Monday, July 6, 2020

வற்றா நதி - நூல் அறிமுகம்.


வற்றா நதி -  கார்த்திக் புகழேந்தி.             

நூல் அறிமுகம்.

                                                       (1)

              முன்பெல்லாம் கிராமங்களில் ,  ரேஷன் அட்டையில் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்களாக, எல்லா வீடுகளிலும்  மாடுகள் இருக்கும். அங்கே, குடும்பத் தலைவனுக்கு இணையான மதிப்பு அந்த மாடுகளுக்கும்  வழங்கப்படும். ’ம்மா…’ என அது குரலெடுத்து அழைக்கும்போது, என்ன  வேலையாக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு, மாட்டிற்குத் தேவையான வைக்கோலோ, புல்லோ கொடுத்து, கழனித் தொட்டிக்கு அருகில் அதனைக் கட்டுவார்கள். வயிறு நிறைந்து, தாகம்  தணித்து - அது நிம்மதியாக படுத்துக் கொள்வதைப் பார்த்த பிறகே, தனது வேலைகளைத் தொடருவார்கள்.
                  ஏனெனில், ஒரு மாடு என்பது ஓராயிரம் வசந்தங்களை அந்தக் குடும்பத்திற்குக் கொண்டு வந்து கொடுக்கும் ஓர் அட்சயப் பாத்திரம். வேண்டியவற்றை  எல்லாம் வழங்கும் காமதேனு.  எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் .
                வளநாட்டில் எங்கள் வீட்டிலும் ஒரு மாடு இருந்தது. ’லெட்சுமி’ என்று அதன் பெயரைச் சொல்லாமல், ’மாடு’ என யாராவது சொல்லி விட்டால், அவர்களிடம் நாங்கள்   கடுமையாக சண்டைக்குச் செல்வோம். எங்கள் வீட்டு லெட்சுமி, இரண்டு முறை  அழுது, நான் பார்த்திருக்கிறேன். 
              ஒருமுறை,  அத்து மீறி , பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டத்தில் மேய்ந்த குற்றத்திற்காக, அவள் உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாள். ஊரின் மையத்தில் இருந்த அந்த கால்நடைகளின் சிறைச்சாலைக்குப் பெயர் ’பவுண்டு’.  எல்லைகள் இருப்பதை அறியாது, பிறருடைய தோட்டத்திற்குள் நுழைந்த மாடுகளை, அந்த பவுண்டிற்குள் கொண்டு வந்து அடைத்து விடுவார்கள் தோட்டக்காரர்கள். எங்கள் ஊர் சந்தைபேட்டைக்கு அருகில், நான்கு பக்கமும் உயரமான சுவர்கள் கொண்ட, அந்த பவுண்டிற்கு, முன்பக்கம் மட்டும் ஒரு கதவு இருக்கும். அதில் வளையலைவிட சற்று அதிகமான அகலத்தில் ஓர் ஓட்டை இருக்கும்.
           மாலை தொடங்கிய பின்னரும் லெட்சுமி வீடு வந்து சேராததாலும், எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் காணாததாலும்  பவுண்டில் அடைக்கப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து வர, நான் பவுண்டிற்கு ஓடினேன். கதவு ஓட்டை வழியாக, எட்டிப் பார்த்தேன். அங்கே, லெட்சுமி பரிதாபமாக அமர்ந்திருந்தாள். பவுண்டுக்காரரிடம் உரிய அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு, அவளை வெளியே கூட்டி வந்தோம். அதுவரை அவள் அமைதியாகத்தான் இருந்தாள். என் இரு கைகளாலும் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்து, ஒரு முத்தமிட்டு அவளோடு வீட்டிற்கு நடந்தேன். வீடு நெருங்கிய போதுதான், அவளது முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் மாலைகள். வீட்டிற்குள் நுழைந்ததும் எங்கள் பாட்டி தேம்பித் தேம்பி கண்ணீர் சொரிந்தாள். லெட்சுமி வந்துவிட்டதால், பாட்டி அடைந்த ஆனந்தக் கண்ணீர் அது என, இப்போது  நான் உணர்கிறேன்.  ஒரு பகல் தான், தற்காலிகமானது தான்,  அதுவும் அருகிலே தான் என்ற போதிலும்,  பிரிவு என்பது வலி தரும் துயரம் தானே? ஆம், பிரிவு என்பது மனம் சார்ந்ததல்லவா!
