Saturday, January 25, 2020

குருவே தெய்வம்..!


குருவே தெய்வம் என்க!.

"பெரிதினும் பெரிது கேள்!"-
நூல் வெளியீட்டு விழா!

          வாழ்வில் நாம்  சந்திக்கும்  எல்லா நிகழ்வுகளும், நினைவுகளாய்த் தங்கி விடுவதில்லை.  சில நினைவுகள் மட்டுமே, உயிரோடு கலந்து, நமக்குள் குருதியென உலவத் தொடங்குகின்றன. அவற்றை நாம்   நினைக்கும்  போதெல்லாம்,  இன்பம் நிறைக்கின்றன.  அத்தகைய இனிய நினைவுகளின் தருணங்கள் என்பது, பெருங்கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகிய நாள்கள்.  அப்படியொரு அபூர்வ நாளாக அமைந்தது 19.01.2020.

             ஒரே வாரத்தில், மூன்றாவது முறையாக சென்னைக்குப் பயணம். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நண்பர், உடன்பிறவா சகோதரர் *முனைவர். த.செந்தில்குமார்* (காவல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டலம், ரயில்வே துறை) அவர்கள் எழுதிய, *“பெரிதினும் பெரிது கேள்”*   (விகடன் பிரசுரம்)  நூல் வெளியீட்டு விழாவுக்காக, 18.01.2020 இரவு சென்னைக்குக் கிளம்பினேன். அதிக மகிழ்ச்சியில், வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து, மணப்பாறை பேருந்து நிலையம் வந்து நின்றேன். பணப்பை, அடையாள அட்டைகள், வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என எதையுமே எடுத்துவரவில்லை என்பதை அப்போதுதான் நான்  கவனித்தேன்.  கையில் அலைபேசி மட்டுமே இருந்தது.

               ”கையில ஃபோன் இருக்கில்ல, பார்த்துகலாம் வா..” என என் சகோதரர்கள் மிகாவேல் மற்றும் இளங்கோ  இருவரும் சொல்ல, அவர்களோடு கிளம்பிவிட்டேன். எப்போதுமே, அவர்களின் துணை என்பது, என் பயணங்களில்    மட்டுமல்ல, வாழ்விலும் தொடர்வது தான்.   திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் கடுமையான கூட்டம். பிறகு ஒரு வழியாக, இரவு 11. 30மணிக்கு  தனியார் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தோம். பேருந்தின்  ஓட்டுநர் நள்ளிரவு 12 மணிக்கு ஏறி அமர்ந்தார். பேருந்து சரியாக 12.30 மணிக்கு நகரத் தொடங்கியது. ஞாயிறு காலை 7.30 மணிக்கே கோயம்பேடு சென்றடைந்தோம். ஆயினும்,  விரைவாகக் கிளம்பி, விழா அரங்கிற்கு சரியான நேரத்தில் சென்று  சேர்ந்தோம்.

            சென்னை, நந்தனம் YMCA  மைதானத்தில், புத்தகச் சந்தை அரங்கில், திட்டமிட்டபடி, ‘பெரிதினும் பெரிது கேள்’ நூல் வெளியீட்டு  விழா சரியாக காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.    அரங்கு நிறைந்த  பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்.
       
          வாசிப்பின் மேன்மை, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான மனத்திட்பம், வரலாற்றுச் செய்திகள், அறிவியல் தகவல்கள், காவிரியின் கதை, தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு, கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சாதனைகள், தமிழ் இலக்கிய வரலாறு உள்ளிட்ட 16 தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கட்டுரை நூல்,  தகவல்களை , தன்னம்பிக்கையை, சரளமான நடையில் எடுத்துச் சொல்லும் ஒரு  'சிறப்புக்  கருவூலம்’  என்று சொல்லலாம்.  விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இக்கட்டுரை நூல், மிக நேர்த்தியான கட்டமைப்பில் அழகாக வெளிவந்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  (நூல் பற்றிய அறிமுகக் கட்டுரை இனிமேல் தான் எழுத வேண்டும்!).

             அங்கே, புத்தக வெளியீட்டு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வாக நடக்கவில்லை. மாறாக அன்பையும் நட்பையும் சொல்லி நன்றியுணர்வினை கற்றுக் கொடுக்கும் இனிய நிகழ்வாக அது  அமைந்திருந்தது.

