Monday, November 5, 2018

நவம்பர் 5

நாட்டுக்குழைத்த    நண்பன் - சித்தரஞ்சன்  தாஸ்

நவம்பர் 5...இன்று!

                          வங்காளத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் என்பவரின் மீது, 1908 - ஏப்ரல் 30 அன்று, குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அவர் தப்பித்தாலும், உடன் இருந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் இறந்து போயினர்.   1905ஆம் ஆண்டு வங்காளத்தை இரண்டாகப் பிரித்த ஆங்கிலேய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். கூடவே பல்வேறு புரட்சிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இதில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர்தான் மகான்  ஸ்ரீ அரவிந்தர் எனப்படும்  அரவிந்த் கோஷ்
                      கொல்கத்தா அருகில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை (1808-09) நடைபெற்று வந்தது. அரவிந்தருக்கு ஆதரவாக பி.சக்ரவர்த்தி என்ற முன்னணி வழக்குரைஞர் வாதிட்டு வந்தார். வழக்குக்கான ஊதியம் பெறுவதில் உண்டான தாமதம் மற்றும் பிரச்சனை காரணமாக சக்ரவர்த்தி பாதியிலேயே விலகிக் கொள்ள நேர்ந்தது. அரவிந்தருக்கு ஆதரவாக வாதிட பலரும் தயங்கிய வேளையில், இளம் வழக்குரைஞர் ஒருவர் வாதிட முன் வந்தார்.  206 சாட்சிகள், 400 ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், தனது வாதத் திறமையால் அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத்தந்தார் அந்த வழக்குரைஞர். பாரதத்திற்கு மகான் அரவிந்தரை மீட்டுத்தந்த அந்த வழக்குரைஞர் தான் தேச பந்து என்றழைக்கப்பட்ட   சித்தரஞ்சன் தாஸ் (1870-1925). !
                            வங்க தேசம்- விக்ரம்பூரில், 1870ஆம் ஆண்டு, நவம்பர் 5 ஆம் தேதி சித்தரஞ்சன் தாஸ் பிறந்தார். இவரது பெற்றோர் பூபன் மோகன் தாஸ்-நிஷ்டாரினி தேவி. இவர்களது குடும்பத்தினர் அனைவரும் பிரம்ம சமாஜத்தில்  உறுப்பினர்களாக இருந்தனர். குடும்பம் ஓரளவு  வசதியாகவே இருந்தது. கல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, சித்தரஞ்சன் தாஸ்  1890ல்  ஐ.சி.எஸ் படிப்பிற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.  தாதாபாய் நெளரோஜியை கருப்பர் எனப் பேசிய, வெள்ளை அதிகாரிகளை கடுமையாக எதிர்த்துப் பேசினார். அதன் விளைவோ என்னவோ, ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி கிடைக்கவில்லை. தந்தையின் கனவையும்  நிறைவேற்ற முடியவில்லை.  ஆயினும், பாரிஸ்டர் பட்டம் முடித்து , வழக்குரைஞராக இந்தியா திரும்பினார் சித்தரஞ்சன் தாஸ். 
                 கொல்கத்தா நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில்  வாதாடிக் கொண்டிருந்த போதும், அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரைக் காப்பாற்றிய பிறகு இவரது புகழ் வெகுவாகப் பரவத் தொடங்கியது.  இவரது சம்பளம் 20,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில், அந்தக் காலத்திலேயே ஒரு வழக்கிற்கு ஒரு லட்சம் பெறும் புகழ் பெற்ற வழக்குரைஞராக மாறினார் சித்தரஞ்சன் தாஸ். பொங்கிப் பெருகும் ஊற்றென இவரிடத்தில் தாராள சிந்தனை நிரம்பி வழிந்தது.  தனது வருமானத்தையெல்லாம் எழைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து செலவு செய்தார். 
