வீரமங்கை அருணா ஆசஃப் அலியின் பிறந்த நாள் இன்று!
1942, வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், அகப்படாமல் மும்பையில் கோவாலியா மைதானத்தில், இந்திய தேசிய காங்கிரசின் கொடியை ஏற்றிய வீரமங்கை அருணா ஆசஃப் அலியின்( 1909-ஜூலை 16) பிறந்த நாள் இன்று.
ஹரியானா மாநிலத்தில் கால்கா என்னும் ஊரில் பிறந்த அருணா கங்குலியான இவர், கல்கத்தாவில் சில காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது, இவரது துணிச்சலும், சுதந்திர வேட்கையும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்தன. பெண் சிறைக்கைதிகளின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதால், அம்பபாலா தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.!
சாதி,மத, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆசஃப் அலி என்பவரை புரட்சித் திருமணம் செய்து கொண்டார். ஆங்கில இலக்கியத்தின் மீது இவர்கள் கொண்டிருந்த காதல், இவர்களுக்கிடையிலான இருபது வயது வித்தியாசத்தை வெளிச்சப்படுத்தாமல் விலகிச் சென்றது.
மாணவர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இறுதி நாள் வரை போராடிய அருணா ஆசஃப் அலி 1996ல் மறைந்தார். 1958ல் டெல்லியின் முதல் மேயராகப் பதவி வகித்த இவருக்கு, 1998ஆம் ஆண்டு மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, சுதந்திர தாகம் இவற்றுக்கெல்லாம் , இருபதாம் நூற்றாண்டின் உதாரணப் பெண்மணி அருணா ஆசஃப் அலி..!
No comments:
Post a Comment