Monday, January 21, 2019

ஜனவரி 21


வலி நிவாரண மருந்து - ஃபெலிக்ஸ் காஃப்மன்.

ஜனவரி 21….இன்று!


            கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் வில்லோ மரப் பட்டைகளே, முன்பொரு காலத்தில் வலி நிவாரணிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.   மருத்துவத் துறையின் தந்தை என்றழைக்கப்படும் ஹிப்போகிராட்டஸ் காலம் தொட்டே இப்பழக்கம் நடைமுறையில் இருந்தது. பிரசவத்தின் போது, வலி குறைக்க, கர்ப்பிணித் தாய்மார்கள் வில்லோ மரப் பட்டைகளை வாயில் வைத்து மென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு, வலி குறைவதற்கான  காரணம், வில்லோ  மரப்பட்டைகளில் இருந்த சாலிசிலிக் அமிலமே  என்பதை, பின்னாள்களில் அறிஞர்கள்  உறுதி செய்தார்கள்.
                 1859ஆம் ஆண்டு, தூய சாலிசிலிக்  அமிலம் தயாரிக்கப்பட்டு , வலி நிவாரணியாக பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், இம்மருந்து வயிறு உள்ளிட்ட உள்ளுறுப்புகளை புண்ணாக்கியது. ஒரு கட்டத்தில் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை முடக்கத் தொடங்கியது. அப்போதுதான், இம்மருந்தின் பக்க விளைவை சரி செய்ய , உலகெங்கும் இருந்த விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சியின் முடிவில், நடைமுறைக்கு உகந்த வலி நிவாரணி உருவாக்கப்பட்டது. அந்த மருந்தின் பெயர் தான் “ஆஸ்பிரின்(Aspirin)”. இன்று, உலகில் மிக அதிகம் விற்பனையாகும் மருந்தும் ஆஸ்பிரின் தான்!.
                       தந்தையின் மூட்டு வலிக்காக, பக்க விளைவுகளற்ற, ஆஸ்பிரின் என்ற  வலி நிவாரணி  மருந்தைக் கண்டுபிடித்தவர் ஃபெலிக்ஸ் காஃப்மன். வேதியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றிருந்த இவர்தான், தற்போது போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படும்  ”ஹெராயினையும் (Heroin)” கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
          ஜெர்மனி நாட்டில் உள்ள லுட்விக்ஸ்பர்க் நகரில், 1868ஆம் ஆண்டு, ஜனவர் மாதம் 21 ஆம் தேதி ஃபெலிக்ஸ் காஃப்மன் பிறந்தார். தந்தை ஒரு தொழிலதிபர். வசதிக்குப் பஞ்சமில்லை. காஃப்மன் தந்தையைப் போலவே உற்பத்தித் துறையில் ஆர்வம் காட்டினார். 1890ல் மூனிச் நகரில் ரசாயனத் துறையில் சேர்ந்தார். சிறப்புத் தரத்துடன் கூடிய முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1893ஆம் ஆண்டு, முனைவர் பட்டத்திற்கான படிப்பிலும் முதல் தர மாணவனாக வெற்றி பெற்றார்.
                சிறப்பான அறிஞரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பேயர் அவர்களின் ஆய்வுக் கூடத்தில், 1894ஆம் ஆண்டு,  வேதியியல் ஆய்வறிஞராகப் பணியில் சேர்ந்தார். இவரது அறிவும் ஆற்றலும் பேயருக்கு தெரிய வந்தது. அதனால்,  இவர் மீதான மதிப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
                    எல்பெர்ஃபெல்ட் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த பேயரின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் இவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். புதிய  புதிய  வேதிக் கலவைகள் மூலம் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். அந்த சமயத்தில், காஃப்மன் தந்தைக்கு ஆர்த்ரிட்டிஸ் காரணமாக உடல் மற்றும் மூட்டு வலி மிக அதிகமாக இருந்தது. காஃப்மனின் தந்தை எடுத்துக் கொண்ட, தூய சாலிசிலிக் அமிலத்தாலான வலி நிவாரணிகள் அதிகமான பக்க விளைவை உண்டாக்கி இருந்தன. அதற்கு தீர்வு காணும் முயற்சியில் தனது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தார் ஃபெலிக்ஸ் காஃப்மன்.
                 சாலிசிலிக் அமிலத்துடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து, பயன்பாட்டுக்கு உகந்த புதிய மருந்தை (அசிட்டி சாலிசிலிக் அமிலம்) உருவாக்கினார்.  பக்க விளைவுகளை மட்டுப்படுத்திய இம்மருந்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை,1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று காஃப்மன் வெளியிட்டார். பேயர் மருந்துக் கம்பெனியின் அப்போதைய தலைவர் ஹெயின்ரிச்  ட்ரெஸ்ஸர் மருந்தை தானே உட்கொண்டு, உலகின் சந்தேகக் கண்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
                        பேயர் கம்பெனியின் அந்த மருந்திற்கு ஆஸ்பிரின் என்ற பெயர் வைக்கப்பட்டது. அசிட்டிக் அமிலம் இருப்பதாலும் (A), ஸ்பைரியா (Spirea)  என்ற குறுஞ்செடியிலிருந்து சாலிசிலிக் பெறப்பட்டதாலும், இவை இரண்டையும் இணைத்து, Aspirin என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. இன்று , ஆஸ்பிரின் பல நோய்களுக்கு மருந்தாக தரப்படுகிறது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் மாரடைப்பு வராமல் தடுக்க, இதனைப் பயன்படுத்துகிறார்கள். விண்வெளி செல்லும் வீரர்களின் முதலுதவிப் பெட்டியிலும் கூட,  ஆஸ்பிரின் கட்டாயம் இருக்கும்.
                       ஆஸ்பிரின் மருந்துத் தயாரிப்பில் ஈசென்க்ருன் என்ற யூத விஞ்ஞானியும் இடம் பெற்றிருந்தார். பேயர் கம்பெனி ஹிட்லரின் நாஜிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததால், யூதரான ஈசென்க்ரூன் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலும் ஆஸ்பிரின் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றில் உண்டு.
                     அதேபோல, ஓபியத்திலிருந்து பெறப்பட்ட கோடைனும் (Codeine) வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டது. அதற்கும் பக்க விளைவுகள் இருந்தன. பேயர் கம்பெனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , ஆஸ்பிரின் பாணியிலேயே மார்ஃபைனுடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து,  புதிய பொருளை உருவாக்கினார். அதற்குப் பெயர் தான் ”ஹெராயின்”.  1870ஆம் ஆண்டிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், இவரது முறை, எளிமையாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய உதவியது.
                       போரில் காயமடைந்த வீரர்கள், கர்ப்பிணிகள், மன நல பாதிப்புகள்,  அதிக வலி உண்டாக்கும் இருமல், அறுவை சிகிச்சையின் போது  என பல வலிகளுக்கு மருந்தாக ஹெராயின் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, ஹெராயின் உண்டாக்கும் பாதிப்புகள் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் அது தடை செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படும்  ஹெராயினைத் தயாரித்து வழங்கியதும் காஃப்மன் தான் என்பது நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
                    ஆஸ்பிரின், ஹெராயின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கும் காஃப்மன் பெயரைப் பயன்படுத்துவதில் உள்ள சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. ஆனாலும், இரண்டு மருந்துகளையும் எளிமைப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வந்த மூலக்கூறு காஃப்மனுடையதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டில் Hall of Fame அரங்கில் , காஃப்மன் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 
              1928ஆம் ஆண்டு,பேயர் கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்ற காஃப்மனின் மனம் ஏதோ ஒன்றுக்காக தனிமையை நாடியது. சுவிட்சர்லாந்து நாட்டில், தனிமையில் தனது பொழுதுகளைக் கழித்த அவர், 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இறந்து போனார்.  இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. ஆய்வுகளை நிறுத்தி விட்டு, சுவிட்சர்லாந்து சென்று,  தனிமையில் இருந்த காரணமும் தெரியவில்லை.
                    
