Monday, August 27, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 27

நாதஸ்வரச் சக்கரவர்த்தி - டி.என்.ராஜரத்தினம் பிள்ளை

ஆகஸ்ட் 27...இன்று!


”பூலோகத்தில், அபஸ்வரங்களை வதம் செய்து, சுபஸ்வரங்களை இசைக்க வந்த சங்கீத தேவதையின் செல்லக் குழந்தை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை”     -  கல்கி.

         இசை ஞானத்தால் சங்கீத ரசிகர்களின் இதயத்தைக் கட்டிப் போட்டவர்; கச்சேரிகளில் கலைஞர்களுக்கென தனியே மேடை இட்டவர்;  வீண் ஆடம்பரமாக, ஒருவர் எப்படி வாழக் கூடாது என்பதற்கும் இவரே சான்றானவர் - நாதஸ்வரக் கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை (1898 - 1956) பிறந்த நாள் இன்று.
          டி.என்.ஆர். உயிரோடிருக்கையில், இந்தக் கட்டுரை அவருக்கு படிக்க அனுப்பப் பட்டிருந்தால், மேற்கண்ட பத்தியைப் படித்ததுமே, கட்டுரைத் தாளைக் கிழித்திருப்பார். ஏனெனில், ‘அகில உலக நாதஸ்வர ஏகச் சக்கரவர்த்தி’, என்ற பட்டப் பெயர் இல்லாமல் வரும் கடிதங்களை, பிரித்துக் கூடப் பார்க்காமல் கிழித்துவிடும் பழக்கம் கொண்டவர் அவர். ஆதலால், முன் பத்தியில்,  அவரது பெயருக்கு முன்னால் அந்தப் பட்டப் பெயரை இணைத்துக் கொள்ளுங்கள்!.  ’நாகசுரம்’ என்பதே சரியான சொல் என்றாலும், அவரது கடித உறையில் உள்ள ’நாதஸ்வரம்’ என்ற சொல்லையே நாமும் இங்கு  பயன்படுத்துவோம்.  
    பெற்ற பட்டங்களையெல்லாம் சற்றும் தயங்காது, தனது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் டி.என்.ஆர் அவர்களின் சுய முகவரியிட்ட கடிதத் தாள் (Letter Pad)  15 அங்குல நீளமுடையது. கே.எஸ்.வெங்கட்ராமையர் அன்பளிப்பாக வழங்கிய பொடி டப்பா, ரயில் பயணங்களில் ஒரு இருக்கையை அடைத்துக் கொள்ளும் அளவு அகலம் உடையது. இவரிடம் நேர ஒழுங்கு கிடையாது, முன் கோபி, கோபம் வரும்போது கெட்ட வார்த்தைகள் கொட்டித் தீர்ப்பவர்,  அதிகப் பணம் வாங்குபவர், தலைக்கணம் நிறைந்த மனிதன் என்று எல்லோரும் சொல்லும்படி நடந்து கொண்டார்.  ஆனால், தன்னை மறக்கச் செய்யும் -  தனித்துவ இசைத் திறனால், குறை சொல்வோர் செவி நிறைத்து, அவர்கள் வாயை அடைத்து வைத்தார்.
         27.08.1898 அன்று, குப்புசாமிப் பிள்ளை- கோவிந்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த டி.என்.ஆரின் இயற்பெயர் பாலசுப்ரமணியன். 4 வயதிலேயே தந்தையை இழந்ததால், திருவாவடுதுறை ஆதீனத்தில் பணிபுரிந்த  தாய் மாமா திருமருகல் நடேசப் பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மருமகனைத்  தன் மகன் போல வளர்த்தார் நடேசப் பிள்ளை. பதிலுக்கு, மாமாவின் பெயரையே முதல் எழுத்தாகப் பயன்படுத்தினார் ராஜரத்தினம் பிள்ளை.         
          டி.என்.ஆர். அவர்கள், ஸ்ரீகிருஷ்ணய்யரிடம் வாய்ப்பாட்டையும், மார்க்கண்டேயப் பிள்ளையிடம் நாதஸ்வரக் கலையையும் கற்றுக் கொண்டார். மாமாவும் வழிகாட்ட, மிகச் சிறந்த இசைக் கலைஞராக உருவெடுத்தார். மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை மறைவுக்குப் பின் மங்கிக் கிடந்த நாதஸ்வரக் கலைக்கு மறு உயிர் கொடுத்தார்
                 இவர் வாசிக்கும் ’தோடி’ ராக இசையைக் கேட்பதற்காகவே , முன்னணி இசை ஆளுமைகள் கூட , கச்சேரிகளில் முன் வரிசை இருக்கையைத் தேடினர். வழக்கமாக நாதஸ்வரக் கச்சேரிகளில் சுருதிக்குப் பயன்படும் ஒத்துக்குப் பதிலாக, தம்புராவைப் பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  இவருக்கு, வீணை, ஷெனாய், பிடில் இசைகருவிகளின் நுட்பங்களும் தெரியும். வாய்ப்பாட்டிலும் விற்பன்னர். முதன்முதலாக, 34.5 அங்குலம் (2 கட்டை), 31.2 அங்குலம் (3 கட்டை) நீளமுள்ள நாதஸ்வரங்களைப் பயன்படுத்தியவரும் இவர் தான். 
