தமிழைச் சுமந்த தோள்கள் - மன்னர் பாஸ்கர சேதுபதி.
நவம்பர் 3...இன்று!
”ஒருவன் இவ்வுலகிற்குச் செய்ய வேண்டிய தர்மங்கள் பலவற்றிலும், தனது தாய்ப்பாஷையின் பொருட்டுச் செய்யும் தருமம் அதிகம் சிறந்ததாகும்”
- ராஜா பாஸ்கர சேதுபதி அவர்கள், தமிழறிஞர் ரா.ராகவ அய்யங்காருக்கு எழுதிக் கொடுத்த உரிமைப் பத்திரத்தில்.(நவ-4,1901)
1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சர்வ சமய மாநாடு ஒன்று நடைபெற இருந்தது. இந்திய தேசத்தின் பெருமைகளையும், இந்து மதத்தின் சிறப்பையும் உலக நாடுகளின் கண்களுக்குக் கொண்டு செல்ல அது ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அந்நாளைய மதுரை கலெக்டர் திரு.கரோல் என்பவரின் உதவியோடு, அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி.
அப்போது, சென்னை நண்பர் சுப்ரமணிய அய்யர் மூலமாக சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்து கொள்கிறார். சிகாகோ மாநாட்டிற்கு, தனக்குப் பதிலாக சுவாமி விவேகானந்தரை அனுப்ப முடிவு செய்கிறார். அங்கே, மாநாட்டில் சுவாமிஜி ஆற்றிய உரையும், அதன் பின்னர் ஏற்பட்ட எழுச்சியும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டு விட்டது.
தனக்குக் கிடைத்த வாய்ப்பினை சுவாமி விவேகனந்தருக்கு வழங்கி, அதன் மூலம் அழியாப் புகழ் பெற்ற பாஸ்கர சேதுபதியின் பிறந்த நாள் இன்று. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் மூத்த மகனாக, 1868 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி ராமநாதபுரத்தில் பாஸ்கர சேதுபதி பிறந்தார். 1873ஆம் ஆண்டு, தனது 32வது வயதிலேயே, ராமநாதபுர மன்னர் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி இறந்து போகிறார். அப்போது, பாஸ்கர சேதுபதிக்கு வயது ஐந்து. அவரது தம்பி தினகரருக்கு வயது இரண்டு.
பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை, சமஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பினைக் கவனிக்க நிர்வாகக் குழு ஒன்றினை ஏற்படுத்தியது ஆங்கிலேய அரசு. பாஸ்கரரும், தினகரரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைப் பாதுகாத்து, கல்வி புகட்டும் பொறுப்பு கிரீட்டன் தம்பதியருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு முறையான கல்வி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட யாவும் கற்றுத்தரப்பட்டன. ஆசிரியர்களாகவும், வளர்ப்புப் பெற்றோராகவும் இருந்த கிரீட்டன் தம்பதியினர், இவர்களை இந்திய தேசமெங்கும் பயணம் அழைத்துச் சென்றனர். நாட்டு மக்களோடு உரையாடவும், வாழ்வினைப் புரிந்து கொள்ளவும் இந்தப் பயணங்கள் பேருதவி புரிந்தன.
1888ஆம் ஆண்டு, அந்நாளைய இளங்கலைப் பட்டமான எஃப்.ஏ பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் பாஸ்கர சேதுபதி. தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் சேதுபதி, அன்றாட செலவுகளை அதில் குறித்து வைத்திருக்கிறார். தனது பயணங்கள், கண்ட மனிதர்கள், அறிந்த உண்மைகள், ஏற்பட்ட செலவுகள் என எல்லா செய்திகளும் அந்த நாட்குறிப்பில் இருக்கின்றன.
