Tuesday, November 6, 2018

நவம்பர் 6


குற்றவியல் துறையின் தந்தை - சிசரோ லாம்ப்ரொசோ.

நவம்பர் 6...இன்று!   

        புலனாய்வுத் துறையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் , 1871ஆம் ஆண்டு,  வில்லெல்லா என்ற குற்றவாளியின் மனதையும், உடலையும்  ஆய்வுக்கு உட்படுத்தினார். மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் பிறவிக் குற்றவாளிகளுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையே , உடல் அமைப்பில் என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வாக அது இருந்தது. வில்லெல்லா இறந்த பிறகு, அவனது உடல் கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அவனது பின்தலைப் பகுதியின் உள்பகுதியானது குழிந்து,   சாதாரண மனிதர்களின் தலைப்பகுதியை விட பெருமளவு மாறியிருப்பதைக் கண்டறிந்தார் அந்த மருத்துவர். 
                    அதன்பிறகு, பல்வேறு குற்றவாளிகளின் நடத்தை மற்றும் உடலை ஆய்வு செய்து கொண்டே இருந்தார். மனநலம் குன்றியவர்களின் உடலில் காணப்படும் பொதுவான  மாற்றங்களையும் குறித்து வைத்துக் கொண்டார். இவை அனைத்தையும் தொகுத்து, 1878ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகள் கொண்ட புத்தகத் தொகுப்பாக அவற்றை வெளியிட்டார். ”அடிப்படையில் குற்றவாளிகளை இரண்டாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிறவிக் குற்றவாளிகள் ( Born Criminals) , இரண்டாம் வகையிலும் இரண்டு வகைக்  குற்றவாளிகள் criminaloids Or Ocassional Criminals Ans Insane criminals ’, என குற்றவாளிகளை வகைப்படுத்தி, குற்றவியல் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தினார் அந்த மருத்துவர்.
                  குற்றவாளிகளை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும் என்று சொன்ன அந்த மருத்துவர் தான் , சிசரோ லாம்ப்ரொசோ (1835-1909).   ’குற்றவியல் துறையின் தந்தை’ (Father of Criminology)  என்றழைக்கப்படும் சிசரோவின் பிறந்த நாள் இன்று.! ’குற்றவாளிகளுக்கான மானுடவியலை’ உருவாக்கிய இந்த மருத்துவர்தான் , குற்றவாளிகளை மாற்றுக் கோணத்திலும்  பார்க்கலாம் என முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் ஆவார்.
                           இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிசரோ லாம்ப்ரொசோ , 1835ஆம் ஆண்டு, நவம்பர் 6ஆம் தேதி, வெரோனா நகரத்தில், ஒரு நடுத்தர  யூதக் குடும்பத்தில்  பிறந்தார். இவரது பெற்றோர் அரோன்னி லாம்ப்ரொசோ மற்றும் ஸெஃபோரா.  டியூரின் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த சிசரோ, 1859ஆம் ஆண்டு,  ராணுவத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராகச் சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு, 1866ல் பெசாரோ மருத்துவமனையில் மனநலக் காப்பகத்தின் தலைமை மருத்துவராகப் பணியில் சேர்ந்த போதுதான், ஆய்வுகளின் மீது இவருக்குப் பேரார்வம் பிறந்தது.  
                  1871க்குப் பிறகு, இத்தாலி நாட்டுப் புலனாய்வுத் துறையின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியது இவரது ஆய்வுக்கு, பெரிதும் உதவியது. பெண் குற்றவாளிகளையும் நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தினார். பல்வேறு ஒற்றுமை, வேற்றுமைகளை வரிசைப்படுத்தினார்.  1891ல் வெளிவந்த The man Of  Genius, 1895ல் பரபரப்பை உண்டாக்கிய  'The Female Offender' மற்றும்  Crime: Its causes and Remedies (1899),  ஆகிய இவரது புத்தகங்கள் குற்றவியல் துறைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தன. இவரால் உருவாக்கப்பட்ட Italian School Of Positivist Criminology, இவருக்கு பெரும் மதிப்பை உலகெங்கும் பெற்றுத் தந்தது. தனது  இறுதிக் காலத்தில், நியாஸின்(பி3) பற்றாக்குறையால் உண்டாகும் ’பெல்லக்கரா’ நோய் பற்றிய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டார். அமானுஷ்ய சக்திகள், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிசம்  பற்றியெல்லாம்  ஆராய்ந்தார். அவற்றைத் தொகுத்து, 1909ல் 'Afetr Death- What?'    என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.