                   தற்போது திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும்  முனைவர் த.செந்தில் குமார்  அவர்கள் எழுதிய,  'பெரிதினும் பெரிது கேள்' நூல் வெளியீட்டு நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை , அமலாக்கத்துறை,  மண்டல இணை இயக்குநர் திரு. பா.மாணிக்கவேல் வாழ்த்துரை வழங்கினார். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் நூலினை வெளியிட, திரைப்பட இயக்குநர் திரு. தங்கர்பச்சான் அதனைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.         

                 தமிழறிஞர் பழ.கருப்பையா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் நூலின் சிறப்பு பற்றியும், நூலாசிரியரின் திறன், ஆர்வம் மற்றும் கடும் உழைப்பைப் பற்றியும் அழகுறப் பேசியது, இனிமையாகவும்  பயனுள்ளதாகவும்  இருந்தது.

       குறிப்பாக,  நூலில் இடம்பெற்றுள்ள கை ரேகை தொடர்பான , வியப்பு மிக்க தகவல்களைப் பற்றி எஸ்.ரா.வும் , வாசிப்பதற்காகவே மீண்டும் மீண்டும் இந்த மனிதப் பிறவி வேண்டுமெனக் கேட்கும் நூலாசிரியரின் ஆர்வத்தைப் பற்றி  பழ.கருப்பையாவும் சிலாகித்துப் பேசினர்.
           வாசிக்காத தமிழ்ச் சமூகத்தின் மீதான தனது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்திய தங்கர்பச்சான், 'பெரிதினும் பெரிது கேள்' நூலினை ஏன் வாசிக்க வேண்டும் என்று அருமையாகப் பேசினார்.                         
                     சற்றும் சலிப்பு தட்டாமல்,  ஏற்ககுறைய மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவின் உச்சமாக ஒரு நிகழ்வு நடந்தது. அது தான் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னிடம் மட்டுமல்ல, அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இதே எண்ணங்கள் நிச்சயம் தோன்றியிருக்கக்கூடும்.

          'பெரிதினும்  பெரிது கேள்' நூலாசிரியரும்   விழா நாயகனுமான *முனைவர். த.செந்தில்குமார்,* அமலாக்கத்துறை மண்டல இணை இயக்குநர் *திரு.பா.மாணிக்கவேல்,* விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. *ஆ.அண்ணாத்துரை* மூவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த வகுப்புத் தோழர்கள்.  அதிலும் ஆவினன்குடி,  அரசுப்பள்ளியில் உயர் நிலைக் கல்வியை முடித்து, TNPSC Group I தேர்வில் வெற்றி பெற்று, உயர் பதவியை அடைந்தவர்கள். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று, தாங்கள் இந்த உயர் பதவிகளுக்கு வந்திருக்கிறோம்  என்பதை மூவரும் பெருமைபட  அழுத்தமாகப் பதிவு செய்தது, மனநிறைவாக  இருந்தது. மேலும்,  மூவரும் தனக்குக்  கற்றுத்தந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பெயர்களையும் மேடையில் நன்றியோடு நினைவு கூர்ந்தனர். பேருந்து, சாலை வசதிகள் கூட நிறைவு பெறாத குக்கிராமத்தில்,  ஓர் அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் எங்களுக்கு,  அவர்களது சொற்கள் அலாதியான மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உண்டாக்கின.

