Saturday, December 7, 2019

செய்யும் எதிலும் உன்னதம் - பா.ராகவன்

நூல் அறிமுகம்.

செய்யும் எதிலும் உன்னதம் - பா.ராகவன்


                       புத்தகம் வாசிக்கத் துவங்கிவிட்டால், துளி கூட  கவனம் சிதையாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருப்பான் எனது நண்பன் சின்னையன். புத்தகங்களில் நிலை குத்திக் கிடக்கும் அவனது விழிகள், நூலின் வரிகளை கவனமாக ஊர்ந்து கொண்டே இருக்கும். அவன் படிப்பதைப் பார்த்தால் போதும், நாமும் ஒரு புத்தகத்தை இன்றே வாசித்து முடித்து விட வேண்டும் என்ற போட்டியுணர்வு,  மனதிற்குள் முட்டிக் கொண்டு வரும். அப்படித்தான் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்தோம்.  அவன் படிக்காத புத்தகத்தைப் பற்றி  நானும், நான் படிக்காத புத்தகத்தைப் பற்றி அவனும் மாறி மாறிப் பேசிக் கொள்வோம். நண்பன் சந்துரு இணைந்து கொள்ளும் நாள்களில், பூமி முதல் பிரபஞ்சம் வரை எல்லா பிரச்சனைகளும் அங்கே அலசப்படும்.  அவற்றுக்கான அதிஅற்புத தீர்வுகள் கண்டடையப்படும். பிறகு, மனநிறைவோடு நாங்கள் உறங்கச் செல்லும் போது, அடுத்த நாளுக்கான விடியல் சத்தத்தை சேவல்கள் எழுப்பிக் கொண்டிருக்கும்.
                  ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான இரண்டாண்டு காலமும் எங்களுக்கு அவ்வாறுதான்  கடந்தது.     எங்கள் அறை புத்தகங்களாலும், புத்தகம் பற்றிய பேச்சுக்களாலும் நிரம்பிக் கிடந்தது. 
                        வழக்கம் போல், ஒரு நாள் இரவு,  வெகு தீவிரமாக ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்  சின்னையன். அட்டை போடப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்பதை என்னால் காணமுடியவில்லை.  ஆனால், தடிமனாக இருந்த அந்தப்  புத்தகத்தில், பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களை அவன்   தாண்டியிருந்தது மட்டும் நன்றாகத் தெரிந்தது. உடனே, தடிமனாக இருந்த  ‘சிவகாமியின் சபதம்’ நாவலை எடுத்து,   நானும்  மறுவாசிப்பு செய்யத் தொடங்கினேன்.
                               மறுநாள் காலை, எனது நண்பன் அதே புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவை புத்தகத்தின் ஆரம்பப் பகுதிகள். பாதிக்கு மேல் படித்துவிட்ட புத்தகத்தை, மீண்டும் ஏன் ஆரம்பத்திலிருந்து இவன் படிக்கிறான் என்ற ஆர்வம் எனக்கு தலை தூக்கியது. ‘சின்னையா, அது என்ன புத்தகம்?, ஏன் ஆரம்பத்திலிருந்து மீண்டும் படிக்கிறாய்?’ எனக் கேட்டே விட்டேன். ‘பாதி அத்தியாயங்கள் கடந்த பிறகு, நூலின் ஆசிரியர் மீண்டும் முதலில் இருந்து படித்து வாருங்கள் எனச் சொல்லியிருப்பதாகவும், அதனால் தான் மீண்டும் வாசிக்கிறேன்’ என்றும் பதில் சொன்னான். மேலும், ’மிகவும் சுவையான புத்தகம் இது., இவருடைய நூல்களை  நான் மிகவும் விரும்பி வாசிக்கிறேன்’ என்றும்  சொன்னான். புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த நூல் அது.  அப்போதுதான்,  எம்.ஆர்.காப்மேயர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டேன்.  நானும் அவரது புத்தகங்களை வாசித்துவிட முடிவு செய்தேன். வாசித்தும் பார்த்தேன். உண்மையில்,  அந்த நூல்கள் என்னை பெரிதும் கவரவில்லை.
                  ஆனால், சுய முன்னேற்றம் குறித்த புத்தகங்களை நாங்கள் தொடர்ந்து வாசித்தோம். எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், ஜேம்ஸ் ஆலன் என பட்டியல் தொடர்ந்தது.  அவற்றுள் உதயமூர்த்தியின் புத்தகங்கள் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தன..  ‘எண்ணங்கள்’, ’ஆத்ம தரிசனம்’, ’மனம் பிரார்த்தனை மந்திரம் ’ என அவருடைய இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நூல்களை பல்வேறு இடங்களிலிருந்தும் பெற்று,  படித்து முடித்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவை வாசிப்பின்பத்தை, தன்னம்பிக்கையைத்  தரவில்லை. விரைவிலேயே அது மாதிரியான நூல்கள் படிப்பது நின்று போனது. மாறாக, வரலாறு, அறிவியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களே மனதுக்கு நெருக்கமாய் அமைந்தன.
                      நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகவும் ஆர்வத்துடன் படித்த தனம்பிக்கை சார்ந்த நூல் என்றால், அது பா.ராகவன் எழுதிய ‘செய்யும் எதிலும் உன்னதம்’ நூல் தான்.   வெறுமனே தன்னம்பிக்கை சார்ந்த சிந்தனைகளை மட்டும் உதிர்த்துவிட்டுப் போய்விடாமல், ஒவ்வொன்றுக்கும் நிகழ்கால உதாரண மனிதர்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மூலம் சொல்லவந்த கருத்துக்களை வலுவூட்டியிருக்கிறார் ஆசிரியர் பா.ரா.  தன்னம்பிக்கை சார்ந்த முக்கிய மொழிகளைப் பேசியும்,  பல்வேறு துறைகளைச் சார்ந்த  சிறந்த  மனிதர்களின் வாழ்வியல் துளிகளைக் கூறியும்  இந்நூல் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.
     
                         ********************************************
                          ‘மிகச் சிறந்ததைத் தவிர, எனக்கு வேறெதுவும் வேண்டாம் என்னும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்’
                 - ’இது முன்னுரையல்ல’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும்  முன்னுரையில் , ஆசிரியர் சொல்லும் முதல் மந்திரச் சொல் இதுதான்.  நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் இருக்கின்றன. செய்யும் செயல் எதுவாயினும் அதில் உன்னத நிலையை அடைவதே நமது இலக்காக இருக்க வேண்டும் எனக் கூறும்  ஆசிரியர், அதனை சாதித்துக் காட்டிய சாதனை மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களை சுவைபடச் சொல்வதன் மூலம், மனதிற்குள் திடமான நம்பிக்கையை அழகாக விதைத்திருக்கிறார்.
                            நூலின் முதல் கட்டுரை, ‘ஒரு வாக்குமூலம்’. தனது வாசகனுக்கு  வாக்குமூலம் அளிக்கும் மன உறுதி மற்றும்  தைரியம்  இரண்டும் பா.ராகவனுக்கு  வாய்த்திருக்கிறது. சரியானது - சிறப்பானது, இவை இரண்டுக்குமான வேறுபாட்டை ஆசிரியர் விளக்கும் இடம் மிக அழகானது.  தான் எடுத்துக் கொண்ட பணியிலேயே மூழ்கி விடுவதல்ல, தானே அதுவாக மாறிவிடுவதுதான், செய்யும் எதிலும்  உன்னதம்  அடைவதற்கான சிறந்த மந்திரம். அதற்காக அவர் கூறியிருக்கும் உதாரணங்கள் அற்புதமானவை.
               குடும்பத்தோடு விடுமுறை நாள்களைக் கழிக்க, பயணத்தை தொடங்குகிறார் எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்குவேஸ். சில மீட்டர்கள் நகர்ந்த உடனேயே, புதிய நாவலுக்கான பொறி அவரது உள்ளத்தில் தோன்றுகிறது. உடனடியாக கார் வீடு திரும்ப, அறைக்குள் சென்று எழுதத் துவங்குகிறார். ஒன்றரை ஆண்டு காலம். தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. கூட்டுப் புழு போல தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார். நாவலை அவர் எழுதவில்லை. மாறாக அதன்  எழுத்தாகவே, இவர் மாறிப் போனார். உன்னதத்தின் விளைவு நாம் அறிந்ததே. ஆம், காலத்தின் கடைசி வரை நிலைத்து நிற்கும் வல்லமை பெற்ற செவ்வியல் நாவல், 'நூற்றாண்டு காலத்  தனிமை ' இப்படித்தான்  உருவானது.
                    ’ஹேராம்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படங்களுள் ஒன்று. அப்படத்திற்கு,   முதலில்  வேறொருவர் இசையமைத்து, காட்சிகள் எடுக்கப்பட்டன. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகிறார் இளையராஜா. வேறொருவர் இசைக்கும், பாடலுக்கும் எடுக்கப்பட்ட காட்சிகளை ஆழ்ந்து பார்க்கிறார்.  அதற்கேற்றார்போல   காட்சிகளுக்கு புதிய இசை வடிவம் கொடுக்கிறார் இளையராஜா. இது எப்படிச் சாத்தியமாகும்?, இதெல்லாம் முடியுமா? என்றால்,  நிச்சயம் முடியும். ’ தானும் தன் செயலும் தனித்தனி என்கிற நிலையைக் கடந்து, செயலாகவே மாறி விடுகிற  கர்ம யோகம் வாய்க்குமானால், செய்யும் செயலில்  நிச்சயம் உன்னதத்தை அடையலாம்.
                               மனித குலத்தின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த லியோ டால்ஸ்டாய் , இலக்கிய உலகத்தின்  சூப்பர் ஸ்டார். அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்க , எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு காத்துக் கிடந்தன. அப்போது அவர்கள் எல்லோரையும் இவரே அழைத்து, புதிய நாவலுக்கான அறிவிப்பைச் செய்கிறார். ராயல்டி தொகை பேசுகிறார். தொடர் கதையாக, பல்வேறு மொழிகளில் நாவல் வெளியிடப்படுகிறது. பதிப்புரிமை, பணம், ராயல்டி என எதிலும் அக்கறை காட்டிடாத டால்ஸ்டாய், ஏன் திடீரென இப்படிப் பேசுகிறார் என உலகம் வியந்து பார்த்தது. பிறகுதான் காரணம் தெரிந்தது.   ரஷ்யாவில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த ஐயாயிரம் டுகோபார்ஸ் இன மக்களை கனடாவுக்கு  அனுப்பி, அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்திருக்கிறார் டால்ஸ்டாய். அதன் பொருட்டே, பணத்திற்காக எழுத முடிவு செய்கிறார். அப்படி உருவான நாவல் தான், ‘புத்துயிர்ப்பு’. மனித உயிர்களின் மீதான காதல் தானே அவரை எழுத வைத்தது, உன்னதத்தை அடைய வைத்தது.!
                                                துயரங்களைக் கடந்து, தேசங்களை இணைத்து, இசையால் இந்த உலகோடு பேசிய மனிதன் யானி; சங்கடங்களைத் தாண்டி, சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமான்; அலட்டிக் கொள்ளாமல் காரியத்தில் கவனமாய் இருந்து சாம்பியன் பட்டம் வென்ற செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்- இவர்கள் எல்லாம், இந்த நூலில்  நமக்கான மந்திரங்களை சத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.       
                     அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அற்புத மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறைய இருக்கிறார்கள். ஆனைகட்டி மலைபகுதிக்கு அப்பால் இருக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதின் மொழியை கற்றுத் தந்த நாராயணன்; ’குழந்தைகளுக்கு தேவையில்லமல் ஆண்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது, மூணே நாளில் தானே சரியாகி விடும்’ என அன்போடு பேசி மருத்துவம் பார்க்கும் சென்னை டாக்டர் பாலசுப்ரமணியன்;   ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி தாள், நாள் படி எல்லா நிகழ்வுகள் என எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அவற்றை முறையாகப் பராமரிக்கும் கல்கி பத்திரிக்கை ஆசிரியர் கி.ராஜேந்திரன்; கிணற்றுக்கடவு என்னும் சாதாரண கிராமத்தில் பிறந்து,  நன்றாகப் படித்து, வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகளைத் தவிர்த்து, பின்னளில் சந்திராயன் திட்ட இயக்குநரான  இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை; மனநிறைவோடு , பெருமிதம் நிரம்பிய உணர்வில் , வெண்கலப் பானையில் அரிசி உப்புமா கிண்டித்தரும் பா.ரா.வின் பாட்டி - இப்படி ஏராளமான மனிதர்கள் இந்தப் புத்தகமெங்கும் ரத்தமும் சதையுமாய் வந்து போகிறார்கள்.
                      ஒசாமா பின்லேடன் பற்றிய கட்டுரையும், திரைப்பட நடிகர் சந்திரபாபு பற்றிய கட்டுரையும் இந்நூலில்  முக்கியமான கட்டுரைகள்.  நூலில் வரும்  பாராவின் நண்பர்கள் லோகேஷ், ஹேமந்த் மற்றும் ஜே எல் ராகவன் மூவரும்,  நமக்கும் சுவையான நண்பர்கள் ஆகிறார்கள். காரணம் பா.ராவின் வசீகரிக்கும் மொழிநடை.
                    சுவையான இந்த நீண்ட பட்டியலில் இரண்டு பேர், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக ஆனார்கள். ஒருவர் முன்னால் பாரதப் பிரதமர் சந்திரசேகர் அவர்கள். பா.ராவிடம் அவர் அளித்த பேட்டி பற்றிய குறிப்பு இந்த நூலில் உள்ளது. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.  ”அவலங்களைப் பார்த்து சோர்ந்து போய்விடாதீர்கள்; தேவை - பொறுமை மட்டுமே” -எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை.
                மற்றொருவர், டாக்டர் ஸ்ரீனிவாஸ்.  ஒரு நோய்க்காக இரண்டாவது, மூன்றாவது முறை செல்ல நேரிட்டால் அதற்காக பணம் வாங்கிக் கொள்ள மாட்டார் இவர்.  ”இதுக்குத்தானே முதல் தரம் வந்தப்பவே பணம் கொடுத்டுட்டீங்க, மீண்டும் எதற்கு?”. இவர் போன்ற நல்லோர் பொருட்டே, தமிழ்நாட்டுக்கு மழை வருகிறது   என்பதை    அறிந்து கொள்வோம்.
                       ‘உன்னதங்களின் உச்சம்’ என்னும் கடைசிக் கட்டுரை,  உன்னதங்களின்  நாயகன் காந்தியடிகளைப் பற்றிப் பேசுகிறது. அவரது வெளிப்படைத்தன்மை, பரிசோதனை முயற்சிகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பன்மை என நிறைய மந்திரங்களை நமக்கு கோடிட்டிக் காட்டுகிறது.
                    இப்படியாக, இந்த புத்தகமெங்கும் நம்மை புரட்டி போடும் மந்திரச் சொற்கள், சக மனிதர்களின் வாழ்விலிருந்து ஊற்றென பொங்கி வருகின்றன. கற்றுக் கொள்ள ஆர்வமிருந்தால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் நாம் கற்றுக் கொள்ளலாம் தானே. தேவை மனம் மட்டும் தான். அத்தகைய மனத்தை உருவாக்கும் வகையில் தான் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
                   
