Sunday, April 12, 2020

1941 திருச்சி சிறை - நூல் அறிமுகம்

'1941 திருச்சி சிறை' - எஸ்.எஸ்.கரையாளர்.


நூல் அறிமுகம்


"உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை ஒப்புக் கொள்கிறீர்களா?"

"முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்"

"நான் தங்களை குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். தங்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக வருந்துகிறேன். தங்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்."

                       1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி,  காலை பத்தரை மணிக்கு,  சங்கரநயினார் கோயிலில் உள்ள கோமதி அம்மன் சன்னிதானத்தின் முன்பு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன்னிலையில்,  பின்வரும் முழக்கத்தை  சத்தமாகச் சொன்னார் எஸ்.எஸ்.கரையாளர்.

     "பிரிட்டிஷாரின் இந்த முயற்சிக்கு பணத்தாலும் ஆள்  பலத்தாலும் உதவிகள் செய்வது தவறு. அகிம்சை முறையிலேயே எல்லா யுத்தங்களையும் எதிர்ப்பதே சரியான வழியாகும்" .
      
            முன்னேற்பாடுகளுடன் அந்த இடத்தில் காத்துக்கிடந்த காவலர்கள்,  கரையாளரைக்  கைது செய்கிறார்கள். இரண்டாம்  உலகப்போரில் வெள்ளையர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் தேசிய காங்கிரஸின், செயல் திட்டங்களில் இது ஒரு பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக எஸ்.எஸ்.கரையாளர் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் முன்பு இரவு 8 மணிக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.  சரியாக ஒரு வாரம் கழித்து டிசம்பர் 13ஆம் தேதி தான், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.


         கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில், ஆறுமாதம் கடுங்காவல் தண்டனைக்காக டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் எஸ்.எஸ்.கரையாளர்.
   
   "ஜெயிலின் பிரதான வாயில் திறந்தது. நான் உள்ளே     நுழைந்தேன். என் பின்னால் கதவு சாத்தப்பட்டது. ஜெயில் காற்று      என் மீது வீசியது. அப்போது, ஜெயில் மணி  சரியாக ஐந்து அடித்தது."   
    - இப்படித்தான் துவங்குகிறது எஸ்.எஸ்.கரையாளர் எழுதிய  சிறைக் குறிப்புகளின் முதல் இரு அத்தியாயங்கள்.

               1940 டிசம்பர் 14ஆம் தேதி வேலூர் சிறையில் தொடங்கி, 1941 மே 23ஆம் தேதி திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகும் நாள் வரை,  தான் பெற்ற அனுபவத்தை, விடுதலைப் போராட்ட வீரர்களின் சுவையான ஒரு பக்கத்தை, அவர்களின் இயல்பான முகத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எஸ்.எஸ் கரையாளர். தனது ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையை, கசப்பின் துளி - கொஞ்சம்  கூட பட்டு விடாமல்,  தனது அனுபவங்களை கற்கண்டு போல மாற்றி, விறுவிறுப்பான நடையில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் எஸ்.எஸ்.கரையாளர். அந்தப் புத்தகத்தின் பெயர் தான்,  ’1941 திருச்சி சிறை’.

  ஆறு மாதகால சிறை அனுபவத்தில் தான் கண்ட காட்சிகள், தன்னோடு பழகிய ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்திய  சிறைச்சாலையின் நடைமுறை விதிகள் என எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்து, அழகான மொழி நடையில் அங்கதச்சுவை சற்றும் குறையாமல் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் கரையாளர்.  
                
               இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டநாதக்  கரையாளர், 1909 ஆம் ஆண்டு தென்காசியில் பிறந்தவர்.   பி.ஏ, பி.எல். பட்டம் பெற்றிருந்த கரையாளர், திருநெல்வேலி மாவட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் முதன்மையானவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்றிருந்தார்.  1967 ஆம் ஆண்டு, அவர் மரணமடைந்த பிறகு, அவர் பெயரில், தென்காசியில் கலைக்கல்லூரி ஒன்று உருவாக்கப்பட்டது. 

             சிறைச்சாலைகளில் மூன்று வகை உண்டு. சென்ட்ரல் ஜெயில், டிஸ்கிரீட் ஜெயில், ஸ்பெஷல் ஜெயில். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்கக்கூடிய இடம்தான் சென்ட்ரல் ஜெயில்.  அப்போது சென்னை மாகாணத்தில், வேலூர் மற்றும் திருச்சி  மத்திய சிறைச்சாலைகளில் தான், கைதிகள் நிரம்பி வழிந்தார்கள்.

      சிறைக்குச் செல்லும்போது, அங்கே ஒவ்வொரு கைதிக்கும் ஒரு எண்ணும், அவர்களுக்கு உரிய முறையான அறையும் ஒதுக்கப்படும். அதற்கு முன்னால், 14 நாட்கள் 'கோரங்கியில்' தங்க வேண்டும். கோரங்கி என்றால் என்ன தெரியுமா? சிறைச்சாலைகளில் முதன்மைப் பகுதிக்கு வெளியே, ’வெளிக்கோரங்கி’  என்று ஒரு கட்டடம் இருக்கும். வெளியில் இருந்து வரும் கைதிகள், எந்த ஒரு தொற்றுநோயையும் உள்ளே கொண்டு செல்லாமல் இருக்க, இந்த கோரங்கிக்குள் 14 நாள்கள் தங்க வேண்டும் என்பது சிறை விதியாகும். இதற்கு Out- Quarantine என்று பெயர். ஆனால் விடுதலைப் போராட்ட சத்தியாக்கிரகிகள், கோரங்கியில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்குரிய சிறைச்சாலை இடம் உடனடியாக ஒதுக்கப்பட்டது.

   வேலூர் சிறைக்குள் கரையாளர் உள்ளே நுழையும்போது, மாலை உணவு நேரம். அலுமினியத் தட்டில் சாதமும் மற்றொரு தட்டில் குழம்பும் கறியுமாக கைதிகள் மரங்களின் அடியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர் உள்ளே நுழைந்ததும், ’சிறைக்கு வெளியே நாடு எப்படி இருக்கிறது’ என்ற கேள்வியை சிறைவாசிகள் மாறி மாறிக் கேட்கிறார்கள். ’முதலில் இரவு உணவைச் சாப்பிடுங்கள், தீர்ந்து விடப் போகிறது’ என்று சொல்லி இவரை சாப்பிடச் சொல்கிறார் மஞ்சுநாதா ராவ் என்ற கைதி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மலபாரில் சொந்தமாக தபால் துறையை நடத்தியவர் தான் மஞ்சுநாத ராவ். அதற்காக தற்காப்பு விதிகளின்படி சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஒரே இந்தியர் மஞ்சுநாதா ராவ் அவர்கள் தான்.

           வேலூர் சிறையில் இவருக்கு ஒதுக்கப்பட்ட அறை, 12 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டது. அதன் மூலையில் கட்டில் வடிவ திண்ணை  ஒன்று  இருக்கும். மாலை ஐந்தரை மணிக்கு அடைக்கப்படும் கதவு மீண்டும் அதிகாலை ஐந்தரை மணிக்குத் தான் திறக்கப்படும். இடையில் இரவு 9 மணி வரை, அறைக்குள்  அரிக்கேன் விளக்கு வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. சிறை அனுபவத்திலேயே, இரவில் இருட்டு அறைக்குள் அடைபட்டுக் கிடப்பது தான் மிகவும் கடுமையான தண்டனை என்கிறார் கரையாளர்.

       டிசம்பர் 23-ஆம் தேதி விடுதலைப் போராட்ட கைதிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப் படுகிறார்கள். மற்ற கைதிகளுடன் இணைந்து இவரால் திருச்சிக்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் காய்ச்சல் காரணமாக வேலூர் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் இன்னும் சில காலம் இவர் தங்க நேரிடுகிறது. அங்குதான் தீரர் சத்தியமூர்த்தி அவர்களை இவர் சந்திக்கிறார். தனது மனைவி மற்றும் ஒரே மகளின் மீது அதீத பாசம் கொண்டிருந்த சத்தியமூர்த்தி அவர்கள், கடிதங்களுக்காகக் காத்துக் கிடப்பார். ஜெயில் ஆஸ்பத்திரியில் இருக்கும் நாட்களில் கொண்டுவரப்படும் உணவில் பூசணிக்காய் மட்டுமே இருக்கும். "கத்தரிக்காய்,வாழைக்காய்,முருங்கைக்காய் என்ற பெயருள்ள காய்கள் எல்லாம் இந்த உலகத்தில் உண்டு என்பதை போய்ச் சொல்",  என உணவு கொண்டு வருபவரிடம் தீரர் சத்தியமூர்த்தி சொல்லி அனுப்புகிறார். 

    ஜெயில் ஆஸ்பத்திரியில் இரண்டு மருத்துவர்களும் ஒரு உதவியாளரும் மட்டுமே உண்டு. இரவில் நோயாளிகளுக்கு உதவுவதற்காக சிறையில் இருந்த கைதிகளையே நியமித்து இருப்பார்கள். அவர்களிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. வேலூரில் தண்ணீர் கேட்டுக் கிடைக்காமல், மறுநாள் காலை இறந்து போன ஒரு கைதியை நினைவு கூர்கிறார் கரையாளர். சிறைச்சாலைகளில் ஆண் செவிலியர்கள் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜெயில் மருத்துவமனைகளில் இப்போதாவது, ஆண் செவிலியர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. “பூலோக நரகம் என்பது இந்த ஜெயில் ஆஸ்பத்திரி தான்” என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னதை, மறக்காமல் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கரையாளர்.

          உடல் நலம் நன்றாகத் தேறிய உடன், ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கரையாளர் திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இவ்வாறு ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு - கைதியை மாற்றுவதற்கு 'கமான்' என்று பெயர். திருச்சி மத்திய சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் காஃபி குடிப்பதற்கான உரிமையை , எஸ் எஸ் கரையாளர் போராடிப் பெற்ற விவரணை  மிகவும் சுவாரசியமானது.

       கைதிகளுக்கு எப்போதும் பெயர்கள் கிடையாது. அங்கே அவர்களுக்குத் தரப்பட்ட எண்கள் தான் மிகவும் முக்கியமானது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் இவருக்கு வழங்கப்பட்ட எண் 154 ஆகும். 500 அடி பக்க அளவுள்ள சதுர வடிவ முகாம், சுதந்திரப் போராட்ட சத்தியாக்கிரகிகளுக்கு  ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு ’கேம்ப் ஜெயில்’ என்று பெயர். இதனைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கும்; மதில்கள் கிடையாது. ஆதலால் கேம்ப் ஜெயிலில் இருந்த படியே, வெளியே மாடு மேய்க்கும் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் நடந்து செல்பவர்களைப்  பார்க்க முடியும். இது சிறைச்சாலையில் கிடைத்த மிகப்பெரிய ஆறுதல் என்று எழுதுகிறார் எஸ் எஸ் கரையாளர்.