                      இவரது சிந்தனைகள் யாவும்,  இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலி நாட்டில் முழுவதுமாக மறுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இவரைப் புகழ்ந்து தள்ளின. மரபு வழியாக மனநல பாதிப்புகள் வரும் என்ற சிசரோவின் கருத்தை ஏற்றுக் கொண்டன. 
                     குற்றவாளிகளின் உடலில் இருக்கும் மாற்றங்களை , சாதாரண மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே தனது வாழ்நாளைச் செலவிட்ட சிசரோ, 1875ல் நினா டி பெனெடெட்டி என்பவரத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம்  ஐந்து குழந்தைகள். அதில் ஒரு மகன்,  தந்தையின் ஆய்வினைப் பின் தொடர்ந்தார்.  ஆய்வில் சேகரிக்கப்படும் மாதிரிகளை தனது வீட்டில் சேமிக்கத் தொடங்கிய  சிசரோ , ஒரு கட்டத்தில் டியூரின் பல்கலைக்கழகத்தின் ஓர் அறையில், அவற்றை  கலைப்பொருள்களாகக்(Artifacts)  காட்சிப்படுத்தினார். 
     பிறகு, 1892ல் இதற்கென தனி மியூஸியம் ஒன்றை சிசரோ உருவாக்கினார். அங்கே, குற்றவாளிகளின் எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என வேறுபட்ட பல உறுப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார். சில காரணங்களால்   1914 ல் மூடப்பட்ட இந்த மியூஸியம் , 2010ஆம் ஆண்டு, பொதுமக்கள் பார்வைக்காக  மீண்டும் திறக்கப்பட்டது. அங்கே பார்க்கப்பட வேண்டிய பல  முக்கியப் பொருள்களில், 1909ல்  சேர்க்கப்பட்ட பொருள் ஒன்றும்  நம்மை வரவேற்கிறது. நமக்காக அது  காத்துக்கொண்டே இருக்கிறது;  ஏதோ ஒன்றை, சொல்லில்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
         நீங்கள் தனியாகச் செல்லும்போது,  கழுகு போன்ற நீண்ட மூக்கு, சிவந்த கண்கள், பெரிய தாடை, ஜாடி மூடி போன்ற காதுகள், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் கன்னங்கள் கொண்ட மனிதனைப் பார்த்தவுடன் நெஞ்சில் லேசாக, பயவுணர்ச்சி தோன்றுகிறதா? சிலரைப் பார்த்தவுடனேயே, பயந்து ஒதுங்கத் தோன்றுகிறதா? ,  கவலைப்படாதீர்கள்.
            நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு,  பல நாடுகள் ஏற்றுக்கொண்ட -  சில நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட,  சிசரோவின் Born Criminals கருத்துக்களை -  உங்கள் உள்ளம் ,  மரபு வழியாகவே உள்ளுக்குள் உள்வாங்கி  வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். 
                    இன்னும் ஏதேனும் சந்தேகம் என்றால், சிசரோவால் அமைக்கப்பட்ட டியூரின் நகர மியூஸியத்திற்குச் செல்லுங்கள். அங்கே, "ஃபார்மலின்" நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைக்குள், அவரது கடைசி விருப்பப் படி,  சிசரோ லாம்ப்ரொசோவின்  தலை மட்டும் காட்சிக்கு  வைக்கப்பட்டடுள்ளது. 1909, அக்டோபர் 19 முதல், உங்கள்  சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதற்காகவே,  குடுவைக்குள் இருக்கும் அந்தக் கண்கள் -  காத்துக் கொண்டே  இருக்கின்றன. 
             விசித்திர மருத்துவர் சிசரோ லாம்ப்ரொசோ!. ஏனெனில்,   சாதாரண மனிதனின் மனதைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. அதிலும், குற்றவாளிகளின் மனதினைப் புரிந்து கொண்டு, உடல் பிரச்சனையை அறிவதென்பது அத்தனை எளிதானதா என்ன?
        

No comments:

Post a Comment