                             ***************************************************
                  நண்பர்களே, சுவாரஸ்யம் சற்றும் குறையாமல், சத்தும் வற்றிப் போகாமல் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் , சுய முன்னேற்ற நூல்களில் மிக முக்கியமான நூல் எனச் சொல்லலாம், இது, தோள் மீது கை போட்டபடி, உலகியல் நடப்புகளில் இருந்து நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அமுதத்தையும் கடைந்து தர முயன்றிருக்கிறது.  அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் இது,  பல்வேறுபட்ட   சாதனை மனிதர்களின் வரலாற்றுச் சுருக்கம். அவர்களின் வெற்றி மந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதால், வாசிக்கும் நமக்கும் அவை உத்வேகம் தருகின்றன.     
                   சுருக்கமாய்ச் சொன்னால்,  உன்னத்தை அடையும் செயல்திட்டத்தில் நான்கு படிநிலைகள் உள்ளன. அவை,  உத்தேசம், திட்டம் , உழைப்பு, விளைவு . முதல் மூன்றையும் சரியாகச் செய்தால் அல்ல, மாறாக சிறப்பாகச் செய்தால் , விளைவு நிச்சயம் உன்னதமாய் இருக்கும். நன்றி பா.ரா.                     
                         பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பன் சின்னையன் தந்த உத்வேகத்தை , போட்டி மனப்பான்மையை  இந்தநூல் எனக்குத் தந்திருக்கிறது.  நண்பர்களும் வாசித்துப் பயன் பெறலாம்.             
     

Tuesday, November 19, 2019

கொம்பு முளைத்தவன் - பா.ராகவன்


நூல் அறிமுகம்.


கொம்பு முளைத்தவன் – பா.ராகவன்.

        ”அவனுக்கென்ன பெரிய கொம்பா முளைச்சிருக்கு, நான் அவன ஜெயிச்சுக்
காட்டுறேன் பார்…” எனச் சவால் விட்டு , அதன் படியே, வென்று காட்டி, தலையில்
கொம்பு வைத்துக் கொள்வது ஒரு வகை.
         எந்தத் துறையாயினும், தோல்வியின் நிழலில் மூழ்கி விடாமல்,
துயரக் கூடாரம் முழுதாய் மூடிவிடாமல் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளவும்,
தற்காத்துக் கொள்ளவும்  கொம்பு முளைத்தவனாய் காட்டிக் கொள்ள  வேண்டியிருக்கிறது.
இது மற்றொரு வகைக் கொம்பு.
              ஆனால், மேற்சொன்ன இரு வகைகளில் எதுவாயினும்,   கொம்பு முளைத்தவனாய் இருப்பதற்கென்று சில
மெனக்கெடல்கள் தேவையாய் இருக்கின்றன.  குலையாத  உறுதி அவசியமாக இருக்கிறது.
அவற்றைப் பற்றிய சுவையான, பயனுள்ள அனுபவக் கட்டுரைகளின் தொகுப்புதான், பா.ராகவன்
எழுதிய  “கொம்பு முளைத்தவன்”.  ஒரே அமர்வில் வாசித்து முடித்து விடக்
கூடிய கட்டுரைகள் தான். ஆனால், அதில் சொல்லப்பட்ட அனுபவங்களை, நாம் அசை போட்டுப் பார்க்கும் போது, நமக்குள் அதீத
உற்சாகத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள் இவை.
         
       இந்த நூலில் முன்னுரை அல்லாது, மொத்தம் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. அனைத்தும் அனுபவக் கட்டுரைகள் தான் என்றாலும், எழுதத் துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கையை பெருக்கச் செய்யும் பொதுத் தன்மையைக் கொண்டவை இவை.
     
            முதல் கட்டுரை, ‘நன்றி திரு ஹெமிங்வே.’.   
           நன்றி திரு பா.ரா சார் என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதழாளர் சாமுவேல்சனுக்கு , எர்னெஸ்ட் ஹெமிங்வே அளித்த நேர்காணல் வழியே, எழுத வருபவன் கொண்டிருக்க வேண்டிய அல்லது நினைவில் நிறுத்த வேண்டிய செய்திகளை, ’கொம்பு முளைத்தவன்’  நூலின் முதல் கட்டுரையாகத் தந்ததற்கு.
                 ‘கிழவனும் கடலும்’  நாவலில் வரும் கிழவன் சாண்டியாகோ,
தனது மெளனங்களால், தனது செய்கைகளால் வாசகனின் உள்ளத்தில்
தன்னம்பிக்கையைத் தந்தது போல, ஹெமிங்வேயின் இந்த நேர்காணல் குறிப்புகள், எழுதத் துடிக்கும் இளம் எழுத்தாளனுக்கு தலை கோதி, கனிவாக வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று சொல்லலாம்.

                   “என்னை அசந்து போகவைக்கும் அளவுக்கு ஒரு சிறந்த கதையை நான் இன்னும் எழுதவில்லை.  இது போதாது என்னும் பதற்றம் இருப்பதுதான்  என் பலம்.” என்று சொல்கிறார் பா.ரா. 
           ஆம், கொம்பு முளைத்திருந்தாலும் ஒவ்வொரு  எழுத்தாளரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கிய குணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற உண்மையை அழகாக, அழுத்தமாகச் சொல்கிறது இந்த நூல்.
               93 சிறுகதைகள் அனுப்பி ஒன்றும் பிரசுரமாகவில்லை என்ற போதிலும், சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் மீண்டும் மீண்டும் வாசிப்பு; வாசிப்பென்னும் நதியில் மூழ்கித் திளைத்தபின் மீண்டும் ஒரு ஐம்பது சிறுகதைகள்; அப்போது நண்பர் – எழுத்தாளர் சிவகுமார்  கூறிய சொற்கள்; அவை தந்த மன வலிமை –
இவையாவும் தான் தன்னை முன்னெடுத்து எழுத வைக்கின்றன என பா.ரா சொல்லிக் கொண்டே செல்லும் போது, வாசகனுக்கும் அந்த தன்னம்பிக்கை இயல்பாகவே தொற்றிக்
கொள்கிறது.
             
         இந்த நூலில், ’கற்றுக்கொடுத்தவன்’ என்ற கட்டுரை மிகவும் நெகிழ்வான ஒன்று.  'தேங்காய்' என்றொரு சிறுகதையைப் படித்துவிட்டு, எழுத்தாளர் சிவக்குமாரை சந்தித்து, அவரை வாழ்த்தும் போது. பா.ரா.விடம் அவர் பேசும் வார்த்தைகள் மனக் கண்ணில் எப்போதும் நிலையாய் நிற்கின்றன.
          ‘நல்லாயிருந்துச்சில்ல, ப்ரூவ் பண்ணிட்டன்ல? நான் சாகல இல்ல?’  என ஆனந்தக் கண்ணீரோடு, சிவக்குமார்  பேசும் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் மறைந்து போகாது.
எழுத்தின் மீது தீராத இலட்சிய வெறி கொண்ட ஒரு எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய மந்திரச்
சொற்களல்லவா  இவை!.
     
            பா.ரா அவர்கள், மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்கி , எழுத்துப் பணி
மேற்கொண்ட அனுபவம் மிகவும் சுவையானது.(அந்த அன்னாசிப் பழ சாண்ட்விட்ச் எப்படி சார் இருக்கும்?).   
          சோம்பல் இல்லாமல், சலிப்பு தொட்டு விடாமல் தான் விரும்பிய பணியை 24 மணி நேரமும் கூட அழகாகச் செய்யலாம் என்பதற்கு
இக்கட்டுரைகள் சான்றாக இருக்கின்றன.
           தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதுவது, புனைவுகள்
எழுதுவது, இதழ்களில் தொடர் எழுதுவது, இடையில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை
வரலாற்றுத் தொடர் ‘பொலிக..பொலிக’. இப்படியாக இடைவிடாது எழுதிக் கொண்டிருந்த தனது அனுபவத்தை இவர் சொல்லும் போது, சோம்பல் என்னும் புழுதி பறந்தோடி விடுகிறது. 
   
         செய்யும் செயலை அர்ப்பணிப்போடு நாம்  விரும்பிச் செய்தால், நமது உடலும், நமக்கான  நேரமும் நம்மிடம் கட்டுப்பட்டே
நிற்கின்றன என்பதையும் கொம்பு முளைத்தவன்,  பளிங்கு போல அழகாகக்
காட்டுகிறான்.
           
          ’பாப்கார்ன் கனவுகள்’ பற்றி இந்த நூலில் வரும் சில  சொற்கள் முக்கியமானவை.
       ‘சுய அனுபவம்  தான். பட் அது கலையா உருமாறல. என்ன ரீசன் தெரியுமா? ‘
             - என காரணம் சொல்லும் பத்திகள் நின்று கவனிக்கப்பட வேண்டியவை.  அதன் படியே பார்த்தால் கூட, 'கொம்பு முளைத்தவன்'  நூலில் பாதிக்கு மேற்பட்ட கட்டுரைகள் கலையாக உருமாறி, வாசகனுக்கு கட்டுரைக்கலை இன்பத்தை நிரம்பவே வழங்குகின்றன.
         

