Tuesday, October 2, 2018

அக்டோபர் 2

நேர்மையின் இணைச்சொல் - லால் பகதூர் சாஸ்திரி

அக்டோபர் 2...இன்று!

   1977 ஆம் ஆண்டு, ராஜ் நாராயண் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. காரணம்,  18 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி, 1966 ஆம் ஆண்டு, ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை , ஒருங்கிணைந்த ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில், மர்மமான முறையில் இறந்து போனார். ரஷ்யாவில் இவரது உடலைப் பரிசோதித்த டாக்டர் ஆர்.என்.சூக்,  பாராளுமன்ற விசாரணைக் கமிஷனில் ஆஜராக டெல்லி   வரும் வழியில் ட்ரக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணைக் கமிஷன் அதிர்ச்சி அடைந்தது. ரஷ்யப் பயணத்தின் போது உடனிருந்த,  சாஸ்திரியின் தனி உதவியாளர் ராம்நாத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் வரும் வழியில், வாகனம் மோதி இரு கால்களை இழந்தார். சுய நினைவும் பறிபோனது. விசாரணைக் கமிஷன் பேரதிர்ச்சி அடைந்தது. வழக்கம் போலவே, கிணற்றில் இட்ட கல்லாய் போனது   கமிஷனின் அறிக்கை.
       தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, சாஸ்திரியின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளின் நல்லுறவினைக் காரணம் காட்டி பதிலளிக்க மறுத்துவருகிறது இந்திய வெளியுறவுத் துறை. ரஷ்யாவில், இந்தியப் பிரதமர் தங்கியிருந்த இல்லத்தின் சமையலர் முதலில்  கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும்,   இரு நாட்டிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதும், உடல் நீலநிறமாக இருந்தது எனச் சொன்ன சாஸ்திரி மனைவியின் குற்றச்சாட்டும் சந்தேகத்தை வலுவாக்கின. 
      ரஷ்ய அதிபர் கேசிகின் , பாக். பிரதமர் அயூப்கான் இருவரும் கண்ணீர் தோய்ந்த விழிகளுடன் , சாஸ்திரியின் உடலைச்  சுமந்து வந்து, விமானத்தில் ஏற்றினர். இந்திய தேசமே அவருக்காகக் கலங்கி நின்றது. தூய காந்தியவாதியாக இறுதிவரை வாழ்ந்த சாஸ்திரியின் உடல் ,  காந்தி சமாதி அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.  தனது அரசியல் வழிகாட்டியின் அருகிலேயே, சாஸ்திரி மீளாத் துயிலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
       இன்றைய அரசியல் தலைவர்களை  அவரோடு ஒப்பிட்டுப் பார்த்து, வேதனைப் படும் மனதினைத் தேற்ற வழியேதும் தெரியவில்லை. ஆம், தன்னலமற்ற உழைப்பு, நேர்மை இரண்டையும் இறுதிவரை கைவிடாத லால் பகதூர் சாஸ்திரியின் (1904-1966) பிறந்த நாள் இன்று!
                 1904 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, வாரணாசி அருகில் உள்ள முகல்சராய் என்னும் கிராமத்தில் லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா பிறந்தார். சாரதா பிரசாத் வர்மா-ராம் துலாரி தேவி தம்பதியினரின் மூத்த மகன் இவர். தந்தை ஒன்றரை வயதிலேயே இறந்துவிட, மாமா வீட்டிலும், தாத்தா வீட்டிலும் வளர்ந்தார். வறுமை இவரை விடாது விரட்டியது. காலுக்குச் செருப்பு வாங்கக் கூட முடியாமல் துன்பப்பட்டார்.  கங்கை ஆற்றின் கரையைக் கடந்து பள்ளி செல்ல வசதி இல்லாததால் , மிஷ்ராஜி என்பவரிடம் கல்வி கற்றார்.  
             1920ஆம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 16 வயது கூட நிரம்பாததால் ஆங்கிலேய அரசு இவரை விடுதலை செய்தது. 1930 சட்ட மறுப்பு இயக்கம், 1942 தனி நபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என சுதந்திரப் போராட்டத்தின் எல்லா கட்டத்திலும் கலந்து கொண்டு, தனது தேசப்பற்றினை உறுதியுடன் வெளிப்படுத்தினார். மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் கிடந்தார். சிறையில் இருந்த போது, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கியூரி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்தார்.                 
