Wednesday, July 31, 2019

செய்குத்தம்பி பாவலர்


மகாமதி சதாவதானி - செய்குத் தம்பி பாவலர்.



ஒருமவ தானம் ஒருநூறு செய்திந்துப்
பாரில் பகழ்படைத்தப் பண்டிதனைச் -               சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச்         செய்குத்தம்பிப் பாவலனை 
எந்நாள் காண்போம் இனி.’ 
       
     - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. (பாவலர் மறைவின் போது பாடியது)

   “சிரமா றுடையான் செழுமா வடியைத்
   திரமா நினைவார் சிரமே பணிவார்
   பரமா தரவா பருகா ருருகார்
   வரமா தவமே மலிவார் பொலிவார்”
                             -செய்குத்தம்பி பாவலர்.

           ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நூறு நிகழ்வுகளைக் கவனித்து, அவை தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கும் அவதானக்கலை  நாயகன் சதாவதானி செய்குத்தம்பி  பாவலர் பிறந்த நாள்(1874-1950) இன்று.

                        நாஞ்சில் நாடு, இடலாக்குடியில் (நாகர்கோயில்- கன்னியாகுமரி மாவட்டம்)  தமிழ்ப் பெருங்கடல் செய்குத்தம்பி பாவலர்  1874 ஆம் ஆண்டு, ஜூலை 31 ஆம் நாள் பிறந்தார். பக்கீர் மீரான் சாகிபிற்கும், அமீனா அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகவும், முத்தமிழ்த் தாயின் முக்கிய மகனாகவும் பிறந்த செய்குத்தம்பி,    இயல்பிலேயே கூர்ந்த மதியும், ஆர்வமும் உடையவராக இருந்தார்.  தனது எட்டு வயது வரை அரபு மொழியை வீட்டிலேயே கற்றுத் தேர்ந்தார்.  அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த அப்பகுதியில்,  மலையாளப் பள்ளிகளே அதிகம் இருந்தன. அங்கே, முதல் வகுப்பில் சேர்ந்தார் செய்குத் தம்பி. இவரது அபார அறிவாற்றல் காரணமாக, முதல் வகுப்பு முடிந்தவுடன்,  நான்கு வகுப்புகள் தாண்டி, இவரை ஐந்தாம் வகுப்பிற்கு முன்னுக்கு  அனுப்பியது பள்ளி நிர்வாகம். ஆனால், வறுமை இவரை பின்னுக்குத் தள்ளியது.  பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது.

              தமிழ் இலக்கண,  இலக்கிய நூல்களையெல்லாம் கற்று, தமிழ்ப்பசி ஆற்றிட வேண்டும் என்ற தணியாத வேட்கை இவருக்குள் கனன்று கொண்டே இருந்தது.   இவரை ஆற்றுப்படுத்த, பொருத்தமான ஒரு ஆசிரியர் , மிகச்சரியாக வந்து சேர்ந்தார்.  ஆம்,          கோட்டாறு சங்கர நாராயண அண்ணாவி என்ற தமிழ்ப் பெரும் புலவனிடம்  தமிழின் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் செய்குத் தம்பிப் பாவலர். ஊதியம் ஏதும் பெறாமல் தமிழ் ஓதிய அண்ணாவியாரின் ஊக்கத்தால், தனது 16வது வயதில் இரு அந்தாதிகளை எழுதி,  அச்சிட்டு வெளியிட்டார் செய்குத்தம்பி பாவலர்.  பாவலரின் தமிழ் ஞானம் விசாலமாகிக் கொண்டே சென்றது.  