                     லெட்சுமி , இரண்டாம் முறையாகவும்  அழுதது. சொல்ல முடியாத பல காரணங்களால், குடும்பச் சூழ்நிலைகளால் எங்கள் லெட்சுமியை விற்க வேண்டிய சூழல் அப்போது  வந்திருந்தது. மாட்டை  வாங்கியவர், லெட்சுமியை ஓட்டிச் செல்ல   வந்து விட்டார். எங்கள் பாட்டி, வீட்டைவிட்டே வெளியில் வரவில்லை. வாழைப்பழங்கள் கொஞ்சத்தை லெட்சுமிக்கு கொடுத்துவிட்டு, மீதியை புதிய மாட்டுக்காரரிடம் கொடுத்தோம். ’லெட்சுமியை அடிச்சு கிடிச்சுபுடாதப்பா , பாசமான ஜீவன்’ எனச் சொல்லி, கயிறை மாட்டுக்காரரிடம் கொடுக்க, லெட்சுமியை இழுத்துக் கொண்டு அவர் நடக்கத் தொடங்கினார்.
                முதலில் நடப்பது எதுவும் புரியாமல், தேமே என்று இருந்த லெட்சுமி, நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முழுமையாய் புரிந்து கொண்டாள்.  இருநூறு மீட்டர் நீளம் கொண்ட, எங்கள் தெருவின்  இறுதி வரைக்கும், தன் கண்ணீர் வடிக்கும் கண்களால்,  எங்களைத் திரும்பிப் பார்த்தபடியே,  நடந்து போனாள், இல்லை , இழுத்துச் செல்லப்பட்டாள் என்றே சொல்ல வேண்டும். இப்போது - அறியாத ஏதோ ஒரு பகுதிக்குள் அவள் வாழ்க்கை செலுத்தப்படுகிறது. மீண்டும் ஒருமுறை, லெட்சுமியை நாங்கள் சந்திக்கப் போவதில்லை. அவளும் எங்களை ஒருபோதும் காண வாய்ப்பில்லை. இனி, இந்த நிரந்தரப் பிரிவின்  பெருங்குழிக்குள்ளேயே - அவள் வாழ்வு முடிந்து போகும். 
               நண்பர்களே, பிறந்து வளர்ந்த மண்ணை  விட்டுப் பிரிதல் என்பது அத்தனை சுலபமானதல்ல. மனதோடு இணைந்திருக்கும் மண்ணின் நினைவுகள், மண்ணோடு போகும் காலம் வரை நம்முடனேயே இருக்கும். இங்கே,   தாமிரபரணி ஆற்றின் கரையில் வேர் விட்ட மரம் ஒன்று, சென்னையிலோ அல்லது வேறு ஒரு நகரத்திலோ வளர்கிறது என்றால் அதன் நினைவுகள் யாவும் - வேர் குடிகொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் தானே இருக்கும். ஆம், கார்த்திக் புகழேந்தி என்ற வளர் மரத்தின் நினைவுகள், புனைவுகளில் பெரும்பான்மை - அவர் வளர்ந்தெழுந்த நதிக்கரையைச் சுற்றிச் சுற்றியே நகர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதுதான் சரியும் கூட. 
      அந்த நினைவுகள் வற்றாத நதியென, பொங்கிப் பிரவாகமெடுத்து, ஏதோ ஒருவகையில், வாசிப்பவர் மனங்களை நனைத்துக் கொண்டே செல்கின்றன.  கார்த்திக் புகழேந்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு, ’வற்றா நதி’.  இதில் மொத்தம் 21 சிறுகதைகள் இருக்கின்றன. மண் சார்ந்தும் , அந்த மண் சார்ந்த மனிதர்களின் மனம் குறித்துமே இக்கதைகள் நம்மிடம் பேசுகின்றன. 