       விதிகளை மீறி, ஹெராயின் பயன்படுத்தியதால் , சராசரியாக  ஓர் ஆண்டில் 118000 பேர் இறப்பதாக WHO (2015-Statistics) அறிவித்துள்ளது.  அதே வேளையில், ஆண்டுக்கு 40000 டன் ஆஸ்பிரின் மாத்திரைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி வருகின்றன. நியாயத் தராசில் இரண்டு பொருள்களையும் வைத்து, காஃப்மனை நாம் மதிப்பிடப் கூடாது. ஏனெனில், மனித குலத்தின் வலியைக் குறைக்க வந்த வலி நிவாரணி  ஃபெலிக்ஸ் காஃப்மன். 
       வலிகளைக் குறைக்கும் வழிகள் இங்கே ஆயிரம் இருக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் -  மனிதனாகப் பிறந்து விட்டால், வலிகளைச் சுமந்து தான் ஆக வேண்டுமோ?  
           
            
                    

                 

                        
                          

Sunday, January 20, 2019

ஜனவரி 19

துயர நதி - எட்கர் ஆலன் போ

ஜனவரி 19....இன்று!

               ”We Loved with a Love that was more than Love" - Edgar Allan Poe
                   
            ஆற்ற முடியாத சோகம், மனச்சமநிலையைக் குலைத்து நம்மை  மீள இயலாத பெருங்குழிக்குள் தள்ளிவிடுகிறது.  1845ஆம் ஆண்டு  New York Evening Mirror இதழில்  வெளிவந்த The Raven கவிதையைப்  படிக்காத  கவிதை வாசகனைக் காண முடியாது. அழையா விருந்தாளியாக வந்தமர்ந்த ஓர் அண்டங்காக்கையோடு, ஒரு மனிதன் நடத்தும் உரையாடல் தான் அந்தக் கவிதை. அந்த அண்டங்காக்கை பேசும் ஆற்றல் கொண்டது. ஆனால், துன்ப தேவதையின் வளர்ப்பில் உருவான அதற்கு, ”Nevermore" என்பதைத் தவிர வேறெதுவும்  தெரியவில்லை.  கவலைகளால் நிரம்பி வழிந்த அந்த மனிதனிடத்தில், வாழ்க்கை குறித்த கேள்விகள் ஏராளம் இருந்தன. ஆனால், அண்டங்காக்கையிடமிருந்து கிடைத்த பதில் என்னவோ அந்த ஒற்றைச் சொல் தான். 
                இழப்பின் துயரம், உயிரான உறவின் பிரிவு, நிலையாமை உருவாக்கும் அச்சம் என இக்கவிதை,  வாசகனின் உள்ளத்தை ஆழ்ந்த சிந்தனைக்குள் இட்டுச் சென்றுவிடுகிறது.  தத்துவம், புராணம், படிமம், குறியீடுகள் நிறந்த இக்கவிதை, இன்றைக்கும் செவ்வியல் தன்மையுள்ள கவிதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. இக்கவிதையைப் போலவே,  இதனை எழுதிய கவிஞனும் பெரும் புகழ் பெற்றான். இக்கவிதை வெறும் 9 டாலர் சம்பளத்திற்காக எழுதப்பட்டது. ஆனால், வறுமையின் கரங்களில் அகப்பட்டுக் கிடந்த கவிஞனுக்கு, இக்கவிதை மன ஆறுதலைத் தந்திருக்கக் கூடும்.  இக்கவிதையை எழுதியவர் எட்கர் ஆலன் போ. 
               வாழ்வின் இன்னல்களை, விருப்புகளை எழுதி, எழுத்தின் வழியே வாழ்வினைக் கடத்திவிட எண்ணிய எட்கர் ஆலன் போ (1809-1849), ஆங்கில இலக்கிய உலகின் வைரங்களுள் ஒருவர்.   கவிதைகள், சிறுகதைகள், புனைவுகள், விமர்சனக் கட்டுரைகள் , துப்பறியும் கதைகள் என பல தளங்களில் இயங்கியவர். எழுத்தாளனாகவே   வாழ்ந்து காட்ட வேண்டுமென்று விரும்பியவர்;  பத்தொன்பதாம் நூற்றாண்டு- கற்பனாவாத புனைவெழுத்தாளர்களுள்   முக்கியமானவர்.
             அமெரிக்காவின் போஸ்டன் நகருக்கருகில், 1809ஆம் ஆண்டு, ஜனவரி 19 ஆம் தேதி எட்கர் ஆலன் போ பிறந்தார். ஒரு அண்ணன், ஒரு தங்கை என இவரோடு சேர்த்து, மொத்தம் மூன்று பிள்ளைகள். நாடக நடிகர்களாக இருந்த பெற்றோர் டேவிட் போ-எலிசபெத் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த போது, இவருக்கு வயது ஒன்று. தங்கை அப்போதுதான் பிறந்திருந்தார். 1811ஆம் ஆண்டு,  காசநோய் தாக்கி தாயும், குடியினால் தந்தையும் இறந்துவிட , இரண்டு வயதில் ஆதரவிழந்து அநாதையானார் எட்கர் ஆலன் போ. 
                ஜான் ஆலனால் வளர்க்கப்பட்ட எட்கர், கல்லூரிப்படிப்பை முறையாக நிறைவு செய்யவில்லை. பள்ளி செல்லும் காலம் தொட்டே, ஜான் ஆலனுக்கும், எட்கருக்கும் பண விஷயத்தில் தகராறு வந்துகொண்டே இருந்தது.  விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிப்பு பாதியிலேயே நின்று போனது. 1827ஆம் ஆண்டு, ராணுவப் பணியில் சேர்ந்தார் எட்கர் ஆலன் போ. அவரது முதல் கவிதைத் தொகுப்பும் அந்த ஆண்டுதான் வெளிவந்தது.
                          தனது பத்தொன்பதாம் வயதில், Tamerlane and other Poems என்ற கவிதைத் தொகுப்பை, ‘போஸ்டன் நகரச் சேர்ந்தவன்’ என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பின்பு, 1829ஆம் ஆண்டு மீண்டும் வீடு திரும்பினார்.  ஜான் ஆலனோடு சமாதானம் ஏற்பட்டது. ஆனால் கொஞ்ச காலம் தான். மீண்டும் தனியே கிளம்பி, பால்டிமோர் நகருக்குச் சென்றார் எட்கர். அங்கு, Philedelphia Saturday Courier , Baltimore Saturday Visiter போன்ற  வார இதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதனைக்  கொண்டு, தனது வாழ்வைக் கடத்தினார்.
                       1833ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு போட்டிக்கு, 6 கதைகளையும், சில கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார். அதில், M S Found in a Bottle என்ற கதை 50 டாலர் முதல் பரிசு பெற்றது. அதன் வழியே பிரபலமான மனிதராக மாறினார் எட்கர். இவருடைய கதைகள், கவிதைகள் புத்தகமாக வருவதற்கு ஜான் கென்னடி என்ற நண்பர் மிகவும் உதவி செய்தார். பத்திரிக்கைகளில் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால், அதீத குடிப் பழக்கத்தால் எந்த வேலையிலும் இவரால் நிலைத்திருக்க முடியவில்லை.