          சிறைச்சாலையில் ஏ, பி மற்றும் சி வகுப்பு கைதிகளுக்கு உரிய சலுகைகள் என்னென்ன என்பதைப் பற்றியும், சிறையில் வழங்கப்படும் குறிச்சொற்களைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார். ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 18 அவுன்ஸ் அரிசி, 5 அவுன்ஸ் பருப்பு, ஒரு அவுன்ஸ் புளி, ஒரு அவுன்ஸ் எண்ணெய், 8 அவுன்ஸ் காய்கறிகள், ஒரு அவுன்ஸ் வெங்காயம், கால் அவுன்ஸ் கடுகு, கால் அவுன்ஸ் கொத்தமல்லி என்ற அளவில்  உணவுக்காக பொருள்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை சமைத்துத் தருவதற்கு 2 பவுண்டு பிறகு அனுமதிக்கப்படுகிறது. சிறை வளாகத்துக்கு உள்ளேயே விளையும் பூசணியும் முள்ளங்கியும் மட்டும் தான் தினமும் மாறி மாறி பயன்படுத்தப்படும் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்.

          ஜெயில் வார்டுகளுக்கு அனுசரணையாக நடந்து, குட்டி வார்டராகச் செயல்படும் கைதிகள் ’காணிக் வார்டர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். மேலும், சிறை கண்காணிப்பாளருக்கு உதவியாகவும், தொந்தரவு செய்யாமலும் இருக்கும் கைதிகளுக்கு ’வஜா’ வழங்கப்படும். ’வஜா’ என்பது கைதிகளின் நன்னடத்தை குறித்து வழங்கப்படும் தண்டனை குறைப்பு நாள்களாகும். இந்த நாள்களை அனுமதிக்க,  சிறைக் கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உண்டு.

     ஒருமுறை, திருச்சி மத்திய சிறையின்  சமையல் கூடத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. அந்த கட்டு விரியன் பாம்பை, அடித்துக் கொன்றதற்காக அரியலூர் வெங்கடாசலம் பிள்ளைக்கு  பத்து நாள்கள் வஜா வழங்கப்பட்டது. அதன்பிறகு, நக்கல் பேச்சு ஒன்று சிறை முழுக்க உலவியதாம். 4 அணா பணம் கொடுத்து செத்த பாம்பை விலைக்கு வாங்கி, அதனை சிறை கண்காணிப்பாளரிடம் காட்டி, பலர் ’வஜா’ பெற  முயன்றதாக வதந்தி ஒன்று பத்திரிகைகளிலும் வெளிவந்ததாம். உண்மையின் மீது அவதூறு செய்யும் நிகழ்வுகள் எல்லா காலத்திலும்  இருக்கும் இல்லையா?

           சிறையில் இருக்கும் கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதற்கென மனு செய்ய வேண்டும். இதற்கு ’மனுப் பேசுதல்’ என்று பெயர். ஏ வகுப்புக் கைதிகள் ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்து பேசலாம். ஆனால், ஜெயில் வார்டர் அப்போதும் உடன் இருப்பார். பி மற்றும் சி வகுப்புக் கைதிகளுக்கு இந்தச் சலுகை கிடையாது.  கம்பி வலை தடுப்புக்குள் இருந்து தான் அவர்கள் பேச முடியும்.
     சிறையில் தான் சந்தித்த ஒவ்வொரு சத்தியாகிரகியைப்  பற்றியும் நுட்பமான,  அதிமுக்கியமான விவரணைகளை எஸ்.எஸ்.கரையாளர் எழுதி இருக்கிறார். துரைசாமி நாடார் வாங்கித்தந்த ஜெயில் ரேடியோவில் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் நேரடி வர்ணனை கேட்கும் ஸ்ரீ என்.எஸ். வரதாச்சாரி, கண்ணாடித் துண்டுகளை தின்று காட்டக்கூடிய ஸ்ரீ காந்திராஜ் கிருஷ்ணமூர்த்தி,   நாணயம், பொறுப்பு, கண்ணியம் இவற்றுக்கு உரித்தான பூசப்பாடி ஸ்ரீ ராஜா குமாரசாமி ராஜா, எட்டுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை, சிறைச்சாலையில் வழங்கப்படும் ரொட்டியை நாய் கூட சாப்பிடாது என்பதை நிரூபித்துக் காட்டிய ஸ்ரீ விஸ்வநாதன், தினமும் ஆங்கில வகுப்பெடுக்கும் ஸ்ரீ அண்ணாமலை , கிடைக்கும் கல்லில் அழகான சிலைகள் வடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பொண்ணுக் குட்டி என்ற ஸ்ரீ பொன்னுச்சாமி என தான் சந்தித்த மனிதர்களின் இயல்பான பண்புகளை இந்த நூலில் அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு,  மிகவும் சுவையான உணவினை போட்டி போட்டு சமைத்துத் தந்த  ஆற்காடு ஸ்ரீ சீனிவாச ராவ் மற்றும் மேலூர் கருங்காலப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கட்ராம ஐயர் இருவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

    1929ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த ’சர்’ பட்டத்தை மறுத்து, தொடர்ந்து விடுதலைப் போராட்ட வேள்வியில் கலந்து கொண்ட டாக்டர் சுப்பராயன் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. முதல் உலகப்போரின் போது ராணுவ அமைச்சருக்கு காரியதரிசியாக பணியாற்றிய இவர், ராதாபாய் அம்மையார் என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். வஜாவின் படி, மே 4ஆம் தேதி திருச்சி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சேலம் டாக்டர் சுப்பராயன். ஆனால், தனக்குக் கிடைத்த சலுகை நாள்களை வேண்டாம் என்று மறுத்து, மே மாதம் 21 ஆம் தேதி விடுதலையாகிறார் ராதாபாய் அம்மையார். இவர்களைப்பற்றி நூலில் வரும் குறிப்புகள் அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் ஆகும்.

          சிறையில் வழங்கப்படும் ரொட்டி ’விதேசி’ பொருள் என்பதால் அதனை வாங்க மறுத்து உண்ணாவிரதம் இருந்த மனிதர் தான்  ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார். விவசாயிகளின் மேல் அளவற்ற அன்பும், விவசாயத்தைப் பற்றிய மேலதிக அறிவும் இவரிடம்  இருந்ததைப் பற்றி சிறப்பாக  விவரிக்கிறார்.

            ஜோசியம் பார்த்து,  இந்தியா விரைவில் விடுதலை பெறும் என  நாள் குறிக்கும் பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். மதுரையை விட்டு வெளியேறக் கூடாது என்பதை மீறியதற்காக ஒன்றரை வருடம் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஜோசியத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. தீவிர தெய்வ பக்தி உடைய தேவர் அவர்கள், மாமிசம் சாப்பிடமாட்டார்; சோப்பும் பயன்படுத்த மாட்டார்; ஆனால் பல் துலக்குவதற்கு ’டூத் பேஸ்டை’ விரும்பி பயன்படுத்துகிறார் என்பன போன்ற சுவாரசியமான குறிப்புகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

              சிறையில் இருந்த மற்றொரு பிரபலம்  இராஜாஜி அவர்கள். இவரைச் சக்கரவர்த்தி என்றே அனைவரும் அழைக்கிறார்கள். இவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது, ஜெர்மனி ரேடியோ, "Raja of Gopalapuram என்பவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டார்" என்றே செய்தி சொல்லியது. காலை ஐந்தரை மணிக்கு எழுந்து நடை பயிற்சி முடித்தவுடன் வால்மீகி இராமாயணம் வகுப்பு எடுக்க தொடங்குவார் இராஜாஜி. காலை 10 மணி வரை  இந்த வகுப்பு நீளும். காலை உணவுக்குப் பிறகு மதியம் ஒரு மணி வரை ஷேக்ஸ்பியர், மில்டன் உள்ளிட்டவர்களின் கவிதை நாடக வகுப்புகள் நடத்துவார். பிறகு மூன்று மணிக்கு Glossary வகுப்புகள் தொடங்கும். அப்போது, திருச்சி சிறையில்  மரங்கள் இல்லாததால், அந்தப் பகுதி மிகுந்த வெப்பத்துடன் காணப்படும். அதனால் நனைக்கப்பட்ட சிறிய துண்டினை தலையில் கட்டிக் கொண்டுதான், இராஜாஜி வகுப்புகள் எடுப்பார். இரவு உணவிற்குப் பிறகு, (இரவு உணவு நேரம் மாலை ஐந்தரை மணி) பாரதியார் கவிதைகள், திருக்குறள், காளிதாசனின் சாகுந்தலம், பெரிய புராணம், ராமாயணம் என இரவு படுக்கச் செல்லும் வரை வகுப்புகள் தொடர்ந்து நடத்துவார். தான் செய்ய வேண்டிய எந்த வேலையையும் பிறர் செய்ய அனுமதிக்க மாட்டார். சிறையில் இராஜாஜி பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவம் சொல்கிறார்.  சிறையில் ஒவ்வொரு கைதிக்கும்  Register board ஒன்று இருக்கும். அதில் கைதிகளை பற்றிய விபரக் குறிப்பு எழுதப்பட்டிருக்கும். அதில், எழுதப்படிக்க தெரியாத கைதிகளை C என்று குறிப்பார்கள். ராஜாஜிக்கு register board ல் C என்றே குறிக்கப் பட்டிருந்தது.

             இப்படி,  இந்த நூல் முழுக்க சத்தியாகிரகத் தியாகிகளின் சிறை வாழ்வு நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவுகளையும் பிறந்த மண்ணையும் பிரிந்து தேசத்தின் விடுதலைக்காக அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு, அவர்கள் செலவு செய்த நாள்கள் நிச்சயம் வலி மிகுந்தவை தான். ஆனால் அதை அவர்கள் எதிர்கொண்ட விதம் அலாதியானது. ஆச்சரியம் தரக் கூடியது.
         
      அதேபோல, தண்டனைக் காலம் முடிந்து, விடுதலை கிடைக்கும் நாளில் ஒவ்வொரு கைதியும் தன் சக தோழர்களிடம் விடைபெற்றுச் செல்லும் கணம் - சுகமானது; அதே நேரத்தில் நெகிழ்வானது. விடுதலைப் போருக்காகக் களமாடி - சிறைச்சாலையில் இருப்பது என்பது, தங்கக் கம்பிகளால் செய்த கூண்டில் அடைபட்டுக்  கிடக்கும் கிளிக்கு ஒப்பாகும் எனச் சொல்கிறார். சிறையில் அனுபவிக்கும் தனிமை, சலிப்பூட்டும் உணவு, மூட்டைப் பூச்சிகளுக்கும்  பாம்புகளுக்கும் இடையில் வாழ்வு, நரகம் போல் இருக்கும் ஜெயில் ஆஸ்பத்திரி இவைகளுக்கு மத்தியில் தான் தண்டனைக் காலம் என்றாலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒருபோதும் மனம் சலிக்கவில்லை; தன்னம்பிக்கையை இழக்க வில்லை. ஏனெனில் ஒவ்வொரு சத்தியாக்கிரகியின்  முன்னும், விடுதலை வேள்வியில் தன்னையே ஆகுதியாக்கிக்  கொண்ட தியாக வீரர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் சுதந்திர நெருப்பு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது.