                                                   (2)

                தொகுப்பில் வருகின்ற இரண்டாவது கதை, ‘அப்பாவும் தென்னை மரங்களும்’ , எளிய முறையில், நேரடியாகச் சொல்லப்பட்ட வலுவான கதை. தனது அப்பாவைப் பற்றியும், அவர் நேசித்த தென்னந்தோப்பு பற்றியுமான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிற இரண்டாவது மகனின் நினைவுகள் தான் இந்தக் கதை. அப்பாவின் பதினோராவது ஆண்டு நினைவு நாளில், வாசகனோடு பேசத் துவங்குகிறான் சின்னவன். ’அப்பாவுக்கு, தொழில், வேலை, சொத்து என  எல்லாமே விவசாயம்தான். தோப்பு வேலை மட்டும் இல்ல, நெல்லுல இருந்து புல்லு வரைக்கும், மாடுல இருந்து ஆடு வரைக்கும், கீரையில் இருந்து கீத்து கொட்டாய் போடுற வரைக்கும் அவருக்கு தெரியாத சமாச்சாரம் எங்க கிராமத்துல கொறவு; எட்டாங்கிளாஸ் வரை படித்த அப்பாதான் எங்க ஊரிலேயே இங்கிலீஸ்ல பேசத்தெரிந்தவர்.’
               அப்பாவின் நிழலிலேயே வளர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் அச்சாணி என்ன என்பது தெரியவே இல்லை. ஒருநாள்,  தென்னை ஏறும் போது, கொளவி கொட்டி அப்பா கீழே விழுகிறார். கால் முறிகிறது. அவர்கள் குடும்பத்தின் வீழ்ச்சியும் அங்கே தொடங்குகிறது. தென்னந்தோப்பு நீதிமன்ற வழக்கில் சிக்கிக் கொண்டது. அப்பா உள்ளூர புலம்பத் தொடங்கினார். ஆனால் சின்ன மகன் அக்ரி ஆபீஸராகி,  குடும்பம் மீண்டும் நிமிரும் என நம்பிக்கொண்டிருந்தார். அண்ணன் செங்கல் சூளைக்கு டிராக்டர் ஓட்டப் போனதால் சின்னவனின் படிப்பு தொடர்ந்தது. அதேநேரம், அக்ரி ஆபீஸ்ர் கனவு தறி விழுந்த தயிர்ப்பானையானது. ஆனால், காரல் மார்க்ஸ் படித்து அப்பா பேசிய வார்த்தைகளை, சின்னவனும் கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.  மாவோ, லெனின் சித்தாந்தங்களோடு, தன்னம்பிக்கையும் மேலெழுந்து வந்தது.  பட்டம் முடித்த சின்னவனுக்கு, மத்திய இரயில்வேயில் வேலை கிடைக்கிறது. சின்னவனான  கதிர்வேல் பற்றி ஊரே பெருமை பேசியது. செல்லப்பா மகன் என்பது போய், கதிர்வேல் அப்பா என நிலைமை மாறுகிறது.
                   ‘என்னப் பெத்த இந்த மண்ணு காத்த விட்டுட்டு, எங்கிட்டுல இந்த சீவன தூக்கிட்டுத் திரிவேன் ‘ எனச் சொல்லும் அப்பா, கிராமத்திலேயே தங்கி விடுகிறார். ஒருநாள் காலை, நீச்சத் தண்ணி குடித்ததோடு, அப்பா இறந்து போகிறார். அப்பாவின் அஸ்தியோடு,  மாடியில் அமர்ந்து ஓவென அழுகிறான் கதிர். பதினாறாம் நாள், அப்பாவின் நினைவாக தென்னம்பிள்ளை ஒன்றை நட்டு வைக்கிறான். பதினோறு நினைவு நாளன்று , சொந்த ஊரிலேயே நிலம் ஒன்று  வாங்கி, பத்திரம் பதியப் போகிறான். இயற்கை விவசாயம் தான் இனி என முடிவு செய்து விட்டான். சிறுகதையின் இறுதியில், கதிர் சொல்லும் கம்பீரமான  வார்த்தைகள் தான் உச்சம்.  ‘ இன்னையோட பதினோரு வருசம் ஆச்சு. தென்னம்பிள்ளை எழுந்து நிக்குது. அதை கட்டிக்கும்போது, எங்கையா நெஞ்சு மேல வெவெரம் தெரியாத வயசில கதை கேட்டு தூங்கும் சுகம். யாரு சொன்னது எங்கையா செத்துட்டாருன்னு, இந்தா எழுந்து நிக்கார் பாருங்கையா.’  கதிர்வேலை கட்டி அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.  இயற்கை வேளாண்மைக்கும், நவீனத்துக்கும் இடையிலான வாழ்க்கைதான் இந்தக் கதை. கால் ஒடிந்து போன இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்து, ’இயற்கை விவசாயம் செத்துச்சுன்னு யாருய்யா சொன்னது, இந்தா எழுந்து நிக்குது பாருங்க’ என  சத்தமாகச் சொல்ல, ஓராயிரம் கதிர்வேல் எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கையை இந்தக் கதையோடு நான் பொருத்திப் பார்க்கிறேன். 
