Tuesday, August 21, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 21

மானுடக் காதலன் - ப. ஜீவானந்தம்.

ஆகஸ்ட் 21....இன்று!

           காலுக்குச் செருப்புமில்லை,
           கால்வயிற்றுக்குக் கூழுமில்லை,
           பாழுக்கு உழைத்தோமடா-
           என் தோழனே..
           பசையற்றுப் போனோமடா!

    தாய்க்குத் தலை மகன் இவர்.  தாயின் சிதைக்குத் தீ மூட்டும் வேளையில், மல் துணியை அணிய மறுத்து, கைத்தறி துணிதான் வேண்டும் என்று உறுதியுடன் நின்றவரும் இவர். தேசத்தின் மீதும் , மானுடத்தின் மீதும்  அழியாத காதலைக் கொண்டிருந்த பாரதத் தாயின் தவப்புதல்வனும் இவரே.  தோழர் ப.ஜீவானந்தம் ( 1907-1963) பிறந்த நாள் இன்று.
        நாகர்கோவில் அருகிலுள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில், 1907  ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்த ஜீவானந்தத்தின் இயற்பெயர் சொரிமுத்து என்ற மூக்காண்டி என்பதாகும். பட்டன்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் மகனாகப் பிறந்த இவர் ,இளம் வயதிலிருந்தே  காந்தியின் கருத்துக்களாலும், பாரதியின் கவிதைகளாலும் கவரப்பட்டார். சுதந்திரப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
           இவர்  நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்லும் நேர்மையாளர். காந்தியோடு தனக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைக் கடிதமாக வடித்து, காந்திக்கே  அனுப்பி வைத்தார். ஒருமுறை,  காரைக்குடியில்  மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்கியிருந்த காந்தியடிகள், தான் வைத்திருந்த கடிதத்தைக் காட்டி, இவரைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னார். சிவகங்கை அருகில் உள்ள சிராவயல் என்னும் ஊரில், 25 வயதுகூட நிரம்பாத  ஜீவாவால் நடத்தப்படும் ‘ காந்தி ஆசிரமத்திற்கு’ , மகாத்மாவே நேரில் வந்தார். ஜீவாவிற்கும், காந்தியடிகளுக்கும் இடையே வர்ணாசிரமம் பற்றி, ஆரோக்கியமான விவாதம் எழுந்தது. கிளம்பும்போது,  ’ஜீவானந்தம் இந்த தேசத்தின் சொத்து’ என மகாத்மாவின் குரல் உரக்கச் சொன்னது.
                         1935ல் திருத்துறைப்பூண்டி கூட்டத்தில் பெரியாரோடு கருத்து மாறுபாடு கொண்டு, அவ்வியக்கத்திலிருந்தும் வெளியேறினார். ஆனால், வ.உ.சி., ராஜாஜி, பெரியார், அண்ணாத்துரை, சத்தியமூர்த்தி, காமராஜர் என  கட்சி வேறுபாடின்றி எல்லாத் தலைவர்களோடும் நட்பு பாராட்டினார். மதுரை ஆலய தொழிலாளர் நலச் சங்கத்தில் தலைவராக இருந்த முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்ட போது, அவர் விடுதலைக்காகத் தானே முன்னின்று போராடியவர் ஜீவானந்தம். 
            காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, பெரியாரின்  சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதற்கும், பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைக் கரைத்துக் கொண்டதற்கும் காரணம்  அவரது சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு. ஏழை-பணக்காரன், முதலாளி- தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.
            லாலா லஜபதி ராயின் மரணமும், மீரட் சதி வழக்கின் தீர்ப்பும் இவருக்குள் கனன்று கொண்டிருந்த சோஷலிச நெருப்புனை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. சுதந்திரப் போராட்ட மேடைகளில் எரிமலையெனப் பொங்கினார்.  மேடைகளில் பேசுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டது.   பகத் சிங் எழுதிய  ”நான் ஏன் நாத்திகனானேன்?”  புத்தகத்தை தமிழாக்கம் செய்து வெளியிட்டார். கோட்டையூரில் தடையை மீறிப் பேசினார். விளைவு - கட்டி இழுத்துச் சென்று, இவரை  திருச்சி சிறையில்  அடைத்தது ஆங்கிலேய அரசு.
