Saturday, July 21, 2018

நாளும் அறிவோம்- ஜுலை 21.

சாகசக்காரன் - எர்னெஸ்ட் ஹெமிங்வே!       


 "There is nothing to writing. All you do is sit down at a typewriter and Bleed"
                               -Ernest Hemingway.

இன்று எர்னெஸ்ட் ஹெமிங்வே பிறந்த நாள்!

              ”ஒரு எழுத்தாளனாக நோபல் பரிசு பெறுவதை விடவும் , ஒரு காளைச் சண்டை வீரனாக, காளையைக் கொன்று, காளையின் காதைப் பரிசாக பெறுவதையே உயர்வாக எண்ணுகிறேன்.”- என்று சொன்ன எர்னெஸ்ட் ஹெமிங்வே (1899-1961), காளைச் சண்டையிலும் வெற்றி பெற்றார், இலக்கியத்திற்காக நோபல் பரிசையும் (1954) பெற்றார். இன்றும் ஸ்பெயின் காளைச் சண்டை மைதானத்தின் நுழைவு வாயிலில் , எழுத்தாளரான ஹெமிங்வேயின் உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.!
              ஆறாம் வகுப்பு தமிழ், புதிய பாடத்திட்டத்தில் இவர் எழுதிய "கிழவனும் கடலும்" சித்திரக் கதையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாவலில் வரும் சாண்டியாகோ கிழவனை வாசித்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
               அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஒரு புற நகர்ப்பகுதியில்  1899 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 21ஆம் தேதி ஹெமிங்வே பிறந்தார்.  ஹெமிங்வேயின்  தந்தை கிளாரன்ஸ் எட்மண்ட்,  ஒரு உடற்கூறு மருத்துவர். இவரது அம்மா கிரேஸ் ஹால் ஓர் இசைப் பாடகி.  பதின் பருவத்தில், தன் தாயின் மீது, காரணமற்ற வெறுப்பைக் காட்டத் தொடங்கினார். அம்மாவின் வற்புறுத்தலுக்காக, இசை வகுப்பிற்குச் செல்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எர்னெஸ்ட் என்ற தனது பெயரையும் வெறுத்தார். ஆஸ்கார் வைல்டு நாவலில் (The Imporatance of Being Ernest ) வரும் பெயரை, தனது பெயரோடு  ஒப்பிட்டு மிகவும் வருந்தினார்.
                            ஆனால், தந்தையோடு அதிக நேரம் செலவிட விரும்பினார். மீன் பிடித்தல், வேட்டையாடுதல், ஏரிகளில் தங்குதல் என பலவற்றை தனது தந்தையிடமிருந்தே அவர் கற்றுக் கொண்டார். அவரது பள்ளியிலிருந்து வெளிவந்த, ' Trapeze and Tabula'  செய்தித் தாளில் இவரது பங்களிப்பு எப்போதுமே அதிகமாக இருந்தது.
                       பள்ளிப் படிப்பை முடித்தவுடன், இளம் பத்திரிக்கையாளராக சில மாதங்கள் பணியாற்றினார். அந்த அனுபவம், அவருக்கு எழுதும் திறனில் நுட்பத்தைக் கற்றுத் தந்தது. பிறகு,  முதல் உலகப் போரில், அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்  ஓட்டுநராக தீரத்துடன் பணியாற்றினார். அதற்காக அவருக்கு வீரப்பதக்கமும் வழங்கப்பட்டது.         
                                அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், ஸ்பெயின், ஃபிரான்ஸ், மற்றும் கியூபா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க நாடுகள், ஹெமிங்வேவை  தங்கள் வீட்டுப் பிள்ளை என்றே கொண்டாடின. இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட ஹெமிங்வே,. காளைச்சண்டை, சிங்க வேட்டைகளிலும் கூட ஈடுபட்டார். தனது அனுபவங்களை சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள் என தொடர்ந்து எழுதினார். தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,  Indian Camp, For whom the bell rings, A farewell to arms என்று பல சிறப்பு மிக்க படைப்புகளை எழுதி வெளியிட்டார்.
                   இவரது The old man and sea நாவல் 1953ல் புலிட்சர் பரிசை வென்றது. 1954 ஆம் ஆண்டு, இதே நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றார். விமான விபத்து மற்றும் ஆப்பிரிக்க சிங்க வேட்டையின்போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, நோபல் பரிசைப் பெற ஸ்டாக்ஹோமிற்கு நேரில் செல்லவில்லை. நன்றிச் செய்தியை மட்டுமே அனுப்பி வைத்தார்.
