Sunday, August 12, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 12

நூலகம் என்னும் ஆலயம் - தேசிய நூலகர் தினம்.

ஆகஸ்ட் 12... இன்று!

        இன்று தேசிய நூலகர் தினம் (ஆகஸ்ட்-12). புத்தகக் கடவுள்கள் இருக்கும், நூலகக் கோயில்களைப் பேணி வரும் நூலகர்களுக்கு நன்றி கூறுவோம்.
         நடமாடும் நூலகங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவரும், நூலகப் பகுப்பாய்வு முறையில் புதிய உத்திகளைப் புகுத்தியவருமான எஸ்.ஆர். ரெங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே, தேசிய நூலகர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
        தஞ்சாவூர் மாவட்டம் சீயாளியில் (சீர்காழி) , 1892 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் தேதி , ராமாமிர்தம் என்பவரின் மூத்த மகனாகப் பிறந்தார். அவரது உண்மையான பிறந்த தேதி ஆகஸ்ட் 9 என்றாலும், பள்ளிச்சான்றுகளில் ஆகஸ்ட் 12 என்றே உள்ளது. இவரது ஆறு வயதில், தந்தை ராமாமிர்தம் இறந்துவிட, தாத்தாவின் கண்காணிப்பிலேயே பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் காரணமாகக்கூட, பிறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
        கணிதப் பாடத்தில் பி.ஏ. மற்றும் எம்.ஏ பட்டங்களை முடித்த ரெங்கநாதன், மங்களூர், கோவை மற்றும் சென்னைக் கல்லூரிகளில்   கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார்.1924 ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகராகப் பணியில் சேர்ந்தார். பிறகு, நூலகத்துறையில் தனது அறிவையும், ஆர்வத்தையும் மேம்படுத்திக் கொண்டார். லண்டன் சென்று நூலக அறிவியலில் பட்டம் பெற்றார். 1929ல் சென்னை நூலகச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி, நாட்டிலேயே முதல்முறையாக நடமாடும் நூலகத்தை ஆரம்பித்தார். மன்னார்குடியில் மாட்டுவண்டியில் புத்தகங்களை ஏற்றிக் கொண்டு, பல பகுதிகளுக்கும் சென்றார். இதனை சென்னையிலும் தொடர்ந்தார்.
            1933ல் இவர் உருவாக்கிய “கோலன் நூல் பகுப்பாய்வு முறை” உலக அளவில் பிரசித்தி பெற்றது. வாசகர்களின் விருப்பம்,  எளிமையான தேர்வு , இரண்டையும் கவனத்தில் கொண்டு , தானே தேர்ந்தெடுக்கும் “Open Access Method” முறையையும் அறிமுகம் செய்தார். நூலக விதிகள் ஐந்து என்னும் சித்தாந்ததை உருவாக்கி, அதன் மூலம் நூலகங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். முதல் முறையாக, நூலகங்களில் ’குறிப்புதவிப் பிரிவு’ உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும் . மேலும், காமன்வெல்த் நாடுகளில் முதல் நாடாக, , நூலகத்துறையில்  முனைவர் பட்டப் படிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தார். 
         1928ல் முதல் மனைவி ருக்மணி இறந்துவிட, குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில், 1929ல் சாரதா என்ற அம்மையாரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். திருமண நாளன்று , அரை நாள் மட்டுமே விடுப்பு எடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகர் பொறுப்பில், 20 ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் பணிசெய்த  ரெங்கநாதன் , நூலகத்தை தனது வீட்டைப் போலவே எண்ணினார். செருப்பு அணியாமல் வெறும் காலுடனேயே பல்கலைக்கழகத்திற்கு வருவார். “வீடு, கோவில் இரண்டின் உள்ளேயும் நாம் செருப்பு அணிவதில்லை, அதுபோலத்தான் நூலகமும்!”  எனத் தயங்காமல் பதில் சொல்வார். 
          எளிய உணவு, கைத்தறி ஆடை என காந்திய வழியில் வாழ்ந்த , ரெங்கநாதன்,  தனது வீட்டில்  மின்சார வசதியைக் கூட செய்து கொள்ளவில்லை. நல்ல ஊதியம் கிடைத்தும், எளிமை கருதி, இவற்றை வேண்டாமெனத் தவிர்த்தார். சிக்கனத்தின் மூலம்,  தான் சேமித்த பணத்தை இரண்டு நற்காரியங்களுக்கு முழுவதுமாகச் செலவழித்தார். 
     ஒன்று, 1925 ல், தனது சேமிப்பின் ஒரு பகுதியை , சென்னை கிறித்தவக் கல்லூரியில் ’கணிதத் துறை நல்கை’ ஏற்படுத்த செலவு செய்தார். தனது அன்பிற்குரிய  கணிதப் பேராசிரியர் எட்வர்ட் ராஸ் நினைவாக இதைச் செய்தார்.
       ஓய்வுக்குப் பிறகு, 1956ல் தன்னிடமிருந்த முழுத்தொகையையும் செலவு செய்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில்,  தனது மனைவி பெயரில்,  ’சாரதா ரெங்கநாதன் நூலக அறிவியலுக்கான இருக்கையை’ ஏற்படுத்தினார். 
        நூலகத் துறையில் இவரது பங்களிப்பு, உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐ.நா.சபைக்கான நூலகத்தை மேம்படுத்துவதிலும் பெரும் பங்காற்றினார்.    50க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், 1000 க்கும் மேலான கட்டுரைகளையும் எழுதியுள்ள ரெங்கநாதனின் பெயரால் தற்போது  சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரெங்கநாதன், 1972ஆம் ஆண்டு இறக்கும் வரையிலும் நூலகத் துறையின் வளர்ச்சிக்காக  தொடர்ந்து சேவையாற்றினார்.
      ஓர் யோகியைப் போல வாழ்ந்து, நூலக மேம்பாட்டிற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த சீயாளி ராமாமிர்தம் ரெங்கநாதன் ( S.R.R) அவர்களை நூலக இயக்கத்தின் தந்தை என்பதும், அவர் பிறந்த நாளையே தேசிய நூலகர் தினமாகக் கொண்டாடுவதும் மிகவும் பொருத்தமானது. ஆனால், தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் நூலகங்கள் சென்று சேரவேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்றுவதுதான் , அவரது அர்ப்பணிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
     கணிப்பொறி யுகத்தில் , நூலகங்களின் அமைப்பிலும் மாற்றம் கொண்டு வர வேண்டியிருக்கிறது. எல்லா நூலகங்களிலும் ‘கிண்டில்; புத்தகங்கள் படிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.  ஒவ்வொரு நூலகத்திலும் மின்நூல், அச்சு நூல் இரண்டும் பயன்பாட்டுக்கு வரவேண்டும். உறுப்பினர்கள் வீட்டிற்கு  எடுத்துச் சென்று படிக்க அச்சு நூல்கள் அவசியம் இருக்க வேண்டும்.
         நூலகங்கள் தான் ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, விஞ்ஞானம் , வரலாறு என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சேமித்து வைத்திருக்கும் பொக்கிஷ அறை. இங்கே, அள்ள அள்ளக் குறையாத செல்வங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆர்வமுடன் உள் புகுந்தால், ஆனந்த நிலை எய்தலாம்!

நூலகக் கதவுகள் - தினமும் திறந்திருக்கும் சொர்க்க வாசல் !

No comments:

Post a Comment