நீல வண்ணன் - சர் சி வி இராமன்.
நவம்பர் 7...இன்று!
1930ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, அறிவியல் உலகமே திரும்பிப் பார்த்தது. வெள்ளையர் அல்லாத ஒருவர், முதல்முறையாக அறிவியலுக்கான நோபல் பரிசு பெறுவது அவர்களை ஏதோ ஒன்று செய்திருக்க வேண்டும். அவருக்காக அனுப்பட்ட அழைப்பிதழ் தந்தியானது, வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டது. தனது அயல்நாட்டு நண்பர்கள் மூலம் பரிசு பெற்ற விபரத்தினை அறிந்திருந்த போதிலும், அந்த விஞ்ஞானி எந்தவித பதட்டமும் அடையவில்லை. ஏனெனில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு தனக்கே கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய அவர், தனது மனைவிக்கும் சேர்த்து, நார்வே நாட்டுக்குச் செல்ல எல்லா பயண ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.
நீல்ஸ்ஃபோர், ரூத்ர்ஃபோர்ட், சார்லஸ் வில்சன் போன்ற 10 தலைசிறந்த விஞ்ஞானிகளால், நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இவரது கண்டுபிடிப்பு, பல்வேறு ஆக்கங்களுக்கு புதிய திறப்பாக அமைந்திருந்தது. ஒளியானது, ஓர் ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும்போது, ஒளிச்சிதறலுக்கு உள்ளாகிறது என்ற உண்மையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியிருந்தார் இவர். ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளும் இதே போன்ற ஆய்வுக்காக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கண்ணாடி, திரவம் மற்றும் திடப் பொருள்களின் வழியே இச்சோதனையைச் செய்து காட்டிய , இவரைத்தான் நோபல் கமிட்டி ஒருமனதாகத் தேர்வு செய்திருந்தது.
நோபல் பரிசினைப் பெற, ஸ்டாக்ஹோம் நகருக்கு நேரில் செல்ல வேண்டாம் என்று சொல்லிப் பார்த்த ஆங்கில அரசு, பிறகு ஒரு நிபந்தனையோடு அவருக்கு அனுமதி கொடுத்தது. பரிசுக்கான ஏற்புரையில் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி ஏதும் பேசக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தான், இவருக்கு பயண அனுமதி கிடைத்தது. பாரத தேசத்தின் தென்பகுதியில் பிறந்த ஒருவர், 1930 ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி, நோபல் பரிசினைப் பெற்ற பிறகு பேசிய வார்த்தைகள், ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள வைத்தன.
“இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும், எமது வீரர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்”!
இந்திய தேசத்தின் மீதான தனது அன்பை, விருது விழா மேடையில் சரியாக வெளிப்படுத்திய விஞ்ஞானி - தமிழ் மண் ஈன்றெடுத்த மாபெரும் ஆளுமைகளுள் ஒருவர் - சர் சி வி இராமனின் (1888-1970) பிறந்த தினம் இன்று!
1888ஆம் ஆண்டு, நவம்பர் 7ஆம் தேதி , திருச்சி திருவானைக்கோவிலில், சந்திரசேகர்-பார்வதி அம்மள் தம்பதியினருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார் சர் சி வி இராமன். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியரான இவரது தந்தை, விசாகப்பட்டினம் நரசிம்மராவ் கல்லூரிக்கு பேராசிரியராகச் சென்ற போது, குடும்பமும் அங்கே இடம்பெயர்ந்தது. அங்கே, St,Aloysius Anglo Indian பள்ளியில், தனது 11வது வயதிலேயே மெட்ரிக் படிப்பை முடித்தார்.