         குறிப்பாக, இவர்  கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார்.   அந்தச்  சூழலில் தான்,  ’மெய்ஞானியார் பாடல் திரட்டு’ என்னும் நூலைப் பதிப்பிப்பதில் , பார்த்தசாரதி நாயுடுவுக்கு   தமிழறிந்த இஸ்லாமியர் ஒருவர் தேவைப்பட்டது.  செய்குத்தம்பி பாவலர் பொருத்தமாக அங்கு  வந்து  சேர்ந்தார். பணி செய்ய சென்னை கிளம்பினார் பாவலர்.  பின்பு, சென்னையிலேயே மாதம் ரூ.60 சம்பளத்தில், ஸ்ரீ பத்மவிலாச பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21.

        பாவலர் சென்னையில் இருந்தபோது, வள்ளலாரின் 'அருட்பா' மீது பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அது ஒரு 'மருட்பா' என எதிர்த்தரப்பினர் வாதம் செய்து வந்தனர். பாவலர் அருட்பாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். திருவருட்பாவின் பெருமைகளை மேடை தோறும் பெருமைப்படுத்தினார். இதனால் மனம் மகிழ்ந்த காஞ்சிபுரத்துத் தமிழறிஞர்கள் , பாவலரை யானை மீது அமர வைத்து, ஊர்வலம் நடத்தினர். பூரண கும்ப மரியாதையும் செய்தனர். ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்னும் பட்டத்தையும் வழங்கினர்.                                      
    
          அவதானக் கலை என்பது மாயாஜாலம் போன்ற மோசடி என்னும் எண்ணம் கொண்டிருந்த செய்குத்தம்பி பாவலர், ஓர் நாள் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்டப்பத்திரிக்கை என்னும் அவதானத்தை செய்து  காட்டினார் கல்யாண சுந்தரம். எண் பிறழச் சொல்லப்படும் செய்யுள் எழுத்துக்களின் எண்ணையும், எழுத்தையும் நினைவில் நிறுத்தி, முடிவில் முழுச் செய்யுளையும் நேர்படச் சொல்வதுதான் கண்டப்பத்திரிக்கை. இதனை கண்டவுடன் செய்குத்தம்பி பாவலருக்கும் அவதானக்கலையில் ஆர்வம் பிறந்தது. அஷ்டாவதானமும் சோடச அவதானமும்  செய்து பழகி, தான் பிறந்த இடலாக்குடி மண்ணில் சாதித்தும் காட்டினார்.
                         மகாவித்துவான் ராமசாமி நாயுடுவின் ஆலோசனையின் பேரில், நூறு செயல்களை அவதானிக்கும் சதாவதானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. ஒரு பொருள் குறித்த உரை, கண்டப்பத்திரிக்கை, கண்டத்தொகை, இலக்கண வினா, இலக்கிய வினா, நீர்ச் சுவை கூறுதல், கிழமை கூறுதல், ஓசை எண்ணுதல், முதுகில் விழும் நெல்மணி, பூக்கள் எண்ணுதல் , இறைநாமம் உச்சரித்தல், கைவேலை, சதுரங்கம், பாவகை கூறுதல் , ராகம் கூறுதல், வெண்பா புனைதல்...என நூறு வகையான செயல்களை ஒரே நேரத்தில் கவனிக்கும் கவனகக்கலையில் தேர்ச்சி கண்டார். தனது 33 ஆம் வயதில்,  10.03.1907, சென்னை விக்டோரியா அரங்கத்தில், தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய  ஐயர் தலைமையில்,   கா.நமச்சிவாய முதலியார், டி.கே.சிதம்பர முதலியார், திரு.வி.க, இந்து ஆசிரியர் ஜி.சுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வினை வெற்றிகரமாக செய்து காட்டினார்.  அந்த மேடையில் தான், “மகாமதி சதாவதானி” என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

                                         சதாவதானியாக மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. யதார்த்தவாதி, இஸ்லாமியமித்திரன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, வெண்பாக்கள் மாலை என எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்தார். சீறாப்புராணத்திற்கு சீரிய உரை எழுதி, அழியாச் சிறப்பு பெற்றார். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த பாவலர், எல்லாத் தலைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். விடுதலைப் போராட்டத்திலும்  ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.       