           நிகழ்வின் இடையில்,   திடீரென மேடையில் இருந்து ஓர்  அழைப்பு.  *ஆசிரியர்  திரு. செல்வராஜ்* அவர்களை மேடைக்கு வருமாறு அன்போடு அழைத்தது அந்தக் குரல்.  இன்று மேடையில் அமர்ந்திருக்கும் மூன்று அதிகாரிகளுக்கும் அரசு  உயர்நிலைப் பள்ளியில் கணிதம் கற்பித்த ஆசிரியர் தான் திரு.செல்வராஜ் என்ற விவரமும் அப்போது  தெரிவிக்கப்பட்டது. சிறப்பு மிக்க அந்த ஆசிரியர்,  யாரெனப் பார்க்க, பார்வையாளர்கள் அனைவரும் சற்றே நிமிர்ந்து எழுந்தனர். தத்தமது பேச்சின் இடையே, மூன்று அதிகாரிகளாலும் 'எம்.எஸ்.' என் அன்போடு அழைக்கப்பட்ட,  அந்த மூத்த மனிதர் மேடை ஏறினார்.   எளிமையும்,  அர்ப்பணிப்பும், காலம் கொடுத்த முதுமையும்  நிரம்பி வழிந்திட, இரு கரம் கூப்பி பார்வையாளர்களுக்கு வணக்கம் சொன்னார். அதே கண நேரத்தில், அவரது மூன்று மாணவர்களும் பல்லாயிரம் விழிகள் முன்னிலையில் தனது ஆசிரியரின் பாதங்களைத் தொட்டு வணங்கினர்.  உயர்வின் உச்சத்தில் தாம் நிற்கக் காரணமான  அந்தப்  பாதங்களில்,  மனமுவந்து தன்னை ஒப்படைத்து நன்றி தெரிவித்தனர்.
                                 
          ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களுடன், உயர்ந்து  வளர்ந்து நிற்கும் தனது மாணவர்களை,  தோள் தொட்டு வாழ்த்தினார். அப்போது, அந்த ஆசிரியரையும், அவரது மாணவர்களையும் கண்டு,  உலகைக் காத்து நிற்கும் பெருங்கருணை, தனது படைப்பின் மீது நிச்சயம்  பெருமை கொண்டிருக்கும்.   பார்வையாளர்களால் நிரம்பி வழிந்த அந்த அரங்கம்,  சில நிமிடங்கள்  ஆனந்தத்தால் உறைந்து நின்றது.  என் கண்களில் இருந்து, என்னையறியாமல்  கண்ணீர்  துருத்திக் கொண்டு வந்தது. யாரும் அறியாத வண்ணம், எனது கைக்குட்டையால் முகம் துடைப்பது போல, கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். வலதுபுறம் அமர்ந்திருந்த இளங்கோ அண்ணனின் கன்னத்தில் கண்ணீர் வழிந்து ஓடியதை நான் கண்டேன். அவரும்  முகம் துடைப்பது போல, கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். மிகாவேல் அண்ணனின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

                 பல்லாயிரம் நாள்கள், மாணவர்கள் முன்னிலையில், உரத்த குரலில் தன்னை மறந்து பாடம் நடத்திய அந்த எம்.எஸ். சார்,  தனது மாணவனுக்கான மேடையில்,  சில சொற்கள் பேசினார். தழுதழுத்த குரலில் இருந்த  அவரது பேச்சு, எங்கள் எல்லோருக்கும் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது. வாழ்வை நகர்த்திச் செல்வதற்கான பிடியாகவும் அது இருந்தது.

               தனது மாணவர்கள் மூவரைப் பற்றியும் பெருமையோடு, அதே நேரத்தில் மிக  எதார்த்தமாகவும்  பேசினார் எம்.எஸ்.சார்.!     போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, டி.ஆர்.ஓ. வாக  பணி நியமனம் பெற்றவுடன், நேரடியாகத்  தன்னை வந்து சந்தித்து, நியமன ஆணையைக் காட்டி, ஆசி பெற்றுச் சென்றவர்தான் திரு,ஆ.அண்ணாதுரை, IAS அவர்கள்.  ஏதாவது கோவிலுக்குச் சென்றிருக்கலாமே எனக் கேட்ட போது, ஆசிரியரான நீங்கள் இருக்கும் இடம் தான்,  எங்களுக்குக்  கோவில் எனச் சொன்னவர்.

                        வணிக வரித்துறை ஆணையராக நியமனம் பெற்றவுடன், உடனடியாக டில்லி செல்ல வேண்டிய சூழல். உடனே, தனது தந்தையை எனது வீட்டிற்கு நேரடியாக அனுப்பி, தந்தை வழியே ஆசி பெற்றுக் கொண்டவர் திரு.பா. மாணிக்க வேல் IRS.அவர்கள்.

