Monday, March 30, 2020

மானுடம் வெல்லும் 2

மானுடம் வெல்லும் 2

Plague of Black Death.

          
கறுப்பின் நடனம்   (1)
               
             1347ஆம் ஆண்டு, மே மாதம்,  கருங்கடல் பகுதியில் இருந்த முக்கிய  வர்த்தக நகரமான காஃபாவிலிருந்து, கான்ஸ்டாண்டிநோபிள் துறைமுகத்திற்கு சில இத்தாலியக் கப்பல்கள் வந்து நின்றன. அவை அத்துறைமுகத்திலேயே ஓரிரு வாரங்கள் தங்கின.  பயணக் களைப்பில் இருந்த    சில மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்திலேயே தங்கிக் கொள்ள, அவர்களுக்குப் பதிலாக புதிய மாலுமிகள் சிலர் கப்பலில்  வந்து  இணைந்து கொண்டனர். கப்பல்களில்  இருந்த சரக்குகள்  அங்கு காத்திருந்த பல்வேறு கப்பல்களில் ஏற்றப்பட்டன. சரக்குகள்  ஏற்றப்பட்ட கப்பல்கள்  ஆப்பிரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டன. இத்தாலியக் கப்பல்கள் சிசிலியன் துறைமுகத்தை நோக்கி, தனது பயணத்தைத் தொடர்ந்தன.

                      மங்கோலியா, சீனா போன்ற கிழக்கு நாடுகளிலிருந்து, பட்டுப் பாதை (Silk Road) வழியாக - நீண்ட தூரம் பயணித்து வந்த நுண்ணுயிரிகள், மாலுமிகள் வழியாக   கான்ஸ்டாண்டிநோபிள் துறைமுகத்தில் இறங்கியதையும், அவற்றுள் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுலா கிளம்பியதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.  பிறகு சாவகாசமாக இத்தாலியக் கப்பல்களோடு தனது பயணத்தைத்  தொடர்ந்தன நுண்ணுயிரிகள். அந்த நுண்னுயிரிகள் யாவும் கப்பல் பயணிகள் அல்ல;  மாறாக,கப்பலில் பயணித்து வந்த எலிகளின் மேல், அவை  பயணித்து வந்தன என்பதை வெகு தாமதமாகவே விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

                       1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சிசிலியில் உள்ள மெஸ்ஸினா துறைமுகத்திற்கு, 12 இத்தாலியக் கப்பல்களும் வந்து சேர்ந்தன. துறைமுக அதிகாரிகள் முன்னிலையில், கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக சரக்குகள் வைப்பு அறையத் திறந்து காட்டினர். அவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறைக்குள்ளிருந்து அழுகிய நாற்றம் வெள்ளம் போல் வெளிவந்தது. அங்கே, இறந்து போன மாலுமிகளின் உடல்கள் சில; கொஞ்சம் கொஞ்சமாக  இறந்து கொண்டிருக்கும் மாலுமிகள் சிலர். துறைமுக அதிகாரிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் அனைவரும் கப்பலை விட்டு இறங்குவதற்கு, முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

                       பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பதை நாமே புரிந்து கொள்ளலாம் அல்லவா? பரிசுப் பொருள்களும், பெரும் பணமும் எப்போதுமே சட்டங்களை வளைக்கும் வல்லமை பெற்றதல்லவா? அங்கும் அதேதான் நடந்தது. திடீரென, நல்ல நிலையில் இருப்பதாகக் கருதப்பட்ட கப்பல் ஊழியர்கள் மற்றும் மாலுமிகள் அனைவரும் கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது கிடைத்த அனுமதி என்பது, ஐரோப்பா முழுவதையும் மரண வீதியாக மாற்றப்போகும் கொள்ளை நோய்க்கான வாசற்கதவு என்பதை, துறைமுக அதிகாரிகள்  நிச்சயம் அறிந்திருக்கவில்லை.

   கப்பலில் வந்தவர்கள், துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்களோடு கை குலுக்கிக் கொண்டு, நகருக்குள் நுழைந்தனர். கூடவே, நோய்த்தொற்றும் நகருக்குள் புகுந்தது. தனது கொடூர  வேட்டையை ஆரம்பித்தது. ஏனெனில், துறைமுக அனுமதிக்காக பெரும் பணமும், பொருள்களும்  கை குலுக்கிக் கொண்ட போது,  நோய்த்தொற்றும் எளிமையாய் நுழைந்திருந்தது.