      ‘கைத்தறி அணிந்தால் மணமகன்;
      மில் துணி அணிந்தால் பிணமகன்;
      நீ மணமகனா- பிணமகனா?”                 
              என திருமண மேடைகளில் கூட, அந்நிய நாட்டுத் துணிகளுக்கெதிராக துணிந்து பேசினார். தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். உடல் நலிவுற்ற வேளையிலும், 1950ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலும் தமிழே இவருக்குச் சுவாசமாக இருந்தது. இவருக்குப் பிறகு, சதாவதானம் செய்கிற  கலைஞர்கள் இப்போது வரை இல்லை.  இப்போதும்,  கவனகம் நிகழ்த்தி வரும்  கலைஞர்களை இந்த சமூகம் கவனத்தில் கொள்வதே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 

                         ’சிரமாறுடையான்..’ என்று ஐம்பொருள் சிலேடையில் கடவுள் வாழ்த்து பாடிய செய்குத்தம்பி பாவலர்  வாழ்ந்த தெரு- 'பாவலர் தெரு'.  பள்ளி- 'செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி' எனப்  பெயரிட்டு இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.  இடலாக்குடியில் இவரது பெயரில் எம்.ஜி.ஆர். அவர்களால் மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டது.  கலைஞர்  அவர்களால் இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவை மட்டும் தான், கலைக்கு நாம்   கொடுக்கும்  முக்கியத்துவம் என்றால் நாம் தேங்கி விட்டோம் என்றே பொருள்படும். கலையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

          ஐந்திரம் அறிந்த தொல்காப்பியர் அவதானக் கலையில் சிறந்து விளங்கினார் என்னும் குறிப்பு உள்ளது. தொடர்ந்து, காளமேகப் புலவர், ஆறுமுகம் பிள்ளை, இலக்கிய வீதி திருக்குறள் ராமையா, அவரது மகன் கனக சுப்புரத்தினம் என இக்கலையின் நீட்சி இருந்தாலும் அது சுருங்கிக் கொண்டே வருவது தெரிகிறது. தற்போது நண்பர்  திருமூலநாதன் (Thirumulanathan Dhayaparan)   , பிரதீபா, திலீபன், முனைவர் செழியன் போன்ற சிலரே கவன்கக் கலையை நிகழ்த்தி வருகின்றனர். இந்தக்  கலையின் வரலாறும், கவனகர்களின் வாழ்க்கையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இனியாவது,  சான்றோர் சபைகளும், அரசும் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 

                   கவனகரின் பிறந்த நாளில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. 

பாரம்பரியக்  கலைகளை  மறப்பது,  இழப்பது;  
இனம், மொழி இரண்டினையும் துறப்பது, அழிப்பது;
           - இவை இரண்டுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை, ஒன்றுதான்.
ஆதலால்,
கலைகள் காப்போம்.





Tuesday, July 30, 2019

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

புரட்சிப் பெண் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி! 

டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி (1886-1968)!