     "இந்த ஆறு மாதகாலத்தில் நன்றாகப் படித்து அறிவை வளப்படுத்த வேண்டும் சிந்திக்கும் சக்தியை வளர்க்க வேண்டும் அவ்வப்போது மனதில் எழும் எண்ணங்களை தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என நான் போட்டிருந்த திட்டங்கள் ஒன்றுகூட நிறைவேறாமல் போய்விட்டது"
            - இதனை, புத்தகத்தின் இறுதி அத்தியாயம் 18ல், சிறையிலிருந்து விடுதலையான நாளில் - தன் மனதில் தோன்றியதாக எஸ்.எஸ்.கரையாளர் மெலிதான வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.  ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் அவர் வாழ்க்கையை எதிர்கொண்ட விதமும், மனிதர்களை அவதானித்த முறையும் எல்லோருக்குமே ஒரு பாடம் என்பதில் சந்தேகமே இல்லை.   தான் நேரில் கண்ட காட்சிகளையும், பழகிய மனிதர்களின் சித்திரங்களையும் மிக நேர்மையாகவும், நேர்மறைச் சிந்தனையோடும் எழுதியிருக்கிறார். அதனால், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அதே உற்சாகமும், உள்ளெழுச்சியும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.  

           இந்நூல், தனிப்பட்ட ஒரு மனிதனுடைய, சுய சரிதம் மட்டும்  அல்ல. மாறாக, 1940களில் கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை உணர்வை விவரிக்கும் நூல். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட சத்தியாகிரகிகளின் தன்னம்பிக்கையைச் சொல்லும் நூல். சிறைப்பறவைகள் தனக்கான உலகை எப்படி உருவாக்கிக் கொண்டன என்பதைத் தெளிவுபடுத்தும் நூல். துன்பம் நேர்கையிலும், யாழ் கொண்டு இன்பம் காண்பது எப்படி என்பதை சுவைபடச் சொல்லும் நூல். 144 பக்கங்கள் கொண்ட இந்த நூலை, ’தமிழினி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வாசிப்பை வேகப்படுத்தும் கரையாளரின் இயல்பான மொழிநடை , இந்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.   

                 ஜவகர்லால் நேரு எழுதிய My Autography, நெல்சன் மண்டேலா எழுதிய Conversation with myself,  முதல் உலகப்போர் முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட ஹிட்லர், சிறை வாசத்தின் போது எழுதியMein Kamph,  அமெரிக்காவின் கறுப்பின விடுதலைக்குப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் எழுதிய  Letters from brimmingham city jail என உலகம் முழுவதும் சிறைச்சாலையில் இருந்து எழுதப்பட்ட இலக்கியங்கள் புகழ்பெற்றவை. அதே நேரத்தில் சிறைச்சாலையைப் பற்றியும், அங்கு தான் சந்தித்த நபர்களைப்  பற்றியுமான சித்திரங்கள் அடங்கிய இந்த நூல், இந்த வகைமையில் (Prison Literature),  தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நூலாகிறது.

   ”சிறையென்றால் -
    பறவையானாலும், மிருகமானாலும்,
    மனிதன் ஆனாலும்  
    ஒரு தேசமே ஆனாலும்
    ஒன்றுதான்".

Saturday, April 4, 2020

ஏப்ரல் 4

மகத்தான தமிழ்மணி- பெ.சுந்தரம் பிள்ளை.

ஏப்ரல் 4....இன்று!

                    
                 அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
                 கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
                  ஆயினும் நீயே தாய் எனுந் தன்மையின்
                  மெய்ப்பே ராசைஎன் மீக்கொள ஓர்வழி
                  உழைத்தலே தகுதியென்று இழைத்த இந்நாடகம்
                 வெள்ளியதெனினும் விளங்கு நின் கணைக்காற்கு
                  ஒள்ளிய சிறுவிரல் அணியாக்
                  கொள்மதி அன்பே குறியெனக் குறித்தே!


                                          1891 ஆம் ஆண்டு, “மனோன்மணீயம்” என்னும் நாடகத்தை எழுதிய பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897),  ஆசிரியர் சுரிதகத்தில் எழுதிய பாயிரம் இது. 
              ’ நான் கடையன், அறியாத சிறுவன், மலையாள நாட்டில் பிறந்த தமிழன். ஆயினும், தமிழன்னையின் மீது கொண்ட பற்றால், எழுதிய  இந்நாடகம் - வளமற்றது எனினும்,  நினது காலின்  சிறுவிரல் மோதிரமாகவேனும் இதனை அணிந்து கொள்க’  - எனத்  தமிழன்னையிடம் வேண்டி நின்றார் பெ.சுந்தரம் பிள்ளை. தமிழ்ப்பால் அருந்திய யாவருக்கும், அவள் அன்னையல்லவா? பிள்ளையின்  மனோன்மணீயத்தை வாரி அணைத்துக் கொண்டாள். அதனைக்  கை விரல் மோதிரமெனக்  கூறி, முகம் மலர்ந்தாள்.
               தாய்மொழியாம் தமிழுக்கென, ஒரு வாழ்த்துப் பாடலைக் கொண்டு வர, கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசு முடிவு செய்தது. பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு,       மனோன்மணீயம் நாடக நூலில் இடம்பெற்றிருந்த, ”நீராருங் கடலுடுத்த..” எனற   வாழ்த்துப் பாடல்  தேர்வு செய்யப்பட்டது. தமிழின் உயர்வைச்  சொல்லும் போது, பிற மொழிகளின் மீதான விமர்சனம் தேவையில்லை என்பதால்,  பாடலில் இருந்த சில வரிகள் மட்டும் நீக்கப்பட்டன. 
                   1970 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 23 ஆம் தேதி, சுந்தரம் பிள்ளை எழுதிய, ’நீராருங் கடலுடுத்த...’   என்ற பாடல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக  முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால், மோகன ராகத்தில்  இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல்,  எல்லா அரசு நிகழ்ச்சிகளில்  தமிழகம் முழுதும் இசைக்கப்பட்டு வருவது, சுந்தரம் பிள்ளைக்குக் கிடைத்த பெரும் பேறு என்றே சொல்ல வேண்டும்.
                     1855 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி,  கேரள மாநிலம் ஆலப்புழா நகரில், பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தான் சுந்தரம் பிள்ளை.    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பிள்ளையின் குடும்பம், தொழில் காரணமாக ஆலப்புழா பகுதிக்குச் சென்றிருந்தது.
             அந்நாளில், திருவிதாங்கூர் மன்னர்கள், தங்களது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நகரங்களிலும் மலையாளம் போலவே,  தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வந்தனர். ஆலப்புழா நகரில் இருந்த தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார் சுந்தரம் பிள்ளை. பிறகு, திருவனந்தபுரத்தில் இவரது படிப்பு தொடர்ந்தது. அங்கிருந்த மகாராஜா கல்லூரிக்குச் சென்ற சுந்தரம் பிள்ளை, 1876 ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் வகுப்புடன் , கல்லூரியின்  முதல் மாணவராகவும் இவரே வந்தார்.
             பட்டப்படிப்பு முடித்தவுடன், திருநெல்வேலி வந்த சுந்தரம் பிள்ளை, ’இந்துக் கல்லூரி பள்ளியில்’ சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான், கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் நட்பு கொள்கிறார். பன்னிரு திருமுறைகள் உட்பட, சைவ சித்தாந்தம் தொடர்பான எல்லா பாடங்களையும் அவரிடம் கற்றுக் கொள்கிறார். பின்னாளில், 1885 ஆம் ஆண்டு, “சைவப் பிரகாச சபை” என்னும் அமைப்பைத் தோற்றுவிக்க இதுவே தூண்டுகோலாக அமைந்தது.
                        மீண்டும் திருவனந்தபுரம் வந்த சுந்தரம் பிள்ளை, 1880ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். தான் படித்த கல்லூரியிலேயே, ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கிறது. கல்லூரியில் தத்துவம் மற்றும் வரலாறு பாடங்களைக் கற்பிக்கிறார். அப்போது, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சி தொடர்பான நூல்களைத் தேடித் தேடி படிக்கிறார்.
             சுந்தரம் பிள்ளையின்  ஆற்றலைக் கேள்விப்பட்டு வியந்த, திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள், அரண்மனையில்  Commissioner of separate என்னும் பதவியை வழங்கினார். 1882-1885 வரை அப்பதவியில் இருந்த காலத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவை யாவும் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது.
             1888ல் வெளிவந்த நூற்றொகை விளக்கம் (சாத்திர சங்கிரகம்) என்னும் கட்டுரை நூல், 1894 ல் வந்த Some early sovereigns of Travancore  என்னும் ஆய்வு நூல் இரண்டும் முக்கியமான நூல்கள் ஆகும். திருஞான சம்பந்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டுக்கும் பிந்தையது என்று சொன்ன கால்டுவெல்லின் கருத்தை மறுத்து, சான்றாதாரங்களுடன் 1896ல் இவர் எழுதி வெளியிட்ட , 'திருஞான சம்பந்தரின் காலம்' எனும் நூல், ஆய்வு நூல்களுக்கு ஒரு முன்மாதிரி எனலாம்.
              1890-1891 ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு திறனாய்வு நூல் ஒன்றை எழுதினார். திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை நூல்களை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். The Ten Tamil Idylls என்ற பெயரிலான அந்தப் புத்தகம், 1957ஆம் ஆண்டுதான் நூல் வடிவம் பெற்றது. நாராயண சாமிப் பிள்ளையிடம் கற்ற  யாப்பும், இலக்கணமும் இவர் தமிழை, செழுமை செய்திருந்தது.   இவரது எழுத்துக்கள் மின்னின.
      வாசிப்பு இன்பத்தை நோக்கமாகக் கொண்டு, சுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்ட நாடக நூலான  “மனோன்மணீயம்” அவரின் எல்லா ஆய்வுகளையும், படைப்புகளையும் பின்னுக்குத் தள்ளி முன் வந்து நின்றுவிட்டது. 1891ல் வெளியிடப்பட்ட இந்நாடக நூல், Edward Lytton என்பவர் எழுதிய ’ The Secret Way’ என்னும் நூலின் தழுவலாகும். மனோன்மணீயம் என்னும் சொல் , அவரது பெயருடனேயே நிலைத்து விட்டது. அவருக்கு தத்துவவியல் பேராசிரியராக இருந்த, ராபர்ட் ஹார்விக்குத் தான்  தனது நாடக நூலை காணிக்கையாக்கியிருந்தார்  சுந்தரம் பிள்ளை.
             தனது ஓய்வுக்குப் பிறகு,  மகாராஜா கல்லூரியின் பொறுப்புக்குத் தகுதியானவர் சுந்தரம் பிள்ளையே  என எழுதி வைத்துச் சென்றவர் தான் பேரா.ராபர்ட் ஹார்வி. 1892ஆம் ஆண்டு,  சுந்தரம் பிள்ளையின் பணிகளைப் பாராட்டி,  திருவிதாங்கூர் அரசர் 90 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வழங்கினார். அதில் அழகான வீடு ஒன்றைக் கட்டிய சுந்தரம் பிள்ளை, அதற்கும்  “ஹார்வே புரம்” என்று பெயரிட்டு, தனது ஆசிரியரின் நினைவைப் பெருமைப்படுத்தினார். சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த மனைப் பரிசு, ஒரு கால் நூற்றாண்டு கூட நிலைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, 90 ஏக்கர் நிலமும் பறிமுதல் செய்யப்பட்ட சோகக் காட்சியும்  நடந்தேறியது.
                         சுந்தரம் பிள்ளைக்கு 1877 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சிவகாமி அம்மாள். இவர்களது ஒரே மகன் நடராஜன். வழக்கறிஞர் பட்டம் பெற்ற நடராஜன்,  பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராகவும் சில காலம் பதவி வகித்தார்.  1916ஆம் ஆண்டு, நடராஜன், திவானுக்கு எதிராகப் போராடியதால், வழங்கப்பட்ட 90 ஏக்கர் நிலமும் மீண்டும் பறிக்கப்பட்டது. அப்போது,  நீதிமன்றத்தை நாடிய நடராஜனின் கோரிக்கைகள் எடுபடவில்லை. நடராஜனின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர், 1968 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த  ஈ.எம்.எஸ் அவர்களிடம் கோரிக்கை வைக்க, அவரும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால், 2018 ஆம் ஆண்டு  வரை, மனை   இன்னும் வந்து சேரவில்லை!.
                     ஹார்வேபுரம் மனையை திவானின் ஆட்கள் கைப்பற்றும் போது, சுந்தரம் பிள்ளைக்கு வந்த கடிதங்கள் யாவும் எடுத்துச் செல்லப்பட்டன. சுவாமி விவேகானந்தர், மறைமலை அடிகள், உ.வெ.சா போன்றவர்கள் எழுதிய விலை மதிப்பில்லாத கடிதங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை. நேரிலும், கடிதங்கள் வழியாகவும் விவேகானந்தருக்கு, சைவ சித்தாந்தத் தத்துவங்களை சுந்தரம் பிள்ளை விளக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
                 சைவம் மற்றும் திராவிடச் சிந்தனைகளை உரத்துப் பேசிய பல்துறை அறிஞர் சுந்தரம் பிள்ளை, 1897-ஏப்ரல் 26 அன்று  தனது  மூச்சினை நிறுத்திக் கொண்டார். சர்க்கரை நோய் தான், சுந்தரம் பிள்ளையின் வாழ்வினை 42 வயதாகச் சுருக்கியது என சொல்லப்படுகிறது.
                   லண்டன் வரலாற்று ஆய்வு மையம் வழங்கிய FRHS பட்டம்,     M.R.A.S. பட்டம்,  ஆங்கில அரசு வழங்கிய ’ராவ் பகதூர்’ பட்டம்,  ஜெர்மனி பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம் என இவர் பெற்ற பெருமைகள் ஏராளம்.
                 ”ஆரா அமுதம் அனைய தமிழ் வளர்த்த
                  பேராசிரியர் பெருமான்”  -  என  கவிமணி தேசிய விநாயகம் சொல்ல, எல்லா தமிழறிஞர்களும் சுந்தரம் பிள்ளையின் அறிவைக் கொண்டாடினர்.  

