Tuesday, November 19, 2019

கொம்பு முளைத்தவன் - பா.ராகவன்


நூல் அறிமுகம்.


கொம்பு முளைத்தவன் – பா.ராகவன்.

        ”அவனுக்கென்ன பெரிய கொம்பா முளைச்சிருக்கு, நான் அவன ஜெயிச்சுக்
காட்டுறேன் பார்…” எனச் சவால் விட்டு , அதன் படியே, வென்று காட்டி, தலையில்
கொம்பு வைத்துக் கொள்வது ஒரு வகை.
         எந்தத் துறையாயினும், தோல்வியின் நிழலில் மூழ்கி விடாமல்,
துயரக் கூடாரம் முழுதாய் மூடிவிடாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளவும்,
தற்காத்துக் கொள்ளவும்  கொம்பு முளைத்தவனாய் காட்டிக் கொள்ள  வேண்டியிருக்கிறது.
இது மற்றொரு வகைக் கொம்பு.
              ஆனால், மேற்சொன்ன இரு வகைகளில் எதுவாயினும்,   கொம்பு முளைத்தவனாய் இருப்பதற்கென்று சில
மெனக்கெடல்கள் தேவையாய் இருக்கின்றன.  குலையாத  உறுதி அவசியமாக இருக்கிறது.
அவற்றைப் பற்றிய சுவையான, பயனுள்ள அனுபவக் கட்டுரைகளின் தொகுப்புதான், பா.ராகவன்
எழுதிய  “கொம்பு முளைத்தவன்”.  ஒரே அமர்வில் வாசித்து முடித்து விடக்
கூடிய கட்டுரைகள் தான். ஆனால், அதில் சொல்லப்பட்ட அனுபவங்களை, நாம் அசை போட்டுப் பார்க்கும் போது, நமக்குள் அதீத
உற்சாகத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள் இவை.
         
       இந்த நூலில் முன்னுரை அல்லாது, மொத்தம் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. அனைத்தும் அனுபவக் கட்டுரைகள் தான் என்றாலும், எழுதத் துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கையை பெருக்கச் செய்யும் பொதுத் தன்மையைக் கொண்டவை இவை.
     
            முதல் கட்டுரை, ‘நன்றி திரு ஹெமிங்வே.’.   
           நன்றி திரு பா.ரா சார் என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதழாளர் சாமுவேல்சனுக்கு , எர்னெஸ்ட் ஹெமிங்வே அளித்த நேர்காணல் வழியே, எழுத வருபவன் கொண்டிருக்க வேண்டிய அல்லது நினைவில் நிறுத்த வேண்டிய செய்திகளை, ’கொம்பு முளைத்தவன்’  நூலின் முதல் கட்டுரையாகத் தந்ததற்கு.
                 ‘கிழவனும் கடலும்’  நாவலில் வரும் கிழவன் சாண்டியாகோ,
தனது மெளனங்களால், தனது செய்கைகளால் வாசகனின் உள்ளத்தில்
தன்னம்பிக்கையைத் தந்தது போல, ஹெமிங்வேயின் இந்த நேர்காணல் குறிப்புகள், எழுதத் துடிக்கும் இளம் எழுத்தாளனுக்கு தலை கோதி, கனிவாக வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று சொல்லலாம்.

                   “என்னை அசந்து போகவைக்கும் அளவுக்கு ஒரு சிறந்த கதையை நான் இன்னும் எழுதவில்லை.  இது போதாது என்னும் பதற்றம் இருப்பதுதான்  என் பலம்.” என்று சொல்கிறார் பா.ரா. 
           ஆம், கொம்பு முளைத்திருந்தாலும் ஒவ்வொரு  எழுத்தாளரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கிய குணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற உண்மையை அழகாக, அழுத்தமாகச் சொல்கிறது இந்த நூல்.
               93 சிறுகதைகள் அனுப்பி ஒன்றும் பிரசுரமாகவில்லை என்ற போதிலும், சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் வாசிப்பு; வாசிப்பென்னும் நதியில் மூழ்கித் திளைத்தபின் மீண்டும் ஒரு ஐம்பது சிறுகதைகள்; அப்போது நண்பர் – எழுத்தாளர் சிவகுமார்  கூறிய சொற்கள்; அவை தந்த மன வலிமை –
இவையாவும் தான் தன்னை முன்னெடுத்து எழுத வைக்கின்றன என பா.ரா சொல்லிக் கொண்டே செல்லும் போது, வாசகனுக்கும் அந்த தன்னம்பிக்கை இயல்பாகவே தொற்றிக்
கொள்கிறது.
             