                    ஐந்தே பக்கங்களில் ஒரு சமூகத்தில் உண்டான மாற்றம், அதற்கான தீர்வு ஆகியவற்றைச் சொல்லும் இந்தச் சிறுகதை , நுணுக்கமான விவரணைகளைக் கொண்டிருக்கிறது. தென்னந்தோப்பில் பூச்சிகளைத் தின்று உயிர் வாழும் ஆந்தை, ஊரில் எல்லா தோப்புகளும் வண்டுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, ஆந்தைகளால் இவரது தோப்பு மட்டும் நல்ல விளைச்சல் தருவது,  மழைக்காலத்தில்  தோப்புக்கு நடுவில் வெட்டப்படும் குழி, புழு மீன் செதில் கொண்டு உருவாக்கப்படும் இயற்கை உரம் என அழகான சித்தரிப்புகளுக்கு இடையில்தான் அப்பா-மகன் பாசக் கதை பின்னப்பட்டிருக்கிறது.
                       இந்தத் தொகுப்பில் ’பற்றியெரியும் உலை’ என்றொரு கதை இருக்கிறது. இருபது காலண்டர்களுக்குப் பிறகு நடப்பதான  புனைகதை அது.  கூடங்குளம் அணு உலை பாதிப்பில் உருவாக இருக்கும் சந்ததியினரின் துயரங்களைப் பற்றிய முக்கியமான கதை. ஒருவேளை, இக்கதை இன்னும் செறிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். ஆனாலும், அது சொல்ல வரும் விஷயம் மிக முக்கியமானது. நடக்கும் குற்றங்களைக் கண்டும் காணாததும் போல, மெளனமாய் கடந்து போகும் மாபாதகச் செயலைப் பற்றி இக்கதை பேசுகிறது. பிழைகளின் சாட்சியாய் மட்டுமே மனிதன் இருந்துவிட முடியுமா? நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டுமல்லவா?
                      சொத்து, குடுப்பினை, நிலைக்கதவு போன்ற கதைகள் சொந்த மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்த  உள்ளங்களையும் விவரித்துச் செல்கிறது. 169 கொலைகள் என்னும் கதை, மனசாட்சி தரும் தண்டனையை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் புழுதியில் வெள்ளைக் கோடிட்டுப் பறக்கும் விமானம் பார்த்துத் திரிந்தவன், விமான ஓட்டியாகிறான். உயரப் பறந்தாலும் அவனது உள்ளம் மிகமிக எளிமையானது. மனசாட்சிக்குப் பயந்தது. வாசிக்க வேண்டிய கதை இது. தவறுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்கும் நாயகனின் மனப் போராட்டம் , குறைவான சொற்களில் நிறைவாக உள்ளது.
               தொகுப்பில் உள்ள  மூன்றில் ஒரு பங்கு கதைகள், பருவத்தில் உருவாகும் காதல் கதைகள் தான். ஆனால் அவை சுவாரஸ்யமான மொழியில் சொல்லப்பட்டிருக்கின்றன. கதைகளில் உலாவும் நாயகிகள் – ப்ரீத்தி, கிறிஸ்டி, ஜெனி, பேயாய் உலவும் டெசி, கோலப்போட்டியில் வென்ற சுகந்தி, சிறு நெருப்பை, சுற்றத்தார் எல்லாம் சேர்ந்து பெரிய காதல் தீயாய் மாற்றிவிட, காதலியாக மாறுகிற அபிராமி என எல்லாக் கதைகளிலும்,  சாதி, மதத்தின் அடிமைச் சங்கிலிகள் அடையாளம் காட்டப் படுகின்றன. பெரும்பாலான கதைகளில் சர்ச்சும், கிறிஸ்துவப் பெண்களும் வந்து போகிறார்கள்.  சாதி மாறுவதைக் காட்டிலும் மதம் மாறுவது தான் எளிய வழியாக இருக்குமோ? என்ற எழுத்தாளனின்  எண்ணம் தான், இக்கதைகளில் முன் வந்து நிற்பதாக நான் உணர்கிறேன்.
