குளங்களைத் தூர் வாரும் போது, அந்தப் பணியாளர்களை ஊக்கப்படுத்தவே, குளிக்கும் குளத்தில் காசு போடும் வழக்கம் இருந்தது. ஆனால், கடலில் காசு போடும் வழக்கம் முட்டாள்தனமானது. கடல் ராஜனுக்குக் காசு போடும் மூட நம்பிக்கையை விட,  இப்படிப்பட்ட ஆள்களுக்கு உதவுவதே உண்மை மகிழ்ச்சி’ என்று சொல்லியிருக்கிரார். யதுகிரியும் தனது தவற்றினை உணர்ந்து, இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். வீட்டுக்கு வந்தவுடன், பாம்பாட்டி மகுடி ஊதிய மெட்டில்,
            ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்-மிடிப்
             பயங் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்’
என்ற பாடலை எழுதிப் பாடுகிறார் பாரதியார்.
                 சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு, எழுதி அனுப்பும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலமாகவே, அப்போது பாரதியாருக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது. அவர் தொந்தரவு ஏதுமின்றி எழுதுவதற்குத் தோதாக, மைப்புட்டி, தாள், பென்சில் என எல்லாவற்றையும் செல்லம்மாள் பார்த்துப் பார்த்துச் செய்வாராம். ஒருநாள் வீட்டில் அரிசி குத்தும் பெண் ஏற்படுத்தும் ஒலியால், பாரதி எழுத முடியாமல் தவிக்கிறார். ’அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாளை வரச் சொல்கிறேன், நீங்கள் தொந்தரவின்றி  எழுதுங்கள்’ என செல்லம்மாள் சொல்ல, ‘ இல்லை செல்லம்மாள், அவள் உலக்கை உருவாக்கும் ஹூம் ஹூம் என்னும் ஒலி, என்னை கவிதை எழுதச் சொல்கிறது.  அந்த ஒலி, ’வேண்டும் , வேண்டும்’ என என்று என் காதில் விழுகிறது’ என்கிறார் பாரதியார். கட்டுரைக்குப் பதிலாக ஒரு கவிதை எழுதுகிறார்.
      ‘மனதில் உறுதி வேண்டும்
      வாக்கினிலே இனிமை வேண்டும்..”  - என்ற அந்தப் பாடலை, யதுகிரியிடம் சத்தமாகப் பாடிக் காட்டுகிறார்.
              1916 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் புதுச்சேரியை, கடும் புயல் காற்று தாக்குகிறது. திக்குகள் எட்டும் சிதறி விழுவது போல, மழை கொட்டித் தீர்க்கிறது. பாரதியும் அவரது நண்பர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்போது, நூறு மரங்களுக்கும் குறைவாக இருந்த ஒரு தென்னந்தோப்பு அதிக சேதாரமின்றி தப்பியிருந்தது. உடனே, ’பிழைத்த தென்னந்தோப்பு’ என்ற தலைப்பில் அங்கேயே கவிதை ஒன்றைப் படைக்கிறார். அதே நாளில், ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் நிலங்கள் சமமாக பங்கிட்டுத் தரப்பட்டதாக செய்தி வருகிறது. பாரத பூமியிலும் அதனை எப்படிச் செய்வது என்று யோசனை செய்து,
       ‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி
           காணி நிலம் வேண்டும்.’ - என பட்டியல் கவிதை ஒன்றைத்  தயார் செய்திருக்கிறார்.   
             தனது மகள்கள் தங்கம்மாள் மற்றும் சகுந்தலா இவர்களோடு யதுகிரி அம்மாளையும் சேர்த்து வைத்துக் கொண்டு எந்த நேரமும் பாரதியார் உரையாடிக் கொண்டே இருக்கிறார். தேவையற்ற ஆசாரங்களைத் தூர எறிய வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். விவாதங்களுக்குப் பொறுமையாக பதில் சொல்கிறார். ஆங்கில மோகம் தேவையில்லை என்பதை விளக்கிக் கூறுகிறார்.
         பிஜித்தீவில் தமிழர்கள் மாட்டிக் கொண்ட கதையை யதுகிரிக்குச் சொல்லும் போது,  நமது கண்களும் கண்ணீரில் நிறைகின்றன. யதுகிரியின் வீட்டு மாடியில்தான், ’கரும்புத் தோட்டத்திலே..’ என்று தொடங்கும் பாடலை எழுதி, உரத்த குரலில் பாடிக் காட்டுகிறார். யதுகிரிக்கு கண்கள் கலங்கி விடுகின்றன. பிறகு, பாரதியே ஆறுதலும் சொல்கின்றார்.
         பால்ய வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை கடுமையாக எதிர்க்கிறார் பாரதியார். யதுகிரி அம்மாளுக்கு திருமணம் நடக்கும் நாளில், புக்ககம் செல்லும் யதுகிரிக்கு  அவர் சொல்லும் அறிவுரைகள், இந்தப் புத்தகத்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று எனச் சொல்லலாம்.
             ‘நீ இரண்டு வீட்டுக்கும் விளக்கைப் போல பிரகாசிக்க வேண்டும். அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உன்னை அவர்கள் விலை கொடுத்து வாங்கவில்லை. அவர்கள் வீட்டில் உனக்கு பூரண உரிமை உண்டு. பணம் காசு விஷயங்களில் தலையிடாதே. வேலை செய்யப் பின்வாங்காதே. உன் தாய் தகப்பனார் கற்றுத் தந்த விஷயங்களை முடிந்தால் அபிவிருத்தி செய்; முடியாவிட்டால் இருப்பதை மறக்காதே. தலை நிமிர்ந்து நட. நேர்ப்பார்வையில் பார். கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் மட்டுமே. தைரியமாகப் பேசு. இதனால் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.’ – பாரதியின் இந்த வார்த்தைகள் தான்,  துன்பமான நேரங்களில் தன்னை மீட்டெடுத்ததாக யதுகிரி அம்மாள் பெருமையோடு பதிவு செய்திருக்கிறார். யதுகிரிக்கு மட்டுமல்ல, திருமணத்திற்குத் தயாராகும் எல்லாப் பெண்களுக்கும், எல்லாக் காலத்திற்கும் - இது பொதுவான செய்தி அல்லவா?   
            இரண்டாவது மகள் சகுந்தலா பிறந்த போதே பூணூல் போடுவதை பாரதியார் நிறுத்திக் கொண்டு விட்டார். ’யாகம், யக்ஞம்  செய்கிறவர்களுக்குத்தான்  இது வேண்டும், எனக்கு எதற்கு’ என்று, வாத்தியாரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் என்ற குறிப்பும் இதில் வருகிறது. மடியாய் இருப்பது, தேவையற்ற ஆசாரங்களைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களில் பாரதிக்கும் செல்லம்மாவிற்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்களும் இந்த நூலில் உண்டு. பாரதியார் எல்லாருடைய வீட்டிலும் சாப்பிடுவார், எல்லாரையும் சாப்பாட்டிற்கு அழைத்து வருவார். எந்தச் சூழலிலும், யாரிடத்திலும் பேதங்கள் பார்க்காத மேதை அவன் என்பதை இந்த நூலும் உறுதி செய்கிறது.
       யதுகிரிக்குத் திருமணம் ஆகி, மைசூர் சென்று விடுகிறார்.  பிரசவ காலம் மற்றும் விசேஷ காலங்களில் வீட்டிற்கு வரும்போது, பாரதியைத் தவறாது காண்கிறார். பாரதியின் செயல்களில் பெரிய மாறுபாடு தோன்றி இருந்தது. ’சாகா வரம் தரும் மந்திரச் சொற்களைக் கண்டுபிடிப்பதற்காக, அடிக்கடி மெளன விரதம் இருக்கிறார். யாரோடும் பேசுவதில்லை. இரவெல்லாம் கடற்கரையில் நின்று கொண்டு, பராசக்தியை வேண்டிக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கே வருவதில்லை. ’எள்ளத்தனைப் பொழுதும் - பயனின்றி இராதென் நாவினிலே’ என்று பாடிய இவர், இப்படி  இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது’ எனப் புலம்பும் செல்லம்மாவின் சொற்கள், நமக்கும் வலியை ஏற்படுத்துகின்றன.
       பண்டாரங்கள் மற்றும் சில சாமியார்களோடு ஏற்பட்ட தொடர்பால், போதை வஸ்துகளின் பழக்கம் பாரதிக்கு உண்டாகிறது. எலும்பும் தோலுமாய், விழிகள் மட்டும் கூர்ந்திருக்கும் பாரதியைப் பற்றி, யதுகிரி அம்மாள்  சொல்லிச் செல்லும் இடங்களைப் படிக்கையில் - மனம் தாளாத துயரத்தில் வீழ்கிறது. பாரதி, 1918ல் சென்னை திரும்புகிறார். அதற்குள், நண்பர்களால் திருத்த முடியாத எல்லைக்கு அவர் போய்விடுகிறார். 
               ஒருமுறை, சிவந்த விழிகளுடன் புதுவைக் கடற்கரையில் இரவு முழுக்கத் தனித்து அமர்ந்திருந்த பாரதியிடம், தனது அப்பா  கோபமாக ஆங்கிலத்தில் பேசியதையும் யதுகிரி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மரணத்திற்கு முந்தைய கணங்களில் கூட, செல்லம்மாளிடம் யதுகிரியைப் பற்றி நலம் விசாரித்திருக்கிறார். பாரதி எதிலும் தீவிரத்தன்மை கொண்டவன். ஆம்,   எதையும் செய்து பார்த்து விடும் துணிச்சல், மானுட சிந்தனைக்கும் மேற்பட்ட கற்பனை, குழந்தைத் தன்மை மாறாத மனம் – இவைதானே நமது பாரதி.
            அதிகம் படித்திராத, வீட்டிலேயே தந்தையிடம் பயின்ற -  ஒரு சிறுமியின் பார்வையில், நடந்த நிகழ்வுகள் யாவும்,  26 கட்டுரைகளாக இந்த நூலில்  சொல்லப்பட்டிருக்கின்றன. வாசிக்கும் நாம்,  அவற்றை இணைத்துப் பார்க்கும் போது, பாரதி என்னும் மகாகவியின் ஆளுமையை நமக்குள் வரைந்து கொள்ள முடியும். மேலும்,  பாரதியோடு நடந்த பேச்சுகள் யாவும், நூல் முழுவதும் உரையாடல் முறையிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அவற்றை வாசிக்கும்   போது, இயல்பாகவே நாமும் அந்தச் சூழலுக்குள் நுழைந்து விடுகிறோம். வார்த்தை ஜாலங்கள் எதுவும் இன்றி, இயல்பான சொற்களில் இருப்பதே இந்த நூலின் உயரத்தைக் கூட்டுகிறது.
             இந்த நூலில் வெளிப்படும் பாரதியின் பரிமாணங்கள் மிக முக்கியமானவை. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, குழந்தைகளுக்கு ஓர் ஆசானாக, ஒரு நண்பனாக – பாரதியின் அழகான உண்மை முகம், இந்த நூலில் வார்த்தைகளால் வடிக்கப்பட்டிருக்கிறது. பாரதி பற்றி அறிய நினைப்பவர்கள் இதனை அவசியம் படிக்க வேண்டும்.
        மகாகவி  பாரதியார் - வண்ண வளையல்கள் நிரப்பப்பட்ட ஒரு கலைடாஸ்கோப். யார் வழியாக, எப்படிப் பார்த்தாலும் -  வண்ணங்கள் நிரம்பிய அழகிய வடிவமாய் - அவன் உருவம் பெறுகிறான்.  பார்க்கும் தோறும் - புதிய பாரதி, வந்து கொண்டே இருக்கிறான். 
           ஆம், நண்பர்களே, சொல்லும் பொருளும் புதிதாக்கி - சோதி மிக்க புதுக்கவிதை தந்தவனின் வாழ்வும் - எப்போதும் புதிதாகவே இருக்கிறது. 