          தனது வாழ்நாளில் சுமார் பத்து ஆண்டுகள் சிறைகளில் கழித்த ஜீவானந்தம், எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார். 1938ல் அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஏனைய தலைவர்களை விட  அதிக வாக்குகள் பெற்றது  பலரின் புருவங்களையும் உயர்த்தியது.  1946 ல் கம்யூனிஸ்ட் கட்சி  இரண்டாம் முறையாகத் தடை செய்யப்பட்ட போது, சில காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். விடுதலைக்குப்பின் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கினார் ஜீவா.
            1952ஆம் ஆண்டு, வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் (1957&1962), மக்கள் அவருக்குத்  தோல்வியைத் தந்தாலும்  மக்கள் நலனை மட்டுமே அவரது மனம் எண்ணிக் கொண்டிருந்தது.  ’எல்லா மக்களுக்கும் கிடைப்பதுதானே சமதர்மம், எனக்கு மட்டும் தர வேண்டாம் ‘ , என தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை மறுத்து விட்டு, சேரியிலேயே கடைசி வரை வாழ்ந்தவர்தான் ஜீவா.
            அரசியல் மேடைகளில் மட்டும் அல்ல, இலக்கிய மேடைகளிலும் இவரது சிம்மக்குரல் பலமாக ஒலித்தது. சமதர்ம அரசியலும், இலக்கியமுமே அவரது இரு கண்கள். புகழ்பெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தில் இவர் ஆற்றிய உரை, ஜீவாவின் இலக்கிய ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியங்கள், நிலக் காட்சிகள்,  மதம், கம்யூனிசம், வரலாறு என பரந்துபட்ட தலைப்புகளில் மாநிலமெங்கும் உரையாற்றினார். அவரது பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வந்துள்ளன. அதேபோல,  அவரது 122 கவிதைகளும் சேர்த்து, தனி கவிதை நூலாக வெளிவந்துள்ளது. சட்டமன்றத்தில் இவர் ஆற்றிய உரைகள்,  கவிஞர் ஜீவபாரதி அவர்களால் தொகுக்கப்பட்டு, “சட்டப்பேரவையில் ஜீவா” என்னும் தலைப்பில்  புத்தமாக வெளியிடப்பட்டுள்ளது.
              ரவீந்திரநாத் தாகூரின் ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பை , ஜீவானந்தம் தான், முதன் முதலில் தமிழாக்கம் செய்தார். ’தாமரை’ என்ற இலக்கிய இதழையும், மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத்தையும் ஆரம்பித்த இவர், ‘ஜனசக்தி’ நாளிதழ் வெளிவருவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
          என்.எஸ்.கிருஷ்ணனோடு நெருங்கிய நட்பில் இருந்த ஜீவா, நாடகங்களும் எழுதியுள்ளார்.   ’ஞானபாஸ்கரன்’  - என்ற நாடகத்தை எழுதிய ஜீவா,   முக்கிய கதாபாத்திரத்தில்  அவரே நடித்தார்.
               முதல் மனைவி   கண்ணம்மா அவர்கள் இறந்துவிட, 1948ல் பத்மாவதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டுமே கலப்புத் திருமணங்கள். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய ஜீவா, சாதி-மதமற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். இவர்,  தனது கொள்கைகளின் படியே, தனது வாழ்வையும் அமைத்துக் கொண்டார்.
        ஜீவானந்தம் என்றும், உயிர் இன்பன் என்றும் தனக்குத் தானே பெயர் சூட்டிக் கொண்ட ஜீவா, 1963- ஜனவர் 18 அன்று, உயிர் பிரியும் வேளையில், ’மனைவி பத்மாவிற்கு தந்தி அடியுங்கள், காமராஜரிடம் சொல்லி விடுங்கள்’ என்ற சொற்களை கடைசியாக உதிர்த்து விட்டு மரணத்தைத் தழுவினார்.
     கட்சிப் பணத்திலிருந்து, தேநீர் செலவுக்குக் கூட பணத்தைத் தொடாத அரசியல் நேர்மையாளர்; மாற்றுத் துணி இல்லாமல் ஒற்றை வேட்டியோடு வாழ்ந்த போதும் சீர்மை குறையாதவர்; மரணிக்கும் நொடி வரை , மக்கள் நலனையே சிந்தித்த மானுடக் காதலன் - ஜீவாவிற்கு என்றும் மரணமில்லை.

 ஏனெனில்,           
        இறுதி மூச்சு உள்ளவரை, கொள்கைகளில் சமரசம் செய்யாத வீரர்களை ,  வரலாறு வாரி அணைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு கால எல்லைகள் கிடையாது!
               
         

No comments:

Post a Comment