Tuesday, August 28, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 28

மறுமலர்ச்சி  - ஸ்ரீ நாராயண குரு.

ஆகஸ்ட் 28 ....இன்று!


”கேரளாவின் மறுமலர்ச்சி நாயகன் ஸ்ரீ நாராயண குரு”                                           - ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.
     
        நாயரைக் கண்டால் ஈழவர்கள் எட்டடி தூரம் இடைவெளி விட்டு, நடக்க வேண்டும்; ஈழவர் வந்தால் புலையர்கள் எட்டடி தூரம் நகர்ந்தே செல்ல வேண்டும்; நாயாடிகள் என்ற பிரிவினர் இவர்கள் யார் முன்னும் வரக் கூடாது. நாயாடிகள் கண்ணில் பட்டாலே தீட்டு தான். - 19 ஆம் நூற்றாண்டில் கேரளா இப்படித்தான் இருந்தது. இதற்கு தீண்டாப்பாடு என்று பெயர். தீண்டாமை விதையின்  விஷ விருட்சமான ‘திண்டாப்பாடு’, கேரளாவெங்கும்  செழித்துக் கிடந்தது. 
       
  அந்த நேரத்தில் தான், புலையர் சமூகத்தில் புரட்சிப் புயலென அய்யன் காளி(1863) பிறந்தார். ஈழவ சமூகத்திலிருந்து ஈடு இணையில்லாத நாராயண குரு(1855), ஆன்மீகப் புயலென எழுந்து  வந்தார்.  இவர்கள் இருவருமே, ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிறந்தவர்கள் தான் என்பது கூடுதல் சிறப்பு.  இன்று, ஆகஸ்ட் 28, கேரளாவில் அரசு  பொது விடுமுறை. 
       கேரளாவின் மறுமலர்ச்சி நாயகன் ஸ்ரீ நாராயண குரு(1855-1928)  பிறந்த நாள் இன்று. ஆவணி மாதம், சதய நட்சத்திரத்தில் பிறந்த நாராயணனின் பெற்றோர் பெயர், மாடன் ஆசான் - குட்டியம்மாள். செம்பழந்தி கிராமத்தில்,  ஈழவ சமுதாயத்தில் பிறந்த நாராயணனை, அப்பகுதி மக்கள் ‘நாணு’ எனச் செல்லமாக அழைப்பர். கிராம மக்களுக்கு , ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைச் சொல்லும் மாடன் ஆசான் கொஞ்சம் சமஸ்கிருத அறிவும் பெற்றவர்.
   
  தாய்மாமா வைத்தியர் கிருஷ்ணன் அவர்கள், நாராயணனுக்கு தமிழ், சமஸ்கிருதம் மொழிகளைக் கற்றுக் கொடுத்தார். அமர்கோசம், சித்த பேதம் என வைத்திய நூல்களையும் அறிமுகம் செய்தார். கும்பம்பள்ளி ராமன் பிள்ளையிடம் கல்வி கற்கும் வாய்ப்பு நாராயணனுக்குக் கிடைக்கிறது. வேதங்களையும், உபநிடதங்களையும், தர்ம  சாஸ்திரங்களையும் கற்றுக் கொள்கிறார். தனியே அமர்ந்து தியானிப்பதும், தன் போக்கிலேயே பயணிப்பதுமாக இருந்த நாராயணனுக்கு, களியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சில காரணங்களால்  இவர்கள் திருமண வாழ்வு  நீடிக்க வில்லை.   
   
  திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த தைக்காடு அய்யாவு என்பவரிடம் தமிழும், ஹட யோகமும்  கற்றுக் கொண்டார். தமிழில் உள்ள  சித்தர் பாடல்கள், சமய இலக்கியங்களை ஆர்வத்துடன் அறிந்து கொண்டார். தனது 23 ஆம் வயதில் வீட்டை விட்டுக் கிளம்பிய இவர், 7 ஆண்டுகள் பயணத்திலேயே இருந்தார். பயண காலத்தில், சாதி மத வேறுபாடு பார்க்காத பல ஞானிகளிடம் உபதேசம் பெற்றார். மீண்டும் திரும்புகையில்,  நாராயணன், நாராயண குருவாக மாறி வருகிறார்.
       