                                     வறுமை அவரை விடாமல் துரத்தியது. எழுத்தினை மட்டுமே கொண்டு, உலகியல் வாழ்வினை நடத்துவதென்பது அவ்வளவு எளிதானதா என்ன? ஆனால், எட்கர் இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். வாரம் பத்து டாலர் சம்பளத்திற்கு , 11 பக்க கதைகளை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார். சில சமயங்களில் கறார் தன்மையோடு கூடிய  விமர்சனக் கட்டுரைகளை எழுதி அனுப்பினார். இவரால் விமர்சனம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். வசை பொழிந்தார்கள். ஆனால் இவரோ, எழுதுவதையும் குடியையும் நிறுத்தவேயில்லை.
                                  துப்பறியும் புனைகதைகளுக்கு இவர் தான் முன்னோடி. 1841ஆம் ஆண்டு, இவர் எழுதி வெளியிட்ட The Murders in the Rue Morgue என்ற துப்பறியும் நாவல், இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றது. ’அகஸ்டே டியூபான்’ என்ற துப்பறிவாளனின் அறிமுகம் , புனைகதை உலகில் புதிய சாளரத்தைத் திறந்து வைத்தது. லார்ட் பைரனை தனது எழுத்துலகின் முன்னோடியாகக் கொண்டு, தொடர்ந்து எழுதினார் எட்கர் ஆலன் போ.
                            துயரங்களாலும் வறுமையாலும் நிரம்பிய அவரது வாழ்க்கையில் தோன்றிய ஒரே மகிழ்ச்சி மின்னல் விர்ஜீனியா க்ளெம்.  1936ஆம் ஆண்டு, விர்ஜீனியாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். விர்ஜீனியா இவருக்கு சகோதரி முறை என்று குற்றம் சொல்லும் விமர்சகர்களும் இருகிறார்கள். எது எப்படியோ, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள் என்பது  உண்மை.  மேலும்,  தனது உள்ளத்தின் மொத்த அன்பையும் அவளுக்கே,  எட்கர் வாரி வழங்கினார் என்பதும் உண்மை.
                     அவளது மடி இவருக்கு ஆறுதல் தந்தது. அவளது இதழ் சொல்லும் சொற்கள் இவருக்கு உயிர் கொடுத்தன. ஆனால், 1842ஆம் ஆண்டு, விர்ஜீனியாவைத் தாக்கிய காசநோயால், இவர் தடுமாறிப் போனார். அவளது தேகம் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைய ஆரம்பித்தது. எட்கரின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக  உடைய ஆரம்பித்தது. எப்படியாவது அவளைக் காப்பாற்றி விட முடியாதா என தவிக்க ஆரம்பித்தார்.
            அந்த சமயத்தில் அவர் எழுதிய கதை தான்  The facts in the case of M Valdemar. காசநோயால் பாதிக்கப்பட்டு, மரணப் படுக்கையில் இருக்கும் வால்டிமர் என்ற எழுத்தாளனின் கதை அது.  எழுத்தாளரின் விருப்பப்படி, மருத்துவர் ஒருவர், அவரை மனோவசியம் செய்கிறார். ஏழு மாதங்கள் மரணமற்று, வசிய நிலையில் இருக்கும் வால்டிமரை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற நினைக்கிறார் மருத்துவர். ஆனால், உடன்பட மறுக்கும் வால்டிமர், சாம்பலாகி காற்றில் கலக்கிறார். வாழ வாய்ப்பில்லை என்று முடிவான பின்பு, சாகாமல் காப்பாற்ற என்ன வழி என எட்கார் ஆலன் யோசித்ததன் விளைவே இந்தக் கதை.
                  நிஜ  வாழ்வில் அப்படியெல்லாம் நடக்கவில்லை. எட்கர்  ஆலன் போவின் உயிராக  இருந்த விர்ஜீனியா, 1847ஆம் ஆண்டு இறந்து போனார். அவளின் பிரிவிலிருந்து இவரால் மீளவே முடியவில்லை. அவள் அடக்கம் செய்யப்பட்ட புதை மேட்டிலேயே , இவரது பகலும், இரவும் கழிந்தன. பனி கொட்டும் இரவெல்லாம், அவளது கல்லறையிலேயே அழுது கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகளென அவருக்கு இருந்திருக்க வேண்டும். 1849ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி,  பால்டிமர் செல்லும் நகரச் சாலையில், சுய நினைவின்றி மயங்கிக் கிடந்தார்.
                   வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட எட்கர் ஆலன் போ, 1849 - அக்டோபர் 7ஆம் தேதி, இவ்வுலகின் மீளாத் துயரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அப்போது அவரது வயது நாற்பது.  குடிதான் அவரது மரணத்திற்குக்  காரணம் என பலர் சொன்ன போதிலும், மருத்துவர்களும் நண்பர்களும் அதனை மறுத்தனர். மாறாக, சிறுகச் சிறுகத் தோன்றி, பின் புரையோடிப்போன கவலைகளே,அவரது உயிரை அறுத்தது என உறுதி செய்தனர்.
                இவரது  வாழ்க்கையும், எழுதிய கதைகளும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் இவர் வாழ்ந்த வீடு, வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.   முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்து காட்டியது, துப்பறிவாளர்களை கதாபாத்திரங்களாக்கி, புதிய வகை கதைகளை உருவாக்கியது, காலத்தால் அழிக்க முடியாத கவிதைகளை எழுதியது என-  தனது எழுத்தின் வழியே  இலக்கிய உலகில்  நிலையாய் இருக்கிறார் எட்கர் ஆலன் போ.
                       நினைவுக்கும் மறதிக்கும் இடையில் தான், நமது வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. பொங்கி வரும் நினைவுகளில் நீந்தி, கரையேறும் வல்லமை பெற்றவர்களுக்கே வாழ்க்கை இனிக்கிறது!.

