Sunday, August 26, 2018

நாளும் அறிவோம் - ஆகஸ்ட் 26


நவசக்தி நாயகன் - திரு.வி.க.

ஆகஸ்ட் 26...இன்று!

      ”இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேச வேண்டும்”
        - திரு.வி.க.(சென்னை மகாசன சங்கத்தில் ஆற்றிய உரையில்)       

   விடுதலைப் போராட்ட வீரர்; இந்தியாவில் முதல்முறையாக தொழிற்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்; மகாத்மா காந்திக்கு,  ’அடிகள்’ எனும் பின்னொட்டைச் சேர்த்து காந்தியடிகள் ஆக்கியவர்;   அரசியல் அரங்குகளில்  புயலாகவும், தனித் தமிழ் மேடைகளில் தென்றலாகவும் பேசியவர்; பெண்ணுரிமை பேணிய பெருந்தகையாளர்; இப்படி, பன்முகம் கொண்ட பைந்தமிழ் அறிஞர்  திரு.வி.க. ( 1883-1953) பிறந்த நாள் இன்று. 
              அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில், துள்ளல் எனும் சிற்றூரில் விருத்தாசல முதலியார்-சின்னம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் கலியாண சுந்தரம். தந்தை விருத்தாசல முதலியாருக்கு இரு மனைவிகள்; மொத்தம் 12 பிள்ளைகள். இவர்,  திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆதலால், திரு.வி.கலியாணசுந்தரம் என அழைக்கப்பட்டார்.  வீட்டின் அருகில்  கடை நடத்தி வந்த தந்தையிடமே இவரது கல்வி ஆரம்பமானது.  பின்பு வெஸ்லீ பள்ளியில் ஆரம்பப்படிப்பு படித்தார். உடல் நலமின்மையால் படிப்பு இடையிலேயே நின்று போனது. 
                கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் கற்ற திரு.வி.க, 1908 ஆம் ஆண்டு தனது முதல் நூலை வெளியிட்டார். நூலின் பெயர் “கதிரைவேற் பிள்ளை சரித்திரம்”.  அறிவுப் பசிக்கு,  அகரத்தை அன்னமெனப் பந்தியிட்ட ஆசிரியர் பெயரிலேயே, முதல் நூல் வந்தது. கதிரைவேற் பிள்ளை கொடுத்து வைத்த அறிஞர் தான்.
       பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும், தணிகாசல முதலியாரிடம் சைவ சமய நூல்களையும், நீதியரசர் சதாசிவ ராவிடம் ஆங்கிலத்தையும் கற்றுத்தேர்ந்த திரு.வி.க., அப்துல் கரீமிடம் திருக்குரானும் படித்தறிந்தார். அறிவின் ஆழ அகலங்களைத்  தொட்டுவிடவே,  எந்நாளும் ஆர்வத்துடன்  முயன்று கொண்டிருந்தார்.
          '' பெண்ணின் பெருமை", "முருகன் அல்லது அழகு", "திருக்குறள் விரிவுரை", பயண நூல்கள், சுய சரிதம் என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள திரு.வி.க.வின் இலக்கிய உரைகள் , கேட்போர் உள்ளங்களில் தென்றலாய்த்  தவழ்ந்தது.
                வெஸ்லியன் பள்ளியில் தமிழாசிரியராக 6 ஆண்டுகள் பணியாற்றிய திரு.வி.க., விடுதலைப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்தார். வேலையை ராஜினாமா செய்தார். 1917 ஆம் ஆண்டு, ‘தேச பக்தன் ‘ நாளிதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, பேனா வலிமையால் சுதந்திரத் தீயை வளர்ததார். 20.10.1920ல்  ’நவசக்தி’  என்னும் வார இதழை ஆரம்பித்தார். ஆங்கில அரசு, இவரது எழுத்துக்களால் அதிர்ந்து போனது. இவரை அழைத்து எச்சரிக்கை செய்தது. 
             அன்னி பெசண்ட் அம்மையார்  கைது செய்யப்பட்டதற்கு எதிரான, பொதுக்கூட்டத்தில் ‘திராவிடரும் காங்கிரசும்’ என்னும் தலைப்பில் பேசியதுதான் இவரது கன்னிப் பேச்சு. அதன் பிறகு,  இலக்கியம், அரசியல், தொழிலாளர்கள் மாநாடு, பெண்ணுரிமை மாநாடு என எல்லா மேடைகளிலும் இவரது குரல் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
