Monday, December 24, 2018

டிசம்பர் 24

தேசத்தின் குரு - பாண்டுரங்க சதாசிவ சானே

டிசம்பர் 24...இன்று!


             இந்திய விடுதலைப் போராட்டம் இவரை திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையின் கம்பிகளுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது. சிறைச்சாலை இவருக்குப் பாடசாலை ஆனது. தமிழ்க்காற்றினை சுவாசித்துக் கொண்டே, தாகம் மேலிட  தமிழையும் கற்றுக் கொண்டார்.  அனுதினமும் தமிழ் கற்ற இவரது மனம் - திருக்குறளையே தினம் தினம் உச்சரித்தது. அதனை தாய்மொழியில் பெயர்த்திடவே இவர் மனம் தினம் நச்சரித்தது. தான் விரும்பியபடியே,     திருக்குறளை முதன்முதலில் மராட்டிய மொழியில் மொழிபெயர்த்தார் பாண்டுரங்க சதாசிவ சானே. 

            ஆசிரியராகப் பணி செய்துகொண்டிருந்தவர், தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி சத்தியாகிரக யாத்திரையில் கலந்து கொண்டார்.  அதுமுதல், வாழ்நாளின் இறுதிவரை,  தொடர்ந்து காந்திய வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் சதாசிவ சானே. பல்வேறு போராட்டங்களில் எட்டு முறை சிறை வாசம்;  மொத்தமாக  ஆறு ஆண்டுகளும் ஏழு மாதங்களும்  இவரது வாழ்வு சிறைக்குள்ளேயே கழிந்தது.

                   சிறைச்சாலையில் இவருக்கு மொழி ஆர்வம் வளர்த்தவர்  ஆச்சாரியார் வினோபா பாவே. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வினோபா பாவேயின் பகவத்கீதை வகுப்புகள் இவருக்குள் ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தின. வகுப்புகளின் போது, இவர் எழுதிய குறிப்புகளைக் கொண்டே, தனது பகவத்கீதை விளக்கவுரை புத்தகத்தை தொகுத்து வெளியிட்டார் வினோபா பாவே.

         சதாசிவ சானே, தான் சிறைபட்ட எல்லா இடங்களிலும் அந்தந்த பகுதிகளின் மொழியறிவினை விரும்பி கற்றுக் கொண்டார். அதுபோல,  தனது அறிவையும் சக நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்தார். தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமாக,   ’அந்தர் பாரதி’ என்னும் இதழைத் தொடங்கினார். அதில், இந்தியாவின் முக்கிய மொழிகளில் உள்ள கலைச்செல்வங்களை எல்லாம்  மொழிபெயர்த்து வெளியிட்டார். ‘சாதனா’ என்ற பெயரில், 1948ஆம் ஆண்டு, இவரால் தொடங்கப்பட்ட வாரப்பத்திரிக்கை, இன்றுவரை  தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.  

         கற்றுக் கொள்வதையும், கற்றுக் கொடுப்பதையுமே தனதிரு சிறகுகளில் ஏந்திக் கொண்ட ஞானப்பறவை தான் பாண்டுரங்க சதாசிவ சானே.  ’இந்தியாவின் தேசிய ஆசிரியர்’ என அழைக்கப்படும் இவர்,  1899ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி , மஹாராஷ்டிரா மாநிலத்தில் பால்காட் என்னும் கிராமத்தில் பிறந்தார். சதாசிவ ராவ்- யசோசா பாய் தம்பதியினரின் மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், தற்போது ’சானே குருஜி’ என்றே இந்தியா முழுதும் அறியப்படுகிறார். 

                       இளம் வயதில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த சானேயின் குடும்பத்தில் திடீரென இருள் பரவத் தொடங்கியது. தந்தையின் வருமானம் வெகுவாகக் குறைந்து, வறுமை இறுக்கத் தொடங்கியது. தாய்மாமாவின் வீட்டில் , புனே நகரத்தில் சானேயின் படிப்பு தொடர்ந்தது. மருத்துவ வசதி இல்லாததால், 1917ஆம் ஆண்டு தாய் யசோதா மரணமுற்றார். மரணப்படுக்கையில் கிடந்த தாயை பார்க்கும் வாய்ப்புகூட இவருக்குக்  கிடைக்கவில்லை. இந்நிகழ்வு அவரது உள்ளத்தில் ஆறாத தழும்பென புடைத்து நின்றது.

        ஆயினும், நண்பர்களின் உதவியோடு கல்வியைத் தொடர்ந்தார் சானே. மராத்தி, சமஸ்கிருதம் பாடங்களில் பட்டம் படித்தார். இரு துறைகளிலும் வலுவான ஆளுமைத் திறனும் பெற்றார். பதக்கப் பரிசோடு, தத்துவவியலில் முதுகலைப் பட்டத்தையும்  நிறைவு செய்தார்.

             நல்ல ஊதியத்தோடு,    நகர்ப்புறத்திலேயே  பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு இவருக்குக்  கிடைத்தது. ஆனால் சானே குருஜி, அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக, ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் இருக்கும் கிராமப்புறங்களில் தனது கல்விப் பணியை விருப்பத்துடன் மேற்கொண்டார். மாணவர்களுக்காக ‘வித்யார்த்தி’ என்னும்  இதழைத் தொடங்கினார். அதில்,  நன்னெறிக் கல்வி மற்றும் சமூகக் கடமைகளைப் பற்றிய கட்டுரைகள், கதைகளை எழுதி வெளியிட்டார். மொத்தம் 135 நூல்களைப் படைத்துள்ளார்  சானே குருஜி, அதில் 73 நூல்களை குழந்தைகளுக்காக மட்டுமே எழுதியுள்ளார்.

 .        இவரது ’ஷியாம்ஸி ஆயி’(Shyam's Mother) என்னும் புத்தகம் மிகுந்த புகழ் பெற்றது. இந்தக்  கதை, 1953ஆம் ஆண்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கொங்கன் பகுதியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் வந்து சேர்கிறாள். சூழ்நிலை காரணமாக, வறுமையுற்று நோயில் வீழ்கிறாள். மருத்துவம் பார்க்கக் கூட, வசதியற்ற நிலையில் மரணத்தைச் சந்திக்கும் ஒரு தாயின் கதை தான், ''ஷியாம்ஸி ஆயி".  தாயின் அன்பையும், தியாகத்தையும் சொல்லும் இப்புத்தகம் , குருஜியின் இளமைக் கால    நினைவுகளிலிருந்தே எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

                 காந்தியடிகளின் ஆணைப்படி, ஆலய நுழைவுப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்தினார். 1947 ஆம் ஆண்டு, மே 1 முதல் மே 11 வரை பந்தர்பூரில் உண்ணாவிரதம் இருந்தார். இறுதியில் , விதோபா ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து, ஆலயப் போராட்டத்தை வெற்றிகரமானதாக நிறைவு செய்தார் சானே குருஜி.  இப்போராட்டத்தின் வெற்றி முழுதும் சானே குருஜியையே சாரும் என்று காந்தியடிகள் தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.

                 எஸ்.எம். டாங்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் எப்போதும் நட்பில் இருந்த சானே குருஜி, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். இரண்டாம் உலகப் போரில், ஆங்கில அரசுக்கு ஆதரவு தரும் முடிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகியே நின்றார்.  காந்தியவாதியான  சானே குருஜி, சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். 

               சுதந்திர இந்தியா, ஏனோ அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. தேசப் பிரிவினையின் தழும்பு மறைவதற்குள்  நடந்த,  காந்தியடிகளின் படுகொலை இவருக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். காந்தியடிகள் கொல்லப்பட்ட மறுநாள் முதல் தொடர்ச்சியாக 21 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார். பின்பு சிலகாலம் நாள்களைக் கடத்தினார். ஒரு கட்டத்தில் நாள்கள் நகர மறுத்தன. காலம் கடத்த முடியாது  என்ற நிலைமையில் காலத்தோடு கரைந்து விட முடிவு செய்தார்.

                             அதன்படி சானே குருஜி , 1950ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு,  தூக்க மாத்திரைகளை அதிகமாக  உட்கொண்டு, தனது உயிரைத்  தானே மாய்த்துக் கொண்டார். மரணத்தை நோக்கி, அவர் எடுத்த முடிவுக்கான காரணம் இன்று வரை விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.  இறுதியில்  சட்டைப்பையில் ஒரு சிறு காகிதமும் , முப்பது ரூபாய் பணமும் மட்டுமே அவரது சொத்தாக எஞ்சி   இருந்தது. சட்டைப்பை காகித்ததில் இப்படி எழுதப்பட்டிருந்தது,
 “ எனது இறுதிச் சடங்குகளுக்கான செலவுத் தொகை இந்த  முப்பது ரூபாய்!.”

                      ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர் என பன்முகத் தன்மை கொண்டிருந்த சானே குருஜி , திருமணமே செய்துகொள்ளவில்லை. தனது வாழ்வு முழுவதையும் தேச நலனுக்கே அர்ப்பணித்தார். வாழ்நாள் முழுவதும்  மாணவர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த சானே குருஜியின்  பெயரில்,  நினைவு இல்லம் ஒன்றைக் கட்டியிருக்கிறது மஹாராஷ்டிரா அரசு. தற்போது, அது மாணவர்கள் தங்கிச் செல்லும் முகாமாகச் (Camp Office)  செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு, மத்திய அரசு, இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை ஒன்றும் வெளியிட்டுள்ளது.             

              பெரும்பாலான நேரங்களில், உயர்ந்தோரின்  அறிவையும் ஆற்றலையும் நாம் முழுதாகப் பயன்படுத்திக் கொள்வதேயில்லை.  அன்றிலிருந்து இன்று வரை , அத்தகைய மனிதர்களை நாம் பாதுகாப்பதும் இல்லை. 'சானே குருஜி' என்னும் ஒளிர்கல் - நாம் பாதுகாக்கத் தவறிய பொக்கிஷங்களுள் ஒன்று!

      ஒளிதரும் குன்றிமணிகளைப் புறந்தள்ளிவிட்டு, குப்பைகளைக் கொண்டாடும் மனநிலையை நாம் எப்போது விட்டொழிப்போம்? சுயநலம் தீண்டாத சுடரொளிகளால் இந்த தேசம்  எப்போது ஒளி பெறும்?
             

Thursday, November 8, 2018

நவம்பர் 8

தமிழ் பருகிய வீரன் - வீரமாமுனிவர்.

நவம்பர் 8 இன்று...!

                 திருக்குறளை முதன்முதலில் இலத்தீன் மொழியில்  மொழிபெயர்த்துக் கொடுத்த இந்த திருக்குமாரனின் தாய்மொழி தமிழ் கிடையாது.  தமிழன்னைக்கு சதுரகராதி தயாரித்துக் கொடுத்த இம்மைந்தனின் மேனி உதித்ததும் தமிழ் மண் கிடையாது. ஆனாலும், இவரது உடலில் பெருக்கெடுத்து ஓடியது தமிழ்க்குருதி.  நாடி நரம்புகளில் ஊடாடிக் கிடந்தது தமிழ்ச்சதை. தாகமுற்றுக் கிடந்த இவரது தேகம், வாழ்நாள் முழுக்க தமிழையே பருகிக்கிடந்தது. ஆம்,   தாய்மொழியைக் கூட தாழிட்டுக் கொண்டு, தன் நாவினை தமிழ் எனும் தேனிட்டு நிரப்பியவர் இவர். பதிலுக்கு இவர் நா, தமிழை பா கொண்டு நிரப்பியது.  
         இத்தாலி நாட்டில் பிறந்து,  தமிழர்களின் இதயங்களில்  இடம்பிடித்த தமிழ் மாமுனி- வீரமாமுனிவரின்(1680-1747)  பிறந்த நாள் இன்று. 1680ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் நாள், இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. தனது வாழ்க்கை என்பது இயேசுவின் வழியிலானது என்பதை உணர்ந்து, 1698ல் ’இயேசு சபையில்’(Jesuit) துறவியாகச் சேர்ந்தார். இறையியல் என்னும் கரையற்ற நதியில் தன்னை கரைத்துக் கொண்டார். கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான பாரதத்தில்,  மதுரை இயேசு சபைக்குச் சென்று ஊழியம் செய்ய, தனது தலைமை குருமாராக இருந்த Fr.மைக்கலாஞ்சலோவிடம்  அனுமதி கோருகிறார் பெஸ்கி. 
                  லிஸ்பன் நகரிலிருந்து அவரது கப்பல் பயணம் தொடங்கியது. 1710ஆம் ஆண்டு, அக்டோபர் மாத நாளொன்றில் கோவா கடற்கரையை வந்தடைந்தார் ஜோசப் பெஸ்கி. உடனடியாக, மதுரையை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார். கொச்சி, அம்பலக்காடு வழியாக, முத்தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு அருகில் இருந்த, காமநாயக்கன்பட்டிக்கு, 1711ல்  வந்து சேர்ந்தார். 
                    17ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், இந்தியாவில் சமயப் பணியாற்றிய இராபர்ட் நொபிலி அடிகளாரின் வாழ்வு முறையை, ஏற்கெனவே இவர் அறிந்து வைத்திருந்தார்.  மக்களோடு மக்களாக கலந்த பின்னரே, அவர்களுக்கு சமயக் கருத்துக்களைப் பரப்ப முடியும். அதற்கு, அவர்களது மொழியை கற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி என்பதை அறிந்திருந்தார்.  சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம் இவர் தமிழ் கற்றதாக அறியப்படுகிறது. 
              அதன் படி, தமிழ் என்னும் அமுதத்தை , சொட்டுச் சொட்டாக தன் நாவின் வழியே மூளைக்குள் செலுத்தினார்.  தமிழ் அவரது இதயத்தை  நிறைத்தது. ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை  தைரியநாதன் என தமிழ்ப்படுத்தினார். மீண்டும்,  தைரியநாதன் என்ற பெயரினை வீரமாமுனிவர் என தூய தமிழாக்கினார். இலத்தின், அரபு, எபிரேயம், ஆங்கிலம், மலையாளம், கிரேக்கம் உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்த வீரமாமுனிவர், தமிழை அறிந்தவுடன் அதனையே தனதாக்கிக்கொண்டார். 
        தமிழ்த்தாயின் அணிகலன்களென மின்னிக் கொண்டிருந்த  தேவாரம், திருப்புகழ், ஆத்திச்சூடி, நன்னூல், திருக்குறள் போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார். இவற்றை ஐயமின்றி படிப்பதற்கு, 1000 சொற்கள் கொண்ட தமிழ்-இலத்தீன் அகராதி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டார். 
                       சொற்பொருளுக்காக நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில், தமிழுக்காக புதிய சதுரகராதியை படைத்தளித்தார். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுப்புக்களைக் கொண்ட சதுரகராதி, தமிழன்னைக்கு புதிய அணிகலனாய் மாறி, அழகினை மெருகூட்டியது. மேலும், அம்மானை, கலம்பகம், தொன்னூல் விளக்கம், வேதியர் ஒழுக்கம், உரைநடை நூல்கள் என இலக்கண, இலக்கிய நூல்களால் அன்னையின் முகத்தினை மலர வைத்தார். 3615 விருத்தப்பாக்களால் எழுதப்பட்ட, இவரது ’தேம்பாவணி’ என்னும் காவியம், தமிழுக்குக் கிடைத்த பெருஞ்செல்வங்களுள் ஒன்றாகும். சிரிக்க வைத்து, நம்மைச் சிந்திக்க வைக்கும் ’பரமார்த்த குரு கதைகள்’ என்னும் நகைச்சுவை இலக்கியத்தையும் எழுதிய இவர், தமிழ்த்தாயின் மைந்தர்களுள் ஒருவராகவே மாறிப் போனார். 
                   இங்குள்ள துறவிகளைப்  போலவே காவி உடை   தரித்து, கடுக்கண் அணிந்து, சைவ உணவையே உண்டார் என்றும் தகவல்கள் உண்டு. வண்டுகள் அமர்ந்து தேன் உண்ணாத ஒரே மலர், செண்பக மலர் என்பதையும், அது குற்றால மலைப் பகுதிகளில் கிடைக்கிறது என்பதையும் குறிப்புகளில் எழுதி வைத்திருக்கிறார்.
               திருக்காவலூரில் தமிழ்ப் பாடசாலை ஒன்றை நிறுவி, தானே தமிழாசிரியராக இருந்து, செந்தமிழைக் கற்பித்தார்.  ஆ, ஏ போன்ற எழுத்து வடிவங்களை அவரே நடைமுறைக்கு கொண்டு வந்தார். ஒற்றை, இரட்டைக் கொம்புகளிலும் சீர்திருத்தம் மேற்கொண்டார். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு எழுதும் முறையையும், வாக்கிய முடிவில் முற்றுப் புள்ளி வைக்கும் வழக்கத்தையும் இவரே  நடைமுறைபடுத்தினார்.  இப்படியாக, இவர் ஆற்றிய தமிழ்த்தொண்டு, முற்றுப்புள்ளி காணாமல் நீண்டுகொண்டே இருந்தது.  1747ஆம் ஆண்டு, பிப்ரவர் 4ஆம் தேதி, கேரள மாநிலம் அம்பலக்காட்டில் மரணிக்கும் நாள் வரை, தமிழையே சுவாசித்துக் கொண்டிருந்தார் வீரமாமுனிவர்.
                     தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத இவர், தமிழுக்கு படைத்தளித்த நூல்கள் மொத்தம் 35. அவை யாவும், தரணி உள்ளளவும், இங்கே உலவிக் கொண்டே இருக்கும். தரணி உள்ளவரை தமிழும்  இருக்கும்.   தமிழ் இருக்கும் வரை வீரமாமுனிவரும் இருப்பார்!
       தமிழின் மேன்மை அறிவோம்!

