Sunday, November 4, 2018

நவம்பர் 4

இந்தியா ஈன்ற மலர் - ஜானகி அம்மாள்

நவம்பர் 4....இன்று!

       1934ஆம் ஆண்டு வரை, அதிக இனிப்புள்ள கரும்பு வகைகளை  இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இந்தியக் கரும்புகளை விட,   தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விளைந்த கரும்புகளே அதிக இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தன. அப்போது, கோயம்புத்தூரிலுள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில், 37 வயதுள்ள ஒரு பெண்மணி மரபியலாளராகப் பணியில் சேர்கிறார்.  இந்திய வகைக் கரும்புடன், பாப்புவா நியூ கினியா வகையினை இணைத்து மரபு மாற்றம் செய்து, கோ கேன் என்ற புதிய கரும்பு ரகமொன்றை அறிமுகம் செய்கிறார். அது, நடைமுறையில் இருந்த வகையை விட இரண்டு மடங்கு விளைச்சலையும் , மிக அதிக இனிப்புச் சுவையையும் கொண்டிருந்தது. அதன் பிறகு, இந்தியாவின் கரும்பு இறக்குமதி அளவு குறைந்தது. கரும்பு உற்பத்தியில் உலக நாடுகளோடு இந்தியா  போட்டியிடத் தொடங்கியது.
      முழுக்க முழுக்க ஆண்களால் சூழப்பட்டிருந்த , கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் அப்போது இருந்த ஒரே பெண்மணியான இவர், தொடர்ந்து கடும் நெருக்கடிகளைச் சந்ததிக்க வேண்டி இருந்தது. சாதியப் புறக்கணிப்பும், பெண்ணடிமைத்தனமும் இவரது உள்ளத்தை வெகுவாகக் காயமடையச் செய்தன. தனது வழிகாட்டியான சி.டி.டார்லிங்டனுக்கு மன வருத்தத்துடன் கடிதம் எழுதிவிட்டு, லண்டன்  புறப்படுகிறார்.   1940 முதல் 1945 வரை ,    ஜான் இன்ஸ் தோட்டக்கலை நிறுவனத்தில், மரபியலாளராகப் பணியாற்றுகிறார். பிறகு, லண்டனில் உள்ள வைஸ்லி ராயல் தோட்டக்கலைத் துறையில்,   இனக்கலப்பின் மூலம் புதிய மலர் ஒன்றை உருவாக்குகிறார்.  மலரின் பெயர், “ மேக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் ”.  ஆம், அம்மலருக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. லண்டனில் புதிய மலர் வகையை உருவாக்கிய  இந்திய மலர் ஜானகி அம்மாளின்(1897-1984)  பிறந்த தினம் இன்று!
               கேரள மாநிலம், தல்லசேரியில் 1897ஆம் ஆண்டு,  நவம்பர் 4ஆம் தேதி, ஈ.கே.கிருஷ்ணன் - தேவியம்மாள் தம்பதிக்கு பத்தாவது பிள்ளையாக, ஜானகி அம்மாள்  பிறந்தார். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள், 19 பிள்ளைகள். இவர் இரண்டாவது மனைவியின் மகள் ஆவார். சென்னையில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த தந்தையைப் போலவே, ஜானகி அம்மாளுக்கும் தோட்டம் வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் இளம் வயதிலேயே ஆர்வம் வந்திருந்தது. தல்லசேரியில் பள்ளிப் படிப்பை முடித்த ஜானகி அம்மாள், சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், பிரசிடென்ஸி கல்லூரியில் தாவரவியலில் சிறப்பு  பட்டமும் பெற்றார். சில காலம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜானகி அம்மாளுக்கு , அமெரிக்கா மிக்ஸிகன்  பல்கலைக் கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. 
            ஜானகி அம்மாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அவர் ஒரு தெளிவான முடிவெடுத்தார். திருமணத்தைத் தவிர்த்து விட்டு, படிப்பைத் தொடர வேண்டும் என்று உறுதி கொண்டார்.  மதிப்புமிக்க மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில், உதவித்தொகையுடன் கூடிய முதுநிலைப் படிப்பை 1925ல் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அங்கேயே ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்றார்.    தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆசியப் பெண் இவர்தான் என பல்கலைகழகம் அறிவித்திருக்கிறது. “Chromosome Studies In Nicandra Physaloides" என்ற தலைப்பில் , 1932 ஆம் ஆண்டு வெளியான இவரது ஆய்வுக்கட்டுரை , தாவரவியல் உலகில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது. முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில், ’புதிய ரக கத்திரிக்காய்’ (Janaki Brenjal)  ஒன்றையும் கண்டுபிடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.  