                       1855 முதல் 1897 வரை, அவர்  உயிர் வாழ்ந்த  42 ஆண்டுகள் மட்டுமே,  பெ.சுந்தரம் பிள்ளை இங்கிருந்தார் என்பது  நிச்சயம் சரியல்ல. ஏனெனில், பார் உள்ளளவும், அதில் ஊர் உள்ளளவும், தமிழ்த் தேரும் இங்கிருக்கும்.  நீராருங் கடலுத்திய  நிலமடந்தையாம் தமிழ்த்தாயின் எழிலைப் பாராட்டும் - வாழ்த்தும் இங்கிருக்கும். அவ்வாழ்த்தெழுதிய பெ.சுந்தரம் பிள்ளையும் இங்கிருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்தென, காற்றில் கலந்த இவரது வரிகள், காலங்கள் கடந்து ஒலித்துக் கொண்டே இருக்குமல்லவா? . 
                            ஆம்,    வாழ்ந்த காலத்தின் அளவல்ல -  வாழ்ந்த போது ஒருவன் செய்த காரியத்தின் அழகே - அவனது காலத்தைத் தீர்மானிக்கிறது. அதுவே  வரலாறாகிறது.!
                                        

               

Friday, April 3, 2020

மானுடம் வெல்லும் 5

தனிமைப்படுத்திக் கொண்ட கிராமம்!


தியாகத்தின் ஞாயிறு!

  

      காலரா மற்றும் பிளேக் நோய்களுக்கான தடுப்பு மருந்தினைக்
கண்டுபிடித்த வால்டெமர் ஹாஃப்கைன் பணிபுரிந்த ஆய்வு மையம்,  பிற்காலத்தில் அவரது பெயரிலேயே நிறுவப்பட்டது. மும்பையில் உள்ள ’ஹாஃப்கைன்  ஆய்வு மையம்’ தற்போதும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைத்  தயாரித்து,  பரிசோதித்துப்  பார்ப்பதற்கான ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
        
               பாக்டீரியாக்கள் என்ற நுண்ணுயிரிகளின் வாயிலாக மனிதகுலம் கோடிக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறது. அதே நேரத்தில்,  ஆயிரக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்,  மனிதனுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தும் வருகின்றன. பாக்டீரியாக்கள் இந்த பூமியில் மனிதர்களை விட ’சீனியர்’ என்றே சொல்ல வேண்டும்.  ஆம்,  நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளாக பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உயிர் வாழ்ந்து வருகின்றன. 
   
   மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி இதுவரை கண்டுபிடித்துள்ள பாக்டீரியா வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? எண்ணிக்கையில் சொல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.  ஏனெனில், 5 என்ற எண்ணைப் போட்டு, அதன் அருகில் 30 பூஜ்ஜியங்களைச்  சேர்த்தால் என்ன மதிப்பு வருமோ, அத்தனை வகையான பாக்டீரியாக்களை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆம்,  இவையெல்லாம் நுண்ணோக்கிகளால் மட்டுமே சாத்தியமானது. கண்டுபிடித்த  27% பாக்டீரியங்களுக்கு  மட்டுமே,   விஞ்ஞானிகள் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதும் முக்கியச் செய்தி.

      காச நோயை உருவாக்கும் ’மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’, நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் ’பெப்சியெல்லா  நிமோனியா’, பிளேக் நோயை உருவாக்கிய ’யெர்சீனியா பெஸ்டீஸ்’, காலராவை உருவாக்கிய ’விப்ரியோ காலரே’ போன்ற முக்கியஸ்தர்கள் தான், மனித இனத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவற்றின் தீவிரத்தன்மையை மனிதன் தனது அறிவால் அடக்கி வைத்திருக்கிறான்; சில நேரங்களில் அவற்றை முற்றாக அழித்தும்  இருக்கிறான்.

    ஆனாலும், நாகரீக வளர்ச்சியில் புதிய புதிய பாக்டீரியங்கள் மனிதனைத் தாக்குவதற்காக கிளம்பி வருகின்றன. பாக்டீரியங்கள் மட்டுமல்ல, வைரஸ்களும் மனித இனத்தை ஆட்டிப் படைக்கின்ற மிக முக்கியமான நுண்ணுயிரிகள் தான். வைரஸ்களுக்கு எதிரான மனிதனின் போராட்டம்,  பாக்டீரிய நுண்ணுயிரிகளுக்கு எதிரான போராட்டத்தை விட மிகவும் கடுமையாக இருந்தது.  அவை பற்றிய வரலாறு ஒரு தனிக்கதை. எப்படி இருந்தாலும், நுண்ணுயிரிகளால் உருவாகும் தொற்றுநோய்கள் மானித குலத்திற்கு கடும் சவாலையே தந்திருக்கின்றன.
       
     1896ஆம் ஆண்டு தீவிரமாக இருந்த பிளேக் நோயைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்குமாறு விக்டோரியா மகாராணி உத்தரவிட்டார். அதன் படி, ‘1897ஆம் ஆண்டு, ‘தொற்று நோய் தடுப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டு,  இங்கிலாந்து மற்றும் அதன் காலனி ஆதிக்க நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. தொற்று நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், 144 தடை உத்தரவு போடுதல், நோய் பரப்புபவருக்கான தண்டனைகள், தொற்று நோய்க்கான மருத்துவச் சோதனைகளை  யாரிடமும் நடதுவதற்கான அனுமதி,, மாநில மாவட்ட எல்லைகளை அடைத்துக் கொள்ள அனுமதி  என பல்வேறு வகையான ஷரத்துகளை இந்தச் சட்டம் கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் இந்தச் சட்டத்தை எதிர்த்து, பால கங்காதரத் திலகர் போராட்டம் செய்து சிறை சென்ற சம்பவமும் நடந்தது.                
        
       எல்லாக் காலங்களிலும்,  சட்டங்களை விட, மாபெரும் கொள்ளை நோய்களிலிருந்து மனிதன் தப்புவதற்கு மிகவும் முக்கியமான செயல் என்னவென்றால் தனித்திருப்பதும் தனிமைப்படுத்துவதும் தான். அவ்வாறு செய்வது, வேகமாகப் பரவிவரும் கொள்ளை நோய்களின் பரவும் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது கூடவே, எண்ணற்ற உயிர்களையும்  காப்பாற்றுகிறது.  இதற்குச் சான்றாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தை சொல்லலாம்.

        பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ’பிளேக் நோய்’ தனது வேலையை மீண்டும் காட்டத் தொடங்கியிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் தொற்றுக்கிருமி, ஏதோ ஒரு வகையில் பரவிக் கொண்டே இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த கிராமத்திற்கு தொற்றுநோய் அப்படித்தான் உள்ளே வந்தது.

