Thursday, August 23, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 23


தம்பட்டம் அடிக்காத தமிழன் - ம.ரா.ஜம்புநாதன். 

ஆகஸ்ட் 23....இன்று!

             “ ஹரிஜனங்களே, இந்த வேதப் புத்தகங்களை  உங்கள் பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.  நீங்களும் இவற்றைப் படித்து, பாரத நாடு மட்டுமல்ல, பூலோகம் முழுமைக்கும் பிரச்சாரம் செய்யலாம். இவற்றை நான் உங்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்” -  ’சதபதப் பிராமணம்’ எனப்படும் வேதங்களின் தமிழ்ப் பதிப்பு முன்னுரையில் இவ்வாறு எழுதினார் ம.ரா.ஜம்புநாதன்.  தனது புரட்சி சிந்தனையை , செயல் வடிவத்தில் காட்டிய அசல் மனிதன் அவர்.      
     வேதங்கள் பாரதத்தின் பொதுச் சொத்து, அவை எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும் என்று சொல்லி, நால்வகை வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்து, அவற்றை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே சமர்ப்பணம் செய்த மறுமலர்ச்சி நாயகன் ம.ரா.ஜம்புநாதன் (1896-1974, M.R.Jambunathan)  பிறந்த நாள் இன்று.
                   திருச்சியை அடுத்த மணக்கால் என்னும் சிற்றூரில்,  1896ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ராமசாமி-லெட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஜம்புநாதன்.  அவதானக் கலையில் சிறந்து விளங்கிய தந்தையைப் போலவே, ஒரு முறை  எதைக் கேட்டாலும், அவற்றை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் ஜம்புநாதனுக்கு இருந்தது. தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்த இவர், பொறியியலில் பட்டம் பெற்றார். இளம்வயதிலேயே, இவருக்கு  ஆரிய சமாஜத்தில் ஆர்வமும், பிடிப்பும் ஏற்பட்டது. 
                   சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்று விரும்பினார்.  அதற்காக, சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமைப்பை நிறுவி, அதன் தலைவராகவும் இரண்டு ஆண்டுகள்(1918-1920) இருந்துள்ளார். பலவகையான தலைப்புகளில் எண்ணற்ற  நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, ’புஸ்தக சாலை’ என்னும் அமைப்பை நிறுவினார். அதில், “தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு” (1918)  என்னும் புத்தகத்தை முதன்முதலில் வெளியிட்டார். 
                         எல்லா மக்களும் வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் ஏற்றத்தாழ்வுகள் குறையும் என்று எண்ணினார். அதற்காக, நான்கு வேதங்களையும் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். 1935,1938 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில்  முறையே  யஜூர், சாமம் மற்றும் அதர்வண வேதங்களை தமிழில் வெளியிட்டார். அவர் சார்ந்த சமூகத்தில் எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, தனி ஒரு மனிதனாக இதனைச் சாதித்தார். இந்த நிகழ்வில்,   தருமபுரி, திருப்பனந்தாள், காசி மடங்கள் அவருக்கு ஆதரவாக இருந்ததையும்  நாம் இங்கே  குறிப்பிட வேண்டும். 
              
               சர்வதேச PEN (Poet, Essayist and Novelist) கூட்டமைப்பில் இந்தியாவின் கெளரவத் தலைவராக இருந்தபோது, 1954 ஆம் ஆண்டு, சிதம்பரம் அண்ணாமலை நகரில் மாநாடு ஒன்று நடத்தினார். அதில், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
                பழங்கால நாணயங்கள் தொடங்கி, சுல்தான்கள், மொகலாயர்கள் , விஜயநகரப் பேரரசு , ஆங்கிலேயர் காலம் என எல்லா வகையான நாணயங்களையும் சேகரித்து வைத்திருந்தார் ஜம்புநாதன். தற்போது இவை அனைத்தும்,  மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
             1924 ஆம் ஆண்டு,  தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியில் முதன் முதலில்,  ஒரு தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிய பெருமை இவரையே சாரும். சொந்த செலவில் தொடங்கிய அப்பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இன்று அங்கிருக்கும் 50 க்கும் மேற்பட்ட தமிழ்ப்  பள்ளிகளுக்கு மூல விதை விதைத்தவர் ம.ரா.ஜம்புநாதன் என்பதை எப்போதும் அம்மக்கள் நினைவில் கொள்வர்.
                 இவரது மனைவி சாந்தி ஜம்புநாதன். தனது  கணவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் எப்போதும் ஆதரவாகவே இருந்து, தோள் கொடுத்தார். இவர்களுக்கு, சவிதா, இந்திரா என  இரண்டு பெண் பிள்ளைகள்.  18.12.1974ல் ஜம்புநாதன் மறைந்த போது, அவரது கனவில் ஒரு பகுதி நிறைவேறாமலே  இருந்தது. ஆம் , அவர் உயிருடன் இருந்தபோது,  ரிக் வேதம் மட்டும் தமிழில் வெளிவராமல் இருந்தது. ஆனால், அதனை கைப்பிரதியாக எழுதி முடித்திருந்தார் ஜம்புநாதன். 
                  ரிக் வேதத்தின் முதல் தொகுதி, 1978 ஆம் ஆண்டு, அணு விஞ்ஞானி ராஜம் ராமண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. இரண்டாம் தொகுதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் ஜி.படேல், 1980ஆம் ஆண்டு  வெளியிட்டார். அப்புத்தகங்களுக்கு  மொரார்ஜி தெசாய், சி.பி.ராமசாமி ஐயர் போன்றோர் அணிந்துரை வழங்கினர். 
                    வேதங்கள் அனைவருக்கும் பொதுவானதாக மாறும் போது, சமூகத்தில் பேதங்கள் நீங்கும் என்று நம்பியவர்;  எதிர் வந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்க நாளும் உழைத்த ஞானச்சுடர்;  ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய வேலையை , தனி மனிதனாக இருந்து செய்து காட்டியவர்; எதற்கும் ’வெறும் பேச்சு’ உதவாது, செயலே தேவை என தெளிவாக வாழ்ந்து காட்டியவர்; ஆம், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களுல்  இவருக்குச்  சிறப்பிடம் உண்டு. ஆதலால், ம.ரா.ஜம்புநாதனை அறிந்து  கொள்வது நமது கடமையாகிறது. 

         வீண் தம்பட்டம், வெட்டி விளம்பரம் இல்லாமல் , தனது செயல்களைப் பேச வைத்த  தலைவர்கள் -  தேசத்திற்குக் கிடைத்த  அரிய பொக்கிஷம்!. 
               


No comments:

Post a Comment