Sunday, August 19, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 19

சொல் ஆயுதம் - தீரர் சத்தியமூர்த்தி.

ஆகஸ்ட் 19....இன்று!

    “இதுபோல் பல சத்தியமூர்த்திகள் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் நம்  நாட்டை விட்டு என்றோ ஓடியிருப்பார்கள்”.                                                               - மகாத்மா காந்தியடிகள்.

                 பேச்சுத் திறம், செயல் ஆர்வம், கலை உள்ளம் -  இவைதான் இவரது ஆயுதங்கள்.  அஞ்சா நெஞ்சத்துடன், அகத்தில் எழுந்த கருத்துக்களை அழகாகச் சொல்வதில் தீரர்; விடுதலைப் போராட்டத்திற்காக, தனது வாழ்வையே  அர்ப்பணித்த வீரர் - எஸ்.சத்தியமூர்த்தி (1887-1943) பிறந்த நாள் இன்று.

             புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் 1887ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி, மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரிகள். இவரது பெற்றோர்- சுந்தர சாஸ்திரி-சுப்பு லெட்சுமி அம்மாள். வழக்கறிஞராகப்  பணிபுரிந்த இவரது தந்தை இறந்தவுடன், குடும்பம் முழுவதையும் தானே சுமக்கும் கடின நிலை , இளம் வயதிலேயே இவருக்கு ஏற்பட்டது. புதுகை மன்னர் கல்லூரியில் இடைநிலை வகுப்பு படித்த சத்தியமூர்த்தி, பட்டம் படிக்க சென்னை சென்றார். அங்கு, கிறித்தவக் கல்லூரியில், வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.  
           சென்னை சட்டக் கல்லூரியில்,  சட்டப்படிப்பை முடித்த பிறகு, வி.வி.சீனிவாச ஐயங்காரிடம் இளையராகச் சேர்ந்து, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்த பொழுது, முதல்வரையும், நூலகரையும் தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆம், 500-600  பக்கங்கள் கொண்ட புத்தகங்களைக் கூட, நன்றாகப் படித்து, ஓரிரு நாட்களில் திருப்பித் தருவாராம். நூலகமே கதி என்று கிடந்த சத்தியமூர்த்தி, தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பாலசுந்தரம் என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்ட சத்தியமூர்த்திக்கு லெட்சுமி ஒரே ஒரு மகள் மட்டுமே. 
            எஸ்.சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, பின்னாட்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, விடுதலைக்காகப் பாடுபட்டார். மாண்டேகு-செம்ஸ்போர்ட் அறிக்கை, ரெளலட் சட்டம் போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, மூவர் குழு லண்டன் சென்றது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் இவர்களுடன் சத்தியமூர்த்தியும் அக்குழுவில் இருந்தார். தனது வாதத் திறமையால் , லண்டன் உறுப்பினர்களின் வாயை அடைத்தார். 1919 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் ,  லண்டன் சென்று,  இந்தியாவின் தரப்பை எடுத்துச் சொல்லும் வாய்ப்பு இவருக்கே  வழங்கப்பட்டது. காரணம், 1917 கல்கத்தா மாநாட்டில் இவர் ஆற்றிய எழுச்சி உரை, அனைத்து இந்தியத் தலைவர்களின் பார்வையையும் இவர் பக்கம் திருப்பியிருந்தது. 
           சுயராஜ்ஜியக் கட்சியிலும், பிறகு  காங்கிரஸ் கட்சியிலும் தமிழகத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.  சென்னை மாகாண சட்டசபையில் உறுப்பினராக இருந்தபோது, 01.10.1928ல், பாரதியாரின் பாடல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து சிறப்பான உரை நிகழ்த்தினார். அதேபோல, ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, 20.02.1936 ல்,டெல்லி மத்திய சபையில் 360 நிமிடங்கள் தங்கு தடையின்றிப் பேசி ஆங்கிலேயர்களை தடுமாறச் செய்திருக்கிறார். தேவதாசி முறை ஒழிப்புக்கான தீர்மானத்தில் , முத்துலெட்சுமி ரெட்டிக்கு எதிராகப் பேசியதால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.
                  1939 - நவம்பர் 6 அன்று சென்னை மேயராகப் பொறுப்பேற்றார். சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என ஆங்கிலேயர்களிடம் வாதாடி ஒப்புதல் பெற்றார். இவர் மேயராக இருக்கும் போதுதான் நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.   1944 ல் பணிநிறைவு பெற்ற போது, அதைக் காண அவர் உயிரோடு இல்லை. 
                இந்திய விடுதலைக்காக  மேடைகளிலும், சட்ட சபைகளிலும் தொடர்ந்து உரையாடிய சத்தியமூர்த்தி, சிறைகளில் வாடியே உடல் நலிவடைந்தார். இறுதி முறையாக, 1942 ஆம் ஆண்டு, நாக்பூர் அமராவதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மனித உரிமையின் மதிப்பு வெளிப்படாத அந்த நேரத்தில்,  விடுதலை வீரர்கள் , சிறைச்சாலைகளில் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். உடல் வெகுவாக மோசமடைந்ததைத் தொடர்ந்து, நாக்பூரிலிருந்து,  சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். விடுதலைக் காற்று , நுரையீரல் தீண்டும் வாய்ப்பை  அவர் பெறவில்லை.  28.03.1943 ல் இறந்து போனார்.   
              அவரது வழிகாட்டலில்  உருவான தலைவர்  காமராஜர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிட்டார். பூண்டி நீர்த்தேக்கம் , ‘சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  2002 ஆம் ஆண்டு தான்,  இந்தியப் பாராளுமன்றத்தில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது.
              போகும் இடங்களுக்கும், போராட்டக் களங்களுக்கும் தனது செல்ல மகள் லெட்சுமியை, எப்போதும் உடன் அழைத்துச் செல்லும் சத்தியமூர்த்தி, பரிசுப் பொருளாக புத்தகங்களையே வாங்கிக் கொடுப்பார். அறிவின் மீது ஆழமான காதல் அவருக்கு இருந்தது.
          புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்டத் தொண்டைமான், ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்து கொண்டு, பிள்ளைக்கு சொத்துரிமை வழங்குவதை கடுமையாக  எதிர்த்தார். அதன் பயனாக, புதுக்கோட்டைக்குள் நுழைய, இவருக்கு தடை விதிக்கப்பட்டது. 2ஆண்டுகளுக்குப் பிறகே தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
        வாழ்ந்த  காலத்திலும், இறந்த பிறகும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர்  தீரர் சத்தியமூர்த்தி.  “எனது புத்தியால் நான் மேலே செல்வதும், எனது ஏழ்மையால் நான் கீழிறக்கப்படுவதுமே எனது வாழ்வு” என, வ.ரா. அவர்களிடம் , ஒரே ஒரு முறை மனம் வருந்திப் பேசியிருக்கிறார். ஆனால்,  தேங்கிவிடவில்லை.

        விமர்சனம் என்ற பெயரில் விஷத்தை வீசும் வன்மம் சூழ் உலகிது  என்பது புரிகிறது. அதே வேளையில், தொட்டால் சிணுங்கும் மனதினைத் தேற்றுவது தான் கடினமாக இருக்கிறது.
ஆனால்,
மகத்தான சாதனை செய்யும் மனங்கள், மயங்குவதில்லை; காயமடைவதும் இல்லை.





            
                           

No comments:

Post a Comment