            ”அதிகாலைகளில் ஆன்லைனில் ஜெயமோகனின் பச்சை விளக்கைப்
பார்த்தே அலறியடித்து என் தூக்கத்தை விரட்டியிருக்கிறேன்”.
                                      -பா.ரா
                      தனக்கு தனிப்பட்ட முறையில் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கடிதத்தை நினைவில் இருந்து மீட்டெடுத்து  விவரித்திருக்கிறார்
பா.ரா.  நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கான விளக்கம்
பற்றியும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.  தொகுப்பில் உள்ள அற்புதமான
கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
       
        மொத்தத்தில்,    இணைய உலகில் தன்னை தயார் படுத்திக் கொண்டு,
இடைவெளி இல்லாமல் உழைப்பைத் தருகிற மனம் இருந்து விட்டால் போதும், இங்கே நிச்சயம் சாதிக்கலாம் என இளம் எழுத்தாளனுக்கு துணிச்சலைத்  தருகிறது இந்த நூல். வழக்கம் போலவே, சலிப்பின்றி நம்மை முன்னகர்த்திச் செல்லும் வசீகர மொழி நடையும் இதிலே இருக்கிறது.
         
          நேரம் என்பது நில்லாமல் சென்று கொண்டிருக்கும் மாபெரும் நதி என்றாலும், அதனை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவன், ஆண்டு முழுக்க, ஏன், ஆயுள் முழுக்க  நல்ல விளைச்சலை அறுவடை செய்து கொண்டே இருப்பான் என்பது தானே வரலாறு. அத்தகைய நம்பிக்கையை ஒரு வாசகன் இக்கட்டுரைகள் மூலம் நிச்சயம் பெறக் கூடும்.
                   
        ’எழுத்து எனக்குத் தொழில் அல்ல, அதுவே வாழ்க்கை’,  என தன்னம்பிக்கையோடு சொல்பவனுக்கு கொம்பு முளைக்காமலா போகும்? இலக்கிய உலகத்தில், தலைக் கணமற்ற -  தன்னம்பிக்கைக் கொம்புகள்
முளைத்துக் கொண்டே இருக்கட்டும்.

Saturday, September 28, 2019

காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்


காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்

               சில நாள்களுக்கு முன்பாக, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதன்  தலைப்பே வசீகரம் செய்வதாக இருந்தது. தலைப்பு, ‘காந்தியடிகளின் 12 அப்போஸ்தலர்கள்’ (The twelve Apostles of Gandhi).
            ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, மானுட தீமைகளுக்கும், வெறுப்புக்கும் எதிராக , கருணையையும் மன்னிப்பையும் தனது இரு கரங்களில் ஏந்தி,  கல்வாரி மலை மீது, குருதி சிந்திய தேவ மகன் இயேசு கிறிஸ்துவைப் போலவே, காந்தியடிகளுக்கும் 12 அப்போஸ்தலர்கள் என பட்டியல் தந்திருந்ததால் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. சுதந்திரப் போராட்டம், பொருளாதாரம், கல்வி முறை, மருத்துவம்  என பல்வேறு தளங்களில் காந்தியடிகளை குருவாகக் கொண்டு, அவரைப் பின்பற்றியவர்கள் பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களுள் ராமச்சந்திர குஹாவின் பட்டியலில் உள்ள அந்த 12 முதன்மைச் சீடர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் ஆர்வம் மேலிட்டது,
            குஹாவின் பட்டியலில் உள்ள அந்த 12 அப்போஸ்தலர்கள்:
1.ஜவஹர்லால் நேரு
2.வல்லபாய் படேல்
3.இராஜாஜி
4.ராஜேந்திர பிரசாத்
5.அபுல் கலாம் ஆசாத்
6.ஜேபி கிருபாளினி
7.கமலாதேவி சட்டோபாத்யாய்
8.மிருதுளா சாராபாய்
9.ஜெயபிரகாஷ் நாராயணன்
10.ஜே சி குமரப்பா
11.மீரா பென்
12. கான் அப்துல் கஃபார் கான் 
     எப்பேர்ப்பட்ட மனிதர்கள் இவர்கள்! கொள்கையின் பொருட்டு, தனது வாழ்க்கையினை நடத்தியவர்கள்.  சமூக முன்னேற்றத்திற்காக, நாளும் பொழுதும் தனது வாழ்வினை மெழுகென கரைத்துக் கொண்டவர்கள்.          
               கட்டுரையை படித்து முடித்தவுடன், அதில் வினோபாஜியின் பெயர் விடுபட்டிருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டியல் எனும் போது, சில விடுபடல்கள் இருக்கத்தான் செய்யும். மேலும், ராமச்சந்திர குஹாவால் பட்டியலிடப்பட்ட  12 ஆளுமைகளும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களது வாழ்வு, நம்மை எல்லாவகையிலும் மேம்படுத்தும் ஓர் அபூர்வ சாதனம். 
             ஆயினும்,  காந்தியடிகளுக்குப் பிறகு, காந்தியத்தை முன்னெடுத்து, தேசத்தைக் கட்டமைக்கப் பாடுபட்ட இந்த 12 முதன்மைச் சீடர்களின் பட்டியல், ஒவ்வொருவருடைய பார்வையிலும் மாற்றத்திற்கு உரியதுதான். இன்னும் ஒரு ஆறு பேரை இணைத்துக் கொள்ளச் சொன்னால், நான் பின்வரும் ஆளுமைகளை சேர்த்துக் கொள்வேன்.
13.வினோபா பாவே
14.மகாதேவ தேசாய்
15.நரஹரி பரிக்
 16.கிஷோர்லால் கனஷ்யாம் மஸ்ருவாலா
17.ரவிசங்கர் மகராஜ்
18.ஜுகத்ராம் தவே
              இவர்களோடு சேர்த்து, எனது பட்டியல் படி, காந்தியடிகளுக்கு 18 அப்போஸ்தலர்கள்! ’காந்தியம்’ என்னும் சாம்ராஜ்ஜியத்தின் சீடர்கள் பட்டியல், கிளை பரப்பிக் கொண்டே  முடிவற்றுச் செல்லும் அதிசய மரம். ஏனெனில் காந்தியம் என்னும் வேர் உறுதியானது, ஆழமானது.

              உள்ளத்தில்  ஓர் எளிய ஆசை உண்டு.    தமிழகத்தில்,  காந்தியத்தை தனது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து நிறைந்த, 12 அப்போஸ்தலர்கள் பெயர்களைப் பட்டியலிட வேண்டும். அவர்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். தலைப்பு, ’காந்தியின் தமிழக அப்போஸ்தலர்கள்…’

                     
                    





Wednesday, September 25, 2019

வண்ணமயமான வாழ்வு!

வண்ணமயமான வாழ்வு!


காட்சி எண்: 0
நான் நானாகத்தான் இருந்தேன்.
பிறகேதோ சிறு  பயத்தில்
ஒருநாள் ஆடாய் மாறினேன்.

காட்சி எண்: 1
ஆடு ஒன்று அருகில் வந்தது.
அமைதியாய் நின்று
புல்லும் தின்றது.
திடீரென ஒரு நாள்,
'ஊ...' என ஊளையிட்டு
உதிரம் குடிக்க நெருங்கியது.
அப்போது நான்
ஆட்டுக்குட்டியாய் இருந்தேன்.

காட்சி எண்: 2
வனத்தில் என்னோடு
இணைந்தது
புதிய மான்,
கவண் போல் பிரிந்த
கொம்புகளுடன்.
ஒன்றாகவே அலைந்தோம்
ஒன்றாகவே மேய்ந்தோம்.
திடீரென ஒரு நாள்
'உர்ர்ர்....' என உறுமியது.
உயிர் பருக நெருங்கியது.
அப்போது நான்
மான்குட்டியாய் இருந்தேன்.

காட்சி எண்: 3
காட்டில் மேய்ந்தபோது
காளை ஒன்று தேடி வந்தது.
சேர்ந்தே திரிந்தோம்.
சோர்வை மறந்தோம்.
திடீரென ஒரு நாள்
'கர்ர்ர்....' என கர்ஜித்தபடி
கழுத்தைக் கவ்வியது.
அப்போது நான்
பசுவாய் இருந்தேன்.

.......
.......
.......

காட்சி எண்: முடிவிலி...

காட்சிகள் - களங்கள்
மாறிக் கொண்டே
நகர,
முடிவிலிப்  பயணத்தில்
முடிவு மட்டும்
மாறவே இல்லை.

மாறி மாறி
எதுவாய் மாறினும் ,
எப்போதும் -
வெல்லும்
பச்சோந்தி யின் பற்களிடை -
மரண பயத்துடன்
பயிலாத
பச்சோந்தியாக  நான்!

பச்சோந்திகள் பாவிகள்
அவர்களே துரோகிகள்
என எப்படிக்
கூவி அழுவேன்?
நானே நானாக
இல்லாத போது!

தினம் ஒரு வண்ணத்தை
அணிந்து நகர்கிறது
என் மனம்
துயரங்களினூடே!

Sunday, September 1, 2019

ஜி. நாகராஜன்


இன்று மற்றொரு இன்றல்ல  - ஜி.நாகராஜன்.


செப்டம்பர் 1...இன்று!

   ”அடுத்து வருவது  ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவா என்றெல்லாம் கவலைப்படாது, அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்ளும்  அந்த சிறுமியிடத்தே யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது” 
    - பரத்தையர் பற்றி  ஜி. நாகராஜன்.

        இலக்கிய வெளிச்சம் ஊடுருவாத பகுதிகளுக்குள் இவரது பார்வை நுழைந்தது.  அதற்குள்ளாகவே தானும் நுழைந்து, தன் பேனா மையால் அவர்களின் வாழ்வினை அழியாத சித்திரமாக்கிய எழுத்தாளர் இவர். மதுரை நகர வீதிகளில் அலைந்து திரிந்து, வாழ்வினைத் தான் விரும்பியபடியே சுகித்தவர்.  அழகு, அழகின்மை, நன்மை, தீமை என யாவற்றையும் ருசித்த இவர், நவீனத்துவத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்தாளர் ஜி.நாகராஜன் (1929-1981) பிறந்த நாள் இன்று.

            35 சிறுகதைகள், 4 'நிமிஷக்கதைகள்' என்னும் குட்டிக்கதைகள் , ஆங்கிலக் கதைகள், மற்றும் சில கட்டுரைகள்.  ’குறத்தி முடுக்கு’, ’நாளை மற்றுமொரு நாளே’ என இரண்டே நாவல்கள் . இவைதான் ஜி.நாகராஜனின் மொத்தப் படைப்புகள். ஆனால், இவை அடர்த்தி மிகுந்தவை; ஆழம் நிறைந்தவை; அறியாத உலகினை வாசகனுக்குக் காட்டி, ஆச்சரியமும்,  அதிசயமும்  தருபவை. மேலோட்டமாகப் பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால், அறம் சொல்லும் படைப்புகள் இவை என்பதை வாசகர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

                மதுரையில் கணேச அய்யருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார் நாகராஜன். தனது நான்காவது வயதிலேயே,  தாயை இழந்தார். திருமங்கலத்தில் தாய் மாமா வீட்டில் வளர்ந்தார். பழநியில் இருந்த தந்தை வீடு,  மதுரையில் மாமா வீடு என மாறி மாறித் தங்கியதில்,   இவரது பள்ளிக்கூடங்களும் மாறிக் கொண்டே இருந்தன.    பதினொன்றாம் வகுப்பிற்குப் பிறகு, மதுரைக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.  கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, அறிவியல் மேதை  சர் சி.வி.ராமன் கையால் விருது  வாங்கினார். தொடர்ந்து கணிதத்தில்  இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்து, முதல் வகுப்பில் தேறினார். காரைக்குடி கல்லூரியில் சில காலம் பணியாற்றிய பிறகு, சென்னையில் சில காலம் கணக்கராகவும்  பணிபுரிந்தார்.  பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

               திடமான தேகம், தடிமனான மீசை, மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, விரல்களுக்கிடையே சார்மினார் சிகரெட் என ஜி.நாகராஜனின் தோற்றமே, மாணவர்களுக்கு வசீகரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கணிதப் பாடம் நடத்துவதிலும், ஆங்கிலப் பாடத்திலும்  தனிதன்மையும் , அபார ஆற்றலும் கொண்டிருந்த இவரது கற்பித்தல் முறை அனைவரையும் காந்தம் போல இவர் பக்கம் ஈர்த்தது.

          அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் போதுதான், கம்யூனிச சித்தாந்தங்களுக்குள் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். மாலை வேளைகளில், கம்யூனிசக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில்,  அமெரிக்கா சென்று ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பை, கல்லூரி நிர்வாகம் இவருக்கு வழங்கியது. வாய்ப்பை மறுத்த நாகராஜன்,  தனது வேலையை ராஜினாமா செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்டார்.

           ந.வானமாமலை , திருநெல்வேலியில் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக சிலகாலம் கழித்தார்.   கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை நகரக் கமிட்டிச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒருமுறை,  மேலப்பாளையத்தில் ஜப்தி நடவடிக்கைகளுக்கெதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார்.  சிறவாசமும் அனுபவித்திருக்கிறார்.

         திருநெல்வேலியில் இருந்தபோது தான், தன்னை தீவிர இலக்கியத்திற்குள் ஆட்படுத்திக் கொண்டார். கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி போன்றோருடன் எப்போதும் தொடர்பில் இருந்தார். 1957ஆம் ஆண்டு, இவரது முதல் சிறுகதை, 'அணுயுகம்' , ஜனசக்தி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
   
      பித்தன் பட்டறை வெளியீடான, 'குறத்தி முடுக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாவலில், வேசியர் உலகினை வாசகன் கண்முன்னே நிறுத்தினார் ஜி.நாகராஜன். அவரது படைப்புகளில், "நாளை மற்றுமொரு நாளே" சிறப்பான ஒன்றாகும். கந்தன் என்பவனின் ஒருநாள் வாழ்க்கை அது. துணிந்திருந்தால், அவ்வாழ்வு நம்மையும் தொற்றியிருக்கக் கூடும்.! அது ஒரு ரணம் நிறைந்த வாழ்வு.

    திடீரென்று, 1956 ஆம் ஆண்டு , கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து , தன்னை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார். அந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்தர் மேல், அவருக்கு அதீத ஈர்ப்பு எற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு, மீண்டும் மதுரை திரும்பினார். விருப்பமும், வாழ்வும் அழைத்துச் செல்லும் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார். தனிப்பயிற்சிப் பள்ளியில் இவர் நடத்துகிறார் என்ற விளம்பரம் திரையரங்குகளில் வெளிவந்த காலம் அது. ஆனால், இவரோ மீளாத போதையில் மாட்டி கொண்டார். விதியின் கரங்களில் இவரது வாழ்வு ஒப்படைக்கப்பட்டது.

             1959ல் ஆனந்தா என்ற பெண்ணுடன் திருமணம். நான்கே மாதங்களில், வீட்டில் நடந்த விபத்தொன்றில் முதல் மனைவியைப் பறிகொடுக்கிறார் ஜி.நாகராஜன். 1962ல் நாகலெட்சுமி என்ற பள்ளி ஆசிரியரை மறுமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஆனந்தி, கண்ணன் என இரண்டு பிள்ளைகள். ஆனால் வாழ்வின் பிற்பகுதியில் , தனியாகவே சுற்றித் திரிந்தார். மனைவியும் , மகளும் விடுதி ஒன்றில் தங்கியிருக்க, மகன் கண்ணன் மாமா வீட்டில் தங்கியிருந்தான்.

            மெலிந்த தேகம், அழுக்கு வேட்டி, கிழிந்த ஜிப்பா, விரல்களுக்கிடையே கஞ்சா சுருட்டப்பட்ட சிகரெட் - இப்படிப்பட்ட நிலையில் தான், 1981 ஆம் ஆண்டு, எழுத்தாளர் சி.மோகன் உதவியுடன்,  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் ஜி.நாகராஜன்.     தான் சொல்லியிருந்தபடியே,  சாவை எதிர்கொள்ள தன்னை தயார் படுத்திக் கொண்டாரோ என்னவோ, “ ரொம்ப குளிருது, சிதையில் போய்ப் படுத்தால் தான் , இந்தக் குளிர் போகும்” என முதல் நாள் இரவு சொன்னவர், மறுநாள் காலையில் எழவில்லை.

    " வாழ்வின் முட்கள் மீது, நானே விழுந்தேன், இப்போது குருதியை இழந்து கொண்டிருக்கிறேன்" - என்ற ஷெல்லியின் வரிகளை, சாகும் முதல் நாள் இரவு சொல்லிக் கொண்டிருந்த  ஜி.நாகராஜன், 1981- பிப்ரவரி 19 ஆம் நாள் அதிகாலை , தானே ஆட்படுத்திக் கொண்ட துன்பச் சிலுவையிலிருந்து நிரந்தர விடுதலை பெற்றார்.

               மனைவிக்கும் , பிள்ளைகளுக்கும் தகவல் தரப்பட்டது. நெருங்கிய நண்பர்கள் வந்திருந்தனர். மொத்தத்தில்,  15க்கும் குறைவான மனிதர்கள் மட்டுமே வந்துசேர,   மதுரை தத்தனேரி மயானத்தில் இவரது உடல் எரியூட்டப்பட்டது. சாகாவரம் கொண்ட படைப்புகளை மட்டும், அவர் இங்கே விட்டுச் சென்றிருக்கிறார். ஆம், அவையெல்லாம்   'தன்னை இழந்து", அவர் எழுதிய படைப்புகள் அல்லவா ?.

                  விளிம்பு நிலை மனிதர்களின் ஒரு பிரிவான பரத்தையர் உலகம், அவர்களின் வாழ்வு, தேடி வரும் மனிதர்களின் மனநிலை இவற்றோடு, அவர்கள் அடைந்த அவமானம், பெற்ற நோய்கள், செய்த சின்னத்தனங்கள் என எல்லாவற்றையும் ஒளிவின்றி வெளிப்படுத்தினார் ஜி.நாகராஜன்.  ”ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள், ஏன் இதையெல்லாம் எழுதுகிறீர்கள் என்று மட்டும் கேட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்” என்று  சொன்ன  ஜி.நாகராஜனின் குரல், தமிழ்ப் படைப்புலகில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.     

சில இடங்களை ஆழ்ந்து பார்க்கலாம்;       சில தடங்களைக்  கூர்ந்து நோக்கலாம்;
மூழ்குதல் சரியாகுமா?
அறியா உலகினை அறிய நினைத்து, அரிய வாழ்வினை இழத்தல் என்பதுதான்  முறையாகுமா?

Friday, August 9, 2019

சர்வதேச பூர்வகுடிகள் தினம்



இனம் காப்போம் - சர்வதேச பூர்வகுடிகள் தினம்.

ஆகஸ்ட் 9... இன்று!

         சொந்த நிலத்தில் வாழ்ந்தாலும் , தமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் - பூர்வ குடி  மக்களைப் பேணவும், அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் உருவாக்கவும்  ’சர்வதேச பூர்வ குடிகள் தினம்’,  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

             1994 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கூடிய, ஐ.நா.சபை , பூர்வகுடிகளின் கலாச்சாரமும் , பண்பாடும் , அவர்களது பொருளாதார வளர்ச்சியும் பேணப்பட வேண்டும் என்பதைக் குறித்த  தனது  கவலையை வெளிப்படுத்தியது. 49/214 வது தீர்மானத்தின் படி,  இரண்டு  பத்து  ஆண்டுகளுக்கென சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு, இந்நாளில் ஆண்டு தோறும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

           இன்றைய தேதியில், உலகமெங்கும் 90 நாடுகளில் 370 மில்லியன் பூர்வகுடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் 7000 மொழிகளும், 5000 வகையான கலாச்சார வாழ்க்கை முறையும் காணப்படுகின்றன. இந்தியாவில் இவர்கள் 'பழங்குடி மக்கள்'  என அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 700 குழுக்களாக இருக்கும் இம்மக்களின் சிந்தனைகளையும், பண்பாட்டையும் பேணவேண்டியது நமது கடமையாகும்.   

            சொந்த நிலப்பகுதியில் வசித்தாலும்,  நாகரீக வாழ்வில் இணைந்தவர்களை பூர்வகுடிகள்   என அழைப்பதில்லை. மாறாக, பாரம்பரியச் செயல்பாடுகளை விட்டு விடாமல் , இன்றும் அதே மொழி, பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களே பூர்வ குடிகள் என ஐ.நா அமைப்பு வரையறை செய்துள்ளது.

         கடல் சாகசங்கள், நாடு கண்டுபிடிக்கும் வேட்கை, ஏகாதிபத்திய எண்ணம் இவைகளின் காரணமாக எத்தனை மனித இனங்களை நாம் இழந்திருக்கிறோம்?

          ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் இருக்கும் டாஸ்மேனியாவில் 1828 ஆம் ஆண்டு, ஆர்தர் என்னும் வெள்ளை இன  கவர்னர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அது, “கண்ணில் படும் எந்த ஒரு  கறுப்பின மனிதனையும், வெள்ளையர்கள் தங்கள்  விருப்பப்படி சுட்டுக் கொல்லலாம்”, என்பதாகும்..
            ஒரு கறுப்பனைக் கொன்றால் 3 பவுண்ட்,  குழந்தையைக் கொன்றால்  1 பவுண்ட் என பரிசுகளை  அறிவித்தான் ஆர்தர்.  Black Catching என்ற பெயரில் இது பொழுதுபோக்கு விளையாட்டாக மாறிப் போனது. துப்பாக்கியையே பார்த்திராத அப்பழங்குடிகள், ஓடி ஓடி ஒளிவதும், பின் அகப்பட்டுச் சாவதும் வாடிக்கையானது.   1869  ல் யாவரும் அழிக்கப்பட்டு , மூவர் மட்டுமே மிஞ்சினர். இருவர் எலும்பும், தோலுமாய் இறந்துவிட, அவர்களின் உடல் பாகங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக கூறு போடப்பட்டதை மூன்றாமவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆம்,   அந்த இனத்தின் எஞ்சிய  கடைசிப் பெண் 'ட்ரூகானினி' மட்டும் பதற்றத்தோடு மூலையில் முடங்கிக்கிடந்தாள். அடைத்து வைக்கப்பட்டிருந்த தனியறையில் ஏதேதோ பிதற்றினாள்.

            ஆஸ்திரேலியப் பழங்குடிவாசி ஒருவரைக் கொண்டு, அவள் என்ன பேசினாள் என்பதை அக்கறையோடு புரிந்து கொள்ள முயற்சி செய்தது வெள்ளைய அரசு.  ”எங்கள் மரபுப்படி, என் உடலை கடலில் வீசி எறிந்து விடுங்கள், என் உடலைப் பிய்த்துக் கூறு போட்டு விடாதீர்கள்”, என்ற அவளின் கடைசி  மன்றாடல் திமிரோடு மறுக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு, அவள் இறந்து போனாள். டாஸ்மேனியா மியூசியத்தில், ’டாஸ்மேனியாவின் கடைசி பழங்குடிப் பெண்’ என்ற வாசகத்தோடு அவளது  எலும்புகூடு வைக்கப்பட்டது. பிறகு,  1976ஆம் ஆண்டு தான், சமூக ஆர்வலர்களின் போராட்டம் காரணமாக, ட்ரூகானினியின் இறுதி ஆசை , சரியாக நூறாண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அவளது எலும்புகள் கடலில் வீசப்பட்டன. ஆதிக்க குணம் கொண்ட  மனிதர்களின்,  குரூர எண்ணத்திற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

    அமெரிக்க நீக்ரோக்கள் பட்ட துயரமும், இங்கா இன மக்கள் அடைந்த இன்னல்களும் நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் காலத்தில்,  நமது அண்டை தேசமான இலங்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்தப்பட்டதை நாம் எப்படி மறக்க முடியும்?.  எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை விதமான கலாச்சாரங்கள்.... மனிதனின் அதிகாரப் பசிக்கு வேடையாடப்பட்ட  நாகரீகங்கள்தான் எத்தனை.?

       இனியாவது,  பூர்வ குடிகளின் பண்பாட்டை அறிவோம், போற்றுவோம், காப்பாற்றுவோம்.
       