                        தாமிரபரணி கரையிலிருந்து, பிழைப்புக்காக ரேனிகுண்டா பகுதியில் முறுக்கு கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் போஸ், அங்கே இருக்கும் இவனது நண்பன் மாணிக்கம், கடை முதலாளி, இவர்களைப் போலவே ஓரிரு பத்திகள் மட்டும் வரும் அத்திக்காய் தோட்டம். அருமையான பாத்திரப் படைப்புகள். பல வருடங்களுக்குப் பிறகு , தனது ஆற்றங்கரைக்கு வரும் போஸுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. தாயையும் ஊர் தலையாரியையும் வெட்டி விட்டு சிறைக்குச் செல்கிறான் போஸ். ரேணிகுண்டாவிலேயே அவன் இருந்திருக்கலாம் தான். அல்லது, அத்திக் காட்டிலாவது தனது மூச்சை இழந்திருக்கலாம். தொகுப்பில் உள்ள எல்லா கதாபாத்திரங்களிலும் முற்றாக மாறுபட்டது போஸின் கதாபாத்திரம். வாசிக்கும் போது, அதனை நீங்கள் உணரலாம். ‘ சிவந்திப்பட்டி கொலை வழக்கு’ – மனம் உருக்கும் கதை.
                    தொகுப்பில் என்னை ஈர்த்த கதைகளில் முக்கியமான ஒன்று, ‘காற்றிலிடைத் தூறலாக’. கதை நாயகன் மதனுக்கு மனசு சரியில்லை என்றவுடன், ‘எங்கேயாச்சும் வெளியே போயிட்டு வாடா, ரிலாக்ஸ் ஆகிடுவ.’ எனச் சொல்லி, கணவனிடம் அதீத அன்பு காட்டும் மனைவி கல்கி, முதிர்ச்சி அடைந்த நல்ல பாத்திரப் படைப்பு. ‘உன்னையே நீ லவ் பண்ணும் நிமிசத்துல, என்கிட்ட வந்து ஒரு ஐ லவ் யூ சொல்லு ’ என கணவனை , நண்பன் ஜீவாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். கேரள எல்லையில் , ஆனைகட்டிக்கு அருகில் இருக்கும் தனது நண்பனின் வீட்டுக்கு இளைப்பாறச் செல்கிறான் மதன். 
          அங்கே அவனது நுரையீரல் புத்துணர்ச்சி கொள்கிறது. எழில் நிறைந்த அந்த இயற்கை, மதனின் மனதினை மாற்றுகிறது. திருப்தி தராத வேலை, அவனுக்கு ஒரு சுமையாக இருக்கிறது. ஆனால், அங்கிருந்து கிளம்பும்போது, புதிய மனிதனாகப் புறப்படுகிறான். நம்மாழ்வாரின் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதற்காக பயணத்தைத் தொடர்கிறான். மலைகள் சூழ்ந்த அழகிய வனப்பகுதியில், மதனின் கண்கள் வழியாக காட்டப்படும் வயல்வெளிகள், தோப்புகள், பயிர்ச்செடிகள் என யாவும், வாசிக்கும்  நம்மையும் ஆசுவாசப்படுத்துகின்றன. அழகான வடிவமைப்பின் வழியே, இக்கதை நம் உள்ளத்தைக் கரைக்கிறது.
                ’பங்குனி உத்திரம்’ – இதுவும் அழகான நடையில் அமைந்த ஒரு கதை. தாமிரபரணி ஆற்றின் கரையில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நினைவு. பங்குனி உத்திரத்திற்காக, சாஸ்தா கோயிலுக்கு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான நபர்கள் , மாட்டு வண்டியில் பயணிப்பதில் கதை தொடங்குகிறது. நுண்ணிய விவரிப்பின் வழியே கடந்த காலம் நம் கண் முன்னே நகர்ந்து போகிறது. தனித்துக் கிடக்கும் நிகழ்காலம் சொல்லப்படுகிறது. 
             கல்விக்காக, வருமானத்திற்காக என எல்லா குடும்பங்களும் இன்று பிறந்த மண்ணிலிருந்து நகர்ந்து விட்டன. இக்கதையின் நாயகன், அதே ஆற்றங்கரையில் நிற்கிறான். அவன் மாறவே இல்லை. ’என்ன மயித்துக்கு மாறணுங்கிறேன், மேல பாருவோய், அந்த நிலா மாறியிருக்கா, இல்ல மாறியிருக்கான்னு கேக்குறேன்’ – அதட்டிக் கேட்கும் அவனது கேள்விக்கு, நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் ?

