Thursday, August 16, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 16

மனமெல்லாம் தமிழ் - அ.மாதவையா.

ஆகஸ்ட் 16... இன்று!

                 1925 -  அக்டோபர் 22ஆம் தேதி, மாலை 3.40 மணி -  சென்னைப் பல்கலக்கழகத்தின் செனட் கூட்டத்தில், எல்லா இளநிலை பட்டப் படிப்புகளுக்கும்  தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று வீர உரை ஆற்றிவிட்டு, மேடையிலேயே  உயிர் துறந்த  அ.மாதவையா (1872-1925)  பிறந்த தினம் இன்று. 
                      தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த, பெருங்குளம் என்னும் சிற்றூரில் அப்பாவையன் (எ) அனந்த நாராயணன் - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு, 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 , இதே நாளில் தான் மாதவையா பிறந்தார்.  தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும், தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்தார். 
                திருநெல்வேலி இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை சிறப்பாக முடித்தார். பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.  அதன் பயனாக, 1892 ஆம் ஆண்டு அதே கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்  கவிதை புனையும் ஆற்றல் கொண்டிருந்த மாதவையாவின் கவிதைகள் கல்லூரி மலரில் தொடர்ந்து வெளிவந்தன.
          குல மரபு நிர்பந்தத்தால்,  தனது 15 ஆவது வயதில், மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் செய்த மாதவையா, பின்னாட்களில் குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். விதவைத் திருமணத்தை வெகுவாக ஆதரித்தார்.   புரட்சிகரமான கருத்துக்களை தனது படைப்புகளிலும் சிறந்த முறையில் வெளிப்படுத்தினார்.
     இவரது நண்பர் சி.வி.சாமிநாத ஐயர் நடத்திய, ''விவேக சிந்தாமணி' பத்திரிகையில் 'சாவித்திரி கதை' என்ற தொடரை எழுதி வந்தார். 1903ஆம் ஆண்டு,  இதன் முழுமையான நாவல் வடிவம் ”முத்து மீனாட்சி” என்ற பெயரில் வெளியானது. 1898-99 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ”பத்மாவதி சரித்திரம் “ மிகவும் புகழ் பெற்றது. மூன்றாம் பாகத்தை 1924 ல் தொடங்கினார். ஆனால் அதை நிறைவு செய்யவில்லை. தமிழின் முதல் புதினம் “பிரதாப முதலியார் சரித்திரம்”(1879), இரண்டாம் புதினம் “கமலாம்பாள் சரித்திரம்” (1896) - நகைச்சுவை உணர்வும், சமூகக் கருத்துக்களும் கொண்ட இவரது பத்மாவதி சரித்திரம் தான், தமிழில் வெளிவந்த மூன்றாவது  நாவலாகும்.
                தில்லை கோவிந்தன்(1903), சத்யானந்தா(1909), கிளாரிந்தா(1915) போன்ற புகழ் பெற்ற ஆங்கில நாவல்களையும் எழுதினார். 1924ல் வெளிவந்த “குசிகர் குட்டிக் கதைகள்”  பெரும் வரவேற்பு பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள ஏணியேற்ற நிலையம், குதிரைக்கார குப்பன், திரொளபதி கனவு போன்ற கதைகள் இன்றும் ரசனைக்குரியவை.
     சிறுகதையின் துவக்கத்தை அற்புதமாக அமைப்பதில் மாதவய்யா திறம் பெற்றவர்.
      “நான் குழந்தையாய் இருந்தபோது, பல்லக்கு ஏறி ஊர்வலம் போனதும், மறுநாள்,  என்னுடன் பல்லக்கில் வந்த பையனை பாடையில் தூக்கிச் சென்றதும் ஞாபகம் இருப்பதால் , நான் பிறக்கும்போதே கைம்பெண்ணாகப் பிறக்கவில்லை என்றே நம்புகிறேன்” (திரொளபதி கனவு) . தமிழின் மீதுள்ள காதலால் , தனது வேலையை உதறிவிட்டு, “பஞ்சாமிர்தம் “ என்னும் பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்தினார்.
           பலவகையான தலைப்புகளில் எண்ணற்ற நூல்களைச்  சேமித்து வைத்திருந்தார்.  அதில் மருத்துவ நூல்களும் அடக்கம். மேலும், முதலுதவிப் பெட்டியை எப்போதும் கையில் வைத்திருக்கும் பழக்கமும்  மாதவய்யாவுக்கு உண்டு. ஆரம்பத்தில் சில காலம்,  உப்பு ஆய்வாளராகப் பணியாற்றிய மாதவய்யா, குதிரைச் சவாரி செய்வதிலும் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
             1914ல், "இந்தியக் கும்மி" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் "செந்தமிழ் நாடெனும் போதினிலே..", பாடல் எழுதி இரண்டாம் பரிசு பெற்றார் மகாகவி பாரதியார். அந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் தான் அ.மாதவய்யா.

       நினைவில் நிற்கும் வரலாறு  என்பது, எப்போதும் தட்டையானது. விடுபட்ட  முகங்களையும், கோணங்களையும் நாம் தான் முயன்று அறிய வேண்டும்.

          

No comments:

Post a Comment