Sunday, August 5, 2018

நாளும் அறிவோம் -ஆகஸ்ட் 5

சிறுகதை மன்னன் - மாப்பசான்

ஆகஸ்ட் 5... இன்று!

  சிறுகதை உலகின் மன்னன் என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர்,கவிஞர் கை-டி-  மாப்பசான் (1850-1893) பிறந்த நாள் இன்று. 
             1850ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிரான்சு நாட்டில், துறைமுக நகரொன்றில் மூத்த மகனாகப்  பிறந்தார். சில காலங்கள் மட்டுமே மகிழ்சியாய்க் கழிந்தன.  கருத்து வேறுபாடு காரணமாக இவரது பெற்றோர் மணமுறிவு பெற்ற போது, இவரது வாழ்வில் கசப்புகளின் காலம் தொடங்கியது. . தனது 11 ஆவது வயதிலிருந்து,  மாப்பசான் தாயின் வளர்ப்பிலேயே வளரத் தொடங்கினார். அவரது தாய் இலக்கிய ஆர்வம் மிக்க பெரிய படிப்பாளி. ஷேக்‌ஷ்பியரின் எழுத்துக்களில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது மகனுக்கு, வேண்டியமட்டும் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். 
                 மாப்பசான், 1869ல் , சட்டம் படிக்க முடிவு செய்து, கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இராணுவ வீரனாகும் ஆசை அவரைத் துரத்தியதால், இராணுவத்தில் இணைந்தார். ப்ரஷ்யாவுக்கெதிரான போரில், ஆர்வமுடன் கலந்து கொண்டார். பின்,  1872ல் அரசாங்க அலுவலக எழுத்தராகப் பணியில்  சேர்ந்தார்.
                 குடும்ப நண்பட் கஸ்டவ், இவருக்கு எழுத்துத் துறையில் குருவாக இருந்து வழிநடத்தினார். இவரது தொடர்பின் மூலம், துர்கனேவ் போன்ற எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தது.  வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். 
              சிறுகதைகளில், கதையை மட்டும் சொல்லிச் செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை, உளச்சிக்கல்கள், மீளும் தன்மை  போன்றவற்றை தெளிவாக எழுதினார். இதன் மூலம் சிறுகதைகளின் கூறுமுறை மாறத் தொடங்கியது. தனது எழுத்தாற்றலின் வழியே, கதாபாத்திரங்களை வாசகனின் நெஞ்சத்தில் உலவ விட்டார்.  போர்க்காலத்தில் பாதிக்கப்படும் சராசரி குடிமகனின் வேதனை, பெண்களின் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் என 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். மனித மனம் எதிர்கொள்ளும்  பாலியல் சிக்கல்களையும் நுட்பமாக எழுதிக் காட்டினார். ஒரு கட்டத்தில், ஆபாசப் பத்திரிக்கைகள் இவரது பெயரை மட்டும் அட்டையில் போட்டு , ஆபாசக் கதைகளை வெளியிடும் நிகழ்வும் நடந்தது. பெரும்பாலான இவரது கதைகள் Semi Autobiographical வகையைச் சார்ந்தது. Ball of Fat, The Necklace, Bell Ami போன்ற படைப்புகள் காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. 
            மொத்தத்தில் இவரது  அனைத்து கதைகளும் , பிரான்ஸில் மட்டுமல்ல, உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது கதைகளையும், கதை சொல்லும் முறைகளையும் உலக எழுத்தாளர்கள் பலரும் முன் மாதிரியாகக் கொண்டனர். ஓ ஹென்றி, சோமெர்செட் மாம், ஹெச்.ஜேம்ஸ் போன்ற பெரிய எழுத்தாளர்களும்  இவரைப் போலவே எழுத முயற்சித்தனர். லியோ டால்ஸ்டாய் , மாப்பசானின் கதைகளையும், எழுத்தாற்றலையும் வெகுவாகப் பாராட்டி கட்டுரை எழுதினார். புகழின் உச்சிக்கே சென்றார் மாப்பசான். 
        ஆனால்,    மனக்கவலைகளும், குழப்பங்களுமே அவரை, தொடர்ந்து   எழுத வைத்தன. அனைத்தையும் எழுத்தில் வடிக்க  முடிந்த அவரால், மனச்சுமையை மட்டும் இறக்கி வைக்க முடியவில்லை. இளம் வயதில்  இவரை பாதித்த ‘சிபிலிஸ்’( Syphilis- A kind of Sexually Transmitted disease ) எனப்படும் ஒருவகை நோய் , விடாமல் துரத்தியது. கூடவே,  மனச்சிதைவு காரணமாக  மனமும்   சமநிலையில் இருக்க மறுத்தது.  ஆனால் எழுத்துத்திறன் மட்டும் கடைசி வரை குறையவே இல்லை. 
        1892, ஜனவரி  மாதத்தின் அதிகாலைப் பொழுதொன்றில், கூரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டார். மனதோடு பேசிக்கொண்டே, கழுத்தினை அறுக்கத் தொடங்கினார். இறுதியில்,  அரை உயிரோடு காப்பற்றப்பட்டு, பாரிஸில் ஒரு மன நல மையத்தில் சேர்க்கப்பட்டார். மாப்பசான் உயிர் பிழைத்தார். ஆனால்,  மனநலம் மட்டும் மீண்டும்  சரியாகவே  இல்லை.  ஓராண்டு கழித்து, 1893, ஜூலை 6ஆம் தேதி, தனது,  43 ஆம் வயதில், சிறுகதைகளின் மன்னன்,  தனித்த வீட்டின் அறைகளுக்குள்ளாகவே  இறந்து போனார். 
           தற்போது,  பாரிஸ் நகரத்தில்,   மாண்ட்பார்னஸி கல்லறைத் தோட்டத்தின் 26ஆவது பிரிவில், குழப்பங்கள்,  மனச்சிக்கல்கள் ஏதுமின்றி இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் மாப்பசான். வாழ்க்கை என்பது என்னவென்று கேட்க, நாம்  அவரை எழுப்பவேண்டியதில்லை. ஏனெனில் தனது  கல்லறை வாசகத்தையே, கேள்விக்குப் பதிலாக தந்து விட்டுப் போயிருக்கிறார். .    அவர் சொன்னபடியேதான் ,  கல்லறை வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 
           “I have coveted Everything and taken pleasure in Nothing".
    
     ஒளியை விடவும் வேகமாய் நீள்கின்றன மனதின் ஆசைகள். அப்படி என்றால், வாழ்வெனும் கோப்பையை நிரப்புவதும், முழுதாய் சுகிப்பதும் நடக்குமா?  
 ஆம்,   
நடப்பவை யாவும் நடக்கட்டும் - எனக் கடந்து செல்லும் மனமே - 
கடைசி நொடி வரை வாழ்கிறது.
       

        
                 
            



No comments:

Post a Comment