Thursday, August 13, 2020

வரலாறு தந்த விடுதலை


ஃபிடெல் காஸ்ட்ரோ.

ஆகஸ்ட் 13...இன்று!

          1953 ஆம் ஆண்டு, 'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' - கியூபாவின் நீதிமன்றத்தில் நிமிர்ந்து நின்றான் 27 வயது இளைஞன் ஃபிடெல்.  தலைமை நீதிபதி பெனிட்டோ ஒசாரியோ முன்னிலையில், கடைசிக் கட்ட  இரண்டு மணி நேர விசாரணையில், ஒன்றரை மணி நேரம்  வாதிட்டான் அந்த இளைஞன்.   வாதத்தின் நிறைவில், அவன் சொன்ன சொற்களை வரலாற்றின் கல்வெட்டு, விரும்பி ஏற்றுக் கொண்டது.
     
        ”நீங்கள் என்னை  என்ன செய்தாலும், வரலாறு என்னை விடுதலை செய்யும் ”,  எனப் பேசிய அவரது பெயரை , வரலாறு தன் கிரீடத்தில் பதித்துக் கொண்டது.
      
      கியூபா நாட்டின் நலனுக்காக, தனது வாழ்வையே பணயம் வைத்து, அதில் முழு வெற்றியும் பெற்ற கம்யூனிசப் போராளி ஃபிடெல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் (1926-2016) இன்று.  1926 ஆம் ஆண்டு,  ஆகஸ்ட் 13 அன்று, ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார் ஃபிடெல். இவர் பிறந்த பின்னரே , இவரது பெற்றோர் திருமணம் செய்து கொண்டார்கள். 
    
       சட்டம் பயின்ற ஃபிடெல், அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடந்த பாடிஸ்டாவின் முட்டாள்தனமான ஆட்சியை எதிர்த்து, நீதிமன்றம் சென்றார். பலன் ஏதும் இல்லை. அதன்பிறகு, புரட்சியின் மூலம் தான், கியூபா மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற  முடிவுக்கு வந்தார். 

      'கியூபாவின் இயற்கை வளம் அனைத்தும் தாய் நாட்டு மக்களுக்கே சொந்தம் ; அதை உறுதிப்படுத்தும் போரில் வெற்றி அல்லது வீர மரணம்' என களத்தில் இறங்கிப் போராடி, உயிர் துறந்த 'ஜோஸ் மார்த்தியை' தனது குருவாகக் கொண்டு, புரட்சிப் படையில் இணைந்தார். 1953, ஜூலை 26 ல் மான்கடா தாக்குதல் நடத்தப்பட்டது. தோல்வியில் முடிந்த அந்தத் தாக்குதலில், ஃபிடெல் கைது செய்யப்பட்டார். முதலில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, மக்கள் போராட்டம் காரணாமாக, ஃபிடெல் 1955 ல் விடுதலை செய்யப்பட்டார். 

        ஆல்பர்டோ பேயோ.! கொரில்லாத் தாக்குதலுக்கு  பயிற்சி கொடுக்கும் இவரைத் தேடித்தான் மெக்சிகோ வந்தார் ஃபிடெல்.  ஃபிடெலின் நம்பிக்கை ஆல்பர்டோவை அதிசயிக்க வைத்தது. 'ஏகாதிபத்தியத்தை எதிர்க்க , என் கால்கள் எந்த எல்லையையும் தாண்டும்' எனச் சொன்ன சே குவாராவை,  அதே மெக்சிகோவில் தான் ஃபிடெல் சந்தித்தார். 1959 ஆம் ஆண்டு , இவர்களது புரட்சிப் படை கியூபாவை வெற்றி கொண்டது. சர்வாதிகாரி பாடிஸ்டா  நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். கியூபாவில் ஃபிடெல் காஸ்ட்ரோ  தலைமையில் , கம்யூனிச அரசாங்கம் மலர்ந்தது. அதன் காரணமாகவே, அமெரிக்காவின் மூளையில் இருள் படர்ந்தது. 

     ஃபிடெலைக் கொல்ல , முந்நூறுக்கும் மேற்பட்ட முறை சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. பிக் வளைகுடா போர் போல,  கிளர்ச்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டன. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தனது மூச்சு நிற்கும் வரை, அமெரிக்காவின் சொல்லுக்கு ஃபிடெல் அடிபணியவே இல்லை. ரஷ்யாவின் உதவியோடு, அமெரிக்காவின் கனவுகளைக் காலி செய்தார் ஃபிடெல்.