நூலின் பெயர்: பாரதி நினைவுகள்
ஆசிரியர் : யதுகிரி அம்மாள்
வெளியீடு : சந்தியா பதிப்பகம்.
         
                       
      
        

Friday, June 19, 2020

வாக்கியங்களின் சாலை - நூல் அறிமுகம்


வாக்கியங்களின் சாலை - எஸ்.ராமகிருஷ்ணன்.

நூல் அறிமுகம்.


                     2003 ஆம் ஆண்டின் துவக்க காலம் - ஒரு சனிக்கிழமை, பள்ளி  விடுமுறைக்கால நாளொன்றில், நானும் எனது சகோதரர்  மிகாவேலும் சேலம் நகருக்கு வந்திறங்கினோம். ஏற்காட்டில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.   எதேனும் ஒரு திரைப்படம் பார்ப்பதும், சில புத்தகங்கள் வாங்கி வருவதும் தான், எப்போதுமே எங்களது விடுமுறை நாளின் திட்டமாக இருக்கும். ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு இறங்கி வரும்போது, அரசுப் பேருந்தைத் தான் தேர்வு செய்வோம். ஏனெனில், வாந்தி வரும் உணர்வு இல்லாமல் நிம்மதியாக, நிதானமாக மலை இறங்கி வருவதற்கு அதுவே  சிறந்த தேர்வாக இருந்தது. மீண்டும் மலை ஏறுவதற்கு தனியார் பேருந்தைத் தேர்வு செய்து கொள்ளலாம், அதில் ஏதும்  பாதகமிருக்காது.
            அப்படி, சேலம் வரும்போதெல்லாம், புத்தகங்கள் வாங்குவதற்காகவே பழைய பேருந்து நிலையம் பகுதிக்குச் செல்வோம். அன்றும் சில புத்தகக் கடைகளுக்குச் சென்றோம். சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு எதிர்புறம்,   ’புக் வோல்ட்’ (Book World) என்னும் புத்தகக் கடை ஒன்று அப்போது இருந்தது. அங்குதான், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ’வாக்கியங்களின் சாலை’ என்னும் புத்தகம் எங்கள் கண்ணில் பட்டது.  புத்தக அட்டையின் கீழ்ப் பகுதியில்,  ஜப்பானியச் சாயல் கொண்ட இரண்டு பெண்கள் தலை சாய்ந்து, சோகத்துடன் நின்றிருப்பார்கள். அட்டையின் ஏனைய பகுதிகளில் மீன்கள் சித்திரம் வரையப்பட்டிருக்கும். பார்த்தவுடன் வசீகரித்தது அந்தப் புத்தகம்.  தனக்கு விருப்பமான  புத்தகங்களைப் பற்றி, குமுதம்-தீராநதி இணைய இதழில், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்  என முன்னுரை சொல்லியது. அதனையும் வாங்கிக் கொண்டோம்.
      மாலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் சென்று, ஏற்காடு செல்வதற்காக பேருந்தில்  ஏறி, வசதியாக உட்கார்ந்து கொண்டோம். வாங்கி வந்த நூல்களில்  ஒரு நூலை எடுத்து அவர் வாசிக்க, நான் ‘வாக்கியங்களின் சாலை’, புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.  பேருந்து கிளம்பியதும் தெரியவில்லை; கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் தெரியவில்லை. மனம் புத்தகத்திலேயே, முழுதுமாக லயித்துக் கிடந்தது.   
                    ‘புத்தகம் என்பது ஒரு பெரிய பாலைவனம்   போன்றது. நுழையும் வாசல் எளிதானது; ஆனால் வெளியேறும் வழி சாத்தியமற்றது’  என்ற அரேபியப் பழமொழியைச் சுட்டிக் காட்டி , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்த முன்னுரையே நூலுக்குள் என்னைக் கட்டி இழுத்தது.  படிப்பறையில் எந்தவித முணுமுணுப்புமின்றி, நமக்காகக் காத்துக் கிடக்கும் புத்தகங்கள் பற்றி எழுதப்பட்ட,  ‘நானும் எனது புத்தகங்களும்’ என்ற  முதல் கட்டுரை மனதினை எதேதோ சிந்தனைக்கு இட்டுச் சென்றது.
            அவருடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான 19 நூல்களைப் பற்றிய அவரது எண்ணங்களை, இந்த நூலில் எஸ்.ரா பதிவு செய்திருந்தார். அவை யாவும்  உலகின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளின் சிறந்த படைப்புகள். வாழ்வில் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக, அந்தப் புத்தகங்களை எஸ்.ரா. அறிமுகப்படுத்திய விதம் பிரமாதமாக இருந்தது. கட்டுரைகளின் அமைப்பு மற்றும் நடை,  157 பக்கங்களையும் இரண்டு மணி நேரத்திற்குள் வாசிக்க வைத்தது. அவரது அனுபவங்களும், அவர் சொன்ன புத்தகங்களும் - சொற்களால் சொல்ல முடியாத ஆறுதலை மனதுக்குத் தந்தன. 
         அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்  ஷெல்டன் பி காப் எழுதிய ’ நீ சாலையில் புத்தரைச் சந்திக்க நேர்ந்தால் கொன்று விடு’ என்ற புத்தகத்தைப் பற்றித்தான் முதல் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. செங்கோட்டை ரயில் நிலையத்தில், தனது வருகைக்காக, தானே காத்திருக்கும் தாமோதரன் என்ற மனிதரின் கதையைச் சொல்லி, அதன் வழியே இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் எஸ்.ரா. தன்னைத் தானே தேடி அலையும் அகப் பயணம் பற்றி இந்த நூல் பேசுகிறது. இந்தக் கட்டுரையில் வரும் , ”வழிகாட்டுதல் அல்ல, வாழ்தலே மிகவும் மிக்கியமானது” என்ற வரிகளை யாரால் எளிதில் கடந்து விட முடியும்?. இப்போதும் கூட,  ரயில் நிலையங்களில் தனிமையில் நிற்கும் மனிதர்களைக் காணும் போதெல்லாம் தாமோதரனும், ஷெல்டனின் புத்தகமும் நினைவுக்கு வந்து போகின்றன. 
        இடாலோ கால்வினோவால்,  இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட ’புலப்படாத நகரங்கள்’ புத்தகம் எனக்கு அறிமுகமானது இந்தக் கட்டுரைகளின் வழியே தான். சீன அரசன் குப்ளாய் கானுக்கும், வெனிஸ் நகரப் பயணி மார்க்கோபோலோவுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம்.  பின் நவீனத்துவ நாவல் வரிசையில் இந்தப் புத்தகம் மிக முக்கியமானது என்று சொல்கிறார் எஸ்.ரா.
       ஜாக் லண்டன் எழுதிய ‘கானகத்தின் குரல்’,  ஜார்ஜ் லூயி போர்ஹே எழுதிய ’புதிர் வழி’, பால் ராப்ஸ் மற்றும் நியோஜென் எழுதிய ‘ஜென் தசைகள்-ஜென் எலும்புகள்’, ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய ‘டீமியான்’ என இவர் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் அனைத்தும் நம்மை ஆக்கிரமிக்கின்றன.
  லூயி பிராண்டோவின் ‘எழுத்தாளனைத் தேடும் ஆறு கதாபாத்திரங்கள்’, ஆந்த்ரே தார்க்கொவெஸ்கி எழுதிய ‘காலத்தைச் செதுக்குதல்’ , மார்க்வெஸ் படைத்த சாகாவரம் பெற்ற நாவலான ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ என தனது மனதுக்கு நெருக்கமான புத்தகங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறார் எஸ்.ரா. 
             கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லூயி கரோல், தனது உறவுக்காரச் சிறுமிக்காக எழுதிய நாவல் தான் ‘ஆலீஸின் அற்புத உலகம்’. குழந்தைகளுக்காகவே இது எழுதப்பட்டது. ஆனாலும்,  பெரியவர்கள் இதனை வாசிக்கலாம்; அவர்களுக்கும்  ஏற்ற வகையில்   தனித்துவமான மொழியில் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
        தான் பிறந்த மருத்துவமனையைப் பார்க்க செல்லும் எஸ்.ரா. அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த இடம் தற்போது பள்ளிக்கூடமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியைத் தனது தாயிடம் வந்து பகிர்ந்து கொள்கிறார்.  இந்த அனுபவத்தின் ஊடாக, டவ்சென்லோ எழுதிய ‘வசீகரமான டெஸ்டினா’ என்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறார். வாசிப்பவர்களும் தங்களது இளமையைத் திரும்பிப் பார்க்கிறார்கள். ’பால்யத்தின் நினைவுகள் - பச்சை இலைகளைப் போல எபோதும் இளமையானது என்பது ஒரே நேரத்தில் - ஏக்கத்தையும் இன்பத்தையும் தரக் கூடியது’ என்ற உண்மையை டவ்சென்கோ வழியாக நமக்கு உணர்த்துகிறார்.