                        எதையும் வித்தியாசமாகவே சிந்திக்கும் அணுகுமுறை கொண்டவர்  திரு.செந்தில்குமார். அவர் Group 1 தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி,ஆகப்  பணி நியமன ஆணை பெற்ற பிறகு, எங்கள் வீட்டிற்கு ஓர் அழைப்பிதழ் வந்தது. அதில் தனக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பாடம்  சொல்லிக் கொடுத்த அத்தனை ஆசிரியர்களின் பெயரையும் அச்சிட்டு, நன்றி தெரிவிக்கும் விழாவாக அதனைக்  குறிப்பிட்டிருந்தார் செந்தில் குமார்.  அதன்படியே தனது ஆசிரியர்கள் அத்தனை பேரையும் அழைத்து , விருந்து கொடுத்து, நன்றி தெரிவித்து ஆசி பெற்றார். இவர்களை நினைத்து தாம் மிகவும் பெருமை கொள்வதாகவும், நிறைவை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.   மூன்று பேரையும், ஒரே நாளில் வரவழைத்து, அதே பள்ளியில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  சொல்லி விடை பெற்றார் எம்.எஸ்.சார்.  அரங்கம் உளமாற மகிழ்ந்து, கரவொலி எழுப்பியது.

                   ஓர் ஆசிரியர் தன் வாழ்நாளில் பெறும் ஆகச்சிறந்த அங்கீகாரம் எதுவாக இருக்கக்கூடும்? முன்னாள் மாணவர்களிடம் இருந்து வருகின்ற நற்சொற்கள், வாழ்த்துகள், தனது மாணவர்கள் அடைந்திருக்கும் உயர் நிலை பற்றிய செய்திகள்  - இவைதான் எல்லா விருதுகளையும் விட, நிறைந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
          ஆம்,  ஓர் ஆசிரியருக்கு வழங்கப்பட்டு வரும் எத்தகைய உயர்ந்த விருதுகளையும் விட, எம்.எஸ். சாருக்கு இந்த மேடை தந்திருக்கும் வாழ்த்து, வானளாவ உயர்ந்தது என உறுதியாகச்  சொல்லுவேன்.                 

                        அதேபோல,  அரசுப் பள்ளியில் , தமிழ் வழியில் படித்து, மாவட்ட ஆட்சியராக – காவல் கண்பாணிப்பாளராக – அமலாக்கத் துறை இயக்குநராக பதவியில் இருக்கும்  இம்மூன்று மாணவர்கள், தனது ஆசிரியருக்குச் செய்த இந்த எளிய நன்றியுணர்வு எல்லா நற்பண்புகளையும் விட சற்றே ஒரு படி மேலானது எனவும் தயக்கமின்றிச் சொல்லுவேன்.
                         
          இப்படியொரு பெருமையை தனது ஆசிரியருக்கு ஏற்படுத்தித் தந்த மாணவர்கள் மூவரும் திடமான செய்தி ஒன்றினை சமூகத்திற்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள். மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆசிரியப் பணியில் இருக்கும் அத்தனை பேருக்கும் தனது வாழ்வின் மூலம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் எம்.எஸ்.சார்.. பணிக்காலத்தில்  அவரது கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் பணி எப்படி இருந்திருக்கும் என்பதை எங்களால்   ஊகிக்க முடிகிறது. அவருக்கும் பணிவான வணக்கங்கள்.

                          எல்லாத் துறையிலும், எல்லா இடங்களிலும் குறிப்பிட்ட சிலர் மீது விழவேண்டிய  பழிச்சொற்கள், இன்று பொதுமையாக்கப்பட்டு -  வசையாக மாறி , அசிங்கப்படுத்தப்படுகிறது. அரசும், தனி நபர்களும், சமூகமும் அதே மனநிலையில் காழ்ப்பினை உமிழ்ந்து வரும் நேரத்தில், இந்த விழா என் மனதுக்குள்  ஏதோ ஒருவித களிம்பினைத் தந்திருக்கிறது. கொதித்துக் கிடக்கும் காயங்களை, தழும்பின்றி மறையச் செய்யும் மாய  மருந்தென,  இது எல்லோருக்கும்  உதவக்கூடும்.!
               
     கோயம்பேட்டிலிருந்து மணப்பாறைக்கு  மீண்டும் பேருந்துப் பயணம். ஆனால், களைப்பு என்பது துளியும் இல்லை. பாசாங்கு துளியும் இல்லாத, இனிய விழாவில் கலந்து கொண்ட மனநிறைவோடு வீடு திரும்பினோம்.

"Treat Your Teacher As God" -  Yajur Vedha.