       பதவிக்கு வந்தவுடன் நாட்டை வளப்படுத்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். 2017ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தற்போது  கியூபாவில் எழுத்தறிவு சதவீதம் 99.7. அரசுப் பள்ளிகள் மட்டும்தான். கல்வி கடைச்சரக்கு போல தனியாரிடம் தரப்படவில்லை. பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் மட்டும்  தடையற்ற மின்சாரம் எப்போதும் உண்டு.

           அதேபோல, அரசு மருத்துவமனைகள் மட்டும் தான்.  உலக அளவில் தரமான மருத்துவர்கள் இங்கிருக்கிறார்கள். கடினமான காலங்களில் எல்லாம், கியூப மருத்துவர்களின் உதவியை ஒவ்வொரு நாடும் கோருகிறது. டெங்கு காய்ச்சலின் போதும் கொரோனா பாதிப்பு சூழலிலும் உலக நாடுகளுக்கு,  மருத்துவ உதவியை கியூபா, தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

        விண்வெளிப் பயணங்களுக்கும், மின்னணு சாதன உற்பத்திகளுக்கும் அவர்கள் பணம் செலவு செய்வதில்லை. மாறாக, அவர்களின் ஆய்வுகள் மக்களின் நடைமுறை வாழ்வினை ஒட்டி அமைந்தன.  திசு வளர்ப்பு முறையைப் பயன்படுத்தி, 40,000 பக்க வாழைகள் தரும்  வாழைக்கன்றுகள், கரும்பு உற்பத்தியில் சாதனை, முருங்கை மரங்களில் அதீத விளைச்சல்,  குறைந்த செலவில் மருந்துகள் என அவர்கள் பயணிக்கும் பாதை வித்தியாசமானது.

       பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட போது, கியூப மக்களை அதற்கேற்ப தயார் செய்தார் ஃபிடெல். கிழிந்த சட்டைகளைத் தைத்து, பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தினார். செருப்புகளும் குறைந்தது 10ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டன. வீண் ஆடம்பரம் செய்ததில்லை. முன்மாதிரியாக இருந்து காட்டினார். இன்றும்,  மருத்துவர்களும்,  விஞ்ஞானிகளும் கூட, கிழிந்த அங்கிகளோடு , அங்காடிகளுக்குச் செல்வதை நாம் காண முடியும்.

            ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு 2 மனைவிகள், 11 பிள்ளைகள் என்ற தனிநபர் தகவல்கள் நமக்குத் தேவையில்லை. ஏனெனில், தனிநபர் வழிபாடு அங்கு கிடையாது.   சிலைகளும், பேனர்களும் தெரு முனைகளை அடைத்துக் கிடக்காது.  வீட்டிற்குள் வேண்டுமானால் புகைப்படங்களை வைத்துக் கொள்ளலாம்.

       2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 25ல், ஹவானா நகரில் ஃபிடெல் இறந்துபோனார். உலகின் வல்லரசாக வலம்வரும் அமெரிக்கா, தனக்கு நூறு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள கியூபா தேசத்திடம் மட்டும்  ஏகாதிபத்தியத்தைக் காட்ட முடியவில்லை. இன்று வரை அமெரிக்காவைச் சாராமல் தன்னிறைவோடு இருக்கிறது கியூபா. இதற்கு,  தன்னலம் கருதாத மானமுள்ள தலைவன் ஃபிடெல் தான் காரணம் என்று கியூபா மக்கள் கருதுகிறார்கள்.

         சொந்த சிந்தனையின்றி, தீயோர் சொல் பேச்சுக் கேட்டு,  தேசத்தை அடிமைப்படுத்தும் பொம்மை அரசாங்கத்தைத் தூக்கி எறிய, எப்போதும் புரட்சியாளர்கள்  முளைத்துக் கொண்டே இருப்பார்கள்.  வரலாறு அவர்களை மட்டும் தான் விடுதலை செய்யும்.

1 comment:

  1. சொந்த சிந்தனையின்றி, தீயோர் சொல் பேச்சுக் கேட்டு, தேசத்தை அடிமைப்படுத்தும் பொம்மை அரசாங்கத்தைத் தூக்கி எறிய, எப்போதும் புரட்சியாளர்கள் முளைத்துக் கொண்டே இருப்பார்கள். வரலாறு அவர்களை மட்டும் தான் விடுதலை செய்யும்.

    ஆகா

    ReplyDelete