                         பிறக்கும்போதே உடலில் வலு இல்லை; தாய்ப்பாலும்  கிடைக்கவில்லை; பிள்ளைப்பருவத்தில் மார்புச் சளி; பள்ளிப் பருவத்தில் கிட்டப்பார்வை; கல்லூரி செல்லும்போதோ,  ரத்தசோகையும், ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பும் சேர்ந்துகொண்டது. -இவை யாவும் இவள் உடல் கண்ட சோதனைகள்.                  
                    தாய் இசைவேளாளர் சமூகம் -தந்தை பிராமண சமூகம் - இவர்கள் திருமணத்தை உறவுகள் எதிர்த்தன; பருவம் வந்த பின்னும் பள்ளி செல்ல எண்ணிய இவரின் ஆர்வத்தை உடனிருந்த மீதி  உறவும், சமூகமும் மறுத்தன; ஒரு தங்கையின் அம்மை நோய் பாதிப்பும், மறு தங்கையின் புற்று நோய் பாதிப்பும் இவர் மன வலிமையை முறித்தன. இப்பெண்ணை படிக்கச் சேர்த்தால் , தங்கள் மகன்களை அனுப்ப மாட்டோம் என்று சாதியும், சமூகமும்  முரண்டு பிடித்தன. -  இவை யாவும் இவள் மனம் கொண்ட வேதனைகள்.
                              உடலும், மனமும் கண்ட  வாதைகளையும், சமூகத்தின் பேதைமைகளையும்   தனது சாதனைகளால் விரட்டி அடித்த சமூகப் போராளி - கருணையும் வீரமும் சரிவரக் கலந்திருந்த சாதனைப் பெண்மணி டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி 1886, ஜூலை 30 ஆம் தேதி, புதுக்கோட்டையில் பிறந்தார். தந்தை நாராயணசாமி வழக்கறிஞ்ர்; தாய் சந்திரம்மாள் ஓர் இசைப்பாடகி.                  
    புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் சிறப்பு ஆணையோடு, ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாய்ச்  சேர்ந்து படித்தார் முத்துலெட்சுமி ரெட்டி. சென்னை மாகாண மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த  'முதல் இந்தியப் பெண்' எனும் பெயரும் பெற்றார். பெண்களை வகுப்பறையில் அமர வைக்கவே மறுத்த பேராசிரியர் ஜிப்போர்ட், முத்துலெட்சுமி பெற்ற மதிப்பெண்களால் மனம் மாறினார். 1912ல் முத்துலெட்சுமி மருத்துவர் பட்டம் பெற்ற நாளில், பேராசிரியர் சொன்னார், “சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றில் இது ஒரு பொன்னாள்!”.     
    சென்னை எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். அந்நாளைய சுகாதாரத்துறை அமைச்சர் பனகல் ராஜா(நீதிக்கட்சி), உதவியோடு இங்கிலாந்து சென்று, மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்தார். லண்டனில் ராயல் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இவர் கற்ற கல்வி, செனனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க உதவியது.
                             முத்துலெட்சுமி ரெட்டியை நிறுவனராகக் கொண்டு, 1954ல் ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, அடையாறு புற்று நோய் மையம், இன்று இந்தியாவின் மிக முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாகும். ’எஸ்.கே.புண்ணியகோடி’ என்ற புண்ணிய மனிதன் தான், மருத்துவமனைக்கான இடத்தை இலவசமாக வழங்கினார். தற்போது, இந்த மையத்தில்,  நாடெங்கிலும் இருந்து ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் தரமான சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல, 1930 ஆம் ஆண்டு, இவரால்  தொடங்கப்பட்ட ’அவ்வை இல்லம்’ ஆதரவற்ற பெண்களின் கலங்கரை விளக்கமாக இன்றும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
