Monday, October 1, 2018

அக்டோபர் 1

கண் காக்கும் கடவுள் - டாக்டர் வெங்கடசாமி.

அக்டோபர் 1...இன்று!



”இறைவா, நீ ஒளி கொடுத்தாய்
ஆயிரமாயிரம் மக்களுக்கு
ஒரு பெருமகனாரின் அரிய அறிவால்.

உழைப்பால் விழி கொடுத்து
விழி வேள்வி கண்டார் டாக்டர் வெங்கடசாமி

அவருக்கு நம் காணிக்கை,
அவர் ஏற்றிய தீபம் , அறிவு தீபமாக
என்றென்றும் உழைப்பதே!”
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.

            1990 ஆம் ஆண்டு, ஹைதராபாத் நகரத்திலிருந்து,  கிராமத்து மனிதர் போன்ற தோற்றம் கொண்ட அதிகாரி ஒருவர்  கண் பரிசோதனைக்காக மதுரை வருகிறார். முறையான பெயர் பதிவுக்குப் பிறகு, டாக்டர் நாச்சியார் அவரை பரிசோதனை செய்கிறார். பிறகு சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுகிறார் அந்த அதிகாரி. பாதுகாவலர்கள் யாருமின்றி, எளிமையான முறையில் வந்த அவரை யாரும் அறிந்திருக்கவில்லை. அவரும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. 
        சிகிச்சைக்கான கட்டணத்தை அந்த அதிகாரி காசோலையாகத் தருகிறார்.  அப்போது, அந்த மருத்துவமனை விதிகளின் படி,  காசோலை பெற மறுத்து, மீண்டும் டாக்டர் நாச்சியாரிடம் அந்த அதிகாரியை அனுப்பி வைக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். கையில் ரொக்கமாக பணம் இல்லை, காசோலைதான் உள்ளது என அந்த அதிகாரி சொல்ல, இலவச சிகிச்சைப் பிரிவில் இவரது பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு, தனது சேவையைத் தொடர்கிறார் அந்த மருத்துவர்.   
           பணம் செலுத்தினாலும், இலவச சிகிச்சை என்றாலும்  நோயாளிகளை சமமாக நடத்தும் உயர்ந்த மாண்பினை வியந்தபடியே, இலவசப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார் அந்த அதிகாரி.  ஹைதராபாத் D.R.D.L (Defence Research and Development Laboratory) இயக்குநர் மதுரை வந்திருக்கும் செய்தி அறிந்த, உள்ளூர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரவிந்தர் கண்  மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இலவசப் பிரிவில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநரைச் சந்திக்கின்றனர்.   ஆம், அப்போதுதான்  வந்திருப்பது    தேசத்தின் மூத்த விஞ்ஞானி அப்துல் கலாம்   என்பது மருத்துவமனை ஊழியர்களுக்குத் தெரிய வருகிறது. 
        விபரம் அறிந்த  டாக்டர் நாச்சியார், நேரடியாக வந்து, நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தார். “நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையே! மாறாக, சாதாரண மக்களுக்கு நீங்கள் அளிக்கும் தரமான சிகிச்சையை நேரில் காணும் வாய்ப்பாக இது அமைந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என டாக்டர் அப்துல்கலாம் பதிலுரைத்தார்.
             1976ஆம் ஆண்டு, 11 படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டது அரவிந்தர் கண் மருத்துவமனை. இன்று, 4000 படுக்கை வசதிகள். ஆண்டுக்கு 40 லட்சம் கண் நோயாளிகளுக்கு சிகிச்சை, அதில் சராசரியாக 6 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை என விழி காக்கும் வேள்வியினைத் தொடர்ந்து செய்து  வருகிறது இம்மருத்துவமனை. தினமும்  பத்தாயிரம் பேருக்குக் குறையாமல் இங்கு மக்கள் வந்து போகிறார்கள். சிகிச்சையில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை. நிறுவனத்தின் “சீஃப்” சொன்னபடியே,  அனைவரையும் சமமாகப் பாவிக்கும் விழிகளுடன்  சேவை தொடர்கிறது.
  அரவிந்தர் கண் மருத்துவமனையில்  ‘சீஃப்’ என அன்போடு அழைக்கப்பட்டவர் தான், நிறுவனர் டாக்டர் கோ.வெங்கடசாமி. 1918 ஆம் ஆண்டு, அக்டோபர் 1ஆம் தேதி,  எட்டயபுரம் அருகே அயன் வடமலாபுரத்தில் பிறந்த அவருக்கு இன்று நூற்றாண்டு  பிறந்த நாள்!.