               
                   எல்லா நிகழ்வுகளுக்கும் மூலாதாரமாய் இருந்த எலிகள்,    கப்பலின் கீழ்தளத்தில் வெகுநாள்களாய்க் காத்துக் கிடந்தன. நங்கூரமிட்டு கப்பல்கள் நின்றவுடன், எலிகள் பெருமூச்சு விட்டன. பிறகு,  கரையைக் கண்ட உற்சாகத்தில், துள்ளிக் குதித்து நாட்டுக்குள் நுழைந்தன. தான் சுமந்து வந்த  நுண்ணுயிரிகளை, ஐரோப்பா எங்கும் விதையெனைப் பாவின.
   
                      விளைச்சலுக்காக நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. ஒரே வாரத்தில் எல்லாம் மாறிப் போயின. நோய்த்தொற்று கண்டவர்களுக்கெல்லாம் முதலில் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் இருந்தாலும் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தது.  பிறகு, அவர்களது இடுப்பு, அக்குள் அல்லது கழுத்துப் பகுதிகளில் கட்டிகள் உண்டாயின. கறுப்பு நிறத்தில் இருந்த அவை, சில நேரங்களில் கோழி முட்டை அளவை விட பெரியதாக இருந்தன. அக்கட்டிகளில் இருந்து, இரத்தமும் சீழும் வழியத் தொடங்கியது. கூடவே, கடுமையான இருமல் அவர்களை பாடாய்ப் படுத்தியது. அவர்களது வியர்வை, கட்டிகளில் இருந்து வந்த இரத்தம், சிறுநீர், மலம், மூச்சுக் காற்று  என எல்லாமே தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றத்தைக் கொண்டிருந்தன.

                   எல்லா அவஸ்தைகளும் பத்து நாள்கள் கூட நீடிக்கவில்லை. தாளாத வலியோடு இருந்த அவர்களை,  மரணம் கட்டி அணைத்துக் கொண்டது. ஆனால், அந்த பத்து நாள்களுக்குள் அவர்களோடு  தொட்டுப் பேசியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அத்தனை பேருக்கும் இந்நோய் பரவியது. அவர்கள் உடல்வழி வெளிப்பட்ட  இருமல் மற்றும் கெட்ட நீரின் திவலைகள் வழியாக அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொண்டது. சமூகத்தொற்றாக மாறியதால், மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியத் தொடங்கின.


         நோயாளிகளைக் காப்பாற்ற மருத்துவர்கள் என்னென்னவோ வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தார்கள். நோயாளிகளின் உடலை வினிகரில் கழுவி சுத்தம் செய்து, மருந்து தடவினார்கள்.  மலர்களின் சாறு எடுத்து, அதில் நோயாளிகளைக் குளிப்பாட்டினார்கள். இடுப்பிலும் கழுத்திலும் வந்த கட்டிகளைக் குணப்படுத்த முயன்றார்களே ஒழிய, அது வந்ததற்கான காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை.

                  எப்படியோ உயிர்  பிழைத்த மக்கள்,  நோயிலிருந்து விடுபட, விலகி ஓடுவதுதான் சரியான முடிவு என்பதை மட்டும் உணர்ந்து கொண்டார்கள்.  கடற்கரை நகரங்களில் இருந்தவர்கள் எல்லாம் , கிராமங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். விலங்குகள் மற்றும் சமூகப் பரவல் காரணமாக, கிராமங்கள் ஏற்கெனவே  தொற்று நோயின் பாதிப்பில் இருந்தன. விளைந்த பயிர்களை அறுவடை செய்யக் கூட யாரும் வரவில்லை. விளைச்சலை விற்பனை செய்யவும் முடியவில்லை.
                         
                          மக்கள் அதிகமாக சேர்ந்து வசிக்கும் மடங்கள், துறவியர் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருந்தவர்களை - தொற்று நோய் வளைத்துச் சுருட்டி மொத்தமாகக் காலி செய்தது. உதாரணமாக, மாண்ட்பெல்லியர் நகரில் இருந்த, 141 டோமினிகன் சபை சகோதரர்களில்  ஒருவர் மட்டுமே எஞ்சினார்.                         

                எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நோய் தாக்கிய , ஓரிரு நாளிலேயே   இறந்து போனார்கள். ஏனையவர்களுக்கு காலக்கெடு  அதிக பட்சம் பத்து நாள்களே என்ற அளவில் தான் நோயின் தீவிரம் இருந்தது. நோயாளிக்கு சிகிழ்ச்சை அளிக்கும் மருத்துவர், நோயாளிக்கு முன்னதாகவே இறந்து போன கதையும் நடந்தது. ஆனால், நோயாளிகளை எப்படியும் குணமாக்கி விடவேண்டும் என்ற அர்ப்பணிப்பு மட்டும், மருத்துவர்களை விட்டு விலகவே இல்லை. ஆம்,  மருத்துவர்களின் சேவை என்பது மெழுகென தன்னை உருக்கி, உயிர் வெளிச்சம் கொடுக்கும் மகத்தான அறப்பணி ஆகும்.  அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவது என்பது, மானுட சமூகத்தின் வாழ்நாள் கடமை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

         என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் அனைவரும் தவித்துக் கிடந்த போது, .  இவ்வளவு காரியங்களையும் நடத்திக் கொண்டே, தனது நீண்ட பயணத்தை இடைவிடாமல் தொடர்ந்தன நோய்க்கிருமிகள்.  இத்தாலி வழியாக, மேற்கே நகர்ந்து, ஐரோப்பாவின் எல்லா நாடுகளுக்கும் ஒரு ‘விசிட்’ அடித்தன.  ஆறே ஆண்டுகளுக்குள்,  மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பியர்களின் கதையை முடித்து, பரலோகம் அனுப்பி வைத்தன. எண்ணிக்கையில் சொல்வதென்றால், சுமார் ‘25 மில்லியன் மக்கள்’.

               அங்கே, வாழ்வு தரும் மருத்துவமனைகளில் இடமில்லை; நம்பிக்கை தரும் தேவாலயங்களின் கதவுகள் திறக்கவில்லை; தப்பிப் பிழைத்தவன் ஆதரவு ஏதுமின்றி தனியனாய் அலைந்தான்.  ஐரோப்பா எங்கும் ’பய உணர்வு’ காற்றைப் போல படர்ந்து திரிந்தது. மன்னிப்பை எதிர்நோக்கும் சாமானியன் முதல் வழிகாட்டும் குருமார்கள் வரை சகலரையும் பயம் தொற்றிக் கொண்டது. தொற்று நோயைக் காட்டிலும், பற்றிப் படரும் பய உணர்வு மிகவும் ஆபத்தானதல்லவா?.

    மருத்துவ அறிவியல் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க, கள நிலவரம் கை மீறிப் போய்விட்டதை ஆளும் வர்க்கம் அறிந்து கொண்டது.  இந்த கடினமான சூழலுக்குக் காரணம் என்னவாக இருக்க முடியும், கடிவாளம் போடுவது எப்படி என்பதற்கு அதிகார சபை ஒரு பட்டியலே  தயாரித்தது.  மனித குல வரலாற்றில் - அதிகார சபை என்பதும், மத சபை என்பதும் பெரும்பாலான காலங்களில் இரயில் தண்டவாளங்கள் போலவே பயணம் செய்தன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், அந்தப் பட்டியல் எப்படி இருந்திருக்கும் என்பதை நாமே எளிதில் யூகம் செய்யலாம்.

          விநோதமும், கொடூரமும் நிறைந்த அந்த காரணப் பட்டியலில் -  எலிகளின் மேல் ஏறி, கப்பலின் வழியே பயணம் செய்து - ஐரோப்பாவையே சுற்றி வந்த  ’நுண்ணுயிரிகள்’ இடம் பெறவில்லை என்பது தான் சுவாரசியம்!

                    
(தொடரும்...)


                  

Sunday, March 29, 2020

மானுடம் வெல்லும் 1


மானுடம் வெல்லும் - 1


Plague of Justinian.


         454 கோடி வருடங்களின் வரலாற்றைக் கொண்ட இந்த பூமிப்பந்தில் மனித இனத்தின் ஆயுள் என்பது வெறும் ஐந்து இலட்சம் ஆண்டுகள் தான். அதிலும், வளர்ச்சி பெற்ற மானுட உடலமைப்பு தோன்றியது மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முதுகெலும்பை நிமிர்த்தத் தொடங்கிய மானுட விலங்கு, பூமியையே ஆள நினைத்தது.  மூளையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாக, ஒட்டு மொத்த உயிரினங்களையும் அடக்கி - உலகினை  ஆளும் ஆசை அதற்கு  ஏற்பட்டது. இறுதியில், ஓரளவு அதனை சாதித்தும் காட்டியது மானுடம்.
                        