Thursday, January 17, 2019

மீண்டும் வருவான்


மீண்டும் வருவான்!


கடந்த இரவின்
நடுநிசி வேளையில்,
ஓசைப்படாமல் அருகில் வந்து சிரம் தொட்டு எழுப்பினான்.
நேசமாய் சில வார்த்தைகள்
ஏன் அப்படிச் செய்தாய்
ஏன் இப்படிச் செய்யவில்லை என காரமாய் சில வார்த்தைகள்.
குலவினான் கொஞ்சினான்.
தொட்டுத் தொட்டு பேசினான்.
சேர்த்து வைத்த அன்பினை அவசர அவசரமாய்
வழங்க , 
கணங்களில் நிறைந்தது பேரானந்தக் கோப்பை.
பிறகு  ஆகாய வானில் 
பறவைச் சுவடு போல 
சிரித்துப் பறந்தான் 
தும்பை  மலர் அன்ன.

இன்று -
நிற்கும் இடமெல்லாம்
ஆயிரம் துண்டுகளாய் 
சிதறிக் கிடக்கிறது என் மூளை.
சேர்த்து உருட்டி 
எடுக்கப் பார்த்தேன்.
பாதரசத் துளிகளாய்
நழுவுகிறது வாழ்வு.

ஜனவரி 17



எண்கள் உருவாக்கிய மூளை - டி ஆர் காப்ரேகர்.


ஜனவரி 17…..இன்று!