                                                           (3)
                              
           இறுதியாக, ’தீபாவளி’ என்னும் கதையைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். ‘ஏன், தீபாவளிக்கு ஊருக்கு போகலியா? ‘ என்ற கேள்வியை எதிர்கொள்ளாத, வேற்றிட வாசிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்தக் கதையும் அதோடு சேர்ந்தது தான். சொந்த கிராமத்திற்குச் செல்லாமல், நகரிலேயே தீபாவளியை கடத்திக் கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றியதுதான் இந்தக் கதை. 
            கதையின் இறுதியில் வரும் இரண்டு பத்திகள் தான் என்னை அதிகம் பாதித்தன. சென்னையில் இருக்கும் இவன், இன்றே கூட, தன் கரைக்குத் திரும்பிவிடலாம். பவுண்டுக்குள் அடைபட்ட எங்கள் லெட்சுமி, மாலை வீடு வந்து சேர்ந்தது போல.
          ஆனால், எங்கோ ஒரு தேசத்தில், அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துச் சகோதரி சிசோ, அலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள். ’தீபாவளி வாழ்த்துகள்’ சொல்கிறாள்.  ’இங்கே இதெல்லாம் கொண்டாட மாட்டோம் அண்ணா’ என்று பேசுகிறாள். சத்தம் உண்டாக்கும் தீபாவளி வெடிகள், சிசோவுக்கு  பயங்கரமான யுத்த காலத்தை   நினைவு படுத்திவிடக் கூடாது என்னும் பதட்டத்திலேயே, விரைவாகப் பேசி முடிக்கிறான் இவன். பிறந்த மண்ணுக்கு மீண்டும் திரும்பி, தீபாவளி கொண்டாட வாய்ப்பில்லாத சிசோ, எங்களை விட்டு நிரந்தரமாக விலகிப் போன, லெட்சுமியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறாள்.          இத்தொகுப்பில், வற்றா நதியென, நினைவுகள் கொப்பளித்தபடியே இருக்கின்றன. எல்லா கதைகளின் மையச் சரடும் அதுதான். மண்ணைப் பிரிந்த ஏக்கமும், அந்த மனிதர்களின் சந்தோஷத் தருணங்களுமே இந்தக் கதைகளின் தொகுப்பு. பெரும்பாலும் இதில் உள்ள கதைகள் யாவும், வட்டார வழக்கு மொழியில் சொல்லப்பட்டிருப்பது, இத்தொகுப்பிற்கு சிறப்பையும் நம்பகத்தன்மையையும் ஒரு சேரத் தந்திருக்கின்றன.   எனக்கு  வாசிக்கக் கிடைத்த இந்த இரண்டாம் பதிப்பிலும், எண்ணும் அளவுக்கு ’எழுத்துப் பிழைகள்’ இருப்பதை, மறுபதிப்பில், அச்சாக்கத்தின் போது தவிர்த்திருக்கலாம்.
             பத்தி வடிவில் அமைந்திருக்க வேண்டிய சில நினைவுக் குறிப்புகள், இங்கே சிறுகதையாக வைக்கப்பட்டிருக்கின்றன, அதேபோல, நாவல் அளவுக்கு விரிவு கொள்ள வேண்டிய கதைகளும் இத்தொகுப்பில் உண்டு. இதுதான் அவரது முதல் தொகுப்பு.  நேரிடையாக, எதார்த்தமான உரையாடல்களின் வழியே, வாழ்வின் கணங்களை ரசனையாக மாற்றிவிடுகிற ரசவாதம் , கார்த்திக் புகழேந்திக்கு வாய்த்திருக்கிறது. சகோதரர் கார்த்திக் புகழேந்திக்கு மனம் நிறைந்த  வாழ்த்துகள்!
                   பொருள் வயிற் பிரிதல் பற்றி சங்க இலக்கியங்கள் நிறைய பேசுகின்றன. அங்கே, பிரிதலுக்கான கால வரையறை உண்டு. ஆனால், பிறந்த மண்ணை விட்டு, நிரந்தரமாகப் பிரிவது என்பது காலில் தங்கி - சதை செரித்த முள் போல, தீராத ரணத்தை வாழ்நாளெல்லாம் தரக் கூடியது. அது நினைவில் விழுந்த தழும்பு. அதற்கு அழிவென்பதே கிடையாது. வற்றா நதி’ சிறுகதைத் தொகுப்பு,  தழும்பிலிருந்து எழுந்த நினைவுகளின் சேகரம் தான். கார்த்திக் புகழேந்தியை உயிர்ப்பிப்பதும் அந்த நினைவுகள் தான்.
                   ஆம், பழைய ஏற்பாட்டில் ஒரு கதை உண்டு. ’வாழ்ந்த ஊரைத் திரும்பிப் பார்க்காமல், இங்கிருந்து செல்லுங்கள்’ என்ற கடவுளின் கட்டளையையும் மீறி, லோத்தின் மனைவி, தான் வாழ்ந்த சோதன் கொமாரோ  நிலத்தைத்  திரும்பிப் பார்க்கிறாள். சாபத்தின் படி, உப்புப் பாறையாகவே மாறிப்போகிறாள். 
        நண்பர்களே,  தப்பென்றாலும், சரியென்றாலும், உப்புப் பாறையாய்  மாறிப் போவோம்  என்றாலும் -  பிறந்து வளர்ந்த  மண்ணின் நினைவுகளை, மனதிலிருந்து அவ்வளவு எளிதில் அகற்றி விட முடியுமா என்ன?.  ஒருவகையில் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மூச்சுக் காற்றே, அந்த நினைவுகள்தான் அல்லவா?  
                 