           முதலில் இரு பிள்ளைகள் பிறந்து இறந்தன. அதன் பிறகு, கோவிந்தப்ப நாயக்கர்-லெட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வெங்கடசாமி. நல்ல கிருஷ்ணன், ஸ்ரீனிவாசன், ஜானகி, நாச்சியார் ஆகிய நால்வரும் உடன் பிறந்தவர்கள். நம்பிபுரத்திலும், பிறகு கோவில்பட்டியிலும் இவர் ஆரம்பக் கல்வி பயின்றார்.
    தூக்குச்சட்டியில் மதிய உணவு எடுத்துச் செல்லும் அளவுக்கு இவருக்கு வசதியில்லை. கம்மஞ்சோறினை துணியில் கட்டி எடுத்துச் செல்வார். உணவு காய்ந்து விடாதிருக்க, காலை இடைவேளையில், உணவுத் துணியினை நீரில் முக்கி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் - மதியம், உண்ணும்  பக்குவத்தில் கம்மஞ்சோறு இருக்கும். வெங்கடசாமி வறுமையில்தான் படித்தார். ஆனால், சிறப்பாகப் படித்தார்.
                      தந்தை கோவிந்தப்ப நாயக்கர் ஒரு இலட்சியவாதி. கல்வியின் மீது, தீராத ஆர்வம் கொண்டவர். வீட்டில் நிறைய நூல்களை சேகரித்து வைத்திருந்தார். பிள்ளைகளையும் படிக்க வைத்தார். திருக்குறளும், ராமாயணமும், தாகூரின் சிந்தனைகளும் என ஏதேனும் ஒன்றைப் படித்துவிட்டுத்தான், பிள்ளைகளுக்கு காலை உணவே தொடங்கும். தன் வாழ்நாளில் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து விட வேண்டும் என்ற உறுதியோடு உழைத்து, 75,000ரூபாய் சேமித்துக் காட்டியவர் கோவிந்தப்ப நாயக்கர். உழைப்பையும், ஒழுக்கத்தையும் , நேர்மையையும் தனது பிள்ளைகளுக்குப் போதித்தார். 
               வெங்கடசாமியும், தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். வாழ்வினை  தந்தையின் தடத்திலேயே  பின் தொடர்ந்தார். ஆரம்ப  பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியலில் பட்டம் (1938) பெற்றார் வெங்கடசாமி. பிறகு, அவரது விருப்பப்படியே, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க  இடம் கிடைத்தது.  படித்து முடித்த பிறகு, 1944 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.  
                  இரண்டாம் உலகப் போரின் போது, பர்மாக் காடுகளில் தங்கியிருந்த சமயத்தில் விஷப் பூச்சிகளின் கடியால் , இவருக்குத் தீராத தோல் நோய் ஏற்பட்டது. டாக்டர் வெங்கடசாமி ராணுவ முகாமிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். சென்னை திரும்பியவுடன், தனது கனவுப் படிப்பான, மகப்பேறு மருத்துவம் படிக்கத் தொடங்கினார். ஆனால், ஆர்த்ரிட்டிஸ் எனப்படும் முடக்கு வாதம் இவரைத் தாக்கியது. முன்னால் ராணுவ அதிகாரி கட்டிலில் முடங்கிப் போனார். எழுந்து நிற்கக் கூட இயலவில்லை. 
                   ஓர் அதிசயமும் விரைவில் நிகழ்ந்தது. கடும் மன உறுதியின் காரணமாக முடக்கு வாதத்தையே முடக்கிப் போட்டார். மெல்ல நடக்கத் தொடங்கினார். ஆனால், திருகி, முறுக்கிக் கிடந்த வலுவிழந்த விரல்களால் மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கண் மருத்துவம் படித்தார். அந்நாளில், கண் மருத்துவத்தில்  எம்.எஸ். முடித்த ஐந்து மருத்துவர்களுள் இவரும் ஒருவர். 1956ஆம் ஆண்டு, மதுரை மருத்துவக் கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 
                 1961ஆம் ஆண்டு, மதுரை டி.கல்லுப்பட்டியில் முதல் முறையாக கிராமக் கண் மருத்துவ முகாம் நடத்திக் காட்டினார். வீடு தேடிச் சென்று கண் மருத்துவம் பார்க்கும் நிகழ்வினை வெற்றிகரமாகச் செய்த டாக்டர் வெங்கடசாமியின் புகழ், உலகெங்கும் பரவத் தொடங்கியது. மருத்துவ முகாம் நடத்த ஒரு  சேவா அமைப்பினையும் தொடங்கினார். குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும்  ஊட்டச்சத்தின் அவசியத்தை முகாம்களில் தெளிவுபடுத்தினார். கண் பரிசோதனை முகாம்களில், சர்க்கரை நோயும் கண்டறியப்பட்டு, உரிய  சிகிச்சை வழங்க ஆவன செய்தார்.  
        அரசுப் பணி ஓய்விற்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு, உடன் பிறந்தவர்கள் துணையோடு, ’அரவிந்தர் கண் மருத்துவமனையைத்’  தொடங்கினார்.  ஆரம்பத்தில் சில அரசியல் இடையூறுகள் ஏற்பட்டன. சோதனைகளைக் கடந்தார்.