படிப்புக் காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆங்கிலேய நிவாகக் குழு, 1888ஆம் ஆண்டு பாஸ்கர சேதுபதியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது. திருமணச் செலவிற்காக சமஸ்தான நிதியிலிருந்து, ரூபாய் 50,000 ஒதுக்கியது. 13.05.1888ல் ஒரு லட்சம் ரூபாய் செலவில், பாஸ்கர சேதுபதியின் திருமணம் விமரிசையாக நடத்தப்பட்டது. ஆனால், மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை மணமுடித்த சில நிமிடங்களிலேயே, அந்தப்புரத்தில் சிவபாக்கியம் நாச்சியார் என்பவரோடு இரண்டாம் திருமணமும் நடைபெற்றது. இரண்டாம் திருமணத்திற்கும், செலவுத் தொகை அதிகமானதற்கும் ஆங்கிலேய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரண்டு மணப்பெண்களுமே உறவுக்காரப் பெண்கள்; இரு வீட்டாரிடமும் எதிர்ப்பை விரும்பாத ராணி முத்தாத்தாள் நாச்சியார், பாஸ்கர சேதுபதிக்கு இருவரையுமே திருமணம் செய்து வைத்துவிட்டார்.
தனது இருபத்தொன்றாவது வயதில், 03.04.1889 அன்று, சமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொண்டார் பாஸ்கர சேதுபதி. 1891 ஆம் ஆண்டு, ’மகாராஜா’ என்னும் பட்டம் ஆங்கிலேய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு மேல் வரி வருமானம் கிடைக்கும் ராமநாதபுர சமஸ்தானத்தை நிர்வகித்த பாஸ்கர சேதுபதி, தமிழையும், சைவத்தையும் தமதிரு கண்களெனப் போற்றினார். ஆனால், பிற மதங்களின் மீதும், மொழிகளின் மீதும் ஒருபோதும் வெறுப்பை உமிழ்ந்ததில்லை.
அரண்மனை அருகில் இருக்கும் தேவாலயத்திற்கு, வெண்கலத்தாலான பைபிள் ஸ்டாண்ட், சரவிளக்கு வாங்கிக் கொடுத்தார். அதோடு சேர்ந்து, இவர் வாங்கி அளித்த தேவாலய மணி , அங்கே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஒருமுறை, தனது உதவியாளராக இருந்த காதர் ராவுத்தர் முகம் வாடியதைக் கண்டு, மன்னர் காரணம் கேட்கிறார். நாகூர் கந்தூரி விழாவிற்குச் செல்ல வேண்டும், அதற்கு ரூ.100 செலவாகும் என பதில் சொல்கிறார் காதர். உடனே, மன்னர் பாஸ்கரர், அவரிடத்தில் ரூ.400 வழங்கி, குடும்பத்தோடு நாகூர் தர்கா சென்றுவரச் சொல்கிறார். மதங்களைக் கடந்த மனித நேயமிக்கவர் மன்னர் பாஸ்கர சேதுபதி.
தனது மெய்க்காப்பாளர்களாக இருந்த வீரபத்ரன் சேர்வைக்கு ‘சக்தி விலாசம்’ என்ற பெயரில் வீடு ஒன்று கட்டிக் கொடுத்தார். மற்றொரு பணியாளர் ஆறுமுகம் சேர்வைக்கு வீடு கட்ட ரூ.25000 வழங்கினார்.
1893ஆம் ஆண்டு, பொங்கல் திருநாளன்று, தனது 33 வயதிற்குள் 33 சாதனைகளையாவது செய்து விட வேண்டும் என்று தனது நாட்குறிப்பில் எழுதி, இலட்சியங்களைப் பட்டியலிட்டார். தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் தங்கிப் படிக்க விடுதி அமைத்தல், குறைந்தது 12 தமிழ், சமஸ்கிருத நூல்களைப் பதிப்பித்தல், தமிழ் படிப்பில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்குதல் , விக்டோரியா மகாராணியைச் சந்தித்தல் எனத் தொடரும் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, “தமிழ்ச் சங்கம்” அமைத்தல் என்பதாகும்.
