Thursday, November 8, 2018

நவம்பர் 8

தமிழ் பருகிய வீரன் - வீரமாமுனிவர்.

நவம்பர் 8 இன்று...!

                 திருக்குறளை முதன்முதலில் இலத்தீன் மொழியில்  மொழிபெயர்த்துக் கொடுத்த இந்த திருக்குமாரனின் தாய்மொழி தமிழ் கிடையாது.  தமிழன்னைக்கு சதுரகராதி தயாரித்துக் கொடுத்த இம்மைந்தனின் மேனி உதித்ததும் தமிழ் மண் கிடையாது. ஆனாலும், இவரது உடலில் பெருக்கெடுத்து ஓடியது தமிழ்க்குருதி.  நாடி நரம்புகளில் ஊடாடிக் கிடந்தது தமிழ்ச்சதை. தாகமுற்றுக் கிடந்த இவரது தேகம், வாழ்நாள் முழுக்க தமிழையே பருகிக்கிடந்தது. ஆம்,   தாய்மொழியைக் கூட தாழிட்டுக் கொண்டு, தன் நாவினை தமிழ் எனும் தேனிட்டு நிரப்பியவர் இவர். பதிலுக்கு இவர் நா, தமிழை பா கொண்டு நிரப்பியது.  
         இத்தாலி நாட்டில் பிறந்து,  தமிழர்களின் இதயங்களில்  இடம்பிடித்த தமிழ் மாமுனி- வீரமாமுனிவரின்(1680-1747)  பிறந்த நாள் இன்று. 1680ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் நாள், இத்தாலி நாட்டில் பிறந்த வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. தனது வாழ்க்கை என்பது இயேசுவின் வழியிலானது என்பதை உணர்ந்து, 1698ல் ’இயேசு சபையில்’(Jesuit) துறவியாகச் சேர்ந்தார். இறையியல் என்னும் கரையற்ற நதியில் தன்னை கரைத்துக் கொண்டார். கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான பாரதத்தில்,  மதுரை இயேசு சபைக்குச் சென்று ஊழியம் செய்ய, தனது தலைமை குருமாராக இருந்த Fr.மைக்கலாஞ்சலோவிடம்  அனுமதி கோருகிறார் பெஸ்கி. 
                  லிஸ்பன் நகரிலிருந்து அவரது கப்பல் பயணம் தொடங்கியது. 1710ஆம் ஆண்டு, அக்டோபர் மாத நாளொன்றில் கோவா கடற்கரையை வந்தடைந்தார் ஜோசப் பெஸ்கி. உடனடியாக, மதுரையை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார். கொச்சி, அம்பலக்காடு வழியாக, முத்தமிழ் வளர்த்த மதுரை நகருக்கு அருகில் இருந்த, காமநாயக்கன்பட்டிக்கு, 1711ல்  வந்து சேர்ந்தார். 
                    17ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், இந்தியாவில் சமயப் பணியாற்றிய இராபர்ட் நொபிலி அடிகளாரின் வாழ்வு முறையை, ஏற்கெனவே இவர் அறிந்து வைத்திருந்தார்.  மக்களோடு மக்களாக கலந்த பின்னரே, அவர்களுக்கு சமயக் கருத்துக்களைப் பரப்ப முடியும். அதற்கு, அவர்களது மொழியை கற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி என்பதை அறிந்திருந்தார்.  சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம் இவர் தமிழ் கற்றதாக அறியப்படுகிறது. 
              அதன் படி, தமிழ் என்னும் அமுதத்தை , சொட்டுச் சொட்டாக தன் நாவின் வழியே மூளைக்குள் செலுத்தினார்.  தமிழ் அவரது இதயத்தை  நிறைத்தது. ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை  தைரியநாதன் என தமிழ்ப்படுத்தினார். மீண்டும்,  தைரியநாதன் என்ற பெயரினை வீரமாமுனிவர் என தூய தமிழாக்கினார். இலத்தின், அரபு, எபிரேயம், ஆங்கிலம், மலையாளம், கிரேக்கம் உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்த வீரமாமுனிவர், தமிழை அறிந்தவுடன் அதனையே தனதாக்கிக்கொண்டார். 