Friday, July 3, 2020

விளக்குகள் பல தந்த ஒளி - நூல் அறிமுகம்


விளக்குகள் பல தந்த ஒளி – லில்லியன் எயிஷ்லர் வாட்சன்

நூல் அறிமுகம்


        ”எனது வாழ்க்கையில் என் இதயத்தோடு நெருக்கமாக இருக்கும் புத்தகங்கள் நான்கு. அவற்றை வாசிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம். லில்லியன் எ.வாட்சன் எழுதிய ‘விளக்குகள் பல தந்த ஒளி’ புத்தகம் , நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் - ஒளி தீபமாகச் சுடர் விடுகிறது.  40 வருட காலமாகவே, என்னை வழிநடத்திச் செல்லும் ஓர் அரிய பொக்கிஷமாகவே, அது என்னுடன் இருந்து வருகிறது.”   –  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

                    2000 ஆவது ஆண்டில், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் , டெல்லியில் உள்ள 'விஞ்ஞான் பவனில்' அப்துல் கலாமைச் சந்திக்கச் செல்கிறார். அப்துல் கலாம் அப்போது, இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக இருந்தார். அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடலின் போது, தனது வாழ்க்கையையே மாற்றி அமைத்த சில புத்தகங்களைப் பற்றி, கலாம் அவர்கள் ஆர்வம் பொங்கப் பேசுகிறார். அவற்றில் ஒன்று தான், ‘Light From Many Lamps’.  
              லில்லியன் எயிஷ்லர் வாட்சன் எழுதிய இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்றும், அது தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகவும் பயன்படும் என்றும் சொல்லியிருக்கிறார் அப்துல் கலாம். அந்தச் சொற்களே, இந்நூல் தமிழ் வடிவம் பெறுவதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.  முறையான அனுமதிக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு ’விளக்குகள் பல தந்த ஒளி’ என்னும் தலைப்பில் இந்த நூலை, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 
             நூலின் இறுதியில், தொகுப்பாசிரியர் பற்றி கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பு, போதாமையின் உச்சம் என்று சொல்லலாம்.  பொத்தாம் பொதுவாக சில வார்த்தைகள். எந்த நூலாசிரியருக்கும் அதனைப் போட்டுக் கொள்ளலாம்.  இந்த நூலில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்களில், ஆசிரியரின் குறிப்பு  முறையாக இடம் பெறுவதில்லை. மொழிபெயர்ப்பாளர் பற்றிய விபரமும் சரியாகத் தருவதில்லை. இந்த நூலினை தமிழில் மொழிபெயர்த்த பி.உதயக்குமார் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த நூலில் இல்லை என்பதும் வருத்தத்திற்குரியது.  மேலும், இந்த நூலின் முன் அட்டையிலும்,  பின் அட்டையிலும் நூலாசிரியரின் பெயரும் இல்லை; மொழிபெயர்ப்பாளரின் பெயரும் இல்லை. பதிப்பகத்தின் பெயர் மட்டுமே உள்ளது (இரண்டாம் பதிப்பு - ஏப்ரல் 2005) என்பது இன்னும் வருத்தத்தை அதிகமாக்கியது.
                அற்புதமான இந்த நூலினைத் தொகுத்த லில்லியன் எயிஷ்லர்(1902), ஹங்கேரியைப் பூர்வீகமாகக் கொண்ட யூதப் பெண்மணி ஆவார். அமெரிக்காவைச் சேர்ந்த,  இவரது கணவர் பெயர் வாட்சன்.  ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த பதிப்புத் துறையில் நுழைந்த இவர், தனது பத்தொன்பதாம் வயதிலேயே சாதனைகள் நிகழ்த்தத் தொடங்கினார்.  வாசிப்பதையும் எழுதுவதையுமே தனது வாழ்நாள் பணியாகச் செய்தார். அதன் விளைவாக, அமெரிக்காவையும் தாண்டி, உலகம் முழுக்க அவரது பெயர் பேசப்பட்டது. அவருடைய மாபெரும் கனவுதான், Light From Many Lamps’ எனும்  இந்தப் புத்தகம்.            
              கடந்த கால வரலாறு என்பது நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற ’ஞானக்களஞ்சியம்’. அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் முடிவில்லாதவையாக இருக்கின்றன. மாபெரும் ஞானத்தின் தொகுப்பிலிருந்து, நமக்கு எது வேண்டும் என்பதைத் தேடுவதில் மாபெரும் சவால் இருக்கிறது. கருவூலப் பொக்கிஷங்கள், தலைப்பு வாரியாக முறையாக அடுக்கப்பட்டு, எளிதில் பயன்படுத்தும் வண்ணம் இருந்தால், சுலபமாக இருக்கும் இல்லையா?  அப்படி ஒரு செயலைச் செய்திருக்கிறது இந்தப் புத்தகம். 
                பல இடங்களிலிருந்து, பல  துறைகளைப் பற்றிய சிந்தனைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வெறும் சிந்தனைகள் மட்டும் இந்நூலில் கொடுக்கப்படவில்லை. மாறாக, அது உருவான வரலாற்றுப் பின்புலத்தோடு சிந்தனைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. 
               உதாரணமாக, ’எதிர்காலத்திற்கான நம்பிக்கை’ என்ற தலைப்பில், ஒரு வரலாறு குறிப்பிடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ஆம் தேதி, அமெரிக்காவின் அதிபராக ஃப்ரான்க்ளின் ரூஸ்வெல்ட் பதவி ஏற்கிறார். இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை நோக்கி, அவர் உரையாற்றுகிறார். எப்போதும் அவர் மனதில் மந்திரம் போல் இருக்கும் சொற்கள், அப்போதும் நினைவுக்கு வருகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னர், தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் அவை. மனித குலத்தின் முன்னேற்றத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை அவை. 
    ’வாழ்வில் எல்லாமே சுமூகமாக இருந்து விடாது. சில சமயம் உயர்வும், சில சமயம் தாழ்வும் இருக்கும். இதில் நினைவு கொள்ள வேண்டிய பெரிய உண்மை என்னவென்றால், நாகரீகத்தின் இயல்பே, எப்போதும் மேல் நோக்கியே  இருப்பதுதான்’    
        கிராடன் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த எண்டிகாட் பீபாடி, தேவாலயத்தின் வழிபாட்டுக் கூட்டத்தில் வாராவாரம் மாணவர்களோடு பேசுவார். அதனை மனத்திற்குள் கல்வெட்டு போல எழுதி வைத்துக் கொண்ட மாணவன் ரூஸ்வெல்ட், மேற்கண்ட சொற்களை மறக்கவே இல்லை. தாழ்வு வரும் வேளையில் எல்லாம், ’மேல் நோக்கிய சிந்தனை தான், நாகரீகத்தின் இயல்பு’ என்பதை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். அதிபரான பிறகு, இந்தச் சொற்கள் தான், தனது வாழ்வில் உயர்வை  உண்டாக்கின என தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறார். இந்த வரலாற்றுப் பின்புலம் தெரிந்த பிறகு, பொன்மொழிகள் சுடரெனெ இதயத்தில் ஒளிரத் தொடங்குகின்றன.  இதுபோல, அறுபதுக்கும் மேற்பட்ட சுவையான நிகழ்வுகள், அதன் வழியே பெறும் சிந்தனைகள், நூற்றுக்கணக்கில் மேற்கோள்கள் என சிந்தனை முத்துக்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

*  “வெற்றி பெறவே மனிதர்கள் பிறக்கிறார்கள், தோற்பதற்கு அல்ல.”  - தோரோ.