             நியூரான்களுக்குப் பதிலாக இவரது மூளை எண்களால் உருவாக்கப்பட்டிருந்தது. கண நொடியில் துலங்கல்களைத் தரும்  நியூரான்களை விடவும் வேகமாக, கணிதப் புதிர்களை இவரது ’எண் மூளை’ சுருக்கு வழியில் செய்து காட்டியது. புதிய புதிய புதிர்களை உருவாக்கி, கணித உலகில் உலவ விட்டது. கணித அரசியோ, இவரைத் தன் மடியினில் ஏந்திக் கொண்டாள்.  6174 என்ற எண்ணுக்கு இவர் பெயரைச் சூட்டி, தன்னுள்ளே தாங்கிக் கொண்டாள். ஆம்,  உலகோர் அனைவரையும், “காப்ரேகர் மாறிலி”  என்றே அந்த எண்ணை அழைக்க வைத்தாள்.  கணித உலகில் என்றென்றும் அவர் பெயரைச் செழிக்க வைத்தாள்.
             சர்வதேச அளவில், இரண்டு இந்தியர்களுடைய பெயர்கள் தான் , எண்களுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ஒன்று, ராமானுஜம் எண்-1729 ; மற்றது காப்ரேகர் மாறிலி-6174 மற்றும் காப்ரேகர் எண்.  பொழுதுபோக்குக் கணிதம் (Recreational Mathematics) என்ற வகைமையில், முடிசூடா மன்னனாக இருந்தவர் தான், டி ஆர் காப்ரேகர் (1905-1986). நாம் தோள் தூக்கி, கொண்டாடத் தவறிய ஆளுமைகளுள் இவரும் ஒருவர்.       
            மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு அருகில் தகானு என்ற கிராமத்தில் , 1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி தத்தாத்ரேயா ராமச்சந்திர காப்ரேகர் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திர தேவ் ஜாதகக் கலையில் நுண்ணறிவு பெற்றிருந்தார். ஆனால், அத்தொழில் குடும்பத்தின் வறுமையை விரட்டப் போதுமானதாக இருக்கவில்லை. தந்தை ராமச்சந்திரர், ஜாதகக் கட்டங்களை வைத்துக் கொண்டு, எல்லா நேரங்களிலும் கணக்கிட்டுக் கொண்டே இருந்த காட்சி, காப்ரேகரின் மூளையை மாற்றியமைத்தது. தந்தையோடு சேர்ந்து, கணக்குகளை எளிய முறையில் விரைவாகச் செய்து காட்டுவதிலேயே இவரது இளமை இனிமையாய் கழிந்தது.
                  வறுமையை விரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இவரது குடும்பதின் மீது, துன்ப மேகங்கள்  தொடர்ந்து சூழ்ந்தன. தனது  எட்டாவது வயதில், தாய் ஜானகி பாயின்  மறைவால் மாமா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் காப்ரேகர். தாய்மாமாவின் அரவணைப்பில், இவரது பள்ளிப்படிப்பு நகர்ந்தது. தாய்மாமாவும் 1915ல் இறந்துவிட, மீண்டும் தந்தையிடமே வந்து சேர்ந்தார். தானே நகரில் இவரது பள்ளிப்படிப்பு முடிந்தது. 1923ல் ஃபெர்கூசன் கல்லூரியில் இண்டர்மீடியேட் கல்வியை நிறைவு செய்தார்.   பிறகு, 1927ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இளங்கலை கணிதத்தில் பட்டம் பெற்றார். Wrangler Paranjpe Mathematics போட்டியில் முதல் பரிசு பெற்று, கணித உலகின் பார்வையை தன் மீது பதிய வைத்ததும் 1927ஆம் ஆண்டுதான்.
               காப்ரேகருக்குள், ’கணித வேட்கை’ என்னும் விதையை தந்தை ராமச்சந்திரர் விதைத்தார் என்றால், அதற்கு நீரூற்றி, ஒளியூட்டி ஆலென தழைக்க வைத்தவர் இவரது ஆசிரியர் கணபதி அவர்கள். தன் உடற்கூடு அழியும் வரை, இதயத்தினுள்ளே  இவர்கள் இருவரையும், உயர்வாய் வைதிருந்தார் டி ஆர் காப்ரேகர்.  பொது நிகழ்ச்சிகளில் இவர்களது பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டார்.
            1930ஆம் ஆண்டு காப்ரேகர்,  நாசிக் – தேவ்லாலி நகரில்  பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு கணிதம் மட்டுமின்றி, ஆங்கிலம், வானவியல்,சமஸ்கிருதப் பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தினார். 32 ஆண்டுகள் தொடர்ந்து, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய  பிறகு, 1962ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.   இந்திய கணிதவியல் கழகத்தின் ஆயுள்கால உறுப்பினராக, தன்னைப் பதிவு செய்து கொண்ட காப்ரேகர், ஆய்வுக் கட்டுரைகளை  தொடர்ந்து  எழுதி  வந்தார்.
               புனே பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் பல்கலைக் கழக மானியக் குழு போன்றன இவரது ஆய்வுகளுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்தன. 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாடெங்கும்  உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி சொற்பொழிவாற்றினார். Science  Today, Science Reporter போன்ற இதழ்களில், எண் கணிதம் தொடர்பான இவரது  கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
             ஹார்டியின் பங்களிப்பு இல்லையென்றால், ராமானுஜத்தின் கணித மேதைமை உலகின் வெளிச்சத்திற்குள் வந்திருக்காது. அதுபோலவே, குடத்திலிட்ட விளக்கென இருந்த டி ஆர் காப்ரேகரின் அறிவினை, குன்றின் மேலேற்றியவர் மார்டின் கார்டினர்.  Scientific American என்னும் இதழில், Mathematical Games என்னும் பத்தியில், காப்ரேகரைப் பற்றி வியந்து எழுதினார் கார்டினர். 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தக் கட்டுரை வெளிவந்த பிறகுதான் , மேலை நாட்டினரின் பார்வை, காப்ரேகரின் மீது விழுந்தது. அதன்பிறகு, காப்ரேகரின் கட்டுரைகள் அனைவராலும் கவனிக்கப்பட்டன.
           பொழுதுபோக்குக் கணிதம் என்னும் துறை சார்ந்த கணிதப் புதிர்கள், மாயச் சதுரங்கள், மாறிலிகள், எண்களின் சிறப்புப் பண்புகள் போன்ற தலைப்புகளில் விதவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். காப்ரேகர் எண்கள், விஜயா எண்கள், தத்தராயா எண்கள், சுய எண்கள், டெம்லோ எண்கள், அலைவுறு எண்கள், கங்காரு எண்கள், அரோகன் எண்கள், ஹர்ஷத் எண்கள் என  பலவகைப்பட்ட புதிய எண் இனங்களைக் கண்டறிந்து, கணித அறிஞர்களின் மூளைக்குச் சவால் விட்டார்.
             மனைவி இந்திரா பாயின் மறைவுக்குப் பிறகு, எண்களே இவரது வாழ்வின் அர்த்தங்களாயின. எண்களில் மூழ்கி, எண்களையே சுவாசித்து, எண்களுடனேயே வாழ்வினைத் தொடர்ந்தார். எண்கள் வழியே வாசிப்போர் உள்ளங்களிலும் குதூகலத்தை உண்டாக்கினார்.  கணிதம் வழியே இன்பம் பெருக்கிய இவர், “கணிதானந்த்” என்று செல்லப் பெயரால் அழைக்கப்பட்டார்.
             கோயம்புத்தூருக்கு வந்திருந்த காப்ரேகர் பற்றி,     “ அவர் ஓர் எளிய மனிதர், பழகுவதற்கு இனிமையானவர்; பொறியியல் கல்லூரியில் இவரது தோற்றம் கண்டு எள்ளிய மாணவர்களை, எண்களின் வழியே வசீகரப்படுத்தி, எண்களால் கட்டிப் போட்டார்” என்று பேராசிரியர் ச.சீ.இராஜகோபாலன்  கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.
      1986ஆம் ஆண்டு, எண்களால் ருு முடையப்பட்டிருந்த  காப்ரேகரின் மூளை, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டது. ஆயினும், கணிதத்தில் முதுகலைப் பட்டம் கூடப் பெறாத காப்ரேகர், தனது எண் கணித விந்தைகளால், கணித அறிஞர்களின் மூளைக்குள் இன்று வரை மின்னலைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறார். எண் கணிதம் என்ற ஒன்று இருக்கும் வரை காப்ரேகரும் இருப்பார். ஆம்,  6174 என்ற எண், பூமியிலிருந்து அழிந்துவிடுமா என்ன?
         
 காப்ரேகர் என்றென்றும் நிலைத்திருப்பார். ஏனெனில், அங்கீகாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆர்வமுள்ள செயலை, வாழ்நாள் முழுக்கச் செய்து கொண்டிருந்த மனிதர்களை வரலாறு தன் தோளில் ஏற்றுக் கொள்கிறது.  


Wednesday, January 16, 2019

ஜனவரி 16


கொரில்லாக்களின் காதலி - டியான் ஃபாசே.

 இன்று.... ஜனவரி 16!


  “ The Man who kills the animals today is
    the man who kills the people who get in his way tomorrow”
--Dian Fossey.
              