                       இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண்களின் நலனுக்காக மாதர் சங்கத்தைத் தொடங்கினார். ‘ஸ்திரி தர்மம்’ என்னும் மாத இதழையும் நடத்தினார். மாகாண சட்ட மன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம்,  சட்டமன்றத்தில் முதல் பெண் குரல் ஒலித்தது.  தேவதாசி  முறை ஒழிப்பு , இளம் வயது திருமணத்திற்குத் தடை, இருதார மணத்திற்கு தடைச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு முன்வடிவு கொடுத்தார். இது நாட்டில் பெரும்  விவாத அலையை உண்டாக்கியது. இறுதில் இவை யாவும் சட்டங்களாயின. மாதர் குலமே இவரால்  மகிழ்ந்தது.
               தான் எழுதிய, “My Experiment as a legislator" என்ற சுயசரிதைப்  புத்தகத்தில்,    அன்னி பெசண்ட் அம்மையாரும், மஹாத்மா காந்தியடிகளும் தனது  இரு முன்மாதிரிகள் என பெருமையோடு குறிப்பிடுகிறார் முத்துலெட்சுமி ரெட்டி. தியாசபிகல் சொசைட்டியில்,  சாதி மத சடங்குகளைப் புறக்கணித்து  , தனது மன எண்ணங்களைப் புரிந்து கொண்ட டாக்டர்.சுந்தரரெட்டி என்பவரைக் கண்டறிந்து மணவாழ்க்கையைத் தொடங்கினார். இந்த தம்பதியினர்  மனமொத்து, இணைந்து - பல சீர்திருத்தங்களைச் செய்தனர்.  இவர்கள் இருவரும் சமூக மாற்றங்களைச்  சத்தமின்றி எழுப்பிய, இரு கைகள் போலவே வாழ்ந்தனர். தடுத்த சமூகத்திற்கு, சாதனைகளையே பரிசாகக் கொடுத்தனர்.
                      தமிழிசைக்காகவும், தமிழுக்காகவும், தமிழாசிரியர்கள் நலனுக்காகவும் இவர் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதுபோல பல்வேறு பிரச்சனைகளில், முத்துலெட்சுமி ரெட்டியும், அவரது கணவரும் எப்போதுமே சமூக முன்னேற்றத்துக்கான முன் ஏர் போலவே செயலாற்றி வந்துள்ளனர். பொருத்தமான இந்த தம்பதியினருக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகன் ராம் மோகன், திட்டக்குழு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளைய மகன் கிருஷ்ண மூர்த்தி, ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர்.
              சமூகப் பணிகளில் சற்றும் தளர்வடையாத இவரது மன உறுதி, எதிர்காலத் தலைமுறையினருக்கு ஓரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.  தடையின்றித் தொடரும்  தன்னலமற்ற இவரது சேவையைப் பாராட்டும் விதமாக, இந்திய அரசு இவருக்கு ’பத்ம பூஷண் விருது’(1956) வழங்கிச்  சிறப்பித்தது.  1968 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22ஆம் தேதி, இவர் மறைந்தார். இவரால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்கள் இன்று வரை சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது, இவரது உயர் வாழ்வுக்குக் கிடைத்த முழு வெற்றியாகும்.
                 முத்துலெட்சுமி ரெட்டி, தனது  வாழ்நாள் முழுவது சமரசமற்ற ஓர் சமூகப் போராளியாக வாழ்ந்து காட்டினார். முடை நாற்றமெடுக்குத்த சமூக அழுக்குகளை, தன் கைகளாலேயே களைந்து சுத்தம் செய்தார்.  இடர்கள், தடைகள் என எதுவும் அவரது இலட்சியங்களைத் தடுக்க முடியவில்லை. எதிர்கொண்ட சங்கடங்கள் அனைத்தையும், தனக்குச் சாதகமாக்கி,  சாதனையாகவும் மாற்றிக் கொண்டார்.
                ஆம், இடர் தரும்  தடைக்கற்களை    படிக்கற்களாக  மாற்றுவதும், தடுத்த கைகளைக் கொண்டே -  வெற்றி மாலை சூட்டச்செய்வதும்தானே, ஒரு  போராளிக்கு இருக்க வேண்டிய அவசிய குணங்கள்.! 
                   