                  இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷையர்  அருகில்,  ஐயம் (Eyam)
என்றொரு கிராமம் இருந்தது. அங்கே, தையல்காரராகப்  பணி செய்து வந்த ஜார்ஜ் விக்காஸ் என்பவருக்கு ஒரு பார்சல் வந்தது.  மணப்பெண்களுக்குத் தேவையான மேலங்கியைத் தயார் செய்யும் அந்த பாரசல் துணி மூட்டை, கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது. அதனை எடுத்து உலர்த்துவதற்காக ஜார்ஜ் விக்காஸ், துணிகளை விரித்து கொடியில் காய வைத்தார். அப்போது அதிலிருந்து ஏராளமான சிறு பூச்சிகள் பறந்து சென்றன. அவை வேறுயாருமல்ல. உலகம் முழுக்க பிளேக் நோயை பரப்பி வந்த தெள்ளுப் பூச்சிகள் தான். 
            அந்தப் பூச்சிகளின் வழியாக ஜார்ஜ் விக்காஸ் பிளேக் நோய்க்கு ஆட்பட்டார். ப்ளேக்கால் பாதிக்கப்பட்ட 7 வது நாளிலேயே ஜார்ஜ் இறந்து போனார். அடுத்த ஓரிரு வாரங்களில், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடுத்தடுத்த தெரு மக்களுக்கும்  மர்மமான முறையில் இறந்து போகத் தொடங்கினர். அதே நேரத்தில் இலண்டன் மாநகர் முழுக்க 'பிளேக்' நோய் தீவிரமாகப் பரவி வருவதை இயம் கிராம மக்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆறேழு மாதங்களில் நிறைய மக்கள் படிப்படியாக இறக்கத் தொடங்கினார்கள். 1666 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அந்த கிராமத்தில் 736 பேர் இறந்து போயிருந்தார்கள்.
   அந்த சூழலில்தான், 1666 ஆம் ஆண்டு மே மாதம்,  அங்கு இருக்கக்கூடிய தேவாலயத்தின் பாதிரியாராக ரெக்டர். வில்லியம் மாம்பெஸான் (Rector.Rev.William Mompesson) ஊழியம் செய்ய வருகிறார். மக்கள் அனைவரும் இந்த கிராமத்தைக் காலி செய்து விட்டு, வேறு வேறு  நகரங்களுக்குச்  செல்வதென முடிவு செய்தார்கள். ஆனால் புதிதாக வந்த ரெக்டரின்  சிந்தனை வேறுமாதிரியாக இருந்தது.  மக்களை அவர் சரியான வழியில் நடத்த தொடங்கினார்.

            ’இங்கிருந்து கிளம்பி வேறொரு பகுதிக்கு சென்றால் அங்கு  இருக்கக்கூடிய மக்களையும் இந்த நோய் தொற்றக் கூடும். அதன் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்படும். நோயின் தீவிரமும் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.  இவற்றைத்  தவிர்க்க வேண்டும் என்றால் நாம் முன்னெச்சரிக்கையுடன் நோய்த்தொற்றை குறைக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நோய் பரவும் வேகத்தைக் குறைப்பதற்கும் நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்கும் மிகச்சிறந்த வழி ’தனித்து இருப்பதுதான்’  என்று ரெவரண்ட் வில்லியம் அறிவித்தார். அந்த இளம் பாதிரியாரின் சொற்களுக்கு, ஊரில் நல்ல மதிப்பு இருந்தது.  மீதமிருந்த அனைத்து மக்களும் வில்லியம் மாம்பெஸான் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர்.

      ரெக்டர் வில்லியம், தேவாலயப்  பூசைகள் மற்றும் நடைமுறைகளை ஊரின் வெளிப்புறத்தில் இருந்த 'குக்லெட் டெல்ஃப்'  என்ற பகுதிக்கு மாற்றினார். வீட்டில் யார் இறந்தாலும் அந்த நபர்களை அந்தக் குடும்பத்திலுள்ளவர்களே  அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இயம் கிராமத்தை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது; அதேபோல நமது கிராமத்திற்குள் ஒருவரையும் அனுமதிக்கவும் கூடாது என்பன போன்ற கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஊரின் எல்லைப்பகுதியில் கற்களால் ஆன மதிற்சுவர் ஒன்று உருவாக்கப்பட்டது. கிராம மக்களுக்குத் தேவையான பொருள்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து இலவசமாகவும், குறைந்த விலைக்கும் கொடுக்கப்பட்டன. மாம்பெஸானின் கிணற்றின் சுவரில் அந்த பொருள்கள் வைக்கப்படும். அவற்றை வாங்கும் மக்கள், உரிய நாணயங்களை கிணற்றின் கைபிடிச் சுவரில் வைப்பார்கள். இவர்கள் கொடுக்கும் பணம் வினிகர் ஊற்றிக் கழுவிய பிறகு எடுத்துக் கொள்ளப்படும். இப்படி,  கிராம மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டினை தீவிரமாகவும் அமைதியான முறையிலும் பின்பற்றி வந்தார்கள். 

       ஒரு சில குடும்பங்களில்  உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்தன. குடும்பத்திலுள்ளவர்களே இறுதிக் காரியங்களைச் செய்தனர்.  எலிசபெத் என்ற பெண்மணியின் வீட்டில் ஆறு குழந்தைகளும் அவரது கணவரும் தொடர்ச்சியாக இறந்து போயினர். அந்த நேரத்தில் திருமதி எலிசபெத் எல்லாச் சடங்குகளையும் தானே செய்து முடித்தார்.  கிராம மக்கள் தானாக முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட ’சுய தனிமைப்படுத்துதல்’ ஏறக்குறைய ஒரு ஆண்டு நீடித்தது. இறுதியில் அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பெற்றது. தனிமைப் படுத்திக் கொண்டு இருந்த நாட்களில் மொத்தம் 273 பேர் மரணத்தை தழுவியதாக, ’தேவாலயப் பதிவேடு’  கூறுகிறது. ஏனைய மக்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர். 
            இந்த கிராமத்து  மக்களின் மூலமாக, வேறொரு கிராமத்திற்கு, வேறு ஒரு மனிதருக்கு  தொற்றுநோய்  கடத்தப்படவே இல்லை என்பது தான் மிகவும் முக்கியமான செய்தி. பிளேக் நோய்க்கு எதிராக அவர்கள் காட்டிய தைரியம்,  வரலாற்றில் நிலைபெற்றது.
கிராமமே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தானாக முன் வந்து உதவி செய்தார் ரெக்டர்.வில்லியம் அவர்களின் மனைவி கேத்தரின். இதன் காரணமாக, அவருக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறது. 1666 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கேத்தரின் இறந்துபோகிறார். அந்தச் சூழ்நிலையிலும் கிராம மக்களுக்கு உறுதுணையாக, தனது பணியைத் தொடர்ந்தார் இளம் ரெக்டர்.வில்லியம்.  கேத்தரின் இறந்த போன ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக - தியாகத்தின் திருநாளாக மாறிப்போனது.

        தீவிரமாகப் பரவும் தன்மை கொண்ட பிளேக் போன்ற ஒரு தொற்று நோயை,  சுய தனிமைப்படுத்துதல் (Self Quarantine) என்ற தாரக மந்திரத்தின் மூலம் - வெற்றி கண்ட இயம் கிராமத்து மக்களின் தியாகம் - இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம்- கடைசி ஞாயிறு அன்று,  ஊரின் மையத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து ஊர்வலம் ஒன்று புறப்படும். தியாகம் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே நகர்ந்து செல்லும் அந்த ஊர்வலம்,  குக்லெட் டெல்ஃப் பகுதியை வந்து அடையும். 
         
     அங்கே,   தனிமைப்படுத்திக் கொண்ட காலத்தில்,  இறந்து போன 273 பேர், பிழைத்துக் கொண்ட 183 பேர் மற்றும் கிராம மக்களை துணிச்சலுடன் வழிநடத்திய ரெக்டர். ரெவரண்ட் வில்லியம் உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றி கூறும் திருப்பலி  நிறைவேற்றப்படும். அந்த கிராமத்திலிருந்து நோய் தீவிரமாகப்  பரவி விடாமல், தங்களை எல்லாம் காப்பாற்றிய அந்த தியாகப் பெருமக்களுக்கு நன்றி சொல்வதற்காக ஐரோப்பா முழுமையில் இருந்தும் பல்வேறு மக்கள் இந்த நிகழ்வுக்கு வருவார்கள். டெல்ஃப் பகுதியில் உள்ள பழமையான கல்லறைகள், கிணற்று மேடு போன்ற இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகு செய்யப்படும்.  
            இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறு, 'பிளேக் ஞாயிறு' என்று குறிப்பிடப்படுகிறது. அதனை பிளேக் ஞாயிறு என்று சொல்வதைவிட ’தியாகத்தின் ஞாயிறு’ என்று சொல்வது  மிகவும் பொருத்தமாக இருக்குமல்லவா?

       வரலாறு என்பது நமது ஆசான்.  வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு வரியும்,  மானுட சமூகம் எதிர் காலத்தைக் கடந்து செல்வதற்கான ’ஊன்றுகோல்’ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள மிகச்சிறிய ’இயம்’  கிராமத்து மக்கள், தங்களது தியாகத்தின் மூலம் ஒரு கருத்தை வலிமையாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.  அது என்னவென்றால், தொற்று நோய்களின்  சமூகப்  பரவலைத்  தடுப்பதற்கு மிகச் சிறந்த உபாயம் - ’சுய கட்டுப்பாட்டுடன் நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்ளுதல்.’ (Self Quarantine).

      தனிமைப் படுத்திக் கொள்வதும் தனித்து இருப்பதும் நிச்சயம்  கடினமான செயல் தான். ஆனால் பிளேக், கரோனா போன்ற பெரிய தொற்று நோய்களில் இருந்து நம்மைக்  காப்பாற்றிக் கொள்வதற்கு மிகச் சிறந்த மருந்தும் அதுதான். தனிமைப்படுத்திக் கொள்ளும் காலங்களில் பயனுள்ள வேலைகளைச் செய்யவும், நமது வாழ்வின் லட்சியங்களை சீர்திருத்திக் கொள்ளவும், எதிர்காலப்  பாதையை  திட்டமிடவும் பயன்படுத்திக்கொண்டால் - சிறைகள் கூட  சிறகுகளாய் மாறிவிடும்.
                           
             ***********************

(பாக்டீரியங்களால் உருவாகும் கொள்ளை நோய்கள் பற்றிய அறிமுகப் பகுதி நிறைவு பெறுகிறது)

(மானுடம் வெல்லும் - முதல் பகுதி நிறைவு ) 





Thursday, April 2, 2020

மானுடம் வெல்லும் 4

காலரா என்னும் கொள்ளையன்; ஹாஃப்கைன் என்னும் காவலன்.

                  'எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதே இல்லை என இறுமாப்புடன் திரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக- ஒரு புதிய எதிரி புறப்பட்டான். அவன், ஆங்கிலேயப் படை சென்ற  நாடுகளுக்கெல்லாம் கூடவே சென்றான்.  காலனி ஆதிக்க நாடுகளிலெல்லாம் தனது ஆதிக்கத்தை  நிலைநிறுத்தினான்.  பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுமைக்கும் மனித இனம் அந்த எதிரியுடன் தான் தொடர்ந்து போரிட்டது. அந்த எதிரியின் பெயர் ’விப்ரியோ காலரே’. பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த இந்த நுண்கிருமி, ’காலரா’ என்னும் கொள்ளை நோயை உருவாக்கி,  ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா என எல்லாப் பகுதிகளிலும் ஏராளமான மக்களைக் கொன்று குவித்தது.
          1817 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  கங்கைச் சமவெளிப் பகுதியில் உள்ள ஜெஸ்ஸூர்  என்ற நகரில், நிறைய பேருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. தண்ணீர் போல மலம் தொடர்ந்து வெளியேறியதால் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒரு சிலர் இறந்து போயினர்.  தாக்குப் பிடித்தவர்கள் ஓரிரு நாள்களில் மரணத்தைத் தழுவினர். அங்கிருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டே இருந்ததால், மக்கள் பயந்து ஓடத் தொடங்கினர். நோயுற்று இறந்த மனிதர்களை அதற்றுவதற்கும் எரிப்பதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. பிணங்கள் சாலை ஓரங்களில் தூக்கி எறியப்பட்டன. ஒவ்வொரு ஊராக பரவிய இந்தக் கொள்ளை நோய் டெல்லி , மதுரா, கராச்சி,  பெங்களூர் என இந்தியாவெங்கும் பரவியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த விஷயத்தில் முதலில் கவனம் காட்டாமல் தான் இருந்தது.