         மற்றொரு இனத்தை வேட்டையாடி, தன் பசியைப் போக்கிக்  கொள்ளும் மிருகங்கள்,   தன் இனத்தை ஒருபோதும் தானே அழிப்பதில்லை.   ஆனால்,  தன் இனத்தைத்  தானே அழிக்கும் அபூர்வ மிருகம் ஒன்றே ஒன்றுதான். அது  மனிதன் என்னும் அசிங்க மிருகம் தான்! 

          இன அழிப்பு செய்பவர்களை, வரலாறு ஒருபோதும் மறப்பதில்லை; மன்னிப்பதும் இல்லை.

Monday, August 5, 2019

மாப்பசான்



சிறுகதை மன்னன் - மாப்பசான்.

  "Our memory is a more perfect World than the Universe: It gives back life to those      who no longer exist."
                                                                                         - Guy de Maupassant.   

           தனது எழுத்துக்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் அற்புதக் கலைஞன்;    43 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், இலக்கிய உலகில் நிரந்தர இடம் பிடித்த, ஒரு மகா கலைஞன்; இறுதியில், பாரிஸ் நகரத்தின் மனநல மருத்துவமனை ஒன்றில், தற்கொலை செய்து கொண்ட பரிதாபக் கலைஞன்; அவர்தான், ‘நவீன  சிறுகதை உலகின் மன்னன்’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர்,கவிஞர் கை-டி- மாப்பசான் (1850-1893). அவரது  பிறந்த நாள் இன்று.
         ஹென்ரி ரெனே ஆல்பெர்ட் கை டி மாப்பசான், இதுதான் அவரது முழுப்பெயர். கஸ்டவ் மாப்பசான் மற்றும் லாரி லி பொய்டிவின் தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தவருக்கு, வாழ்நாள் முழுக்க சிக்கல்களும், அலைக்கழிப்புகளுமே காத்துக் கிடந்தன. 1850ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, பிரான்சு நாட்டின், துறைமுக நகரொன்றில் பிறந்த மாப்பசானின் இளமைப் பருவம், மிகவும் சிக்கலாகத்தான்  இருந்தது. . சில காலங்கள் மட்டுமே மகிழ்சியாய்க் கழிந்தன இவரது பொழுதுகள். கருத்து வேறுபாடு காரணமாக, பெற்றோர் மணமுறிவு பெற்ற போது, இவரது வாழ்வில் கசப்புகளின் காலம் தொடங்கியது. 
             தனது 11 ஆவது வயதிலிருந்து, மாப்பசான் - தாயின் வளர்ப்பிலேயே வளரத் தொடங்கினார். அவரது தாய், இலக்கிய ஆர்வம் மிக்க ஒரு நல்ல படிப்பாளி. ஷேக்‌ஷ்பியரின் எழுத்துக்களில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது மகனுக்கு, வேண்டியமட்டும் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். உலகெங்கும் இருந்த செவ்வியல் இலக்கியங்கள் யாவும், மாப்பசானுக்கு கற்றுத்தரப்பட்டன.  சொற்களஞ்சியமும், எழுதும் முறையும் இவருக்கு எளிதாய் வந்து சேர்ந்தன. 
                                  மாப்பசான்,  1867ஆம் ஆண்டு, உயர்நிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்குதான், எழுத்தாளர் கஸ்டவின் நட்பு இவருக்குக்  கிடைத்தது. பள்ளியின் சார்பில் நடைபெற்ற நாடகங்களில் மாப்பசான் தொடர்ந்து  பங்கு பெற்றார். அதன் வழியாக , கவிதைகள் மீது, இவருக்கு ஈடுபாடு வளரத் தொடங்கியது. அதுபோல,  கடற்கரை ஒன்றில் எதிர்பாராதவிதமாக, கடலில் மூழ்கி, தத்தளித்துக் கொண்டிருந்த, சார்லஸ் ஸ்வின்பர்ன் என்ற கவிஞரை, காப்பாற்றினார் மாப்பசான். இதன் வழியே, அவரது நிரந்தர அன்பையும்  பெற்றார். எழுத்துத் துறையில் காலடி வைக்கும் பாதையை இந்த நிகழ்வுகள்  யாவும்  எளிதாக்கின.   
                          மாப்பசான், 1869ல் , சட்டம் படிக்க முடிவு செய்து, கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இராணுவ வீரனாகும் ஆசை அவரைத் துரத்தியதால்,  இராணுவத்தில் இணைந்து கொண்டார். ப்ரஷ்யாவுக்கெதிரான போரில், ஆர்வமுடன் கலந்து கொண்டார். பின், 1872ல் அரசாங்க அலுவலக எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். குடும்ப நண்பர் கஸ்டவ், இவருக்கு எழுத்துத் துறையில் குருவாக இருந்து வழிநடத்தினார். இவரது தொடர்பின் மூலம், துர்கனேவ் போன்ற மிகப் பெரும் எழுத்தாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் மாப்பசான். இலக்கிய உரையாடல்களின் வழியே, தனது எழுத்தாற்றலை பட்டை தீட்டிக் கொண்டார். 
           சிறுகதைகளில், கதையை மட்டும் சொல்லிச் செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை, உளச்சிக்கல்கள், மீளும் தன்மை போன்றவற்றை தெளிவாக எழுதினார். இதன் மூலம் சிறுகதைகளின் கூறுமுறை மாறத் தொடங்கியது. சிறுகதைகளின் இந்த புதிய கூறு முறை, இவருக்கு, ’நவீனச் சிறுகதைகளின் தந்தை’ என்னும் பெயரைப் பெற்றுத் தந்தது.  போர்க்காலத்தில் பாதிக்கப்படும் சராசரி குடிமகனின் வேதனை, பெண்களின் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் என பல்வேறு தலைப்புகளில்  300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். மனித மனம் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல்களையும் நுட்பமாக எழுதிக் காட்டினார்.  ஒரு கட்டத்தில், ஆபாசப் பத்திரிக்கைகள் இவரது பெயரை மட்டும் அட்டையில் போட்டு , ஆபாசக் கதைகளை வெளியிட்டு, பணம் சம்பாதித்த  நிகழ்வும் நடந்தது. ஆனால், இவரது கதைகள் வெறும் பாலியல் கதைகள் மட்டும்  அல்ல. மாறாக, உளச்சிக்கல்களை, தெளிந்த நீரோடை போல் காட்டும் செவ்வியல் கதைகள் இவருடையவை. 

                            பெரும்பாலான இவரது கதைகள் Semi Autobiographical வகையைச் சார்ந்தது. Ball of Fat, The Necklace, Bell Ami போன்ற படைப்புகள், காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. மொத்தத்தில் இவரது அனைத்து கதைகளும் , பிரான்ஸில் மட்டுமல்ல, உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது கதைகளையும், கதை சொல்லும் முறைகளையும் உலக எழுத்தாளர்கள் பலரும் முன் மாதிரியாகக் கொண்டனர். ஓ ஹென்றி, சோமெர்செட் மாம், ஹெச்.ஜேம்ஸ் போன்ற பெரிய எழுத்தாளர்களும் இவரைப் போலவே எழுத முயற்சித்தனர். லியோ டால்ஸ்டாய் , மாப்பசானின் கதைகளையும், எழுத்தாற்றலையும் வெகுவாகப் பாராட்டி கட்டுரை எழுதினார். புகழின் உச்சிக்கே சென்றார் மாப்பசான். 
                     1880 ஆம் ஆண்டு, ஜிஸிலி எஸ்டாக் என்ற பெண்மணியைச் சந்தித்தார். அவளிடத்தில் ஆறு ஆண்டுகள் கழிந்தன. அதன்பிறகே, தனது காதல் மனைவியான, ஜோசபைனைச் சந்தித்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அன்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த மாப்பசானுக்கு, அழகான புதிய உலகம் ஒன்று கிடைத்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. மன அழுத்தமும், நோய்களும் அவரை மன நல மருத்துவமனையில் கொண்டு போய் படுக்க வைத்தது. 
               வாழ்வில் அவர் எதிர்கொண்ட மனக்கவலைகளும், குழப்பங்களுமே அவரை, தொடர்ந்து எழுத வைத்தன. அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடிந்த அவரால், மனச்சுமையை மட்டும் இறக்கி வைக்க முடியவில்லை.  நாம் செய்யும் எல்லாத் தவறுகளும், ஒரு கட்டத்தில் ஒன்று கூடி , நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. மாப்பசானின் உடல் மற்றும் சூழல் அவருக்கு எதிராக, உறுதியாகச் செயல்படத் தொடங்கியது. இளம் வயதில் இவரை பாதித்த ‘சிபிலிஸ்’( Syphilis- A kind of Sexually Transmitted disease) எனப்படும் ஒருவகை பால்வினை நோய், இவரை விடாமல் துரத்தியது.   கூடவே, மனச்சிதைவு காரணமாக மனமும் சமநிலையில் இருக்க மறுத்தது. துயரங்கள் எழுந்து நின்று, இவரை அமிழ்த்திய போதும் கூட,   வெள்ளைத்தாளில் கறுப்பு மை கொண்டு அவர் எழுத ஆரம்பித்து விட்டால், எழுத்துக் கடவுளாக மாறிவிடுவார். ஆம், அவரது எழுத்துத்திறன் மட்டும் கடைசி வரை குறையவே இல்லை. 
                     1892, ஜனவரி மாதத்தின் அதிகாலைப் பொழுதொன்றில், கூரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டார். உலகோடும், உறவுகளோடும்  அதுவரை  அவர் கொண்டிருந்த வாழ்வு, அவருக்குப் போதுமானதாக இருந்தது. இந்த முறை,  வெள்ளைத் தாளோடு பேசுவதற்குப் பதிலாக, மனதோடு பேசிக்கொண்டே, கழுத்தினை அறுக்கத் தொடங்கினார். மரணமும் அவருக்கு மனதுக்கு எதிராக வேலை செய்தது. மாப்பசான், அரை உயிரோடு காப்பற்றப்பட்டு, பாரிஸில் உள்ள ஒரு மன நல மருத்துவ  மையத்தில் சேர்க்கப்பட்டார். ஆம், அவர் உயிர் பிழைத்தார். ஆனால், மனநலம் மட்டும் மீண்டும் சரியாகவே இல்லை. சரியாக ஓராண்டு கழித்து, 1893ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி, தனது, 43 ஆம் வயதில், சிறுகதைகளின் மன்னன், தனித்த  அறையினுள் , ஓரிடத்தில் இறந்து கிடந்தார்.  சிறுகதை போலவே, அவரது சிறிய வாழ்வும் முடிந்து போனது, ஆனால், அழுத்தமாக. (இக்கட்டுரை எழுதும் இந்த நேரம்,  புதுமைப்பித்தன் நினைவில் வந்து வந்து போகிறார். )
                  தற்போது, பாரிஸ் நகரத்தில், மாண்ட்பார்னஸி கல்லறைத் தோட்டத்தின் 26ஆவது பிரிவில், குழப்பங்கள், மனச்சிக்கல்கள் ஏதுமின்றி இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் மாப்பசான். வாழ்க்கை என்பது என்னவென்று கேட்க, நாம் அவரை எழுப்பவேண்டியதில்லை. ஏனெனில் தனது கல்லறை வாசகத்தையே, கேள்விக்குப் பதிலாக தந்து விட்டுப் போயிருக்கிறார் மாப்பசான். அவர் விரும்பிச் சொன்னபடியேதான் , கல்லறை வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
             “I have coveted Everything and taken pleasure in Nothing".

                    ஒளியை விடவும் வேகமாய் நீள்கின்றன மனதின் ஆசைகள். அப்படி என்றால், வாழ்வெனும் கோப்பையை நிரப்புவதும், முழுதாய் சுகிப்பதும் இங்கே சாத்தியமாகுமா?
           ஆம்,  நடப்பவை யாவும் நடக்கட்டும் - எனக் கடந்து செல்லும் மனம் மட்டுமே -  கடைசி நொடி வரை இங்கே வாழ்கிறது.

Saturday, August 3, 2019

Dr.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்

மனதைத் தோண்டும் மருந்து- ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ்.