       தமிழால் மேன்மை அடைவோம்!!

                 
              
                           
                               

Wednesday, November 7, 2018

நவம்பர் 7


நீல வண்ணன் - சர் சி வி இராமன்.

நவம்பர் 7...இன்று!

        1930ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, அறிவியல் உலகமே திரும்பிப் பார்த்தது.  வெள்ளையர் அல்லாத ஒருவர், முதல்முறையாக அறிவியலுக்கான நோபல் பரிசு பெறுவது அவர்களை ஏதோ ஒன்று செய்திருக்க வேண்டும். அவருக்காக அனுப்பட்ட அழைப்பிதழ் தந்தியானது, வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டது. தனது அயல்நாட்டு நண்பர்கள் மூலம் பரிசு பெற்ற விபரத்தினை அறிந்திருந்த போதிலும், அந்த விஞ்ஞானி எந்தவித பதட்டமும் அடையவில்லை. ஏனெனில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தனக்கே கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய அவர், தனது மனைவிக்கும் சேர்த்து, நார்வே நாட்டுக்குச் செல்ல எல்லா பயண ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். 
                         நீல்ஸ்ஃபோர்,  ரூத்ர்ஃபோர்ட், சார்லஸ் வில்சன் போன்ற 10  தலைசிறந்த விஞ்ஞானிகளால்,  நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இவரது கண்டுபிடிப்பு, பல்வேறு  ஆக்கங்களுக்கு புதிய  திறப்பாக அமைந்திருந்தது. ஒளியானது, ஓர் ஊடகத்தில்  ஊடுருவிச் செல்லும்போது, ஒளிச்சிதறலுக்கு உள்ளாகிறது என்ற உண்மையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியிருந்தார் இவர்.  ஜெர்மனி  மற்றும் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளும் இதே போன்ற ஆய்வுக்காக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கண்ணாடி, திரவம் மற்றும் திடப் பொருள்களின் வழியே இச்சோதனையைச் செய்து காட்டிய , இவரைத்தான் நோபல் கமிட்டி ஒருமனதாகத்  தேர்வு செய்திருந்தது.
                    நோபல் பரிசினைப் பெற, ஸ்டாக்ஹோம் நகருக்கு நேரில் செல்ல வேண்டாம் என்று சொல்லிப் பார்த்த ஆங்கில அரசு, பிறகு ஒரு நிபந்தனையோடு அவருக்கு அனுமதி கொடுத்தது. பரிசுக்கான ஏற்புரையில் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி ஏதும் பேசக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. பேச்சுவார்த்தைகளுக்குப்  பிறகு தான், இவருக்கு பயண அனுமதி கிடைத்தது. பாரத தேசத்தின் தென்பகுதியில் பிறந்த ஒருவர்,  1930 ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி, நோபல்  பரிசினைப் பெற்ற பிறகு பேசிய  வார்த்தைகள், ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைத்தன.
   “இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும், எமது வீரர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்”! 
                   இந்திய தேசத்தின் மீதான தனது அன்பை, விருது விழா மேடையில் சரியாக வெளிப்படுத்திய விஞ்ஞானி - தமிழ் மண்  ஈன்றெடுத்த மாபெரும் ஆளுமைகளுள் ஒருவர் - சர் சி வி இராமனின் (1888-1970)  பிறந்த தினம் இன்று!
             1888ஆம் ஆண்டு, நவம்பர் 7ஆம் தேதி , திருச்சி திருவானைக்கோவிலில், சந்திரசேகர்-பார்வதி அம்மள் தம்பதியினருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார் சர் சி வி இராமன். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர்.  கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியரான இவரது தந்தை, விசாகப்பட்டினம் நரசிம்மராவ் கல்லூரிக்கு பேராசிரியராகச் சென்ற போது, குடும்பமும் அங்கே இடம்பெயர்ந்தது. அங்கே, St,Aloysius Anglo Indian பள்ளியில், தனது  11வது  வயதிலேயே மெட்ரிக் படிப்பை முடித்தார். 
               1904ஆம் ஆண்டு,   சென்னை பிரெஸிடென்சி கல்லூரியில், இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.1907ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார். இரண்டு பட்டங்களிலுமே,  தங்கப்பதக்கம் பெற்று முதல் மாணவனாகத் தேர்வு பெற்றிருந்தார்.  மேற்படிப்புக்காக லண்டன் செல்ல இவர் தேர்வு செய்யப்பட்டார்.  உடல் தகுதியின்மை காரணமாக, அவரால் லண்டன் செல்ல இயலவில்லை.  போட்டித் தேர்வு எழுதி, நிதித்துறையில் ஆடிட்டராக பணி நியமனம் பெற்றார். பணியில் சேர்ந்துவிட்ட போதிலும், அறிவியலின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் சிறிதும் குறையவே இல்லை.  
                கல்கத்தாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இராமன், அலுவலக நேரம் போக, ஏனைய நேரங்களில் ஆய்வுகள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்திய ஆய்வுத் துறையின்  முன்னோடியான டாக்டர் சர்கார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை (IACS), நடந்து செல்லும் போது, தற்செயலாகப் பார்த்த ராமன், தனது ஆய்வுகளை அங்கேயே செய்து பார்க்க ஒப்புதலும் பெறுகிறார்.    பிறகு, அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் சிலகாலம் பணியாற்றினார். 
                   1921ஆம் ஆண்டு, மத்திய தரை கடல் வழியாக அவர் மேற்கொண்டிருந்த ஐரோப்பா பயணம் அவரது வாழ்வில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கப்பலின் தளத்தில் நின்று கொண்டு, அண்ணாந்து பார்த்தார். பரந்து கிடந்த கடலின் வண்ணம், திறந்து கிடந்த வானின் வண்ணம் -இவருக்குள் ஏதோ பொறி தட்டியது. வானம் ஏன் நீல நிறமாகத் தெரிகிறது என்பதை ஊகித்தார். அதனை மெய்ப்பிக்க தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்.
                1928ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, சக விஞ்ஞானி கே.எஸ் கிருஷ்ணனுடன் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, காரணத்தைக் கண்டறிந்தார். குறைந்த அலைநீலமுடைய நீல வண்ணம் அதிகமாக சிதறடிக்கப்படுவதே, வானின் நீல வண்ணத்திற்குக் காரணம் என்பதை நிரூபித்தார். ஒளிச்சிதறல் பற்றிய இந்தக் கோட்பாடு, தற்போது அவரது பெயராலேயே, “இராமன் விளைவு” என அழைக்கப்படுகிறது. 
                    இக்கண்டுபிடிப்பில் இணைந்து கொள்ள கிருஷ்ணன் மறுத்து விட்டார். காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை.  ஆயினும்,  தனது சகா கே எஸ் கிருஷ்ணனின் பங்களிப்பைக்   குறிப்பிட்டே, இராமன்  நோபல் பரிசு ஏற்புரை வழங்கினார்.  தொடர்ந்து, உலகெங்கும் பல்வேறு இடங்களுக்குச் சென்று , அறிவியல் உரைகள் நிகழ்த்தினர்.  ஒலி தொடர்பான ஆய்வுகளையும் ஆர்வத்தோடு செய்து வந்தார். Quantam Mechanics, Opticals என இவரது ஆய்வுப் பரப்பு விரிந்து கிடந்தது. 
                     1933ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் கழகத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டர். பிறகு, 1947ல், சுதந்திர இந்தியாவின் முதல் தேசியப் பேராசிரியராகவும் அறிவிக்கப்பட்டார். இராமன் விளைவு கண்டறியப்பட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தான், இந்திய தேசிய அறிவியல் தினமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.   1948ல் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்தப் பணத்தில், 1949ஆம் ஆண்டு,  ’இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை’ பெங்களூரில் உருவாக்கினார். 1954ல் இவருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 1970- நவம்பர் மாதம் 21ஆம் தேதி, மூச்சு நிற்கும் காலம் வரைக்கும் அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.
                இசையின் மீது இவருக்கு, அதீத காதல் உண்டு. ஒருநாள்,  கல்லூரி முடித்து வீடு திரும்பும்போது, வழியிலே இதயம் நிரப்பும் வீணையின் இசையினைக் கேட்கிறார். அதனை வாசிப்பது யாரென்று அறிகிறார். அவளே தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்குமென்று அவரது உள்ளம் சொல்கிறது. மதுரையில் பிறந்து, சென்னையில் உள்ள தனது அக்கா வீட்டில் இருக்கும் லோகசுந்தரிக்கு அப்போது வயது 14. லோகசுந்தரியின் அக்கா கணவர் சிவனுக்கு, 19 வயது நிரம்பிய  இராமன் ஒரு கடிதம் எழுதுகிறார். பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நடைபெறுகிறது. இசையின் வழியே மனைவியையும், இயற்பியலின் வழியே நோபலையும் கரம் பிடித்தவர் சர் சி வி இராமன்! 
              அன்பின் சாட்சியாக இருவரும் நல்லறம் நடத்தினர். தேவையற்ற காரணங்களுக்காக, இராமன் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நாக்பூர், சிம்லா, கல்கத்தா என எல்லா இடங்களிலும் லோகசுந்தரி உடனிருந்து, இராமனின் அறிவியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக இருந்தார். கல்கத்தாவில் இவர்கள் வசித்த போது, லோகசுந்தரி தனது பெயரில் வங்கிக் கணக்கொன்றை தனியாகத் தொடங்கியதற்காக, கோபப்பட்டு கணக்குப் புத்தகத்தை கிழித்தெறிந்த நிகழ்வும், நோபல் பரிசு பெற, நார்வே நாட்டிற்குச் செல்லும்போது மனைவியை வலியுறுத்தி அழைத்துச் சென்ற நிகழ்வும் சுவையானவை.   
                         ஆய்வுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் சொந்தமாக தயாரிக்க வேண்டும், அதற்காக வீண் செலவு செய்யக்கூடாது என்ற எண்ணம் கொண்ட சர் சி வி இராமன், தனது நோபல் பரிசுப் பணத்தை முழுவதுமாக செலவு செய்ய இயலாமல் போனது ஒரு சோக வரலாறு. கோபால ராவ் என்பவரால் மைசூரில் தொடங்கப்பட்ட புதிய வங்கி ஒன்றில், தனது நோபல் பரிசுத் தொகையின் பெரும் பகுதியை டெபாசிட் செய்திருந்தார் சர் சி வி இராமன். ஓய்வுக்குப் பின் அந்தத் தொகையை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், தேவையற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவித்திருந்த அந்த வங்கி, வெகு சீக்கிரத்தில் திவாலாகிப் போனது. சர் சி வி இராமனின் பணமும் அதில் தொலைந்தது. ஆனால்,  பணம் போனதைப் பற்றியெல்லம்  கவலைப்படாமல், தொடர்ந்து ஆய்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தார் சர் சி வி இராமன்.  
                    இன்றுவரை, இந்தியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமையோடு, அறிவியல் துறையில்  நோபல் பரிசு பெற்றுள்ள ஒரே விஞ்ஞானி சர் சி வி இராமன் மட்டுமே. வளரும் தலைமுறைக்கு,  அவரது வாழ்வு மிசச்சிறந்த ஓர் உதாரணமாகும்.  
             இனி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வானம் பாருங்கள்;  மனதினை வசியம் செய்யும் அந்த நீல வண்ணத்தினைப் பாருங்கள்; சர் சி வி இராமனை நினைவுக்கு வருவார். அப்போது அவர் சொன்ன இந்த வரிகளை மனதிற்குள் ஓடச் செய்யுங்கள். புதியன பிறக்கலாம்.  ”அறிவியல் என்பது படிப்படியாகக் கேள்விகள் கேட்டு, அறிந்து கொள்வதே ஆகும்”
                      ஆம், கேள்விகளின் மூலமே மானுட சமூகம் முன்னேறிச் செல்லும்!
               