        தமிழ்த்தாயின் அணிகலன்களென மின்னிக் கொண்டிருந்த  தேவாரம், திருப்புகழ், ஆத்திச்சூடி, நன்னூல், திருக்குறள் போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தார். இவற்றை ஐயமின்றி படிப்பதற்கு, 1000 சொற்கள் கொண்ட தமிழ்-இலத்தீன் அகராதி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டார். 
                       சொற்பொருளுக்காக நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில், தமிழுக்காக புதிய சதுரகராதியை படைத்தளித்தார். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுப்புக்களைக் கொண்ட சதுரகராதி, தமிழன்னைக்கு புதிய அணிகலனாய் மாறி, அழகினை மெருகூட்டியது. மேலும், அம்மானை, கலம்பகம், தொன்னூல் விளக்கம், வேதியர் ஒழுக்கம், உரைநடை நூல்கள் என இலக்கண, இலக்கிய நூல்களால் அன்னையின் முகத்தினை மலர வைத்தார். 3615 விருத்தப்பாக்களால் எழுதப்பட்ட, இவரது ’தேம்பாவணி’ என்னும் காவியம், தமிழுக்குக் கிடைத்த பெருஞ்செல்வங்களுள் ஒன்றாகும். சிரிக்க வைத்து, நம்மைச் சிந்திக்க வைக்கும் ’பரமார்த்த குரு கதைகள்’ என்னும் நகைச்சுவை இலக்கியத்தையும் எழுதிய இவர், தமிழ்த்தாயின் மைந்தர்களுள் ஒருவராகவே மாறிப் போனார். 
                   இங்குள்ள துறவிகளைப்  போலவே காவி உடை   தரித்து, கடுக்கண் அணிந்து, சைவ உணவையே உண்டார் என்றும் தகவல்கள் உண்டு. வண்டுகள் அமர்ந்து தேன் உண்ணாத ஒரே மலர், செண்பக மலர் என்பதையும், அது குற்றால மலைப் பகுதிகளில் கிடைக்கிறது என்பதையும் குறிப்புகளில் எழுதி வைத்திருக்கிறார்.
               திருக்காவலூரில் தமிழ்ப் பாடசாலை ஒன்றை நிறுவி, தானே தமிழாசிரியராக இருந்து, செந்தமிழைக் கற்பித்தார்.  ஆ, ஏ போன்ற எழுத்து வடிவங்களை அவரே நடைமுறைக்கு கொண்டு வந்தார். ஒற்றை, இரட்டைக் கொம்புகளிலும் சீர்திருத்தம் மேற்கொண்டார். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு எழுதும் முறையையும், வாக்கிய முடிவில் முற்றுப் புள்ளி வைக்கும் வழக்கத்தையும் இவரே  நடைமுறைபடுத்தினார்.  இப்படியாக, இவர் ஆற்றிய தமிழ்த்தொண்டு, முற்றுப்புள்ளி காணாமல் நீண்டுகொண்டே இருந்தது.  1747ஆம் ஆண்டு, பிப்ரவர் 4ஆம் தேதி, கேரள மாநிலம் அம்பலக்காட்டில் மரணிக்கும் நாள் வரை, தமிழையே சுவாசித்துக் கொண்டிருந்தார் வீரமாமுனிவர்.
                     தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத இவர், தமிழுக்கு படைத்தளித்த நூல்கள் மொத்தம் 35. அவை யாவும், தரணி உள்ளளவும், இங்கே உலவிக் கொண்டே இருக்கும். தரணி உள்ளவரை தமிழும்  இருக்கும்.   தமிழ் இருக்கும் வரை வீரமாமுனிவரும் இருப்பார்!
       தமிழின் மேன்மை அறிவோம்!

       தமிழால் மேன்மை அடைவோம்!!

                 
              
                           
                               

No comments:

Post a Comment