            பிரசவ காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், தனது உள்ளத்தின் அடியில் மறைந்து கிடக்கும் ரகசியங்களைப் பற்றி, தாராளமாகப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், அவர்கள் மறைக்கக் கூடியதான விஷயம், அப்போது ஏதும் இருப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை ஒரு மருத்துவர் ஆய்வு செய்யத் தொடங்கினார். வலி நிவாரணிகளாகக் கொடுக்கப்படும் மருந்துகள் தான், அவர்களது சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தி, உண்மையை மட்டுமே பேச வைக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

                  இதே மருந்துகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகளின் உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிய, பல்வேறு சோதனைகள் செய்தார். இறுதியில், குற்றவியல் வழக்குகளில், உண்மை கண்டறியும் மருந்துகளின் மூலம் , குற்றவாளிகளின் உள்ளத்தை அறிவதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். இதன் மூலம், குற்றவியல் புலன் விசாரணையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார் அந்த மருத்துவர். அவர் தான், Truth Serum என்று அழைக்கப்படும் உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை டாக்டர்.ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ் (1875-1930).

              "ஸ்கோபோலமின் ஹைட்ரோ ப்ரோமைட்" (Scopolamine hydrobromide) என்னும் மருந்தினை உட்செலுத்தி, மனம் மறைக்க நினைக்கும் செய்திகளை, வெளியே கொண்டு வர முடியும். மருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களால் பொய் சொல்ல முடியாது என்பதை உறுதி செய்தார் ராபர்ட் ஹவுஸ். தனது ஆய்வின் முடிவுகளை, 1922 ஆம் ஆண்டு கட்டுரையாக எழுதி வெளியிட்டார். நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, டெக்ஸாஸ் மாகாணச் சிறையில் , போலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் முன்னிலையில் இரண்டு கைதிகளிடம் இதனைப் பயன்படுத்தியும் காட்டினார். அந்த இரண்டு விசாரணைக் கைதிகளும், குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார். அவரது இத்தகைய செயல்பாடு, பலவிதமான சட்டவிவாதங்களையும் , மனித உரிமை சார்ந்த பேச்சுக்களையும் உருவாக்கியது. ஆதரவும், எதிர்ப்பும் சம பலத்தில் தோன்றி மறைந்தன.

                         1875ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஜான் ஃபோர்ட்-மேரி ஹவுஸ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ராபர்ட் எர்னெஸ்ட் ஹவுஸ். 1899ஆம் ஆண்டு, (மகப்பேறு) மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் முடித்தார். டெக்ஸாஸ் மாகாணத்திலேயே, மகப்பேறு மருத்துவராகப் பணி செய்யத் தொடங்கினார் ராபர்ட் ஹவுஸ். அப்போது, தொழில் மீதான அர்ப்பணிப்பு காரணமாக, மருத்துவ ஆய்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தார்.

              பிரசவ காலத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வலி மறக்கச் செய்யும் மருந்துகள் பற்றிய ஆய்வில் அவரது கவனம் திரும்பியது. வழக்கமாக பெண்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட, பிரசவ காலத்தில் , அவர்களாகவே சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டார். அதற்குக் காரணம், அப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் வலி நிவாரண மருந்துகள் தான் என்பதையும் விரைவிலேயே கண்டறிந்தார்.

                அதனையே மனிதனின் மனதில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியுமா என்பதில், கவனம் செலுத்தத் தொடங்கினார். அதனையே ஆய்வுகளாகச் செய்து நிரூபித்தும் காட்டினார். 1920களில் மட்டும் இந்தத் தலைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகளிடம் Scopolamine Hydrobrimide மருந்தினை உட்செலுத்தி, உண்மை கண்டறிய முயற்சி செய்தார். இதில், தனக்கு 100 சதவீதம் வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிவித்தார் ராபர்ட் ஹவுஸ்.

                         ஆனால், ஏனைய மருத்துவர்கள் இது 50 சதம் மட்டுமே நம்பக்கூடியதாக உள்ளது. ராபர்ட் ஹவுஸ் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி, இதனை உண்மையாக்க முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். இம்மருந்தினைச் செலுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றிய விவாதமும் தீவிரமாகப் பேசப்பட்டது. ஆனால், ராபர்ட் ஹவுஸ் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது ஆய்வுகளைச் செய்து கொண்டே வந்தார். அவருக்கு, பல நீதிமன்றங்களின் ஆதரவும் கிடைத்தது. இவரது ஆய்வினைக் கொண்டே, பல வழக்குகளில் தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.

                     ஆய்வுகளுக்காகவே தனது வாழ்நாள்களைச் செலவிட்டவர்களுள் இவரும் ஒருவர். உணவு மறந்து, தூக்கம் தொலைத்து ஆய்வுப் பணிகளிலேயே மூழ்கிக் கிடந்த ராபர்ட் ஹவுஸின் உடல் நிலை , வெகு சீக்கிரத்திலேயே கெட்டுப் போனது. 1929ஆம் ஆண்டு, பக்க வாத நோய் இவரைத் தாக்கியது. முடங்கிப் போனார். தனது 55வது வயதில், 1930 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 15ஆம் தேதி ராபர்ட ஹவுஸ் மறைந்தார்.

                    இன்று, உலகெங்கும் பல்வேறு நாடுகளில், Truth Serum என்ற பெயரில் வெவ்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. Pentothal, Sodium Thiopental என பல வகையான வேதிப்பொருட்கள் , சட்டத்திற்கு உட்பட்டும், சட்டம் அறியாத வகையிலும் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், Scopolamine Hydrobromide என்னும் வேதிப் பொருளைப் பயன்படுத்தி, குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவர் என்ற வகையில், டாக்டர். எர்னெஸ்ட் ஹவுஸ், ”உண்மை கண்டறியும் மருந்துகளின் தந்தை” என அழைக்கப்படுகிறார். அதன் காரணமாகவே, அறிவியல் உலகில், அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

                  அமெரிக்க நீதிமன்றங்களில் இந்த மருந்தினைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்குகள், இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த வழிமுறை சரியா - தவறா, இதன் வெற்றி சதவீதம் என்ன என்பதெல்லாம் முடிவுக்கு வரமுடியாத கேள்விகளாகவே எஞ்சி நிற்கின்றன. தற்போது, வேறு பல நோய்களுக்கு மருந்தாக, Scopolamine Hydrobromide மூலக்கூறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                        பொதுவாக, மனித குலத்துக்கு நன்மை தரும் எதனையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம்; அது, சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ள, ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைக்கூட பாதிக்காதவரை.! 
             மேலும், குற்றவாளிகளிடம் மட்டுமல்ல, எல்லா மனித மனங்களிலும் உண்மை புதைந்தே கிடக்கிறது. ஆனால், அதை வெளிக்கொண்டு வருவதுதான் , நமக்கு எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறது.

                     உண்மையில் சக மனிதன் ஒருவனின், மனதின் குரலை அறிந்து கொள்ள - ஏதேனும் வழி இருக்கிறதா? ஆம் எனில், அந்த வழி, என்னவாக இருக்கக் கூடும்?

              

Friday, August 2, 2019

பிங்கலி வெங்கையா


கொடியின் வடிவம் - பிங்கலி        வெங்கையா.   

           நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வேளாண்மை, தொழில் துறை என எல்லாத் தளங்களிலும் பங்காற்றியவர்; காந்தியடிகளின் பாராட்டைப் பெற்று,  இந்திய மூவண்ணக்கொடியை உருவாக்கியவர்; இன்று இந்திய தேசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்; அவர் தான்  பிங்கலி வெங்கையா (Pinkali Venkaiah, 1878-1963). அவரது  பிறந்த நாள் இன்று.  

                  பிங்கலி வெங்கையா, ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகில் உள்ள பெட்டகல்லேபள்ளி  என்னும் கிராமத்தில், ஹனுமந்தராவ்-வெங்கட ரத்னம்மா தம்பதியரின் மூத்த மகனாகப்  பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.  இவர் மட்டும் ,  தாத்தா சலபதி ராவின்  வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்.  அவர் கண்காணிப்பில்தான் பள்ளிப்படிப்பையும்  படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன்,  கொழும்பு சென்று பட்டம் படித்தார். பின்பு,  லாகூர் ஆங்லோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து, சமஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றார்.

                            பிங்கலி வெங்கையாவுக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவர் பன்முகத் திறன் பெற்றவராக இருந்தார்.    1913ஆம் ஆண்டு, குண்டூர் அருகில் உள்ள பப்பட்லா என்னும் ஊரில், ஜப்பானிய மொழியில், அவர் முழுமையான மேடைப்பேச்சு ஒன்றை நிகழ்த்தினார். தங்கு தடையின்றி இவர் பேசிய சொற்பொழிவு,  “ஜப்பான் வெங்கையா” என்னும் சிறப்பு அடைமொழியை அவருக்குப்  பெற்றுத் தந்தது.

               கொலம்பிய பருத்தி விதைகளில் சில மாற்றங்கள் செய்து , பருத்தி வளர்ப்பில் ஆர்வம் காட்டினார். இவரது உழைப்பின் வெற்றி,  'லண்டன் ராயல் வேளாண்மைக் கல்லூரியில்' இவர்  சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆதலால்,  இந்தியாவில் “பட்டி(பருத்தி) வெங்கையா “ என பெருமையோடு அழைக்கப்பட்டார்.

             சுதந்திரத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து மதிப்பு மிக்க கற்களை எடுக்கும் கலையில் நாட்களைச் செலவிட்டார். அரசும் இவரது அறிவை பயன்படுத்திக் கொண்டது. வைரக் கற்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பதைச் சொன்னார். அதனால்,  அந்த வட்டாரத்தில் “டைமண்ட் வெங்கையா” என்ற பெயர் பிரசித்தி பெற்றது. 

              இப்படி, பல சிறப்பு பெயர்கள் இருந்தாலும், நமது தேசியக் கொடியை வடிவமைத்ததால் கிடைத்த “ஜண்டா வெங்கையா” என்ற பெயரையே அவர் மிகவும்  விரும்பினார். 1921 ஆம் ஆண்டு, விஜயவாடா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இந்திய தேசியக் கொடியை அறிமுகம் செய்ய விரும்பினார் காந்தியடிகள். பிங்கலி வெங்கையாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அந்த ஒரே இரவில் கொடியின் அமைப்பைத் தயார் செய்தார். காந்தியடிகளின் விருப்பப்படி, அதில் வெள்ளை வண்ணம் இணைக்கப்பட்டது. அன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கொடிக்கான ஒப்புதலையும் காந்தியடிகள் பெற்றார். வெங்கையாவைப் பாராட்டி, தனது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றையும் எழுதினார் காந்தியடிகள். இதன் காரணமாகத்தான், இவருக்கு ‘ஜண்டா வெங்கையா’ என்னும் சிறப்புப் பெயர் கிடைத்தது.

      இந்திய தேசியக் கொடியை உருவாக்க பலரும் தனது பங்களிப்பை -  முயற்சிகளை செய்திருக்கிறார்கள். மேடம் காமா, அன்னி பெசண்ட் அம்மையார், பால கங்காதர திலகர் போன்றோர் தேசியக் கொடியை உருவாக்குவதில் பலவிதத்தில் பங்காற்றினார்கள். ஆனால் முழு வடிவம் கொடுத்தது பிங்கலி வெங்கையாதான்.
           1916 ஆம் ஆண்டில்,  "A National Flag for India" என்னும் புத்தகத்தை எழுதி, அதை காந்தியிடம் காட்டுகிறார். அதன் அடிப்படையில், காந்தி சில ஆலோசனைகளைச் சொல்ல, இந்தியாவுக்கான மூவண்ணக் கொடி தயாராகிறது. 1931ஆம் ஆண்டு, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து, பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவண்ணக் கொடியே ஏற்றப்பட்டு வந்தது.

          1947ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவன்று ஏற்றப்பட்ட,  தேசியக்  கொடியில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.  பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மூவண்ணக் கொடியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக  அசோகச் சக்கரம் வைக்கப்பட்டது. இதனை சுரையா (ICS அதிகாரி பத்தியார் தியாப்ஜியின் மனைவி) என்பவர் சரிசெய்து கொடுத்தார்.  இந்த மாற்றத்திற்கு,   நீண்ட யோசனைக்குப் பிறகே, தனது சம்மதத்தைத் தெரிவித்தார் காந்தியடிகள். இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு மிக நீண்டது; வெகு  சுவாரஸ்யமானது.  அதில் பிங்கலி வெங்கையாவின் பங்கு, எந்தவிதத்திலும் புறந்தள்ள முடியாதது.