Tuesday, November 6, 2018

நவம்பர் 6


குற்றவியல் துறையின் தந்தை - சிசரோ லாம்ப்ரொசோ.

நவம்பர் 6...இன்று!   

        புலனாய்வுத் துறையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் , 1871ஆம் ஆண்டு,  வில்லெல்லா என்ற குற்றவாளியின் மனதையும், உடலையும்  ஆய்வுக்கு உட்படுத்தினார். மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் பிறவிக் குற்றவாளிகளுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையே , உடல் அமைப்பில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வாக அது இருந்தது. வில்லெல்லா இறந்த பிறகு, அவனது உடல் கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அவனது பின்தலைப் பகுதியின் உள்பகுதியானது குழிந்து,   சாதாரண மனிதர்களின் தலைப்பகுதியை விட பெருமளவு மாறியிருப்பதைக் கண்டறிந்தார் அந்த மருத்துவர். 
                    அதன்பிறகு, பல்வேறு குற்றவாளிகளின் நடத்தை மற்றும் உடலை ஆய்வு செய்து கொண்டே இருந்தார். மனநலம் குன்றியவர்களின் உடலில் காணப்படும் பொதுவான  மாற்றங்களையும் குறித்து வைத்துக் கொண்டார். இவை அனைத்தையும் தொகுத்து, 1878ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகள் கொண்ட புத்தகத் தொகுப்பாக அவற்றை வெளியிட்டார். ”அடிப்படையில் குற்றவாளிகளை இரண்டாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிறவிக் குற்றவாளிகள் ( Born Criminals) , இரண்டாம் வகையிலும் இரண்டு வகைக்  குற்றவாளிகள் criminaloids Or Ocassional Criminals Ans Insane criminals ’, என குற்றவாளிகளை வகைப்படுத்தி, குற்றவியல் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தினார் அந்த மருத்துவர்.
                  குற்றவாளிகளை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும் என்று சொன்ன அந்த மருத்துவர் தான் , சிசரோ லாம்ப்ரொசோ (1835-1909).   ’குற்றவியல் துறையின் தந்தை’ (Father of Criminology)  என்றழைக்கப்படும் சிசரோவின் பிறந்த நாள் இன்று.! ’குற்றவாளிகளுக்கான மானுடவியலை’ உருவாக்கிய இந்த மருத்துவர்தான் , குற்றவாளிகளை மாற்றுக் கோணத்திலும்  பார்க்கலாம் என முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் ஆவார்.
                           இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசரோ லாம்ப்ரொசோ , 1835ஆம் ஆண்டு, நவம்பர் 6ஆம் தேதி, வெரோனா நகரத்தில், ஒரு நடுத்தர  யூதக் குடும்பத்தில்  பிறந்தார். இவரது பெற்றோர் அரோன்னி லாம்ப்ரொசோ மற்றும் ஸெஃபோரா.  டியூரின் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த சிசரோ, 1859ஆம் ஆண்டு,  ராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராகச் சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு, 1866ல் பெசாரோ மருத்துவமனையில் மனநலக் காப்பகத்தின் தலைமை மருத்துவராகப் பணியில் சேர்ந்த போதுதான், ஆய்வுகளின் மீது இவருக்குப் பேரார்வம் பிறந்தது.  
                  1871க்குப் பிறகு, இத்தாலி நாட்டுப் புலனாய்வுத் துறையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியது இவரது ஆய்வுக்கு, பெரிதும் உதவியது. பெண் குற்றவாளிகளையும் நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தினார். பல்வேறு ஒற்றுமை, வேற்றுமைகளை வரிசைப்படுத்தினார்.  1891ல் வெளிவந்த The man Of  Genius, 1895ல் பரபரப்பை உண்டாக்கிய  'The Female Offender' மற்றும்  Crime: Its causes and Remedies (1899),  ஆகிய இவரது புத்தகங்கள் குற்றவியல் துறைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தன. இவரால் உருவாக்கப்பட்ட Italian School Of Positivist Criminology, இவருக்கு பெரும் மதிப்பை உலகெங்கும் பெற்றுத் தந்தது. தனது  இறுதிக் காலத்தில், நியாஸின்(பி3) பற்றாக்குறையால் உண்டாகும் ’பெல்லக்கரா’ நோய் பற்றிய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டார். அமானுஷ்ய சக்திகள், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிசம்  பற்றியெல்லாம்  ஆராய்ந்தார். அவற்றைத் தொகுத்து, 1909ல் 'Afetr Death- What?'    என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.
                      இவரது சிந்தனைகள் யாவும்,  இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலி நாட்டில் முழுவதுமாக மறுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இவரைப் புகழ்ந்து தள்ளின. மரபு வழியாக மனநல பாதிப்புகள் வரும் என்ற சிசரோவின் கருத்தை ஏற்றுக் கொண்டன. 
                     குற்றவாளிகளின் உடலில் இருக்கும் மாற்றங்களை , சாதாரண மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே தனது வாழ்நாளைச் செலவிட்ட சிசரோ, 1875ல் நினா டி பெனெடெட்டி என்பவரத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம்  ஐந்து குழந்தைகள். அதில் ஒரு மகன்,  தந்தையின் ஆய்வினைப் பின் தொடர்ந்தார்.  ஆய்வில் சேகரிக்கப்படும் மாதிரிகளை தனது வீட்டில் சேமிக்கத் தொடங்கிய  சிசரோ , ஒரு கட்டத்தில் டியூரின் பல்கலைக்கழகத்தின் ஓர் அறையில், அவற்றை  கலைப்பொருள்களாகக்(Artifacts)  காட்சிப்படுத்தினார். 
     பிறகு, 1892ல் இதற்கென தனி மியூஸியம் ஒன்றை சிசரோ உருவாக்கினார். அங்கே, குற்றவாளிகளின் எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என வேறுபட்ட பல உறுப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார். சில காரணங்களால்   1914 ல் மூடப்பட்ட இந்த மியூஸியம் , 2010ஆம் ஆண்டு, பொதுமக்கள் பார்வைக்காக  மீண்டும் திறக்கப்பட்டது. அங்கே பார்க்கப்பட வேண்டிய பல  முக்கியப் பொருள்களில், 1909ல்  சேர்க்கப்பட்ட பொருள் ஒன்றும்  நம்மை வரவேற்கிறது. நமக்காக அது  காத்துக்கொண்டே இருக்கிறது;  ஏதோ ஒன்றை, சொல்லில்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
         நீங்கள் தனியாகச் செல்லும்போது,  கழுகு போன்ற நீண்ட மூக்கு, சிவந்த கண்கள், பெரிய தாடை, ஜாடி மூடி போன்ற காதுகள், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் கன்னங்கள் கொண்ட மனிதனைப் பார்த்தவுடன் நெஞ்சில் லேசாக, பயவுணர்ச்சி தோன்றுகிறதா? சிலரைப் பார்த்தவுடனேயே, பயந்து ஒதுங்கத் தோன்றுகிறதா? ,  கவலைப்படாதீர்கள்.
            நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு,  பல நாடுகள் ஏற்றுக்கொண்ட -  சில நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட,  சிசரோவின் Born Criminals கருத்துக்களை -  உங்கள் உள்ளம் ,  மரபு வழியாகவே உள்ளுக்குள் உள்வாங்கி  வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். 
                    இன்னும் ஏதேனும் சந்தேகம் என்றால், சிசரோவால் அமைக்கப்பட்ட டியூரின் நகர மியூஸியத்திற்குச் செல்லுங்கள். அங்கே, "ஃபார்மலின்" நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைக்குள், அவரது கடைசி விருப்பப் படி,  சிசரோ லாம்ப்ரொசோவின்  தலை மட்டும் காட்சிக்கு  வைக்கப்பட்டடுள்ளது. 1909, அக்டோபர் 19 முதல், உங்கள்  சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காகவே,  குடுவைக்குள் இருக்கும் அந்தக் கண்கள் -  காத்துக் கொண்டே  இருக்கின்றன. 
             விசித்திர மருத்துவர் சிசரோ லாம்ப்ரொசோ!. ஏனெனில்,   சாதாரண மனிதனின் மனதைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. அதிலும், குற்றவாளிகளின் மனதினைப் புரிந்து கொண்டு, உடல் பிரச்சனையை அறிவதென்பது அத்தனை எளிதானதா என்ன?
        

Monday, November 5, 2018

நவம்பர் 5

நாட்டுக்குழைத்த    நண்பன் - சித்தரஞ்சன்  தாஸ்

நவம்பர் 5...இன்று!

                          வங்காளத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் என்பவரின் மீது, 1908 - ஏப்ரல் 30 அன்று, குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அவர் தப்பித்தாலும், உடன் இருந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் இறந்து போயினர்.   1905ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாகப் பிரித்த ஆங்கிலேய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். கூடவே பல்வேறு புரட்சிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இதில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர்தான் மகான்  ஸ்ரீ அரவிந்தர் எனப்படும்  அரவிந்த் கோஷ்
                      கொல்கத்தா அருகில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை (1808-09) நடைபெற்று வந்தது. அரவிந்தருக்கு ஆதரவாக பி.சக்ரவர்த்தி என்ற முன்னணி வழக்குரைஞர் வாதிட்டு வந்தார். வழக்குக்கான ஊதியம் பெறுவதில் உண்டான தாமதம் மற்றும் பிரச்சனை காரணமாக சக்ரவர்த்தி பாதியிலேயே விலகிக் கொள்ள நேர்ந்தது. அரவிந்தருக்கு ஆதரவாக வாதிட பலரும் தயங்கிய வேளையில், இளம் வழக்குரைஞர் ஒருவர் வாதிட முன் வந்தார்.  206 சாட்சிகள், 400 ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், தனது வாதத் திறமையால் அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத்தந்தார் அந்த வழக்குரைஞர். பாரதத்திற்கு மகான் அரவிந்தரை மீட்டுத்தந்த அந்த வழக்குரைஞர் தான் தேச பந்து என்றழைக்கப்பட்ட   சித்தரஞ்சன் தாஸ் (1870-1925). !
                            வங்க தேசம்- விக்ரம்பூரில், 1870ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி சித்தரஞ்சன் தாஸ் பிறந்தார். இவரது பெற்றோர் பூபன் மோகன் தாஸ்-நிஷ்டாரினி தேவி. இவர்களது குடும்பத்தினர் அனைவரும் பிரம்ம சமாஜத்தில்  உறுப்பினர்களாக இருந்தனர். குடும்பம் ஓரளவு  வசதியாகவே இருந்தது. கல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, சித்தரஞ்சன் தாஸ்  1890ல்  ஐ.சி.எஸ் படிப்பிற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.  தாதாபாய் நெளரோஜியை கருப்பர் எனப் பேசிய, வெள்ளை அதிகாரிகளை கடுமையாக எதிர்த்துப் பேசினார். அதன் விளைவோ என்னவோ, ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி கிடைக்கவில்லை. தந்தையின் கனவையும்  நிறைவேற்ற முடியவில்லை.  ஆயினும், பாரிஸ்டர் பட்டம் முடித்து , வழக்குரைஞராக இந்தியா திரும்பினார் சித்தரஞ்சன் தாஸ். 
                 கொல்கத்தா நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில்  வாதாடிக் கொண்டிருந்த போதும், அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரைக் காப்பாற்றிய பிறகு இவரது புகழ் வெகுவாகப் பரவத் தொடங்கியது.  இவரது சம்பளம் 20,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில், அந்தக் காலத்திலேயே ஒரு வழக்கிற்கு ஒரு லட்சம் பெறும் புகழ் பெற்ற வழக்குரைஞராக மாறினார் சித்தரஞ்சன் தாஸ். பொங்கிப் பெருகும் ஊற்றென இவரிடத்தில் தாராள சிந்தனை நிரம்பி வழிந்தது.  தனது வருமானத்தையெல்லாம் எழைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து செலவு செய்தார். 
                       1917ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகளின் தலைமையை ஏற்றார். காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களுக்கு, ரயில் வண்டியில், பொது மக்களை,  தனது சொந்த செலவில் ஏற்றிச் சென்றார். இதற்காகப் பெரும் தொகையினை எப்போதும் செலவு செய்து வந்தார்.   1920ஆம் ஆண்டு ஒத்துழையாமைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் கலந்து கொண்ட சித்தரஞ்சன் தாஸ்,  அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் முடிவினைத் தீவிரமாக பின்பற்றத் தொடங்கினார்.  பார்த்துக் கொண்டு  இருக்குமா ஆங்கிலேய அரசு?
இவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 
              ‘ஆங்கில அரசு இங்கிருப்பதையே எதிர்க்கிறேன், அந்த அரசால் நடத்தப்படும் விசாரணைக்கு நான் எப்படி வருவேன்?’ எனக் கூறி, விசாரணைக்குச் செல்ல மறுத்து விட்டார்.     1921 ஆம் ஆண்டு, இவரோடு சேர்த்து, இவரது மனைவி மற்றும் மகனையும் சிறையில் அடைத்தது ஆங்கில அரசு. சிறைச்சாலையில் பல்வேறு தலைவர்க்ளின் நட்பு இவருக்குக் கிடைத்தது.  சிறைக்கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றிக் கொண்ட சித்தரஞ்சன் தாஸ், அங்கே அபுல் கலாம் ஆசாத்திடம் உருது, பாரசீகம் மற்றும் அரபி மொழிகளைக் கற்றுக் கொண்டார். 
              சிறையில் இருந்து வெளிவந்த போது, அகமதாபாத்தில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி இவருக்காக காத்துக் கிடந்தது. ஆடம்பர வாழ்வை முற்றாகத் துறந்து, காதி உடையில் எளிமையாக இருந்த தாஸின் உள்ளம், முன்பைவிட தற்போது வலிமையாக இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட போது, கோபமடைந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மோதிலால் நேரு மற்றும் ஹுசைன் ஷாஹித் ஆகியோருடன் இணைந்து, 1923ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். 1924ல் நடைபெற்ற வங்கத் தேர்தலில் இவரது சுயராஜ்ஜியக் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. கல்கத்தா மேயராகத் தேர்வானார் சித்தரஞ்சன் தாஸ். 
             சட்ட சபையில் ஆங்கில அரசுக்கெதிரான  இவரது முழக்கங்கள் ஆங்கில அரசுக்கு அச்சத்தைக் கொடுத்தன. இவரைத் தீவிரமாகப் பின்பற்றிய சீடரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸினை நகரத் தலைவராக்கினார். கொண்ட கொள்கையில் உறுதியுடன் போராடும் மனநிலையை அவருக்கும் ஊட்டினார். தனது தந்தை என்றும், குரு என்றும் சித்தரஞ்சன் தாஸை மரணிக்கும் வரை மனதில் வைத்திருந்தார் நேதாஜி.  சித்தரஞ்சன் தாஸின் மனைவி வசந்தா தேவியை அம்மா என்றே நேதாஜி அழைத்து வந்தார்.
            1879 ஆம் அண்டு, சித்தரஞ்சன் தாஸ் - வசந்தி தேவி திருமணம்  நடைபெற்றது. இவர்களுக்கு அபர்ணா தேவி, சிரரஞ்சன் தாஸ்,  கல்யாணி தேவி என மொத்தம் மூன்று குழந்தைகள். புத்தகங்கள் வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட.  வங்க மொழியில் இவர் எழுதிய ‘சங்கீத சாகரம்’ என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றது. இதனை அரவிந்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார். அதற்கும் பெரிய வரவேற்பு இருந்தது. சிததரஞ்சன் தாஸ் எழுதிய ‘கிஷோர் கிஷோரி’, ‘அந்தர் யாகி’, ‘நாராயண் மாலா’ நூல்களும் முக்கியமானவை.
                புகழ்பெற்ற ‘கேசரி’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய சித்தரஞ்சன் தாஸ், ‘ஃபார்வர்ட்’ என்ற நாளிதழையும் ‘நாராயண்’ என்ற மாத இதழையும் தானே தொடங்கி நடத்தினார். இப்படித் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸுக்கு, விதியின் வழியே புதிய சிக்கல் ஏற்பட்டது. 1925ஆம் ஆண்டு துவக்கத்தில் இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. குளிர் பிரதேசமொன்றில் படுக்கையிலேயே சிலகாலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தினர். வேறுவழியின்றி, டார்ஜிலிங் புறப்பட்டார் சித்தரஞ்சன் தாஸ். 
                  கல்கத்தாவில் இருந்த தனது சொத்துக்களை எல்லாம் தேசத்தின் பொருட்டு தானமாக வழங்கினார். அதில் நான்கில் ஒரு பங்கு கூட தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கவில்லை என பின்னாளில் அவரது குடும்பத்தினர் வருந்தியதும் நடந்தது. அவரது வீடும், சுற்றியிருந்த நிலமும் இன்று 'சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனையாக' செயல்பட்டு வருகிறது.  அனைத்தையும் நாட்டிற்குக் கொடுத்த பிறகு,   கையில் வெறும் 35,000 ரூபாயுடன் மட்டும்தான், டார்ஜிலிங்கில் 'ஸ்ரீ என் என் சர்காரின்' இல்லத்திற்கு தங்கிடச் சென்றார் சித்தரஞ்சன் தாஸ். டார்ஜிலிங் வந்த மகாத்மா காந்தி அடிகள் இவரோடு ஐந்து நாள்கள் தங்கியிருந்தார். காந்தியடிகளுக்குப் பிடித்தமான ஆட்டுப்ப்பாலுக்காக,  ஐந்து வெள்ளாடுகளை வரவழைத்து, மகாத்மாவை  நன்கு கவனித்துக் கொண்டார். 
             கையில் இருந்த 35,000 ரூபாய் மெலியத் தொடங்கியது.  உடல் நலமும் நலிவடையத் தொடங்கியது. 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி, தேசத்தின் விடுதலை பற்றிய கனவுகள் நிறைந்த கண்களோடு , இவரது உயிர் பிரிந்தது. சிறப்பு ரயில் ஒன்றின் மூலம் இவரது உடல் கல்கத்தா கொண்டு வரப்பட்டது. வழி நெடுக,  ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தான் தலைமையேற்றிருந்தார். வங்காளத்தின் முடிசூடா மன்னனின் உடல் கியோரட்லா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  காற்றில் பறந்த அவரது சாம்பல் துகள்களிலும் விடுதலை நெருப்பு கனன்று கொண்டிருந்தது.  
               “ சில நூறு ரூபாய்கள் மட்டும் தான், எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் இருக்கிறது”- என மரணம் நெருங்கும் வேளையில்,  தனது அன்பான சீடர் நேதாஜிக்கு இவர் எழுதிய கடித வரிகள் படிப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடும்.
     தன்னையும், தனது உடைமைகளையும் தேச விடுதலைக்காகவே, மெழுகென கரைத்துக் கொண்ட சித்தரஞ்சன் தாஸை , ’தேச பந்து’  (Friend of the Nation)  என அழைப்பது முற்றிலும் பொருத்தம் தானே?. 
       இப்போது,  அரசியலை வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக மாற்றி விட்டார்கள் போலிகள்.  வாய்ப்ப்பேச்சின் மூலமே பூசி மொழுகி, நாட்டைச் சுரண்டும் களைகளுக்கு  மத்தியில், நல்லது செய்யும் நம்பிக்கை விதைகளை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
      விதை சுமக்கும் நல் நிலமாவோம்!- தேவையெனில்
      விதையாய் மாறுவோம்!
            