              ”இண்டர்நேஷனல் டியான் ஃபாசே கொரில்லா ஃபண்ட்” என்ற அமைப்பு, உலககெங்கும் இருக்கும் கொரில்லாக் குரங்குகளைக் காப்பாற்ற பாடுபட்டு வருகிறது. விலங்கின அழிப்பு என்பது மனித அழிவின் தொடக்கம் என்பதை மனித மனங்களில் விதைக்க முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவில் பிறந்து, ருவாண்டா நாட்டில்,  கொரில்லா இன பாதுகாப்பிற்காக தன் உயிரையும் கொடுத்த சூழியல் அறிஞர் டியான் ஃபாசே (1932-1985) என்ற பெண்மணி தான் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற இவரது சாகச  வாழ்வு, தீரம் மிக்க  ஒன்றாகும்.
         1932ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் 16 ஆம் தேதி அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் டியான் ஃபாசே பிறந்தார். இவர் ஆறு  வயதாக இருந்தபோது,  இவரது பெற்றோர் ஜார்ஜ் ஃபாசே – கேத்தரின் இருவரும்  விவாகரத்து பெற்று, தனித்தனியே பிரிந்தனர். தனது மகளை தன்னோடு அழைத்துச் சென்று வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் கனவு நிறைவேறவில்லை. தாய் கேத்தரின் பராமரிப்பிலேயே வளர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கேத்தரின்   அடுத்த ஆண்டே மறுமணம் செய்து கொண்டார். வளர்ப்புத் தந்தை ரிச்சர்ட் பிரைஸ்,  டியான் ஃபாசேயின் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை.
                தாயுடனோ, வளர்ப்புத் தந்தையுடனோ ஒன்றாக உணவு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவதற்குக்கூட இவருக்கு அனுமதி இல்லை. டியான்  அன்புக்காக ஏங்கிக் கிடந்தார். வீட்டில் மீன் தொட்டியில் இருந்த தங்க மீன் மீது , அன்பை வாரி இறைத்தார். வளர்ப்புப் பிராணிகள் மீது அவரும், அவர் மீது அவைகளும் காட்டிய அன்புதான் அவரை வளர்த்தெடுத்தது. வளர்ப்புத் தந்தையின் ஆலோசனைப்படி, வணிகப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், குதிரை ஏற்றத்திலேயே கவனம் செலுத்தினார். 1954ஆம் ஆண்டு, கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் வெறுப்படைந்த வளர்ப்புத் தந்தை, இவரது படிப்புக்குச் செய்யும்  பண உதவியை முற்றிலுமாக நிறுத்தினார்.
           கடை ஒன்றில் எழுத்தர், ஆய்வகத்தில் உதவியாளர், தொழிற்சாலை ஒன்றில் இயந்திர உதவியாளர் என பல பணிகளைச் செய்து தனது படிப்பைத் தொடர்ந்தார். Occupational Theraphy படிப்பில் பட்டம் பெற்றார். சில காலம்,  காசநோய் மருத்துவமனையில்  பணியாற்றினார். 1956ஆம் ஆண்டிற்குப் பிறகு,  ஊனமுற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சில காலம் பணியாற்றினார். அங்கே சக ஊழியராக இருந்த மேரி வைட் என்பவரின் பண்ணையைப் பராமரிப்பதில் தனது மீத நேரத்தைச் செலவிட்டு வந்தார். விலங்குகள் மீதான அவரது நேசம்,  தொடர்ந்து அவரை இயக்கியது.
               வன விலங்குகள் மீதான ஆர்வம் காரணமாக , ஆப்பிரிக்கக் காடுகளுக்குச் செல்ல முடிவு செய்தார். அதற்காக, தனது ஓராண்டு சம்பளத்தை சேமித்தார்.  கூடவே, தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொண்டு (சுமார் 8000 டாலர்), 1963ஆம் ஆண்டு  ஏழு வாரப் பயணமாக ஆப்பிரிக்கா  கிளம்பினார். சுற்றுப்பயணம் சென்ற டியான் ஃபாசேயின் வாழ்வும், நோக்கமும் அங்கே முற்றிலுமாக மாறிப்போனது. டாக்டர் லூயிஸ் லீக்கிடம் பேசிய வார்த்தைகள் இவரது கனவின் நீளத்தை அதிகரித்தன. ஆம், அப்போது முதல்   கொரில்லாக்களைப் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
          ஆப்பிரிக்கா பயணத்திற்குப் பிறகு, அமெரிக்கா திரும்பிய டியான் தனது கடன்களை எல்லாம் அடைத்தார். தனது பயண அனுபவங்களை “த கொரியர் ஜார்னல்” பத்திரிக்கையில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார்.  நிரந்தரமாக ஆப்பிரிக்கா சென்று கொரில்லாக்கள் பற்றிய ஆய்வில் முழுமையாக ஈடுபட விரும்பினார். அதற்காக , 1966-67 ஆம் ஆண்டு அமெரிக்காவை விட்டு வெளியேறினார். காங்கோவில் சிலகாலம் ஆய்வுப் பணிகளைச் செய்த டியான், 1967ஆம் ஆண்டு ருவாண்டோவில் உள்ள விருங்கா மலைப்பகுதிக்குச் சென்றார்.
                        கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்திலிருந்த அந்தப் பகுதியில், "காரிசோக் ஆய்வு மையத்தை" நிறுவினார் டியான் ஃபாசே. கொரில்லாக்களைப் பாதுகாக்க இவர் மேற்கொண்ட துணிச்சலான  முயற்சிகளை, உலகம் பெருமூச்சோடு வியந்து பார்த்தது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அலியெட் டிமுன்ச் என்ற பெண்மணி , விருங்கா மலையில் இவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். சைகைகள் மூலமும், முக பாவனைகள் மூலமும் அப்பகுதி மக்களிடம் கொரில்லாக்கள் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து உரையாடினார்.
                 கொரில்லாக்களை வேட்டையாடுவதையும், சுற்றுலா என்ற பெயரில் அவைகளின் வாழ்வினைத் துன்புறுத்துவதையும்  தடுக்க, தன்னால் ஆன எல்லா வழிகளையும் பின்பற்றினார். நேஷனல் ஜியாகிரஃபி இதழில் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதினார். இதன் காரணமாக , வேட்டைக்காரர்கள் மற்றும் சுற்றுலா வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைச்  சம்பாதித்தார்.
              அதே வேளையில், அந்த அடர் காட்டுக்குள் வசித்து வந்த கொரில்லாக்கள், டியான் ஃபாசே மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கின.  இவரைத் தொட்டுப் பார்த்து, ஏதேதோ சொல்ல வந்தன. அவைகள் ஒவ்வொன்றையும் இவர்,  பெயரிட்டே அழைக்கத் தொடங்கினார். பீனட்ஸ் என்ற கொரில்லா இவரைத் தொட்டுப் பார்த்ததுதான் கொரில்லாவுக்கும் மனிதனுக்குமான முதல் அமைதியான தொடுகை நிகழ்வாகும். டிஜிட் என்ற கொரில்லா, இவரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
                 வேட்டையாளர்கள் டிஜிட் என்ற கொரில்லாவை திட்டமிட்டுக் கொன்றனர். ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்ட டிஜிட்டின் உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டன. உதாரணத்திற்கு,  டிஜிட்டின் கைகள் வெட்டப்பட்டு, அழகிய சாம்பல் கிண்ணமாக (Ash Tray) மாற்றப்பட்டது. அதன் காரணமாக,  டியானின் மனம் மிகுந்த வேதனைக்குள்ளானது.  வேட்டையாளர்களில் ஒருவனைப் பிடித்த டியான், அவன் மூலம் ஏனைய குற்றவாளிகளியும் கண்டுபிடித்து, அனைவரையும்  சிறைக்கு அனுப்பினார்.
               அற்ப பணத்திற்காக வேட்டைத் தொழில் செய்யும் இன அழிப்பாளர்களிடமிருந்து, கொரில்லாக்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்காக, “டிஜிட் ஃபண்ட்” என்ற அமைப்பை நிறுவினார் டியான் ஃபாசே.  1983ஆம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட, “Gorilla’s In the Mist”  புத்தகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.  இப்புத்தகத்தைத் தழுவி, திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
                கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான சூழியல் அறிஞரான டியான் ஃபாசேயின் சொந்த வாழ்க்கை சிக்கல்களால் நிரம்பிக் கிடந்தது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்துக் கலைத்தது, மூன்றுக்கும் மேற்பட்ட காதல், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமை என குழப்பங்களிலேயே அவரது வாழ்வு கடந்தது. சில நேரங்களில், வேட்டைக்காரர்கள் என நினைத்து, அப்பாவிகளைத் தாக்கிய டியான் ஃபாசே, பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டே இருந்தார்.  இடைவிடாது புகைக்கும் சிகரெட் பழக்கத்தால், டியானின் உடல்நிலையும் அவருக்கு எதிராகவே இருந்தது.
                      1985 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை, டியானை எழுப்பச் சென்ற அவரது பணியாள் அதிர்ச்சியில் உறந்து போனார்.  காரணம், டியானின் உடல் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவரது தலைப்பகுதி, மூலைவிட்டம் போல இரண்டாகப்  பிளக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டிருந்த இமானுவேல் என்ற மலையேற்ற வீரர் , துக்கிலிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால்,  திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கொலையினைச் செய்தவர்கள் யார் என்பது  இன்னும் வெளிச்சத்திற்கு வரவேயில்லை.
                       25 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காரிசோக் ஆய்வு மையத்தில் , டியானுக்கு மிகவும் நெருக்கமான டிஜிட் என்ற கொரில்லா புதைக்கப்பட்ட அதே இடத்தில், டியான் ஃபாசேவும் புதைக்கப்பட்டார். சூழியல் மேம்பாட்டுத் துறையில்,  கொரில்லா குரங்குகளுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த உயிரியல் அறிஞர் டியான் ஃபாசேயின் பங்கு அளப்பரியது மற்றும்  ஆச்சரியம் தருவதாகும்.
                   புதுமைப்பித்தன் சொன்னதுபோல,     கருணைக் கிழங்கில் மட்டும்தான் இன்று கருணை என்பது சொல்லாக எஞ்சிக் கிடக்கிறது. மானுட நேசமே மரித்துப் போய், உலகெங்கும்  இனப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இந்த வேளையில், விலங்கின அழிப்பை, நாம் எப்படி சரி செய்யப் போகிறோம்?