           ரில்கே எழுதிய கவிதைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் மிக அழகானது. அதில், தனது பதின்ம வயதில் சந்தித்த நிலோபர் பெர்ட்ஸியைப் பற்றிச் சொல்லும்போது,  நமது நினைவுகளும் எங்கெங்கோ செல்கின்றன. 
      காமப்புத்தகங்கள் எழுதும் கதாசிரியரைச் சந்திக்க விரும்பும் எஸ்.ரா, நண்பரின் உதவியுடன் ஒரு மனிதரைச் சந்திக்கிறார். உரையாடல் ஏதுமற்ற நீண்ட அமைதிக்குப் பிறகு, சில சொற்களை மட்டும் அந்த மனிதர் பேசுகிறார்.  லாட்ஜ் ஒன்றின் மாடியில் காமக்கதை எழுதும் அவருக்கு, ஒரு புத்தகம் எழுதிக் கொடுத்தால், இருநூறு ரூபாய் தருவார்கள் என்றும், தனது குடும்பம் தெற்கே இருப்பதாகவும் கூறுகிறார். வெளியில் முகம் காட்ட முடியாத வேலையைச் செய்து கொண்டிருக்கும் அந்தக் கதாசிரியரின் மன உலகம் எப்படி இருக்குமோ? உண்மையில் வாழ்க்கை விசித்திரமானது தான். 
  போர்னோகிராஃபி புத்தகங்களை விரும்பிப் படித்த புதுமைப்பித்தன் பற்றியும், சரோஜா தேவி புத்தகங்கள் பற்றியும் சொல்லியபடியே,   ’லோலிதா’ என்னும் முக்கியமான நாவல், இலக்கிய உலகில் அடைந்த இடத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். லோலிதா நாவலை எழுதிய விளாடிமிர் நபகோவ் பற்றிய குறிப்புகளையும் தருகிறார். 
            மதுரைப் பல்கலைக் கழக நூலகத்தில் மழை நாளொன்றில் , ’நார்னியா’ தொகுப்பினை வாசித்த அனுபவத்தைச் சொல்லும்போது, நாமும் அந்த ஈரக்காற்றின் சுகந்தத்தை அனுபவிக்கலாம்.  இப்படியாக, முக்கியமான புத்தகங்களை எஸ்.ரா அறிமுகம் செய்யும் விதம் வாசிப்பின்பத்தை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தி’  புத்தகத்தையும் இந்தத் தொகுப்புதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
         எல்லாக் கட்டுரைகளுமே என்  மனதுக்கு மிக நெருக்கமானவை என்றாலும், இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதெல்லாம், கடைசிக் கட்டுரையைத்தான் மனம் வாசிக்க விரும்பும். ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டாவின் ‘உள்ளங்கைக் கதைகள்’ - சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் கட்டுரை அது.
     தூத்துக்குடிக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்து வந்த கல்லூரிக் கால நண்பனை, எதேச்சையாக சென்னையில் பேருந்து ஒன்றில் சந்திக்கிறார் எஸ்.ரா. தனது திருமண அழைப்பிதழைத் தந்து, அவசியம் வர வேண்டும் என்ற நண்பனின் அழைப்பைத் தட்ட இயலவில்லை.
        திருமனத்திற்கு முதல் நாள் இரவு, நண்பனின் கிராமத்திற்குச் செல்கிறார். விளக்கு வெளிச்சம் ஏதுமில்லாத அந்த மண் சாலையில் , கொத்தமல்லிச் செடி பூத்திருப்பதன் வாசம் நாசியை நிறைக்கிறது. நண்பனின் வீடு, கல்யாணக் களையில் மினுங்கிக் கொண்டிருந்தது. முதல் நாள் சடங்குகளின் இடையில் எஸ்.ராவைப் பார்க்க மணமகன் வருகிறான். அங்கிருந்த சிறிய மர அலமாரியைத் திறந்து காட்டுகிறான். அதில், அவன் வாழ்வோடு சம்பந்தமில்லாது போன ஆங்கில இலக்கியப் புத்தகங்களும், இதழ்களும் நிறைந்து கிடக்கின்றன.
         பெட்டியின் மேலாக,  மார்லோ எழுதிய ‘டாக்டர் பாஸ்டஸ்’  புத்தகம் கண்ணில் படுகிறது. கல்லூரி விடுதியில் , சாத்தானிடம் தன்னையே  விற்றுவிட்ட பாஸ்டஸ் போல, அதன் வரிகளை, பயமூட்டும் முக பாவனையுடன் நண்பன் நடித்துக் காட்டும் கல்லூரிக் கால நினைவுகள் எஸ்.ராவுக்கு வந்து போகின்றன. அந்த பெட்டிக்குள்தான், எஸ்.ராவிடம் நண்பன் படிப்பதற்காக வாங்கியிருந்த, ‘உள்ளங்கைக் கதைகள்’ நூலும் இருக்கிறது. ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் அது.  
             அந்த நூலின் சில பக்கங்களில், ஒரு சில பெண்களின் பெயர்களும் அவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளையும் அந்த நண்பன் எழுதி வைத்திருந்தான். இருவர் கண்ணிலும்  அவை பட்டு மறைகின்றன.  சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு, முப்பது வயதில் உதட்டில் இருந்த முத்தங்கள் யாவும் உறைந்து போய், யாராவது ஒரு பெண் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருப்பதாக நண்பன் கூறுகிறான். யசுனாரி கவாபட்டாவைப் போல மனதுக்கு ஆறுதல் தரக் கூடிய, வேறு யாரும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு, மெதுவாக நகர்ந்து போகிறான்.
       இதே கட்டுரையில் தான்,   ’தூங்கும் அழகிகள் இல்லம்’ (House Of Sleeping Beauties - Yasunari Kavabatta) என்ற நாவலைப் பற்றிய அறிமுகத்தையும் எஸ்.ரா. எழுதுகிறார்.  மிகச் சிறிய இந்த நாவலைப் படிப்பதற்குள் காய்ச்சல் கண்டு, மனம் விதும்பித் திரிந்த நாள்களை நமது கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் எஸ்.ரா. ஏதேதோ கனவுகளோடு துவங்கும் கல்லூரிக் காலம், எங்கோ ஒரு புள்ளியில் நின்று விடுகிற போது, மனம் தாளாத வேதனை கொள்கிறது. சாத்தானிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட டாக்டர் பாஸ்டஸ் போல, தனது ஆசைகளை, தனது விருப்பங்களை, தான் கற்ற ஆங்கில இலக்கியங்களை - என  எல்லாவற்றையும் மெளனப் பெருவெளியிடம் ஒப்படைத்துவிட்டு, கிராமத்தில் எதிர்பாராத ஒரு புதிய வாழ்வினைத் தொடங்கும் அந்த நண்பனின் பாத்திரம் என் மனத்தை விட்டு, இன்று வரை அகலவே இல்லை. 
                 ஏற்காடு சென்று இறங்குவதற்குள் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். தூத்துக்குடி அருகில் வசிக்கும் அந்த நண்பனுக்கு , எனது மனம் ஒரு உருவத்தைத் தந்திருந்தது. எனக்கு மிகவும் பழக்கமான உருவமாக அது இருந்தது. பேருந்தில் மலை ஏறி வந்தவுடன்  வழக்கமாக ஏற்படும் அலுப்பு, அன்று ஏனோ எனக்குத்  தோன்றவில்லை. மாறாக, மனம் புத்துணர்ச்சியோடு இருந்தது.  
          எதிர்பாராத நேரங்களில் மனத்துயர் ஏற்படும் போதெல்லாம் இந்தக் கட்டுரையை நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் தேவையாயிருக்கிறது. அதிலும், ஆறுதல் தருபவன், பொறாமை கொள்ளாதவனாக, முதுகுப் பக்கம் பேசாதவனாக, வஞ்சகம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அது மாதிரியான ஓர் உண்மையான  நண்பன் இருக்கிறான் என்றால், அது புத்தகங்கள் மட்டும் தான். அப்படி, நமக்கு அறிவையும் ,ஆறுதலையும் தரக்கூடிய இனிமையான புத்தகங்களைத் தான், இந்த நூல் நமக்கு  அறிமுகம் செய்கிறது.
                     நெடுங்குருதி, யாமம், சஞ்சாரம், இடக்கை போன்ற நாவல்கள், குறிப்பிடத்தக்க சிறுகதைகள், பயண அனுபவக் கட்டுரைகள் என, தமிழ் இலக்கியச் சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் பங்களிப்பு முக்கியமானது என்றாலும், உலக இலக்கியங்களைப் பற்றி, அவர் எழுதும் அறிமுகக் கட்டுரைகள் தான் வாசகர்களுக்குப் புதிய வாசலைத் திறந்து விடுகின்றன. வாசிப்பு என்னும் தீராத பயணத்திற்கு வாசகனைத் தயார் செய்கின்றன. 
          ’வாக்கியங்களின் சாலை’, என்ற இந்தப் புத்தகமும்  வாசகர்களுக்கு அப்படி ஒரு திறப்பை நிச்சயம் ஏற்படுத்தும். இந்தத் தொகுப்பை நீங்கள் படித்தால், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பீர்கள் என்பது மட்டும் உறுதி. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களைப் படிக்க விரும்பும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.!
             ஏனெனில், துன்பமும், துயரமும் எதிர்ப்படும் நேரங்களில் எல்லாம், ஒரு நல்ல வாசகன் -  ஏதோ சில வாக்கியங்களின் சாலையில் தான்  பயணித்துக் கொண்டிருக்கிறான். நித்திய இளைப்பாறுதல் அங்கே தான் கிடைக்கும் என்று, அவன் உறுதியாக நம்புகிறான். 
  