                  ’கிழவனும் கடலும்’ நாவலில்,   இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மாபெரும் குறியீட்டு நாவலை  எளிய நடையில் உருவாக்கியதன் மூலம், ஆங்கில இலக்கியத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றார் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
           ஹெமிங்வேயின் வாழ்க்கை, சுறுசுறுப்பும் சுவாரசியமும் நிறைந்தது.   1954 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் நைல் நதியின் பெருக்கத்தை விமானத்தில் இருந்த படியே சுற்றி வந்து ரசித்த போது, அவரது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் ஹெமிங்வே இறந்ததாக எண்ணி, உலகம் முழுவதும் அஞ்சலிக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், விபத்தில் தப்பிப் பிழைத்த ஹெமிங்வே, ஆப்பிரிக்க நாட்டின் குடில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, மதுவைப்பருகிய படியே, தனது மரணச் செய்தியை படித்துக் கொண்டிருந்த வேடிக்கையும் இவரது வாழ்வில் நடந்தது.
                         1954 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவரது உடல்நிலை மிகவும் கெட்டுப்போனது. காளைச் சண்டை மற்றும்  சிங்கவேட்டையில் ஏற்பட்ட காயங்கள் உடலுக்கு கடும் அழுத்தத்தைத் தந்தன. முறிந்து போன திருமண உறவுகள் மனதுக்கு  ரண வேதனையைத் தந்தன.
                சாகசக்காரரான ஹெமிங்வே, தனது தந்தையைப் போலவே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.    1961, ஜூலை  2 ஆம் நாள் Papa என  மக்களால் பிரியமாக  அழைக்கப்பட்ட எர்னெஸ்ட் ஹெமிங்வே, தனது  தலையில் தானே சுட்டுக் கொண்டு, சாகச வாழ்வை நிறைவு செய்தார்.     நான்கு திருமணம் செய்து கொண்ட ஹெமிங்வேயின் பேத்தியும் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். ஐந்து தலைமுறைகளாக இந்த சோகம், இவர்களது குடும்பத்தைத் தொடர்ந்து வருகிறது.
                                      ’Happiness in intelligent people is the rarest thing I know’,  என்று சொன்ன ஹெமிங்வேயின் அகவாழ்வு, ஒரு கட்டத்தில்  மகிழ்ச்சிக்காகத்  தேடி அலைந்தது.   தன்னம்பிக்கையையும், சாகசத்தையுமே பேசி வந்த அவரது எழுத்துக்கள், அப்போது அவரைக்  கைவிட்டிருக்குமோ என்னவோ?    வாழ்நாள் முழுவதும் சாகசத்தையே விரும்பிய ஹெமிங்வே , தற்கொலை செய்து கொண்டு,  தனது முடிவையும்    சாகசக் கதையாக்கினார்.
                           கடலில் மீன் பிடிக்கச் சென்று, சாகசங்களால் நம்மை வசியம் செய்து, இறுதியில் வெறுங்கையுடன் வீடு திரும்பிய போதிலும், ’கிழவனும்,கடலும்’ கதை நாயகன் சாண்டியாகோ,  தனது தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. ’அன்று இரவு அவனது கனவில்  சிங்கங்கள் நடமாடிக் கொண்டிருந்தன’ என்று எழுதினார் ஹெமிங்வே. ஆம், கதையில் வரும் அந்தக் கிழவன், புதிய நாளுக்காகக் காத்திருந்தான். ஆனால், அக்கதாபாத்திரத்தை உருவாக்கிய  ஹெமிங்வேயின் வாழ்வு அப்படி அமையாது போனது. மீள முடியாது என முடிவு செய்து, மன அழுத்தத்திற்கு தனது வாழ்வையே பலியிட்டார் ஹெமிங்வே.
                                மாபெரும்    எழுத்தாளர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை விடவும், அவர்களது  வாழ்வு நமக்கு நிறைய கற்றுத் தருகிறது.   அவர்களது கதை, புனையப்பட்ட நாவல்களை விடவும்  சுவாரசியமானவை; திருப்பங்கள் நிறைந்தவை.               

No comments:

Post a Comment