Sunday, September 16, 2018

செப்டம்பர் 16







காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.சுப்புலெட்சுமி

செப்டம்பர் 16....இன்று!

”இசை என்பது ஒரு கடல். அதில் நான் ஒரு மாணவி”
                                                                                             - எம்.எஸ்.சுப்புலெட்சுமி.

”இசையரசிக்கு முன்னால், நான் ஒரு சாதாரண பிரதமர் தானே” (Who am I, a mere Prime Minister before a Queen, a Queen of Music)
                   -எம்.எஸ்.சுப்புலெட்சுமி பற்றி நேரு சொன்ன வார்த்தைகள். 

          தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி,சமஸ்கிருதம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடி, இசையால் இன்பத்தை நிறைத்தவர்;  சமூக சேவைக்காக ராமன் மகசேசே விருது(1974) பெற்ற முதல்  இசைக்கலைஞர்; இசைத்துறையிலிருந்து பாரத ரத்னா விருது(1998) பெற்ற முதல் ஆளுமை; வானளாவிய புகழ் பெற்ற போதும், அடக்கத்தைத் தவறவிடாத வாழ்வு முறை கொண்டவர்; பரணியில் பிறந்த இவர், தரணியை ஆண்ட இசையரசி; கர்நாடக இசையை உலகெங்கும் கொண்டு சென்ற இசைத்தோணி - எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1916-2004) பிறந்த நாள் இன்று! 
            1916, செப்டம்பர் 16ஆம் தேதி, கூடல் நகராம்  மதுரையில்  சுப்புலெட்சுமி பிறந்தார். ’குஞ்சம்மாள்’ என்பது இவரது செல்லப் பெயர். இவரது தாய் சண்முக வடிவு அம்மாள்  சிறந்த வீணை இசைக்கலைஞர். சுப்புலெட்சுமி  தேவதாசி குல மரபில் பிறந்தவர். தனது தந்தை சுப்ரமணிய அய்யர் என பின்னாளில் ஒரு பேட்டியில் , எம்.எஸ் தெரிவித்திருந்தார். ஆனால், சண்முகவடிவு அம்மாள் இது தொடர்பாக கருத்தேதும் தெரிவிக்கவில்லை.  எம்.எஸ். சுப்புலெட்சுமி என்ற பெயரில் உள்ள எம்.எஸ் என்பது மதுரை சண்முகவடிவு என்பதைக் குறிப்பதாகும். சுப்புலெட்சுமியின் சகோதரர் சக்திவேல் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதில் வல்லுநர். தங்கை வடிவாம்பாள் தாயைப் போலவே வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கினார்.  
          தாயின் வழியே - இசை ஆர்வம், இவருக்கும் இயல்பாகவே தொற்றிக் கொண்டது.    செம்மங்குடி சீனிவாச அய்யர், மாயவரம் கிருஷ்ண அய்யர், மதுரை சீனிவாசன் போன்ற ஆளுமைகளிடம் வாய்ப்பாட்டு பாடுவதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும்  இவருக்குக் கிடைத்தது. ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களை பண்டிட் நாராயணராவிடம் கற்றுக் கொண்டார். மதுரை சேதுபதி பள்ளியில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்த போது, நிகழ்ச்சியின் இடையில் தாயின் அழைப்பை ஏற்று,  'ஆனந்த ஜா'  என்ற மராத்தியப் பாடலை ஹிந்துஸ்தானி மெட்டில் பாடி , பார்வையாளர்களை அசத்தினார்  எம்.எஸ்.  இதுதான் அவரது முதல் மேடைப்பாட்டு.   
   'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்ற பாடலை எம்.எஸ் பாட, சண்முக வடிவு அதற்கு வீணை மீட்டினார். 1926ல் வெளிவந்த அந்த இசைத்தட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 10 வயது குழந்தையின் இசையில் ரசிகர்கள் மெய்மறந்தனர். 
    பிறகு, தாய் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் இவரும்  கூடவே உடன் சென்றார். தனது 17வது வயதில், சென்னை மியூசிக் அகாடமியில் முதல்  முறையாக  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இவரது இசைக்கு,  தமிழகமெங்கும் பரவலான கவனம் கிடைத்தது. 