நூலின் பெயர்:       வாக்கியங்களின் சாலை
ஆசிரியர் பெயர்:  எஸ்.ராமகிருஷ்ணன்.
வெளியீடு :      அட்சரம் வெளியீடு ( பதிப்பு ஆண்டு -2002)

           
           
          


Tuesday, June 16, 2020

சுப்பிரமணிய பாரதி - ஒரு பாட்டுக்கு ஒரு கதை - நூல் அறிமுகம்


நூல் அறிமுகம் – ”சுப்பிரமணிய பாரதி - ஒரு பாட்டுக்கு ஒரு கதை.”



                  பூமியில் இருந்து எழுந்து, மேலே செல்லும் இலேசான காற்று, கருத்துப் பெருத்து, திரண்டு நிற்கிற மேகங்களைத் தட்டி, மழையை தருவிப்பது மாதிரி – ஒவ்வொரு விடியலின் போதும், புத்தொளி கொண்டு புதிதாய்ப் புறப்பட்டு வரும் பொன்னொளிக் கிரணங்கள் விழும் அடுத்த விநாடி, மென்மை மிகுந்த தாமரை இதழ்கள் விரிவு கொள்வது மாதிரி – எந்தச் சூழ்நிலையில் ஒரு மகாகவியின் சிந்தனைகள் கவிதைகளாக வந்து விழுகின்றன என்பதும் முக்கியமானது.  அந்த ரகசியத்தை அறிந்து கொள்வது என்பது கவிதையைப் போலவே சுவையானது. அதனையும் அறிந்து கொள்ளும் போது, கவிதையின் வீரியம் இன்னும் அதிகமாகிறது; கவிதை  -  மனதுக்கு மேலும் நெருக்கமாகிறது.

              கவிதை பாடுவோரை ஆசுகவி, சித்திரக்கவி, மதுர கவி, வித்தாரக் கவி என நான்கு வகைகளில் அடக்குவர். நினைத்த மாத்திரத்தில் , கொடுத்த பொழுதில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றவர்களை ஆசுகவி என்று அழைப்போம். இவர்கள் பாடப் பாட, நாம் தான் அவற்றை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். நினைக்கிற மாத்திரத்தில் இவர்களுக்கு சொற்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். அத்தகைய ஆசு கவிகளுள் ஒருவர் தான், நமது மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

               இன்பம், துன்பம் என எல்லாச் சூழ்நிலையிலும் கவிதைகள் பாடியே அவற்றை கடக்க நினைத்தவர்  மகாகவி பாரதியார். அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எந்தெந்தச் சூழ்நிலையில் உருவாயின என்பதை,  வ.ரா, செல்லாம்மாள் பாரதி, யதுகிரி அம்மாள், பாரதிதாசன் போன்றோர் வழியே நாம் அறிந்து வந்திருக்கிறோம்.  அப்படி, ஒரு  18  கவிதைகளுக்கான, பாடல் பிறந்த கதையினையும் அந்தப் பாடல்களையும்  சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள் பாரதி புத்தகாலயத்தினர். நூலின் பெயர் - ‘சுப்பிரமணிய பாரதி- ஒரு பாட்டுக்கு ஒரு கதை’.   40 பக்கங்கள் கொண்ட இந்த  மிகச் சிறிய நூலினை திரு. என்.ராமகிருஷ்ணன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார்.

          வீட்டில் அரிசியே இல்லாத சூழலில், செல்லம்மாள் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்து அரிசியைப் புடைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது,  பாரதியார் எழுதுவதில் மும்முரமாய் இருக்கிறார். இளைய மகள் சகுந்தலா விளையாடிக் கொண்டிருந்தாள். புடைத்து முடித்தவுடன், அடுப்பைப் பற்ற வைக்க, செல்லம்மாள் வீட்டிற்குள் சென்ற நொடிப் பொழுதில், சில குருவிகள் பறந்து வந்து அரிசியைக் கொத்தித் தின்ன முயன்றன.  இதனை கண்ட பாரதியார்  உற்சாகமானார். மகள் சகுந்தலாவும், இவருமாக கை நிிறைய அரிசியை அள்ளி அள்ளி குருவிகளுக்குத் தின்னக் கொடுத்தனர். மகள் வீசும் அரிசியும், பறந்து வந்து உண்ணும் குருவிகளும் மகாகவியின் கவி உள்ளத்தைத் திறந்து விட, மகளிடத்தில் பாட ஆரம்பிக்கிறார் பாரதி.

                எட்டுத் திசையும் பறந்து திரிந்து, காற்றில் விரையும் அந்தச் சிட்டுக் குருவியைப் போல, நீயும் தளைகளை விட்டு நீங்கி – விடுதலையாகி - உயரப் பறக்க வேண்டும்  என மகிழ்ந்து பாடும் போது - உருவான   பாடல் தான் இது.

 “விட்டு விடுதலையாகி
                   நிற்பா  யிந்தச்
  சிட்டுக் குருவியை போலே

 எட்டுத் திசையும் பறந்து
                  திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு
                     நீந்துவை..”

         அடுப்படியிலிருந்து வந்து பார்த்த செல்லம்மாள், வழக்கம் போல், அதிர்ச்சியே அடைகிறார். மதிய உணவுக்கு வைத்திருந்த அரிசியெல்லாம் சிட்டுக் குருவிகளின் பசியை மட்டுமே போக்கியிருந்தது. சமைப்பதற்கு அரிசி ஏதும் மீதமிருக்கவில்லை. நமக்கோ ‘சிட்டுக் குருவியின் விடுதலை’ என்னும் இறவாக்  கவிதை  கிடைத்தது.     

     மகள் சகுந்தலாவுக்குச் சமாதானம் சொன்ன ‘ பாப்பா பாட்டு’,  திருவல்லிக் கேணி யானை தாக்கிய போது அருகிருந்த குவளைக் கண்ணன் பற்றி எழுதிய ‘எங்கிருந்தோ வந்தான்’ பாடல்,  காந்தியடிகள் , லாலா லஜபதி ராய் மற்றும் சகோதரி நிவேதிதை பற்றிய பாடல்கள் பிறந்த கதை, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடல் உருவான விதம் , வீட்டில் செல்லம்மாவுக்குத் துணையாக இருந்த அம்மாக் கண்ணு என்பவருக்கு எழுதிய பாடல் என சுவையான பாடல்கள், உருவான விதம் இந்நூலில்  சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.     

        நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில், மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு- மூன்றாம் பரிசு பெற்ற பாடலும் கதையும் இந்த நூலில் உண்டு.    மூன்றாம் பரிசு பெற்ற பாடல் என்றாலும் ’செந்தமிழ் நாடென்னும் போதினிலே..’ பாடலை தமிழ் அறிந்த யாவரும் அறியக்கூடும். ஆனால், முதலிரண்டு இடங்களைப் பிடித்த பாடல்கள் என்னவாயின என்பது  பலருக்கும் தெரியவில்லை.

          தனது அன்பு மனைவி செல்லம்மாள் மீது, அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் பாரதியார். அவளையே ரதியென நினைத்து, அவளிடத்தில் சரணடைந்த ஒரு  பொழுதில் பாடிய பாடல் தான்,       

  ”நின்னையே ரதியென்று     
         நினைக்கிறேனடி –   
              செல்லம்மா
    தன்னையே சகியென்று
               சரணமெய்தினேன்..”
         