            
                  
                 

Sunday, November 4, 2018

நவம்பர் 4

இந்தியா ஈன்ற மலர் - ஜானகி அம்மாள்

நவம்பர் 4....இன்று!

       1934ஆம் ஆண்டு வரை, அதிக இனிப்புள்ள கரும்பு வகைகளை  இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இந்தியக் கரும்புகளை விட,   தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விளைந்த கரும்புகளே அதிக இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தன. அப்போது, கோயம்புத்தூரிலுள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில், 37 வயதுள்ள ஒரு பெண்மணி மரபியலாளராகப் பணியில் சேர்கிறார்.  இந்திய வகைக் கரும்புடன், பாப்புவா நியூ கினியா வகையினை இணைத்து மரபு மாற்றம் செய்து, கோ கேன் என்ற புதிய கரும்பு ரகமொன்றை அறிமுகம் செய்கிறார். அது, நடைமுறையில் இருந்த வகையை விட இரண்டு மடங்கு விளைச்சலையும் , மிக அதிக இனிப்புச் சுவையையும் கொண்டிருந்தது. அதன் பிறகு, இந்தியாவின் கரும்பு இறக்குமதி அளவு குறைந்தது. கரும்பு உற்பத்தியில் உலக நாடுகளோடு இந்தியா  போட்டியிடத் தொடங்கியது.
      முழுக்க முழுக்க ஆண்களால் சூழப்பட்டிருந்த , கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் அப்போது இருந்த ஒரே பெண்மணியான இவர், தொடர்ந்து கடும் நெருக்கடிகளைச் சந்ததிக்க வேண்டி இருந்தது. சாதியப் புறக்கணிப்பும், பெண்ணடிமைத்தனமும் இவரது உள்ளத்தை வெகுவாகக் காயமடையச் செய்தன. தனது வழிகாட்டியான சி.டி.டார்லிங்டனுக்கு மன வருத்தத்துடன் கடிதம் எழுதிவிட்டு, லண்டன்  புறப்படுகிறார்.   1940 முதல் 1945 வரை ,    ஜான் இன்ஸ் தோட்டக்கலை நிறுவனத்தில், மரபியலாளராகப் பணியாற்றுகிறார். பிறகு, லண்டனில் உள்ள வைஸ்லி ராயல் தோட்டக்கலைத் துறையில்,   இனக்கலப்பின் மூலம் புதிய மலர் ஒன்றை உருவாக்குகிறார்.  மலரின் பெயர், “ மேக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் ”.  ஆம், அம்மலருக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. லண்டனில் புதிய மலர் வகையை உருவாக்கிய  இந்திய மலர் ஜானகி அம்மாளின்(1897-1984)  பிறந்த தினம் இன்று!
               கேரள மாநிலம், தல்லசேரியில் 1897ஆம் ஆண்டு,  நவம்பர் 4ஆம் தேதி, ஈ.கே.கிருஷ்ணன் - தேவியம்மாள் தம்பதிக்கு பத்தாவது பிள்ளையாக, ஜானகி அம்மாள்  பிறந்தார். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள், 19 பிள்ளைகள். இவர் இரண்டாவது மனைவியின் மகள் ஆவார். சென்னையில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தந்தையைப் போலவே, ஜானகி அம்மாளுக்கும் தோட்டம் வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் இளம் வயதிலேயே ஆர்வம் வந்திருந்தது. தல்லசேரியில் பள்ளிப் படிப்பை முடித்த ஜானகி அம்மாள், சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், பிரசிடென்ஸி கல்லூரியில் தாவரவியலில் சிறப்பு  பட்டமும் பெற்றார். சில காலம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜானகி அம்மாளுக்கு , அமெரிக்கா மிக்ஸிகன்  பல்கலைக் கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. 
            ஜானகி அம்மாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அவர் ஒரு தெளிவான முடிவெடுத்தார். திருமணத்தைத் தவிர்த்து விட்டு, படிப்பைத் தொடர வேண்டும் என்று உறுதி கொண்டார்.  மதிப்புமிக்க மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில், உதவித்தொகையுடன் கூடிய முதுநிலைப் படிப்பை 1925ல் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அங்கேயே ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றார்.    தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண் இவர்தான் என பல்கலைகழகம் அறிவித்திருக்கிறது. “Chromosome Studies In Nicandra Physaloides" என்ற தலைப்பில் , 1932 ஆம் ஆண்டு வெளியான இவரது ஆய்வுக்கட்டுரை , தாவரவியல் உலகில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது. முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில், ’புதிய ரக கத்திரிக்காய்’ (Janaki Brenjal)  ஒன்றையும் கண்டுபிடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.  
     இந்தியா திரும்பிய பின்னர், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் 1932-34 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். சர் சி வி ராமன் தலைமையில் இருந்த , இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும், கோவை கரும்பு இனப்பெருக்க  ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகவும் 1939 வரை இங்கிருந்த ஜானகி அம்மாள், உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், லண்டன் சென்றார். அங்கே தோட்டக்கலைத் துறையில் வேலை. அவர் குடியிருப்புகளிலும் ஜெர்மனி வீசிய குண்டுகள் வந்து விழுந்தன. ஒவ்வொரு நாளும் அறையில்  கண்ணாடிகள் சிதறிக் கிடக்கும். அவற்றைத் துடைத்து சுத்தம் செய்த பின்னரே பணிக்குக் கிளம்ப வேண்டும். அறிவியலின் மீது கொண்ட தணியாத தாகம் காரணமாக,  தனியாளாகத் தங்கியிருந்த ஜானகி அம்மாளுக்கு இவை யாவும் அச்சத்தைத் தரவில்லை. இந்தியாவிலிருந்து அவர் அழைத்துச் சென்ற அணில் ஒன்று எப்போதும் அவரோடு இருந்தது.  புராணங்களில் ராமனுக்கு உதவியது போல, ஜானகி அம்மாளுக்கும் அதுவே துணையாய் இருந்தது.
             1951 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் அழைப்பை ஏற்று, Botanical Survey of India (B.S.I.) அமைப்பை சீர்படுத்த இந்தியா வந்தார். 1952 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 அன்று, BSI Director - General ஆக நியமிக்கப்பட்டார். தேசத்தின் வளர்ச்சிக்காக, தொடர்ந்து பல்வேறு அமைப்புகளில் தனது பங்களிப்பைச் செய்தார். சில காலம், பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும்  பணியாற்றியிருக்கிறார்.  1977 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டு முதல் , தாவர வகைப்பாட்டியலுக்கான விருது, இவரது பெயரிலேயே  வழங்கப்பட்டு வருகிறது. ஜம்முவில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு இவரது பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.
                 அமைதிப் பள்ளத்தாக்கில், குந்திப்புழா ஆற்றின் குறுக்கே, நீர்மின் நிலையம் அமைப்பதற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர் ஜானகி அம்மாள். பெறப் போகும் பயனை விட, சுற்றுச்சூழலை அழிப்பதால் வரும் பாதிப்பு அதிகம் என வாதிட்டார். இங்கே, அவரது குரல் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. மேற்குலக நாடுகள் இவரது கருத்தினைப் புரிந்து கொண்டன. பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் சார்ந்த சர்வதேச கருத்தரங்கில் அழைக்கப்பட்ட ஒரே பெண் இவர்மட்டும் தான்.                       
               தனது ஆசிரியர் டார்லிங்டனுடன் சேர்ந்து இவர் எழுதி வெளியிட்ட, “ Chromosome Atlas of Cultivated Plants"  என்ற புத்தகம், தாவரவியல் உலகில் மிகவும் புகழ் பெற்றது. அதைப்போலவே, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர் என்பதும், அது நிறைவேறாத காதலாய் கருகிப் போனது என்பதும் அப்போது பரபரப்பை உண்டாக்கியிருந்தது. வாழ்நாள் முழுக்க, தாவரங்களை  மட்டுமே காதலித்து வாழ்ந்த ஜானகி அம்மாள், கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. சத்தமின்றி உதிரும் ஒரு மலர் போல,   7- பிப்ரவரி, 1984 அன்று, தனது உடலிலிருந்து உயிரை உதிர்த்துக் கொண்டார்.
                          ஜானகி அம்மாளின் சாதனைகளை மக்களிடத்தில், குறிப்பாக இந்தியப் பெண்களிடத்தில் அழுத்தமாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். பெண்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதே  பாவம் என்றிருந்த காலத்தில், தடைகளை எல்லாம் தாண்டி, சாதனைகள் படைத்த இவர் வாழ்வு, அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகும்.  காந்திய வழிகளில் விருப்பம் கொண்டிருந்த ஜானகி அம்மாள், தனக்கென உடைமைகள் எதையும் பெரிதாகச் சேர்த்து வைத்திருக்கவில்லை. மரணிக்கும்வரை, கேரள பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்திய ஜானகி அம்மாளிடம் இருந்தது, மஞ்சள் வண்ணத்திலான  சில புடவைகள்  மட்டுமே. எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்தவர்களை மறந்து விடும் தேசத்தில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?
                    லண்டன் வைஸ்லி பூங்காவின் நுழைவு வாயிலில்  நம்மை வரவேற்கும் 'வெள்ளை வண்ண  ஜானகி மலர்', தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகிறது. அறிந்தோ, அறியாமலோ இந்தியா மறந்து கொண்டிருக்கும் அபூர்வ மலர் ஜானகி அம்மாள்.!
             வரலாற்று ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் தேசத்தில்தான், புதிய புதிய வரலாற்றுச் சாதனைகள் பூத்துச் சிரிக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

Saturday, November 3, 2018

நவம்பர் 3

தமிழைச் சுமந்த தோள்கள் - மன்னர் பாஸ்கர சேதுபதி.