                       1917ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகளின் தலைமையை ஏற்றார். காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களுக்கு, ரயில் வண்டியில், பொது மக்களை,  தனது சொந்த செலவில் ஏற்றிச் சென்றார். இதற்காகப் பெரும் தொகையினை எப்போதும் செலவு செய்து வந்தார்.   1920ஆம் ஆண்டு ஒத்துழையாமைப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் கலந்து கொண்ட சித்தரஞ்சன் தாஸ்,  அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் முடிவினைத் தீவிரமாக பின்பற்றத் தொடங்கினார்.  பார்த்துக் கொண்டு  இருக்குமா ஆங்கிலேய அரசு?
இவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 
              ‘ஆங்கில அரசு இங்கிருப்பதையே எதிர்க்கிறேன், அந்த அரசால் நடத்தப்படும் விசாரணைக்கு நான் எப்படி வருவேன்?’ எனக் கூறி, விசாரணைக்குச் செல்ல மறுத்து விட்டார்.     1921 ஆம் ஆண்டு, இவரோடு சேர்த்து, இவரது மனைவி மற்றும் மகனையும் சிறையில் அடைத்தது ஆங்கில அரசு. சிறைச்சாலையில் பல்வேறு தலைவர்க்ளின் நட்பு இவருக்குக் கிடைத்தது.  சிறைக்கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றிக் கொண்ட சித்தரஞ்சன் தாஸ், அங்கே அபுல் கலாம் ஆசாத்திடம் உருது, பாரசீகம் மற்றும் அரபி மொழிகளைக் கற்றுக் கொண்டார். 
              சிறையில் இருந்து வெளிவந்த போது, அகமதாபாத்தில்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி இவருக்காக காத்துக் கிடந்தது. ஆடம்பர வாழ்வை முற்றாகத் துறந்து, காதி உடையில் எளிமையாக இருந்த தாஸின் உள்ளம், முன்பைவிட தற்போது வலிமையாக இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பின்னடைவு ஏற்பட்ட போது, கோபமடைந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மோதிலால் நேரு மற்றும் ஹுசைன் ஷாஹித் ஆகியோருடன் இணைந்து, 1923ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். 1924ல் நடைபெற்ற வங்கத் தேர்தலில் இவரது சுயராஜ்ஜியக் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது. கல்கத்தா மேயராகத் தேர்வானார் சித்தரஞ்சன் தாஸ். 
             சட்ட சபையில் ஆங்கில அரசுக்கெதிரான  இவரது முழக்கங்கள் ஆங்கில அரசுக்கு அச்சத்தைக் கொடுத்தன. இவரைத் தீவிரமாகப் பின்பற்றிய சீடரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸினை நகரத் தலைவராக்கினார். கொண்ட கொள்கையில் உறுதியுடன் போராடும் மனநிலையை அவருக்கும் ஊட்டினார். தனது தந்தை என்றும், குரு என்றும் சித்தரஞ்சன் தாஸை மரணிக்கும் வரை மனதில் வைத்திருந்தார் நேதாஜி.  சித்தரஞ்சன் தாஸின் மனைவி வசந்தா தேவியை அம்மா என்றே நேதாஜி அழைத்து வந்தார்.
            1879 ஆம் அண்டு, சித்தரஞ்சன் தாஸ் - வசந்தி தேவி திருமணம்  நடைபெற்றது. இவர்களுக்கு அபர்ணா தேவி, சிரரஞ்சன் தாஸ்,  கல்யாணி தேவி என மொத்தம் மூன்று குழந்தைகள். புத்தகங்கள் வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸ் மிகச் சிறந்த கவிஞரும் கூட.  வங்க மொழியில் இவர் எழுதிய ‘சங்கீத சாகரம்’ என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றது. இதனை அரவிந்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார். அதற்கும் பெரிய வரவேற்பு இருந்தது. சிததரஞ்சன் தாஸ் எழுதிய ‘கிஷோர் கிஷோரி’, ‘அந்தர் யாகி’, ‘நாராயண் மாலா’ நூல்களும் முக்கியமானவை.
