Saturday, August 15, 2020

ஒரு வாழ்வு - இரு பயணம்.



 ஸ்ரீ அரவிந்த கோஷ்.

ஆகஸ்ட் 15 ...இன்று!

     சுதந்திரத்திற்காகப் போராடிய ஒருவர், தனது பிறந்த நாளிலேயே நாடு சுதந்திரம் பெறுவதைக் காணும் வாய்ப்பும் பெற்றார்; அப்போது, அவர் ஓர் ஆன்மீகவாதியாக அமைதி கொண்டிருந்தார்; தனது வாழ்நாளில், தேச விடுதலைக்கும், ஆன்ம விடுதலைக்கும்  தொடர்ந்து  போராடிய ஸ்ரீ அரவிந்த கோஷ் (1872-1950) பிறந்த தினம் இன்று.

       கொல்கத்தாவில், 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள், கிருஷ்ண தன் கோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அரவிந்த கோஷ். ’அரவிந்தம்’ என்றால் ’அன்றலர்ந்த தாமரை’  என்று பொருள்.

       டார்ஜிலிங்கில் பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்தர், மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். ட்ரூவெட் என்ற தந்தையின் நண்பருடைய  குடும்பத்தில் தங்கி, இலக்கியத்தில் பட்டம் முடித்தார்.

              தந்தையின் ஆசைப்படி, ஐ.சி.எஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்றார். 250 பேர் தேர்ச்சி பெற்றதில், 11வது இடம் பிடித்தார்.  ஆனால், செய்முறைத்தேர்வான குதிரையேற்றப் பயிற்சியில் கலந்து கொள்ளாமல், வேண்டுமென்றே புறக்கணித்தார். ஐ.சி.எஸ் பட்டம் மறுக்கப்பட்டது.   கேம்பிரிட்ஜ் கல்லூரியின் மூத்த ஆசிரியர், இவருக்கு ஆதரவாக தேர்வுக்குழுவுக்கு ஒரு  கடிதம் எழுதினார். இவரது அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது  கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கும் ஒரு காரணம் இருந்தது.

             கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்தபோது,  ‘இந்தியன் மஜ்லீஸ்’ என்ற சுதந்திரப் போராட்டக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, வீர உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். “தாமரையும்,பட்டாக்கத்தியும்” என்ற ரகசியப் பிரிவிலும் தீவிரச் செயல்பாட்டாளராக இருந்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில், அரவிந்தர் ஆபத்தானவர் என்று முடிவு செய்த குழு, இவருக்கு ஐ.சி.எஸ் பட்டத்தை மறுத்தது.

       இந்திய வரலாற்றில் 1893 -  சில சிறப்புகளைக் குறித்து வைத்துக் கொண்டது. ஆம்,    1893ஆம் ஆண்டு, காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா பயணமாகிறார்; 1893 ஆம் ஆண்டு,  விவேகானந்தர் சிகாகோவில்  உரையாற்ற அமெரிக்கா செல்கிறார். அதே 1893 ஆம் ஆண்டுதான், அரவிந்தர் பாரதம் திரும்புகிறார். அவர் பயணம் செய்த 'எஸ்.எஸ்.கர்த்தாழ்' என்ற கப்பல், கடலில் மூழ்கிவிட்டது என்ற தவறான தகவலைக் கேட்ட  அரவிந்தரின் தந்தை அதிர்ச்சியில் இறந்துபோனார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டர். ஆனால்,  மும்பை துறைமுகத்திற்கு  அரவிந்தர் பத்திரமாக வந்திறங்கினார்.    பரோடா கல்லூரியில் சிலகாலம் முதல்வராகப் பணியாற்றினார்.