         இந்த நூலில், ’கற்றுக்கொடுத்தவன்’ என்ற கட்டுரை மிகவும் நெகிழ்வான ஒன்று.  'தேங்காய்' என்றொரு சிறுகதையைப் படித்துவிட்டு, எழுத்தாளர் சிவக்குமாரை சந்தித்து, அவரை வாழ்த்தும் போது. பா.ரா.விடம் அவர் பேசும் வார்த்தைகள் மனக் கண்ணில் எப்போதும் நிலையாய் நிற்கின்றன.
          ‘நல்லாயிருந்துச்சில்ல, ப்ரூவ் பண்ணிட்டன்ல? நான் சாகல இல்ல?’  என ஆனந்தக் கண்ணீரோடு, சிவக்குமார்  பேசும் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் மறைந்து போகாது.
எழுத்தின் மீது தீராத இலட்சிய வெறி கொண்ட ஒரு எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய மந்திரச்
சொற்களல்லவா  இவை!.
     
            பா.ரா அவர்கள், மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்கி , எழுத்துப் பணி
மேற்கொண்ட அனுபவம் மிகவும் சுவையானது.(அந்த அன்னாசிப் பழ சாண்ட்விட்ச் எப்படி சார் இருக்கும்?).   
          சோம்பல் இல்லாமல், சலிப்பு தொட்டு விடாமல் தான் விரும்பிய பணியை 24 மணி நேரமும் கூட அழகாகச் செய்யலாம் என்பதற்கு
இக்கட்டுரைகள் சான்றாக இருக்கின்றன.
           தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதுவது, புனைவுகள்
எழுதுவது, இதழ்களில் தொடர் எழுதுவது, இடையில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை
வரலாற்றுத் தொடர் ‘பொலிக..பொலிக’. இப்படியாக இடைவிடாது எழுதிக் கொண்டிருந்த தனது அனுபவத்தை இவர் சொல்லும் போது, சோம்பல் என்னும் புழுதி பறந்தோடி விடுகிறது. 
   
         செய்யும் செயலை அர்ப்பணிப்போடு நாம்  விரும்பிச் செய்தால், நமது உடலும், நமக்கான  நேரமும் நம்மிடம் கட்டுப்பட்டே
நிற்கின்றன என்பதையும் கொம்பு முளைத்தவன்,  பளிங்கு போல அழகாகக்
காட்டுகிறான்.
           
          ’பாப்கார்ன் கனவுகள்’ பற்றி இந்த நூலில் வரும் சில  சொற்கள் முக்கியமானவை.
       ‘சுய அனுபவம்  தான். பட் அது கலையா உருமாறல. என்ன ரீசன் தெரியுமா? ‘
             - என காரணம் சொல்லும் பத்திகள் நின்று கவனிக்கப்பட வேண்டியவை.  அதன் படியே பார்த்தால் கூட, 'கொம்பு முளைத்தவன்'  நூலில் பாதிக்கு மேற்பட்ட கட்டுரைகள் கலையாக உருமாறி, வாசகனுக்கு கட்டுரைக்கலை இன்பத்தை நிரம்பவே வழங்குகின்றன.
         

            ”அதிகாலைகளில் ஆன்லைனில் ஜெயமோகனின் பச்சை விளக்கைப்
பார்த்தே அலறியடித்து என் தூக்கத்தை விரட்டியிருக்கிறேன்”.
                                      -பா.ரா
                      தனக்கு தனிப்பட்ட முறையில் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கடிதத்தை நினைவில் இருந்து மீட்டெடுத்து  விவரித்திருக்கிறார்
பா.ரா.  நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கான விளக்கம்
பற்றியும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.  தொகுப்பில் உள்ள அற்புதமான
கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
       
        மொத்தத்தில்,    இணைய உலகில் தன்னை தயார் படுத்திக் கொண்டு,
இடைவெளி இல்லாமல் உழைப்பைத் தருகிற மனம் இருந்து விட்டால் போதும், இங்கே நிச்சயம் சாதிக்கலாம் என இளம் எழுத்தாளனுக்கு துணிச்சலைத்  தருகிறது இந்த நூல். வழக்கம் போலவே, சலிப்பின்றி நம்மை முன்னகர்த்திச் செல்லும் வசீகர மொழி நடையும் இதிலே இருக்கிறது.
         
          நேரம் என்பது நில்லாமல் சென்று கொண்டிருக்கும் மாபெரும் நதி என்றாலும், அதனை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவன், ஆண்டு முழுக்க, ஏன், ஆயுள் முழுக்க  நல்ல விளைச்சலை அறுவடை செய்து கொண்டே இருப்பான் என்பது தானே வரலாறு. அத்தகைய நம்பிக்கையை ஒரு வாசகன் இக்கட்டுரைகள் மூலம் நிச்சயம் பெறக் கூடும்.
                   
        ’எழுத்து எனக்குத் தொழில் அல்ல, அதுவே வாழ்க்கை’,  என தன்னம்பிக்கையோடு சொல்பவனுக்கு கொம்பு முளைக்காமலா போகும்? இலக்கிய உலகத்தில், தலைக் கணமற்ற -  தன்னம்பிக்கைக் கொம்புகள்
முளைத்துக் கொண்டே இருக்கட்டும்.