               

Monday, July 29, 2019

பி.சா.சு.


தமிழின் முதல் முனைவர் - பி.சா.சு.!

                  தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும்,  பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில்  முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று. 
     
         கணிதத்தில் பட்டம் முடித்து, இனிக்கும் தமிழுக்கு அரும்பணி செய்த அறிஞர்களின் பட்டியல்  எடுக்க வேண்டும். அது, நிச்சயம் சுவையான பட்டியலாக  இருக்கக்கூடும்.  அப்படி ஒரு பட்டியல் எடுத்தால், அதிலும் பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பெயர் முக்கிய இடம் பிடிக்கும். !
                   
           திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்பட்டியில் 1890-ஜூலை 29 ஆம் தேதி,  ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.(P.S.Subramaniya Sasthiri,1890-1978). திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.

               பிறகு,   மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ,  சமஸ்கிருதத்தில் முகலைப் பட்டம் பெற்றார். அங்கே இவருக்கு ஆசிரியராக இருந்தவர் திரு.நீலகண்ட சாஸ்திரி அவர்கள். பேராசிரியர்  எஸ்.குப்புசாமி அவர்களிடம் இருந்து நியாய சாஸ்திரம் (Logic), அலங்கார சாஸ்திரம் (Comparative literature and literary criticism) போன்ற பாடங்களில் நுட்பம் உணர்ந்தார். ஓர் ஆர்வம் மிக்க  மாணவராக இருந்து,  தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார்.
 
           ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்தார்.  இதன் அடிப்படையில் சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.  தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமை இவருக்குக்  கிட்டியது.
         
            திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் ஒரு  கணிதப் பட்டதாரி ஆசிரியராகவே தனது பணியைத் தொடங்கினார் பி.சா.சு.   பிறகு,  தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ,  திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்த பி.சா.சு அவர்கள், இறுதியில் திருவையாறு  கல்லூரியில் பணி ஓய்வு பெற்றார்.
               
           இவர்தான் தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரைகள் எழுதியும்  வெளியிட்டார். சென்னையில் உள்ள  பேரா.குப்புசாமி ஆய்வு நிறுவனமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்துள்ளன.

        காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று,  பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத்  தமிழில் மொழிபெயர்த்தார். 14 தொகுதிகளாக உருவான இந்நூலின் கடைசி 8 பாகங்கள், இவரது மறைவுக்குப் பிறகே அச்சானது. தற்போது, 14 தொகுதிகளையும் குப்புசாமி ஆய்வு நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மேலும் பாணினியின் நூல்கலையும்  இவரே தமிழுக்குக்  கொண்டுவந்தார்.   
     
           அதே காலகட்டத்தில் புறநானூறு பாடல்களையும் ஆய்வு செய்து,  முதன்முதலில் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து வெளியிட்டார்.  விளக்கமுறை  இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கண நூல்களையும்  எழுதியுள்ளார்.    தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 
         
            40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும், வேறுபாடுகள் இல்லாமல்  எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார். ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை,திருவையாறில் ,  தொடர்ந்து  திருக்குறள் வகுப்பு நடத்தினார். துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு இவர் நடத்திய திருக்குறள் வகுப்பு, இவரது தமிழ்ப் பற்றுக்கும், எளிமைக்கும் ஓர் உதாரணம்.   

        எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக்  கடத்தினார். மொழிகளின் காதலனாய், நூல்கள் வாசிப்பதில் பிசாசு போல இயங்கிய பி.சா.சு.,   திருவையாறு நகரில், 1978ஆம் ஆண்டு, மே மாதம் 20 ஆம் தேதி மறைந்தார். தமிழ் மனம் , தமிழ் மண்ணோடு இணைந்தது.
                           
                இன்றைய சூழலில் , பல இடங்களில் -   'முனைவர் பட்டம்'  என்பது விலைகொடுத்து  வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம்  முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து,  முனைவர் பட்டம் பெற்ற - முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.
             
          ஆம்,   தமிழில்  ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும்.     இந்நாளில்,    பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை    உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.
               
             மொழியின் தேக்கம் என்பது அந்த இனத்தின் வளர்ச்சியையும் தேங்கச் செய்துவிடும்.  எனவே,    மொழி- ஒருபோதும்  தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் - முற்றாத இளங்கொடி போல- தழைத்தோடிக்கொண்டே இருக்கவேண்டும்.

Saturday, July 27, 2019

காரி டேவிஸ்



உலகக் குடிமகன் - காரி டேவிஸ்!