நவம்பர் 3...இன்று!



”ஒருவன் இவ்வுலகிற்குச் செய்ய வேண்டிய தர்மங்கள் பலவற்றிலும், தனது தாய்ப்பாஷையின் பொருட்டுச் செய்யும் தருமம் அதிகம் சிறந்ததாகும்” 
       - ராஜா பாஸ்கர சேதுபதி அவர்கள், தமிழறிஞர் ரா.ராகவ அய்யங்காருக்கு எழுதிக் கொடுத்த உரிமைப் பத்திரத்தில்.(நவ-4,1901)      

          1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சர்வ சமய மாநாடு ஒன்று நடைபெற இருந்தது. இந்திய தேசத்தின் பெருமைகளையும், இந்து மதத்தின் சிறப்பையும் உலக நாடுகளின் கண்களுக்குக் கொண்டு செல்ல அது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அந்நாளைய மதுரை கலெக்டர் திரு.கரோல் என்பவரின் உதவியோடு, அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி.
             அப்போது, சென்னை நண்பர்  சுப்ரமணிய அய்யர் மூலமாக சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்து கொள்கிறார். சிகாகோ மாநாட்டிற்கு, தனக்குப் பதிலாக சுவாமி விவேகானந்தரை அனுப்ப முடிவு செய்கிறார். அங்கே,    மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய உரையும், அதன் பின்னர் ஏற்பட்ட எழுச்சியும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டு விட்டது. 
         தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சுவாமி விவேகனந்தருக்கு வழங்கி, அதன் மூலம் அழியாப் புகழ் பெற்ற  பாஸ்கர சேதுபதியின் பிறந்த நாள் இன்று. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மூத்த மகனாக, 1868 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி ராமநாதபுரத்தில் பாஸ்கர சேதுபதி பிறந்தார். 1873ஆம் ஆண்டு, தனது 32வது வயதிலேயே, ராமநாதபுர மன்னர்  இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி இறந்து போகிறார். அப்போது, பாஸ்கர சேதுபதிக்கு வயது  ஐந்து. அவரது தம்பி தினகரருக்கு வயது இரண்டு. 
            பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை, சமஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பினைக் கவனிக்க நிர்வாகக் குழு ஒன்றினை ஏற்படுத்தியது    ஆங்கிலேய அரசு. பாஸ்கரரும், தினகரரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைப் பாதுகாத்து,  கல்வி புகட்டும் பொறுப்பு கிரீட்டன் தம்பதியருக்கு வழங்கப்பட்டது.   அவர்களுக்கு முறையான கல்வி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட யாவும் கற்றுத்தரப்பட்டன.  ஆசிரியர்களாகவும், வளர்ப்புப் பெற்றோராகவும் இருந்த கிரீட்டன் தம்பதியினர், இவர்களை இந்திய தேசமெங்கும் பயணம் அழைத்துச் சென்றனர். நாட்டு மக்களோடு உரையாடவும், வாழ்வினைப் புரிந்து கொள்ளவும் இந்தப் பயணங்கள்  பேருதவி புரிந்தன. 
               1888ஆம் ஆண்டு, அந்நாளைய இளங்கலைப் பட்டமான எஃப்.ஏ பட்டத்தில் முதல் வகுப்பில்    தேர்ச்சி பெற்றார் பாஸ்கர சேதுபதி. தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் சேதுபதி, அன்றாட செலவுகளை அதில் குறித்து வைத்திருக்கிறார். தனது பயணங்கள், கண்ட மனிதர்கள், அறிந்த உண்மைகள், ஏற்பட்ட  செலவுகள் என எல்லா செய்திகளும் அந்த நாட்குறிப்பில்  இருக்கின்றன. 
             படிப்புக் காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆங்கிலேய நிவாகக் குழு, 1888ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது. திருமணச் செலவிற்காக சமஸ்தான நிதியிலிருந்து, ரூபாய் 50,000 ஒதுக்கியது. 13.05.1888ல் ஒரு லட்சம் ரூபாய் செலவில், பாஸ்கர சேதுபதியின் திருமணம் விமரிசையாக நடத்தப்பட்டது. ஆனால், மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை மணமுடித்த  சில நிமிடங்களிலேயே, அந்தப்புரத்தில்  சிவபாக்கியம் நாச்சியார் என்பவரோடு இரண்டாம் திருமணமும் நடைபெற்றது. இரண்டாம் திருமணத்திற்கும், செலவுத் தொகை அதிகமானதற்கும்  ஆங்கிலேய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரண்டு மணப்பெண்களுமே உறவுக்காரப் பெண்கள்; இரு வீட்டாரிடமும் எதிர்ப்பை விரும்பாத ராணி முத்தாத்தாள் நாச்சியார்,  பாஸ்கர சேதுபதிக்கு இருவரையுமே திருமணம் செய்து வைத்துவிட்டார்.
                           தனது இருபத்தொன்றாவது வயதில்,  03.04.1889 அன்று,  சமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொண்டார் பாஸ்கர சேதுபதி. 1891 ஆம் ஆண்டு, ’மகாராஜா’ என்னும் பட்டம் ஆங்கிலேய அரசால்  இவருக்கு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு மேல் வரி வருமானம் கிடைக்கும் ராமநாதபுர சமஸ்தானத்தை நிர்வகித்த பாஸ்கர சேதுபதி, தமிழையும், சைவத்தையும் தமதிரு கண்களெனப் போற்றினார். ஆனால், பிற மதங்களின் மீதும், மொழிகளின் மீதும்  ஒருபோதும் வெறுப்பை உமிழ்ந்ததில்லை.   
                     அரண்மனை அருகில் இருக்கும் தேவாலயத்திற்கு, வெண்கலத்தாலான பைபிள் ஸ்டாண்ட், சரவிளக்கு வாங்கிக் கொடுத்தார். அதோடு சேர்ந்து, இவர்  வாங்கி அளித்த தேவாலய மணி , அங்கே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  
                           ஒருமுறை,  தனது  உதவியாளராக இருந்த காதர் ராவுத்தர் முகம் வாடியதைக் கண்டு, மன்னர்  காரணம் கேட்கிறார். நாகூர் கந்தூரி விழாவிற்குச் செல்ல வேண்டும், அதற்கு ரூ.100 செலவாகும் என பதில்  சொல்கிறார் காதர். உடனே, மன்னர்  பாஸ்கரர், அவரிடத்தில் ரூ.400 வழங்கி, குடும்பத்தோடு நாகூர் தர்கா சென்றுவரச்  சொல்கிறார். மதங்களைக் கடந்த மனித நேயமிக்கவர் மன்னர் பாஸ்கர சேதுபதி. 
                    தனது மெய்க்காப்பாளர்களாக இருந்த வீரபத்ரன் சேர்வைக்கு ‘சக்தி விலாசம்’ என்ற பெயரில் வீடு ஒன்று கட்டிக் கொடுத்தார். மற்றொரு பணியாளர் ஆறுமுகம் சேர்வைக்கு வீடு கட்ட ரூ.25000 வழங்கினார். 
             1893ஆம் ஆண்டு, பொங்கல் திருநாளன்று, தனது 33 வயதிற்குள் 33 சாதனைகளையாவது  செய்து விட வேண்டும் என்று தனது நாட்குறிப்பில் எழுதி, இலட்சியங்களைப் பட்டியலிட்டார். தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் தங்கிப் படிக்க விடுதி அமைத்தல், குறைந்தது 12 தமிழ், சமஸ்கிருத நூல்களைப் பதிப்பித்தல், தமிழ் படிப்பில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குதல் ,  விக்டோரியா மகாராணியைச் சந்தித்தல் எனத் தொடரும் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, “தமிழ்ச் சங்கம்” அமைத்தல் என்பதாகும். 
          தனது பெரியப்பா மகன் பாண்டிதுரைத் தேவரோடு இணைந்து, 14.09.1901 அன்று மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்க பேருதவி புரிந்தார்.  தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்க ஆவன செய்தார். மதுரை உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்தார்.  உ.வெ.சா , ராகவ அய்யங்கார் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்தார். அதேபோல், தமிழிசை வளர்ச்சிக்காக மிகுந்த பொருட்செலவு செய்தார். தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான கோயில் திருப்பணிகளையும் மேற்கொண்டார். மொத்தத்தில் தனது காலத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். 
                 1896ல் சிவகாம சுந்தரி நாச்சியார் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். முதல் இரு மனைவியர் மூலம்  மன்னருக்கு இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். ஒரு பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட, சிவபாக்கியம் நாச்சியாரின் மகன் ராஜராஜேஸ்வரன் , அடுத்த மன்னர் வாரிசாக மாறினார்.
         மதுரை ஆலயத்தில் நாடார்களோடு ஏற்பட்ட பிணக்கு  நீதிமன்றம் வரை சென்றதும்,      இராமநாதபுரம் கோவில் அறங்காவலர் பதவியை 1901ல்  ராஜினாமா செய்ததும் இவர் மீது  சர்ச்சையை ஏற்படுத்தியது.
                  முதுகில் ஏற்பட்ட சிறு கட்டி, அவரது உயிரைக் குடிக்கும் பெரு ஆணியாயிற்று. 27.12.1903ஆம் ஆண்டு, திருவாவடுதுறை மடத்தில், கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அன்று மார்கழி மாதம்; ஆருத்ரா தரிசன நாள். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் மோகன ராகத்தில் கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். அதனை கேட்டுக் கொண்டே, வள்ளலென  வாழ்ந்த பாஸ்கர சேதுபதியின் உயிர் அடங்கியது. 33 வயதிற்குள் என்னென்ன இலட்சியங்கள் என வரையறுத்துக் கொண்ட மாதிரியே, திடீரென வலியற்ற மரணத்தைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 34.  தமிழறிஞர்கள் இவரது பெருமைகள் கூறும் இலக்கியங்கள் படைத்தனர். தமிழன்னை , அவற்றின் வழியே அழியாப் புகழை இவருக்கு வழங்கினாள்.
           1897ஆம் ஆண்டு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரை வரவேற்க, மன்னர் பாஸ்கரன்,  பாம்பன் கடற்கரையில் காத்திருந்தார். தாயக மண்ணை மிதிக்கும் முன்பாக, தன் முதுகில் பாதம் பதித்து தரையிறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தரையிறங்கிய இடத்தில்,  நினைவுத் தூண் எழுப்பினார். அதில் ,''சத்யமேவ ஜெயதே' என்ற வாசகத்தை எழுதி வைத்தார். மன்னர்  பாஸ்கர சேதுபதி ஒரு ராஜரிஷி போன்றவர்  என சுவாமி விவேகானந்தர் தனது மேடைப்பேச்சுகளில் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.    
             தமிழின் தனித்துவமான ஆளுமைகளுள் ஒருவரான ,  சமஸ்தான மகாவித்துவான் ரா.ராகவ அய்யங்காரின் ஆயுள் காலம் முழுமைக்கும் , ஆண்டுக்கு ரூ 635 வழங்கிட, 1901 ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, ஓர்  உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.  அந்தத் தமிழறிஞரை  முத்துப் பல்லக்கில் அமரச் செய்து, மதுரை நகர வீதிகளில் தானே தோள் சுமந்து சென்றார் மன்னர்  பாஸ்கர சேதுபதி.
      தமிழறிஞர்களை மட்டுமல்ல- வாழ்நாள் முழுக்க தமிழ் மொழியை- தமிழ் இசையைத்  தன் இதயத்தில் நிரப்பி, தோள்களில் சுமந்து சென்றவரை,  நாம் நினைவில் நிறுத்த வேண்டாமா?
          முன்னோர்களை மறப்பதும் , அவர்களது தியாகங்களை மறைப்பதும் - வாழ்கின்ற மண்ணுக்குச் செய்யும் துரோகமல்லவா!






Friday, November 2, 2018

நவம்பர் 2


இந்திய அறிவியல் ஆய்வுலக முன்னோடி - மகேந்திரலால் சர்க்கார்.

நவம்பர் 2...இன்று! 