                  ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த நோய் வேகவேகமாக இலங்கை மியான்மர் ஜாவா தீவுகள் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிரிட்டிஷ்காரர்கள் சென்ற பகுதிகளுக்கு எல்லாம் அவர்கள் கூடவே  நோயும் சென்றது. பாரசீக வளைகுடா துருக்கி ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் இந்நோய் பரவியது ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மக்களைக் கொடுமைப்படுத்திய இந்த நோய், 1824 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் மெதுமெதுவாக மறைந்துபோனது. இந்த நோய் எப்படி வந்தது எவ்வாறு பரவுகிறது என்பதை அறிந்து கொள்வதற்குள்  பல லட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்திருந்தனர்.

       1826 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோய் தலைகாட்டத் தொடங்கியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் பரவிய இந்த நோய் 11 ஆண்டுகள் தன் வேலையை காட்டியது. பிறகு ஒரு சில ஆண்டுகள் இடைவெளி விட்டது. மூன்றாம் முறையாக மீண்டும் 1846 ஆம் ஆண்டும், நான்காம் முறையாக 1863 ஆம் ஆண்டும் இந்த நோய் உலகம் முழுவதையும் வாட்டி வதைக்கத் தொடங்கியது.  
          
              ஆங்கிலேய அரசுக்கு அப்போதுதான் அச்ச உணர்வு தலைக்கேறியது.  உடனே,  இங்கிலாந்து மற்றும் அதன் காலனிய நாடுகளில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கமிட்டிகளை அமைத்து இங்கிலாந்து ராணி உத்தரவிட்டார்.  வருவதும் போவதுமாக இருந்த இந்த நோயின் மூலத்தை கண்டறிவதற்காக உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் இரவு பகலாக ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    ‘நவீன கொள்ளைநோய் இயலின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஜான் ஸ்நோ என்பவர் 1854 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டார். கெட்டுப்போன நீர் மற்றும் உணவின் வழியாகவே இந்த நோய் மனிதர்களைப் பாதிக்கிறது என்பதை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்தார். இந்தத் தொடர்பினை மாதிரியாக வைத்துக்கொண்டு, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், நோய்த் தொற்றுக்கு காரணமான நுண்ணுயிரியை,  கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கினர். 1883 ஆம் ஆண்டு ராபர்ட் கோச் என்ற மருத்துவர் தனது நுண்ணோக்கியின் வழியாக ’விப்ரியோ காலரே’  என்ற புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்தார். அசுத்தமான நீரில் வளரும் இந்த பாக்டீரியா தான், மனிதர்களின் உடலுக்குள் சென்று - சிறு குடல் அழற்சியை உண்டு செய்கிறது. அதன் காரணமாகவே இடைவிடாத வயிற்றுப்போக்கும் வாந்தியும் மனிதனுக்கு ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். விப்ரியோ காலரே என்ற  பாக்டீரியாவின் பெயரைக் கொண்டே,  இந்த நோய்க்கு ’காலரா’  என்ற காரணப் பெயர் இடப்பட்டது.

     அசுத்தமான நீரில் உருவாகும் ’விப்ரியோ காலரே’ என்ற இந்த பாக்டீரியா 0.3 மைக்ரான் விட்டமும்,  1.3 மைக்ரான் நீளமும் கொண்டது . சாதாரணமாக வினாடிக்கு 80 மைக்ரான் தூரம் நகரும் திறன் பெற்ற இந்த பாக்டீரியாக்கள், மனிதனின் சிறு குடலில் தங்கி கடுமையான பாதிப்பை உருவாக்குகின்றன ஓரிரு மணி நேரங்களிலேயே உடலில் உள்ள அனைத்து நீர்ச் சத்துக்களையும் மலம் வழியாகவும், வாந்தி வழியாகவும் வெளியேற்றுகின்றன. இதன் காரணமாக, ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20 லிட்டர் அளவிற்கு நீர்ச்சத்து உடம்பில் இருந்து வெளியேற்றப்படுகிறது.   சில பேருக்கு அரிதாக காய்ச்சலும் உருவாகும். திடீரென ஏற்படும் அபரிமிதமான நீர்ச்சத்துக் குறைவு ஓரிரு நாள்களிலேயே அந்த மனிதனைக்  கொன்று விடுகிறது. 

           இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளிலும் உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் உருவாகின்றன. நொயாளியால் வெளியேற்றப்படும் நீரின் வழியாக மற்றவர்களுக்கும் பரவி மாபெரும் தொற்றுநோயாக இது உருவெடுக்கிறது. இந்நோய் பற்றிய குறிப்புகள் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே ’சுஸ்ருத சம்ஹிதை’ (Sushruta Samhitha)  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல ஹிப்போகிரேட்டஸ் தனது நூலில் இதே அறிகுறிகளுடன் கூடிய நோயினை விவரிக்கிறார். ஆனால் மாபெரும் தொற்று நோயாக உருவெடுத்து, உலகெங்கும் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த விப்ரியோ காலரே என்ற இந்த பாக்டீரியா, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான்.

     எதிரியைக் கண்டு பிடித்தால் மட்டும் போதுமா? அதனை வெற்றி கொள்ள வேண்டாமா?  ’விப்ரியோ காலரே’ பாக்டீரியாவை ஒழித்துக் கட்டுவதற்கான அனைத்து வேலைகளும் தொடங்கின. 1885 ஆம் ஆண்டு வாக்கில் பாக்டீரியங்களுக்கு  எதிரான பொதுவான தடுப்பு மருந்து ஒன்றினை டாக்டர் ஜேம்ஸ் என்பவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் அது எதிர்பார்த்த பலன் தருவதாக அமையவில்லை. அப்போது பிரிட்டிஷ் அரசுக்குக்  கைகொடுக்க சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார் டாக்டர் வால்டெமர் ஹாஃப்கைன் - மனித குல காப்பாளர். 

       1860 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த வால்டெமர் ஹாஃப்கைன்(Waldemar Hoffkine) ஒரு யூதர். அங்கேயே மருத்துவப் படிப்பை முடித்தபிறகு வேலைக்காகக்  காத்திருந்தார். ரஷ்யாவின் பழமைவாத கிறிஸ்தவத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் தரப்பட்டன. அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. அதன் காரணமாக நிரந்தர வேலையும் அவருக்குக்  கிடைக்கவில்லை. மருத்துவ வேலை கிடைக்காததால் மியூசியம் ஒன்றில் அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்தார் வால்டெமர் ஹாஃப்கைன்.  
              
              அந்த சமயத்தில்,  நண்பரொருவர் விடுத்த அழைப்பின் பேரில் 1888 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறினார் வால்டெமர். அங்குதான் பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் கண்டறியும் ஆய்வில் தனது நேரத்தைப்  பயன்படுத்தினார். அப்போது, பல மில்லியன் மக்களின் உயிர்களைப் பறித்த ’விப்ரியோ காலரா’  என்ற நுண்ணுயிரியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் உலகம் தடுமாறிக் கொண்டிருந்தது.  அப்போதுதான் காலராவுக்கெதிரான  தடுப்பு மருந்தினை தனது ஆய்வகத்தில் உருவாக்கியிருந்தார் வால்டெமர்.

      அந்த தடுப்பு மருந்தினை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ’களம்’ அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், இந்தியா சென்று அவரது தடுப்பு மருந்தினை சோதனை செய்து கொள்ளும் வாய்ப்பினை பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கியது. 1893 ஆம் ஆண்டு காலராவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளோடு இந்தியா வந்து இறங்கினார் வால்டெமர். அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தங்கி, கொள்ளை நோய்களுக்கான ஆராய்ச்சிகளை இரவு பகல் பாராமல் தொடர்ந்து மேற்கொண்டார். 

     காலராவுக்கு எதிராக, தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை முதலில் தனக்கு செலுத்திப் பார்த்தார். அதன்பிறகு பொதுமக்களிடம் இந்த மருந்தை சோதனை செய்து பார்க்க தயாராய் இருந்தார்.  அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முதலில் அனுமதி மறுத்தது. பிறகு பைகுல்லா  சிறைச்சாலையில் , தன்னார்வத்துடன் வருகின்ற கைதிகளிடம் மட்டும் இந்த மருந்தினை பரிசோதனை செய்து கொள்ள, ஆங்கிலேய அரசு அனுமதி வழங்கியது. மிகக் குறைந்த அளவிலான பாக்டீரியங்களை  உடலில் செலுத்தி,  அதன் மூலமாக நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்குள் உருவாக்கும் முறைப்படி (Inoculation) , சோதனைகள் தொடங்கின.

    200 நபர்கள் கொண்ட குழு ஒன்று, ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் 116 நபர்களுக்கு காலரா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. காலரா நோய் தொற்றிலிருந்து அந்த 116 பேரும் பிழைத்துக் கொண்டனர் மீதமுள்ள 84 நபர்களில் ஒன்பது பேர் இறந்து போயினர். தனது பரிசோதனை முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காலரா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வால்டெமர் விரும்பினார்.

       தேவையற்ற பயத்தில் மூழ்கிக் கிடந்த  ஆங்கிலேய அதிகாரிகளும், குறிப்பிட்ட அளவிலான பொது மக்களும் ’தடுப்பு மருந்திற்கு’ எதிராக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதத் தொடங்கினர். கடவுளின் கோபத்தால் வருகின்ற இந்த நோய்க்கு மருந்து தேவையில்லை. மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களுக்கு பலி கொடுத்து அவற்றை சாந்தப்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தினை பழமைவாத இந்துக்கள் முன்வைத்தனர். 

          இவற்றையும் மீறி தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முன்வரும் தொழிலாளர்களுக்கு  சின்ன  பொருளாதார பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளும் அந்த நேரத்திலிருந்து ஏறக்குறைய 24 மணி நேரம் ஏற்படும் மயக்கநிலை தொழிலாளர்களின் வேலையைப் பாதித்தது. அதனால் ஏற்படும் ஓரிருநாள் ஊதிய இழப்பைக் கருத்தில் கொண்டு,  தடுப்பு மருந்தினை ஏற்றுக்கொள்ள அவர்களும் முன்வரவில்லை.