"What is required is our individual commitment to one world and humanity first, and ourselves and our particular country second."    -Gary Davis.
                                
          அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, 'உலகக் குடிமகன்' என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; .நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) பிறந்த நாள் இன்று.
                  அடக்கு முறை, சிறைவாசம்ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் 'உலக அரசாங்கத்தை' ஏற்படுத்தினார் காரி டேவிஸ்.   இன்றும்     அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்குஉலக பாஸ்போர்ட்வழங்கப்பட்டு வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன. நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின்  "World Service Authority" பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் இணைந்து கொள்வதற்கான விதிகளும், விண்ணப்பமும் அவர்களது தளத்தில் உள்ளன. (www.worldservice.org).
                  அமெரிக்காவில்,1921- ஜூலை 27ல்யூத தந்தைக்கும், அயர்லாந்து நாட்டு அன்னைக்கும் மகனாகப் பிறந்த காரி டேவிஸ், பட்டப்படிப்பும், தொழில்நுட்பக் கல்வியும் பயின்றவர். சில காலம் , பிராட்வே நாடகக் குழுவில், நடிகராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போதுபி-17 வகை குண்டு வீசும் விமானத்தில் பயணித்து, ஜெர்மனி நாட்டின் நகரங்களின் மீது குண்டுகள் வீசினார்இருப்பிடம் திரும்பிய பின்பு, அழிவுகளின் புகைப்படங்களைப் பார்த்தார். மனம் வருந்தினார். ’எல்லைகள் பிரித்ததும், நாடுகள் பெயரிட்டதும் மனிதனை மனிதன் கொன்று அழிக்கத்தானா’, என தனக்குள் கேள்வி எழுப்பினார். மறுமுறை விமானத்தில் சென்றுகுண்டுகள் வீசாமல் திரும்பி வந்ததால், இராணுவத்தின்  தண்டனைக்கும் உள்ளானார்.
                    இரண்டாம் உலகப் போரில், அணு ஆயுதங்களால் மனித இனம் அழிந்து போகுமோ என அஞ்சிக் கொண்டே இருந்தார். போரின் போது, தனது சொந்தத் தம்பியை இழந்தது அவருக்குள் அதிக மன அழுத்தத்தை உண்டாக்கியது. அவர் நினைத்தது போலவே நடந்தது. அணு ஆயுதங்கள் கொண்டு, மனிதனை மனிதனே அழித்தெடுக்கும் அவலத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  எல்லைக் கோடுகளுக்காகச் சண்டையிட்டு, மனிதன் மடிவதை இவரது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ஆம் ஆண்டு, தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பதாக அறிவித்தார் காரி டேவிஸ். இனிமேல் தான் ஒரு உலகக் குடிமகன் என உலகின் காதுகளுக்குச் சத்தமாகச் சொன்னார்.  
            பாரீஸில் சார்போன் பல்கலைக்கழகத்தில்  நடராஜ குருவிடம் (ஸ்ரீ நாராயண குரு குலம்) ஆழமான  நட்பைப் பெற்றிருந்தார்.  இருவரும் இணைந்து ஒரே உலகை உருவாக்கும் திட்டங்கள் தீட்டினர்.  ரிக் வேத வாக்கியமான "வசு தைவ குடுமபகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற சொல்லாட்சி தன்னை பெரிய அளவில் சிந்திக்க வைத்ததாக காரி டேவிஸ் எப்போதும் சொல்லுவார்.