               மனிதன்,  தன் இனத்திற்குத் தானே பெயர் வைத்துக் கொண்டான்.  என்ன பெயர் தெரியுமா?  ‘ஹோமோ சேப்பியன்ஸ்’.(Homo Sapiens). அதன் பொருள் ‘அறிவுள்ள மனிதன்’.  ஆனால், தனது அறிவால் இந்த உலகினை வென்று காட்ட, மனிதன் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமில்லை.
 
             கண்ணுக்குத் தெரிந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களை அடக்கி ஆள, கோடிக்கணக்கான மனித உயிர்கள் மண்ணில் சரிந்திருக்கின்றன. அப்படி தியாகம் புரிந்த மானுடர்களின் தோள்களின் ஏறித்தான் மனித குலத்தின் அறிவியலும், நாகரீகமும் உச்சத்திற்கு வந்துள்ளன. 

             மானுட அறிவால் முழுதும் வெல்ல முடியாத மற்றொரு உயிர்க் கூட்டமும்  இந்த பூமியில் உண்டு.  அறிவியல் என்னும் ஆயுதத்தால்,   மனிதன் அவற்றை அழிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் -  வேறு வேறு வடிவத்தில் எழுந்து வந்து, மனிதனின் அறிவாற்றலையும்,  அவன் தன்னம்பிக்கையையும் அசைத்துப் பார்க்கின்றன அவை.

         ஆம், இந்த மண்ணில் பல கோடி ஆண்டுகளாய், காலத்திற்கேற்ப தன்னை வளர்த்து கொண்டிருக்கும் ’நுண்ணுயிரிகள்’(Micro-Organism) தான் அந்த உயிர்க்கூட்டம்.  வடிவம் பல எடுத்தாலும், இந்த மண்ணை விட்டு அகலாத சிரஞ்சீவிகள் அவை. 

           மனிதனுக்கும் நுண்ணுயிரிகளுக்குமான முடிவற்ற போர்,  எல்லாக் காலத்திலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.    கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலை குலைந்து நிற்கும் இந்த நொடி வரை, மனிதன் மீதான தாக்குதலை நுன்ணுயிரிகள் நிறுத்தி விடவில்லை. அதே நேரத்தில், அவற்றை அழித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டும் பணியில் மனிதனும் சளைத்து விடவில்லை.
             
                        கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிப்பதற்கே  மனிதனுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. 1675ஆம் ஆண்டு ஆண்டன் வான் லூவன் ஹாக் என்பவர் தனது எளிய நுண்ணோக்கியால் முதன்முதலாக நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். அதன் பிறகே, ’நுண்ணுயிரியல்’ என்னும் முறையான அறிவியல் பிரிவு தோன்றியது.
                 
          ஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, ’நிகோடாஸ்’ என்னும் நுண்ணுயிரிகள் வாழ்வதைப் பற்றி,  வர்த்தமான மகாவீரர் போதித்திருக்கிறார். கி.பி. முதல் நூற்றாண்டில், ரோமானிய அறிஞர் மார்கஸ் டி வாரோ , ‘காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மனிதனுக்கு நோயைக் கொண்டு வருகின்றன’ என தனது, ’வேளாண்மை’ என்ற நூலில் எழுதியுள்ளார். இப்படியாக, எல்லாக் காலத்திலும் நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வும், அறிவுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தன.

  நுண்ணோக்கிகள் மற்றும் ஏ.எஃப்.எம்  வழியாக பாக்டீரியாக்களையும், வைரஸையும் மனிதன் கண்டுபிடித்து, தீமை செய்பவற்றை விரட்டும் விஞ்ஞானம் வளர்வதற்குள் - அழிவின் கோரத் தாண்டவும் நிறைய நடந்து முடிந்திருந்தது.  ஆம், நுண்ணுயிரிகளால் மனித இனம் கொத்துக் கொத்தாக அழிந்த கதை மானுட வரலாற்றில்  நிறைய நடந்தேறின. கொள்ளை நோய்களின் பேரழிவுக்குக் காரணம் இதுதான் என்பதை மனிதன் திட்டவட்டமாக அறிந்திராத காலம் அது.

    ஆயினும்,  மனிதன் மீட்சியை நோக்கியே போராடினான். அதில் அவன் சந்தித்த வெற்றிகளும் தோல்விகளும்தான் கொள்ளை நோய்களின் வரலாறு. அந்த வரலாற்றின் நிகழ்வுகள் யாவும் நமக்கு பாடம் சொல்லும் வழிகாட்டிகள் !