* “நேரத்தை வீணாக்குவதை மட்டும் நியாயப்படுத்தவே முடியாது. ஏனெனில், இது மீண்டும் வரவே வராது” - உமர் கய்யாம்.

* ”முடிவுகளைப் பற்றி நான் அஞ்சவில்லை; நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்”  -ஃபால்கன் ஸ்காட்.


* “நம்மில் நாம் திருப்தி காணாவிட்டால், அதனை வெளியே தேடுவதில் பயனே இல்லை.”  -  எஃப் டி ஃபோகோல்ட்.
         
   சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், சிசிரோ, பிளாட்டோ, இங்கர்சால், ஜேம்ஸ் ஆலன், மார்க் அரேலியஸ், தாமஸ் மன், கவிஞர் லாங்ஃபெல்லோ, ஷேக்ஸ்பியர், எமர்சன், வாட்சன்,  ஹென்றி தோரோ , மார்டின் லூதர் கிங், ஆர்.எல்.ஸ்டீவன்சன், எமிலி டிக்கின்ஸ், அபிரகாம் லிங்கன், பெஞ்மின் ஃப்ராங்க்ளின், மெல்வில்  என பல நூறு அறிஞர்களின் கருத்துக்கள், இந்தக் கருவூலத்தில் நிரம்பியிருக்கின்றன. 
              உபநிஷத்துக்கள் மற்றும் இந்தியத் தத்துவங்களின் செய்திகளோடு, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் கவிதை வரிகளும் இடம் பெற்றுள்ளன.  மகாவீரர், புத்தர், முகம்மது நபி போன்றோர் வழங்கிய செய்திகளும் இங்கே உண்டு. மேலும், நூலின் பல்வேறு இடங்களில், பைபிள் சொல்லும் ஞானக் கருத்துக்கள் பொருத்தமான இடங்களில் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றின் பயனாக, ஒவ்வொரு பொன்மொழியும், நம்மை நிறைய சிந்திக்க வைக்கின்றது. துயரத்தின் ஆழத்திலிருந்து நம்மை மீட்டு எடுக்கின்றன. 
             ’வாழ்வின் சந்தோஷம்’ முதல் ’எதிர்காலம்’  வரையிலான பத்து பெரும் தலைப்புகளில் இந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில், வரலாற்றின் தலை சிறந்த தத்துவ ஞானிகள், அறிஞர்கள், ஆளுமைகள் என எண்ணற்ற நட்சத்திர மனிதர்களின் குறிப்புகள் நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. 
         இருபதாம் நூற்றாண்டு வரையிலான, உலகின் ஞானக் களஞ்சியத்தைச் சுருக்கி, எளிய மனிதர்களுக்கு பயன் தரும் வகையில், கையடக்கமாக ஒரு 400 பக்கங்களுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார் தொகுப்பாசிரியர். இறுதியில் அவரே மார்டின் லூதரின் வார்த்தைகளில் சொல்லி முடிக்கிறார்,
       “ஞானத்தின் முதல் கனியின் ஒரு துண்டையும், உண்மையின் எல்லையற்ற ஆழத்தின்  துண்டிலிருந்து ஒரு சிறு பகுதியையும் தான் என்னால் மீட்க முடிந்தது.”
           இந்த நூலை, வெறும் தன்னம்பிக்கை சார்ந்த நூல் என்றும் சொல்லி விட முடியாது;வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு என்றும் சொல்லி விட முடியாது. நமது தனிமை, சிக்கல், ஆபத்து, தோல்வி, வெற்றி,குழப்பம்  என வாழ்வின் எல்லாக் கட்டத்திலும்  நமக்கு உதவும் ஒரு கையேடு அல்லது அகராதி என இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடலாம். இந்த நூல் நமது கையில் இருக்கும் போது, ஆயிரக்கணக்கான ஞானிகளின் சொற்களைச் சுமந்து செல்கிறோம் என்று நம்பலாம். பயன்படுத்திக் கொள்வது நமது செயலில் தான் உள்ளது.               
             வாழ்வின் இருள் நம்மைச் சூழும் போதெல்லாம் - ஒளி கொடுத்து மீட்பதற்காக, விளக்குகளோடு - கடந்த காலம் காத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரங்களில்,  நாம் தான் விழிகளைத் திறந்து வைத்திருப்பதில்லை. 



நூலின் பெயர்:     விளக்குகள் பல தந்த ஒளி
ஆசிரியர் பெயர்: லில்லியன் எயிஷ்லர் வாட்சன்
வெளியீடு    :         கண்ணதாசன் பதிப்பகம்