     இந்தியா திரும்பிய பின்னர், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் 1932-34 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். சர் சி வி ராமன் தலைமையில் இருந்த , இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும், கோவை கரும்பு இனப்பெருக்க  ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகவும் 1939 வரை இங்கிருந்த ஜானகி அம்மாள், உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், லண்டன் சென்றார். அங்கே தோட்டக்கலைத் துறையில் வேலை. அவர் குடியிருப்புகளிலும் ஜெர்மனி வீசிய குண்டுகள் வந்து விழுந்தன. ஒவ்வொரு நாளும் அறையில்  கண்ணாடிகள் சிதறிக் கிடக்கும். அவற்றைத் துடைத்து சுத்தம் செய்த பின்னரே பணிக்குக் கிளம்ப வேண்டும். அறிவியலின் மீது கொண்ட தணியாத தாகம் காரணமாக,  தனியாளாகத் தங்கியிருந்த ஜானகி அம்மாளுக்கு இவை யாவும் அச்சத்தைத் தரவில்லை. இந்தியாவிலிருந்து அவர் அழைத்துச் சென்ற அணில் ஒன்று எப்போதும் அவரோடு இருந்தது.  புராணங்களில் ராமனுக்கு உதவியது போல, ஜானகி அம்மாளுக்கும் அதுவே துணையாய் இருந்தது.
             1951 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் அழைப்பை ஏற்று, Botanical Survey of India (B.S.I.) அமைப்பை சீர்படுத்த இந்தியா வந்தார். 1952 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 அன்று, BSI Director - General ஆக நியமிக்கப்பட்டார். தேசத்தின் வளர்ச்சிக்காக, தொடர்ந்து பல்வேறு அமைப்புகளில் தனது பங்களிப்பைச் செய்தார். சில காலம், பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும்  பணியாற்றியிருக்கிறார்.  1977 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டு முதல் , தாவர வகைப்பாட்டியலுக்கான விருது, இவரது பெயரிலேயே  வழங்கப்பட்டு வருகிறது. ஜம்முவில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு இவரது பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.
                 அமைதிப் பள்ளத்தாக்கில், குந்திப்புழா ஆற்றின் குறுக்கே, நீர்மின் நிலையம் அமைப்பதற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர் ஜானகி அம்மாள். பெறப் போகும் பயனை விட, சுற்றுச்சூழலை அழிப்பதால் வரும் பாதிப்பு அதிகம் என வாதிட்டார். இங்கே, அவரது குரல் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. மேற்குலக நாடுகள் இவரது கருத்தினைப் புரிந்து கொண்டன. பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் சார்ந்த சர்வதேச கருத்தரங்கில் அழைக்கப்பட்ட ஒரே பெண் இவர்மட்டும் தான்.                       
               தனது ஆசிரியர் டார்லிங்டனுடன் சேர்ந்து இவர் எழுதி வெளியிட்ட, “ Chromosome Atlas of Cultivated Plants"  என்ற புத்தகம், தாவரவியல் உலகில் மிகவும் புகழ் பெற்றது. அதைப்போலவே, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர் என்பதும், அது நிறைவேறாத காதலாய் கருகிப் போனது என்பதும் அப்போது பரபரப்பை உண்டாக்கியிருந்தது. வாழ்நாள் முழுக்க, தாவரங்களை  மட்டுமே காதலித்து வாழ்ந்த ஜானகி அம்மாள், கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. சத்தமின்றி உதிரும் ஒரு மலர் போல,   7- பிப்ரவரி, 1984 அன்று, தனது உடலிலிருந்து உயிரை உதிர்த்துக் கொண்டார்.
                          ஜானகி அம்மாளின் சாதனைகளை மக்களிடத்தில், குறிப்பாக இந்தியப் பெண்களிடத்தில் அழுத்தமாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். பெண்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதே  பாவம் என்றிருந்த காலத்தில், தடைகளை எல்லாம் தாண்டி, சாதனைகள் படைத்த இவர் வாழ்வு, அனைவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகும்.  காந்திய வழிகளில் விருப்பம் கொண்டிருந்த ஜானகி அம்மாள், தனக்கென உடைமைகள் எதையும் பெரிதாகச் சேர்த்து வைத்திருக்கவில்லை. மரணிக்கும்வரை, கேரள பாரம்பரிய உடைகளை மட்டுமே உடுத்திய ஜானகி அம்மாளிடம் இருந்தது, மஞ்சள் வண்ணத்திலான  சில புடவைகள்  மட்டுமே. எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்தவர்களை மறந்து விடும் தேசத்தில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?
                    லண்டன் வைஸ்லி பூங்காவின் நுழைவு வாயிலில்  நம்மை வரவேற்கும் 'வெள்ளை வண்ண  ஜானகி மலர்', தற்போது சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகிறது. அறிந்தோ, அறியாமலோ இந்தியா மறந்து கொண்டிருக்கும் அபூர்வ மலர் ஜானகி அம்மாள்.!
             வரலாற்று ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் தேசத்தில்தான், புதிய புதிய வரலாற்றுச் சாதனைகள் பூத்துச் சிரிக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

No comments:

Post a Comment