அன்பூறும் இதயங்கள் பெருகட்டும் ! 

Tuesday, January 15, 2019

ஜனவரி 15

ஒலிம்பிக் நாயகன் - கசாபா தாதாசாகெப் ஜாதவ்.


ஜனவரி 15....இன்று!

        
          
        மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒருர் சிறிய கிராமத்தின் பெயர்  கோலேஷ்வர்.  ஐந்து வண்ண வளையங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் சித்திரத்தின் அருகில், ”ஒலிம்பிக் நிவாஸ்” என்ற பெயர் தாங்கியிருக்கும் ஒரு வீடு. அங்கே வீடு முழுக்க, பதக்கங்கள், கேடயங்கள், புகைப்படங்கள். சுவரின் மையப் பகுதியில், ஒலிம்பிக் பதக்க  மேடையில் பரிசு பெறும் ஓர் அபூர்வ புகைப்படம். அந்த வீடு, அப்பகுதி மக்களின் கெளரவம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பெருமிதமும் கூட.!        
      இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில், 1952ஆம் ஆண்டு, பின்லாந்து நாட்டில் உள்ள ஹெல்சின்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி மிகவும் முக்கியமானது. ஹாக்கி போட்டிகளில் மட்டுமே தங்கப்பதக்கம் பெற்று வந்த இந்தியாவுக்கு அந்த ஒலிம்பிக் போட்டி, ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.  ஏனெனில் , தனி நபருக்கான ஒலிம்பிக் பதக்கம் முதல் முறையாக அப்போதுதான் கிடைத்தது. அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி, தொடர் வெற்றிகளைக் குவிக்க இந்தியா தவற விட்டது. விளைவு, மீண்டும் ஒரு பதக்கம் பெற , 44 ஆண்டுகள் (1996-லியாண்டர் பயஸ்) காத்துக் கிடக்க வேண்டியதாயிற்று.   
       நமது தேசத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மல்யுத்தப் போட்டியில், உலகின் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தி,   ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று  சாதனை படைத்தார்  26 வயது நிரம்பிய ஓர் இளைஞன். களிமண் தரையில் பயிற்சி பெற்றிருந்தவர், பாய் விரிக்கப்பட்டிருந்த மல்யுத்தக்  களத்திற்குள் புகுந்து விளையாடினார். ஒரு புள்ளியில் இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பைத் தவற விட்ட போதிலும், பார்வையாளர்களின் இதயங்களில் எளிதென நுழந்தார்.  சுதந்திர இந்தியாவில், ஒலிம்பிக் போட்டிகளில்  முதல் முறையாக பதக்கம் வென்று , அழியாத சாதனை படைத்தவர்தான் கசாபா தாதாசாகெப் ஜாதவ் (1926-1984)!
                    1926ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 15ஆம் தேதி, கோலேஷ்வர் கிராமத்தில், எளிய ஏழைக் குடும்பமொன்றில் ஐந்தாவது மற்றும் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார் கே டி ஜாதவ்.  இவரது தந்தை தாதாசாகெப்பும் ஒரு மல்யுத்த வீரர். தனது கடைசி மகனின் உடல் வலிமை மற்றும் மன உறுதி காரணமாக , பிள்ளைக்கும் மல்யுத்தம் கற்றுத் தந்தார் தந்தை. ஐந்து வயது முதலே,  கசாபா ஜாதவ் பெரு விருப்பத்துடன் மல்யுத்தக் கலையை  கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அதுவே பின்னாளில் அவரது  பெருங்கனவாக மாறிப் போனது.
                     மல்யுத்த விளையாட்டைப் போலவே, படிப்பிலும் படு கெட்டியாக இருந்தார் கே டி ஜாதவ். ஆனால், அவற்றை விட, தேசத்தின் சுதந்திரப் போராட்டம் அவரைத் தூங்கவிடாது செய்தது. 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். போராளிகள் தங்க இடம் ஏற்பாடு செய்வது, அவர்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து நிகழ உதவுவது, போராட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது என அவர் அக்காலக்கட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்கினார்.
                   அப்போதும் உடற்பயிற்சியை மட்டும் அவர்  நிறுத்தியதே  கிடையாது. தினமும் காலை, மாலை என 4 மணி நேரம் கடும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். தொடர்ச்சியாக  1000 Sit-ups, 300 Push-ups செய்யும் உடல் வலிமை அவருக்கு உண்டு என அவரது நண்பர்கள், அவரைப்  பெருமையாக    நினைவு கூறுவார்கள். மனச் சமநிலை தவறாத அமைதி , பிறர் மனம் புண்படாதபடி வரும் மென்பேச்சு – இவை இரண்டும் கே டி ஜாதவின் தனித்த பண்புகள்.
                      சுதந்திரத்திற்குப் பின்பு, 1948ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பினார். கோலாப்பூர்  மன்னர் நிறைய வழிகளில் உதவினார். சொந்த கிராம மக்கள் 8000 ரூபாய்க்கும் மேலாக பண உதவி செய்தனர். இறுதியில், போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. துவக்க விழா நிகழ்வில் அணிந்து கொள்ள சாதாரண உடை கூட இவரிடம் இல்லை.  நல்ல உடைகளைக் கடனாகப் பெற்று, அணிந்து கொண்டு – அதன் பின்னர் அந்நிகழ்வில் கலந்து கொண்டார் கே டி ஜாதவ்.