    மிக்சிகன் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர் சூசன் கில்பர்ட்டுடன் இணைந்து, ”லைக்கோ” என்ற பயிற்சி வகுப்பினைத் தொடங்கினார். மருத்துவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தினை பயனுள்ளதாக மாற்றினார். இந்தியாவில் ஒரு கண் மருத்துவர் சராசரியாக வருடத்திற்கு 220 அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார். ஆனால், அரவிந்தர் கண் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், வருடத்திற்கு    இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவரது மனித ஆற்றலும்  அறிவியல் முறைப்படி முழுமையாகப் பயன்படுத்துவதை ‘சீஃப்’ உறுதி செய்தார். 
               1992ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உள்விழி லென்ஸின் விற்பனை விலை ஏறக்குறைய ரூ.2000.  ஏழை எளிய மக்களுக்கு அது எட்டாத விலை. லென்ஸ் தயாரிக்கும் பணியைத்  தானே தொடங்குவது என ’சீஃப்’ முடிவு செய்தார். “ஆரோ லேப்” நிறுவனம் வெறும் பத்து பேருடன் தொடங்கப்பட்டது. அவர்கள் அதே லென்ஸை வெறும் 250 ரூபாயில் தயாரித்து வழங்கினர். அமெரிக்க லென்ஸ் நிறுவனங்கள் அரண்டு போயின. இன்று உலக அளவில் பத்து சதவீத உள்விழி லென்ஸ்கள் ஆரோலேப் நிறுவனத்தால்தான் தயாரிக்கப்படுகின்றன.  மருத்துவமனையில்  உள்ள ஒவ்வொரு பொருளும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வீணாக்குதல் என்ற பேச்சுக்கே அங்கு  இடமில்லை.
              ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை இருவரும்தான் தன்னை வழிநடத்துவதாக,  ’சீஃப்’ உறுதியாக நம்பினார். எல்லாத் துறை சார்ந்த நூல்களையும் தொடர்ந்து வாசித்தார். ‘ ஒரு நூற்றாண்டு காலத் தனிமை” நாவல் அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
              30 சத்வீதம் பேரிடம் வசூலிக்கும் தொகையைக் கொண்டு, ஏனைய 70 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை தரும் அரவிந்தர் கண் மருத்துவமனையின் சீஃப், இந்த இடத்தை அடைய எதிர் கொண்ட தடைகளும், அவமானங்களும் மிகவும் அதிகம்.  ஆம், எழும்பூர் மருத்துவமனை தலைமை மருத்துவர் , அறுவை சிகிச்சையின் போது, இவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆர்த்திரிட்ஸ் பாதிப்பைக் காரணம் காட்டி அவமானப்படுத்தினார். இவர் தளரவில்லை. அந்த நேரத்தில், 18 தொகுதிகள் கொண்ட The Text book of Opthalmology புத்தகத்தை தெளிவுறப் படித்து, தன்னை வளர்த்துக் கொண்டார்.
             ஒருமுறை சென்னை உணவகத்தில், தொழுநோயாளி என விரட்டப்பட்டார். ரயில் பயணச் சீட்டு பெறும் வரிசையில் இருந்து துரத்தப்பட்டார். மரணம் வரை அவரைத் தொடர்ந்து வாட்டிய தோல் நோய் மற்றும் விரல்களில் உண்டான பாதிப்பு காரணமாக, டாக்டர்   இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை.
       2006 ஆம் ஆண்டு, ஜூலை 7ஆம் தேதி,  இவர் மறைந்த நாளன்றும், சீஃபின் விருப்பப்படியே  மருத்துவமனைப் பணிகள்  தடங்களின்றி நடந்தன. அன்றைய தினம் மட்டும் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
         சோரியாசிஸ் காரணமாக,    அவர் அமர்ந்து சென்ற இடங்களில்  எல்லாம்,  அவரது தோல் உதிர்ந்து விழுந்தது. ஆனால், அவரது தன்னம்பிக்கை மட்டும் , இறுதிவரை உதிராது , உதிரத்தில் கலந்தோடியது.  வளைக்க முடியாத தன் விரல்களைக் கொண்டு,  வாழ்க்கையை  தான் விரும்பியபடியே வண்ணமாக்கிக்  கொண்டவர். ஆம்,  தன்னலமற்ற இந்தக் கதிரவன் ஏற்றி வைத்த விழி விளக்குகள் இம்மண்ணில் ஏராளம். அவ்விழிகளின் வழியே, அவர் இவ்வுலகைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

             கருணையும் ,அன்பும் தாங்கி நிற்கும் மருத்துவர்களை - மானுட சமூகம் -  கை கூப்பி, வானுறையும்   இறையெனத் தொழுகிறது.
           

              

No comments:

Post a Comment