        தேசியக்கொடியின் உருவாக்கம் பற்றிய வரலாறு, சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.   ’யங் இந்தியா’ பத்திரிக்கையில் இவரைப் பற்றியும் , தேசியக் கொடியை உருவாக்குவதில் இவரது உழைப்பைப் பற்றியும் காந்தியடிகள் விரிவாக எழுதிய கட்டுரை, எல்லா விவாதங்களுக்கும் பதிலாக உள்ளது. .                             

        பிங்கலி வெங்கையா தனது, 19ஆவது வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார். ஆப்பிரிக்கா சென்று போயர் போரில் கலந்து கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். ரயில்வே துறையில் சில காலம் பணியாற்றினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்தும் குழுவில் ஆய்வாளராக சில காலம் பணியாற்றினார். இப்படி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவரான பிங்கலி வெங்கையா,  1963 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி, மிகவும்  வறுமையான நிலையில் இறந்து போனார்.  காந்தியடிகள் மறைவுக்குப் பிறகு,   இந்திய தேசம் அவரை முழுவதுமாக மறந்திருந்தது. 

       விடுதலை பெற்ற இந்தியாவில் அவரைப் பற்றிச் சொன்ன  அதிகாரப்பூர்வமான சொற்கள் மிகவும் குறைவே. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தனது மேடைப் பேச்சில் ஒரு முறை அவரைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ், பிங்கலி வெங்கையாவிற்கு சிலை எடுத்தார்.  அவர் இறந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு , அவரது புகைப்படத்துடன் கூடிய தபால் தலை ஒன்று, 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. பாரத ரத்னா விருதிற்காக, பலமுறை  பரிந்துரை செய்யப்பட்டபோதும், எந்த மத்திய அரசும் இக்கோரிக்கைக்கு  இதுவரை பதில் சொல்லவில்லை.

                   ஆந்திர முதல்வராக இருந்த   என்.டி.ராமராவ்,  ஹுசைன் சாகர் ஏரிக்கரையில், 33 தலைவர்களுக்கு சிலைகள் நிறுவினார். அங்கே பிங்கலி வெங்கையாவிற்கும் சிலை ஒன்று வைக்கப்பட்டது. ஆனால்,  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது, ஏரிக்கரையில் இருந்த 17 சிலைகள் மர்ம நபர்களால்  அகற்றப்பட்டன. அதில் பிங்கலி வெங்கையாவின் சிலையும் ஒன்றாகும். இவர் தெலுங்கானா பகுதியைச் சாராதவர் என்பதே, சிலை அகற்றுவதற்கு , போதுமான காரணமாக மாறியது என்பது  வேதனைக்குரிய நிகழ்வல்லவா?

          "நான் வடிவம் கொடுத்த தேசியக் கொடியால் என் உடலைப் போர்த்தி, அக்கொடியை மரக்கிளையில் பறக்க விடுங்கள்" என்ற அவரது கடைசி ஆசை மட்டும், நண்பர்களால்  நிறைவேற்றப்பட்டது.  மரக்கிளையின் உச்சியில், காற்றில் பறந்த அந்த தேசியக் கொடியில்தான் அவரது ஆன்மா கலந்திருக்கும். ஆதலால், அடுத்த முறை நமது தேசியக் கொடி,  காற்றில் பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும்போது, பிங்கலி வெங்கையாவினை ஒரு வினாடி நினைவில் ஏந்துங்கள். அவரது தியாகங்களுக்கு உளப்பூர்வமாக  நன்றி சொல்லுங்கள். அது போதும், தேசியக் கொடிக்குள்ளே ஊடாடிக் கிடக்கும் அவர், நிச்சயம் சந்தோஷம் கொள்வார்.!  

      ஆம், தேசியக் கொடி என்பது,  வெளிச்சம் படாத  எண்ணற்ற தியாகிகளின் இரத்த நாளங்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அதனை வணங்குவது என்பது,   முகம் அறியாத எண்ணற்ற தியாகிகளை நாம் வணங்குவதற்கு ஒப்பாகும்.

விண்ணில் பறக்கிறது தேசியக்கொடி - காரணம் காற்றல்ல -
தியாகிகளின் மூச்சு!

Thursday, August 1, 2019

ஹெர்மன் மெல்வில்

திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில்

(இருநூறாவது பிறந்த நாள் இன்று! )

"It is better to fail in originality than to succeed in Imitation" - Herman Melville.

            
     'Call me Ishmael,' என்ற ஒரு நாவலின்  முதல் வரியை, ஆங்கில இலக்கியம் வாசித்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆம், 'மோபி டிக்' என்கிற அந்த நாவல், அழியாப் புகழை அணிந்து கொண்ட ஓர் அழகிய படைப்பு.!
    எழுத்துக்களின் வழியே வாழ்வின் முற்பகுதியில் பெரும் புகழ் பெற்றவர் , பிற்பகுதியில் மறக்கப்பட்டார்; அடுத்த நூற்றாண்டில் மீண்டும் இலக்கிய உலகத்தால் கொண்டாடப்பட்டார்; 'மோபி டிக்' என்னும், அந்த ஒற்றை  நாவல் வழியே, அவர் என்றென்றும் நினைவில் இருப்பார். அவர் தான் அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில் (1819-1891) .
              சரியாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,    அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1819 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ஆம் தேதி, ஹெர்மன் மெல்வில் பிறந்தார். தந்தை ஆலன் ஒரு வணிகர். ஆண்டின் பெரும்பகுதி நாள்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூரிலேயே, அவர் தங்க வேண்டியிருந்தது. தாய் மரியா மெல்வில் தான் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் நிர்வகித்து வந்தார். ஏழாவது வயதில், ஹெர்மன் மெல்வில்லை  விஷக் காய்ச்சல் ஒன்று தாக்கியது. அதன் காரணமாக, அவருக்கு நிரந்தர பார்வைத் திறன் குறைபாடு உண்டானது. வாழ்நாள் முழுவதும், அக்குறைபாடுடனேயே, அத்தனை சாதனைகளையும் செய்து காட்டினார்  மெல்வில்.
                    திடீரென்று நிகழ்ந்த  தந்தையின் மரணம் காரணமாக, 13 வயதிலேயே படிப்பை நிறுத்திக் கொள்ளும் துயரம் அவருக்கு  ஏற்பட்டது. வறுமை அவரது குடும்பத்தை விடாமல் துரத்தியது. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும் என்று காத்திருந்த தாயின் நம்பிக்கையும்  வீணானது. குடும்பத்தை நடத்துவதற்கே தாய் மரியா மிகவும் சிரமப்பட்டாள். அதனால்,  வேறு வழியின்றி, 1839ஆம் ஆண்டு, வியாபாரக் கப்பல் ஒன்றில்  மாலுமியாகச் சேர்ந்தார் ஹெர்மன் மெல்வில். பிறகுதான் திமிங்கல வேட்டையாடும் கப்பலில் (1840) இணைந்து கொண்டார்.
                இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கப்பல் பயணம். மனம் தளர்ந்தார் ஹெர்மன் மெல்வில்.  கடும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, பயணத்தின் இடையில்,  1842ஆம் ஆண்டு,  டைபி பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள  ஒரு தீவுப் பகுதியில்  கப்பலில் இருந்து தப்பினார். கப்பல் உரிமையாளர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க, சில காலம் அங்கேயே தங்கினார் மெல்வில்.  மனம் நிறைய காதலும், மூளை நிறைய அனுபவமும் பெற்ற மெல்வில், புத்துணர்ச்சியுடன்  மீண்டும் போஸ்டன் நகருக்குத்  திரும்பினார்.
                              டைபி பள்ளத்தாக்கில் ,  தான் பெற்ற அனுபவங்களை தனது முதல்  நாவலாக எழுதி வெளியிட்டார். அருமையான நடையில், மென்மையான காதலுணர்வோடு எழுதப்பட்ட  Typee (1845) என்ற அந்த நாவல் , வியாபார ரீதியிலும், விமர்சகர்கள் மத்தியிலும்  பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து , Omoo (1847) என்ற நாவலும்  வெளிவந்து, அதுவும்  பெரிய வெற்றி  பெற்றது. அந்நாளைய  மாபெரும் எழுத்தாளர், ’நாதேனியல் ஹாதோர்னின்’ நண்பரானார் மெல்வில். அவரது வீட்டுக்கு அருகிலேயே, இவரும் சென்று குடியேறினார்.    1850 ஆம் ஆண்டு இவர் எழுதிய,  White Jacket புத்தகம், அமெரிக்க கப்பற்படைஅதிகாரிகளின் வாழ்வை கடுமையாக விமர்சனம் செய்தது. இவரது எழுத்துக்கள் கவனிக்கப்பட்டன.
       அந்த காலக்கட்டத்தில்,  கடலின் அறிவிக்கப்படாத அரசனாக இருந்த திமிங்கலத்தை, வேட்டையாடுவது  என்பது கடலோடிகளின் முக்கிய சாகசச் செயலாக இருந்தது.  கப்பல்களை அழிக்கும் திமிங்கலங்களை வேட்டையாடுவது என்பது, பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. அதிலிருந்து தயாரிக்கப்படும் திமிங்கல எண்ணெய், மருந்தாகப் பயன்படுவதும் முக்கியக் காரணமாக இருந்தது.
                              1830களில், சிலி நாட்டுத் தீவுப் பகுதியில், ’மோச்சா டிக்’  என்னும் திமிங்கலம் அட்டகாசம் செய்து வந்தது. அதனைக் கொல்ல பல முற்சிகள் நடந்தன. அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன. மெல்விலும் கடலோடியாக இப்பயணத்தில் சென்றிருக்கிறார். அவரது கடல் பயண அனுபவங்களையும் கற்பனையையும் சரியாகக் கலந்து உருவான நாவல் தான் “மோபி டிக்”. இது, தமிழில்  'திமிங்கல வேட்டை' என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      குறியீடுகளையும் அடையாளங்களையும் கொண்டிருந்த இந்த நாவல், நிறுவனமயமான கிறிஸ்துவத்திற்கு எதிரான மெல்விலின் குரல் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று உலகமே கொண்டாடும் நாவல் மோபி டிக். ஆனால், இது  1851 ல் வெளிவந்த போது, வியாபார வெற்றியும் பெறவில்லை; விமர்சகர்களின்  ஆதரவையும் பெறவில்லை. 
               அதன் பின்னர் வெளிவந்த நூல்கள் ,கட்டுரைகள், கவிதைகள், அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் என எதுவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மோபி டிக் நாவலுக்குப் பிறகு,  18000 வரிகளுக்கும் அதிகமான வரிகள் கொண்ட கவிதை நூல்களையும் மெல்வில் எழுதி  வெளியிட்டார். அவை யாவும் ஏதேதோ அரசியல் காரணங்களுக்காகப் புறந்தள்ளப்பட்டன. மெல்வில்லின்  புகழும், வருமானமும் குறையத் தொடங்கியது. வேறு வழியின்றி, இறுதியில், சொந்தமாக பண்ணை வாங்கி, விவசாயம் செய்யத் தொடங்கினார் ஹெர்மன் மெல்வில்.
                                       இவரது மனைவி பெயர் எலிசபெத் ஷா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளோடு கவிதைகள் பற்றி பேசிக் கொண்டே இருப்பார் மெல்வில்.  ஒருமுறை, அதிகாலை இரண்டு மணிக்கு, தனது மகளை எழுப்பி, ஒரு கவிதையைத் திருத்தி, எழுதித் தரச் சொன்னாராம்.  இப்படி எழுத்தையே தனது உயிராகக் கொண்ட மெல்வில்,  1891 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி, மன அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால்  இறந்து போனார். அப்போது ’பில்லி பட்’ (Billy Budd) என்னும் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். அந்நாவல் அவரது இறப்புக்குப் பின்னர் தான் வெளியிடப்பட்டது. அது மாபெரும் வெற்றியையும்  பெற்றது. ஆனால் இறப்பின் போது, வறுமையைத் தவிர அவரிடம் ஏதும் இருக்கவில்லை. புகழ், செல்வம் இரண்டும் அவரை விட்டு நீங்கியிருந்தன. 
                       காலங்கள் கடந்தன.    1919 ஆம் ஆண்டு, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அவரது படைப்புகள் மீண்டும் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டன. ’மோபி டிக்’ உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று என ஒட்டுமொத்த இலக்கிய உலகமும், அவரை  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அதன் புகழ் வெளிச்சம்  இன்றளவும் பிரகாசமாகவே இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வரியும் எழுத்தின் வலிமையையும் மெல்விலின் திறமையையும்  சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
    ”என்னை இஸ்மாயில் என்றே அழையுங்கள்....”, என்னும் முதல் வரி மிகவும் பிரசித்தி பெற்றது. மோபி டிக் நாவல், கடலில் திமிங்கலத்துடனான போராட்டத்தை மட்டும் சொல்லவில்லை. மாறாக, மனித மனத்தின் அகச் சிக்கல்களையும், வாழ்க்கைப்  , போராட்டத்தையும் பற்றிப் பேசுகிறது. நாவலில் வரும் கேப்டன் ஆகாப் தான் நாமெல்லாம். ஆம், அடிபட்ட புலி போல, நாம் ஏதோ ஒன்றுக்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.
            மோபி டிக் நாவலில் ஒரு வரி வரும் - ‘எந்த ஒரு மனிதனின் வாழ்வும் சாவும் அவனது மனதில் தான் உள்ளது’. அப்படி எனில்,  மெல்விலின் வாழ்வும் முடிவற்றது. ஏனெனில் அவரது மனம்தான் மோபி டிக். ஆதலால், ’மோபி டிக்’, ஹெர்மன் மெல்வில் -  இந்த இரண்டு சொற்களுக்கும் , இந்த உலகில்  மரணம் என்பதே கிடையாது.
                     ஆம், கடல் எழுப்பும் ஓயாத ஒலியைப் போல, எழுத்தாளனும் தன் படைப்புகளின் வழியே - தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். படைப்பாளிக்கும், அவனது படைப்புக்கும் இங்கே  மரணம் என்பது கிடையாது!
               