         இவை எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பு மருந்தினை பரவலாகப் பயன்படுத்த தேவைப்படும் நிதியை ஆங்கில அரசாங்கம் தர மறுத்து இழுத்தடித்தது. மறுப்பு சொல்லாமல் காலம் கடத்தி பிரச்சனையை பெரிதாகியது. ஆனால்,  எந்தச் சூழ்நிலையிலும் டாக்டர் வால்டெமர் மனம் தளரவில்லை. தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி காலராவுக்கான  தடுப்பு மருந்தை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்தத் தடுப்பு மருந்து 100% வெற்றியைத் தராவிட்டாலும் பாதிப்பினை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் குறைத்தது. காலரா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் தொடங்கியது.
   
    காலராவில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அறிவியல் முயற்சிகளில் மிகவும் முக்கியமானது ஓ.ஆர்.எஸ். பவுடர் (ORS Powder).. ’ஹேமேந்திர நாத் சட்டர்ஜி’ என்ற இந்திய அறிவியல் அறிஞர், 1953ஆம் ஆண்டு இந்த மருந்தினைக் கண்டுபிடித்தார். உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுப்பதற்காக இந்த மருந்து வெகுவாகப் பயன்பட்டது. ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் சோடியம் குளோரைடு, 25 கிராம் குளுக்கோஸ் இதில் சேர்க்கப்படுகிறது. இந்த பவுடர் உடலில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்டி, உடலை தாக்குப்பிடிக்கச்  செய்கிறது. நோயுற்ற காலத்தில் கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகளை விட, இந்த நீர்ச்சத்தினை உடலுக்கு ஏற்றுவது மிகவும் முக்கியமாக இருந்தது.

  தற்போது காலரா நோயைக் கண்டறிய இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. 
         1. இருள் தள நுண்ணோக்கி சோதனை அல்லது பாலிமரேஸ் மலச்
             சோதனை
        2. காலரா கட்டில் சோதனை -  பிரத்தியோகமான வடிவில்
       உருவாக்கப்பட்டிருக்கும் கட்டிலில் ஓட்டை ஒன்று இருக்கும் அதன் வழியாக வெளியேறும் மலம் ஒரு வாளியில் சேகரிக்கப்படுகிறது.  இதன்மூலம், வெளியேற்றப்படும் மலத்தின் கன அளவும் ஈடு கட்ட வேண்டிய நீர்ச்சத்தின் அளவும்  கணிக்கப்பட்டு, அதற்குரிய  மருத்துவம் செய்யப்படுகிறது.

      விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த நூற்றாண்டில்,  தற்போது காலராவுக்கு எதிராக இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
   1.Dukoral
   2.ShanChol.
         இவற்றை எடுத்துக் கொண்டாலும் பொதுவான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் மட்டுமே காலராவை விரட்ட முடியும்.
     
                    ஏனெனில் கடந்த 2016 - 2020 ஆண்டுகளில்,  தென் அமெரிக்கா மற்றும் ஏமன் நாடுகளில் காலரா தொற்று மீண்டும் வெடித்து.  சில ஆயிரம் மனித உயிர்களை பலி கொண்டது. எனவே, முழுமையான
 பாதுகாப்பைப் பெற  சுத்தமான நீரைக் குடிப்பதும் சுத்தமான நீரால் கரங்களை அடிக்கடி தூய்மை செய்வதும், உணவினைச்  சமைத்து பாதுகாப்பாக வைத்திருப்பதும் தான்,  காலரா வராமல் தடுப்பதற்கான முக்கிய வழி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

          
             இந்தியாவில் மட்டும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய காலரா நோய் , சில வரலாற்றுச்  செய்திகளை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. ஒன்று, மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்த நோய்க்கு இட்ட பெயர் 'ஏசியாட்டிக் காலரா'.  ஏனெனில் இது இந்தியாவில் இருந்து கிளம்பிய நோய் தொற்றாம். உண்மையில் இந்த நோய்த்தொற்று எவ்வாறு கிளம்பியது தெரியுமா? ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்த வியாபார கப்பல்கள் தனது கழிவுகளை எல்லாம் இங்கே வந்து கொட்டின. அத்தகைய கழிவுகளால் மாசுபட்ட நீரின் மூலமாகவே விப்ரியோ காலரே என்ற பாக்டீரியா மனிதனுக்குள் நுழைந்து மாபெரும் கொள்ளை நோயாக மாறியது. 
                  அநத நேரத்திலும்,  கப்பல்  பணியாளர்களோடு  ஐரோப்பியக் கப்பல்கள் உலகெங்கும் காலனி ஆதிக்க நாடுகளுக்குள் பறந்து சென்றன. அவர்களுக்கு வியாபாரமும் பணமும் தான் முக்கியமாக இருந்தது. கப்பல் பயணத்தின்போது பணியாளர்களை நோய் தாக்கி விட்டால் அந்தக் கப்பலில் மஞ்சள் கொடியை (Yellow Quarantine Flag)  ஏற்றுவார்கள். அத்தகைய கப்பல்கள் துறைமுகத்தில் சில காலம் தனித்து இருக்கவேண்டும் ஆனால் அதில் வந்த ஐரோப்பியர்கள் மட்டும் சுதந்திரமாக நகரங்களுக்குள் நுழைய அனுமதி இருந்தது. தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்ற விதியை தொடர்ந்து மீறிய ஐரோப்பியர்களால் தான் காலரா நோய் உலகெங்கும் கொள்ளை நோயாக மாறியது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் தான் அவர்கள் இந்த நோய்க்கு 'ஏசியாட்டிக் காலரா ' (Asiatic cholera) என பெயர் கொடுத்தார்கள். பெரும்பாலான நேரங்களில் ஆதிக்கமும் பணபலமும் மிக்கவர்களால் தான் நாம் படிக்கும்  வரலாறு உருவாகி வந்திருக்கிறது. அப்படி என்றால் உண்மை வரலாறு?  அது எப்போதும் மறைந்தே கிடைக்கிறது.

                இரண்டாவது,  வியாபாரத் தளமாகவும் வரிவசூல் செய்யும் இடமாகவும் இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் மீது உண்மையான அக்கறை காட்டவில்லை. ஆனால் ரஷ்யாவில் பிறந்த யூத மருத்துவர் மனமுவந்து உதவினார். சாதி மதம் இனம் போன்ற வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து , அவர்களைக்  காப்பாற்ற முழு அர்ப்பணிப்போடு செயல்பட்ட  மருத்துவர்கள் பட்டியலில் வால்டமெர் ஹாஃப்கைன் மறக்க முடியாதவர்.  தடுப்பு மருந்துகளை பரவலாகக் கொண்டு செல்வதற்காக, தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தவர். ஆனால் அவருக்குள்ளும் இன உணர்வு மேலோங்கியே  கிடந்தது.  தனது வாழ்வின் கடைசிக்  காலங்களை யூத இனத்தின் முன்னேற்றத்திற்காக  செலவு செய்தார். அதற்காக ஏராளமான நிதி உதவியையும் செய்தார். 

              அவரது வாழ்க்கை வரலாற்றை  எழுதிய பதிப்பகம் ,  ’எந்த நாட்டைச் சேர்ந்தவர் என தங்களைக்  குறிப்பிட வேண்டும்’  என  அவரிடம்  கேட்டது. அதற்கு அவர் சொன்னார், 
            ” நான் ரஷ்யனும் அல்ல, பிரெஞ்சுக்காரனும் அல்ல;  என்னை ஒரு யூதன் என்றே அழையுங்கள். வேண்டுமானால் இஸ்ரேலியன் என்றோ, ஹீப்ரு மொழி பேசுபவன் என்றோ சொல்லிக் கொள்ளுங்கள்” .
       
         'மனிதகுலக் காப்பாளர்' என்ற பட்டத்திற்கு உரிய வரலாற்று மனிதரிடம் இருந்து வந்த வார்த்தைகள் இவை என்பதால் இச்சொற்கள் சிந்தனைக்கு உரியவை ஆகின்றன. சக மனிதனின் மீதான அன்பிற்கும், இன உணர்வுக்கும்  இடையிலான இடைவெளி என்பது  மெல்லிய கோடா அல்லது மலை அளவு உயர்ந்து நிற்கும்  மதிலா அல்லது  முற்றிலும் தொடர்பற்ற இரு பண்புகளா?


(தொடரும்....)
                         


           

Wednesday, April 1, 2020

மானுடம் வெல்லும் 3


கறுப்பின் நடனம்  (2)


கடிவாளத்திற்குள் பிளேக்- அலெக்ஸாண்டர்  யெர்சின்.

