Tuesday, August 14, 2018

நாளும் அறிவோம் -ஆகஸ்ட் 14

தமிழிசை மறுமலர்ச்சி - முதல் தமிழிசை மாநாடு

ஆகஸ்ட் 14... இன்று!

       தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருநாவுக்கரசர் வேண்டியது போல, ’தமிழோடிசை பாடல் மறந்தறியாத‘ நெஞ்சம் , கொஞ்ச காலம் காணாமல் போயிருந்தது.  
         கீத வர்ணங்களும் , கீர்த்தனைகளும் தமிழில் முறையாக இல்லை என்று, சங்கீத மேடைகளில் தமிழிசைப் பாடல்கள் புறந்தள்ளப்பட்டிருந்த காலத்தில், தமிழிசைக்கென மூன்று நாள் மாநாடு நடத்தப்பட்டது. அங்கே, தமிழ்ப் பாடல்கள் மட்டுமே இசைக்கப்பட்டன. தமிழிசையின் மேன்மை குறித்து ஆய்வரங்கங்கள் நடத்தப்பட்டன. ஆம்,  முதல் தமிழிசை மாநாடு தொடங்கிய நாள் (1941-ஆகஸ்ட் 14) இன்று.
                 சிதம்பரம் அண்ணாமலை நகரில், அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அறிவுரைப்படி, முதல் தமிழிசை மாநாடு 14.08.1941 அன்று தொடங்கியது. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தமிழ்ப்பண்ணிசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ராஜமாணிக்கம் பிள்ளை, வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள்,பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன்  போன்ற தமிழிசை வாணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்ப்பாடல்கள் பாடினர். 1929ல் தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக்கல்லூரியின் முதல்வர் டைகர் வரதாச்சாரி, மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். 
          இதனைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் இத்தகைய தமிழிசை மாநாடுகள் நடந்தேறின. 1943ல் தமிழிசைச் சங்கம் உருவாக்கப்பட்டது. காரைக்குடி, வலம்புரி நகரங்களில் தமிழிசை மாநாடுகள் தொடந்தன. தமிழிசைக்கான மறுமலர்ச்சிக் காலம்  வெற்றிகரமாகத்  தொடங்கியது.
          தமிழிசை மூவர் என்று அழைக்கப்பட்ட  மாரிமுத்துப் பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் - இவர்களின் பெயரில் விழாக்கள் எடுக்கப்பட்டன.
    இதற்கு முன்னதாகவே, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழிசையை மேடைதோறும் கொண்டு சென்றார் தஞ்சை அபிரஹாம் பண்டிதர். இவரது ”கருணாமிர்த சாகரம்” எனும்  இசை ஆய்வு நூல்  என்றும் சிறப்புக்குரியது.  விபுலானந்த அடிகள், தண்டபாணி தேசிகர் போன்றோரும் தமிழிசை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர். 
       தமிழிசை நீண்ட பாரம்பரியம் கொண்டது. அகவலோசை, செப்பலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என இசையோடுதான் பாடல்கள் இயற்றப்பட்டன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்ச மரபு, சங்க நூல்கள் எல்லாவற்றிலும் இசை பற்றிய தெளிந்த அறிவு கொட்டிக் கிடப்பதை நாம் எளிதில் காணலாம். 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச்சலூர் இசைக் கல்வெட்டு, உலகின் மிகப்பெரிய இசைக் கல்வெட்டான குடுமியான்மலை இசைக் கல்வெட்டு (6ஆம் நூற்றாண்டு), இசைத் தூண்கள்  போன்றவை தமிழர்களின் இசை அறிவைப் பறைசாற்றுகின்றன. 
              ஓதுவார்களும், இசைக்கலைஞர்களும், அரசவைப் புலவர்களுமே தமிழிசையைத் தடையின்றி பல நூற்றாண்டுகள் கொண்டு வந்தனர். அந்நியப் படையெடுப்புகளால் தமிழிசையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.   விஜயநகர மன்னர்களின் ஆட்சியிலும், மராட்டிய மன்னர்களின் ஆட்சியிலும், அரசவையில்  தெலுங்கு மற்றும் சமஸ்கிருதப் பாடல்கள் பாடப்பட்டன.  பின்பு அதுவே நிலைத்து நிற்கத் தொடங்கியது.
   அடியார்க்குநல்லார் உரையின்படி , 11,991 பண் இருந்த இசைத்தமிழ் , பயன்பாடு அருகியதால் பஞ்ச மரபு என்னும் இசை நூலில்  103 பண்ணாகச் சுருங்கியது.  குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசையும் ச,ரி,க,ம,ப,த,நி என்றானது.   ஆட்சி அதிகாரங்களின் மாற்றத்தினால் தமிழிசையின் இடத்தில்  மெல்ல மெல்ல வேறு மொழிகள்   வந்து சேர்ந்தன.
              தமிழிசையின் வேர்கள் வலிமையாக இருப்பதால் ,ஆபத்தில்லை. தமிழிசை  ஒருநாளும் அழியாது. ஆனால். இசைப்பயிரைக் காப்பாற்ற நாம் விருப்பத்தோடு முன்வரவேண்டும். பண்ணும், நடையும், தாளமும், ஆலாபனையும் மட்டும்தான் இசை கேட்கும் செவிகளுக்குள் நுழைய வேண்டும். அதுவே தெவிட்டா இன்பம் தரும் தேமதுரத் தமிழிசையாய், காற்றில் கலந்து, இதயம் புகல்  வேண்டும். 
        மதத்தின் பெயரால் இசையைத் துண்டாடும் இரு தரப்பையும் கண்டிக்க வேண்டும். மனம் நோகும் வேளையில், இசை ஒரு  மருந்து என்பதை மறந்து, இசையின் மூலம் மனக் காயம் செய்யும் செயல்களும் வேண்டியதில்லை.  அதேவேளையில்,  ஈசனும்,  ஏசுவும் நம் கடவுளர் ஆகிவிட்டதால், நம் மொழியும் அவர்களுக்குரியதே என்பதையும் இசை மாந்தர்கள் மறக்க வேண்டியதில்லை. 

இனமும், மதமும் இசைக்கு இல்லை - ஆயினும்
தமிழிசை என்பதே நமது பிள்ளை.!              

No comments:

Post a Comment