           1936ஆம் ஆண்டு, யாருக்கும் தெரியாமல்,  தனது நகை,உடைமைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு, மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலேறினார் எம்.எஸ். அவர் சென்னை வந்ததன் காரணம்,  சுதந்திரப் போராட்ட வீரர் சதாசிவம் கரங்களைப் பிடித்து, தனது வாழ்வை ஒப்படைக்கத்தான். தேவதாசி மரபுப்படி, ரகசிய மனைவியாகவோ அல்லது வயது முதிர்ந்த செல்வந்தருக்கோ தனது வாழ்வைப் பறிகொடுக்க சுப்புலெட்சுமி விரும்பவில்லை.     சதாசிவம் மதுரை வந்திருந்தபோது, தனது மனதைப் பறிகொடுத்திருந்த எம்.எஸ். , தாயின் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிக்க, தனது காதலனைத் தேடி, தன்னந்தனியாக திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தார். சதாசிவத்தின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்த நேரம் அது.  இவர்கள் இருவரும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சேர்ந்து வாழத் தொடங்கினர்.   தனது மகளை மீட்க காவல் துறையின் உதவியை நாடினார் சண்முக வடிவு அம்மாள். ஆனால், தாயுடன் செல்ல எம்.எஸ். மறுத்து விட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் சண்முக வடிவு அம்மாள்  மரணப் படுக்கையில் இருந்த போது கூட, அவரைக் காண எம்.எஸ். செல்லவில்லை. 
            1940ஆம் ஆண்டு, சதாசிவத்தின் மனைவி மன உளைச்சலில் இறந்து போக, எம்.எஸ் சுப்புலெட்சுமியை இரண்டாம் தாரமாக மணம் செய்துகொள்கிறார் சதாசிவம். அதுதான் எம்.எஸ்.வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான திருப்புமுனை.  எம்.எஸ். என்ற ஆளுமையின் பிம்பத்தை திட்டமிட்டுக் கட்டமைத்தார் சதாசிவம். அவரது சாதி, குல பிம்பங்கள் உடைக்கப்பட்டன. சுப்புலெட்சுமியை, தன் வீட்டில் பிறந்த மகாலெட்சுமி என ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கினர். கச்சேரிகள், பாடல் பதிவுகள், திரைத்துறை நிகழ்வுகள், அறக்கட்டளைக்காக இசை நிகழ்ச்சிகள் என எல்லாப் பொறுப்புகளையும் சதாசிவமே முன்னின்று செய்தார். தனக்கென குழந்தைகள் இல்லாத போதும்,   சதாசிவத்தின் இரண்டு பிள்ளைகளையும் தன் பிள்ளை போலவே எண்ணி அன்பு செலுத்தினார் எம்.எஸ்.
       சேவாசதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ( இந்தியில் பக்த மீரா) என நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இந்தியாவெங்கும் எம். எஸ் என்ற இசையரசியின்  புகழ், வானைத் தாண்டியும் உயரப் பறந்தது. 1941ஆம் ஆண்டு,  கிருஷ்ணமூர்த்தியும், சதாசிவமும் இணைந்து தொடங்கவிருந்த கல்கி பத்திரிக்கைக்கு 40,000 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. கணவருக்காக, ’சாவித்திரி’ என்ற படத்தில் நாரதராக ஆண் வேடமிட்டு நடித்தார். அதில் கிடைத்த சம்பளத் தொகையைக் கொண்டுதான் ’கல்கி’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
    சென்னை  தமிழிசைச் சங்கத்தில் பாரதியார், பாபநாசம் சிவன், வள்ளலார் போன்றோரது பாடல்களைப் பாடினார். தெலுங்கு கீர்த்தனைகளைப் போலவே தமிழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.   1944ஆம்  ஆண்டு, இந்தியா முழுக்க  நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் கிடைத்த தொகை முழுவதையும், “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” வழங்கினார். பாராட்டு மழையில் நனையும் போதெல்லாம், ’எனது பொது சேவை எண்ணங்களுக்கு ஊற்றுக்கண் - எனது கணவர் தான்’ என அமைதியாக பதிலளிப்பதுதான் இவரது வழக்கம். பெரும்பாலான நேரங்களில், சதாசிவமே பத்திரிக்கைக் கேள்விகளுக்கு பதில் சொல்வார். காரணம் கேட்ட போது,      “ரோஜா அழகாக மலரும்; அது எப்படி என்று கேட்டால் அதற்கு சொல்லத் தெரியாதே! அதனால் தான் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