            1905 வங்கப் பிரிவினைக்கெதிராக, தீவிரமாகப் போராடினார்.  கைது நடவடிக்கைக்கு ஆளானார். சில மாதாங்களில் விடுதலை செய்யப்பட்டார்.  பால கங்காதர திலகர், சகோதரி நிவேதிதா போன்றோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். 1908 அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். சில மாத சிறைவாசத்திற்குப் பிறகு, சாட்சியங்கள் போதாமை காரணமாக மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.  சிறச்சாலைக்குள் இருந்த காலங்கள் அவரின் மனத்தேடலை வேறு வழிக்கு மாற்றியது. சிறைச்சாலையில் இருந்த போது, விவேகானந்தர் தன்னிடம்  (மானசீகமாக!) உரையாடிச் சென்றதாக, பின்னாளில் அரவிந்தர் எழுதினார்.

              தேச விடுதலையைப் போலவே,  ஆன்ம விடுதலையும் அவசியம், அதை அடையும் வழிமுறைகளை நான் கண்டுகொண்டேன் என , முழுக்க முழுக்க தியானம், யோகம் என ஆத்ம பரிசோதனைகளில் இறங்கினார். 1910ல், ஷம்சுல் ஆலம் என்பவரின் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கையில், இவரது பெயரும்  சேர்க்கப்பட்டதால் , ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்ய முற்பட்டது. மாறுவேடத்தில் தப்பிய அரவிந்தர், பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த  பாண்டிச்சேரிக்குள் நுழைந்தார். பின்னர், நிரந்தரமாக அங்கேயே தங்கினார். பாரதியாரோடு நட்பு ஏற்பட்டதும் அந்த நாட்களில் தான்.

      சுதந்திரம் பெற்றுவிட வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்ட அரவிந்தர், ஆன்ம விடுதலை வேண்டும் என்பதற்காக அமைதியில் உறைந்தார். 1926ஆம் ஆண்டு, மிர்ரா அல்ஃபஸா (ஸ்ரீ அன்னை) என்பவரோடு இணைந்து,  ’அரவிந்தர் ஆசிரமம்’ தொடங்கினார். பகவத்கீதை, வேதங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

         1943(இலக்கியம்) மற்றும் 1950 (சமாதானம்) ஆகிய இரண்டு ஆண்டுகள் நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மகாபாரத இறையியல் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, இவரால் எழுதப்பட்ட ”சாவித்திரி காவியம்” எனும் கவிதை நூல் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மேலும் இவரது உரைகள் தனித்தனிப்  புத்தகமாக வெளிவந்துள்ளன. அரவிந்தரின் அமுத மொழிகள் மன அமைதியையும் ஆற்றலையும் எப்போதும்  தரக் கூடியவையாகவே இருக்கின்றன.

      1950ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் நிரந்தர அமைதியில் சமாதி நிலை எய்தினார் ஸ்ரீஅரவிந்தர்.    அதன் பின்னர்,  ஸ்ரீ அன்னை ஆசிரமத்தை தொடர்ந்து வழிநடத்தினார். தேச விடுதலை, ஆன்ம விடுதலை என இரண்டு தடத்திலும்  வெற்றிகரமாகப் பயணம் செய்த ஸ்ரீ அரவிந்தர், ஆன்மீக மறுமலர்ச்சி வரலாறு, தேச விடுதலை வரலாறு - என்ற  இரண்டிலும் நிறைந்தே இருக்கிறார். அதுபோலவே,  நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் என்றல்லவா நமது  வாழ்வும்  இருக்க வேண்டும்?

            ஆன்மீகம் என்ற பெயரில் மதமானாலும் சரி,   சித்தாந்தம் என்ற பெயரில் அரசியலானாலும் சரி, எதற்கும், யாருக்கும் அடிமையாகி விடக்கூடாது. தளத்தில் இருந்து நம்மை மேம்படுத்தும் அடிக்கற்கள் தான் அவை என்பதை நாம்  உணர வேண்டும்.

    விடுதலை எண்ணமே வாழ்வின் நெறி,
    விடுதலை பெறுவதே வாழ்வின் குறி!

2 comments:

  1. தேச விடுதலைக்கும், ஆன்ம விடுதலைக்கும் தொடர்ந்து போராடியவரைப் போற்றுவோம்

    ReplyDelete