         பாரதியின் மறைவுக்குப் பின் அவரது பாடல்களை வெளியிட்டவர்கள் ’செல்லம்மா’ என்பதை ’கண்ணம்மா’  என மாற்றியதோடு,  ‘செல்லம்மா பாட்டு’ என்பதை ’கண்ணம்மா பாட்டு’ என்று மாற்றி விட்டதாக, நூலாசிரியர் குறிபிடுகிறார். அப்படி என்றால், ’கண்ணம்மா பாடல்கள்’ முழுவதும் தனது மனைவி செல்லம்மாவுக்காக பாரதி எழுதிய  ’செல்லம்மா பாடல்கள்’ தானா எனத் தெரியவில்லை.!

        இந்நூலில், பாடல் உருவான கதை தெளிவுற இல்லாத போதிலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கிறன.  உதாரணத்திற்கு, ‘பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’. இதன் பிண்னணி பொத்தாம் பொதுவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் வாசிக்கும் போது களைப்பு வரவில்லை. பாரதியின் கவிதைச் சொற்களில் நாம் சிக்கிக் கொள்கிறோம். சுவையாகவே வாசிக்க முடிகிறது. இந்தச் சிறு புத்தகத்தை, நம் வீட்டுக்   குழந்தைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். 
       
         பாரதியின் பாடல்களே சுவை மிகுந்த மலைத்தேன்  என்றால்,  அவை உருவான கதைகளோடு, அந்தக் கவிதைகளை மறு வாசிப்பு செய்வது  என்பது அமுதம் கலந்த தேனைப் புசிப்பது போலாகும் அல்லவா? 

        ஆம், பாரதியின் பாடல்களை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும், மனம் நிறைவு கொள்கிறது. ஏகாந்தம் வந்து உட்கார்ந்து விடுகிறது.  விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக்குருவியைப் போல,  காற்றில் வட்டமிடத் தோன்றுகிறது.
         

நூலின் பெயர்:   ”சுப்பிரமணிய   பாரதி – ஒரு பாட்டுக்கு   
ஒரு கதை”

தொகுப்பு :  என்.ரமகிருஷ்ணன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
       






                  

Sunday, June 14, 2020

மணவை முஸ்தஃபா



அறிவியல் தமிழின் தந்தை – மணவை முஸ்தஃபா

ஜூன் 15.. இன்று!