      23.10.1966 ஆம் ஆண்டு, ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ராஜாஜி எழுதிய “ May the Lord Forgive" என்ற உலக அமைதிப் பாடலைப் பாடினார். 1975 ஆம் ஆண்டு முதல், இவர் பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதம், திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காந்திக்கு மிகவும் பிடித்த  ’ரகுபதி ராகவ ராஜாராம்.’ , ’வைஷ்ணவ ஜனதோ ’ பாடல்களிலும்,  ராஜாஜி எழுதிய, ’குறையொன்றும் இல்லை ’ பாடலிலும் வருகின்ற  குழைவும், உருக்கமும் ,தன்னையே இசைக்கு ஒப்புக்கொடுத்த அர்ப்பணிப்பும் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு மட்டுமே உரியது. .
          ’சகுந்தலை’ படத்தின் கதாநாயகன் ஜி.என்.பாலசுப்ரமணியன் மிகச் சிறந்த பாடகர். வசீகரத் தோற்றம் கொண்டவர். அப்படத்தில்  கதாநாயகியாக நடித்த போது,  எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் உள்ளம் தடுமாறத் தொடங்கியது. ஜி.என்.பி அவர்களுக்கு எம்.எஸ் எழுதிய காதல் கடிதங்கள் தற்போது கிடைக்கின்றன,  டி.ஜே.ஜார்ஜ் எழுதிய M.S. -A Life in Music புத்தகத்தில் அக்கடிதங்கள் பின்னிணைப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. ஜி.என்.பி மீது அவர் கொண்டிருந்த காதல் நிஜமானது. “பேசவோ, அழவோ எனக்கென்று யாருமில்லை. நடிப்பின் நடுவில் உங்கள் விரல் என்னைத் தீண்டும் போது, நான் இறைவனை உணர்கிறேன். என் அன்பை புரிந்து கொள்ளுங்கள்” என ஒவ்வொரு கடிதமும், ஜி.என்.பி.அவர்களின் பாதங்களில்  விழுந்து மன்றாடின. ஆனால், ஜி.என்.பி அதனைப் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ். அவர்களை வெறும் காமப் பொருளாகவே அவர் கண்கள் கண்டன.
              ஜி.என்.பி மற்றும் எம்.எஸ்.காதல் விவகாரம் சதாசிவத்துக்குத் தெரிந்திருக்கலாம்.    படம் வெளியாகும் போது, ஜி.என்.பி. யின் படங்கள் விளம்பரத்தில் காட்டப்படவில்லை. இசைப்பேழையில் கூட அவரது பெயர் தவிர்க்கப்பட்டது.  எம்.எஸ். கண்களின் பார்வையில் இருந்து, ஜி.என்.பி. ஓரம் கட்டப்பட்டார். ’மீரா’ படத்திற்குப்பின் திரைப்படங்களில்  நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார் எம்.எஸ்.. பொதுச் சேவையிலும் , பக்திப் பாடல்கள் பாடுவதிலுமே  காலத்தைக் கழித்தார். எல்லாவற்றையும் மறந்து, தனது கணவர் சதாசிவத்தின் நிழலிலேயே கடைசி வரை வாழ விரும்பினார். அதன் படியே, வாழ்ந்தும் காட்டினார்.  1997 ஆம் ஆண்டு, தனது வழிகட்டியும், கணவருமான சதாசிவம் மறைந்த பிறகு, எந்த பொது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.  அப்துல் கலாம் குறிப்பிட்டது போல, இசையில் பிறந்து, இசைக்காக வாழ்ந்து, இசையோடு கலந்த எம்.எஸ்.  12.12.2004 அன்று இறந்து போனார்.
      அபாரமான திறமை; எண்ணிலங்கா விருதுகள்; கோடிக்கணக்கான ரசிகர்கள்; இசையின் கடவுள் என்ற தோற்றம்; உலகம் முழுதும் பயணம் என அவரது புற வாழ்வு சந்தோஷங்களால்  மட்டுமே நிரம்பி இருந்தது.
       தேவதாசி குலத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல், கணவரோடு இணைந்து பிராமணப் பெண்ணாகவே மாறுதல், இடையில் தோன்றிய  காதல் உணர்வுகள், குழப்பங்கள், பாதுகாப்பின்மை, மரணப் படுக்கையில் இருந்த தாயைக் காண முடியாத சூழல்  என அவரது அக வாழ்வு சந்தித்த, போராட்டங்களுக்கு மத்தியில் தான் இத்தனையையும் சாதித்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். உண்மையில் அவர் அரசி தான்;  காற்று உள்ளவரை , அவரது கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
        கலை தான்,  கஷ்டங்களை மறப்பதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஆம்,    கலைஞனாகவோ, கலை  ரசிகனாகவோ இருப்பதால் அகம் எப்போதும் எழுச்சி கொள்கிறது.

No comments:

Post a Comment