Friday, August 3, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 3

மனதைக் தோண்டும் மருந்து- ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்.

ஆகஸ்ட் 3 - இன்று!
     
  குற்றவியல் வழக்குகளில் உண்மை கண்டறியும் மருந்துகளின் மூலம் , குற்றவாளிகளின் மனதின்  அடியாழத்தில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய முடியும் என்று நிரூபித்த மருத்துவர் ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ் (1875-1930) பிறந்த நாள் இன்று.
               "ஸ்கோபோலமின் ஹைட்ரோ ப்ரோமைட்" (Scopolamine hydrobromide)  என்னும் மருந்தினை உட்செலுத்தி, மனம்  மறைக்க நினைக்கும் செய்திகளைப் பெறமுடியும் .  அந்த சூழலில் அவர்களால் பொய் சொல்ல முடியாது என்பதை 1922 ஆம் ஆண்டு கட்டுரையாக வெளியிட்டார். டெக்ஸாஸ் மாகாணச்  சிறையில் , போலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள்  முன்னிலையில் இரண்டு கைதிகளிடம் இதனைப் பயன்படுத்திக் காட்டினார். இருவரும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். அவரது செயல் பலவிதமான சட்டவிவாதங்களையும் , மனித உரிமை சார்ந்த பேச்சுக்களையும் உருவாக்கியது. 
               1875, ஆகஸ்ட் 3 அன்று,  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜான் ஃபோர்ட்-மேரி ஹவுஸ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ். 1899ல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார். மகப்பேறு மருத்துவராகப் பணி செய்யத் தொடங்கிய ராபர்ட் ஹவுஸ், பிரசவ காலத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வலி மறக்கச் செய்யும் மருந்துகள் பற்றி ஆய்வு செய்தார். வழக்கமாக பெண்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட , பிரசவ காலத்தில் அவர்கள் சொல்வதை கேட்டார். காரணம் அப்போது கொடுக்கப்படும் மருந்துகள் தான் என்பதையும் கண்டறிந்தார்.
               அதனையே மனிதனின் மனதில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியும் என்பதையே ஆய்களாகச் செய்து நிரூபித்துக் காட்டினார். 1920களில் மட்டும் இந்தத் தலைப்பில்  ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இறுதியில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, ஓராண்டு கழித்து,1930 ல் இறந்து போனார் டாக்டர் ஹவுஸ்,
          உலகெங்கும் பல்வேறு நாடுகளில், Truth Serum எனப்படும் வெவ்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  Pentothal, sodium thiopental என பல  வகையான வேதிப்பொருட்கள் , சட்டத்திற்கு உட்பட்டும், சட்டம் அறியாத வகையிலும் நடைமுறையில் உள்ளது. Scopolamine hydrobromide பயன்படுத்தி, குற்றம், புலனாய்வுத் துறையில்     புதிய பாய்ச்சல் ஏற்படுத்தியவர் என்ற வகையில், டாக்டர். எர்னெஸ்ட் ஹவுஸ் என்றென்றும் நினைவில் இருப்பார்.
          அமெரிக்க நீதிமன்றங்களில் இந்த மருந்தினைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது, வேறுசில நோய்களுக்கு  மருந்தாக, இந்த மூலக்கூறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
          குற்றவாளிகளிடம் மட்டுமல்ல, எல்லா மனித மனங்களிலும்   உண்மை  புதைந்தே கிடக்கிறது. ஆனால்,  அதை  வெளிக்கொண்டு வருவதுதான் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறது.
மனதின் குரலை அறிந்து கொள்ளும் வழி என்னவாக இருக்கும்?
             
                

No comments:

Post a Comment