Wednesday, July 31, 2019

செய்குத்தம்பி பாவலர்


மகாமதி சதாவதானி - செய்குத் தம்பி பாவலர்.



ஒருமவ தானம் ஒருநூறு செய்திந்துப்
பாரில் பகழ்படைத்தப் பண்டிதனைச் -               சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச்         செய்குத்தம்பிப் பாவலனை 
எந்நாள் காண்போம் இனி.’ 
       
     - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. (பாவலர் மறைவின் போது பாடியது)

   “சிரமா றுடையான் செழுமா வடியைத்
   திரமா நினைவார் சிரமே பணிவார்
   பரமா தரவா பருகா ருருகார்
   வரமா தவமே மலிவார் பொலிவார்”
                             -செய்குத்தம்பி பாவலர்.

           ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நூறு நிகழ்வுகளைக் கவனித்து, அவை தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கும் அவதானக்கலை  நாயகன் சதாவதானி செய்குத்தம்பி  பாவலர் பிறந்த நாள்(1874-1950) இன்று.

                        நாஞ்சில் நாடு, இடலாக்குடியில் (நாகர்கோயில்- கன்னியாகுமரி மாவட்டம்)  தமிழ்ப் பெருங்கடல் செய்குத்தம்பி பாவலர்  1874 ஆம் ஆண்டு, ஜூலை 31 ஆம் நாள் பிறந்தார். பக்கீர் மீரான் சாகிபிற்கும், அமீனா அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகவும், முத்தமிழ்த் தாயின் முக்கிய மகனாகவும் பிறந்த செய்குத்தம்பி,    இயல்பிலேயே கூர்ந்த மதியும், ஆர்வமும் உடையவராக இருந்தார்.  தனது எட்டு வயது வரை அரபு மொழியை வீட்டிலேயே கற்றுத் தேர்ந்தார்.  அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த அப்பகுதியில்,  மலையாளப் பள்ளிகளே அதிகம் இருந்தன. அங்கே, முதல் வகுப்பில் சேர்ந்தார் செய்குத் தம்பி. இவரது அபார அறிவாற்றல் காரணமாக, முதல் வகுப்பு முடிந்தவுடன்,  நான்கு வகுப்புகள் தாண்டி, இவரை ஐந்தாம் வகுப்பிற்கு முன்னுக்கு  அனுப்பியது பள்ளி நிர்வாகம். ஆனால், வறுமை இவரை பின்னுக்குத் தள்ளியது.  பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது.

              தமிழ் இலக்கண,  இலக்கிய நூல்களையெல்லாம் கற்று, தமிழ்ப்பசி ஆற்றிட வேண்டும் என்ற தணியாத வேட்கை இவருக்குள் கனன்று கொண்டே இருந்தது.   இவரை ஆற்றுப்படுத்த, பொருத்தமான ஒரு ஆசிரியர் , மிகச்சரியாக வந்து சேர்ந்தார்.  ஆம்,          கோட்டாறு சங்கர நாராயண அண்ணாவி என்ற தமிழ்ப் பெரும் புலவனிடம்  தமிழின் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் செய்குத் தம்பிப் பாவலர். ஊதியம் ஏதும் பெறாமல் தமிழ் ஓதிய அண்ணாவியாரின் ஊக்கத்தால், தனது 16வது வயதில் இரு அந்தாதிகளை எழுதி,  அச்சிட்டு வெளியிட்டார் செய்குத்தம்பி பாவலர்.  பாவலரின் தமிழ் ஞானம் விசாலமாகிக் கொண்டே சென்றது.  

         குறிப்பாக, இவர்  கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார்.   அந்தச்  சூழலில் தான்,  ’மெய்ஞானியார் பாடல் திரட்டு’ என்னும் நூலைப் பதிப்பிப்பதில் , பார்த்தசாரதி நாயுடுவுக்கு   தமிழறிந்த இஸ்லாமியர் ஒருவர் தேவைப்பட்டது.  செய்குத்தம்பி பாவலர் பொருத்தமாக அங்கு  வந்து  சேர்ந்தார். பணி செய்ய சென்னை கிளம்பினார் பாவலர்.  பின்பு, சென்னையிலேயே மாதம் ரூ.60 சம்பளத்தில், ஸ்ரீ பத்மவிலாச பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21.

        பாவலர் சென்னையில் இருந்தபோது, வள்ளலாரின் 'அருட்பா' மீது பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அது ஒரு 'மருட்பா' என எதிர்த்தரப்பினர் வாதம் செய்து வந்தனர். பாவலர் அருட்பாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். திருவருட்பாவின் பெருமைகளை மேடை தோறும் பெருமைப்படுத்தினார். இதனால் மனம் மகிழ்ந்த காஞ்சிபுரத்துத் தமிழறிஞர்கள் , பாவலரை யானை மீது அமர வைத்து, ஊர்வலம் நடத்தினர். பூரண கும்ப மரியாதையும் செய்தனர். ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்னும் பட்டத்தையும் வழங்கினர்.                                      
    
          அவதானக் கலை என்பது மாயாஜாலம் போன்ற மோசடி என்னும் எண்ணம் கொண்டிருந்த செய்குத்தம்பி பாவலர், ஓர் நாள் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்டப்பத்திரிக்கை என்னும் அவதானத்தை செய்து  காட்டினார் கல்யாண சுந்தரம். எண் பிறழச் சொல்லப்படும் செய்யுள் எழுத்துக்களின் எண்ணையும், எழுத்தையும் நினைவில் நிறுத்தி, முடிவில் முழுச் செய்யுளையும் நேர்படச் சொல்வதுதான் கண்டப்பத்திரிக்கை. இதனை கண்டவுடன் செய்குத்தம்பி பாவலருக்கும் அவதானக்கலையில் ஆர்வம் பிறந்தது. அஷ்டாவதானமும் சோடச அவதானமும்  செய்து பழகி, தான் பிறந்த இடலாக்குடி மண்ணில் சாதித்தும் காட்டினார்.
                         மகாவித்துவான் ராமசாமி நாயுடுவின் ஆலோசனையின் பேரில், நூறு செயல்களை அவதானிக்கும் சதாவதானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. ஒரு பொருள் குறித்த உரை, கண்டப்பத்திரிக்கை, கண்டத்தொகை, இலக்கண வினா, இலக்கிய வினா, நீர்ச் சுவை கூறுதல், கிழமை கூறுதல், ஓசை எண்ணுதல், முதுகில் விழும் நெல்மணி, பூக்கள் எண்ணுதல் , இறைநாமம் உச்சரித்தல், கைவேலை, சதுரங்கம், பாவகை கூறுதல் , ராகம் கூறுதல், வெண்பா புனைதல்...என நூறு வகையான செயல்களை ஒரே நேரத்தில் கவனிக்கும் கவனகக்கலையில் தேர்ச்சி கண்டார். தனது 33 ஆம் வயதில்,  10.03.1907, சென்னை விக்டோரியா அரங்கத்தில், தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய  ஐயர் தலைமையில்,   கா.நமச்சிவாய முதலியார், டி.கே.சிதம்பர முதலியார், திரு.வி.க, இந்து ஆசிரியர் ஜி.சுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வினை வெற்றிகரமாக செய்து காட்டினார்.  அந்த மேடையில் தான், “மகாமதி சதாவதானி” என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

                                         சதாவதானியாக மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. யதார்த்தவாதி, இஸ்லாமியமித்திரன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, வெண்பாக்கள் மாலை என எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்தார். சீறாப்புராணத்திற்கு சீரிய உரை எழுதி, அழியாச் சிறப்பு பெற்றார். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த பாவலர், எல்லாத் தலைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். விடுதலைப் போராட்டத்திலும்  ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.       

      ‘கைத்தறி அணிந்தால் மணமகன்;
      மில் துணி அணிந்தால் பிணமகன்;
      நீ மணமகனா- பிணமகனா?”                 
              என திருமண மேடைகளில் கூட, அந்நிய நாட்டுத் துணிகளுக்கெதிராக துணிந்து பேசினார். தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். உடல் நலிவுற்ற வேளையிலும், 1950ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலும் தமிழே இவருக்குச் சுவாசமாக இருந்தது. இவருக்குப் பிறகு, சதாவதானம் செய்கிற  கலைஞர்கள் இப்போது வரை இல்லை.  இப்போதும்,  கவனகம் நிகழ்த்தி வரும்  கலைஞர்களை இந்த சமூகம் கவனத்தில் கொள்வதே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 

                         ’சிரமாறுடையான்..’ என்று ஐம்பொருள் சிலேடையில் கடவுள் வாழ்த்து பாடிய செய்குத்தம்பி பாவலர்  வாழ்ந்த தெரு- 'பாவலர் தெரு'.  பள்ளி- 'செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி' எனப்  பெயரிட்டு இவர் பெருமைப்படுத்தப்பட்டார்.  இடலாக்குடியில் இவரது பெயரில் எம்.ஜி.ஆர். அவர்களால் மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டது.  கலைஞர்  அவர்களால் இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவை மட்டும் தான், கலைக்கு நாம்   கொடுக்கும்  முக்கியத்துவம் என்றால் நாம் தேங்கி விட்டோம் என்றே பொருள்படும். கலையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

          ஐந்திரம் அறிந்த தொல்காப்பியர் அவதானக் கலையில் சிறந்து விளங்கினார் என்னும் குறிப்பு உள்ளது. தொடர்ந்து, காளமேகப் புலவர், ஆறுமுகம் பிள்ளை, இலக்கிய வீதி திருக்குறள் ராமையா, அவரது மகன் கனக சுப்புரத்தினம் என இக்கலையின் நீட்சி இருந்தாலும் அது சுருங்கிக் கொண்டே வருவது தெரிகிறது. தற்போது நண்பர்  திருமூலநாதன் (Thirumulanathan Dhayaparan)   , பிரதீபா, திலீபன், முனைவர் செழியன் போன்ற சிலரே கவன்கக் கலையை நிகழ்த்தி வருகின்றனர். இந்தக்  கலையின் வரலாறும், கவனகர்களின் வாழ்க்கையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இனியாவது,  சான்றோர் சபைகளும், அரசும் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 

                   கவனகரின் பிறந்த நாளில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. 

பாரம்பரியக்  கலைகளை  மறப்பது,  இழப்பது;  
இனம், மொழி இரண்டினையும் துறப்பது, அழிப்பது;
           - இவை இரண்டுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை, ஒன்றுதான்.
ஆதலால்,
கலைகள் காப்போம்.