             1948ஆம் ஆண்டு முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக் கொண்ட காரி டேவிஸ், 1954ல் இந்தியா வந்தபோது கைது செய்யப்பட்டார். பிறகு, நடராஜ குரு, ஆர்.கே.லெட்சுமணன்   போன்ற ஆளுமைகளின் முயற்சியாலும், ஜவகர்லால் நேருவின் நேரடி தலையீட்டினாலும், அவரது உலக பாஸ்போர்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகுஎட்டு மாத காலம், ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் இருக்கும் நாராயண குரு குலத்தில் தங்கினார். வாழ்வின் இறுதி வரை , குறிப்பிட்ட கால  இடைவெளியில் இந்தியா வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்
                      1956ஆம் ஆண்டு, உலக அரசுக்கான முன்வரைவையும், பொது பொருளாதாரத் திட்டத்தையும் எழுதி வெளியிட்டார். அந்த அறிக்கை பாரிஸ் நகரில் வெளியிடப்பட்டது. ஆல்பர் காம்யூ உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் இவரது கொள்கைக்கு ஆதரவு தந்தனர். 
          ஒருமுறை காரி டேவிஸ், தென் ஆப்ரிக்கா நாட்டில் நான்கரை ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குள்ளேயே தனது உலகத்தை உருவாக்கிக் கொண்டு, மன உறுதியோடு நிமிர்வ்து நின்றார் கார் டேவிஸ்.  1986ல் நடைபெற்ற அமெரிக்க மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு, வெறும் 585 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.    காந்தியவாதியாகவே  இருக்க விரும்பிய காரி டேவிஸ், அமைதி வழியிலேயே, 150 நாடுகள் இவரது உலக பாஸ்போர்ட்டை ஏற்கும் படி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  பாஸ்போர்ட் விதிகளை மீறியதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட முறை, இவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 
               ஆயினும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’  என்பதையே உயிரெனக் கொண்டார்.      ஆகாயத்தின் கீழ்,யாவரும் ஒரே குடும்பம்’  என்ற இலட்சியத்தை நடைமுறைப்படுத்ததனது மூச்சின் கடைசிக் கணம் வரை தன்னம்பிக்கையோடு போராடினார்.  ஒருநாளும் காரி டேவிஸின் உள்ளம் சோர்ந்துவிடவே இல்லை. ஏனெனில்,  தேசத்தின் எல்லைகள் - மானுட சிந்தனைகளைச் சுருக்கும் கயிறுகள் என்பதை அவர் புரிந்திருந்தார். மனித மனங்களைச் சுருக்கும் கயிறுகளை,  தன்னால் முடிந்த மட்டும் அறுத்தெறியப் பாடுபட்டார்.
                2013ஆம் ஆண்டு, ஜூலை 24ஆம் தேதி, அமெரிக்காவில், தனது 91 வது வயதில், வயது முதிர்வு காரணமாக இறந்து போனார் காரி டேவிஸ். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட  அவருக்கு,  இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருந்தனர். ஓருலகம் உருவாக்கும் தனது வாழ்க்கை அனுபவங்களை, நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார் காரி டேவிஸ்.
        உயர்ந்த இலட்சிய வேட்கை கொண்டிருந்த காரி டேவிஸின் கண்கள்,  அவரது கனவின்  வெற்றியைக் கண்டு மகிழும் வாய்ப்பைப் பெறவில்லை.  அப்படி ஒர் உலகக் கனவு, ஊழிக்காலம் முடியும்வரை நனவாகாமல் கூடப் போகலாம். ஆனால், ’ஓருலகம்’ என்ற அவரது இலட்சியமும், அதை நோக்கிய அவரது பயணமும் - காலத்தால் புறக்கணிக்க முடியாதவை.
           ஏனெனில், இலட்சியங்களின் வெற்றி தோல்விகளை வரலாறு பார்த்துக்கொள்ளும்; இலட்சியவாதிகளும் அது பற்றிக் கவலை கொள்வதில்லை.  ஆனால்,  இலட்சியங்களின் வேர் மட்டும், சமூகத்தை  ஒன்றுபடுத்துவதாகவும்மேன்மை செய்வதாகவும்   இருக்க வேண்டும்.    காலத்தில் நிலைத்து நிற்க, அதுதான் முக்கியம்.!