1904ஆம் ஆண்டு, சென்னை பிரெஸிடென்சி கல்லூரியில், இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.1907ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் நிறைவு செய்தார். இரண்டு பட்டங்களிலுமே, தங்கப்பதக்கம் பெற்று முதல் மாணவனாகத் தேர்வு பெற்றிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல இவர் தேர்வு செய்யப்பட்டார். உடல் தகுதியின்மை காரணமாக, அவரால் லண்டன் செல்ல இயலவில்லை. போட்டித் தேர்வு எழுதி, நிதித்துறையில் ஆடிட்டராக பணி நியமனம் பெற்றார். பணியில் சேர்ந்துவிட்ட போதிலும், அறிவியலின் மீது இவருக்கு இருந்த ஆர்வம் சிறிதும் குறையவே இல்லை.
கல்கத்தாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இராமன், அலுவலக நேரம் போக, ஏனைய நேரங்களில் ஆய்வுகள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்திய ஆய்வுத் துறையின் முன்னோடியான டாக்டர் சர்கார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை (IACS), நடந்து செல்லும் போது, தற்செயலாகப் பார்த்த ராமன், தனது ஆய்வுகளை அங்கேயே செய்து பார்க்க ஒப்புதலும் பெறுகிறார். பிறகு, அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் சிலகாலம் பணியாற்றினார்.
1921ஆம் ஆண்டு, மத்திய தரை கடல் வழியாக அவர் மேற்கொண்டிருந்த ஐரோப்பா பயணம் அவரது வாழ்வில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கப்பலின் தளத்தில் நின்று கொண்டு, அண்ணாந்து பார்த்தார். பரந்து கிடந்த கடலின் வண்ணம், திறந்து கிடந்த வானின் வண்ணம் -இவருக்குள் ஏதோ பொறி தட்டியது. வானம் ஏன் நீல நிறமாகத் தெரிகிறது என்பதை ஊகித்தார். அதனை மெய்ப்பிக்க தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்.
1928ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, சக விஞ்ஞானி கே.எஸ் கிருஷ்ணனுடன் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, காரணத்தைக் கண்டறிந்தார். குறைந்த அலைநீலமுடைய நீல வண்ணம் அதிகமாக சிதறடிக்கப்படுவதே, வானின் நீல வண்ணத்திற்குக் காரணம் என்பதை நிரூபித்தார். ஒளிச்சிதறல் பற்றிய இந்தக் கோட்பாடு, தற்போது அவரது பெயராலேயே, “இராமன் விளைவு” என அழைக்கப்படுகிறது.
இக்கண்டுபிடிப்பில் இணைந்து கொள்ள கிருஷ்ணன் மறுத்து விட்டார். காரணங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆயினும், தனது சகா கே எஸ் கிருஷ்ணனின் பங்களிப்பைக் குறிப்பிட்டே, இராமன் நோபல் பரிசு ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து, உலகெங்கும் பல்வேறு இடங்களுக்குச் சென்று , அறிவியல் உரைகள் நிகழ்த்தினர். ஒலி தொடர்பான ஆய்வுகளையும் ஆர்வத்தோடு செய்து வந்தார். Quantam Mechanics, Opticals என இவரது ஆய்வுப் பரப்பு விரிந்து கிடந்தது.
1933ஆம் ஆண்டு, இந்திய அறிவியல் கழகத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டர். பிறகு, 1947ல், சுதந்திர இந்தியாவின் முதல் தேசியப் பேராசிரியராகவும் அறிவிக்கப்பட்டார். இராமன் விளைவு கண்டறியப்பட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தான், இந்திய தேசிய அறிவியல் தினமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1948ல் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்தப் பணத்தில், 1949ஆம் ஆண்டு, ’இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை’ பெங்களூரில் உருவாக்கினார். 1954ல் இவருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 1970- நவம்பர் மாதம் 21ஆம் தேதி, மூச்சு நிற்கும் காலம் வரைக்கும் அவரது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.