       கொரோனா தொற்று நோய், ஈவிரக்கமின்றி உயிர்களை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில்  வரலாற்றின் பக்கங்களைப்  புரட்டிப் பார்ப்பது நமக்கு ஒரு தெளிவை வழங்கும். மன இறுக்கத்தில் இருந்து,  மீண்டெழும் தன்னம்பிக்கையையும் அது நமக்கு வழங்கக்கூடும்.
 
               அந்த வகையில்,  கொள்ளை நோயால் ஏற்பட்ட பேரழிவு பற்றி, வரலாறு பதிந்து வைத்திருக்கும் முதல்  நிகழ்வு  ’ஜஸ்டினியன் கொள்ளை நோய்’ (Plague of Justinian).  அதற்கு முன்னரும் கொள்ளை நோய்கள் இருந்தன. ஆனால், எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தின் முதல் பெரும் சோகம் இதுதான். நமது மண்ணில் மகாவீரரும், புத்தரும் அவதரித்த அதே காலக்கட்டத்தில் தான், ஐரோப்பிய மண்ணில் 'அறியப்பட்ட  முதல் பிளேக் நோய்' காலூன்றியது.
                    
                      இயேசு பிறப்பின் 541 ஆண்டுகளுக்கு முன்பாக, கிழக்கு ரோமாபுரியின் பைஸாந்தியப் பேரரசை ஆட்டம் காண வைத்தது ஒரு கொள்ளை நோய்.  மத்தியத்தரை கடலின் வழியாக -  வியாபாரக் கப்பல்கள் வடிவத்தில்  வந்திறங்கிய அதனை, கட்டுப்படுத்துவது அத்தனை சுலபமாக  இருக்கவில்லை.  தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிள் தடுமாறித்தான் போனது. ஒரு நாளைக்கு சுமார் 10,000 பேர் என்ற அளவில் மக்கள் செத்து வீழ்ந்தனர். வீடுகளுக்குள் இறந்து போனவர்களை, எடுத்து அடக்கம் செய்ய யாரும் முன் வரவில்லை. வந்தவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாயினர்.

                    தலைநகரெங்கும் பிணங்கள் நிரம்பிக் கிடந்தன.  இறந்து போனவர்களை என்ன செய்வதென்று தெரியாமல், பிணங்களை எல்லாம் மொத்தமாக ஒரே வீட்டில் தள்ளி,  வீட்டினை அடைத்து வைத்த நிகழ்வுகள் நடந்தேறின. பிழைத்தவர்கள் வெகு விரைவில்  தெளிந்தனர். நோய்தொற்றில் இறந்தவர்களையும், நோயாளிகளையும்  தொடவே கூடாது என முடிவு செய்தனர். ஆதலால், பிணங்களை அப்படியே வீதிகளில் விட்டுவிட்டு, பிழைத்தவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயரத் தொடங்கினர்.

            நோய்க்குக் காரணம் என்ன என்பதை மத குருமார்களும், மருத்துவர்களும் முடிவு செய்ய முடியாமல் திணறினர்.      தலை மழித்த துறவிகள் தான் இந்நோய்க்குக் காரணம் என ஒரு கூட்டம் அலறி ஓடியது. ’நோயாளிகளின் உள் இருப்பது சாத்தான்கள்; அந்த சாத்தான்களை அனுமதிக்கக் கூடாது’ என தங்கள் வீடுகளை தாழிட்டுக் கொண்டது ஒரு கூட்டம். கடவுளின் கோபத்தை தணிப்பதற்காக மன்றாட்டுகளில் இறங்கியது மற்றொரு கூட்டம். அதில் தாழிட்டுக் கொண்டு தனிமையில் இருந்தவர்களில் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தெருவுக்கு வந்தவர்கள் எல்லாம் மரணத்தையே தழுவினார்கள்.

       என்ன காரணம் என்ற தெளிவு கிடைப்பதற்குள், ஐரோப்பா முழுமைக்கும் இக்கொள்ளை நோய் பரவியிருந்தது.  மொத்தமாக 30  மில்லியனுக்கும் அதிகமான  மக்கள் - நோய்த்தொற்றுக்கு  பலியாகினர்.   அப்போது ஆட்சியில் இருந்த பைஸாந்தியப் பேரரசின் மன்னர் ஜஸ்டினியனையும் நோய்த்தொற்று தாக்கியது. ஆனால், ’பேரரசர்’ என்று கண்டு கொண்டதாலோ  என்னவோ, அவர் உயிரைப் பறிக்காமல் விட்டுச் சென்றது அந்த நுண்ணுயிரி. செல்வாக்கு மிக்க பேரரசர் ஜஸ்டினியனை - அந்த கொள்ளை நோய் பலி வாங்கியிருக்கக் கூடாதா, என உயிர் பிழைத்தவர்கள் மனதிற்குள் எண்ணிக் கொண்டனர்.  அவர்களை அப்படி சிந்திக்க  வைத்தது எது  தெரியுமா?
           