       1930 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு அறிவியல் துறையில் முதல் நோபல் பரிசு கிடைத்தது. 1928ஆம் ஆண்டு, நீல நிற விளைவைக் கண்டறிந்ததற்காக இப்பரிசினைப் பெற்ற  சர் சி வி ராமன் , தனது ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்த Indian Association For the Cultivation of Science நிறுவனத்தையும், அதனைத் தோற்றுவித்த மகேந்திரலால் சர்க்காரையும் பரிசு பெற்ற வேளையில் நன்றியோடு நினைவு கூர்ந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் தான், இந்தியாவின் மிகப் பழமையான ஆய்வு நிறுவனம் ஆகும்.  இயற்பியல், வேதியியல், வானியல் , உயிர் வேதியியல் என பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக் களமாக இன்றும் அது துடிப்போடு செயல்பட்டு வருகிறது. 
           1876 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக இயங்கி வருகிறது. சர் சி வி ராமன் தவிர, கே.எஸ்.கிருஷ்ணன், மேகநாத் சாகா போன்ற அறிஞர்களும் இங்கேதான் தங்களது விஞ்ஞானப் பார்வையை விசாலமாக்கிக் கொண்டனர். இந்நிறுவனத்தைத் தோற்றுவித்த மகேந்திரலால் சர்க்காருக்கு ஒரு வலுவான கனவு இருந்தது.  அறிவியல் ஆய்வுகளுக்கு  பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது. மேற்கத்திய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, எந்த ஒன்றையும் சுயமாக சிந்திக்கும் நிலை வர வேண்டும்; அதற்காக,  நமது பணத்திலேயே ஆய்வு நிறுவனம் ஒன்று  அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். 
                     இந்நிறுவனத்தை அமைப்பதற்கான  முயற்சிகளுக்கு, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் , பக்கிம் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட பெரிய்வர்களும் முழு ஒத்துழைப்பு தந்தனர். தனது பங்களிப்பான ரூ.1000 உடன்,  பல்வேறு இடங்களில் பெற்ற நன்கொடையினைக் கொண்டு, IACS ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கிய மகேந்திரலால் சர்க்காரின் பெயர், ஒவ்வொரு மாணவனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயராகும்.  
                  அடிப்படையில் ஆங்கில மருத்துவரான இவர், ஹோமியோபதி மருத்துவத்தை இந்தியாவில் வேரூன்றச் செய்தவர்களில் முதன்மையானவர் ஆவார். விஞ்ஞானப் பார்வை, சமூக சேவை , மருத்துவ ஆய்வு என தன் வாழ்நாளைச் செலவழித்த மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் (1833-1904) இன்று!
                  1833 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 2 ஆம் தேதி கல்கத்தா அருகில் உள்ள பைக்பாரா என்னும் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையை 5வது  வயதிலும், தாயை 9வது வயதிலும் இழந்த மகேந்திரலால் , தாய்மாமனின் வீட்டில் தங்கிப் படித்தார். ஈஸ்வர் கோஷ், மகேஷ் கோஷ் என இரண்டு மாமன்களும் மருமகனின் படிப்பிற்கு உதவினர். அதிக நுண்ணறிவு கொண்ட மாணவராக இருந்த மகேந்திரலாலுக்கு, 1840ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பிற்கு இலவச இடம் கிடைத்தது. பிறகு, உதவித் தொகைக்கான தேர்வில் முதலிடம் பெற்ற இவர், ஹிந்து கல்லூரியில் 1854ஆம் ஆண்டு வரை படித்தார். 
         1854ஆம் ஆண்டு, கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிய பேராசிரியப் பெருமக்களின் பேரன்பிற்குப் பாத்திரமான மகேந்திரலால்,  மருத்துவப் படிப்பில் முதல் மாணவனாகத் (1854-1860) தேறினார். கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை, கண்கள் தொர்பான வகுப்பில்,  பேராசிரியர் ஆர்ச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் விழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மகேந்திரலால் சரியான விடையைத் தருகிறார். ஆச்சரியமடைந்த ஆர்ச்சர், தொடர்ந்து விழி தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கேட்க, அனைத்திற்கும் சரியான விடையைச் சொல்லி, அனைவரையும் வியப்புக்கு ஆளாக்கினார். 
         டாக்டர் ஃபேரெர் உதவி செய்ய, கல்கத்தா பல்கலைக் கழகத்தில், முதலிடத்திற்கான பதக்கத்துடன்  எம்.டி. பட்ட மேற்படிப்பை 1863ஆம் ஆண்டு நிறைவு செய்தார் மகேந்திரலால் சர்க்கார்.  ஆங்கில மருத்துவத்தின் அனைத்து நுட்பங்களையும் அறிந்திருந்த சர்க்கார், மருத்துவப் பணியை புனிதமெனக் கருதினார். அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி மருத்துவ  சேவையாற்றி வந்தார்.
                    அல்லோபதி மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில நோயாளிகளை  அதே பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவந்த பாபு ராஜேந்திர தத் குணமாக்கிய செய்திகள் நகரெங்கும் உலா வந்து கொண்டிருந்தன.  அந்த சமயத்தில் தான்  சர்க்காரும் தன்னை ஒரு அல்லோபதி  மருத்துவராக நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்.
          1867ஆம் ஆண்டு, வில்லியம் மோர்கன் எழுதிய “The Philosophy of Homeopathy" என்ற புத்தகத்தைப் பற்றி, மருத்துவ இதழ் ஒன்றில்  விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. நூல் விமர்சனத்தின் வழியாக ஹோமியோபதி  மருத்துவத்தின் பித்தலாட்ட முகமூடியையைக் கிழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். ஹோமியோபதி என்பது மக்களை ஏமாற்றும் வைத்திய முறை என்று இதுநாள் வரை நம்பியிருந்த அவரது எண்ணத்தை இந்தப் புத்தகம் அடியோடு மாற்றியது. ஒருமுறை, இரண்டு முறை என தொடர்ந்து அந்தப் புத்தகத்தைப் படித்த  சர்க்கார், புதிய முடிவுக்கு வந்தார். ராஜேந்திர தத்தோடு நீண்ட உரையாடல்கள் நடத்தினார். 
                   1867 பிப்ரவரி 16 ஆம் தேதி,  பிரிட்டிஷ் மருத்துவ சங்கக் கூட்டத்தில், “எல்லா வகையிலும் அல்லோபதி மருத்துவ முறையைவிட , ஹோமியோபதியே சிறந்தது” என அறிக்கை வெளியிட்டுப் பேசினார். அல்லோபதி மருத்துவர்களின் கடும் எதிர்ப்பு, அடக்கு முறைகள் யாவற்றையும் மீறி, தனது மனசாட்சி சொன்ன உண்மையின் பக்கமே இறுதி வரை நின்றார்.  தனது ஆய்வு முடிவுகளையும், கட்டுரைகளையும் வெளியிட 1868 ஆம் ஆண்டு, "Calcutta Journal Of Medicine" என்ற மருத்துவ  இதழைத் தொடங்கினார். 
                 எல்லாவற்றின் மீதும் அறிவியல் பார்வை கொள்வதுதான், மனிதனின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று சொன்ன சர்க்கார், 1878 ஆம் ஆண்டு IACS  அறிவியல்  ஆய்வு நிறுவனத்தை சொந்தமாக நிறுவினார். அதில்,  1904 வரை மதிப்புமிகு செயலாளராக இருந்த சர்க்கார், ஏறக்குறைய 154 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களை  வரவழைத்து, ஆய்வு மாணவர்களோடு கலந்துரையாடச் செய்தார். 
                மருத்துவம் படிக்கும் போது, 1855 ல், ராஜகுமாரி என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார் மகேந்திரலால் சர்க்கார். 1860ல் பிறந்த இவர்களது ஒரே மகன் அமிர்தலால் சர்க்கார், தந்தைக்குப் பிறகு, ஆய்வு மையத்தின் செயலாளராகப் (1904-1919) பணியாற்றினார். அதன் பிறகு, சர் சி வி ராமன் 14 ஆண்டுகள் அப்பதவியில் இருந்து , அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்தினார். 
        அல்லோபதி மருத்துவராக இருந்து - ஹோமியோபதி மருத்துவ முறையினை பின்பற்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் உண்மையின் பக்கம் நின்று எதிர்கொண்டார். தனது அன்பான வைத்திய முறையால் மக்கள் மனங்களை வென்றெடுத்தார். அறிவியல் பார்வையால் மாணவர் உள்ளங்களில் இமயமென உயர்ந்து நிற்கிறார்  மகேந்திரலால் சர்க்கார் .
             நோய்வாய்ப்பட்ட காலங்களில் எல்லாம், ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு இவர்தான் தொடர்ந்து மருத்துவம் பார்த்தார். அறிவியல் பார்வையில் ஆன்மீகத்தை எப்படி அணுகலாம் என்ற விவாதங்கள் இவர்களிடத்தில் தொடர்ந்து நடந்தன. 
                இவரது மருத்துவத்தால் குணமடைந்த பலர் தொடர்ந்து நிதி உதவி வழங்கினர். விஜயநகர் மன்னர் மஹராஜ் குமார் வழங்கிய ரூ 40,000 மூலம் விஜயநகர் ஆய்வுக்கூடம் (Vijayanagaram Laboratory) உருவாக்கினார். இப்படியாக, வாழ்நாள் முழுக்க தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ஆய்வு மைய விரிவாக்கத்திற்கே பயன்படுத்தினார். 
                  இந்திய அறிவியல் ஆய்வுலகின் முன்னோடி என்றழைக்கப்படும் சர்க்காரின் வாழ்வு, ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்தியில் 1904 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதியொடு நிறைவு பெற்று விட்டது. ஆனால், மனித நேயத்துடன் கூடிய அறிவியல் சிந்தனையின் அடிப்படையில் தான், மானுட சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற அவரது எண்ணம் என்றென்றும் முன்னெடுக்கப்பட வேண்டும். 
                ஆய்வுச்சிந்தனை என்பது - உண்மையின் பொருட்டு, திறந்த மனதுடன், சுயமானதாக இருக்க வேண்டும்; ஆளும் சர்க்காருக்கு  அடிபணிந்து விடக்கூடாது என்பதுதான் டாக்டர் சர்க்காரின் வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம்! 
                        


                      

Tuesday, October 2, 2018

அக்டோபர் 2

நேர்மையின் இணைச்சொல் - லால் பகதூர் சாஸ்திரி

அக்டோபர் 2...இன்று!

   1977 ஆம் ஆண்டு, ராஜ் நாராயண் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. காரணம்,  18 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு, ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை , ஒருங்கிணைந்த ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில், மர்மமான முறையில் இறந்து போனார். ரஷ்யாவில் இவரது உடலைப் பரிசோதித்த டாக்டர் ஆர்.என்.சூக்,  பாராளுமன்ற விசாரணைக் கமிஷனில் ஆஜராக டெல்லி   வரும் வழியில் ட்ரக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணைக் கமிஷன் அதிர்ச்சி அடைந்தது. ரஷ்யப் பயணத்தின் போது உடனிருந்த,  சாஸ்திரியின் தனி உதவியாளர் ராம்நாத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் வரும் வழியில், வாகனம் மோதி இரு கால்களை இழந்தார். சுய நினைவும் பறிபோனது. விசாரணைக் கமிஷன் பேரதிர்ச்சி அடைந்தது. வழக்கம் போலவே, கிணற்றில் இட்ட கல்லாய் போனது   கமிஷனின் அறிக்கை.
       தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, சாஸ்திரியின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளின் நல்லுறவினைக் காரணம் காட்டி பதிலளிக்க மறுத்துவருகிறது இந்திய வெளியுறவுத் துறை. ரஷ்யாவில், இந்தியப் பிரதமர் தங்கியிருந்த இல்லத்தின் சமையலர் முதலில்  கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும்,   இரு நாட்டிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதும், உடல் நீலநிறமாக இருந்தது எனச் சொன்ன சாஸ்திரி மனைவியின் குற்றச்சாட்டும் சந்தேகத்தை வலுவாக்கின. 
      ரஷ்ய அதிபர் கேசிகின் , பாக். பிரதமர் அயூப்கான் இருவரும் கண்ணீர் தோய்ந்த விழிகளுடன் , சாஸ்திரியின் உடலைச்  சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றினர். இந்திய தேசமே அவருக்காகக் கலங்கி நின்றது. தூய காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்த சாஸ்திரியின் உடல் ,  காந்தி சமாதி அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.  தனது அரசியல் வழிகாட்டியின் அருகிலேயே, சாஸ்திரி மீளாத் துயிலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
       இன்றைய அரசியல் தலைவர்களை  அவரோடு ஒப்பிட்டுப் பார்த்து, வேதனைப் படும் மனதினைத் தேற்ற வழியேதும் தெரியவில்லை. ஆம், தன்னலமற்ற உழைப்பு, நேர்மை இரண்டையும் இறுதிவரை கைவிடாத லால் பகதூர் சாஸ்திரியின் (1904-1966) பிறந்த நாள் இன்று!
                 1904 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, வாரணாசி அருகில் உள்ள முகல்சராய் என்னும் கிராமத்தில் லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா பிறந்தார். சாரதா பிரசாத் வர்மா-ராம் துலாரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் இவர். தந்தை ஒன்றரை வயதிலேயே இறந்துவிட, மாமா வீட்டிலும், தாத்தா வீட்டிலும் வளர்ந்தார். வறுமை இவரை விடாது விரட்டியது. காலுக்குச் செருப்பு வாங்கக் கூட முடியாமல் துன்பப்பட்டார்.  கங்கை ஆற்றின் கரையைக் கடந்து பள்ளி செல்ல வசதி இல்லாததால் , மிஷ்ராஜி என்பவரிடம் கல்வி கற்றார்.  
             1920ஆம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 16 வயது கூட நிரம்பாததால் ஆங்கிலேய அரசு இவரை விடுதலை செய்தது. 1930 சட்ட மறுப்பு இயக்கம், 1942 தனி நபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என சுதந்திரப் போராட்டத்தின் எல்லா கட்டத்திலும் கலந்து கொண்டு, தனது தேசப்பற்றினை உறுதியுடன் வெளிப்படுத்தினார். மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் கிடந்தார். சிறையில் இருந்த போது, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கியூரி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்தார்.                 
                காலையில் கல்லூரி- மாலையில் கதர் விற்பனை என தானே விரும்பி வடிவமைத்த வாழ்க்கையை ரசித்து மகிழ்ந்தார். வாரணாசியில் சிவ பிரசாத் குப்தா நடத்திய காசி வித்யா பீடத்தில் 5 ஆண்டுகள் படித்து, சாஸ்திரி பட்டம் பெற்றார். தனது சாதிய அடையாளத்தைக் குறிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற பின்னொட்டைத் தவிர்த்து, சாஸ்திரி என்ற பட்டத்தை இணைத்துக் கொண்டார். வரலாற்றில் சாஸ்திரி என்ற பெயரே நிலைத்து விட்டது. 
           1927 ஆம் ஆண்டு, லலிதா தேவி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வரதட்சணைக்குப் பதிலாக , கதர் துணியும், கை ராட்டை சக்கரமும் தந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் தான் இவரது திருமணம் நடைபெற்றது. இவருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள்.
             1951 முதல் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்த சாஸ்திரி, பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார். ரயில்வே அமைச்சர், உள்துறை அமைச்சர் என நேரு அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் இவர் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார்.
        தடியடி நடத்துவதற்குப் பதிலாக நீர் பீய்ச்சி அடித்து, கூட்டத்தைக் கலைக்கும் முறையை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தார். அதுபோல, பெண் நடத்துநர்களை முதன் முதலில் பணியில் சேர்த்ததும் இவர் தான். 1965 ஆம் ஆண்டு,  தேசிய பால்பண்ணை வளர்ச்சித் துறை ஒன்றை ஏற்படுத்தி, வெண்மைப் புரட்சிக்கு அடித்தளமிட்டார்.
        சற்றே குள்ளமான உருவம்; ஆனால் உறுதியான மனம். நெருக்கடி மிகுந்த நேரத்தில்,  'ஜெய் ஜவான் ஜெய் கிசான் ' என்ற முழக்கத்துடன் பாகிஸ்தானை இவர் எதிர் கொண்ட விதம் , இவரது நிர்வாகத் திறனுக்கு சான்றாக அமைந்தது. சீனாவுக்கும் துணிந்து எச்சரிக்கை செய்தார்.
       ஐம்பது ரூபாய் சம்பளம் தனக்கு அதிகம் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி, நாற்பது ரூபாயாக சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதும், பிரதமர் பதவியில் இருந்த போதிலும், மகனின் பள்ளிக்குள் சாதாரண மனிதனாகச் சென்று, பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொண்டதும் இவரது நேர்மைக்கும், எளிமைக்கும் சிறந்த உதாரணங்கள். இந்தி மொழி திணிப்பில் இவர்மீது, கடுமையான விமர்சனங்கள் இருந்ததையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 சாஸ்திரியைப் போலவே , அவரது மனைவியும் நாட்டுப்பற்றும் நேர்மையும் மிக்கவராக இருந்தார்.  1966ல்,  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தான இரவிலேயே, மாரடைப்பால் இந்தியப் பிரதமர் மறைந்த செய்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு சற்று முன்னர், சாஸ்திரி தனது   மனைவியிடம் பேச முற்பட்டார். டீத்வால், ஹாஜிபீர் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் ஷரத்தை எதிர்க்கும் விதமாக கணவரிடம் பேச மறுத்தார் லலிதா தேவி.
         லால் பகதூர் சாஸ்திரி கடைசிவரை வாடகை வீட்டிலேயே குடும்பம் நடத்தினார். பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி, ரூபாய் 12000 மதிப்பில்  கார் ஒன்று வாங்கினார். சாஸ்திரி திடீரென மறைந்த போது, மீதமிருந்த கடன் தொகையை, அடுத்த பிரதமர் இந்திரா காந்தி ரத்து செய்து ஆணையிட்டார். ஆனால், அதனை மறுத்து, ஓய்வூதியத் தொகையைக் கொண்டு, கடனை அடைத்து முடித்தார் லலிதா தேவி. இந்திய தேசம் இவர்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறது.
    சாஸ்திரி போல, இப்போதும் இலட்சிய வாழ்வினை வாழ்ந்து காட்டும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? அடுத்த தலைமுறைக்குச் சுட்டிக் காட்டிட ஆள் கிடைக்குமா? அபூர்வமாய் சிலர் இருக்கிறார்கள் தான்.  ஆனால், அவர்களை    எண்ணிட ஒரு ஆளின் கை விரல்கள் போதுமல்லவா??
     
