Saturday, August 25, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 25

நாடக வேந்தர் - எஸ்.ஜி.கிட்டப்பா

ஆகஸ்ட் 25....இன்று!


          “ இசை உலகில் கிட்டப்பா செய்த புரட்சி- தமிழ் மொழியைக் காப்பாற்ற பாரதி செய்த புரட்சிக்கு ஒப்பானது” - வ.ரா.
               சபாக்களில் மட்டுமே காண முடிகிற   கர்நாடக சங்கீதக் கலைஞர்களைக் கூட,  தனது பாட்டின் வலிமையால் நாடக அரங்கின் முதல் வரிசையில் வந்து அமரச் செய்த ‘நாடக உலகச் சக்கரவர்த்தி’ எஸ்.ஜி.கிட்டப்பா (1906-1933) பிறந்த நாள் இன்று.     
                      கிருபானந்த வாரியாரும் , கிட்டப்பாவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஆனால், கிட்டப்பாவின் மரணக் கோடு வெகு கிட்டத்தில் இருந்ததை, அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஆயினும், வாழ்வின் தடத்தை, தனது ஞானத்தால் -  அழுத்தமாகப் பதித்து,  இருபத்தெட்டு வயதிற்குள்ளாகவே இறந்து போன ஒர் அற்புதக் கலைஞன் கிட்டப்பா.       
          அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த செங்கோட்டை நகரில் 1906ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, கங்காதரன் - மீனாட்சி அம்மாளுக்கு மகனாக எஸ்.ஜி.கிட்டப்பா பிறந்தார். இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன். குடும்பத்தில் இவரது செல்லப் பெயரான கிட்டன் என்பதே பின்னாளில் கிட்டப்பா என்றானது.    இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவே இல்லை. அதனால், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்த தனது அண்ணனோடு சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 

          1911 ஆம் ஆண்டு, மதுரை- கொட்டாம்பட்டியில் நடந்த ’நல்லதங்காள் கதை’ நாடகத்தில் , நல்லதங்காளின் பிள்ளைகளில் ஒருவராக முதல் முறையாக மேடையேறிய போது, இவருக்கு வயது 5. 1912ஆம் ஆண்டு மதுரை டவுன் ஹாலில் இவரது குரல் வளத்தைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள் தனது நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார். நாடகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட கிட்டப்பா, ரசிகர்களின் மகத்தான ஆதரவைப் பெற்றார்.

                  தசாவதாரம் நாடகத்தில் மோகினி வேடமும், ராமாவதாரம் நாடகத்தில் பரதன் வேடமும் இவருக்கு பெரிய வெற்றியைத் தந்தாலும் ‘ஸ்ரீ வள்ளி திருமணம்” நாடகத்தில் முருகனாக நடித்ததுதான் இவருக்கு வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது. ஆம், இலங்கையில் நாடகம் போடச் சென்றிருந்த கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளைச் சந்தித்தார். கருத்த உருவமும், காந்தக் குரலும் கொண்டிருந்த சுந்தராம்பாள் , இவருக்கு இணையாக வள்ளி வேடத்தில்  நடித்தார்.  இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. கிட்டப்பா ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற விபரம் சுந்தராம்பாளுக்குத் தெரியும்.  திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கிட்டம்மாளுக்கும் இவருக்கும் 1924ஆம் ஆண்டு  திருமணம் நடந்திருந்தது. 

                கடைசிவரை தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியைப் பெற்ற பின்பு தான், கிட்டப்பாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார் கே.பி.சுந்தராம்பாள். கிட்டப்பாவின் மீது, மாசிலாக் காதல் கொண்டிருந்த சுந்தராம்பாள், கணவனே கடவுள் என்று  வாழ்ந்தார். இந்த இணை, நிஜ வாழ்விலும், நாடக வாழ்விலும் வெற்றி வானின் உச்சத்தில் பறந்தது.
      இருவரும் இணைந்து, ‘ஸ்ரீ கான சபா” என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். சிம்மக் குரலும், காந்தக் குரலும் இணைந்து, நாடக மேடைகளை இசையால் நிறைத்தன.  இவர்கள் இணைந்து நடித்த,  நந்தனார், கோவலன், வள்ளி திருமணம், ஞான சவுந்தரி  போன்ற நாடகங்கள் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்தன.