இசையின் மீது இவருக்கு, அதீத காதல் உண்டு. ஒருநாள், கல்லூரி முடித்து வீடு திரும்பும்போது, வழியிலே இதயம் நிரப்பும் வீணையின் இசையினைக் கேட்கிறார். அதனை வாசிப்பது யாரென்று அறிகிறார். அவளே தனக்கு மனைவியாக வந்தால் நன்றாக இருக்குமென்று அவரது உள்ளம் சொல்கிறது. மதுரையில் பிறந்து, சென்னையில் உள்ள தனது அக்கா வீட்டில் இருக்கும் லோகசுந்தரிக்கு அப்போது வயது 14. லோகசுந்தரியின் அக்கா கணவர் சிவனுக்கு, 19 வயது நிரம்பிய இராமன் ஒரு கடிதம் எழுதுகிறார். பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் நடைபெறுகிறது. இசையின் வழியே மனைவியையும், இயற்பியலின் வழியே நோபலையும் கரம் பிடித்தவர் சர் சி வி இராமன்!
அன்பின் சாட்சியாக இருவரும் நல்லறம் நடத்தினர். தேவையற்ற காரணங்களுக்காக, இராமன் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நாக்பூர், சிம்லா, கல்கத்தா என எல்லா இடங்களிலும் லோகசுந்தரி உடனிருந்து, இராமனின் அறிவியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக இருந்தார். கல்கத்தாவில் இவர்கள் வசித்த போது, லோகசுந்தரி தனது பெயரில் வங்கிக் கணக்கொன்றை தனியாகத் தொடங்கியதற்காக, கோபப்பட்டு கணக்குப் புத்தகத்தை கிழித்தெறிந்த நிகழ்வும், நோபல் பரிசு பெற, நார்வே நாட்டிற்குச் செல்லும்போது மனைவியை வலியுறுத்தி அழைத்துச் சென்ற நிகழ்வும் சுவையானவை.
ஆய்வுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் சொந்தமாக தயாரிக்க வேண்டும், அதற்காக வீண் செலவு செய்யக்கூடாது என்ற எண்ணம் கொண்ட சர் சி வி இராமன், தனது நோபல் பரிசுப் பணத்தை முழுவதுமாக செலவு செய்ய இயலாமல் போனது ஒரு சோக வரலாறு. கோபால ராவ் என்பவரால் மைசூரில் தொடங்கப்பட்ட புதிய வங்கி ஒன்றில், தனது நோபல் பரிசுத் தொகையின் பெரும் பகுதியை டெபாசிட் செய்திருந்தார் சர் சி வி இராமன். ஓய்வுக்குப் பின் அந்தத் தொகையை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் எண்ணியிருந்தார். ஆனால், தேவையற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவித்திருந்த அந்த வங்கி, வெகு சீக்கிரத்தில் திவாலாகிப் போனது. சர் சி வி இராமனின் பணமும் அதில் தொலைந்தது. ஆனால், பணம் போனதைப் பற்றியெல்லம் கவலைப்படாமல், தொடர்ந்து ஆய்வுகளிலேயே மூழ்கிக் கிடந்தார் சர் சி வி இராமன்.
இன்றுவரை, இந்தியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமையோடு, அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்றுள்ள ஒரே விஞ்ஞானி சர் சி வி இராமன் மட்டுமே. வளரும் தலைமுறைக்கு, அவரது வாழ்வு மிசச்சிறந்த ஓர் உதாரணமாகும்.
இனி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வானம் பாருங்கள்; மனதினை வசியம் செய்யும் அந்த நீல வண்ணத்தினைப் பாருங்கள்; சர் சி வி இராமனை நினைவுக்கு வருவார். அப்போது அவர் சொன்ன இந்த வரிகளை மனதிற்குள் ஓடச் செய்யுங்கள். புதியன பிறக்கலாம். ”அறிவியல் என்பது படிப்படியாகக் கேள்விகள் கேட்டு, அறிந்து கொள்வதே ஆகும்”
ஆம், கேள்விகளின் மூலமே மானுட சமூகம் முன்னேறிச் செல்லும்!
No comments:
Post a Comment