       
        

Monday, October 1, 2018

அக்டோபர் 1

கண் காக்கும் கடவுள் - டாக்டர் வெங்கடசாமி.

அக்டோபர் 1...இன்று!



”இறைவா, நீ ஒளி கொடுத்தாய்
ஆயிரமாயிரம் மக்களுக்கு
ஒரு பெருமகனாரின் அரிய அறிவால்.

உழைப்பால் விழி கொடுத்து
விழி வேள்வி கண்டார் டாக்டர் வெங்கடசாமி

அவருக்கு நம் காணிக்கை,
அவர் ஏற்றிய தீபம் , அறிவு தீபமாக
என்றென்றும் உழைப்பதே!”
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

            1990 ஆம் ஆண்டு, ஹைதராபாத் நகரத்திலிருந்து,  கிராமத்து மனிதர் போன்ற தோற்றம் கொண்ட அதிகாரி ஒருவர்  கண் பரிசோதனைக்காக மதுரை வருகிறார். முறையான பெயர் பதிவுக்குப் பிறகு, டாக்டர் நாச்சியார் அவரை பரிசோதனை செய்கிறார். பிறகு சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுகிறார் அந்த அதிகாரி. பாதுகாவலர்கள் யாருமின்றி, எளிமையான முறையில் வந்த அவரை யாரும் அறிந்திருக்கவில்லை. அவரும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. 
        சிகிச்சைக்கான கட்டணத்தை அந்த அதிகாரி காசோலையாகத் தருகிறார்.  அப்போது, அந்த மருத்துவமனை விதிகளின் படி,  காசோலை பெற மறுத்து, மீண்டும் டாக்டர் நாச்சியாரிடம் அந்த அதிகாரியை அனுப்பி வைக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். கையில் ரொக்கமாக பணம் இல்லை, காசோலைதான் உள்ளது என அந்த அதிகாரி சொல்ல, இலவச சிகிச்சைப் பிரிவில் இவரது பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு, தனது சேவையைத் தொடர்கிறார் அந்த மருத்துவர்.   
           பணம் செலுத்தினாலும், இலவச சிகிச்சை என்றாலும்  நோயாளிகளை சமமாக நடத்தும் உயர்ந்த மாண்பினை வியந்தபடியே, இலவசப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார் அந்த அதிகாரி.  ஹைதராபாத் D.R.D.L (Defence Research and Development Laboratory) இயக்குநர் மதுரை வந்திருக்கும் செய்தி அறிந்த, உள்ளூர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரவிந்தர் கண்  மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இலவசப் பிரிவில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநரைச் சந்திக்கின்றனர்.   ஆம், அப்போதுதான்  வந்திருப்பது    தேசத்தின் மூத்த விஞ்ஞானி அப்துல் கலாம்   என்பது மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரிய வருகிறது. 
        விபரம் அறிந்த  டாக்டர் நாச்சியார், நேரடியாக வந்து, நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தார். “நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையே! மாறாக, சாதாரண மக்களுக்கு நீங்கள் அளிக்கும் தரமான சிகிச்சையை நேரில் காணும் வாய்ப்பாக இது அமைந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என டாக்டர் அப்துல்கலாம் பதிலுரைத்தார்.
             1976ஆம் ஆண்டு, 11 படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டது அரவிந்தர் கண் மருத்துவமனை. இன்று, 4000 படுக்கை வசதிகள். ஆண்டுக்கு 40 லட்சம் கண் நோயாளிகளுக்கு சிகிச்சை, அதில் சராசரியாக 6 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை என விழி காக்கும் வேள்வியினைத் தொடர்ந்து செய்து  வருகிறது இம்மருத்துவமனை. தினமும்  பத்தாயிரம் பேருக்குக் குறையாமல் இங்கு மக்கள் வந்து போகிறார்கள். சிகிச்சையில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை. நிறுவனத்தின் “சீஃப்” சொன்னபடியே,  அனைவரையும் சமமாகப் பாவிக்கும் விழிகளுடன்  சேவை தொடர்கிறது.
  அரவிந்தர் கண் மருத்துவமனையில்  ‘சீஃப்’ என அன்போடு அழைக்கப்பட்டவர் தான், நிறுவனர் டாக்டர் கோ.வெங்கடசாமி. 1918 ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி,  எட்டயபுரம் அருகே அயன் வடமலாபுரத்தில் பிறந்த அவருக்கு இன்று நூற்றாண்டு  பிறந்த நாள்!.
           முதலில் இரு பிள்ளைகள் பிறந்து இறந்தன. அதன் பிறகு, கோவிந்தப்ப நாயக்கர்-லெட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வெங்கடசாமி. நல்ல கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், ஜானகி, நாச்சியார் ஆகிய நால்வரும் உடன் பிறந்தவர்கள். நம்பிபுரத்திலும், பிறகு கோவில்பட்டியிலும் இவர் ஆரம்பக் கல்வி பயின்றார்.
    தூக்குச்சட்டியில் மதிய உணவு எடுத்துச் செல்லும் அளவுக்கு இவருக்கு வசதியில்லை. கம்மஞ்சோறினை துணியில் கட்டி எடுத்துச் செல்வார். உணவு காய்ந்து விடாதிருக்க, காலை இடைவேளையில், உணவுத் துணியினை நீரில் முக்கி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் - மதியம், உண்ணும்  பக்குவத்தில் கம்மஞ்சோறு இருக்கும். வெங்கடசாமி வறுமையில்தான் படித்தார். ஆனால், சிறப்பாகப் படித்தார்.
                      தந்தை கோவிந்தப்ப நாயக்கர் ஒரு இலட்சியவாதி. கல்வியின் மீது, தீராத ஆர்வம் கொண்டவர். வீட்டில் நிறைய நூல்களை சேகரித்து வைத்திருந்தார். பிள்ளைகளையும் படிக்க வைத்தார். திருக்குறளும், ராமாயணமும், தாகூரின் சிந்தனைகளும் என ஏதேனும் ஒன்றைப் படித்துவிட்டுத்தான், பிள்ளைகளுக்கு காலை உணவே தொடங்கும். தன் வாழ்நாளில் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து விட வேண்டும் என்ற உறுதியோடு உழைத்து, 75,000ரூபாய் சேமித்துக் காட்டியவர் கோவிந்தப்ப நாயக்கர். உழைப்பையும், ஒழுக்கத்தையும் , நேர்மையையும் தனது பிள்ளைகளுக்குப் போதித்தார். 
               வெங்கடசாமியும், தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். வாழ்வினை  தந்தையின் தடத்திலேயே  பின் தொடர்ந்தார். ஆரம்ப  பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியலில் பட்டம் (1938) பெற்றார் வெங்கடசாமி. பிறகு, அவரது விருப்பப்படியே, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க  இடம் கிடைத்தது.  படித்து முடித்த பிறகு, 1944 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.  
                  இரண்டாம் உலகப் போரின் போது, பர்மாக் காடுகளில் தங்கியிருந்த சமயத்தில் விஷப் பூச்சிகளின் கடியால் , இவருக்குத் தீராத தோல் நோய் ஏற்பட்டது. டாக்டர் வெங்கடசாமி ராணுவ முகாமிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். சென்னை திரும்பியவுடன், தனது கனவுப் படிப்பான, மகப்பேறு மருத்துவம் படிக்கத் தொடங்கினார். ஆனால், ஆர்த்ரிட்டிஸ் எனப்படும் முடக்கு வாதம் இவரைத் தாக்கியது. முன்னால் ராணுவ அதிகாரி கட்டிலில் முடங்கிப் போனார். எழுந்து நிற்கக் கூட இயலவில்லை. 
                   ஓர் அதிசயமும் விரைவில் நிகழ்ந்தது. கடும் மன உறுதியின் காரணமாக முடக்கு வாதத்தையே முடக்கிப் போட்டார். மெல்ல நடக்கத் தொடங்கினார். ஆனால், திருகி, முறுக்கிக் கிடந்த வலுவிழந்த விரல்களால் மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கண் மருத்துவம் படித்தார். அந்நாளில், கண் மருத்துவத்தில்  எம்.எஸ். முடித்த ஐந்து மருத்துவர்களுள் இவரும் ஒருவர். 1956ஆம் ஆண்டு, மதுரை மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 
                 1961ஆம் ஆண்டு, மதுரை டி.கல்லுப்பட்டியில் முதல் முறையாக கிராமக் கண் மருத்துவ முகாம் நடத்திக் காட்டினார். வீடு தேடிச் சென்று கண் மருத்துவம் பார்க்கும் நிகழ்வினை வெற்றிகரமாகச் செய்த டாக்டர் வெங்கடசாமியின் புகழ், உலகெங்கும் பரவத் தொடங்கியது. மருத்துவ முகாம் நடத்த ஒரு  சேவா அமைப்பினையும் தொடங்கினார். குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும்  ஊட்டச்சத்தின் அவசியத்தை முகாம்களில் தெளிவுபடுத்தினார். கண் பரிசோதனை முகாம்களில், சர்க்கரை நோயும் கண்டறியப்பட்டு, உரிய  சிகிச்சை வழங்க ஆவன செய்தார்.  
        அரசுப் பணி ஓய்விற்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு, உடன் பிறந்தவர்கள் துணையோடு, ’அரவிந்தர் கண் மருத்துவமனையைத்’  தொடங்கினார்.  ஆரம்பத்தில் சில அரசியல் இடையூறுகள் ஏற்பட்டன. சோதனைகளைக் கடந்தார்.
    மிக்சிகன் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர் சூசன் கில்பர்ட்டுடன் இணைந்து, ”லைக்கோ” என்ற பயிற்சி வகுப்பினைத் தொடங்கினார். மருத்துவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தினை பயனுள்ளதாக மாற்றினார். இந்தியாவில் ஒரு கண் மருத்துவர் சராசரியாக வருடத்திற்கு 220 அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். ஆனால், அரவிந்தர் கண் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், வருடத்திற்கு    இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரது மனித ஆற்றலும்  அறிவியல் முறைப்படி முழுமையாகப் பயன்படுத்துவதை ‘சீஃப்’ உறுதி செய்தார். 
               1992ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உள்விழி லென்ஸின் விற்பனை விலை ஏறக்குறைய ரூ.2000.  ஏழை எளிய மக்களுக்கு அது எட்டாத விலை. லென்ஸ் தயாரிக்கும் பணியைத்  தானே தொடங்குவது என ’சீஃப்’ முடிவு செய்தார். “ஆரோ லேப்” நிறுவனம் வெறும் பத்து பேருடன் தொடங்கப்பட்டது. அவர்கள் அதே லென்ஸை வெறும் 250 ரூபாயில் தயாரித்து வழங்கினர். அமெரிக்க லென்ஸ் நிறுவனங்கள் அரண்டு போயின. இன்று உலக அளவில் பத்து சதவீத உள்விழி லென்ஸ்கள் ஆரோலேப் நிறுவனத்தால்தான் தயாரிக்கப்படுகின்றன.  மருத்துவமனையில்  உள்ள ஒவ்வொரு பொருளும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வீணாக்குதல் என்ற பேச்சுக்கே அங்கு  இடமில்லை.
              ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை இருவரும்தான் தன்னை வழிநடத்துவதாக,  ’சீஃப்’ உறுதியாக நம்பினார். எல்லாத் துறை சார்ந்த நூல்களையும் தொடர்ந்து வாசித்தார். ‘ ஒரு நூற்றாண்டு காலத் தனிமை” நாவல் அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
              30 சத்வீதம் பேரிடம் வசூலிக்கும் தொகையைக் கொண்டு, ஏனைய 70 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை தரும் அரவிந்தர் கண் மருத்துவமனையின் சீஃப், இந்த இடத்தை அடைய எதிர் கொண்ட தடைகளும், அவமானங்களும் மிகவும் அதிகம்.  ஆம், எழும்பூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் , அறுவை சிகிச்சையின் போது, இவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆர்த்திரிட்ஸ் பாதிப்பைக் காரணம் காட்டி அவமானப்படுத்தினார். இவர் தளரவில்லை. அந்த நேரத்தில், 18 தொகுதிகள் கொண்ட The Text book of Opthalmology புத்தகத்தை தெளிவுறப் படித்து, தன்னை வளர்த்துக் கொண்டார்.
             ஒருமுறை சென்னை உணவகத்தில், தொழுநோயாளி என விரட்டப்பட்டார். ரயில் பயணச் சீட்டு பெறும் வரிசையில் இருந்து துரத்தப்பட்டார். மரணம் வரை அவரைத் தொடர்ந்து வாட்டிய தோல் நோய் மற்றும் விரல்களில் உண்டான பாதிப்பு காரணமாக, டாக்டர்   இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை.
       2006 ஆம் ஆண்டு, ஜூலை 7ஆம் தேதி,  இவர் மறைந்த நாளன்றும், சீஃபின் விருப்பப்படியே  மருத்துவமனைப் பணிகள்  தடங்களின்றி நடந்தன. அன்றைய தினம் மட்டும் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
         சோரியாசிஸ் காரணமாக,    அவர் அமர்ந்து சென்ற இடங்களில்  எல்லாம்,  அவரது தோல் உதிர்ந்து விழுந்தது. ஆனால், அவரது தன்னம்பிக்கை மட்டும் , இறுதிவரை உதிராது , உதிரத்தில் கலந்தோடியது.  வளைக்க முடியாத தன் விரல்களைக் கொண்டு,  வாழ்க்கையை  தான் விரும்பியபடியே வண்ணமாக்கிக்  கொண்டவர். ஆம்,  தன்னலமற்ற இந்தக் கதிரவன் ஏற்றி வைத்த விழி விளக்குகள் இம்மண்ணில் ஏராளம். அவ்விழிகளின் வழியே, அவர் இவ்வுலகைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

             கருணையும் ,அன்பும் தாங்கி நிற்கும் மருத்துவர்களை - மானுட சமூகம் -  கை கூப்பி, வானுறையும்   இறையெனத் தொழுகிறது.
           