         காந்தியடிகள் முதன்முறையாகத்  தமிழகம் வந்த போது, அவரது பேச்சைத் தமிழில் மொழி பெயர்த்தவர் திரு.வி.க.தான். 1919 ஆம் ஆண்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான கூட்டத்தில், தனது அரசியல் குரு  திலகரோடு, அதே  மேடையில் இவரும்  வீர உரை நிகழ்த்தினார்.  திலகரின் மறைவுக்குப் பிறகு, 1926 ஆம் ஆண்டு அரசியலை முழுவதுமாகத் துறந்துவிட்டார்.
             வாடியா, சிங்கார வேலர், சக்கரைச்செட்டியார் முதலிய தலைவர்களோடு இணைந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக , சென்னையில் தொழிற்சங்கம் ஒன்று  உருவாகக் காரணமாக இருந்தார். தீவிர அரசியலில் இருந்து விலகிய பிறகும் கூட, தொழிற்சங்க மேடைகளில் மட்டும் இவரைக் காண முடிந்தது. தொழிற்சங்க வாதிகள் மத்தியில், ‘தொழிலாளர்களின் தாய்’ என  அன்போடு அழைக்கப்பட்டர். 
              குரல்வளமும், இசைஞானமும் கொண்ட கமலாம்பிகை, 13.09.1912ஆம் நாளன்று திரு.வி.க.வின் கரம் பிடித்தார். ’கண்கவர் புடவைகளும் , கழுத்து நிறைக்கும் நகைகளும் எனக்கு வேண்டாம், எனக்கு நீங்களே கல்வி கற்றுக் கொடுங்கள்’ என கமலாம்பிகை கோரிக்கை வைக்க, உற்சாகமானார் திரு.வி.க. தினமும் மாலை வேளைகளில் , கடற்கரை ஓரங்களில் மனைவிக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்றுக்  கொடுக்க ஆரம்பித்தார். அலைகடலும் இந்தத் தம்பதியரைப் பார்த்து, ஆனந்த நடனம் ஆடியது. இவர்கள் அன்பின் வெளிப்பாடாய் இரு பிள்ளைகள் பிறந்தன. 
             வலது காலில் ஆறு விரல் கொண்டிருப்பதால் ’அதிஷ்டசாலி’ என அழைக்கப்பட்ட திரு.வி.க.வின் வாழ்விலும் வேதனை மேகங்கள் சூழ்ந்தன. காச நோயால் அவதிப்பட்ட கமலாம்பிகை 1918ஆம் ஆண்டு இறந்து போனார். அதற்கு முன்பே, இரு பிள்ளைகளும் இறந்து போயின. சரியாக ஆறு ஆண்டுகள் மட்டுமே, இவர்களது இல்லற வாழ்வு நீடித்தது. மறுமணம் செய்து கொள்ள மறுத்தார் 35 வயது திரு.வி.க..
      இறுதிவரை, வாடகை வீடொன்றில் தனிமரமாய் வாழ்ந்து முடித்த திரு.வி.க.விற்கு,  தமிழ்தான் சொத்து; தொழிலாளர்களே சொந்தங்கள்.
                1949 ஆம் ஆண்டு, சர்க்கரை நோய் காரணமாக, கண் பார்வை இழந்தபோதும், நண்பர் நாராயண சாமி உதவியோடு தொடர்ந்து  செய்யுள்கள் எழுதினார். தான் இறந்தவுடன் தனது பூத உடல், சூளைமேடு தொழிலாளர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்ன திரு.வி.க. ,     1953 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று இறந்தபோனார்.  அவரது  விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
   தொழிலாளர் சொந்தங்கள் கண்ணீரோடு சூழ்ந்து வர, சூளைமேட்டிலிருந்து மயிலாப்பூர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை , இடைவெளி இன்றி  தமிழால் நிரப்பப்பட்டிருந்த அந்தப்  பரு உடல் , அங்கேதான் எரியூட்டப்பட்டது. திரு.வி.க. என்னும் மூன்றெழுத்து மட்டும்,  தமிழில்  நிலைநாட்டப்பட்டது.

     ஏனெனில்,  அமுதத் தமிழில் -  இறவா நூல்கள் - எழுதிய மானுடர் -  சாவதே இல்லை!
        
             
                  

               

No comments:

Post a Comment