                காலையில் கல்லூரி- மாலையில் கதர் விற்பனை என தானே விரும்பி வடிவமைத்த வாழ்க்கையை ரசித்து மகிழ்ந்தார். வாரணாசியில் சிவ பிரசாத் குப்தா நடத்திய காசி வித்யா பீடத்தில் 5 ஆண்டுகள் படித்து, சாஸ்திரி பட்டம் பெற்றார். தனது சாதிய அடையாளத்தைக் குறிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற பின்னொட்டைத் தவிர்த்து, சாஸ்திரி என்ற பட்டத்தை இணைத்துக் கொண்டார். வரலாற்றில் சாஸ்திரி என்ற பெயரே நிலைத்து விட்டது. 
           1927 ஆம் ஆண்டு, லலிதா தேவி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வரதட்சணைக்குப் பதிலாக , கதர் துணியும், கை ராட்டை சக்கரமும் தந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் தான் இவரது திருமணம் நடைபெற்றது. இவருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள்.
             1951 முதல் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்த சாஸ்திரி, பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார். ரயில்வே அமைச்சர், உள்துறை அமைச்சர் என நேரு அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் இவர் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார்.
        தடியடி நடத்துவதற்குப் பதிலாக நீர் பீய்ச்சி அடித்து, கூட்டத்தைக் கலைக்கும் முறையை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தார். அதுபோல, பெண் நடத்துநர்களை முதன் முதலில் பணியில் சேர்த்ததும் இவர் தான். 1965 ஆம் ஆண்டு,  தேசிய பால்பண்ணை வளர்ச்சித் துறை ஒன்றை ஏற்படுத்தி, வெண்மைப் புரட்சிக்கு அடித்தளமிட்டார்.
        சற்றே குள்ளமான உருவம்; ஆனால் உறுதியான மனம். நெருக்கடி மிகுந்த நேரத்தில்,  'ஜெய் ஜவான் ஜெய் கிசான் ' என்ற முழக்கத்துடன் பாகிஸ்தானை இவர் எதிர் கொண்ட விதம் , இவரது நிர்வாகத் திறனுக்கு சான்றாக அமைந்தது. சீனாவுக்கும் துணிந்து எச்சரிக்கை செய்தார்.
       ஐம்பது ரூபாய் சம்பளம் தனக்கு அதிகம் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி, நாற்பது ரூபாயாக சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதும், பிரதமர் பதவியில் இருந்த போதிலும், மகனின் பள்ளிக்குள் சாதாரண மனிதனாகச் சென்று, பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொண்டதும் இவரது நேர்மைக்கும், எளிமைக்கும் சிறந்த உதாரணங்கள். இந்தி மொழி திணிப்பில் இவர்மீது, கடுமையான விமர்சனங்கள் இருந்ததையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 சாஸ்திரியைப் போலவே , அவரது மனைவியும் நாட்டுப்பற்றும் நேர்மையும் மிக்கவராக இருந்தார்.  1966ல்,  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தான இரவிலேயே, மாரடைப்பால் இந்தியப் பிரதமர் மறைந்த செய்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு சற்று முன்னர், சாஸ்திரி தனது   மனைவியிடம் பேச முற்பட்டார். டீத்வால், ஹாஜிபீர் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் ஷரத்தை எதிர்க்கும் விதமாக கணவரிடம் பேச மறுத்தார் லலிதா தேவி.
         லால் பகதூர் சாஸ்திரி கடைசிவரை வாடகை வீட்டிலேயே குடும்பம் நடத்தினார். பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி, ரூபாய் 12000 மதிப்பில்  கார் ஒன்று வாங்கினார். சாஸ்திரி திடீரென மறைந்த போது, மீதமிருந்த கடன் தொகையை, அடுத்த பிரதமர் இந்திரா காந்தி ரத்து செய்து ஆணையிட்டார். ஆனால், அதனை மறுத்து, ஓய்வூதியத் தொகையைக் கொண்டு, கடனை அடைத்து முடித்தார் லலிதா தேவி. இந்திய தேசம் இவர்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறது.
    சாஸ்திரி போல, இப்போதும் இலட்சிய வாழ்வினை வாழ்ந்து காட்டும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? அடுத்த தலைமுறைக்குச் சுட்டிக் காட்டிட ஆள் கிடைக்குமா? அபூர்வமாய் சிலர் இருக்கிறார்கள் தான்.  ஆனால், அவர்களை    எண்ணிட ஒரு ஆளின் கை விரல்கள் போதுமல்லவா??
     
       
        

No comments:

Post a Comment