              

Sunday, September 16, 2018

செப்டம்பர் 16







காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.சுப்புலெட்சுமி

செப்டம்பர் 16....இன்று!

”இசை என்பது ஒரு கடல். அதில் நான் ஒரு மாணவி”
                                                                                             - எம்.எஸ்.சுப்புலெட்சுமி.

”இசையரசிக்கு முன்னால், நான் ஒரு சாதாரண பிரதமர் தானே” (Who am I, a mere Prime Minister before a Queen, a Queen of Music)
                   -எம்.எஸ்.சுப்புலெட்சுமி பற்றி நேரு சொன்ன வார்த்தைகள். 

          தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி,சமஸ்கிருதம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடி, இசையால் இன்பத்தை நிறைத்தவர்;  சமூக சேவைக்காக ராமன் மகசேசே விருது(1974) பெற்ற முதல்  இசைக்கலைஞர்; இசைத்துறையிலிருந்து பாரத ரத்னா விருது(1998) பெற்ற முதல் ஆளுமை; வானளாவிய புகழ் பெற்ற போதும், அடக்கத்தைத் தவறவிடாத வாழ்வு முறை கொண்டவர்; பரணியில் பிறந்த இவர், தரணியை ஆண்ட இசையரசி; கர்நாடக இசையை உலகெங்கும் கொண்டு சென்ற இசைத்தோணி - எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1916-2004) பிறந்த நாள் இன்று! 
            1916, செப்டம்பர் 16ஆம் தேதி, கூடல் நகராம்  மதுரையில்  சுப்புலெட்சுமி பிறந்தார். ’குஞ்சம்மாள்’ என்பது இவரது செல்லப் பெயர். இவரது தாய் சண்முக வடிவு அம்மாள்  சிறந்த வீணை இசைக்கலைஞர். சுப்புலெட்சுமி  தேவதாசி குல மரபில் பிறந்தவர். தனது தந்தை சுப்ரமணிய அய்யர் என பின்னாளில் ஒரு பேட்டியில் , எம்.எஸ் தெரிவித்திருந்தார். ஆனால், சண்முகவடிவு அம்மாள் இது தொடர்பாக கருத்தேதும் தெரிவிக்கவில்லை.  எம்.எஸ். சுப்புலெட்சுமி என்ற பெயரில் உள்ள எம்.எஸ் என்பது மதுரை சண்முகவடிவு என்பதைக் குறிப்பதாகும். சுப்புலெட்சுமியின் சகோதரர் சக்திவேல் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதில் வல்லுநர். தங்கை வடிவாம்பாள் தாயைப் போலவே வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கினார்.  
          தாயின் வழியே - இசை ஆர்வம், இவருக்கும் இயல்பாகவே தொற்றிக் கொண்டது.    செம்மங்குடி சீனிவாச அய்யர், மாயவரம் கிருஷ்ண அய்யர், மதுரை சீனிவாசன் போன்ற ஆளுமைகளிடம் வாய்ப்பாட்டு பாடுவதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும்  இவருக்குக் கிடைத்தது. ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களை பண்டிட் நாராயணராவிடம் கற்றுக் கொண்டார். மதுரை சேதுபதி பள்ளியில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சியின் இடையில் தாயின் அழைப்பை ஏற்று,  'ஆனந்த ஜா'  என்ற மராத்தியப் பாடலை ஹிந்துஸ்தானி மெட்டில் பாடி , பார்வையாளர்களை அசத்தினார்  எம்.எஸ்.  இதுதான் அவரது முதல் மேடைப்பாட்டு.   
   'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்ற பாடலை எம்.எஸ் பாட, சண்முக வடிவு அதற்கு வீணை மீட்டினார். 1926ல் வெளிவந்த அந்த இசைத்தட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 10 வயது குழந்தையின் இசையில் ரசிகர்கள் மெய்மறந்தனர். 
    பிறகு, தாய் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் இவரும்  கூடவே உடன் சென்றார். தனது 17வது வயதில், சென்னை மியூசிக் அகாடமியில் முதல்  முறையாக  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இவரது இசைக்கு,  தமிழகமெங்கும் பரவலான கவனம் கிடைத்தது. 
           1936ஆம் ஆண்டு, யாருக்கும் தெரியாமல்,  தனது நகை,உடைமைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலேறினார் எம்.எஸ். அவர் சென்னை வந்ததன் காரணம்,  சுதந்திரப் போராட்ட வீரர் சதாசிவம் கரங்களைப் பிடித்து, தனது வாழ்வை ஒப்படைக்கத்தான். தேவதாசி மரபுப்படி, ரகசிய மனைவியாகவோ அல்லது வயது முதிர்ந்த செல்வந்தருக்கோ தனது வாழ்வைப் பறிகொடுக்க சுப்புலெட்சுமி விரும்பவில்லை.     சதாசிவம் மதுரை வந்திருந்தபோது, தனது மனதைப் பறிகொடுத்திருந்த எம்.எஸ். , தாயின் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிக்க, தனது காதலனைத் தேடி, தன்னந்தனியாக திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தார். சதாசிவத்தின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த நேரம் அது.  இவர்கள் இருவரும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சேர்ந்து வாழத் தொடங்கினர்.   தனது மகளை மீட்க காவல் துறையின் உதவியை நாடினார் சண்முக வடிவு அம்மாள். ஆனால், தாயுடன் செல்ல எம்.எஸ். மறுத்து விட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் சண்முக வடிவு அம்மாள்  மரணப் படுக்கையில் இருந்த போது கூட, அவரைக் காண எம்.எஸ். செல்லவில்லை. 
            1940ஆம் ஆண்டு, சதாசிவத்தின் மனைவி மன உளைச்சலில் இறந்து போக, எம்.எஸ் சுப்புலெட்சுமியை இரண்டாம் தாரமாக மணம் செய்துகொள்கிறார் சதாசிவம். அதுதான் எம்.எஸ்.வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான திருப்புமுனை.  எம்.எஸ். என்ற ஆளுமையின் பிம்பத்தை திட்டமிட்டுக் கட்டமைத்தார் சதாசிவம். அவரது சாதி, குல பிம்பங்கள் உடைக்கப்பட்டன. சுப்புலெட்சுமியை, தன் வீட்டில் பிறந்த மகாலெட்சுமி என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கினர். கச்சேரிகள், பாடல் பதிவுகள், திரைத்துறை நிகழ்வுகள், அறக்கட்டளைக்காக இசை நிகழ்ச்சிகள் என எல்லாப் பொறுப்புகளையும் சதாசிவமே முன்னின்று செய்தார். தனக்கென குழந்தைகள் இல்லாத போதும்,   சதாசிவத்தின் இரண்டு பிள்ளைகளையும் தன் பிள்ளை போலவே எண்ணி அன்பு செலுத்தினார் எம்.எஸ்.
       சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ( இந்தியில் பக்த மீரா) என நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இந்தியாவெங்கும் எம். எஸ் என்ற இசையரசியின்  புகழ், வானைத் தாண்டியும் உயரப் பறந்தது. 1941ஆம் ஆண்டு,  கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் இணைந்து தொடங்கவிருந்த கல்கி பத்திரிக்கைக்கு 40,000 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. கணவருக்காக, ’சாவித்திரி’ என்ற படத்தில் நாரதராக ஆண் வேடமிட்டு நடித்தார். அதில் கிடைத்த சம்பளத் தொகையைக் கொண்டுதான் ’கல்கி’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
    சென்னை  தமிழிசைச் சங்கத்தில் பாரதியார், பாபநாசம் சிவன், வள்ளலார் போன்றோரது பாடல்களைப் பாடினார். தெலுங்கு கீர்த்தனைகளைப் போலவே தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.   1944ஆம்  ஆண்டு, இந்தியா முழுக்க  நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் கிடைத்த தொகை முழுவதையும், “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” வழங்கினார். பாராட்டு மழையில் நனையும் போதெல்லாம், ’எனது பொது சேவை எண்ணங்களுக்கு ஊற்றுக்கண் - எனது கணவர் தான்’ என அமைதியாக பதிலளிப்பதுதான் இவரது வழக்கம். பெரும்பாலான நேரங்களில், சதாசிவமே பத்திரிக்கைக் கேள்விகளுக்கு பதில் சொல்வார். காரணம் கேட்ட போது,      “ரோஜா அழகாக மலரும்; அது எப்படி என்று கேட்டால் அதற்கு சொல்லத் தெரியாதே! அதனால் தான் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
      23.10.1966 ஆம் ஆண்டு, ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ராஜாஜி எழுதிய “ May the Lord Forgive" என்ற உலக அமைதிப் பாடலைப் பாடினார். 1975 ஆம் ஆண்டு முதல், இவர் பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதம், திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காந்திக்கு மிகவும் பிடித்த  ’ரகுபதி ராகவ ராஜாராம்.’ , ’வைஷ்ணவ ஜனதோ ’ பாடல்களிலும்,  ராஜாஜி எழுதிய, ’குறையொன்றும் இல்லை ’ பாடலிலும் வருகின்ற  குழைவும், உருக்கமும் ,தன்னையே இசைக்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு மட்டுமே உரியது. .
          ’சகுந்தலை’ படத்தின் கதாநாயகன் ஜி.என்.பாலசுப்ரமணியன் மிகச் சிறந்த பாடகர். வசீகரத் தோற்றம் கொண்டவர். அப்படத்தில்  கதாநாயகியாக நடித்த போது,  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் உள்ளம் தடுமாறத் தொடங்கியது. ஜி.என்.பி அவர்களுக்கு எம்.எஸ் எழுதிய காதல் கடிதங்கள் தற்போது கிடைக்கின்றன,  டி.ஜே.ஜார்ஜ் எழுதிய M.S. -A Life in Music புத்தகத்தில் அக்கடிதங்கள் பின்னிணைப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. ஜி.என்.பி மீது அவர் கொண்டிருந்த காதல் நிஜமானது. “பேசவோ, அழவோ எனக்கென்று யாருமில்லை. நடிப்பின் நடுவில் உங்கள் விரல் என்னைத் தீண்டும் போது, நான் இறைவனை உணர்கிறேன். என் அன்பை புரிந்து கொள்ளுங்கள்” என ஒவ்வொரு கடிதமும், ஜி.என்.பி.அவர்களின் பாதங்களில்  விழுந்து மன்றாடின. ஆனால், ஜி.என்.பி அதனைப் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ். அவர்களை வெறும் காமப் பொருளாகவே அவர் கண்கள் கண்டன.
              ஜி.என்.பி மற்றும் எம்.எஸ்.காதல் விவகாரம் சதாசிவத்துக்குத் தெரிந்திருக்கலாம்.    படம் வெளியாகும் போது, ஜி.என்.பி. யின் படங்கள் விளம்பரத்தில் காட்டப்படவில்லை. இசைப்பேழையில் கூட அவரது பெயர் தவிர்க்கப்பட்டது.  எம்.எஸ். கண்களின் பார்வையில் இருந்து, ஜி.என்.பி. ஓரம் கட்டப்பட்டார். ’மீரா’ படத்திற்குப்பின் திரைப்படங்களில்  நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார் எம்.எஸ்.. பொதுச் சேவையிலும் , பக்திப் பாடல்கள் பாடுவதிலுமே  காலத்தைக் கழித்தார். எல்லாவற்றையும் மறந்து, தனது கணவர் சதாசிவத்தின் நிழலிலேயே கடைசி வரை வாழ விரும்பினார். அதன் படியே, வாழ்ந்தும் காட்டினார்.  1997 ஆம் ஆண்டு, தனது வழிகட்டியும், கணவருமான சதாசிவம் மறைந்த பிறகு, எந்த பொது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.  அப்துல் கலாம் குறிப்பிட்டது போல, இசையில் பிறந்து, இசைக்காக வாழ்ந்து, இசையோடு கலந்த எம்.எஸ்.  12.12.2004 அன்று இறந்து போனார்.
      அபாரமான திறமை; எண்ணிலங்கா விருதுகள்; கோடிக்கணக்கான ரசிகர்கள்; இசையின் கடவுள் என்ற தோற்றம்; உலகம் முழுதும் பயணம் என அவரது புற வாழ்வு சந்தோஷங்களால்  மட்டுமே நிரம்பி இருந்தது.
       தேவதாசி குலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல், கணவரோடு இணைந்து பிராமணப் பெண்ணாகவே மாறுதல், இடையில் தோன்றிய  காதல் உணர்வுகள், குழப்பங்கள், பாதுகாப்பின்மை, மரணப் படுக்கையில் இருந்த தாயைக் காண முடியாத சூழல்  என அவரது அக வாழ்வு சந்தித்த, போராட்டங்களுக்கு மத்தியில் தான் இத்தனையையும் சாதித்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். உண்மையில் அவர் அரசி தான்;  காற்று உள்ளவரை , அவரது கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
        கலை தான்,  கஷ்டங்களை மறப்பதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஆம்,    கலைஞனாகவோ, கலை  ரசிகனாகவோ இருப்பதால் அகம் எப்போதும் எழுச்சி கொள்கிறது.