                 ஆறாம் விரல் கொண்டு, நான்காம் தமிழை நானிலம் அறியச் செய்தவர்; கலைச்சொல் அகராதிகளை சீரிளமைத் தமிழுக்குச் சீரெனத் தந்து அழகு பார்த்தவர்;  மேற்திசை ஓங்கிய கலைக் களஞ்சியங்களை - காலம் கரைக்காத கன்னித் தமிழின் மகுடத்தில், மணியெனப் பொருத்தி அணி செய்தவர்; செம்மாந்த தமிழ் மொழியே, ’செம்மொழித் தகுதிக்கு’  முதன்மையானது என்பதை,  சாகும் வரைக்கும் சுவாசமாகக் கொண்டவர்;  பிற மொழிச் சார்பின்றி தனித்தியங்கும் வல்லமை, தன்னேரிலாத தமிழுக்கு உண்டு என்பதை உறுதி செய்யவே எண்பத்து இரண்டு ஆண்டுகள் இயங்கிக் கிடந்தது அவர் இதயம். ஆம், தமிழால் செய்யப்பட்டது அவரது இதயமும், உயிரும்.
              தன் ஆயுள் முழுக்க, அறிவியல் தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்த மணவை முஸ்தஃபா, இருபதாம் நூற்றாண்டின் முதன்மை அறிஞர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பணிகள் பெரிதும் பேசப்பட்டன. அதன் பயனே - மணப்பாறை என்றால் மாடும் முறுக்கும் கேட்போர்  மனதில் எழுவது போல, கற்றறிந்தார் உள்ளங்களில் மணவை முஸ்தஃபா என்ற பெயரும் கல்வெட்டானது. மணவை நகரில், நண்பர்களோடு இணைந்து ‘மணவைத் தமிழ் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து நடத்தினார். இன்றளவும் அந்த அமைப்பு, தமிழ்ப் பணியைத்  தொடர்ந்து செய்து வருகிறது.  அதே போல, அவர் உருவாக்கிய ‘அறிவியல் தமிழ் மன்றம்’ –  அவரது புதல்வர் மருத்துவர்.செம்மல் அவர்களால், இன்றளவும் செழுமையாய்ச் செயல்பட்டு வருகிறது.
          1935 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி மீராசா ராவுத்தரின் மகனாகப் பிறந்தார் முஸ்தஃபா. திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து என்ற சிறிய கிராமம் தான் இவரது சொந்த ஊர். தந்தை மீராசா ராவுத்தரின் சர்க்கஸ் பார்க்கும் ஆர்வத்தால், பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த செல்வம் கரையத் தொடங்கியது. கடன் கொடுத்தவர்கள் மீதமிருந்த சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ள- தனம் நிறைந்திருந்த குடும்பம்  தவிப்பிற்குள்ளானது. மனம் கலங்கிக் கிடந்த மீராசா ராவுத்தர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் சொந்த ஊரை விட்டு விலக விரும்பினார். பிலாத்தினை இவர்கள் கை கழுவினர். சிலுவைகள் உடைந்தன; சிகரங்கள் நெருங்கின.  தந்தையின் விரல் பிடித்துக் கொண்டே,  இளம் முஸ்தஃபாவின் பிஞ்சுப் பாதங்கள் மணப்பாறை மண்ணில் அடியெடுத்து வைத்தன.  அப்போது அவருக்கு வயது ஐந்து.           
                       இளம் பருவம் வறுமையிற் கடந்தாலும் – முஸ்தஃபாவிடம்  செம்மையும் அறிவும் செழித்து வளர்ந்தன. விடுமுறை நாள்களில் கடலை மிட்டாய் விற்பனைக்கும் போனார் முஸ்தஃபா. ஆனால் எல்லா நேரங்களிலும் அறிவுப் பசிக்கும் ஆற்றுதல் செய்தார். பள்ளிப் படிப்போடு சேர்ந்து, எழுத்து, பேச்சு, இலக்கிய ஆர்வம் என எல்லா   தளங்களிலும் சிறப்போடு இயங்கினார். அறிவின் உலகத்தில் தன்னை வலுவாக ஊன்றிக் கொண்டார். செழிப்பும் சிறப்பும் உயர்ந்து வளர்ந்தது.  அதற்குப் பேருதவி புரிந்த மணவை நகரையே தனது பெயரின் முன்னொட்டு ஆக்கினார். முஸ்தஃபா என்ற பெயர் மணவை முஸ்தஃபா என்றானது.
                     அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான், இவரது கல்லூரிப் படிப்பு தொடங்கியது. இவருக்கு தமிழாசானாக அமைந்தவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரானார் அவர்கள். இந்தத் தமிழ் விதைக்கு சரியான நிலம் கிடைத்தது. கல்லூரிக் காலம் முழுதும் தமிழ்ச் சாறு பருகி, தமிழுக்காகவே வளர்ந்தார். ஒருமுறை,  மாணவர்கள் – ஆசிரியர்கள் பட்டிமன்றத்தில் இவர் தலைமையிலான மாணவர் அணி வெற்றி பெற்றது. அதில் இவர் எடுத்து வைத்த வாதம், ஆசிரியர்கள் உள்ளங்களையும் வெற்றி கொண்டது. தெ.பொ. மீ அவர்கள், மணவை முஸ்தஃபாவிற்கு ’நச்சினார்க்கினியர்’ என்ற பட்டத்தினை புனைப் பெயராக வழங்கினார். முஸ்தஃபாவும் சில காலம் அந்தப் பெயரிலேயே இயங்கினார். பிறகு ஒருநாள், ”இனி, நச்சினார்க்கினியர் என்ற புனைப்பெயர் வேண்டாம், முஸ்தஃபா என்ற பெயரே இருக்கட்டும்” என பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் கேட்டுக் கொள்ள, மணவை முஸ்தஃபா என்ற பெயர் மீண்டும் வந்தது.  
                  கல்லூரிப் படிப்பு வெற்றிகரமாய் நிறைவடைந்தது. இவரது திறமைக்கு உடனடிப் பலனும் கிடைத்தது.  சேலம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கான நியமன ஆணை கிடைக்கப் பெற்றார். பணி நியமன ஆணையை தனது குருநாதர் தெ.பொ.மீ அவர்களிடம் காட்டி, வாழ்த்துப் பெறச் சென்றார் முஸ்தஃபா. குருவும் மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார். கூடவே, கல்லூரியில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘பயிற்சி மொழி கருத்தரங்கில்’ கலந்து கொள்ளுமாறும் பணித்தார். முஸ்தஃபாவும் அந்தக் கருத்தரங்கத்திற்குச் சென்றார்.  விதியின் விளையாட்டு அங்குதான் வீரியம் கொண்டது.           
                  தமிழ்நாட்டில் ஆங்கிலமே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்; ஏனெனில் அறிவியல் கலைச் சொற்கள் யாவும் இங்கே ஒலிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. தமிழில் அவற்றுக்குப் பொருத்தமான கலைச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. எனவே , அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் படிப்பதே உகந்தது. தமிழில் படித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல , உலகில் எங்குமே வேலை வாய்ப்ப்ய் கிடைக்காது என ஒரு பேராசிரியர் வீர ஆவேசமாகப் பேசி, பலத்த கர ஒலிக்கு மத்தியில் பெருமிதத்தோடு இருக்கையில் அமர – மனம் தாளாமல் கடுங் கோபத்தோடு இருக்கையை விட்டு எழுந்தார் மணவை முஸ்தஃபா.
              மேடையேறிய முஸ்தஃபா அவர்கள், கருத்தரங்கப்  பேராசிரியர்களின் பேச்சை மறித்துவிட்டு, ஒலி பெருக்கியின் முன்னால் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசத் தொடங்கினார். ’எந்தத் துறையானாலும் அதனை தாய்மொழியாம் தமிழிலேயே கற்பிக்க முடியும். எப்படிப்பட்ட அறிவியல் கலைச் சொல்லையும் சொற்செட்டு, பொருட்செறிவு மற்றும் இலக்கிய நயத்தோடு தமிழிலேயே சொல்ல முடியும். தமிழில் அதனைக் கற்க முடியாது என்று சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால், அறிவியல் துறையை தமிழிலேயே கற்க முடியும், கற்பிக்க முடியும் என்று சொல்ல - தமிழில் கற்று, தமிழில் சிந்தித்து தமிழோடு வாழும்  எங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதனை வெறும் மேடைச் சொற்களால் அல்ல, எனது வாழ்வின் செயலால் நிரூபிப்பேன்’ என்று கூறிய முஸ்தஃபா அவர்கள், தனது கையிலிருந்த – கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான பணி நியமன ஆணையை மேடையிலேயே கிழித்தெறிந்தார். ‘இனி எனது வாழ்நாளை அறிவியல் தமிழுக்காகவே அர்ப்பணம் செய்வேன்.” என்று சொல்லி, ‘கருத்தரங்கம் நிறைவு பெற்றது, அனைவரும் செல்லலாம்’ என்று சத்தமாகக் கூறி மேடையை விட்டு கீழே இறங்கினார். அந்த நொடியே, தமிழன்னை அவரை உயரே தூக்கி நிறுத்தினாள். கருத்தரங்கப் பார்வையாளர்கள் கண்ணிமைக்க மறந்தனர்.