           
                             'சகல கிரகங்களும் உச்சத்தில் இருந்து, ஐரோப்பா கண்டத்தையே செழிப்பில் வைத்திருந்த போது, அதன்  கிரகாதிபலனில் ஒரு கேடு நடந்தது.  1345ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் தேதி, கும்ப லக்னத்தில், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்து நின்றன. அதன் கொடூர விளைவுதான் - கொள்ளை நோயும், இப்போது நாம் சந்தித்திருக்கும் பேரழிவும்' - என அரையணா அறிஞர்கள் கூவத் தொடங்கினார்கள்.                               
              '1348ஆம் ஆண்டு துவக்கத்தில், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நில நடுக்கம்  வந்திருந்தது. அதன்  விளைவாக,  நச்சு வாயுக்கள் காற்றில் கலந்தன. அதுதான் சாதாரண  காய்ச்சலை தொற்று நோயாக மாற்றிவிட்டது. வேறு ஒரு காரணமும் கிடையாது' - என சில்லறை சிந்தனையாளர்கள் தனது முடிச்சு மூட்டைகளை அவிழ்த்து விட்டனர்.
          ’உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வர வேண்டுமானால் நன்றாக ஆடிப் பாடி மகிழ்வுடன் இருக்க வேண்டும்; அப்போதுதான் நோய் நம்மை அணுகாது’ என்று எண்ணிய சிலர், மேள தாளங்களோடு ஆடிக் கொண்டே இருந்தனர். தனது  குடும்ப உறுப்பினர்கள் மறைந்த நாளில் கூட , அவர்களது ஆட்டமும் பாட்டும் நிற்கவில்லை. இப்படியாக ஆட்டத்தின் வழியாக, பயத்தை மறைத்துக் கொண்டு திரிந்தது ஒரு கூட்டம்.    
         மக்களுக்கு ஆறுதல் தரும் மற்றொரு கூட்டம் திடீரெனத் தோன்றியது.   ’கொடி இயக்கம்’ (Flagellant Movement) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு, அப்போது மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் இருவர் இருவராக வரிசையில் வருவார்கள். கண்கள் தவிர தலை மற்றும் உடலை துணியால் மூடியிருப்பார்கள். ஒவ்வொரு ஊராகச் சென்று, இடுப்பில் வைத்திருக்கும் சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொள்வார்கள். பாவம் உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மக்களுக்கும் சில நேரங்களில் அடி கிடைக்கும். இந்த இயக்கத்திற்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. ஏதேனும் ஒரு வகையில் ஆறுதல் கிடைக்காதா என எண்ணிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, எல்லா நம்பிக்கைகளுமே  பலன் தரும் மருந்துகள் தானே!. 
                  ஆனால், காலப்போக்கில் கொடி இயக்கம்  பாதை மாறத் தொடங்கியது. மக்களுக்கான அதிகார மையமாக தன்னை அது மாற்றிக் கொண்டது. எனவே, ஆரம்பத்தில்  திருச்சபையின் ஒப்புதலோடு நடைபெற்ற இந்தப் ‘புனிதப் பயணம்’, பிற்பாடு போப் ஆண்டவரால் தடை செய்யப்பட்டது. சில மாதங்களிலேயே, அந்த இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் உயிரோடு கொளுத்தப்பட்ட வரலாறு தனிக்கதை. வேகமாய் வளர்ந்தது போலவே,  1451க்குள் அந்த இயக்கம் மிக வேகமாய்க்  காலியானது.              
                     இவற்றுக்கு இடையில் தான், 1348ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், போப் ஆண்டவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், ’மனிதர்களின் பாவங்களுக்கு எதிரான கடவுளின் கோபமே இந்த கொள்ளை நோய்; அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி, கருணைமிகு மேரியின் பாதங்களில் பணிந்து மன்றாடுவதுதான்’ என சொல்லப்பட்டிருந்தது.
                  நோயில் இருந்து தப்பிய மக்கள் இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடினர். பற்களை நெரித்துக் கொண்டு, தலை மயிரை பிய்த்து மண்டியிட்டு அழுதனர். அப்போதும் கொள்ளை நோயின் தீவிரம் குறையவில்லை. எனவே, யாரைப் பலிகடா ஆக்கலாம் என ’மேல் சபை’ மூளையைக் கசக்கி விஷ மருந்தொன்றைக் கண்டுபிடித்தது. எப்போதும் போல, யூதர்களையே (Jews) பலிகடா ஆக்கிவிடலாம் என ஒரு மனதாக முடிவும் செய்தது.
             ’கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தையே அழித்து விடும் நோக்கில், யூதர்களால் பரப்பப்பட்டததுதான் இந்த நோய்’ என்ற செய்தியை, மேலிடம் இலேசாகக் கசிய விட்டது. வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், தொலைக்காட்சி உள்ளிட்ட  ஊடகங்கள் எதுவும்  அப்போது இல்லாவிட்டாலும் -எப்போதும் போல, ’வதந்தி’ காட்டுத் தீயாகப் பரவியது.    மத உணர்வுகளின் தீப்பொறியில் சிக்கி நிதானம் இழக்கும் உணர்வாளர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள் இல்லையா? சாமானிய மக்கள்   அனைவரும் யூதர்களுக்கெதிராக கிளர்ந்து எழுந்தனர்.
                  நார்போன் மற்றும் கார்கேசோன் (ஃபிரான்ஸ்) நகரங்களில் இருந்த யூதர்கள் அனைவரும் தெருவுக்கு இழுத்து வரப்பட்டு, எரியும் நெருப்பில் உயிரோடு கொளுத்தப்பட்டனர். 1349ல் சுவிஸ் நாட்டில், நூற்றுக்கணக்கான யூதர்கள் ஒரே வீட்டில் வைத்து எரிக்கப்பட்டனர். இதற்காகவே, அத்தகைய வீடுகள் பிரத்யோகமாக  உருவாக்கப்பட்டன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ட்ராஸ்பர்க்’ நகரத்து யூதர்கள்,  1349ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டு மொத்தமாக உயிரோடு புதைக்கப்பட்டனர். 
               அதே ஆண்டின் பிற்பகுதியில்  ஜெர்மானிய யூதர்கள் , கிறிஸ்தவர்களைக் கொல்ல, வன்முறை பெரிதானது. ’இயேசு நாதரை மீட்பராக ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்கள் மீதான வன்முறை சரியே’ என மேல் சபையால் அறிவிக்கப்பட்டது. நோயின் கொடூரத்தை மறைக்கவும், துயரங்களை மறக்கவும் வன்முறை அவர்களுக்கு தற்காலிக மருந்தானது.
                 350க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களில், 150க்கும் மேற்பட்ட யூதக் குழுக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. மக்களின் ஆவேச வெறி தணியத் தொடங்கியது. படிப்படியாக கறுப்பு மரணத்தின் ஆட்டமும்  அப்போது குறையத் தொடங்கியிருந்தது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நோயின் தீவிரம் உலகெங்கும் பதுங்கியே கிடந்தது.  மீண்டும் மனிதனைத் தாக்கி அழிப்பதற்கான நல்ல பருவத்தை எதிர்பார்த்து அவை காத்துக் கிடந்தன.
                                                            
                                                                   
                *********
          
                             அதே நோய்த் தொற்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் புறப்பட்டது. இந்த முறை அது பயணம் செய்ய விரும்பிய இடம் இந்தியா. கி.பி.1855 ல் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இருந்துதான் அது புறப்பட்டது.   முதலில் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நோய்க்கிருமிகள், பிறகு புனே, கொல்கத்தா , கராச்சி என புகுந்து விளையாடியது. பிறகு மெல்ல மெல்ல உலகின் ஆறு கண்டங்களுக்கும் பரவியது. உலகம் முழுக்க, அது ஏற்படுத்திய  மொத்த உயிரிழப்பு என்று பார்த்தால் அது சுமார் 15 மில்லியன் இருக்கும்.        
      ஆறு ஆண்டுகளில், ஐரோப்பாவைப் புரட்டிப் போட்டது போல, அவற்றால் மீண்டும் ஒருமுறை பெரிய ஆட்டம் போட  முடியவில்லை.  சுமார் 2500 ஆண்டுகள், கண்ணாமூச்சி காட்டிய அவை, மூன்றாவது கொள்ளை நோயாக உருவெடுத்த போது  நசுக்கப்பட்டன.            
      தமிழ்த்திரைப்படங்களில் மூன்று முறை அடி வாங்கிய கதாநாயகன், பிறகு வில்லனை விரட்டி விரட்டி அடிப்பது போலவே இங்கும் நடந்தது. காரணம் என்ன தெரியுமா? யார் என்றே அறியாத வண்ணம் சுற்றித் திரிந்த, ‘அந்த’ நோய்க் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது தான்.
         கண்ணுக்குத் தெரியாமல் சேட்டை பண்ணிக் கொண்டிருந்த களவாணியைக் கண்டுபிடித்து –உலகையே நிம்மதி அடையச் செய்த அந்த ’ ஹீரோவின்’ பெயர் – டாக்டர் அலெக்ஸாண்டர் யெர்சின் (Dr. Alexandre Yersin). களவாணியின் பெயர் – யெர்சீனியா பெஸ்டிஸ் (Yersinia Pestis)  என்ற பாக்டீரியா.
          1894ஆம் ஆண்டு, ஹாங்காங்கில் உள்ள ஆய்வுக் கூடத்தில், சராசரியாக   0.6*1.5 மைக்ரோ மீட்டர்  நீள அகலம் கொண்ட அந்த  பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது.
    அலெக்ஸாண்டர் யெர்சினும் அவரது மருத்துவ நண்பரும்  இணைந்து இந்த பாக்டீரியாவைக்  கண்டுபிடித்தனர். இறுதியில், யெர்சினின் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால், அவரது பெயரே அந்த பாக்டீரியாவுக்கு வைக்கப்பட்டது.
              தொடர்ச்சியாக,  அது எவ்வாறு மனிதனுக்குள் நுழைகிறது என்பதையும் மனிதன் விரைவிலேயே கண்டறிந்தான். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பால் லூயி சைமண்ட் (Dr.Paul Louis Simond) என்ற ஆராய்ச்சியாளர் 1898 ஆம் ஆண்டு, யெர்சீனியா பெஸ்டிஸை மனிதனுக்குக் கடத்துவது ’தெள்ளுப்பூச்சிகள்’ (Rat Flea - Xenopsylla Cheopis) தான் என்பதை உறுதி செய்தார். இந்த பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் எலிகளைக் கடித்த பூச்சிகள், மனிதனைக் கடிக்கின்றன. அதன் வழியாகவே  பிளேக் நோய் மனித இனத்துக்குள் நுழைந்தது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
              இவ்வகை பாக்டீரியாக்கள் மூன்று வகைகளில் மனிதனைத் தாக்குகின்றன. அவை:
  1. Pneumonic Plague - நுரையீரல் தொற்றின் வழியாகப் பரவும் பிளேக், 
 2. Septicemic Plague - இரத்த ஓட்ட மண்டலத்தில் உண்டாகும்
   தொற்றின்வழியே  வரும் பிளேக்.
 3. Bubonic Plague - நிண நீர் முடிச்சுகள் மற்றும் கோழைப் படலத்தின்  
    தொற்றால்  உருவாகும் பிளேக்.
                           
           ’பிளேக்’ நோய்க்கான பாக்டீரியாக்களின் பூர்விகத்தைக் கண்டறிந்த மனிதன்,  அதனைச் சும்மா விடுவானா? அதற்குரிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் (Antibiotics) உடனே கண்டறிந்தான். கூடவே, வரும்முன் தடுக்கக் கூடிய தடுப்பூசிகளையும் (Vaccine) கண்டறிந்து வெளியிட்டான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகையே ஆட்டி வைத்த  யெர்சீனியா பெஸ்டிஸ் என்ற நுண்ணுயிரி,  தற்போது வலுவிழந்து விட்டது.  கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 200 பேர் மட்டுமே இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 'உலக சுகாதார அமைப்பு' (WHO)அறிவித்துள்ளது. தற்போதுள்ள கொடூர நோய்களின் பட்டியலில் இருந்து பிளேக்  நீக்கப்பட்டிருக்கிறது.
                    பிளேக் நோய்க்கெதிரான முதல் தடுப்பூசி தயாரான இடம் நமது இந்தியா தான்.  இந்தியாவில் தங்கி,  அதனைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா? 
               பிளேக்  நோய்க்குக் காரணமானவர்கள்  என குற்றம் சாட்டப்பட்டு, எந்த யூத இனம் மில்லியன் கணக்கில் கொன்று அழிக்கப்பட்டதோ, அதே யூத  இனத்தில் பிறந்து வந்த வால்டெமர் ஹாஃப்கைன் தான் (Dr.Waldemar Haffkine) - யெர்சீனியா பெஸ்டிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியைக்(1897-98) கண்டறிந்தார்.  இந்தியாவில் கட்டற்றுப் பரவிய காலரா நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடித்தது அவர் தான் என்பது கூடுதல் சிறப்பு .
                  ஐரோப்பாவின் தலைமை பீடமான இங்கிலாந்தில் பிறந்த -  நவீன அறுவை சிகிழ்ச்சையின் முன்னோடி மருத்துவர் - டாக்டர். ஜோசப் லிஸ்டரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 
”மனித குலத்தையே காப்பாற்ற வந்த மீட்பர் - வால்டமெர் ஹாஃப்கைன் ”.
                
(தொடரும்...)