தனது பெரியப்பா மகன் பாண்டிதுரைத் தேவரோடு இணைந்து, 14.09.1901 அன்று மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்க பேருதவி புரிந்தார். தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெறுபவருக்கு தங்கப்பதக்கம் வழங்க ஆவன செய்தார். மதுரை உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். உ.வெ.சா , ராகவ அய்யங்கார் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்தார். அதேபோல், தமிழிசை வளர்ச்சிக்காக மிகுந்த பொருட்செலவு செய்தார். தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான கோயில் திருப்பணிகளையும் மேற்கொண்டார். மொத்தத்தில் தனது காலத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
1896ல் சிவகாம சுந்தரி நாச்சியார் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். முதல் இரு மனைவியர் மூலம் மன்னருக்கு இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். ஒரு பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட, சிவபாக்கியம் நாச்சியாரின் மகன் ராஜராஜேஸ்வரன் , அடுத்த மன்னர் வாரிசாக மாறினார்.
மதுரை ஆலயத்தில் நாடார்களோடு ஏற்பட்ட பிணக்கு நீதிமன்றம் வரை சென்றதும், இராமநாதபுரம் கோவில் அறங்காவலர் பதவியை 1901ல் ராஜினாமா செய்ததும் இவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதுகில் ஏற்பட்ட சிறு கட்டி, அவரது உயிரைக் குடிக்கும் பெரு ஆணியாயிற்று. 27.12.1903ஆம் ஆண்டு, திருவாவடுதுறை மடத்தில், கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அன்று மார்கழி மாதம்; ஆருத்ரா தரிசன நாள். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் மோகன ராகத்தில் கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். அதனை கேட்டுக் கொண்டே, வள்ளலென வாழ்ந்த பாஸ்கர சேதுபதியின் உயிர் அடங்கியது. 33 வயதிற்குள் என்னென்ன இலட்சியங்கள் என வரையறுத்துக் கொண்ட மாதிரியே, திடீரென வலியற்ற மரணத்தைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 34. தமிழறிஞர்கள் இவரது பெருமைகள் கூறும் இலக்கியங்கள் படைத்தனர். தமிழன்னை , அவற்றின் வழியே அழியாப் புகழை இவருக்கு வழங்கினாள்.
1897ஆம் ஆண்டு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரை வரவேற்க, மன்னர் பாஸ்கரன், பாம்பன் கடற்கரையில் காத்திருந்தார். தாயக மண்ணை மிதிக்கும் முன்பாக, தன் முதுகில் பாதம் பதித்து தரையிறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தரையிறங்கிய இடத்தில், நினைவுத் தூண் எழுப்பினார். அதில் ,''சத்யமேவ ஜெயதே' என்ற வாசகத்தை எழுதி வைத்தார். மன்னர் பாஸ்கர சேதுபதி ஒரு ராஜரிஷி போன்றவர் என சுவாமி விவேகானந்தர் தனது மேடைப்பேச்சுகளில் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழின் தனித்துவமான ஆளுமைகளுள் ஒருவரான , சமஸ்தான மகாவித்துவான் ரா.ராகவ அய்யங்காரின் ஆயுள் காலம் முழுமைக்கும் , ஆண்டுக்கு ரூ 635 வழங்கிட, 1901 ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, ஓர் உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்தார். அந்தத் தமிழறிஞரை முத்துப் பல்லக்கில் அமரச் செய்து, மதுரை நகர வீதிகளில் தானே தோள் சுமந்து சென்றார் மன்னர் பாஸ்கர சேதுபதி.
தமிழறிஞர்களை மட்டுமல்ல- வாழ்நாள் முழுக்க தமிழ் மொழியை- தமிழ் இசையைத் தன் இதயத்தில் நிரப்பி, தோள்களில் சுமந்து சென்றவரை, நாம் நினைவில் நிறுத்த வேண்டாமா?
முன்னோர்களை மறப்பதும் , அவர்களது தியாகங்களை மறைப்பதும் - வாழ்கின்ற மண்ணுக்குச் செய்யும் துரோகமல்லவா!
No comments:
Post a Comment