        1929 ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை வெங்கட்ராமன் வீட்டில், மேடையில் அமர்ந்து கச்சேரி செய்தார். அதன் பிறகு,     வீடுகளிலும், திருவிழாக்களிலும் நின்று கொண்டே வாசிக்கும் பழக்கத்தை  மாற்றி, தனியே மேடையிட்டுத் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்க ஆரம்பித்தார். இறுதி வரை,  திருவாவடுதுறை மடம், திருவிடைமருதூர் தைப்பூசம், மாயூரம் சுவாமி புறப்பாடு ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நின்று கொண்டு வாசித்தார். 
          1947 ஆம் ஆண்டு, இந்திய சுதந்திர தினத்தன்று,  மாலை நிகழ்வில், தேசத்தின்  முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் இசைக் கச்சேரி நடத்தி, அனைவரையும் இசை இன்பத்தில் மூழ்கடித்தார். குடுமியும், வறுமை காட்டிடும்   வேட்டியும் அணிந்திருந்த கலைஞர்கள் மத்தியில் கிராப் தலை, ஷெர்வாணி உடை, வைரக் கடுக்கண், காலிலே ஷூ என தோற்றத்திலும் மாற்றம் கொண்டு வந்தார். ‘கவி காளமேகம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக பாடல்கள் பாடி நடித்து, திரைத் துறையிலும் வெற்றிக்கொடி பதித்தார். 
            1950களில் ஒரு கச்சேரிக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாகக் கேட்டு வாங்கினார். ரயில் நிற்காத தனது ஊர் வரும்போது, ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து, வண்டியை நிறுத்துவார். வண்டி சரியாக வீட்டின் அருகிலே வந்து நிற்கும். அபராதத் தொகை ரூ 50. செலுத்திவிட்டு, ஆயாசமாக வீட்டுக்கு நடந்து செல்வார். இவரை இறக்கி விட்டபின், ரயில் சத்தமிட்டுக் கொண்டே  தனது பயணத்தை மீண்டும் தொடங்கும்.     
         சீவாளி சரியாக நனைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக, மேடையில் அமர்ந்து ஊதி ஊதிப் பார்க்க மாட்டார். மேடையேறி விட்டால் இசையருவி தானே வழியத் தொடங்கிவிடும். இசைக்கு மரியாதை தராத யாருக்கும், இவர்  பதில் மரியாதை தருவதே இல்லை. ஒருமுறை,   கணக்குப் பிள்ளையிடம் சொல்லி, பணம் தரச் சொன்னார் மைசூர் மகாராஜா. தான் அமர்ந்து கொண்டு, மேளக்காரரை பணம் வாங்கச் சொன்னார் நாதஸ்வர மகாராஜா!  யாருக்கும்  அடிபணியாத சுயமரியாதைக்காரர் இவர்.
         ஆனால், அதீத செல்வமும், புகழும் இவரை போதைக்கு அடிமையாக்கின. போதையிலும் ஆடம்பரத்திலும் தனது பொருள்களை இழக்கத் தொடங்கினார். சாரதா, சுப்பு, ஜனகத்தம்மாள், பாப்பம்மாள் என இவருக்கு 4 மனைவிகள்(சிலர் ஐந்தென்றும் சொல்வர்). இவர்,  ஒர் ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார். ஆயினும் தனக்கு குழந்தை ஏதுமில்லை என்ற கவலை டி.என்.ஆரிடத்தில் எப்போதும் இருந்தது. 
       12.12.1956 ல் சங்கீத தேவதை, தனது மகன் டி.என்.ஆரை மீண்டும் வானுலகுக்கு அழைத்துக் கொண்டாள். அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை என்.எஸ்.கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டார். ‘அகில உலக நாதஸ்வர ஏகச் சக்கரவர்த்தி’ கடைசி ஆசையெனச்  சொன்னதன்பேரில், அவரது மரண ஊர்வலத்தில் நாதஸ்வர இசை இசைக்கப்பட்டது.  இசையால் இசைக்காகவே வாழ்ந்தவர், நாதஸ்வர  இசையோடு எரிமேடை ஏறினார்.

      ஏதோ ஒன்றுக்காக, அடிவருடியாய் வாழும் அற்பக் கலைஞர்கள் அசிங்கமானவர்கள்.  தலைக்கணம் தீண்டாத தன்னம்பிக்கையும், ஞானச் செருக்கும்  கொண்டிருப்பவனே உண்மையான கலைஞன்!

No comments:

Post a Comment