Wednesday, August 22, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 22

எழுத்தே சுவாசம் - ரே பிராட்பரி

ஆகஸ்ட் 22 ....இன்று!

          எதிர்காலத்தில் அமெரிக்காவில் நடப்பதாக ஒரு கற்பனைக் கதை. அங்கே புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. புத்தகம் படிப்பது தேச துரோகமாக அறிவிக்கப்படுகிறது.  புத்தகம் படிப்பவர்கள் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். புத்தகங்களை  எரிப்பதற்கென்றே தனியாக, ’தீ எரிப்புத் துறை’  ஒன்று உருவக்கப்படுகிறது. தீ எரிப்புத் துறையில் பணியாற்றும் மாண்டெக் என்பவர், தற்செயலாக ஒரு புத்தகத்தின்  வரியைப் படிக்கிறார். ஆர்வம் அதிகமாகி விட , முழுவதையும் படிக்க ஆசைப்பட்டு, அந்த ஒரு  புத்தகத்தை மட்டும் எரிக்காமல் மறைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார். யாரும் அறியாமல் ரகசியமாகப் படிக்க ஆரம்பிக்கிறார் மாண்டெக்.
           புத்தகங்களின் ருசி அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அரசுக்குத் தெரியாமல் புத்தகங்களை சேகரிக்கத் தொடங்குகிறார்.ஒரு கட்டத்தில் , இவர் புத்தகம் படிக்கும் குற்றவாளி, என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அரசிடமிருந்து தப்பிச் செல்கிறார். புத்தகங்களை மனப்பாடம் செய்து , பின்  ‘நடமாடும் புத்தக மனிதர்களாக’ மாறிப் போன குழு ஒன்றுடன் தன்னையும் இணைந்து கொள்கிறார் மாண்டெக். பைபிளை  முழுதும் மனப்பாடம் செய்து, நடமாடும் புத்தகமாக இவரும் மாறுகிறார். அரசின் அடக்கு முறையில் இருந்து , இந்தக் குழு தப்பித்து, புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே நாவலின் இறுதிப் பகுதி. 
             இதுதான்    ” ஃபாரன்ஹீட் 451 ” என்ற நாவலின் சுருக்கம்.  இந்நாவல் உலகெங்கும் பல்வேறு  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் இந்நாவல் பெரிய வெற்றி பெற்றது. ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது,     ”ஃபாரன்ஹீட் 451” (1953)  நாவலை எழுதிய ஆசிரியர்            ரே பிராட்பரி (1920-2012)  பிறந்தநாள் இன்று.
              நவீன அறிவியல் கதைகளை , தீவிர இலக்கிய வாசிப்புக்குள் கொண்டுவந்த ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அமெரிக்காவில், இல்லினாய்ஸ் மாகாணத்தில்  பிறந்தார்.   அத்தை சொல்லும் கதைகளைக் கேட்டே இவரது இளமைக் காலங்கள் கழிந்தன. கதைகளைக் கேட்டுப் பழகிய ரே பிராட்பரி, சொந்தமாக  எழுதத் தொடங்கினார். 1938 ஆம் ஆண்டு,  இவரது 18 ஆவது வயதில்,  முதல் கதை வெளியானது. அது முதல், மரணிக்கும் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். 
                  இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு Dark Carnival மிகப் பெரும் வெற்றி பெற்றது. Martian Chronicles என்ற தலைப்பில் வெளியான ஃபேண்டசி (Fantasy) கதைகளும் இவரது பெயரை இலக்கிய உலகில் நிலைநிறுத்தின. சிறுவயதில்,  ரேடியோவில் பகலில் கேட்ட  கதைகளை, இரவு நேரங்களில் நாடகமாக எழுதிக் கொள்ளும்  பழக்கம் கொண்ட ரே பிராட்பரி,  பின்னாட்களில்   மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆனார்.  பெரும்பாலான இவரது கதைகளும், நாவல்களும் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. தற்போது, இவரது பெயரில், சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
              ’வறுமையின் காரணமாக, கல்லூரியில் படித்து முடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. நூலகங்களும், அதிலுள்ள புத்தகங்களும்தான் என்னை ஆளாக்கின’, என்று எப்போதும் குறிப்பிடுவார் பிராட்பரி. கார்னெகி  நூலகத்தில், வாரத்தில் மூன்று நாள்கள் முழு நேரமும் படிக்கும் பழக்கத்தை,  தொடர்ந்து பத்து ஆண்டுகள் கடைபிடித்தார். எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற இலக்கிய பிதாமகன்களின் நட்பை புத்தகங்களின் வழியே அடைந்தார். அறிவியல் கதைகள், அதிபுனைவுகள், திகில் கதைகள்  என பல்வேறு வடிவங்களில் சிறப்பாக எழுதுவதற்கு , நூலக வாசிப்பு இவருக்கு பெரிதும் உதவியது. இவரது கதைகள் பெரும்பாலானவை ஈ.சி.காமிக்ஸ் நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன. 
                 சிறப்பு புலிட்சர் பரிசு,எம்மி விருது  உட்பட ஏராளமான பரிசுகள் பெற்றுள்ள ரே பிராட்பரி , ஓட்டுநர் உரிமம் கூட எடுக்கவில்லை. பொதுப்போக்குவரத்தையும், மிதிவண்டியையும் மட்டுமே தன் இறுதிக் காலம் வரை பயன்படுத்தினார்.
          1947ல் மார்க்கியூரைட் என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள். ’மாகி’ என இவர் செல்லமாக அழைக்கும் தனது மனைவியைத் தவிர,  வேறு எந்தப் பெண்ணுடனும் அதிகம் பேசியதில்லை, பழகியதில்லை.    2003 ஆம் ஆண்டு மாகி இறக்கும் வரை , கருத்து வேறுபாடுகள் வரவே இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இலட்சிய  தம்பதியராகவே  வாழ்ந்தனர்.
        1999 ல் பக்கவாதம் ஏற்பட்டு, நாற்காலியில் முடங்கிய போதும், எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. 2012, ஜுன் 5ஆம் தேதி அவர் இறந்த போது, 27 நாவல்கள், 600 சிறுகதைகள் எழுதி முடித்திருந்தார். 8 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ள இவரது நூல்கள், உலகில் 36 மொழிகளில் பரவலாகக் கிடைக்கின்றன.
     
    புத்தகங்கள் எரிவதற்கான வெப்பநிலை 451' ஃபாரன்ஹீட்  என்று அவரது கற்பனை  நாவல் சொல்கிறது. ஆனால், புத்தகங்கள் அழிக்கவே முடியாதவை. ஆம், எழுத்தையே மூச்செனக் கொண்டிருந்த பிராட்பரியின்    எழுத்துக்களும் அழிக்கப்பட முடியாதவை  தான்..   

        நடமாடும் புத்தகங்களாய் நாமும் மாறுவோமா?

     

 

     

No comments:

Post a Comment