                 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவமின்மை, தொழில் முறை பயிற்சியாளர் இல்லாதது என சில காரணங்களால்,  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவருக்கு ஆறாவது இடமே கிடைத்தது. ஆனால் இவரது தனித்திறன் பளிச்சிட்டது.  ரீஸ் கார்டன் என்ற பயிற்சியாளர் இவருக்குக் கிடைத்தார். இவரது திறமை மெருகேறத் தொடங்கியது. வெற்றிகளும் குவியத் தொடங்கின. 1952-ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் 125lb பாண்டம்வெயிட் பிரிவில் கலந்து கொண்டார். மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள். முதல் போட்டியிலிருந்தே பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார் கே டி ஜாதவ். இறுதியில் பதக்க மேடையில் ஏறி ,வெண்கல விருதுடன்  தனது இரு கைகளையும் உயர்த்தினார்; ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் கொடி, அன்று தான் உயரப் பறந்தது.
             கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் இவருக்கு ஏற்பட்டது.   1955ஆம் ஆண்டு, மஹாராஷ்டிரா காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். காவல்துறையிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்றார். 1983ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற கே டி ஜாதவ், தனது வாழ்நாள் காலத்திற்குள் “மல்யுத்தப் பயிற்சி நிலையம்” ஒன்றை அமைக்க ஆசைப்பட்டார்.  ஆனால், 1984 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி,  எதிர்பாராத விதமாக, சாலை விபத்தொன்றில் இறந்து போனார் . ஓய்வுக்குப் பின்னர் தனது பென்சன் தொகைக்காகப் போராடிய ஒலிம்பிக் வீரன் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமைச் சிறைக்குள் அகப்பட்டுக் கொண்டது.  
             1948ஆம் ஆண்டு, தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக உதவிய ஒவ்வொருவரிடமும் அதற்குரிய ரசீது வழங்கியிருந்தார்.  உதவிய கிராம மக்கள் அனைவருக்கும் பின்னாளில் நன்றியோடு அத்தொகையை திருப்பிச் செலுத்தியவர்தான் கே டி ஜாதவ்.  ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையிலேயே வாடியது. அவரது மகன் ரஞ்சித் ஒரு எளிய விவசாயி. தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு, தந்தையின் பெயரில் பயிற்சி மையம் ஒன்றை கோலேஷ்வர் கிராமத்தில் அமைத்துத் தருமாறு அரசுடன் போராடி வருகிறார் ரஞ்சித். ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்றுவிடப் போவதாகவும் 2017ஆம் ஆண்டு விரக்தியில் பேசினார்.  ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு என்பது பெரும்பாலும்  வேடிக்கைப் பொருளல்லவா? இவரது கோரிக்கைக் கடிதங்கள் மட்டும்  அதற்கு விதிவிலக்கா என்ன?
                மகன் ரஞ்சித் ஜாதவின் கடும் அலைச்சல்களுக்குப் பிறகு, 2001ஆம் ஆண்டு கே டி ஜாதவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக, தந்தைக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என, ரஞ்சித் ஜாதவ்  தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, பத்ம விருது பெறாத ஒரே வீரர் கே டி ஜாதவ் மட்டும் தான். இன்று வரை , அவரது கிராமத்தில் பயிற்சி மையம் என்பதும், பத்ம விருதும் கனவாகவே இருக்கிறது.  அரசின் பாராமுகமும் தொடர்கிறது.
                   1952ஆம் ஆண்டு, ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பிறகு, 32 ஆண்டுகள் உயிரோடிருந்த கசாபா தாதாசாகெப் ஜாதவின் அனுபவத்தைப் பயன்படுத்தி, எண்ணற்ற  மல்யுத்த வீரர்களை  நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அது போலவே எல்லா துறைகளிலும் வெற்றியாளர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.  அப்படிச் செய்யத் தவறியதால் தான், இன்றுவரை  ஒலிம்பிக்  பதக்கப் பட்டியலில் பாரத்ததின் பெயரைத் தேட வேண்டியிருக்கிறது.           

     மறக்கவோ மறைக்கவோ இயலாத வண்ணம், முதல் ஒலிம்பிக் பதக்கச்  சாதனையைச் செய்திருந்த அவரை , நமது தேசம் உச்சி முகந்து கொண்டாடியிருக்கலாம்; உயரே தூக்கி நிறுத்தியிருக்கலாம்; ஒரு சின்னமென அவரை அடையாளப்படுத்தியிருக்கலாம். துரதிருஷ்டம் - அது மட்டும் நிகழவேயில்லை.
           பயிற்சி மையமாவது, பத்ம விருதாவது?  பிழைப்பு அரசியல் நடத்தவே நேரம் போதாதபோது, இவற்றில் கவனம் செலுத்த ஏது நேரம்? அதிலும்  வாக்கு அரசியலைக் கணக்கில் கொண்டால் ,  நேர்மைக் கனவுகள் கூட இங்கே  பிழையாகிப் போகின்றதோ?

          கவனமாய் இருங்கள்…  வெற்றியாளர்களின் பாதச்சுவடுகள் என்பது , மானுட சமூகத்தை உயரே அழைத்துச் செல்லும் ஏணிப்படிகள்.

ஏணிகளை மதிக்கக் கற்போம்!