             மனிதன், கடவுளுக்கு எதிராக  செய்யும் பாவங்கள்தான் , இத்தகைய நோய்களுக்குக் காரணம் என்ற கருத்தே, அப்போது உறுதியாக நம்பப்பட்டது. அதனால், பேரரசர் ஜஸ்டினியன் தனது மக்கள் மீது கடும் கோபம் கொண்டார். கொள்ளை நோய் காரணமாக சுற்றமும் உறவும் இறந்து போக, பிழைத்து வந்த மனிதர்கள் மீது அளவுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டது. இறந்து போன உறவுக்காரர்களின் வரியையும் இருப்பவனே செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. நீரிலிருந்து தப்பித்து நெருப்பில் வீழ்ந்த கதையாயிற்று பிழைத்தவர்களின் வாழ்வு.
               
              உயிர் மீந்தவர்கள் வாழவும் முடியாமல், ஓடவும் முடியாமல் தவித்துக் கிடந்தனர் என்ற வரலாற்றுக் கதை  கண்ணீர் வரவழைப்பதாகும். ஆனால், அதே காலகட்டத்தில்  கடவுளின் கோபம் தணிப்பதற்காக ஐரோப்பா முழுவதும் எண்ணற்ற தேவாலயங்கள் கட்டும் பணிகள், முழு வீச்சில்  நடந்து  கொண்டிருந்தன  என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.
                                                               
               கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை,  உலகம் முழுமைக்கும் பரவலாகக் காணப்பட்ட இந்த கொள்ளை நோயின் பூர்வீகம் என்ன, அதற்குரிய மருத்துவம் என்ன என்றெல்லாம் அறிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. உலகின் பெரும் பகுதியை பாதித்த இந்த கொள்ளை நோய்க்கு எதிராக ,  அவர்களிடம் இருந்த ஒரே யுக்தி - தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல். (Isolation & Qurantine). அதனையும் அப்போது மானுட இனம்  முறையாக அறிந்திருக்கவில்லை.  விளைவு, மூன்று கோடி மக்களின் விலை மதிப்பற்ற உயிர்!

                    கொள்ளை நோய் காலத்திற்குப் பின், பணம் படைத்தவன், நிலம் கொண்டவன், அதிகாரி, தொழிலாளி என யாவரும் சரிநிகர் ஆகிவிட, புதிய காலம் பிறந்தது. உழைப்பின் வழியே புதிய ஐரோப்பா துளிர் விடத் தொடங்கியது.  தொடர்ந்து, சில நூற்றாண்டுகள் அமைதியாய்க் கழிந்தன.    ஒருவழியாய் இயல்புப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது மனித இனம். அப்போது கலை, இலக்கியம், விஞ்ஞானம், தொழில்துறை என யாவற்றிலும் சீரான வளர்ச்சி நடந்து கொண்டிருந்தது.

         ஆனால்,  ஐரோப்பாவின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் ஒரு துயர சம்பவம் வந்து நின்றது. இப்போது வந்திருப்பது ஒன்றும் புதிய ஆள் அல்ல. ஆறாம் நூற்றாண்டில் வந்து, ஐரோப்பாவையே கதிகலங்க வைத்த அதே ஆள் தான்.    ஆனால், இம்முறை கொடூரமாகக் களமிறங்கினான் அந்த ’ஆள்’. அந்த நுண்ணுயிரியைக் கண்டுபிடித்து, நாம் பெயர் வைத்ததெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான்.

           14ஆம் நூற்றாண்டு வரலாற்றையே  கறுப்பாக மாற்றியது அந்த நுண்ணுயிரி. உலக வரலாற்றின் மாபெரும் கொள்ளை நோய், 1347ஆம் ஆண்டு ஐரோப்பாவைத் தாக்கியது. அது, நான்கே ஆண்டுகளில் உலகையே நிலை குலைய வைத்தது. அதற்கு வரலாற்று ஆசிரியர்கள் வைத்த பெயர் தான், ’கறுப்பு மரணம்’ (Black Death).!

               
(தொடரும்..)