    நெய்யாற்றங் கரையில் இருந்த அருவிக்கரை என்னும் ஊரில், 1888 ஆம் ஆண்டு, சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்கிறார்.  ஈழவன் ஒருவன் சிவலிங்கம் வைத்து, பூசை செய்யலாமா என கேரளாவெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. அதற்கு நாராயண குரு சொன்ன புகழ் பெற்ற பதில், “நான் நிறுவியது நம்பூதிரிகளின் சிலையை அல்ல”. மேலும்,  “ சாதி, மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் ஒன்றாய் வாழும் உதாரண தலமிது”, என கோவிலின் முகப்புச் சுவரில் எழுதி வைத்தார்.
   
      1904 ஆம் ஆண்டு,சிவகிரியில் அம்பாள் ஆலயம் ஒன்று அமைத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 1913 ஆம் ஆண்டு, ஆலுவா என்னுமிடத்தில் ‘அத்வைத ஆசிரமம்’ நிறுவினார். ஆரம்பத்தில் புதிய புதிய ஆலயங்களை நிர்மாணித்து, அனைத்து சாதியினரையும் ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார் நாராயண குரு. சில காலங்களுக்குப் பிறகு, ஆலயங்களில் சிலைகளுக்குப் பதிலாக கண்ணாடியை வைத்தார். மக்களை பக்தித் தளத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
         
  புலையர் இனத்தில் பிறந்ததால், கடவுள் பெயரான பத்மநாபன் என்ற பெயரைத்  துறந்து,  கர்நாடகாவில் வசித்து வந்த டாக்டர் பல்பு “ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபையைத்” தோற்றுவித்தார். வற்கலையில் ஸ்ரீ நாராயண குருகுலம் தொடங்கப்பட்டது. குருகுலம் சார்பில் மாநிலமெங்கும் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஈழவர்களுக்கும், புலையயர்களுக்கும் சமஸ்கிருதக் கல்வி அளிக்கப்பட்டது. அது, சாதி வேறுபாடுகளைக் களைய அவசியத் தேவை என நாராயண குரு எண்ணினார்.
  1916ல் ரமண மகரிஷியைச் சந்தித்து, ஞான உரையாடல் நிகழ்த்தினார். 1923ல் நாராயண குருவைச் சந்தித்த மகாகவி தாகூர் , ’இவர் பாரததேசத்தின் மகரிஷிகளில் ஒருவர்’ என நெகிழ்ந்தார். 1925 ஆம் ஆண்டு, நாராயண குருவைச் சந்தித்த காந்தியடிகள்,  ’தர்ம சாஸ்திரத்தில் எனக்கு இப்போதுதான் தெளிவு ஏற்பட்டுள்ளது’ என்று சொன்னார். நாராயண குரு ஓர் ’அவதார புருஷர்’ என எழுதினார் காந்தியடிகள்.
 
 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஸ்ரீ நாராயண குரு, திருக்குறள் மீது கொண்ட காதலால் , அதனை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நாராயண குருவின் ‘ஆத்மோபதேச சதகம்’ புகழ் பெற்ற கவிதைத் தொகுப்பாகும். கேரள மகாகவி குமாரன் ஆசானும், நடராஜ குருவும் இவரது இரு  முக்கிய சீடர்கள்.
       
   கல்வி, தொழில் வளர்ச்சி, ஆன்மீகத் தெளிவு இவற்றினைக் கொண்டு சாதி, மத வேறுபாடுகளைத் துரத்தி விடலாம் என்பதையே வாழ்நாள் முழுக்க வலியுறுத்தினார்.  “நாயர்களின் தீண்டாமையை ஒடுக்க, ஈழவர்கள் அனைவரும் புலையர்களை அரவணைக்க வேண்டும், நாயாடிகளிடம் நட்பு கொள்ள வேண்டும்” என்று சொன்ன ஸ்ரீ நாராயண குரு, 1928 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி , சமாதி நிலை அடைந்தார். 
                        இன்றும், வற்கலையிலும், ஊட்டி ஃபெர்ன்ஹில் குரு குலத்திலும் , ஸ்ரீ நாராயண குருவின் கனவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.     ‘ஒரு சாதி, ஒரு  மதம் , ஒரே தெய்வம்’ எனும் அவரது  முக்கிய உபதேசம் , நடைமுறை வாழ்வில் எப்போது சாத்தியமாகும் என்பதுதான் தெரியவில்லை.

        ’சாதி’ அரசியலும், ’சாதி ஒழிப்பு’ அரசியலும் - அழியும் போதுதான் - மனங்கள் இணைந்து -  மகிழும்  மானுடம் -  மண்ணில் நிலைபெறும்.!
   
   


          

No comments:

Post a Comment