              ஏதோ ஒரு புள்ளியில் இருவருக்குமான விரிசல் தொடங்கியது. கிட்டப்பா, சுந்தராம்பாளை விட்டு விலகத் தொடங்கினார்.  சென்னையில் இருந்தபோது, கணவரின் சொல்லை மீறி, ‘கிருஷ்ண லீலா’ என்ற நாடகம் பார்க்கச் சென்றதுதான் கசப்பின் தொடக்கம் என்று சொல்லப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்தக் காதல், சீக்கிரத்தில் மறைந்து போனது. அவர்கள் அன்பின் அடையாளமாகப் பிறந்த ஆண் குழந்தையும்,  ஒரு மாதத்திலேயே இறந்து போனது. குழந்தை இறந்தபோது கூட, கிட்டப்பா கரூரில் தங்கியிருந்த  மனைவியைச் சந்திக்க வரவில்லை.
          தனது  செங்கோட்டை மண்ணில் , கண்கள் சிவக்கச் சிவக்க குடித்துக் கொண்டிருந்தார். கல்லீரல் பாதிப்பும், குடல் அழுகல் பிரச்சனையும் வந்து சேர்ந்தது. உடல் நலமும் விரைவிலேயே கெட்டுப் போனது. அந்த நேரத்தில் தொடர்ந்து நடந்த,  தாய்(1926), தமையன்(1927), மைந்தன்(1928) என மூவரின் மரணமும் இவருக்கு மீளாத் துயரை ஏற்படுத்தின.  

       உடல் நலம் கெட்டுப் போன செய்தி அறிந்த சுந்தராம்பாள், கணவர் கிட்டப்பாவை அழைத்து வந்து, சென்னையில் டாக்டர் ராமராவ் மருத்துவமனையில் சேர்த்தார். மனமார பணிவிடைகளும், செலவும் செய்தார். ஆனால், சற்று உடல்நலம் தேறியவுடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டை திரும்பினார் கிட்டப்பா.  அவர் மீண்டும் வரவே இல்லை.

             ’ பட முடியாதினி துயரம், பட்டதெல்லாம் போதும்’ என்று மேடைகளில் பாடிய கிட்டப்பா, 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, மதிய வேளையில் இறந்து போனார். செய்தி அறிந்து பதறிய சுந்தராம்பாள், செங்கோட்டை வந்தார். கணவரின் கடன்களை அடைத்தார். அஸ்தியை எடுத்துச் சென்று காசியில் கரைத்தார். அன்று முதல் நகைகள் தவிர்த்தார். வெள்ளாடை உடுத்தியே வெளியில் வந்தார். 25 வயதில் கணவனை இழந்த இவர், இறுதிவரை கணவரின் நினைவுகளிலேயே வாழ்ந்து மறைந்தார்.   

            தேச பக்தரான கிட்டப்பா, கதர் நிதி திரட்டவும்(1923), உப்பு சத்தியாகிரகத்திற்குப் (1930) பணம் சேர்க்கவும் இலவசமாக நாடகங்கள் நடத்திக் கொடுத்தார். மதுரையில், தனது பேனா ஒன்றினை, ஏலத்தில் விட்டு (ரூ.50!), அந்த பணத்தையும் விடுதலைப் போராட்ட நிதிக்கு அளித்தார்.  கோவில்கள், தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்காகவும்  நாடகங்கள் நடித்துக் கொடுத்தார். செங்கோட்டையில் அவரது இடத்தில், தற்போது ‘ஸ்ரீ மூலம் திருநாள் வாசக சாலை’ இயங்கி வருகிறது. அவரது பாடல்கள் தவிர, அவர் நினைவாக வேறொன்றும் இங்கில்லை.

          ஒவ்வொரு நாடகத்தின் நிறைவிலும் அவர் பாடும், ‘ரகுபதி ராகவ ராஜாராம்...’ என்ற காந்திக்குப் பிடித்தமான அந்தப் பாடலைக் கேட்பதற்காக, தேச பக்தர்கள் காத்துக் கிடந்தார்கள்.

           பயின்றால் வராத சங்கீதம் கூட, இவரது பாட்டைக் கேட்டால் பக்கத்தில் வந்து நின்றது. தமிழ் மொழிப் பாடல்களை, கர்நாடக இசையில் பாடி, பாமரர்களுக்கு மகிழ்ச்சியையும் , பண்டிதர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தார் கிட்டப்பா.

    வள்ளலார் பாடல்கள், எரவானி கீர்த்தனைகள் என பல பாடல்கள் பாடியிருந்தாலும், அவர் பாடிய -  காயாத கானகத்தில் எனும் தேயாத கானம் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.   
ஆம்,
      ”காயாத கானகத்தே...
       நின்றுலாவும் நற் காரிகையே..
       மேயாத மான் - புள்ளி மேவாத மான்!"            
                   - என்ற பாடல் வரிகள் எங்கே ஒலித்தாலும், சற்று நேரம் நின்று கிட்டப்பாவை நினைவு கூறுங்கள். அவரது துயர வாழ்வு தரும்  படிப்பினை என்ன என்பதைச் சிந்தியுங்கள்!

           கலைஞன் தன்னை மறந்த நிலையிலேயே உலா வருகிறான்.  தனதுடல், தன்னுயிர் பற்றி,  அவன் கவலை கொள்வதே இல்லை. அவனுக்குக் கலைதான் உயிரும், உடலும்!

     

No comments:

Post a Comment