         வியப்பின் உச்சத்தில், கலக்கத்தின் தவிப்பில் இருந்த குருநாதர் தெ.பொ.மீ அவர்களை , சமாதானம் செய்தார் மணவை முஸ்தஃபா. அறிவியல் தமிழை எங்கிருந்து தொடங்குவது என்று சிந்திக்கத் தொடங்கினார். அறிவியலுக்கான கலைச் சொற்களை உருவாக்குவதே முதன்மையான பணி என்பதை உணர்ந்து கொண்டார். அதற்கென உழைக்கத் தொடங்கினார்.  
        சென்னை வானொலி நிலைய இயக்குநர் திரு.ஹக்கிம் மற்றும் சாகித்திய அகாடமி தென்னகச் செயலாளர் திரு ஜார்ஜ் ஆகிய இருவரின் உதவியால், தென்னாட்டு மொழிகள் புத்தக நிறுவனத்தில் பகுதி நேரப் பதிப்பாளராக பணியில் சேர்ந்தார். ஆறு அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணி அப்போதுதான் தொடங்கியிருந்தது. மணவை முஸ்தஃபாவின் கடும் உழைப்பு அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது.  அதன் தலைவர் முனைவர் இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் விருப்பப்படி, முழுநேரப் பதிப்பாளராக பணிசெய்யத் தொடங்கினார். பிறகு ‘புத்தக நண்பன்’ என்னும் மாத இதழுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
           “Law For Lay-man” என்னும் புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் போது, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை திரு கோவிந்தராஜுலு என்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறுகிறார். சட்டம் படித்திருந்தால் மட்டுமே, சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பது எளிமையாக இருக்கும் என்று முன்னாள்  சட்டத்துறை இயக்குநராகப் பனியாற்றிய கொவிந்தராஜுலு சொன்னவுடன் மாலை நேர சட்டக் கல்லூரியில் சேர்ந்தார் முஸ்தஃபா. மூன்று ஆண்டுகளில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். பின்னாளில் கெளரவ மாகாண மாஜிஸ்டிரேட் பதவியையும்(J.P.) மூன்று ஆண்டுகள் வகிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 
             1988 ஆம் ஆண்டு, இவர் மேற்கொண்ட மலேசியப் பயணம் மிகவும் முக்கியமானது. டத்தோ சாமிவேலு அவர்களின் கோரிக்கையை ஏற்று, மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பை ஏற்றார் முஸ்தஃபா. இவர் போலவே சட்டம் படித்திருந்த இரா.நடராசனுடன் இணைந்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மலேசியாவின் அரசியல் சட்டம் தமிழிலும் உருவாக்கப்பட்டது. இங்கே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நீதியரசர் மகாராசன் மற்றும் திரு மா.சண்முக சுப்பிரமணியன் ஆகிய இருவர் தலைமையிலும் தனித்தனியாக தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆனால்,  பரஸ்பரம் கண்டறியப்பட்ட குறைகள் மற்றும்   அரசியல் காரணங்களால் அவை நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
           ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமாக இருந்த யுனெஸ்கோ அமைப்பு, அப்போது மாத இதழ் ஒன்றை வெளியிட்டு வந்தது.  உலகம் முழுவதும் 44 மொழிகளில் வெளியிடப்பட்ட ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக யாரை நியமிக்கலாம் என்னும் பேச்சு எழுந்தது.  குருநாதர் தெ.பொ.மீ மற்றும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் இருவர் மனதிலும் மணவை முஸ்தஃபாவின் பெயரே தோன்றியது. கலை, இலக்கியம் , அறிவியல் மற்றும் பண்பாட்டு இதழான யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மணவை முஸ்தஃபா. இதழ் வெளியிடுவது நின்று போகும் காலம் வரையிலும், சுமார் 35 ஆண்டுகள் அந்த மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இதழின் விற்பனை,  ஆசிய மொழிகளில் முதலாவதாகவும், உலக அளவில் நான்காவது இடத்திலும் இருந்தது.
       ஏனைய மொழிகள், கலைச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து இதழினை வெளியிட, முஸ்தஃபா அவர்கள் கலைச் சொற்களை தமிழில் உருவாக்கினார். ஒவ்வொரு மாத இதழிலும் சுமார் இருபது புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புக் கூட்டத்தில், மணவை முஸ்தஃபா சிறப்பிக்கப்பட்டார். இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் சிறிய நகரமான மணவையில் இருந்து புறப்பட்ட முஸ்தஃபாவின் பயணம், ஐ.நா.சபையில் சிறப்பு பெற்றதோடு நிறைவடையவில்லை.
              மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில் எட்டு கலைச் சொல் அகராதிகளை உருவாக்கி, அவற்றைப் பதிப்பித்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தை  தமிழில் வெளியிட விகடன் இதழ் முடிவு செய்த போது, அந்தக் குழுவுக்கு தலைமைப் பொறுப்பாசிரியராக இருந்து வழிநடத்தினார்.  தமிழ் நாடு பாட நூல் கழகத்திற்கு, ‘அறிவியல் தமிழ்’ என்னும் நூல் வரிசையை உருவாக்கிக் கொடுத்தார். இவர் உருவாக்கிய சிறுவர்களுக்கான கலைக் களஞ்சிய நூல் வரிசை மிக முக்கியமானது.
              கலைமாமணி விருது, திரு.வி.க. விருது என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். தமிழின் பெருமையையும், செழுமையையும் உலகெங்கும் பரப்பியதற்காக, காஞ்சி சங்கர மடம் இவரை அழைத்து, சிறப்பு செய்து பாராட்டியது. 1996ஆம் ஆண்டு, ’மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்’  நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசினைப் பெற்றார். அதே ஆண்டு வெளிவந்த ‘இசுலாமும் சமய இலக்கியமும்’ என்னும் நூலும் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்றது. மொத்தத்தில் 31 நூல்கள், 10 மொழிபெயர்ப்பு நூல்கள், 3 தொகுப்பு நூல்கள் என தமிழுக்கு இவரது பங்களிப்பு -  காலம் கடந்து நிற்கும். தமிழைப் போலவே, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இவருக்கு நல்ல மொழிப் புலமை இருந்ததும் இங்கே  கவனிக்கத்தக்கது. அவரது வாழ்நாள் உழைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்களும்,  தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 
         1968-சென்னை, 1982 – மதுரை, 1987- மலேசியா என உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்களில் எல்லாம் இவரது பங்களிப்பும் இருந்தது.     அகில இந்திய வானொலியில் ஏறக்குறைய 40ஆண்டுகள் தமிழ் சார்ந்த உரைகள் ஆற்றியிருக்கிறார்.  Rare Personality Of India என்னும் தலைப்பில் இவரைப் பற்றிய காணொலிப் படம் ஒன்று, நடுவண் அரசால் தயாரிக்கப்பட்டு, ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
               