                புகழ்பெற்ற ‘கேசரி’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய சித்தரஞ்சன் தாஸ், ‘ஃபார்வர்ட்’ என்ற நாளிதழையும் ‘நாராயண்’ என்ற மாத இதழையும் தானே தொடங்கி நடத்தினார். இப்படித் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தாஸுக்கு, விதியின் வழியே புதிய சிக்கல் ஏற்பட்டது. 1925ஆம் ஆண்டு துவக்கத்தில் இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. குளிர் பிரதேசமொன்றில் படுக்கையிலேயே சிலகாலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தினர். வேறுவழியின்றி, டார்ஜிலிங் புறப்பட்டார் சித்தரஞ்சன் தாஸ். 
                  கல்கத்தாவில் இருந்த தனது சொத்துக்களை எல்லாம் தேசத்தின் பொருட்டு தானமாக வழங்கினார். அதில் நான்கில் ஒரு பங்கு கூட தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கவில்லை என பின்னாளில் அவரது குடும்பத்தினர் வருந்தியதும் நடந்தது. அவரது வீடும், சுற்றியிருந்த நிலமும் இன்று 'சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனையாக' செயல்பட்டு வருகிறது.  அனைத்தையும் நாட்டிற்குக் கொடுத்த பிறகு,   கையில் வெறும் 35,000 ரூபாயுடன் மட்டும்தான், டார்ஜிலிங்கில் 'ஸ்ரீ என் என் சர்காரின்' இல்லத்திற்கு தங்கிடச் சென்றார் சித்தரஞ்சன் தாஸ். டார்ஜிலிங் வந்த மகாத்மா காந்தி அடிகள் இவரோடு ஐந்து நாள்கள் தங்கியிருந்தார். காந்தியடிகளுக்குப் பிடித்தமான ஆட்டுப்ப்பாலுக்காக,  ஐந்து வெள்ளாடுகளை வரவழைத்து, மகாத்மாவை  நன்கு கவனித்துக் கொண்டார். 
             கையில் இருந்த 35,000 ரூபாய் மெலியத் தொடங்கியது.  உடல் நலமும் நலிவடையத் தொடங்கியது. 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி, தேசத்தின் விடுதலை பற்றிய கனவுகள் நிறைந்த கண்களோடு , இவரது உயிர் பிரிந்தது. சிறப்பு ரயில் ஒன்றின் மூலம் இவரது உடல் கல்கத்தா கொண்டு வரப்பட்டது. வழி நெடுக,  ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தான் தலைமையேற்றிருந்தார். வங்காளத்தின் முடிசூடா மன்னனின் உடல் கியோரட்லா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  காற்றில் பறந்த அவரது சாம்பல் துகள்களிலும் விடுதலை நெருப்பு கனன்று கொண்டிருந்தது.  
               “ சில நூறு ரூபாய்கள் மட்டும் தான், எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் இருக்கிறது”- என மரணம் நெருங்கும் வேளையில்,  தனது அன்பான சீடர் நேதாஜிக்கு இவர் எழுதிய கடித வரிகள் படிப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடும்.
     தன்னையும், தனது உடைமைகளையும் தேச விடுதலைக்காகவே, மெழுகென கரைத்துக் கொண்ட சித்தரஞ்சன் தாஸை , ’தேச பந்து’  (Friend of the Nation)  என அழைப்பது முற்றிலும் பொருத்தம் தானே?. 
       இப்போது,  அரசியலை வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக மாற்றி விட்டார்கள் போலிகள்.  வாய்ப்ப்பேச்சின் மூலமே பூசி மொழுகி, நாட்டைச் சுரண்டும் களைகளுக்கு  மத்தியில், நல்லது செய்யும் நம்பிக்கை விதைகளை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
      விதை சுமக்கும் நல் நிலமாவோம்!- தேவையெனில்
      விதையாய் மாறுவோம்!
            
            
                  
                 

No comments:

Post a Comment