       வாழ்வின் கடைசிக் காலங்களில் பர்க்கின்சன் நோயால் துன்பப்பட்ட வேலையிலும் தமிழ்ப் பணியை விரும்பிச் செய்தார். 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மண்ணுலகை நீங்கினார்.  ஆனால் அவர் உருவாக்கிய கலைச் சொற்கள் பெரும்பாலானவை இன்று புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. கணினியிலும் அலைபேசியிலும் இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கலைச் சொற்கள், மணவை முஸ்தஃபா அவர்கள் உருவாக்கியதே. அந்தச் சொற்களின் வழியே, அவரது பெயரும் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குத் தொண்டு செய்பவனுக்கு மரணம் என்பது கிடையாதல்லவா?
        அறிவியல் தமிழில் மட்டுமல்ல, இல்லத்திலும் தூய தமிழ்ச் சொற்களே புழங்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். தனது பிள்ளைகளுக்கு அண்ணல், செம்மல், தேன்மொழி என அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார் மணவை முஸ்தஃபா. தொன்மை மிகு தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பெரு முயற்சி எடுத்தார். அப்போதைய நடுவண் அரசு, செம்மொழி தகுதிக்கான கால வரம்பை 1000ஆண்டுகள் என்று முதலில் அறிவித்தது. மணவை முஸ்தஃபா உள்ளிட்ட பெருமக்களின் கடும் முயற்சியால் அதற்கான வரம்பு 1500 ஆண்டுகள் என்று மாற்றியமைக்கப்பட்டது. தமிழ் மொழி செம்மொழி என்றும் அறிவிக்கப்பட்டது.
         மணவை முஸ்தஃபா இதன் பொருட்டு மகிழ்ந்தாலும், உண்மையில் மன நிறைவு அடையவில்லை. ஏனெனில் தமிழுக்கான செம்மொழித் தகுதி, பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறைவான நிதியே மொழியின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது. மாறாக, தமிழை செம்மொழித் தகுதியுடன் கல்வித்துறையின் பட்டியலில் சேர்க்கும்போதுதான், உரிய அங்கீகாரம் கிடைக்கும், போதுமான நிதி வசதியும் வாய்க்கும் என்பதை உணர்ந்த முஸ்தஃபா, அந்நாளில் மத்திய அரசில் அங்கம் வகித்த,  தமிழக  கட்சிகளிடம் வலியுறுத்தினார். கல்விப் பட்டியலில் செம்மொழித் தகுதியுடன் தமிழ் இணைக்கப்படும் என்று  நம்பினார். அவர் வாழ்நாளில் நிறைவேறாத அந்தக் கனவு, இன்னும் கனவாகவே நீடிப்பதுதான் தாள இயலாத துன்பம்.
          புதுப் புனல் சேர்த்து - துள்ளலுடன் நகர்ந்து கொண்டே இருக்கும் வற்றாத  நதி போல, நம் தமிழ் மொழியும் இளமை மாறாது, வளமை குன்றாது நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமானால் – புதிய புதிய கலைச்சொற்கள் மொழியில் கலந்து கொண்டே இருக்க வேண்டும்; பிற நாட்டு நல்லறிஞர் நூல்களெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திட வேண்டும்; அறிவியல் வளர வளர - தமிழ் மொழியின் அகராதியும் அதற்கொப்ப வளர்தல் வேண்டும் என்றெல்லாம் எண்ணி – அதன்பொருட்டு தமிழுக்குத்  தன்னையே ஒப்புக் கொடுத்த மணவை முஸ்தஃபாவின் செம்மொழிக் கனவு என்று நிறைவேறும்? 
           அரசியல் வேறுபாடுகள் அழித்து – மதத்தின் பூசல்கள் மறந்து -  சாதியின் விலங்குகள் துறந்து – மொழியின் பெயரால் தமிழன் எப்போது ஒன்றுபடுகிறானோ -  அன்று தான், காலத்தால் முற்பட்ட நம்  செம்மாந்த தமிழ் மொழி, அண்ணாந்து பார்க்கும் உயரத்தை எட்டும்; அப்போது உண்மையான செம்மொழித் தகுதியையும் அது அடையும். அந்த நாள் கைகூடும் போது, மணவை முஸ்தஃபாவை தமிழும் தரணியும் நிச்சயம்  நினைவு கொள்ளும்.
       ஆனால், தமிழ் மொழி என்னும் ஒரே குடையின் கீழ் நாம் ஒன்றுபடும் காலம் எப்போது வரும்?